ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 21

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 21

இதே சமயம் கோவிலுக்கு போய் விட்டு வீட்டுக்கு வந்து இருந்தார் வசந்தி...

அவர் வீட்டினுள் கால் வைத்ததும் வைக்காததுமாக, "உன் திருட்டு மருமக என்ன பண்ணி இருக்கா தெரியுமா? இதுக்கு தான் பிச்சைக்கார வீட்ல கல்யாணம் பண்ண கூடாதுன்னு சொல்றது... பணத்தை காணாதவ பணத்தை கண்டா இப்படி தான்" என்று வேதவல்லி ஆரம்பித்து விட்டார்...

வசந்திக்கு இம்மையும் புரியவில்லை, மறுமையும் புரியவில்லை...

அவரை யோசனையாக புருவம் சுருக்கி பார்த்தவர், "என்ன அத்தை ஆச்சு?" என்று கேட்க, "அத என் வாயால வேற சொல்லணுமா? கல்யாணி நீயே சொல்லு" என்றார்...

கல்யாணியும், "இங்க மாமா பணம் வச்சிட்டு போய் இருந்தார்... அத தேன்மொழி எடுத்ததை நாங்க எங்க ரெண்டு கண்ணால பார்த்தோம்... அப்புறம் ஹாண்ட் பேக்கை திறந்து காட்ட சொன்னா மாட்டேன்னு சொல்லிட்டா... நான் ஹாண்ட் பேக்கை திறந்து காட்டி, அவ திருடி தான்னு மாமா கிட்ட நிரூப்பிச்சேன்... அப்புறம் பணத்தை கொடுத்துட்டு ஸ்கூலுக்கு கிளம்பிட்டா" என்றாள்...

வசந்திக்கு அதிர்ச்சி...

"பணத்தை எடுத்தாளா? அதுக்கு வாய்ப்பே இல்லையே... அவ அப்படி பட்ட பொண்ணு இல்லையே" என்றார் உடனடியாக...

வேதவல்லியோ, "நீ தான் உன் மருமகளை மெச்சிக்கணும்... எங்களை நம்பலைன்னா உன் புருஷன் கிட்டயே கேட்டு பாரு" என்று சொல்ல, அவரும் வேகமாக அறைக்குள் குருமூர்த்தியை தேடி நுழைந்தார்...

அவரோ அலுவலகம் செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டே இருக்க, அவர் அருகே வந்து நின்றவரோ, "தேன்மொழி பத்தி அத்தை ஏதோ எல்லாம் சொல்றாங்க, என்னங்க ஆச்சு?" என்று கேட்டார்...

குருமூர்த்தியோ பெருமூச்சுடன், "வம்சி கல்யாணம் பண்ணி வந்தப்போ, நான் பெருசா அலட்டிக்கல... ஆனா எதுக்கு இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு இப்போ தோணுது" என்றார்...

"என்னங்க சொல்றீங்க?" என்று அதிர்ந்து கேட்டார் வசந்தி...

"அம்மா சொன்னது உண்மை தான்... அவ ஹாண்ட் பேக் ல இருந்த பணத்தை நானே பார்த்தேன்... ஆனா கடைசி வரை அவ எடுத்தேன்னு ஒதுக்கவே இல்லை... என் பணம்ன்னு சொல்லி தான் பணத்தை திரும்ப கொடுத்தா... எனக்கு ரொம்ப டிஸ்ஸபாய்ண்ட் ஆயிடுச்சு... வம்சி வந்ததும் தான் இத பத்தி பேசணும்... அவனுக்கு இப்போ தெரிய வேணாம்... கான்சேர்ட்ல அவன் ஃபோகஸ் மிஸ் ஆய்டும்... வந்ததும் சொல்லிக்கலாம்..." என்றார்...

இன்னுமே வசந்தியால் நம்ப முடியவில்லை...

"இல்லங்க, இதுல ஏதோ இருக்குன்னு தோணுது... எனக்கு தேன்மொழியை பத்தி நல்லாவே தெரியும்... அவ பணத்துக்கு ஆசைப்படுற பொண்ணு இல்லை... யாதவ்வுக்கு க்ளாஸ் எடுக்கும் போது கூட ஒரு பைசா என் கிட்ட இருந்து வாங்க மாட்டா" என்றார்...

"எல்லாமே நடிப்பா இருக்கும் வசந்தி... கல்யாணத்தை ரெண்டு நாள்ல வச்சுக்கிட்டு வம்சியை கல்யாணம் பண்ணுனவ அவ... அப்போவே எனக்கு அவ மேல இருந்த மதிப்பு குறைஞ்சு போய்டுச்சு... இப்போ பண விஷயம் வேற" என்று சொல்லிக் கொண்டே பெருமூச்சு விட்ட குருமூர்த்தியோ, "யாரையும் ஈஸியா நம்பிடாதே... உள்ளுக்குள்ள ஒன்னு வச்சிட்டு வெளியே ஒரு விதமா நடப்பாங்க... அவ பணம் வேணும்னா என் கிட்ட கேட்டு இருக்கலாம்... நான் கொடுத்து இருப்பேன்... ரெண்டு லட்சம் எல்லாம் ஒரு பணமா? நீயே சொல்லு, ஆனா இப்படி பண்ணுனதை என்னால ஜீரணிக்கவே முடியல" என்றார்...

வசந்திக்கு இன்னும் அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை...

"எதுக்கும் அவ வந்ததும் நான் அவ கிட்ட பேசி பார்க்கிறேன்... என்னால இன்னுமே நீங்க சொன்னதை ஏத்துக்க முடியல" என்றார் வசந்தி...

குருமூர்த்தியோ, "பேசி பாரு, அதுல ஒண்ணும் இல்லை... ஆனா மறுபடி மறுபடி என் பணம்னு அவ சொல்லிட்டே இருந்தா எனக்கு கடுப்பாயிடும்..." என்று சொன்னவரோ, தனது அலைபேசியை எடுத்துக் கொண்டே வெளியேற, வசந்தியோ யோசனையுடன் அங்கிருந்த இருக்கையில் தொய்ந்து அமர்ந்தார்...

அன்று மதியம் தாண்டியும் தேன்மொழி வீட்டுக்கு வரவில்லை...

வசந்தி அவளுக்காக தான் காத்துக் கொண்டு இருந்தார்...

ஸ்கூல் விட்டு வந்த யாதவ் கிருஷ்ணாவோ, "இன்னைக்கு ஏன் அண்ணி ஸ்கூலுக்கு வரல?" என்று தாயிடம் சைகையில் கேட்க, அவருக்கோ அதிர்ச்சி...

"தேன்மொழி ஸ்கூலுக்கு வரலையா?" என்று அவர் சைகையில் மீண்டும் கேட்டார்...

"இல்லை" என்றான் அவன் அழுத்தமாக தலையை ஆட்டி...

அவரோ யோசனையுடன், "அவங்க வீட்டுக்கு போய் இருக்கா போல, நான் பேசுறேன்" என்று மகனை சமாளித்து விட்டு, அலைபேசியை எடுத்தவர், "தேன்மொழி எங்க இருக்க?" என்று குறுஞ்செய்தி அனுப்பினார்..

அவளோ தனது அறைக்குள் கட்டிலில் யோசனையுடன் படுத்துக் கொண்டு இருந்தாள்.

குறுஞ்செய்தி வந்த சத்தத்தில் அருகே கிடந்த அலைபேசியை எடுத்து பார்த்தவளோ, "அம்மா வீட்ல இருக்கேன்... எனக்கு கொஞ்சம் தனிமை தேவைப்படுது அத்தை... தோணுற நேரம் அங்கே வரேன்" என்று நீளமாக பதில் அனுப்பினாள்.

அவருக்கு எப்படியும் விஷயம் தெரிந்து இருக்கும் என்று அவள் யூகித்துக் கொண்டாள்.

அவள் பதிலில் இருந்தே அவளுக்கு ஏதோ அழுத்தம் என்று அவருக்கு புரிந்தது...

"நான் ஒண்ணும் தப்பா நினைக்கலம்மா, நீ வீட்டுக்கு வா பேசிக்கலாம்" என்று அவர் அனுப்ப, அவளோ, "இல்ல அத்தை மன்னிச்சிடுங்க, என்னால அங்க வர முடியாது... செய்யாத தப்புக்கு பழியை சுமக்க நான் தயாரா இல்ல, எனக்கு பேச தான் முடியாது... ஆனா எனக்கும் மனசு இருக்கு, உணர்வு இருக்கு... இப்போவும் சொல்றேன்... அது என்னோட பணம், என் வீட்டு கடனை அடைக்க, நான் கடன் வாங்குன பணம் அது..." என்று பதில் அனுப்பி இருந்தாள்...

முதல் முறை இவ்வளவு பேசுகிறாள்... வசந்திக்கே ஆச்சரியமாக இருந்தது...

குட்ட குட்ட குனிந்து கொண்டே இருந்தால் மண்ணுக்குள் புதைத்து விடுவார்கள் என்று உணர்ந்து விட்டாள் தேன்மொழி... பேச முடியவில்லை என்றாலும் தன் பக்க நியாயத்தை சொல்லியாக வேண்டிய நிலையில் அவள்...

வசந்திக்கு இப்போது யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய் என்கின்ற தடுமாற்றம்...

அவளுடன் அலைபேசி குறுஞ்செய்தியில் பேசி பயன் இல்லை என்று தோன்றியது... நேரில் பேச வேண்டும்...

அன்று மாலையே அவளை தேடி செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்...

இதே சமயம் யாதவ் கிருஷ்ணாவோ, "அண்ணி எங்க?" என்று வசந்தியிடம் சைகை மொழியில் கேட்டுக் கொண்டே இருந்தான்...

அவளை தேடும் ஜீவன்களில் அவனும் ஒருவன்...

"அவ அம்மாவை பார்க்கணும் போல இருக்குன்னு போய் இருக்கா, சீக்கிரம் வந்திடுவா" என்று வசந்தி சொல்ல, "என் கிட்ட ஏன் சொல்லாம போனாங்க" என்று அடுத்த கேள்வி அவனிடம் இருந்து...

என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை...

"அவசரமா போய் இருக்கா யாதவ், நீ ஒன்னும் கவலைப்படாதே... ஈவினிங், நாம போய் தேன்மொழியை பார்த்துட்டு வரலாம்" என்று சைகையில் சொன்னதும், அவனும் சந்தோஷமாக தலையாட்டினான்...

இதே சமயம் முதல் நாள் கான்சேர்ட்டை முடித்து விட்டு ஹோட்டல் அறையை நோக்கி வம்சி கிருஷ்ணாவும் கெளதம் கிருஷ்ணாவும் நடந்து சென்றார்கள்...

"வம்சி, அண்ணி கூட பேசுனியா?" என்று கேட்டான் கெளதம் கிருஷ்ணா...

வம்சி கிருஷ்ணாவோ அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "அவ பண்ணுன வேலைக்கு பேசுறது ஒன்னு தான் குறைச்சல்" என்றான்...

"என்னடா ஆச்சு?" என்று கெளதம் கிருஷ்ணா கேட்க, அவனோ, "அவளுக்கு பணம் தேவைப்படுதுன்னா என் கிட்ட கேட்கலாம்ல, வட்டி கடைல போய் கேட்டு அசிங்கப்பட்டு இருக்கா, அப்புறம் பிரதீப் தான் மூணு லட்சம் கொடுத்து விட்டு இருக்கான்... அவன் கால் பண்ணி தேன்மொழி கூட பிரச்சனையான்னு கேக்கிறான்... எவ்ளோ ஆத்திரம் வரும்னு யோசிச்சு பாரு" என்றான்...

கெளதம் கிருஷ்ணாவோ, "எனக்கு புரியுது வம்சி, ஆனா உன் கிட்ட கேக்கிறதுக்கு அவ தன்மானம் விடலன்னு தோணுது" என்றான்...

"அப்போ அடுத்தவன் கிட்ட போய் நின்னு அசிங்கப்படுத்துறது பரவலையா??" என்று கழுத்து நரம்புகள் புடைக்க திட்டினான்...

"ரிலாக்ஸ் டா, நீ அவ கூட பேசி பாரு, இப்படி கோச்சுக்கிட்டு இருந்தா என்ன ஆகுறது?" என்று கேட்டான்...

"ஊருக்கு போய் பேசிக்கிறேன்... எதுக்காக கோபமா இருக்கேன்னு தெரியாம அவ தலையை போட்டு பிச்சுக்கட்டும்" என்று சொல்லிக் கொண்டே தனது அறை கதவை திறக்க, "புதுசா பழி வாக்குறடா" என்று சிரித்துக் கொண்டே சொன்ன கெளதம் கிருஷ்ணா தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.

இதே சமயம், தேன்மொழிக்கோ உணவு இறங்கவே இல்லை... மகாலக்ஷ்மிக்காக கஷ்டப்பட்டு சாப்பிட்டாள்...

வம்சி கிருஷ்ணாவின் நினைவு ஒரு பக்கம், தன் மேல் விழுந்த பழி ஒரு பக்கம்... கஷ்டப்பட்டு கடன் வாங்கிய பணம் கை விட்டு போன வலி இன்னொரு பக்கம் என்று இருக்கும் போது அவளால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?

அடிக்கடி அலைபேசியை எடுத்து பார்த்தாள்.

அவன் பதில் வரவே இல்லை...

மனதில் ஏமாற்றம்...

அவள் உணர்வுகளை அவள் வெளிப்படுத்தும் இடம் கடிதம் தானே...

சந்தோஷமோ, துக்கமோ, கோபமோ, காதலோ, எல்லாமே அவனுக்கு எழுதும் கடிதத்தில் கொட்டி எழுதுவாளே...

இப்போது அவள் எழுத இருக்கும் இந்த கடிதத்தை அவனுக்கு அனுப்புவது இல்லை முடிவெடுத்தவளோ மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி விட தீர்மானித்தாள்...

காகிதத்தையும் பேனாவையும் எடுத்துக் கொண்டே, அறைக்குள் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.

அவனுக்கான மடலை வரைய ஆரம்பித்து விட்டாள்.

அன்புள்ள வம்சி கிருஷ்ணாவுக்கு,

நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்...

நான் நலம் என்று சொல்ல மாட்டேன்...

மனதால் மொத்தமாக உடைந்து போய் இருக்கின்றேன்...

உங்களை நான் பணத்துக்காக திருமணம் செய்து கொள்ளவில்லை...

உங்கள் மீது எனக்கு அப்படி ஒரு காதல், பைத்தியக்காரத்தனமான காதல்... அந்த காதலை ஆதாரமாக வைத்து தான் உங்களை மணந்து கொண்டேன்...

சின்ன வயதாக இருக்கும் போது எனக்கு ரெண்டு விஷயங்கள் ரொம்ப பிடிக்கும்...

ஒன்று என்னுடைய அப்பா, அடுத்தது இசை...

நான் ரொம்ப நன்றாக பாடுவேன் தெரியுமா?

பாட்டு போட்டியில் முதலாம் இடம் பெற்று சந்தோஷமாக வந்தேன்...

என் சந்தோஷம் நிலைக்க கூடாது என்று கடவுள் நினைத்து விட்டார் போலும்... எனக்கு பிடித்த இரண்டையும் என்னிடம் இருந்து எடுத்துக் கொண்டார்...

என் அப்பாவும் என்னை விட்டு போய் விட்டார்...

என் குரலும் என்னை விட்டு போய் விட்டது...

அன்று வரை இசையோடு லயித்த எனக்கு அதன் பின்னர் என் மௌனமே இசையானது... ஆனால் இசையின் தேடல் அன்றுடன் நின்று விடவில்லை...

குரலை தானே கடவுள் பறித்துக் கொண்டார்...

என் கேட்கும் திறன் அப்படியே இருந்தது...

என் இசையின் தாகம், இசையின் தேடல் என்று அனைத்துக்கும் தீர்வானது உங்கள் குரல்...

முதல் தடவை உங்கள் குரலை கேட்டதில் இருந்தே எனக்குள் ஒரு மயக்கம்...

அன்றே என் முதல் மடலை உங்களுக்கு எழுத ஆரம்பித்தேன்...

இன்று வரை எழுதிக் கொண்டு இருக்கின்றேன்...

போன முறை எனது இடது கையில் சூடு நீர் ஊற்றுபட்டதால் என்னால் என்னுடைய மடலை தீட்ட முடியவில்லை...

அது மட்டும் அல்லாமல், உங்களுடன் நேரில் சற்று நெருங்கி இருந்ததால் மடல் எழுதும் தேவையும் எனக்கு இருக்கவில்லை...

இப்போது மொத்தமாக விலகிய உணர்வு...

உங்கள் பாராமுகம் என்னை வதைக்கின்றது...

அதில் இருந்து மீள முதல் திருடி என்னும் பட்டம்...

அந்த பணம் சத்தியமாக என்னுடையது...

அம்மா பெற்ற கடனை அடைக்க நான் தெரிந்தவரிடம் பெற்றுக் கொண்ட பணம்...

உங்களிடம் ஏன் பணம் கேட்கவில்லை என்று உங்களுக்கு தோன்றலாம்...

உங்களை பணத்துக்காக தான் திருமணம் செய்து கொண்டேன் என்று வார்த்தைக்கு வார்த்தை அனைவரும் சொல்லும் போது, எப்படி அந்த பணத்தை உங்களிடம் என்னால் பெற்றுக் கொள்ள முடியும்?

அதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை...

என் காதல் உங்களுக்காக தான், உங்கள் இசைக்காக தான்...

அதில் எப்போதும் பணம் இடையில் வரவே கூடாது...

பாட்டி பேசியது, கல்யாணி பேசியதை கூட என்னால் கடந்து விட முடியும்... ஆனால் மாமா பேசிய வார்த்தை, "பணம் தேவைன்னா கேட்டு இருக்கலாமே", இந்த வார்த்தையில் மொத்தமாக நொறுங்கி விட்டேன்...

நான் திருடி இல்லை என்று அந்த கணத்தில் கத்த வேண்டும் போல இருந்தது...

ஆனால் என்னால் தான் அதனை செய்ய முடியாதே...

கடவுள் அந்த வாய்ப்பை எனக்கு கொடுக்கவே இல்லையே...

என் குரலில் தான் உயிர்ப்பு இல்லை... என்னிடம் உயிர்ப்பு இருக்கின்றது...

என்னால் அதற்கு மேல் அந்த வீட்டில் எப்படி இருக்க முடியும்? செய்யாத தவறுக்கு பழி வார்த்தைகளை சுமக்கும் போது உண்டாகும் வலி கொடியது...

என்னை நிரூபிக்கவும் முடியாத நிலை எனக்கு...

இப்போது எல்லோரும் என்னை சந்தேகப்படுகிறார்கள்... நீங்களும் என்னை சந்தேகப்பட்டு விடுவீர்களா என்று பயமாக இருக்கின்றது... என்னை வெறுத்து விடுவீர்களோ என்று பதட்டமாக இருக்கிறது...

மறுபடியும் சொல்கின்றேன் எனக்கு உங்கள் பணத்தில் எந்த ஈடுபாடும் இல்லை...

எனக்கு தேவை உங்கள் காதல், உங்கள் இசை, நீங்கள்...

இவ்வளவு தான்...

மிகவும் கஷ்டமாக இருக்கின்றது...

மனதில் அப்படி ஒரு வலி...

எத்தனையோ கஷ்டங்களை தாண்டி நான் வந்தாலும் இந்த திருடி என்கின்ற பட்டத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை...

அதனால் தான் வீட்டை விட்டு நானே கிளம்பி வந்து விட்டேன்... யாதவ் கிருஷ்ணாவை நினைத்து தான் மனதில் அழுத்தம்... நான் இல்லை என்றால் அவன் நொறுங்கி விடுவான்... ஆனால் எனக்கும் என்ன செய்வது என்று தெரியவே இல்லை...

நீங்களும் என்னை சந்தேகப்பட்டு என்னை வெளியே அனுப்ப முதல் நானாகவே வந்து விட்டேன்...

என்னால் உங்கள் வெறுப்பை தாங்க முடியாது... நொறுங்கி விடுவேன்...

என் குரலுக்கு இணையாக எனக்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள்...

உங்களையும் தவற விட்டு விடுவேனோ என்று பயமாக இருக்கின்றது...

நீங்கள் எதற்காக என் மேல் கோபமாக இருக்கின்றீர்கள் என்றும் தெரியாது...

இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவீர்கள் என்றும் தெரியாது...

இந்த பிரச்சனையின் முடிவு என்னவென்றும் எனக்கு தெரியாது...

நான் நிரபராதி என்று நிரூபித்தால் கூட என்னால் உங்கள் வீட்டிற்கு இப்போது இருக்கும் மனநிலையுடன் வர முடியுமா என்று தெரியவில்லை...

காலம் தான் அனைத்துக்கும் மருந்து... காலம் என்னை மாற்றினால் மீண்டும் உங்கள் வீட்டுக்கு வருவேன்...

உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இருந்தால் மட்டுமே அதற்கு வாய்ப்புகள் உண்டு...

நீங்களும் சந்தேகப்பட்டு என்னை ஒதுக்கி வைத்து விட்டீர்கள் என்றால் நான் என்னை நிரபராதி என்று நிரூபித்தும் பயன் இல்லை...

அடுத்தவர்களுக்கு நான் நிரூபிக்கலாம், ஆனால் உங்களுக்கும் நான் நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றேன் என்றால் கணவன் மனைவி என்கின்ற உறவுக்கு அர்த்தமே இல்லை...

கணவன் மனைவிக்குள் காதலை விட முக்கியமானது நம்பிக்கை தான்...

அந்த நம்பிக்கை என்னிடத்தில் இல்லை என்றால், அதன் பின்னர் நாம் வாழ போகும் வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடும்...

நம்பிக்கை இல்லாமல் நெருங்கி இருப்பதை விட,விலகி இருப்பதே மேல்...

அதன் பிறகு இந்த பிரிவு நிரந்தரமாகி விடும் என்று தோன்றுகின்றது...

என்ன நடக்கும் என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றேன்...

என் கடைசி நம்பிக்கை நீங்கள் மட்டும் தான்...

என் மேல் இருக்கும் உங்கள் நம்பிக்கை தான் நமது மீதி வாழ்க்கையை தீர்மானிக்கும்...

உங்கள் அருகே இருந்து உங்கள் கரம் கோர்த்து, உங்கள் மார்பில் தலை சாய்த்து உங்கள் பாடலை கேட்பேனா? இல்லை வழக்கம் போல என்னுடைய கையடக்க தொலைபேசியில் தூர இருந்து உங்கள் குரலை கேட்பேனா? என்று தீர்மானிக்க போவது உங்கள் முடிவு தான்...

நான் ஆசைப்பட்டது எல்லாம் என்னிடமிருந்து கடவுள் பறித்து இருக்கின்றார்...

உங்களை மட்டுமாவது என்னிடம் விட்டு வைக்க கடவுளிடம் இறைஞ்சி கேட்கின்றேன்...

எனக்கு அழுகையாக வருகின்றது...

நிஜமாகவே இந்த வலியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...

என்னை நம்புவீர்களா? என்னை விட்டு போய் விட மாட்டிர்கள் தானே?

நீங்கள் இந்த கடிதத்தை படிக்கமாட்டீர்கள் என்று தெரிந்தும் பைத்தியக்காரி போல கேள்விகள் கேட்டுக் கொண்டு இருக்கின்றேன்...

என்னால் உங்களை விட்டு பிரிய முடியுமா என்று தெரியவில்லை...

இந்த ஒரு வார பிரிவே நெருஞ்சி முள் போல இதயத்தில் குத்திக் கொண்டு இருக்கின்றது...

உங்கள் குழந்தைகளை நான் சுமக்க வேண்டும்... உங்களை போலவே நிறைய குழந்தைகள் வேண்டும்... அவர்களின் இசையையும் நான் கேட்க வேண்டும்... என் மௌனம் உங்கள் இசையாக வேண்டும்...

வயதான பின்பும் கரம் கோர்த்து உங்களுடன் நடை பயில வேண்டும்... உங்கள் இசையை கேட்டுக் கொண்டே என் உயிர் மூச்சு நிற்க வேண்டும்...

இப்படி எத்தனையோ ஆசைகள் என்னுள்... அனைத்தும் வழக்கம் போல நிறைவேறாத ஆசைகளாகி விடுமோ என்று பயமாக இருக்கின்றது...

என் ஆசைகள் எல்லாம் நிறைவேறி விடும் தானே? நிறைவேற வேண்டும் என்கின்ற வேண்டுதலுடன் இந்த மடலை முடித்துக் கொள்கின்றேன்...



இப்படிக்கு உங்கள் மனைவி

தேன்மொழி வம்சி கிருஷ்ணா (என்றும் உங்களை வருடிச் செல்லும் தென்றல்)


என்று கடிதத்தை எழுதி முடித்தவளோ கண்களில் கசிந்த நீரை துடைத்து விட்டு, அதனை நோட் புக்கினுள் வைத்தாள்.

அந்த கணம் அவர்கள் வாசலில் கார் சத்தம் கேட்டது...

"தேன்மொழி வசந்தி வந்து இருக்காங்க" என்று மகாலக்ஷ்மி அழைக்க, நோட் புக்கை மேசையில் வைத்து விட்டு வெளியேறி முன்னறைக்குள் சென்றாள்.

அங்கே அவளுடன் பேசுவதற்காக யாதவ் கிருஷ்ணாவும் வசந்தியும் வந்து இருந்தார்கள்...
 
உன் மௌனமே என்
இசையாக...!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 21)


உண்மை தானே...? கணவன் மனைவிக்குள் காதலை விட நம்பிக்கைத்தான் அதிகமாக இருக்க வேண்டும். தேன்மொழிக்கு இது ஒரு சோதனையான காலம் தான்.
தன்னையே நிரூபிக்கும் சூழ்நிலையில் அவள் இருந்தாலும்.... இங்கு அவளுக்கு தெரிய வேண்டியதும், புரிய வேண்டியதும்... கணவனோட நம்பிக்கையும், பரஸ்பர புரிதலும், காதலும் தான்.
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் வம்சியின் புரிதலை.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top