அடுத்த நாள் காலையிலேயே முதல் வேலையாக நரேனுக்கு காசு அனுப்பியிருந்தாள் செண்பகா.
இவள் காசு அனுப்பிய அடுத்த நிமிடமே அவனும் ஃபோன் போட்டு, "ஏன் செம்பா காசு திருப்பி அனுப்பின?" என்று கடிந்து கொள்ள,
"நீயே ஃப்ரெண்ட்ஸ்கிட்ட இருந்து கடன் வாங்கி தானே கொடுத்த. அவங்களுக்கு கொடுத்துடு" என்றாள்.
"நான் யாருக்கும் கடனாளியா இருக்க கூடாதுனு நினைக்கிறியா?" என்று உரிமையை நிலை நாட்டும் பேச்சு வார்த்தையாக அவன் ஆரம்பிக்க,
"இல்ல… நான் யாருக்கும் கடன்காரியா இருக்க கூடாதுனு நினைக்கிறேன்" என்று வெட்டும் அவள் பேச்சில்,
இவன் முகம் வாடி போனது.
"நான் யாரோவா செம்பா உனக்கு?" என்று உருகும் அவன் குரலில், இவள் கதிகலங்கி தான் போனாள்.
"காலேஜ்க்கு நேரமாச்சி அம்மா கூப்பிடுறாங்க" என்று ஃபோனை அணைத்தவள்,
'என்ன இந்த நரேன் இப்படியெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டான். நிலா சொன்னது நல்லா ஞாபகம் வச்சிக்க செம்பா. படிச்சு முடியுற வரை இந்த காதல் கத்திரிக்கானு மனச அலைபாய விட கூடாது. உன்னை ரொம்ப ஈசியா ஏமாத்திடுவாங்க. முதல்ல அவன் நினைப்ப மனசுல இருந்து அழி' என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள், வலது கையை மடக்கி இடது மார்பில் தேய்த்து கொண்டே அவன் நினைவுகளை அழிக்க முயன்றாள்.
"செம்பா காலேஜ்க்கு நேரமாவுது எங்க இருக்க?" என்று அவள் அன்னை கிச்சனில் இருந்து குரல் கொடுக்க,
"கிளம்புறேன்மா" என்றவள் நிஜமாகவே அவனை மறந்து தான் போனாள்.
ஆனால் இங்கே நரேனோ, அவள் பணம் அனுப்பியது தன் மீது உள்ள அக்கறை, காதல் என்று மேலும் மேலும் அவள் மீது ஆசைகளை வளர்த்துக் கொண்டே, கனவில் வாழ ஆரம்பித்தான்.
மனதை மறைக்கும் பெண்ணின் குணம் ஆணுக்கு தானே ஆபத்தாக முடிகிறது.
இல்லை என்று முதல் ஒட்டுதலிலே விலகி இருந்தால், வீண் ஆசைகளும், ஏமாற்றங்களும் நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்கும்.
தன் அறியாமையால், ஒருவன் ஆசைகளுக்கு தூபம் போட்டு, இன்னொருவன் வாழ்வில் தீயை கொளுத்தி போட்டவள், அழகாக தயாராகி கல்லூரிக்கு வந்து சேர்ந்தாள்.
வழமையான வகுப்புகள் கடக்க, அன்றைய தினத்தின் இறுதி வகுப்பு சத்யனோடது தான்.
அவன் நடத்தி முடித்திருந்த இன்டர்னல் மதிப்பெண் தாள்களுடன் தான் வகுப்பிற்குள் நுழைந்தான்.
அவனை பார்த்ததும் முந்தைய நாள் அக்கா ஃபோனில் பார்த்த அவன் உரையாடல்கள் தான் செண்பகாவுக்கு ஞாபகம் வந்து தொலைத்தது.
சத்யனோ திருத்திய வினா தாள்களை கொடுத்து விட்டு, வருகை பதிவு எடுத்து கொண்டிருந்தான்.
இங்கே நால்வரும் "என்னை பார்த்து தான் நீ எழுதின என்னை விட உனக்கு அதிக மார்க் போட்டு இருக்கார்" என்று அவர்களுக்குள்ளாகவே வித்தியாசபட்டிருந்த ரெண்டு, மூன்று மதிப்பெண்களுக்காக சண்டை போட்டு கொண்டே, "செம்பா நீ எவ்வளவு மார்க்?" என்று செம்பாவிடம் நிலா கேட்க,
அவளோ "பனிரெண்டு" என்று தான் சோகமாக சொன்னாள்.
கல்பனாவோ, "உன் மாமா தானே போய் எக்ஸ்ட்ரா மார்க் கேட்டு பாரு" என்று உசுப்பி விட,
"என்னனு போய் கேட்க, இங்க தான் மார்க் போட எதுவும் இல்லையே" என்றவளிடம்,
"சும்மா டோட்டல் மிஸ்டேக், அஞ்சி மார்க் கொஸ்டினுக்கு ரெண்டு மார்க் தான் போட்டு இருக்கீங்கனு எதையாவது சொல்லி கேளு" என்று ஏத்தி விட,
இந்த மங்கூசும், முந்தைய நாள் சத்யன் பெயரை சொல்லி, கனகாவிடம் காசு வாங்கியது போல, அவள் பெயரை சொல்லி இவனிடம் மார்க் வாங்கலாம் என்று தான் கிளம்பி வந்தது.
"டோட்டல் மிஸ்டேக் சார்" என்று தன் முன் பேப்பரை நீட்டிய சில்வண்டை "அதெப்படி வரும்?" என்று வாங்கி பார்த்தான் அவன்.
அவன் அருகே நெருங்கி நின்ற செண்பகாவோ,
"சார்… அக்கா பத்தி ஒரு சீக்ரெட் சொல்றேன். ஒரு ரெண்டு மார்க் கூட்டி போடுங்களேன்" என்று குசு குசுவென கேட்க,
அவளை அப்படியே திரும்பி மார்க்கமாக பார்த்தவன்,
"அது சீக்ரெட்டாவே இருக்கட்டும்" என்று அவளை போலவே மெல்லிய குரலில் குனிந்து அவள் காதருகே சொல்ல, செம்பா முகம் சுருங்கி போனது.
"அவளோட எக்ஸ்க்ளூசிவ் போட்டோ அனுப்புறேன்" என்று அடுத்த பிட்டு போட்டு பார்க்க,
"அத நான் அவங்ககிட்டேயே வாங்கிக்கிறேன்" என்று அவள் போடும் ஒவ்வொரு பாலையும் நோ பால் ஆக்கிக் கொண்டிருந்தான்.
முழுதாக அவள் பேப்பரை புரட்டி பார்த்தவன், "ஆமா டோட்டல் மிஸ்டேக் தான்" என்று சொல்ல,
இங்கே பல்ப் எரிந்தது செண்பகா முகத்தில்.
அதிக மார்க் வரும் என்று ஆர்வமாக அவள் பார்த்துக் கொண்டிருக்க, எழுதியிருந்த ஒரு பேப்பரை தனியாக கிழித்து கசக்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டே "பத்து தான் வருது பனிரெண்டு போட்டிருக்கேன்" என்று அடித்து அவள் வாங்கிய பனிரெண்டு மார்க்கில் இரண்டு மார்க் குறைத்து போட,
"சார்…" என்று அதிர்ந்து கத்தியவள், "இதெல்லாம் நியாமே இல்ல" என்று உதட்டை பிதுக்கி கொண்டே சொல்ல, அவள் கையில் வினாத்தாளை திணித்து அனுப்பி வைத்தான்.
மதிப்பெண் வாங்க சென்ற தோழிக்கு 'அவர் கூடுதல் மதிப்பெண் போடுவாறா? மாட்டாரா?' என்ற விவாதம் முடித்து, 'ஒருவேளை போட்டா நாமளும் போய் கேட்கணும்' என்று தான் மற்ற மூவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
இங்கே தோழியோ மிதி வாங்காத குறையாக மூஞ்சை தொங்க போட்டுக் கொண்டே வர,
"என்னாச்சு செம்பு, மார்க் போட்டாரா?" என்று அவளை நடுவில் அமர்த்தி மற்றவர்கள் கேட்க,
அவளோ அவன் குறைத்து போட்டிருந்த வினாத்தாளை சோகமாக காட்டினாள்.
"ஆத்தி… அம்பியா இருந்தவர் அந்நியனா மாறிட்டாரே" என்று சொன்னவர்கள், அளவுக்கு மீறி ஆசை எதற்கு இருப்பதை வைத்து திருப்தி கொள்வோம் என்று கையை கட்டிக் கொண்டு அமைதியாகி விட்டார்கள்.
சத்யனும் வருகை பதிவு முடிய, வகுப்பை தொடர்ந்தான்.
அவன் பேச பேச… இங்கே செண்பகாவுக்கோ, அலைபேசி உரையாடல்கள் எல்லாம் அவன் குரலில் கேட்க ஆரம்பித்தது.
"மச்சீஸ்… நேத்து சத்யன் சாரும், என் அக்காவும் ஒரே ரொமாண்டிக் சேட்" என்று சொன்னதும், மூவரும் ஆர்வமாக தான் "என்ன பேசினாங்க?" என்று கேட்டார்கள்.
"நிறைய பேசி வச்சிருந்தாங்க, பாதி விஷயம் எனக்கு புரியவே இல்ல" என்றவள்,
கனகாவிடம் கேட்டு அடி வாங்கிய சந்தேகத்தை தோழிகளிடம் கேட்க,
அவர்களோ ஆ வென்று வாயில் கையை வைத்துக் கொண்டார்கள்.
"அக்கா ஏன் ச்சீ…. சொல்லி அந்த இமோஜி அனுப்பினா?" என்று இவள் மீண்டும் கேட்க,
"ஹ்ம்ம்… அதை அனுப்பினா உன் மாமாகிட்டேயே கேளு" என்று மறுபடியும் அவளை கோர்த்துவிட்ட, கல்பனாவோ "சார் செம்புக்கு டவுட்டாம்." என்று சத்தமாக சொல்ல,
அவனும், "கேளுங்க என்ன டவுட்?" என்று செண்பகாவிடம் கேட்டான்.
'அய்யயோ அக்காகிட்ட கேட்டதுக்கு அவளே அடிச்சாலே, இவ வேற இப்போ நம்மள இப்படி கோர்த்து விட்டாளே!' என்று நெளிந்துக் கொண்டே எழுந்து நின்றவள்.
"சொல்லுங்க செண்பகவள்ளி என்ன சந்தேகம்?" என்று சத்யன் மீண்டும் கேட்க,
இவளும் "அது…" என்று யோசித்துக் கொண்டே, "ஹாங்… உங்களுக்கு என்ன புரூட் பிடிக்கும்" என்று கேட்க, அவனுக்கோ தூக்கி வாரி போட்டது.
"ஏன் மா இப்பவே அவருக்கு பிடிச்சது எல்லாம் வாங்கி கொடுத்து, உன் அத்தானை தாஜா பண்ண போறியா?" என்று மாணவர்கள் சிலர் அவளை கலாய்க்க,
"சட்அப்…" என்று அதட்டிய சத்யன் குரலில் கொலை நடுங்கி போனது செண்பகாவுக்கு. செண்பகாவை முறைத்துக் கொண்டே "சிட்" என்றான்.
இதுவரை அவன் வகுப்பில் யாரிடமும் அதிர்ந்து கூட பேசியதில்லை. முதல் முறை அவன் கோபத்தின் தூறளை பார்த்த மாணவர்களோ கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டு அமைதியாகி விட,
சத்யனுக்கு தான் மாணவர்களிடம் கோபத்தை காட்டியது ஒருமாதிரி ஆகி போனது.
சட்டென்று வகுப்பை விட்டு வெளியே வந்தவன், எதிரே இருந்த பாதி உயர தடுப்பு சுவரில் கைகளை அழுத்தமாக பதிந்து கொண்டே ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலை கொள்ள முயன்றான்.
அவன் செயலை பார்த்து மாணவர்கள் அனைவரும் "என்னாச்சு சார்க்கு?" என்று குசு குசுவென பேசிக் கொண்டிருக்க,
இங்கே நிலாவோ, "செம்பு… அக்காவுக்கும் அவருக்கும் ஏதாவது சண்டையா?" என்று தான் செண்பகாவிடம் கேட்டாள்.
அவளும், "இல்லையே… நேத்து நல்லா தானே பேசினாங்க. என்மேல தான் கோபமா இருக்காரா?" என்று அவள் சோகமாகிட,
"அதெல்லாம் எதுவும் இருக்காது. நீ ஃபீல் பண்ணாத" என்று தோழியை சமாதானம் செய்த நிலாவோ வெளியே நின்றுக் கொண்டிருந்த சத்யன் நடவடிக்கைகளை தான் யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் வகுப்பு முதல் தளத்தில் தான் இருந்தது. இரண்டு நிமிடங்கள் கண்மூடி வெளியே நின்றவன் முகத்தில், உயர்ந்து வளர்ந்திருந்த புன்னை மரத்தின் காற்று தழுவி செல்ல,
இயற்கையின் தழுவலில் தன்னிலை அடைந்தவன், மீண்டும் வகுப்பறைக்குள் வந்து வகுப்பு எடுக்க ஆரம்பித்து விட்டான்.
முதல் முறை சத்யன் வகுப்பு, சிரிப்பு சத்தம், கேலி, கிண்டல்கள் ஏதுமின்றி அத்தனை அமைதியாக கடந்தது.
செண்பகா முகம் களையிழந்து இருப்பதை பார்த்த சத்யன், அவளை இயல்பாக்கும் பொருட்டு அவளை பார்த்து மெல்லிய சினேக புன்னகை வீச,
அவளும் அதற்கு பிறகே மலர்ந்த முகத்துடன் இயல்பானாள்.
வகுப்பு முடிய மாணவர்கள் அனைவரும் செல்ல,
"செண்பகவள்ளி நீங்க மட்டும் என்னை ஸ்டாப் ரூம் வந்து பாருங்க" என்று அவளை மட்டும் வர சொல்லி விட்டு சென்றவனை பயந்து தான் பார்த்துக் கொண்டிருந்தாள் செண்பகா.
அவளை சுற்றி வந்து நின்ற நண்பிகளிடம், "எதுக்கு இப்போ என்னை தனியா வர சொல்றார்? இல்ல நான் போக மாட்டேன்." என்று அழுது விடும் குரலில் சொன்னவள் முகத்தை துடைத்து விட்டு, "ஒன்னும் செய்ய மாட்டார். போய் என்னனு கேட்டுட்டு வா" என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தது என்னவோ நிலா தான்.
இங்கே சத்யனுக்கோ, செண்பகா மெசேஜ் பார்த்து தான் அப்படி கேட்டிருக்கிறாள் என்பது தெளிவாக புரிந்தாலும், தன் வீட்டு குட்டி சாத்தான்கள் போல், கனகாவுக்கு தெரியாது, அவள் ஃபோனை இவள் எடுத்து மெசேஜ் செய்து இருப்பாளோ? என்ற சந்தேகத்தில் தான் அவளை மட்டும் வர சொன்னான்.
ஆறுமுகத்திற்கும், ஜெயஶ்ரீக்கும் கடைசி வகுப்பு இல்லை என்பதால், மணி அடித்ததும் அவர்கள் கிளம்பி இருந்தார்கள்.
செண்பகா வந்த நேரம் சத்யன் மட்டும் தான் ஸ்டாப் ரூமில் இருந்தான்.
வெளியே வாசலில் நின்றே, “சார்” என்று உள்ளே வர அனுமதி கேட்டு அழைத்தவளை, "வாங்க" என்றவன், அவள் வந்ததும்,
"நேத்து கனகவள்ளி ஃபோன்ல இருந்து மெசேஜ் பண்ணது நீயா?" என்று நேரடியாகவே கேட்டு விட,
அவளோ இல்லை என்று தான் வேகமாக தலையை ஆட்டினாள்.
"அப்புறம் ஏன்? அத்தனை பேர் முன்னாடி அப்படி கேட்ட?" என்று கேட்டவனிடம்,
"விவஸ்தை கெட்ட ஃப்ரெண்ட்ஸ்" என்று தான் அவர்களை திட்டினான்.
"சரி கிளம்பு" என்று அவளை போக சொல்ல,
அவளோ "நீங்க பதில் சொல்லவே இல்லையே" என்று கேட்டு தணிந்திருந்த அவன் கோபத்தை தூண்டிக் கொண்டிருந்தாள்.
"இப்போ அது ரொம்ப முக்கியம் பாரு. போய் உன் விவஸ்தை இல்லாத ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேளு" என்று விரட்ட,
செண்பகாவோ, "அவங்க தான் உங்ககிட்ட கேட்க சொன்னாங்களே" என்றவளை வெட்டவா குத்தவா ரேஞ்சில் சத்யன் பார்த்துக் கொண்டிருந்த நேரம்,
"என்ன கேட்கணும்?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் விக்ரம்.
"அது…" என்று வாயை திறக்க போனவள், வாயை பொத்தி அவளை அலேக்காக வெளியே தூக்கி வந்த சத்யன், "ஏய் லூசு… இட்ஸ் எ ஏ ஜோக். மென்ஸ்கிட்ட கேட்க கூடாது" என்று இதயம் பட படத்தது எல்லாம் அவனுக்கு தான்.
"அப்போ யார்கிட்ட தான் கேட்கிறதாம்?" என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு வில்லங்க விளக்கம் கேட்டவளால் மண்டை காய்ந்து நின்றவன்,
"இன்னும் ரெண்டு மூனு வருஷத்துல உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க, அப்போ உன்ன கட்டிக்கிட்டவன்கிட்ட கேளு" என்று சொல்லிவிட்டு அவளிடம் இருந்து தப்பி வேக நடையுடன் மீண்டும் ஸ்டாப் ரூமிற்குள் வர,
அங்கே அவனையே மார்க்கமாக பார்த்த விக்ரம், "என்ன மச்சினிச்சி கூட ரொமான்ஸ்ஸா?" என்று தான் கேலி செய்தான்.
"அவ கொழந்தை இல்ல குட்டி சாத்தன்" என்ற நண்பனை பார்த்து சத்தமாக சிரித்த விக்ரம், "அமைதி புயல் உன்னையே பதற வைக்கிறா போல" என்று கேட்க,
மேலும் இந்த பேச்சை வளர்க்க விரும்பாது, "நான் கிளம்புறேன்… பை" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென கீழே இறங்கி வந்தவனுக்காக, கல்லூரியின் மெயின் கேட்டருகிலேயே காத்துக் கொண்டிருந்தாள் கனகவள்ளி.
அவளை பார்த்தவன், "இவங்க இங்க என்ன பண்றாங்க?" என்று யோசித்து கொண்டே அவள் அருகே வந்தான்.
"ஹாய் சத்யன்" என்று மலர்ந்த முகத்துடன் அவள் ஹாய் சொல்ல, சத்யனிடமிருந்து மெல்லிய இதழ் வளைவு மட்டும் தான் பதிலாக வந்தது.
"இங்க என்ன பண்றீங்க?"
இவ்வளவு நேரம் தங்கச்சியை சமாளிச்சு ஓடி வந்தா குறுக்க அக்கா வந்து நின்னா அவனும் என்ன தான் செய்வான்.
"உங்களை பார்க்க தான் வந்தேன். நீங்க ஃப்ரீனா காபி ஷாப் போலாமா?" என்று ஆசையாக கேட்டவளிடம் மறுப்பு சொல்ல தோன்றாது,
"ஹ்ம்ம்… நான் என் கார்ல வர்றேன்" என்றவன் அவள் வந்திருக்கும் ஸ்கூட்டியை பார்க்க,
"இது ஒன்னும் பிரச்சனை இல்ல, நானும் உங்களோட கார்லயே வரேன். ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்" என்று சொல்லி விட்டு, கண்களை சுழல விட, அங்கே ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தாள் அவள் அன்பு தங்கை தன் சகாக்கள் சகிதம்.
"செம்பா… இங்க வா" என்று அவளை கனகா அழைக்க,
"ஏய் உன் அக்கா இங்க என்ன டி பண்றா?" என்று புகைந்து கொண்டே அவர்கள் அருகே வந்தார்கள் நால்வரும்.
"செம்பா நான் சத்யன் கூட போறேன். நீ வண்டிய எடுத்துட்டு வீட்டுக்கு போயிடு" என்று அவசரமாக சொல்லி கிளம்ப எத்தனிக்க,
"எனக்கு ஸ்கூட்டி ஓட்ட தெரியாதே" என்ற தங்கையை முறைத்தவள்,
"அதான் நிலா இருக்காளே, உன்ன வீட்ல கொண்டு விட்டு போயிடுவா" என்று வருங்கால கணவனோடு நேரம் செலவிட பரபரப்பாக எல்லாரையும் ஓரம் கட்டிக் கொண்டிருந்தாள்.
"அய்யோ அக்கா எனக்கு கால்ல அடி பட்டிருக்கு" என்று ஜகா வாங்கினாள் நிலா.
நீங்க ஜாலியா கார்ல சுத்த நாங்க கொத்தமல்லி கறிவேப்பிலையா என்று தான் ஆள் மறுத்தது.
"இது ஸ்விட்ச் கியர் தான்" என்ற கனகவள்ளி பார்வையாலே எல்லாரையும் அடக்க,
செண்பகாவோ, "அக்கா ஐஸ்கிரீம் வாங்கி தர்றேன் சொன்னியே" என்று ஞாபக படுத்தினாள்.
"நாளைக்கு வாங்கி தரேன்" என்ற கனகா "நீங்க வாங்க சத்யன்" என்று அவனை இழுக்காத குறையாக அழைக்க,
"நாம காபி ஷாப் தானே போறோம் அவங்களும் வரட்டுமே" என்று அவன் சொன்ன பிறகு அவன் பேச்சை மறுத்து பேட் இம்பிரஷனை உருவாக்க எண்ணாது, ஹ்ம்ம் என்று விட்டு, நிலாவிடம் பைக் சாவியை கொடுத்து விட்டு, சத்யன் காரில் ஏற போக, அவளுக்கு முன்னால் ஓடி சென்று முன்னிருக்கையில் அமர்ந்துக் கொண்டாள் கல்பனா.
கதவை திறந்து கொண்டு, அவளை வெளியே வரும் படி பார்த்து கொண்டிருந்த கனகாவை பார்த்து சமாளிப்பாக சிரித்தவள்,
"விண்டோ சீட் அக்கா… நீங்க பின்னாடி வசதியா உட்காருங்களேன்" என்று இறங்க மாட்டேன் என்று தகுடு தித்தோம் காட்ட,
"பின்னாடியும் விண்டோ இருக்கு…" என்று அதிகார தொனியில் சொன்னவள் பார்த்த பார்வையில் கல்பனா அமைதியாக இறங்கி பின்னிருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.
"பாவம் எங்க சத்யன் சார். இப்படி ஒரு சொர்ணாக்காகிட்ட மாட்டிகிட்டாரே" என்று சத்யனுக்காக நொந்தபடியே கல்பனா அமைதியாக வர, அவள் அருகே அமர்ந்திருந்த செண்பகாவோ,
"சார் ஏதாவது பாட்டு போடுங்களேன்" என்று தான் கேட்டாள்.
சத்யனும் பிளேயரில் பாட்டை போட்டு விட்டவன், கைகள் மேல் கனகா தன் கையை வைக்க, சட்டென்று விலக்கி கொண்டு அவளை பார்த்தான்.
அவள் பார்வை மொத்தமும் அவன் மீது, ரசனையாகவும், காதலாகவும் பதிய, சத்யனால் தான் அவள் உணர்வுகளை கையாள முடியவில்லை.
சில நிமிடங்கள் மென்னிசை மட்டுமே காரில் நிறைந்திருந்தது.
கனகவள்ளியின் பார்வையையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடியா அளவிற்கு அவன் ஒன்றும் எதுவும் அறியா பிள்ளை இல்லையே.
அவன் திருமணம் செய்துக் கொள்ள போகும் பெண் தான். இருந்தாலும், இப்போதைக்கு தொட்டு பழகுவதை தவிர்க்க நினைத்தவன்,
"நேத்து மெசேஜ் பண்ணது நான் இல்ல. வீட்ல சின்ன பசங்க தான் விளையாட்டா எடுத்து பண்ணிட்டாங்க" என்று அவளிடம் எதையும் மறைக்காது தெளிவு படுத்தினான்.
அவன் சொன்னதை கேட்டவள் முகம் கருத்து போக,
அவள் முக மாற்றம் உணர்ந்த சத்யனும், "சாரி" என்றான்.
அவள் வாய் "இட்ஸ் ஓகே" என்று பெருந்தன்மையாக சொன்னாலும், உள்ளுக்குள் அத்தனை கோபம்.
அந்த நேரம் பார்த்து, "சார் இந்த பாட்டு வேணாம், வேற வைங்க" என்று செண்பகா கத்த,
தன் கோபத்தை எங்கே கொட்டலாம் என்று காத்துக் கொண்டிருந்த கனகாவோ, "ஏய் செம்பா அமைதியா இருக்க மாட்ட" என்று அவள் மீது எரிந்து விழ ஆரம்பித்தாள்.
‘அக்கா ஏன் திட்டுறா?’ என்று அறியா பிள்ளையும் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்க,
"ஏங்க… சின்ன பொண்ணு தானே! விடுங்க" என்று வக்காலத்துக்கு வந்த சத்யனை முறைத்தவள்,
"சின்ன பொண்ணுனா சின்ன பொண்ணு மாதிரி நடந்துகணும், அதிகபிரசங்கி வேலையை பார்த்து எரிச்சல் **யிற கிளப் பிட்டு" என்று வாயை விட்ட கனகவள்ளியை பார்த்து சத்யனே கொஞ்சம் அரண்டு தான் போனான்.
"இப்போ யார திட்டுறீங்க?" என்று கேட்டவனிடம்,
"அதிக பிரசங்கி வேலை பார்க்கிற சின்ன பொண்ணுங்களை சொன்னேன்" என்று பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பியவள் கோபம் உணர்ந்து அவன் தான் அமைதியாகினான்.
தவறு தங்கள் பக்கம் இருக்கும் போது, அவளை குறை சொல்ல முடியாதே என்று தான் வாயை மூடிக் கொண்டு வந்தான்.
அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் வண்டியை நிறுத்தியவன், எல்லாரையும் அழைத்துக் கொண்டே உள்ளே சென்றான்.
தோழிகள் நால்வரிடமும் "உங்களுக்கு வேணும்கிறது ஆர்டர் பண்ணிக்கோங்க" என்று விட்டு, சத்யனுடன் தனியாக வந்து அமர்ந்த கனகவள்ளி, "ரெண்டு காபி" என்று ஆர்டர் பண்ணி விட்டே சத்யனை பார்க்க, அவனும் ஓகே என்று தலையாட்டினான்.
"சாரி சத்யன். கார்ல்ல வரும் போது கொஞ்சம் ஹார்ஸா நடந்துகிட்டேன்." என்றவள் கோபமுகம் முற்றிலும் மாறி, அவன் அருகாமையை ரசிக்கும் காதல் காரிகையின் வெட்க சிவப்பு தான் அந்த முகத்தில் இப்போது இருந்தது.
"நேத்து நீங்க பேசல, இன்னைக்கு பேசலாமே" என்று அவள் காதல் பக்கத்தை திறக்க முயல, கரடி போல் அவள் ஃபோன் ஒலித்தது.
கட் செய்தவள், தங்களுக்கான நேரமாக மட்டுமே அதை மாற்ற முயன்று கொண்டிருக்க,
தொடர்ந்து மூன்று நான்கு முறை வந்த அழைப்பில் எரிச்சல் ஆனது என்னவோ சத்யன் தான்.
"முதல்ல ஃபோன்ல யாருனு பாருங்க. நீங்க பேசலைனா திரும்ப திரும்ப அடிச்சிட்டே இருப்பாங்க போல" என்று சொல்ல,
கனகாவும் அவன் முன் மறுபடியும் கோபப்பட்டு விட கூடாது என்று தான் உள்ளே எழுந்த எரிச்சலை அடக்கி கொண்டே ஃபோனை ஏற்று காதில் வைத்தாள்.
அமைதியாக தலையை ஆட்டி ஒற்றை வார்த்தையில் அடக்கமாக பதில் சொன்னது எல்லாம் அரை நொடி தான். அதற்கு மேல் அவளால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
"நீ எந்த ம***ராண்டி மகனா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல. எதுவா இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்கலாம்" என்று திட்டிவிட்டு ஃபோனை வைத்தவளை தான் சத்யன் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் அதிர்ந்த முகத்தை பார்த்தவள், "என்னாச்சு?" என்று அமைதியான குரலில் கேட்டுக் கொண்டே "காபி குடிங்க" என்று சொல்ல,
அவனும் காபியை எடுத்து ஒரு மிடறு குடித்துவிட்டு மீண்டும் அவளை பார்த்து,
"நீங்க எப்பவும் இப்படி தான் பேசுவீங்களா?" என்று கேட்டே விட்டான்.
"அய்யோ இல்லைங்க. இது ஒரு கேஸ்… ஆப்போசிட் பார்ட்டி கேஸ்ல இருந்து ரிலீவ் ஆக சொல்லி மிரட்டுறான். ஒரு சில பேர்கிட்ட இப்படி தான் பேச வேண்டி இருக்கு. என் வேலை அப்படில, கொஞ்சம் அசந்தாலும் மொத்தமா நம்மள குழிக்குள்ள போட்டு மூடிருவாங்க. நீங்க பயப்படாதீங்க… வீட்ல இப்படியெல்லாம் பேச மாட்டேன். உங்க வீட்டுக்கு ஏத்த நல்ல மருமகளா, உங்களுக்கு பிடிச்ச மனைவியா தான் இருப்பேன்" என்றவள் பதிலில் மெலிதாக சிரித்து கொண்டான் சத்யன்.
பிடித்தம் கூட சூழ்நிலை பொறுத்து மாறும் உலகில்… இவள் வாக்கும்… அவன் நம்பிக்கையும் எத்தனை நாட்கள் நிலைக்கும்….
அன்றைய காபி டேக்கு பிறகு, பெரிதாக இல்லையென்றாலும், வரைமுறையோடு கூடிய சிறிய சிறிய பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு தான் இருந்தது சத்யனுக்கும், கனகவள்ளிக்கும் இடையில்.
அவர்கள் குடும்பத்தில் மெஹந்தி ஃபங்ஷன் என்று வைப்பது இல்லை.
ஆனால் கனகவள்ளி தான் "இப்போ எல்லா இடமும் பண்றாங்க" என்று அடம்பிடித்து நடத்திக் கொண்டிருந்தாள்.
மெஹந்தி ஃபங்ஷன் பெண்களின் ஆட்டம், பாட்டத்துடன் குதுகலமாக ஆரம்பித்திருக்க,
அங்கே செண்பகாவோ, சோர்ந்த முகத்துடன் வீடியோ காலில் தன் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
"ஒரு நாள் தள்ளி இந்த டூர் பிளான் பண்ணி இருக்கலாம்ல?" என்று சோக கீதம் வாசித்தவளை, சலிப்பாக தான் பார்த்தனர் மூவரும்.
மூன்றும் ஒன்றாக அமர்ந்து நிலாவின் அலைபேசி வழி தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"அந்த கல்யாணத்தை பார்க்க கூடாதுனு தானே இந்த தேதியில பிளான் பண்ணோம்." என்றாள் கல்பனா கடுப்பாக.
"இப்படி நடக்க வாய்ப்பே இல்ல தான். இருந்தாலும் உங்க அக்கா எவங்கூடயாவது ஓடி போய் கல்யாணம் நின்னா மருதமலை முருகர் கோவில்ல உனக்கு மொட்டை போடுறதா வேண்டி இருக்கோம். கல்யாணம் நின்னுச்சுனா உடனே ஃபோன் அடி, லாரி பிடிச்சாவது வந்து சேர்ந்துடுவோம்" என்ற நந்தினியை இவள் முறைக்க,
அடுத்து நிலாவோ, "சத்யன் சார் உங்க அக்கா கழுத்துல தாலி கட்டுறத பார்க்கிற தைரியமும் எங்களுக்கு இல்ல…
கல்யாணம் நின்னு அவர் அவமான பட்டு நிற்கிறத பார்க்கவும் முடியாம தான் இந்த ட்ரிப். ரெண்டுல எது நடந்தாலும் எங்க குட்டி இதயம் தாங்காது தாயே. நாங்க போய்ட்டு வரோம்" என்றவர்கள் மட்டுமல்ல, இறுதியாண்டு இன்ப சுற்றுலா என்று அவர்கள் மொத்த வகுப்பும் தான் கிளம்பிக் கொண்டிருந்தது.
கூடவே விக்ரமையும், ஜெயஶ்ரீயையும் அழைத்துக் கொண்டு இதோ அவர்கள் பேருந்து கல்லூரி வளாகத்தை விட்டு கிளம்பியிருந்தது.
இங்கே செண்பகா தான் தோழிகள் இன்றி தனியே சுற்றி வந்தாள்.
அங்கே கனகாவோ இரண்டு கைகளிலும் மருதாணி வைத்துக் கொண்டு நண்பிகளுடன் சேர்ந்து ஆடிக் கொண்டிருக்க,
செண்பகாவுக்கு தான் அவள் வானர படை இல்லாது எதிலும் நாட்டம் இல்லாமல் போனது.
அமைதியாக ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தவள் அருகே ட்ரோன் கேமரா ஒன்று பறந்து வந்தது.
அதன் சிறகுகள் சுழன்று கொண்டு அவளை உரசும்படி அருகே வர, செண்பகாவோ பயந்து வேறு இருக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.
அங்கேயும் ட்ரோன் கேமரா வர, அடுத்து இருக்கைக்கு தாவியவளை சுற்றி சுற்றி விளையாட்டு காட்டிய கேமராவை பயந்து பார்த்து கொண்டே, அதை யார் இயக்குகிறார்கள்? என்று விழிகளை சுழல விட்டு அந்த இடத்தை அலச, சற்று தொலைவில் ரிமோட் கண்ட்ரோலுடன் நின்றுக் கொண்டிருந்தான் நரேன்.
அவனை பார்த்ததும் இவள் முகம் மலர,
"நரேன் இங்க என்ன பண்ற?" என்று கேட்டுக் கொண்டே அவனிடம் சென்றாள்.
"வீடியோ கவரேஜ்" என்று சொன்னவன், அங்கே மெஹந்தி ஃபங்ஷனை ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்த அவன் தந்தையிடம் அழைத்து சென்று, அப்பா என்று அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
"நல்லா இருக்கீங்களா அங்கில்?" என்று அவரிடம் சில வார்த்தைகள் பேசி விட்டு, செல்ல இருந்தவளிடம், "நீ ஏன் டல்லா இருக்க?" என்று கேட்டான் நரேன்.
"எல்லாரும் என்னை மட்டும் தனியா விட்டு டூர் போய்ட்டாங்க" என்று முகத்தை சுருக்கி கொண்டே சொன்னாள்.
"அவ்வளவு தானா? இது உன் வீட்டு ஃபங்ஷன் செம்பா. அதுவும் உன் ஒரே அக்காவோட கல்யாணம். நல்ல என்ஜாய் பண்ண வேண்டாமா?" என்று சொன்னவன், அவளை குதுகல படுத்தும் பொருட்டு, "ட்ரோன் ஆப்ரெட் பண்றியா?" என்று கேட்க,
அவளும், கண்கள் மின்ன "நிஜமாவா? எனக்கு தருவியா?" என்று தான் ஆசையாக கேட்டாள்.
"ஹ்ம்ம். இந்தா பிடி" என்று ரிமோட் கண்ட்ரோலை அவள் கையில் கொடுத்தவன், எப்படி உபயோகிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்து விட்டு முன்னால் சென்று அதை பறக்க விட தயாராக,
செண்பகாவோ, "நரேன்… நான் யார் மேலயாவது இடிச்சிட போறேன். நீயே பண்ணு" என்று பயத்தில் மறுக்க, "அதெல்லாம் ஒன்னும் ஆகாது செம்பா… பார்த்துக்கலாம்" என்றவன், "ஆன் பண்ணு" என்று சொல்ல, அவளும் ஆன் செய்தாள்.
நான்கு புறமும் இருக்கும் குட்டி ரெக்கைகளை சுழட்டி கொண்டே ட்ரோன் பறக்க,
"ஆ… நரேன்…" என்று உற்சாகத்திலும், பயத்திலும் குதித்தவள் பின்னால் வந்து நின்று அவள் கை தொட்டு அவனே இயக்க கற்றுக் கொடுக்க,
சற்று முன் இருந்த வெறுமை நிலை முற்றிலும் நீங்கி குதுகலமானாள் செண்பகவள்ளி.
அவள் நரேனுடன் ஒட்டிக் கொண்டு நிற்பதை பார்த்த சிவனனைந்த பெருமாள், "செம்பா…" என்று அழைத்துக் கொண்டே அவர்கள் அருகே வர,
தன் கையில் இருந்த ரிமோட் கண்ட்ரோலை அவனிடம் கொடுத்து விட்டு, "என்ன ப்பா?" என்று கேட்டாள்.
நரேனும் அதை தன் பக்கம் வர வைத்து கையில் பிடித்து நிறுத்தியவனும் அவரை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
"யார் மா இந்த பையன்?" தங்கள் வீட்டு பெண் மீது நம்பிக்கை இருக்கிறது தான். ஆனாலும் அவர்களின் நெருக்கம் மற்றவர்கள் கண்களை உறுத்துமே என்று தான் அவர் இடை புகுந்தது.
"ப்ரெண்ட் ப்பா… ஸ்கூல்ல ஒன்னா படிச்சோம். இப்பவும் ஒரே காலேஜ் தான். ஆனா அவன் வேற டிபார்ட்மெண்ட்" என்று அவனை பற்றி சொன்னாள்.
சிவனனைந்த பெருமாளும், "சரி மா… தம்பி சாப்பிட்டுட்டு இனி வீடியோ எடுங்க" என்றவர் நாசுக்காக மகளை அழைத்து சென்று விட்டார்.
செண்பகா செல்லும் திசையையே பார்த்துக் கொண்டே நின்றிருந்த நரேன் தோளில் அவன் தந்தை கை வைக்க, திடுக்கிடுட்டு திரும்பியவனை “வெறும் ப்ரெண்ட் மட்டுமா?" என்று குறும்பு கண்களுடன் புருவத்தை உயர்த்தி கேட்க,
வெட்கப்பட்டு தலையை சொரிந்து கொண்ட மகனின் வெட்கமே அவருக்கு உறவை சொன்னது.
மகன் ஆசைகளுக்கு தடை சொல்லும் தந்தை இல்லையே அவர். ஆனாலும் மகனை எண்ணி பயம் எப்போதும் இருக்கும்
"பெரிய இடமா இருக்கே மகனே. நமக்கு ஒத்து வருமா?” என்று தான் அதட்டல் இல்லாது கேட்டார்.
"பெரிய இடமா இருந்தா என்ன? பொண்ணுக்கு கல்யாணம் பண்ண எப்படியும் பையன தானே பார்ப்பாங்க, இடத்துக்கா கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க? அதெல்லாம் ஒத்து வரும் வா ப்பா" என்றவன் தன் வேலையை பார்க்க சென்று விட்டான்.
மாப்பிள்ளை வீட்டாரும் இரவே மண்டபத்திற்கு வந்து சேர்ந்து விட,
செண்பகாவை தான் மாப்பிள்ளை வரவேற்புக்கு ஆரத்தி எடுத்து சத்யனை உள்ளே அழைத்து செல்ல சொன்னார்கள்.
"வாங்க சம்மந்தி" என்று அவன் வீட்டாட்களை விழுந்து விழுந்து தான் கவனித்தார்கள் லெட்சுமி சிஸ்டர்ஸ் இருவரும்.
சத்யன் வந்ததில் இருந்து ஒவ்வொரு நிகழ்வையும், நொடிக்கு நூறு போட்டோஸ் செண்பகா தன் மூன்று தோழிகளுக்கும் அனுப்பி வைக்க,
"இதெல்லாம் பார்க்க கூடாதுனு தானே நாம பஸ் பிடிச்சு பாடர் தாண்டி போய்ட்டு இருக்கோம். போட்டோ அனுப்பி வெறுபேத்துறா பாரு." என்று நொந்து கொண்டவர்கள்,
"பேசாம கல்யாணம் முடியிற வரை அவ நம்பர் பிளாக் பண்ணிடுவோமா?" என்று நந்தினி ஐடியா கொடுக்க,
"ச்சே ச்சே… என்ன இருந்தாலும் அவ நம்ம ப்ரெண்ட் அப்படியெல்லாம் பண்ண கூடாது" என்று அவளுக்காக பேசிய நிலா தான், முதலில் அவளை பிளாக் பண்ணது.
கனகாவுடன் சத்யன் சேர்ந்து அமர்ந்திருந்த வீடியோ ஒன்றை அடுத்து செண்பகா அனுப்பி வைத்திருக்க,
"இதுக்கு மேல முடியாது, டூர் முடிச்சிட்டு வந்து அவளை சமாதானம் செஞ்சிக்கலாம்" என்று மூவரும் அவள் எண்ணை பிளாக் செய்திருந்தார்கள்.
இங்கே, "நாம என்ன வட நாட்டுகாரங்களா? மருதாணி வைக்கிறதுக்கெல்லாம் விழா எடுக்க?" என்று குறை சொல்லி கொண்டே வீட்டில் இருந்து கிளம்பிய அந்த வீட்டின் ராஜமாத பலசொரூபம் பாட்டியோ இங்கே வந்ததும்.
"இந்த மாதிரி சடங்குகளை யார் கொண்டு வந்தா என்ன? பிள்ளைங்க சந்தோசம் தானே முக்கியம்" என்று அந்தர் பல்டி அடித்து, கனகவள்ளியை நெட்டி முறித்து திருஷ்டி எடுத்துக் கொண்டே, நான் ஜாலி டைப் பா என்று அவரும் கைகளை ஆட்டி ஒரு ஆட்டத்தை போட, அந்த இடமே சிரிப்புக்கு பஞ்சம் இல்லாது நிறைந்தது.
கனகா, சத்யன் வீட்டு ஆட்கள் எல்லாரிடமும் மரியாதையாக, வயதுக்கு ஏற்ற பாகுபாடோடு வீட்டு பெண்களிடம் கலகலப்பாக பேசி சிரித்தாலும், சத்யனின் அக்கா மகள் காயத்ரியை மட்டும் கொஞ்சம் கடுப்பாக தான் பார்த்து வைத்தாள்.
இப்போது பதினொன்றாம் வகுப்பு தான் படிக்கிறாள். இருந்தாலும் என்ன வேலை பார்த்து வச்சிடுச்சு இந்த குட்டி சாத்தான் என்று அவளை பார்க்கும் போதெல்லாம், "இந்த பொடிசு என்னை ஏமாத்திடிச்சே" என்று கோபம் தான் வந்தது கனகாவுக்கு.
ஆனால் அவளோ அப்படி ஒரு விசயம் நடந்தது போலவே காட்டி கொள்ளாது இயல்பாக தான் கனகாவிடம் பேசினாள்.
மூன்று வயது தான் வித்தியாசம் என்பதால் செண்பகாவிடம் சீக்கிரமே ஒட்டியும் கொண்டாள்.
அந்த வீட்டு குட்டீஸ்கள் வந்த பிறகு தங்கள் ஆட்டம் பாட்டத்தில் "செம்பா நீயும் வா" என்று அவளையும் தங்களோடு இணைத்துக் கொண்டு குதூகளிக்க, செண்பகாவின் ஒவ்வொரு புன்னகையையும் அழகாக படமாக்கி கொண்டிருந்தான் நரேன்.
அவள் புன்னகையை தொலைக்கும் கடைசி இரவென்று அப்போது அவனும் அறியவில்லை, அவளும் உணரவில்லை.
ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாக கழிந்த இரவோ,
"சண்டாளி இப்படி பண்ணிட்டு போய்ட்டாளே? என் குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வச்சிட்டாளே, சம்மந்தி வீட்டாட்களுக்கு நாங்க என்ன பதில் சொல்வோம், பாவிமக என் புள்ளையை மொத்தமா தலை குனிய வச்சிட்டாளே" என்ற பொன்னாபரணத்தின் குமுறலில் தான் விடிந்தது.
"ஆத்தா கத்தி ஆர்பாட்டம் பண்ணி பிள்ளை ஓடி போச்சுன்னு நீயே தம்பட்டம் அடிக்காத, அதான் தம்பி தேடி போய் இருக்கான்ல வரட்டும்" என்று அன்னையை சமாதானம் செய்தாலும், மகளின் இந்த துரோகத்தை அவராலும் ஜீரணிக்க முடியவில்லை.
"ஒவ்வொரு விசயமும் அவளை கேட்டு தானே பண்ணோம். அப்புறம் ஏங்க இப்படி நம்மள தலை குனிய வச்சிட்டு போய்ட்டா?" என்று காஜலெட்சுமி ஒரு புறம் புடவை முந்தானையால் வாயை பொத்திக் கொண்டு அழ,
"அழாத க்கா… அவர் போயிருக்கார்ல எப்படியும் பிள்ளையை கூட்டிட்டு வந்துருவார்" என்று சமாதானம் செய்து கொண்டிருந்தாள் முத்துலெட்சுமி.
கீழ் வானம் சிவந்து விடியலை உணர்த்த, அந்த வானத்தை விட அதிகமாக சிவப்பேறிய கோபத்துடன் தான் டமாரென்று கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார் சத்யனின் தந்தை.
அவரை தொடர்ந்து சத்யன் வீட்டு பெரியவர்கள் அனைவரும் உள்ளே நுழைய,
அதிர்ந்து போனார்கள் கனகாவின் வீட்டார்கள்.
"சம்மந்தி…" என்று பொன்காத்தபெருமாள் பேச முற்பட,
தன் ஒரு கையை தூக்கி அவரை தடுத்திருந்தார் சத்யனின் தந்தை அதிபன்.
"கல்யாண பொண்ணு எங்க?" என்று அவர் அடிகுரலில் அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க,
பதில் சொல்ல முடியாது திணறி தான் போனார் பொன்காத்தபெருமாள்.
"என்ன காணோமா?" என்று பலசொரூபம் குத்தல் பேச்சை ஆரம்பிக்க,
"இல்லங்க… இங்க தான் பக்கத்துல பியூட்டி பார்லர் போய் இருக்கா" என்று சமாளிக்க முற்பட்ட முத்துலட்சுமியை அவர்கள் பேசவே விடவில்லை.
"உங்க பொண்ணு தான் எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை, நான் விருப்பப்பட்டவன் கூட போறேன். வீட்ட பாக்க போங்கனு தெளிவா எல்லாருக்கும் மெசேஜ் அனுப்பி வச்சிருக்காளே" என்று அவர் சொல்ல,
இன்னும் என்னவெல்லாம் பண்ணி வச்சிருக்காளோ என்று தலையே சுற்றியது கனகா வீட்டாட்களுக்கு.
அந்த நேரம் சிவனனைந்த பெருமாளும் வந்து சேர, பெரிய எதிர் பார்ப்போடு தான் அவரிடம் ஓடி சென்றார் பொன்காத்த பெருமாள்.
"சிவா… அவ கிடைச்சாளா?" எதிர்பார்ப்போடு அவருக்கு பின்னால் வாசல் தாண்டி மகளை தேட,
அவர் தேடுதல் எல்லாம் வீண் தானே.
இல்லை என்று தலையை ஆட்டிய தம்பியை பார்த்து மொத்தமாக உடைந்து தான் போனார்.
"அது சரி. அவ இந்நேரம் எவன் கூட இருக்காளோ யாருக்கு தெரியும்?"
"நீங்க எங்க வகையறா இல்லைனாலும், நல்ல குடும்பம்னு தான் சம்மந்தம் பேசினோம். இப்படி நாரடிச்சிட்டீங்களே!"
செண்பகாவின் அப்பாக்கள் இருவரும் பதில் பேச முடியாது தலை குனிந்து தான் நின்றார்கள்.
எவ்வளவு பெரிய அவமானம். பெண்ணை பெற்று, சீராட்டி பாராட்டி வளர்ப்பது எல்லாம் இந்த சொல்லை கேட்க தானா?
"இங்க பாருங்க நரம்பில்லாத நாக்குனு கண்டபடி பேசாதீங்க. நாங்க எங்க பொண்ண ஒழுக்கமா தான் வளர்த்தோம்" என்று முத்து லெட்சுமி தான் சுடு சொல் தாங்காது பதிலுக்கு பதில் பேசினார்.
"ஒழுக்கமா வளர்த்த பொண்ணு தான் இப்படி ஓடி போச்சா?" என்று ஒவ்வொரு சொல்லிலும் அவர்களை குத்தி கிழித்தார்கள்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல முகூர்த்தம் எங்களுக்கு என்ன பதில் சொல்லுவீங்க" என்று பலசொரூபம் கேட்க, சில நிமிடம் மயான அமைதி தான் நிலவியது அறையில்.
சில நிமிடங்கள் யோசித்தவர், "எங்க பையனுக்கு கல்யாணம் பண்ண தான் குடும்பம் மொத்தமும் கிளம்பி வந்தோம். அவன் கல்யாணம் நடக்காம இங்க இருந்து போக மாட்டோம்" என்று தீர்க்கமாக சொன்னவர், வேகமாக கதவை திறந்துக் கொண்டே வெளியே வந்தார்.
அங்கே அறையில் தங்கள் வீட்டு பிள்ளைகளோடு பிள்ளையாக தூங்கி கொண்டிருந்த செண்பகாவிடம் வந்தவர், "ஏய் சின்ன குட்டி எழுந்திருடி…" என்று கன்னத்தில் தட்டி எழுப்பி, அவள் கண் திறந்ததும் என்ன ஏது என்று ஏதும் அவள் உணரும் முன்னமே அவள் கையை பிடித்து தர தரவென்று இழுத்து வந்தார்.
"பாட்டி எங்க கூட்டிட்டு போறீங்க? கை வலிக்குது விடுங்க" என்றவள் பேச்சையெல்லாம் அவர் கேட்கவே இல்லை.
அறையின் நடுவே அவளை இழுத்து கொண்டு விட்டவர்,
"உங்க மூத்த பொண்ணு எங்களுக்கு ஏற்படுத்திய அவமானத்துக்கு பிராயச்சித்தம்மா உங்க ரெண்டாவது பொண்ண எங்க பையனுக்கு கட்டி வைங்க" என்று சொல்லவும், தூக்கி வாரி போட்டது பாதி தூக்கத்தில் இருந்த செண்பகாவுக்கு.
அவளுக்கு மட்டுமல்ல அவள் வீட்டார்கள் கூட அவர் சொன்னதை ஏற்று கொள்ள முடியாது திகைத்து தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"சம்மந்தி ம்மா அவ சின்ன பொண்ணு" என்று முதலில் மறுத்தது என்னவோ சிவனனைந்த பெருமாள் தான்.
"என்ன சின்ன பொண்ணு. இருபது வயசு ஆகுதே. இன்னும் என்ன சின்ன பொண்ணு" என்று சத்யன் அக்கா வீம்பாக நிற்க,
"சரி" என்று ஒத்துக் கொண்டார் பொன்காத்த பெருமாள்.
நடப்பது எதுவும் புரியாது தன் தந்தையை அதிர்ந்து பார்த்த செண்பகவள்ளியோ, "என்னாச்சு ம்மா?" என்று குழப்பமாக கேட்டுக் கொண்டே கஜலெட்சுமியிடம் வந்தாள்.
அந்நேரம் தான் சத்யனும் விடயம் அறிந்து அங்கு வந்து சேர்ந்தான்.
"நீ இங்க என்ன பண்ற, வந்து கல்யாணத்துக்கு தயாராகு" என்று பலசொரூபம் அவனை விரட்ட,
"பாட்டி மா கனகவள்ளி" என்று அவன் ஆரம்பிக்கும் முன்னமே, "அக்கா ஓடி போய்ட்டா மா" என்று இங்கே கஜலெட்சுமி மகளிடம் சொல்லி முடித்திருந்தார்.
ஏக அதிர்ச்சி செண்பகாவுக்கு. இது சாத்தியமே இல்லையே!
"இல்லை பாட்டி அவங்க நிச்சயம் ஓடி போய் இருக்க மாட்டாங்க? என்ன நடந்தது விசாரிக்கலாம், முதல்ல அவங்களை தேடலாம்" என்று கிளம்பிய சத்யனை தடுத்து நிறுத்திய அவன் தந்தை அதிபனோ,
"தேடி கண்டு பிடிச்சு? நீ வேண்டாம்னு ஓடி போனவளை கல்யாணம் பண்ணிக்க போறியா? இப்படி ஒரு அவமானத்தை ஏற்படுத்திட்டு போன அந்த பொண்ணு இனி நம்ம குடும்பத்துக்கு வேணாம்" என்றவரை அவன் இயலாமையுடன் தான் பார்த்தான்.
"இல்ல ப்பா… அவங்க ஓடி போயிருக்க மாட்டாங்க" என்று சொன்ன சத்யன் பேச்சையும்,
"அக்காவுக்கு அவரை ரொம்ப பிடிக்கும் ம்மா, அவ போயிருக்க மாட்டா" என்று கதறிய செண்பகா கதறலையும் யாரும் பொருட்படுத்தவில்லை.
"அவ சின்ன பொண்ணு, என்னால அவளை கல்யாணம் பண்ணிக்க முடியாது" என்று கிளம்பிய சத்யனை,
"நீ ஒத்துக்கலைனா என் பொணம் தான் அந்த வீட்டுக்கு திரும்பும். சும்மா சொல்லல ய்யா… என் மூனு புள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சி அதுங்க புள்ளைங்களுக்கும் கல்யாணம் பண்ணி வச்சி இருக்கேன். இந்த மாதிரி சங்கடம் நடந்ததே இல்லை. இவ்வளவு பெரிய அவமானத்தை தாங்கிட்டு என்னால வாழ முடியாது. உன் கல்யாணத்தை பார்த்துட்டு நிம்மதியா இந்த கட்டை வெகுறதும், கல்யாண மேடை வரை உன்னை கூட்டிட்டு வந்து உன்னை அசிங்க படுத்திட்டோமேனு கவலைல சாகுறதும் உன் கையில தான் இருக்கு" என்று பலசொரூபம் மிரட்டி தான் அவனை தயார் படுத்தினார்.
குடும்ப மானம், கௌரவம் என்று கத்தி முனையில் ஒரு திருமணம் இருவருக்கும்.
இங்கே செண்பகா வீட்டிலோ பொன்காத்த பெருமாள், பொன்னாபரணம் தவிர்த்து யாருக்கும் துளியும் விருப்பம் இல்லை.
"ஏங்க… கனகா மாதிரி இல்லைங்க இவ, அவ்வளவு பெரிய குடும்பத்தை சமாளிச்சிட மாட்ட. அறியா புள்ளைய பெத்து வச்சிருக்கோம்… வம்பா புள்ளை வாழ்க்கை போயிடும். கல்யாணத்த நிறுத்திடலாம்ங்க. நாக்க புடுங்க மாதிரி பேசுவாங்க, பெத்த பாவத்துக்கு ஏச்சும், பேச்சும் நாம வாங்கிப்போம். அதுக்காக அவ பண்ண தப்புக்கு, சின்னவ வாழ்க்கையை கெடுத்துடாதீங்க. என் புள்ளை நிலைகுலஞ்சி போய்டுங்க" என்று கை கூப்பி கெஞ்சிய மனைவியின் கண்ணீர் துளிகள் நெஞ்சை பிசைந்தாலும் கல் நெஞ்சராகி தான் போனார் அந்த தந்தை.
"அவ தலையில என்ன எழுதியிருக்கோ அது நடக்கட்டும் மா, புள்ளையை தயார் படுத்து" என்று விட்டு செண்பகா முகத்தை கூட பார்க்க சக்தி இல்லாது தான் வெளியேறினார்.
அடுத்து கடந்த சில நிமிடங்கள் இருவருக்கு மட்டுமல்ல அவர்கள் குடும்பத்துக்கும் உயிர்பற்ற நிமிடங்களாக தான் கடந்தது.
மணமேடையில் ஜடமாக அமர்ந்திருந்த சத்யன் அருகே பொம்மை போல் கொண்டு வந்து அமர்த்தப்பட்டாள் செண்பகவள்ளி.
சத்யன் பார்வை அவள் மீது இயலாமையோடு பதிய, உயிர் இருக்கும் பொம்மை பெண்ணோ பாவமாக தான் அவனை பார்த்து வைத்தாள்.
அவர்கள் இருவரையும் விட பேரதிர்ச்சி தான் கேமரா வழியே பார்த்துக் கொண்டிருந்த நரேனுக்கு.
அவன் உயிர் அல்லவா அங்கே மணக்கோலத்தில் இருக்கிறாள். எதுவும் புரியவில்லை அவனுக்கும்.
அவன் நிலை உணர்ந்து தோளில் கை வைத்த தந்தையை அதிர்ச்சி அகலா விழியுடன் பார்த்தவன், "என்ன ப்பா இது?” என்று தான் இம்மை புரியாது கேட்டான்.
“அக்கா ஓடி போய்ட்டா, தங்கச்சிய கட்டி வைக்கிறாங்க”
“போற வா… முன்னாடியே போய் தொலைஞ்சிருக்க வேண்டியது தானே! இப்படி ரெண்டு குடும்பத்துக்கும் இவ்வளவு பெரிய அசிங்கத்தை ஏற்படுத்திட்டு போய்ட்டாளே!”
என்ற சல சலப்புகள் நடுவே, நரேனின் கண்ணீர் விழிகள் புகைப்படம் எடுக்க, ஐயர் ஓதும் மந்திரங்கள் தாண்டி,
"ரொம்பவே வெள்ளந்தியான பொண்ணு. ஆனா கல்யாணம் பண்ணி வாழ்றது ரொம்ப கஷ்டம் மச்சான். அவளை குழந்தை போல பார்த்துக்கிற ஒருத்தன் கூட அவ வாழ்க்கை இணைஞ்சா நல்லா இருக்கும்" என்ற விக்ரமின் குரல் செவியை நிறைக்க, ஆழ்ந்த மூசெடுத்துக் கொண்டே, விழியில் தேங்கிய நீருடன், கைப்பாவையாக தன்னருகே அமர்ந்திருந்த பெண்பாவை கழுத்தில் மூன்று முடிச்சிட்டு, விக்ரமின் கொழந்தை அவளை தன் முதல் குழந்தையாக ஏற்றுக் கொண்டான் சத்யன்.
நிச்சயிக்கப் பட்ட நாளில் குறித்த நேரத்தில் எதிர் பாரா இருவருக்கு இனிதே நடந்து முடிந்தது அழகிய திருமணம்…
சிறு சிறு சலசலப்புகள், பெரிய பெரிய புரலிகள் நடுவே ஒருவழியாக திருமண சடங்குகள் அனைத்தையும் முடித்து விட்டு, அன்று மாலையே செண்பகவோடு வீடு வந்து சேர்ந்தார்கள் சத்யன் குடும்பத்தார்கள்.
பலசொரூபத்திற்கு மூன்று வாரிசுகள். அதிபன், அந்துவன், அகிலாண்டேஸ்வரி.
அதிபனுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் தங்கேஸ்வரி, இரண்டாவது அவளுக்கு பிறகு பல வருடங்கள் காத்திருந்து தான் சத்யன் பிறந்தான்.
அந்துவனுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். ஶ்ரீதர், ஶ்ரீராம்.
ஶ்ரீதர் மனைவி ஹேமா, ஶ்ரீராம் மனைவி சீதா.
அகிலாண்டேஸ்வரிக்கு ஒரே ஒரு மகன், அகிலன். குடும்ப தொழிலும் வேண்டாம், சொந்த நாடும் வேண்டாம் என்று சாப்ட்வேர் என்ஜினீயராக மனைவி மக்களுடன் வெளிநாட்டு வாசி ஆகி பல வருடம் ஆகி விட்டது.
சத்யன் திருமணத்தை கூட அகிலாண்டேஸ்வரி தான் அவனுக்கு லைவ் ஷோவாக ஃபோனில் காட்டியது.
மேலும் ஆளுக்கு ஒன்று, ரெண்டு என்று குடும்ப விருத்திக்காக பெத்து போட்ட பொடிசுகள் சில என்று எப்போதும் சண்டைகளுக்கும், சச்சரவுகளுக்கும், குழந்தைகளின் சத்தங்களுக்கும் பஞ்சமில்லா கூட்டு குடும்பம் தான் அது.
அத்தனை பேரையும் இரும்பு மனிதியாக தன் கை வளைவில் ஆட்டி படைத்து கொண்டிருக்கிறார் பலசொரூபம்.
வலது கால் எடுத்து அவர்கள் கூட்டிற்குள் அடியெடுத்து வைத்து வந்த செண்பகாவை பலசொரூபம் முதலில் பூஜை அறையில் விளக்கு ஏற்ற அழைத்து செல்ல, ஒரு பெட்டி தீக்குச்சிகளை காலி செய்தாலே தவிர விளக்கு ஏற்றிய பாடில்லை.
எல்லாரும் சுற்றி நின்று கைகளை கட்டிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருக்க, அதிலேயே ஆள் நடுங்கி போனாள்.
மொத்த தீக்குச்சிகளையும் காலி செய்து விட்டு, அவள் பாவமாக நிமிர்ந்து பார்க்க, சத்யன் தான் மெழுகுவர்த்தி ஏற்றி அவளிடம் கொடுத்து விளக்கேற்ற சொன்னான்.
அப்போதும் கூட 'இத முன்னாடியே பண்ணியிருக்களாமே! இப்போ மொத்த கும்பலும் ஏதோ கொள்ளைகாரனை பார்க்கிற போல பார்த்து வைக்கிறாங்க' என்று அவனை தான் திட்டிக் கொண்டே விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு விட்டு நல்ல பிள்ளையாக அடுத்து என்ன என்பது போல் ஒரு பார்வையை பலசொரூபம் மேல் வீச,
அருகே நின்றிருந்த சத்யனின் அம்மா தாட்ச்சாயினி அவள் விரல்களை பிடித்து மோதிரம் அணிவித்து விட்டார்.
"இது எங்க குடும்ப வழக்கம். மாமியார், மருமக உறவு தங்கம் போல தளைக்கணும்ங்கிறதுக்காக" என்று சொல்ல,
அவளும் ஹ்ம்ம் என்று தலையை ஆட்டி கேட்டுக் கொண்டவள், தன் விரலை விட்டு வழுவி ஓட இருந்த மோதிர விரலை தூக்கி பார்த்தாள்.
"உன் அக்காவுக்காக அவ அளவுக்கு செஞ்சது. மாமாகிட்ட சொல்லி நாளைக்கு ஆல்டர் பண்ணி செஞ்சி தர சொல்றேன்" என்றவரிடம்,
"பரவாயில்லை, நான் இதையே நூல் சுத்தி போட்டுக்கிறேன்" என்றவள் தலையை மெல்லிய புன்னகையோடு ஆதூரமாக வருடி விட்டார்.
"ம்கும்" என்று குரலை கணைத்த பலசொரூபம், "சரி சரி எல்லாரும் போய் அடுத்த வேலையை பாருங்க" என்று கூட்டத்தை கலைத்து விட,
எல்லாரும் களைந்து சென்றார்கள்.
தன் அறைக்கு செல்லயிருந்த சத்யன் ஒரு நிமிடம் நின்று செண்பகாவை பார்க்க,
"கொஞ்ச நேரம் எங்கூட இருக்கட்டும் பா" என்று அவன் மனைவியை கைவளைவில் அணைத்துக் கொண்டே கனிவாக சொன்ன அன்னையை நன்றியாக பார்த்துக் கொண்டவன் தன் அறைக்கு சென்று விட்டான்.
"செம்பா… எங்க கூட வா உனக்கு வீட்ட சுத்தி காட்டுறோம்" என்று பொடிசுகள் அவள் கையை பிடித்து இழுக்க,
"ஆமா இங்கிலாந்து மகாராணி வந்திருக்காங்க பாரு சுத்தி காட்டதுக்கு. இங்க தானே இருக்க போறா அதெல்லாம் பொறுமையா காட்டலாம். இப்போ எல்லாம் போய் சாப்பிட்டு தூங்குங்க" என்று விரட்டினார் பலசொரூபம்.
அவர்களோ, "பாட்டி ஆறு மணி தானே ஆகுது. இப்பவே ஏன் தூங்க சொல்றீங்க. நாங்க செம்பா கூட விளையாடிட்டு தான் போவோம்" என்ற பிள்ளைகளை வெடுக்கென்று திரும்பி பார்த்தவர்,
"கெட்டது குடி. உங்க கூட விளையாட தான் அவளை கூட்டிட்டு வந்துருக்கா? போங்க எல்லாம்" என்று விரட்டி விட,
சிறியவர்களோ "வேற எதுக்காம்?" என்று கேட்டுக் கொண்டே ஓடியே விட்டார்கள்.
பொடிசுகளை விரட்டி விட்டு தன் மருமகளை பார்த்தவர், "நீ என்ன இன்னும் இங்க நின்னு என் மூஞ்ச பார்த்திட்டு இருக்க? போய் அவளை ராத்திரி சடங்குக்கு தயார் படுத்து" என்று சொல்ல,
'என்ன மனுஷி இவங்க? பாவம் அந்த பொண்ணு. இந்த மாதிரி ஒரு சூழ்நிலைல கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்துட்டு இப்படி மனசாட்சியே இல்லாம சொல்றாங்க?' என்று அவர் மூத்த மருமகள் நொந்து கொண்டே, "நீ வா மா" என்று செண்பகாவை அழைத்து சென்றார்.
தங்கள் அறைக்கு அழைத்து சென்றவர், "கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ" என்று சொல்லிவிட்டு செல்ல, அந்த அறையை சுற்றி பார்வையை சுழல விட்டவள் மனதில் மொத்தமும் பயம் மட்டும் தான் சூழ்ந்திருந்தது.
குருவி தலையில் பனங்காயை தூக்கி வைத்தது போல் ஆனது அவள் நிலை.
அத்தனைப் பேர் சுற்றி நின்று அவளையே பார்க்கையில் மூச்சு முட்டிய உணர்வு. இப்போது யாரும் இல்லை என்றாலும், ஏதோ மனதை பிசைந்தது.
அன்னை வாசம் தேடி கண்கள் தானாக கலங்கிட, அடுத்த நிமிடமே கஜலட்சுமிக்கு போனடித்தாள்.
அவள் மட்டுமா அவர்களை எண்ணி தவிக்கிறாள், அங்கே அவர்களும் தானே அவளை எண்ணி தகித்து கொண்டிருக்கிறார்கள்.
அவளிடம் இருந்து அழைப்பு வரவும், "செம்பா… தங்கம் எப்படி டா இருக்க?" என்ற கஜலட்சுமி குரலில் அழுதே விட்டாள் சிறியவள்.
இத்தனைக்கும் அவர்களை பிரிந்து முழுதாக இரண்டு மணி நேரம் கூட முடியவில்லை. அதற்கே காற்றில்லா பலூன் போல ஆனால் காரிகை.
மகளின் கண்ணீரை செவி வழி கேட்டதற்கே கஜலட்சுமியும் கண்ணீர் வடிக்க,
"அக்கா ஃபோனை இங்க குடு. நீயே அழுதா பாவம் சின்ன புள்ள என்ன பண்ணும்" என்று தமக்கையை நொந்து கொண்டே ஃபோனை வாங்கி முத்துலட்சுமி தான் பேசினார்.
"ஒன்னும் இல்ல டா … அழ கூடாது. நீ ரொம்ப தூரத்துலலாம் இல்ல, இதோ பக்கத்துல தான் இருக்க. வானு கூப்பிட்ட, நாங்க எல்லாம் அடுத்த நிமிஷமே ஓடி வந்துடுவோம்.
உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. கொஞ்சம் பொறுப்பா இருக்கணும். நல்ல பிள்ளையா அவங்க சொல்றத கேட்டு நடந்துக்கணும். உனக்கு என்ன பிரச்சனைனாலும் ஒரு ஃபோன் அடி நாங்க எல்லாம் இருக்கோம்" என்றவர் ஆறுதல் மொழியே அவளுக்கு மேலும் கிலியை பரப்பியது.
சில நிமிடங்கள் தன் வீட்டாட்களுடன் பேசி விட்டே ஃபோனை அணைத்தாள்.
அன்னைகளிடம் பேசி விட்டு அடுத்து அவள் அழைத்தது தோழிகளுக்கு தான்.
ஆனால் அவள் நேரம் அவர்கள் தான் அவள் எண்ணை பிளாக் செய்திருந்தார்கள் அல்லவா.
இரண்டு மூன்று முறை அடித்து பார்த்தவள், சோர்ந்து போய் அமர்ந்திருக்க, சாப்பாடு தட்டோடு உள்ளே வந்தார் தாட்ச்சாயினி.
அவரை பார்த்ததும் இவள் எழுந்து நிற்க, "உட்காரு மா… சாப்பிடு" என்று அவள் கையில் தட்டை கொடுக்க, பசி தான் இருந்தாலும் உணவு இறங்க மறுத்தது.
பாதி சாப்பாட்டில் வேண்டாம் என்றால் திட்டுவாரோ என்று பயந்தே சாப்பாட்டை அலைந்து கொண்டே இருந்தாள்.
"போதுமா?" என்று தாட்ச்சாயினி கேட்ட அடுத்த நொடி வேகமாக தலையை ஆட்டினாள் போதும் என்று.
"சரி கொடுத்திடு" என்று வாங்கி கொண்டவர், குளியலறையை காட்டி, "கைக்கழுவிட்டு வா" என்று சொல்ல, அவளும் எழுந்து சென்று கைகளை கழுவி வந்தாள்.
அப்போது உள்ளே வந்த சத்யனின் அண்ணிகள் இருவரும், "பாட்டி அவளை ரெடி பண்ண சொன்னாங்க அத்தை" என்று சொல்லி கொண்டே மஞ்சள் நிற புடவை ஒன்றை செண்பகா கையில் கொடுக்க,
ஏன்? எதற்கு? என்று புரியாமல் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் செண்பகா.
'இந்த அத்தை என்னைக்கு தான் அடுத்தவங்க மனச புரிஞ்சிக்குமோ!' என்று நொந்து கொண்டே, "போய் கட்டுட்டு வா மா" என்றார்.
அவளோ "எனக்கு கட்ட தெரியாதே!" என்று அப்பாவியாக சொல்ல,
"உன் புருஷனை வந்து கட்டி விட சொல்லவா?" என்று கேலி செய்த மூத்த மருமகளின் பேச்சை அவரும் கூட வெறுத்தார்.
"ஹேமா…" என்று மருமகளை அதட்டியவர், "நீங்க ரெண்டு பேரும் அவளுக்கு உதவி பண்ணுங்க" என்று விட்டு வெளியேறிவிட்டார்.
"சரி உங்க வீட்ல யார் கட்டி விடுவாங்க" என்று பேசிக் கொண்டே அவர்கள் அவள் அணிந்திருந்த பட்டு புடவையின் ஊக்குகளை அகற்றி, தாங்கள் கொண்டு வந்த புடவையை கட்டி விட, கூச்சமே இன்றி ஜவுளி கடை பொம்மை போல் தான் நின்றிருந்தாள் செண்பகா.
புடவை கட்டி முடித்தவர்கள், அவளுக்கு தலை அலங்காரம் செய்து, மேக்கப் போட்டு முடிக்கவே மணி ஒன்பதை எட்டி இருந்தது.
இருவரும் செண்பகாவை தயார்படுத்தி வெளியே அழைத்து வர, அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு போய் பூஜை அறையில் விட்ட பலசொரூபமோ, "எண்ணி ஒரு வருஷத்துல எனக்கு கொள்ளு பேரனோ, பேத்தியோ பெத்து கொடுக்கணும்" என்று சற்று மிரட்டலான தொனியில் சொல்லிக் கொண்டே சாமி கும்பிட்டு, அவள் நெற்றியில் திருநீறு பூசி விட்டு, "கூட்டிட்டு போங்க" என்று உத்தரவு கொடுக்க,
பலிக்கொடுக்க அழைத்து செல்லும் ஆடு போல தான் அவர்கள் இழுப்புக்கு சென்றாள்.
ஹேமாவும், சீதாவும் அவளை சத்யன் அறை வாசலில் விட்டவர்கள், "இது தான் சத்யன் தம்பி ரூம். இனி நீ தான் அடியெடுத்து வைக்கணும். பாட்டி சொன்னது ஞாபகம் இருக்கு தானே" என்று ஹேமா சிக்கிய சில்வண்டிடம் தன் அதிகாரத்தை காட்ட முயல,
சீதாவோ "அக்கா விளக்கேத்தவே அந்த பாடு. இது தேறும்ன்னு நினைக்கிறீங்க?" என்று தான் கேட்டாள்.
ஹேமாவோ, "அமுங்குனி மாதிரி இருந்தாலும், இப்போ உள்ள ஜெனரேசன் எல்லாம் ஃபோனை பார்த்தே எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்குதே." என்று அவளை ஏளனமாக பார்த்துக் கொண்டே இருவரும் சென்றார்கள்.
இங்கே சத்யன் அறை கதவை திறந்து கொண்டே மெதுவாக உள்ளே வந்த செண்பகா கண்கள் தானாக கணவனை தேடிட, அவன் இல்லை என்றதும் சிறு நிம்மதி தான்.
அதன் பிறகே அறையை சுற்றி பார்த்தாள்.
கணவன், மனைவி இருவரும் ஓடி பிடித்து விளையாடும் அளவிற்கு நல்ல விசாலமான அறை தான்.
பெரிய கட்டில், வலது புறம் இரண்டு புக் செல்ஃப்… "ஓவரா படிப்பாரோ, நம்மளையும் படிக்க சொன்னா என்ன பண்ண? அக்காவுக்கு வாத்தியார் மாப்பிள்ளை வேணாம் சொன்னா யாராவது கேட்டாங்களா? இப்போ நானுல்ல மாட்டிட்டு தவிக்கிறேன்" என்று தான் அதை பார்த்தவள் மனம் நொந்து கொண்டது.
பெருமூச்சு விட்டுக் கொண்டே அறையை சுற்றி பார்த்தவள் கண்ணில், கட்டிலருகே மேஜையில் வைத்திருந்த இனிப்பு வகைகள் பட்டது.
நாவில் எச்சி ஊற, அருகே சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டே அதிலிருந்து ஜாங்கிரி ஒன்றை எடுத்து வாய் அருகே கொண்டு சென்றவள், சட்டென்று கதவு திறந்த சத்தத்தில் பட்டென்று கையில் இருந்த ஜங்கிரியை தட்டில் போட்டு விட்டே எழுந்து நின்றாள்.
சத்யனை பார்த்ததும், பழக்க தோஷத்தில் "குட் மார்னிங் சார்" என்று தான் சொன்னாள்.
அந்த நேரத்தில் அவனும் அவளை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.
சற்று நேரம் முன் முதலிரவுக்கு அறையை அலங்காரம் செய்ய வந்த மச்சானையும், மாமாவையும் "அதெல்லாம் எதுவும் வேணாம் ஓடி போங்க" என்று குதறாத குறையாக தான் விரட்டியிருந்தான்.
சத்யனின் அக்கா புருஷன் இளங்கோவோ, "குடும்பமா இது, முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணனும்னு உள்ள வந்தா இவன் திட்டுறான், வெளிய போனா அந்த கிழவி திட்டுது. இவங்க குடும்பத்துக்கு வாக்கப்பட்டு நான் படுற பாடு இருக்கே… அய்யய்யய்யோ… ஆன உன்ன பாராட்டனும் சித்தப்பு. இன்னும் இங்க எப்படி தான் வண்டியை ஓட்டுறியோ" என்று அவனுடன் வந்திருந்த சத்யனின் மாமன் முருகேசனை கேலி செய்ய, “எல்லாம் பழகிருச்சு. கவலை படாத உனக்கும் சீக்கிரம் பழகிடும்" என்று ஞானி போல் அவர் சொன்னா தொனியில் சிரித்து கொண்டே கீழே சென்றவர்கள்,
சிறிது நேரத்தில் பாட்டியின் குடைச்சல் தாங்காது மீண்டும் வந்தார்கள்.
வந்த மச்சானை சத்யன் முறைக்க, "முறைக்காத மாப்பிள்ள அந்த பொண்ண அத்தை ரூம்ல தூங்க சொல்லிட்டாங்க, பெரிய மாமா மண்டப கணக்கு கேட்க உன்னை கூப்பிட்டாங்க வா" என்று அழைத்து சென்று, அவரிடம் விட்டுவிட்டு மீண்டும் அறைக்கு ஓடி வந்து தான் கடகடவென தோரணம் கட்டி, ஊதுபத்தி, வாசனை திரவியம் என்று பக்காவா எல்லாம் செய்து விட்டு சென்றார்கள் இருவரும்.
இல்லையேல் அந்த பலசொரூபம், பல ரூபத்தை காட்டுமே.
'வீட்டோட மாப்பிள்ளையா நீங்க வந்தா மட்டும் போதும்' என்று பல லட்சங்கள் வரதட்சணை கொடுத்து கொத்தடிமைகளாக அல்லவா தன் வீட்டு பெண்களுக்கு மாப்பிள்ளைகளை தேடி பிடித்தார் அவர்.
இப்போது உள்ளே வந்த சத்யனை பார்த்ததும், செண்பகா சிறுபிள்ளை போல் எழுந்து நின்று குட் மார்னிங் சொல்ல, சட்டென்று சிரித்து விட்ட சத்யனுக்கு, அலங்காரங்களை பார்த்து எழுந்த கோபம் கூட வந்த வழி தெரியாது ஓடி தான் போனது தன் மனைவியின் செயலில்.
"குட் மார்னிங்கா?" என்று அவன் திருப்பி கேட்க,
"இல்ல இல்ல… குட் ஈவ்னிங்" என்று பதட்டத்தில் உளறி கொண்டிருந்தாள் செண்பகா.
அவள் பதட்டமும், பிள்ளை முகமும் இவன் மனதை இலகுவாக்கியது.
"ரிலெக்ஸ்…" என்று சொல்லிக் கொண்டே அவள் அருகே வந்தவன்,
கட்டிலில் அமர்ந்து கொண்டே, "உங்கிட்ட கொஞ்சம் பேசணும் உட்காரு" என்று சொல்ல, அவளும் பெரும் தயக்கத்துடன் தான், கட்டிலில் தூவியிருந்த மலர்களை கைகளால் தள்ளி விட்டு கொண்டே உட்கார்ந்தாள்.
"உனக்கு நடந்தது ரொம்ப பெரிய அநியாயம் தான். என்னால உன்ன புரிஞ்சிக்க முடியும். உடனே எல்லாம் நடக்கணும்னுலாம் நான் எதுவும் ஃபோர்ஸ் பண்ண மாட்டேன். உனக்கு எவ்வளவு டைம் வேணும்னாலும் எடுத்துக்கோ" அவள் கவலையில் இருப்பாள் என்று எண்ணி அவன் ஆறுதலாக பேச ஆரம்பிக்க,
அவன் மனைவியோ "எதுக்கு டைம் எடுத்துக்கணும்?" என்று தான் கேட்டாள் புரியாமல்.
"என்னை புருஷனா ஏத்துக்க" என்று அவன் சொல்லவும்,
ஹ்ம்ம்… என்று மண்டையை ஆட்டிக் கொண்டாள்.
மேலும் தொடர்ந்தவன், "சரியோ தப்போ நமக்கு இப்போ கல்யாணம் ஆகிடுச்சு. நான் இந்த உறவையும் மதிக்கிறேன், உன் உணர்வுகளையும் மதிக்கிறேன். நீ இந்த உறவ எப்போ ஏத்துக்கிறியோ அதுக்கு பிறகு தான் இதெல்லாம்" என்று கட்டியிருந்த மலர் தோரணங்களை விழியால் காட்டி அவன் சொல்ல,
"எது?" என்று தான் அடுத்த சந்தேகம் ஆர்ப்பரிப்பு இல்லாது வந்தது.
"ஃபர்ஸ்ட் நைட்" என்று சட்டென்று அவன் சொல்லிட, ஹாங் என்று விழிகளை அகல விரித்து கொண்டவளை ஏனோ அவன் மனமும் ரசிக்க தான் செய்தது.
கல்யாணத்திற்கு பின்பு தான் காதல் என்ற கட்டுப்பாட்டோடு வாழ்ந்தவன், காதலை உணர்ந்தானோ இல்லையோ, முதல் முறை இல்லற பேச்சை ரசித்தான் எதிரே இருக்கும் சில்வண்டு காட்டும் வினோத முக பாவணைகளால்.
"சரி உனக்கு ஏதாவது எங்கிட்ட சொல்லவோ? கேட்டவோ இருக்கா?" என்று அவளுக்கான உரிமையை அவன் கொடுக்க,
கேட்டாலே பார்க்கலாம், "நான் இந்த ஸ்வீட்ஸ் எடுத்துக்கவா?" என்று,
சத்யனே 'இவ்வளவு நேரம் நான் பேசினது இவளுக்கு புரிஞ்சுதா இல்லையா?' என்று குழம்பி தான் போனான்.
அவளோ "எடுத்துக்கவா? பசிக்குது" என்று மீண்டும் கேட்க,
"சாப்பிடலையா நீ?" அக்கறையான கேள்வி அவனிடம்.
"சாப்பிட்டேன். ஆனா சரியா சாப்பிடல" என்று பதில் சொன்னவளை சிரித்துக் கொண்டே பார்த்தவன்,
ஹ்ம்ம் என்று விழிகளால் சாப்பிட அனுமதி கொடுத்த பிறகே தட்டில் கை வைத்தாள்.
ஓரளவு தனக்கு பிடித்தது எல்லாம் தேடி தேடி தின்று முடித்தவள், "நீங்க சாப்பிட்டீங்களா?" என்று கேட்க,
'பரவாயில்லை புருஷன் மேல அக்கறை எல்லாம் கூட இருக்கு' என்று எண்ணிக் கொண்டவன், "ஹ்ம்ம் சாப்டேன்" என்றான்.
"பொய் சொல்றீங்க. அக்கா காணாம போனதுல நீங்களும் தானே கவலையா இருப்பீங்க? அவளை உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும் தானே. கவலை படாதீங்க சீக்கிரமா கண்டு பிடிச்சு…"
"கண்டு பிடிச்சு?"
"உங்களையும், அவளையும் சேர்த்து வைக்கிறேன்."
"யாரு நீ?"
"ஹ்ம்ம் ஆமா. காதலர்களை பிரிச்ச பாவம் எனக்கு எதுக்கு?"
"காதலர்களா? யாரு?"
"நீங்க ரெண்டு பேரும் தான்."
என்று இத்தனை நேரம் அமைதியாக இருந்தவள், நாலு லட்டு, மூனு ஜிலேபி, ஒரு பாட்டில் மில்க்ஷேக்கை முழுங்கி விட்டு தெம்பாக பேச, அவனுக்கு தான் கவலையில் மறந்த பசி கூட, பஸ்சேரி வந்து பெருங்குடலை கடித்து தின்னது.
"உனக்கு சாப்பிட வேற ஏதாவது வேணுமா?" அப்போவாது கொஞ்சம் வாயை மூடுவாளே என்று அவன் கடுப்பாக கேட்க,
"இல்ல போதும். ஒரே ஸ்வீட்டா இருக்கு. கொஞ்சம் காரத்துக்கும் ஏதாவது வாங்கி வச்சிருக்கலாம்" என்று குறைப்பட்டுக் கொண்டாள்.
"சரி அடுத்த முறை வாங்கி வைக்க சொல்றேன். இப்போ தூங்கு" என்றவன், பெட்ஷீட்டை தரையில் விரித்து படுத்து கொண்டான்.
"நீங்க ஏன் கீழ படுக்குறீங்க?*
"கட்டில்ல ஒன்ன படுக்கிற அளவுக்கு உனக்கு பக்குவம் இல்ல. அமைதியா தூங்கு" என்றவன் கண்களை மூடி கொண்டான்.
தொடர்ந்து ரோஜா இதழ்கள் அவன் மீது வந்து விழ, மெதுவாக கண்விழித்தவன், தலையை திருப்பி பார்க்க, அவன் மனைவி தான் கட்டிலில் கிடந்த பூக்களை எல்லாம் அப்புறப்படுத்துகிறேன் என்று அவன் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்தாள்.
"என்ன பண்ற?" என்று கேட்டுக் கொண்டே எழுந்தவனிடம், "இதெல்லாம் அன் கம்பார்டபுளா இருக்கு" என்று சொல்லிக் கொண்டே கட்டில் மேல் முட்டி போட்டு ஏறி நின்று தள்ளி விட்டு கொண்டிருந்தாள்.
"இறங்கு" என்று அவளை இறங்க சொன்னவன், மொத்தமாக பெட் சீட்டை உதறி போட்டு, கட்டியிருந்த தோரணங்களையும் அவிழ்க்க முனைய, அது இருக்கட்டும், அழகா இருக்கு என்றாள் ஆசையாக கைகளில் வருடிக் கொண்டே.
"சரி இப்போ தூங்கு" என்று அவன் படுக்க போக,
கட்டிலில் படுத்து, கை நிறைய போட்டிருந்தா கண்ணாடி வளையல்கள் குலுங்க, திரும்பி திரும்பி படுத்துக் கொண்டிருந்தவளை பார்த்து "இப்போ என்ன?" என்று தான் கேட்டான் சற்று சலிப்பாக.
"ஸாரி ஹெவியா இருக்கு" என்றாள் அவன் அப்பாவி மனைவி.
அவள் சூட்கேஸ் இருக்கும் இடத்தை காட்டியவன், "ட்ரஸ் சேஞ் பண்ணிட்டு தூங்கு" என்றான்.
சரி என்று அதற்கும் மண்டையை ஆட்டிக் கொண்டவள், உடைகளை எடுத்துக் கொண்டே குளியலறை சென்றாள்.
அவ்வளவு தான் ஆடை மாற்றி விட்டு தூங்கி விடுவாள் என்று நிம்மதியடைந்தவனின் நிம்மதிக்கு ஆயுள் குறைவு தான்.
இதோ அவனை மொத்தமாக தடுமாற வைக்கவே கதவை திறந்து கொண்டே உடை மாற்றாமல் வெளியே வந்தவளை அவன் ஏன் என்னும் கேள்வியில் பார்த்தான்.
"ஹேமா அக்கா பின் எப்படியோ குத்தி விட்டுட்டாங்க. மாட்டிக்கிச்சு." என்றவள் நேராக கதவை திறந்துக் கொண்டே வெளியே செல்ல எத்தனிக்க,
"ஏய் எங்க போற?" என்று பதறி ஓடி வந்தவன், அவள் திறக்க போன டோர் லாக்கில் அவள் கை மீதே தன் கையையும் வைத்து தடுத்திருந்தான்.
"அதான் சொன்னேனே. பின் கழட்ட முடியல, ஹேமா அக்காகிட்ட போய் கழட்டிவிட சொல்றேன்" என்றவளை பார்த்து தலையில் அடித்துக் கொண்டவன், "அதெல்லாம் எதுவும் வேணாம்" என்றான்.
"அப்புறம் எப்படி நான் ட்ரஸ் சேஞ் பண்றதாம்?" என்று அவள் கேட்க, ஒரு நாளுக்கே கண்ண கட்டுதே என்று பார்த்தவன், "நீயே எடுக்க முயற்சி பண்ணு" என்று சொல்லி விட்டு செல்ல,
"நல்லா சிக்கிடுச்சி. என்னால எடுக்க முடியல" என்று பாவமாக முகத்தை வைத்தே அவனை பலியாக்கி கொண்டிருந்தாள்.
"சரி வா" என்று அருகே அழைத்தவன், விரல்கள் கூட அவள் மேனி தீண்டாது பின்னை அகற்ற படாது பாடு பட்டுதான் போனான்.
தோளை விட்டு வழுக்கி கொண்டு போக இருந்த சேலையை சட்டென்று பிடித்துக் கொண்டே, வளைந்து நெளிந்திருந்த பின்னை ஒருவழியாக எடுத்து அவள் கையில் கொடுத்தவன், "இப்போ போய் டிரஸ்ட் மாத்திட்டு தூங்கு" என்று அவளை அனுப்பி வைத்து விட்டு, அவள் வருவதற்கு முன்னால் தூங்கி விடுவோம் என்று படுத்து கண்களையும் மூடிக் கொண்டான்.
வீட்டிற்கு அணியும், லாங் ஸ்கர்ட், டாப்புடன் வந்தவள், "அதுக்குள்ள தூங்கிட்டாரா?" என்று அவனையே பார்த்துக் கொண்டே கட்டிலில் வந்து படுத்துக் கொண்டாள்.
அவள் அமைதியாக வந்து படுத்துக் கொண்ட பிறகே சத்யனும் நிம்மதியாக தூக்கத்தை தழுவ சென்ற நேரம்,
"...சார்…." என்றவளின் கத்தலில் பதறி தான் போனான் சத்யன்.
தலையை மட்டும் சிறிது தூக்கி "என்னாச்சு?" என்று கேட்க,
"ஒரு முக்கியமான விசயம் மறந்துட்டேன். திங்கக் கிழமை ரிவிஷன் எக்ஸாம் வைக்கிறதா சொன்னீங்க? வைப்பீங்களா?" என்று அத்தனை கவலையிலும் மாபெரும் கவலையை அவள் கேட்க,
என்னவோ ஏதோ என்று பதறி எழுந்தவனுக்கு எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.
"இல்ல" என்று அவன் சொல்லவும், அத்தனை மகிழ்ச்சி செண்பகா முகத்தில்.
"நிஜமா வைக்க மாட்டீங்க தானே!" இரண்டு மூன்று முறை கேட்டு உறுதி செய்து கொண்டே அவள் நிம்மதியாக தூங்க,
இவன் தூக்கம் தான் தொலைந்து போனது முதல் முதலாக.
கல்யாணம் நின்று பெண் மாறியதெற்கெல்லாம் துளியும் இப்போது வருந்தவில்லை. அஞ்சலி பாப்பா என்றாலும் இவள் என் மனைவி என்று அவளை தன் பாதியாக ஏற்றுக் கொண்டான்.
அவன் சிந்தனையெல்லாம் இவளோடு எப்படி கரை சேர்வது என்பது மட்டும் தான்.
இனிமேல் வளர்மதி வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன? அளவுக்கு வயதாக்கி விடுவாளோ என்று எண்ணி தான் சிரித்துக் கொண்டான்.
தங்க சிலை என்று அருகே வந்தால்….
தவழும் பிள்ளை போல் சேட்டைகள் செய்து தவிக்க வைக்கிறாள்….