நேசம் 9
அடுத்த நாள் காலையில் பையுடன் வெளியே வந்தான் ஷிவேந்திரன்.அவனை தொடர்ந்து ப்ரீத்தாவும் வர, ஜானகியோ, "என்னடா?" என்று கேட்டார்.
"அவ இப்போவே வீட்டுக்கு போறேன்னு சொல்றா" என்றார்.
"இப்போ என்ன அவசரம்?" என்று ஜானகி கேட்க, "நான் வீட்லயே இருக்கேன் அத்தை" என்றாள்.
"அப்போ வளைகாப்பு?" என்று ஜானகி கேட்க, ஷிவேந்திரன் அவளை திரும்பி பார்த்தான்.
"எதுவும் வேணாம், முதல் குழந்தையை பெத்து எடுக்கிறேன்" என்றாள்.
ஷிவேந்திரன் எதுவும் கருத்து சொல்லவில்லை, கருத்து சொல்லும் நிலைமையிலும் அவன் இல்லை...
அங்கே தான் சாதனாவும் இருந்தாள்.
"அப்போ நான் குழந்தை பெத்து வர்ற நேரம் நீங்க இருக்க மாட்டிங்களா?" என்று கேட்டாள்.
ப்ரீத்தாவுக்கு அவளுடன் பேச கூட இஷ்டம் இல்லை...
"இல்ல" என்று மொட்டையாக பதில் சொன்னவள், "கிளம்பலாம் ஷிவா" என்று சொல்லிக் கொண்டே செல்ல, அவனும் வண்டியில் அவளது உடமைகளை ஏற்றி விட்டு காரை கிளப்பி இருந்தான்.
காரும் சற்று நேரத்தில் வேல்முருகனின் வீட்டின் முன்னே நின்றது...
ப்ரீத்தா அமைதியாகவே அமர்ந்து இருந்தாள்.
"ப்ரீத்தா" என்றான்.
"ம்ம்" என்றபடி இறங்க போக, சட்டென அவள் கையை பற்றியவன், "உன்ன கிஸ் பண்ண கூடாதுன்னு தான் நினைக்கிறன், ஆனா என்னால முடியல" என்று சொல்லிக் கொண்டே, அவள் முகம் தாங்கி, அவள் இதழ்களில் அழுந்த இதழ்களை பதித்து விடுவிக்க, அவள் எதுவும் சொல்லாமல் மௌனமாக இறங்கிக் கொண்டாள்.
அவனும் அவள் உடமைகளை எடுத்துக் கொண்டே வீட்டினுள் வைத்தான்.
வேல்முருகனுக்கும் தேவிக்கும் ப்ரீத்தா நேரத்துக்கே வந்தது நெருடலாக இருந்தாலும் எதுவும் பேசவில்லை...
ஷிவேந்திரனின் விஷயத்தில் தோன்றிய அதிருப்திக்கு பின்னர் பேச்சை குறைத்து தான் இருந்தார்கள்...
ஷிவேந்திரனும், "எதுன்னாலும் கால் பண்ணு" என்று ப்ரீத்தாவிடம் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்...
அவன் சென்ற பின்னரே, "என்னடி நீயே நேரத்துக்கு வந்துட்ட, ஏதும் பிரச்சனையா?" என்று தேவி கேட்க, "இல்லம்மா, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆஹ் இருக்கணும்னு யோசிச்சேன்" என்றபடி அறைக்குள் செல்ல முயல, "அந்த பொண்ணு" என்று தேவி ஆரம்பிக்க, "அவ கிட்ட அதையே பேசி பேசி கஷ்டப்படுத்தாதே, கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும், அந்த பொண்ணுக்கு குழந்தை பிறந்த அப்புறம் தான் இறுக்கி பிடிக்கணும்" என்றார் வேல்முருகன்.
ப்ரீத்தாவும் எதுவும் பேசாமல் அறைக்குள் முடங்கி விட்டாள்.
அன்று மாலை அவளை பார்க்க அவளது தங்கை மீரா வந்தாள்.
அவளுக்கு ஷிவேந்திரனின் விஷயம் ஆத்திரத்தை கொடுத்தது...
அறைக்குள் அமர்ந்து ப்ரீத்தாவுடன் பேசிக் கொண்டு இருந்தவளோ, "மாமா மேல எவ்ளோ மரியாதை வச்சு இருந்தேன், என்ன ப்ரீத்தா இதெல்லாம்?" என்று கடுப்பாக கேட்டாள்.
அவளோ பெருமூச்சுடன், "இப்போ குழந்தையை பெத்து எடுக்கிறதுல மட்டும் தான் என் மைண்ட் இருக்கு" என்றாள்.
"நிஜமாவே அவங்களுக்குள்ள எதுவும் இல்லையா?" என்று மீரா சந்தேகமாக கேட்க, ப்ரீத்தாவோ, "இது வரைக்கும் இல்ல" என்றாள்.
"இனி?" என்று மீரா கேட்க, "வரக்கூடாதுன்னு கடவுளை வேண்டுறேன்" என்றாள்.
"இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்காம பிரிஞ்சு வந்துடலாமே" என்றாள்.
"சொல்றது எல்லாம் ஈஸி தான் மீரா, அவர் என் கிட்ட சொல்லாம ஆர்டிபிஷியல் ஆஹ் அந்த பொண்ண கர்ப்பம் ஆக்குனது தப்பு தான்... அவர் அந்த பொண்ணோட க்ளோஸ் ஆஹ் இருந்து அவ ப்ரெக்னன்ட் ஆகி இருந்தா, இந்நேரம் தூக்கி எறிஞ்சிட்டு வந்திருப்பேன், ஆனா அவர் தப்பு பண்ணலையே, குழந்தை வேணும்னு இப்படி பண்ணி இருக்கார், என்னை அவர் விட்டு கொடுக்க எப்போவும் விரும்புனது இல்லையே, நினச்சு இருந்தா என்னை டைவர்ஸ் பண்ணிட்டு வேற கல்யாணம் பண்ணி இருக்கலாம், ஏன் நானே அத தானே பண்ண சொன்னேன், ஆனா அவர் அப்படி பண்ணலயே, அப்புறம் எப்படி நான் விட்டு வர்றது? ஈஸியா பிரியணும், வேற கல்யாணம் பண்ணி வாழணும்னு சொல்லிடலாம், ஆனா அதுக்கான காரணம் உறுதியா இருக்கணுமே. அவர் என்னை இதுவரைக்கும் அடிச்சது இல்லை, என்னை கெட்ட வார்த்தைல திட்டுனது இல்லை, குழந்தை பெத்துக்க முடியாதுன்னு சொல்லி விட்டு கொடுத்ததும் இல்லை... எனக்கு வலிக்குது தான்... ஆதங்கம் இருக்கு தான், கோபம் இருக்கு தான்... ஆனா அவர் பக்கமும் நான் யோசிக்கணும்... எல்லாருமே நூறு வீதம் சரியவனவங்க இல்லை... ஷிவா பண்ணுன தப்பை வச்சு, அவர மொத்தமா என்னால விலக்கி வைக்க முடியல, ஏன்னா எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும்... இனி தயவு செய்து பிரிய சொல்லி சொல்லிடாதே" என்று அவனை விட்டு கொடுக்காமல் பேசியவள் முகத்தை இரு கைகளாலும் அழுந்த தேய்த்துக் கொண்டாள்.
மீராவோ, "இதுக்கப்புறம் நான் என்ன சொல்றது? உன் வாழ்க்கை நீயே யோசிச்சு முடிவு எடு" என்று சொல்லி விட்டாள்.
ப்ரீத்தாவுடனான நாட்கள் இப்படியே தான் கழிந்தன.
மீராவின் குழந்தைகள் வீட்டில் நின்று அவளை கொஞ்சம் நிதானமாக்கிக் கொண்டு இருந்தார்கள்.
இதே சமயம் சாதனாவோ, ஷிவேந்திராவுக்காக இரவு வரை சாப்பிடாமல் காத்துக் கொண்டு இருந்தாள்.
வீட்டினுள் நுழைந்த ஷிவேந்திராவோ, "தூங்கலையா?" என்று கேட்க, "உங்களுக்காக தான் வெய்ட் பண்ணுறேன், சேர்ந்து சாப்பிடலாம்" என்றாள்.
"அம்மா எங்க?" என்று கேட்க, "அவங்கள தூங்க சொல்லிட்டேன்" என்றாள்.
அவன் பெருமூச்சுடன் அறைக்குள் சென்று குளித்து விட்டு சாப்பிட அமர்ந்தவன், "நீ நேரத்துக்கு சாப்பிடு, எனக்காக ஒன்னும் வெய்ட் பண்ண தேவையே இல்ல" என்றான்.
"நீங்க சாப்பிடாம எனக்கு சாப்பிட முடியல" என்றாள்.
அவனுக்கு கோபம் வந்தது அடக்கிக் கொண்டே, "என் கிட்ட இப்படி பேசாதே" என்றபடி சாப்பிட, "உங்கள பிடிச்சு இருக்கே, நான் என்ன பண்ணட்டும்?" என்று கேட்டபடி அவள் சாப்பிட்டாள்.
"நான் கல்யாணம் ஆனவன் சாதனா, நீ பண்ணுறது தப்புன்னு தெரியலையா? தெளிவா பேசி தானே இத பண்ணுனோம்" என்று ஆதங்கமாக கேட்க, "தெரியுது ஷிவு, ஆனா என்னால கன்ட்ரோல் பண்ணவே முடியல, உங்கள அவ்ளோ பிடிச்சு இருக்கு, என்னை ஓவரா கவனிச்சு, என் மனசை கெடுத்தது உங்க தப்பு" என்றாள்.
"ம்ம் என் தப்பு தான், ப்ரீத்தா அவ்ளோ சண்டை போட்டும், உன்னை எக்ஸ்ட்ரா கெயார் எடுத்து பார்த்துக்கிட்டது என் தப்பு தான்" என்று கடுப்பாக சொல்லிக் கொண்டே சாப்பிட்டான்.
"அது தான் லவ், உங்களுக்கே தெரியாம உங்க மனசுல நான் இருக்கேன்" என்று சொல்ல, அவனோ, "வில் யூ ப்ளீஸ் ஷாட் அப்" என்றபடி எழுந்தே விட்டான்.
"எத்தனை நாளைக்கு மறைக்க போறீங்கன்னு நானும் பாக்கிறேன்" என்றான் கண்களை சிமிட்டி...
"உன் மேல கோபப்படவும் முடியல, ரொம்ப ப்ரெஷரா இருக்கு, இப்படி என் கிட்ட பேசாதே ப்ளீஸ்" எனறு சொல்லிக் கொண்டே கொஞ்ச தூரம் சென்றவன், "சாதனா" என்று ஏதோ சொல்ல வர, அவளோ அவன் சாப்பிட்டு சென்ற மீதியை இழுத்து வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.
விறு விறுவென அவ்விடம் வந்தவன், அவளிடம் இருந்த தட்டை பறித்து எடுத்துக் கொண்டே, "ஃப்ரெஷ் ஆஹ் சாப்பிடு" என்று கடுப்பாக சொல்லி விட்டு, அதனை கழுவி வைத்து விட்டு தான் அறைக்குள் நுழைந்தான்.
அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்தவனுக்கு தலை விண் விண்ணென்று வலித்தது...
தலையை பற்றி பிடித்துக் கொண்டே கொஞ்ச நேரம் அமர்ந்து இருந்தான்.
எப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு இருக்கின்றான்...
உணர்வு ரீதியாக சிக்கிக் கொண்டான்...
எதையும் அடித்து உடைத்து செய்யவும் முடியாது...
சாதனா அவளாக விலகி விட்டால் சந்தோசம் என்று தோன்றியது.
ஆனால் அவள் இன்னுமே நெருங்கிக் கொண்டு தானே இருக்கின்றாள்.
அவனுக்கு தூக்கமே வர மறுத்தது...
அடுத்த நாள் நேரத்துக்கே அவன் கடைக்கு சென்று விட்டான்.
மதியம் சாப்பிடவும் வரவில்லை, சாதனா அவனுக்காக காத்திருந்து களைத்து போனாள்.
இரவு அவள் தூங்கி விட்டாள் என்று ஜானகியிடம் உறுதி படுத்திய பின்னர் தான் வருவான்.
அவள் எழ முதலே கிளம்பி விடுவான், இப்படியே ஒரு வாரம் கடந்து இருக்க, அன்று மதியம் போல ஷிவேந்திரனுக்கு அழைத்த ஜானகியோ, "சீக்கிரம் வாப்பா, சாதனாவுக்கு பிரசவ வலி வந்திடுச்சுன்னு நினைக்கிறன், இடுப்பை பிடிச்சுட்டு கதறுறா" என்று சொல்ல, அவனும் பதறி அடித்துக் கொண்டே ஓடி வந்தான்.
அவள் சோஃபாவில் கதறிக் கொண்டே அமர்ந்து இருக்க, அவன் அடுத்த கணமே அவளை இரு கைகளாலும் தூக்கிக் கொண்டே காரில் ஏற்றியவன், ஜானகி மற்றும் வள்ளியை அழைத்தபடி ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டான்.
லேபர் வார்டில் அனுமதிக்கப்பட்ட பெண்ணவளுக்கு வலி உயிர் போனது...
கத்தி கதறி, ஆண் குழந்தை ஒன்றை பெற்று எடுத்தும் கொண்டாள்.
நர்ஸோ குழந்தையை தூக்கி வந்து ஷிவேந்திரன் கையில் கொடுக்க, அதனை அவன் மென் புன்னகையுடன் வாங்கிக் கொண்டான்.
என்ன தான் சாதனா மேல் கோபம் இருந்தாலும், அவன் உயிர்நீரில் உதித்த பிஞ்சு குழந்தை மேல் எந்த கோபமும் இல்லையே.
குழந்தையை மார்புடன் அணைத்து முத்தமிட்டுக் கொண்டான்.
குழந்தையின் ஸ்பரிசம் என்னவோ செய்தது...
ஜானகி குழந்தையை தூக்கினார்.
அவருக்கு சாதனா மேல் எந்த பிடித்தமும் இல்லை தான்.
ஆனால் குழந்தை மேல் அதனை காட்ட முடியாதே...
மகனின் குழந்தையை தானே... ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்து விட்டார்...
சாதனாவின் அறைக்குள் தான் ஜானகி மற்றும் வள்ளி நின்று இருக்க, ஷிவேந்திரன் வெளியே தான் நின்று இருந்தான்.
குழந்தைக்கு சாதனா பால் கொடுத்து முடிந்ததும், "ஷிவு எங்க?" என்று கேட்க, "வெளிய நிக்கிறான், வர சொல்றேன் மா" என்று சொன்ன வள்ளியும் வெளியே வந்து, "உங்கள வரட்டுமாம்" என்று சொல்ல, அவனும் உள்ளே சென்றான்.
உள்ளே வந்தவனோ, "அம்மா கொஞ்சம் வெளிய நிக்கிறீங்களா? நான் சாதனா கிட்ட பேசணும்" என்று சொல்ல, அவரும் வெளியேறி விட்டார்.
சாதனா அவனை புரியாமல் பார்க்க, "உன் பேங்க்கு பணம் டிரான்ஸ்ஃபெர் பண்ணிட்டேன்" என்று ஆரம்பிக்க, "ஷிவு என்னை துரத்துறீங்களா?" என்று கண்கள் கலங்க கேட்டாள்.
"நம்ம அப்படி தானே பேசி வச்சுக்கிட்டோம்" என்று ஆரம்பிக்க, "ஷிவு எனக்கு இந்த பணம் எதுவும் வேணாம், என் குழந்தை கூட அட்லீஸ்ட் மூணு மாசம் இருந்துட்டு போறேனே" என்று கெஞ்சினாள்.
"விளையாடுறியா?" என்று அவன் ஆரம்பிக்க, "தாய்ப்பால் குடிக்காம என் குழந்தை வளரணுமா?" என்று கேட்டுக் கொண்டே, குழந்தையை மார்புடன் அணைத்து பிடித்த பெண்ணவள் விம்மி வெடித்து அழ அவனுக்கு என்னவோ போல ஆகி விட்டது...
தாய் மகன் என்று யோசித்தவனுக்கு உறுதியாக முடிவு எடுக்கவே முடியவில்லை...
அவளோ, "நான் என் குழந்தையை பார்த்துக்கிற போல யார் பார்த்துப்பாங்க, அவன் கூட கொஞ்ச நாள் இருக்கவும் விடமாட்டேன் என்கிறீர்களே, உங்க காலுல வேணும்னாலும் விழுறேன், ப்ளீஸ்" என்று அழுகையுடன் கெஞ்ச, அவள் பால் சுரந்து அவள் உடையை நனைத்தது...
அவனுக்கு அதற்கு மேல் அங்கே நிற்கவே முடியவில்லை...
"மூணு மாசம் தான்" என்றான்.
"இல்ல ஆறு மாசம்" என்றாள்.
அவளை வெறித்து பார்த்தவன், "மூணு மாசம் தான்" என்றான் அறுதியாக...
அவளோ, "அத மூணு மாசம் முடிய பார்த்துக்கலாம்" என்று சொன்னவளோ மேலும், "பையன் எப்படி இருக்கான்?" என்று கேட்க, "ம்ம், அழகா இருக்கான்" என்று சொல்லி விட்டு வெளியேறி விட்டான்...
வெளியே வந்தவனுக்கு தன் மீதே கோபம்.
அழுகிறாள் என்று பரிதாபப்பட்டு மூன்று மாதம் இருக்க சொல்லி விட்டான்...
ஆனால் இதனை ப்ரீத்தா எப்படி எடுத்து கொள்வாள் என்று தெரியவில்லை...
இன்னும் ரெண்டரை மாதங்களில் ப்ரீத்தாவுக்கு பிரசவ நாள் வந்து விடும்...
அதன் பிறகு குழந்தையையும் அவளையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட வேண்டும்...
இப்போது நினைக்கும் போதே தலை விண் விண்ணென்று வலித்தது...
அவனது பலவீனமே இந்த பரிதாபம் தானே.
அதனையே கெட்டியாக பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தாள் சாதனா.