ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வண்ணப் பாவை மோகனம் - கதை திரி

Status
Not open for further replies.

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
வண்ணப் பாவை மோகனம்

மோகனம் : 1


“எனக்கு டிவர்ஸ் வேணும்” என்று கேட்டவன் குரல் மட்டுமல்ல விடுதலை பத்திர படிவத்தை பிடித்திருந்த அவன் கரங்களும் நடுங்கி கொண்டு தான் இருந்தது.

அலுவலக மேஜை மீதிருந்த மடிக்கணினியில் அன்றைய நாளுக்கான அறிக்கைகளை பரிசீலனை செய்து கொண்டிருந்த அவன் மனைவி ப்ரீத்தியோ அதிர்வில்லா விழிகளை அவனை நோக்கி நிமிர்த்த,

அவளின் கண் கண்ணாடிக்குள்ளிருந்து ஊடுருவும் அந்த பார்வைக்கே எச்சில் கூட்டி விழுங்கி கொண்டான் குகன் இந்திரஜித்.

பயந்தால் வேலைக்கு ஆகாது. இது அவனுக்காக போராட வேண்டிய காலம் என்று மனதிற்கு திடம் கொடுத்து கொண்டவன்,

அவள் விழிகளை தைரியமாக எதிர்நோக்கி,

“எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல. என்னை அடிமை மாதிரி நடத்துறீங்க நீயும், உன் குடும்பமும். எனக்கு உங்க எல்லார்கிட்ட இருந்தும் விடுதலை வேணும்” என்று ஒரு ப்லொவில் மனப்பாடம் செய்து வைத்திருந்ததை சொல்லி விட்டான்.

அப்போதும் அவளிடம் எந்த உணர்வு மாற்றங்களும் இல்லை.

கண்களிலிருந்து கண்ணாடியை கழட்டி வைத்து விட்டு, வெகு வெகு நிதானமாக நேராக அமர்ந்து அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கால்கள் நடுங்கியது குகனுக்கு. பல நாட்கள் கேட்க நினைத்து, கேட்க தைரியமின்றி, நாட்களை கடத்திக் கொண்டிருந்த விசயத்தை இன்று கேட்டதில் சிறிதே சிறிது நிம்மதி அவனுக்கு.

“எங்கிட்ட இருந்து விடுதலை தானே வேணும்?” என்று வஞ்சக புன்னகையுடன் ஸ்திரமாக ஒலித்தது அவன் ஆருயிர் மனையாளின் குரல்.

அவன் தலையும் ஆம் என்னும் விதமாக மெலிதாக அசைந்திட,

இதழ்களை அழுந்த மூடி அவனை பார்த்து அவள் சிரிக்க, அல்லு இல்லை மன கோட்டை ராஜாவுக்கு.

“மொத்தமா இந்த உலகத்தை விட்டே விடுதலை தந்திடுறேன். ஹாப்பி டெத் பார் யூ” என்றவள் அவன் சுதாரிக்கும் முன் நொடியில் டிராவில் இருந்த துப்பாக்கியை எடுத்து நின்றிருந்தவன் நெஞ்சிலேயே அதன் தோட்டாவை பாய்ச்சிருந்தாள்.

“நோஓஒ …” என்று அலறியபடி குண்டு பாய்ந்திருந்த அவன் நெஞ்சில் கை வைத்து கொண்டே கட்டிலிலிருந்து பதறி எழுந்தான் குகன்.

அதிகமான ஏசி அறையிலும் உடல் முழுவதும் வியர்த்து போனது மன்னவனுக்கு. கனவில் கைகள் தான் நடுங்கியது என்றால் இப்போது உடல் மொத்தமும் நடுங்க தொடங்கியது.

உயிர் பயத்தில் பட படவென அடித்து கொண்டிருந்த இதயத்தில் கையை வைத்து அழுத்தி நீவி விட்டவன்,

அவன் கண்டது கனவு என்று உணர்ந்து கொள்ளவே அரை நொடி எடுத்தது அவனுக்கு.

உணர்ந்த நொடி, கண்களை மூடி கொண்டு ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலை படுத்த முயன்றவன்,

மெதுவாக கண்களை திறந்து பார்க்க, அந்த நடுசாமத்தில் பேய் போல் விழித்து வேலைப்பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்து ப்பா… என்று திடுக்கிட்டு கத்தியவன், மீண்டும் நெஞ்சில் கையை வைத்து கொண்டான்.

அவன் அறையில் இந்த இரவு வேளையில் அவன் யட்சினியை தவிர வேறு பேய்கள் உள்ளே நுழைய முடியுமா. அவளே தான். அவன் உயிரை குடிக்கும் அவன் மனைவியே தான்.

எச்சில் கூட்டி விழுங்கியபடி அவளை பார்த்தபடி அவனிருக்க,

மிதமான இரவு விளக்கு மட்டும் தான் எரிந்து கொண்டிருந்த அந்த அறையில் அவனுக்கு எதிர் திசையில் இருந்த சோபாவில் மடி கணினியுடன் அவனை தான் விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் மனையாள்.

மனைவி தான். உள்ளம் கலந்து, உடலை பரிமாறி கொண்டாலும் இப்போது அந்த இணக்கம் இருவரிடமும் தொலைந்து போனது.

‘ஏன் கத்தின? எதுக்கு வியர்க்குது? என்னாச்சி? ஏன் உடம்பு நடுங்குது?’ என்று இயல்பான மனிதர்களின் அடிப்படை கருணையும், அக்கறையும் கூட அந்த கண்ணாடி கண்களில் இல்லை.

முழுதாக ஒரு நிமிடம் தான் அவனை நிமிர்ந்து பார்த்திருப்பாள், அடுத்த கணம் அவள் விழித்திரையில் அந்த மென்பொருள் சாதனத்தின் ஒளி எழுத்துக்கள் தான் நிறைந்திருந்தது.

அவளிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? என்று அவனை அவனே தேற்றி கொண்டு, அருகே இருந்த தண்ணீரை கடக் முடக்கென்று குடித்து விட்டு, மீண்டும் படுக்கையில் சரிந்தவன் சிந்தை முழுவதும் அவன் கண்ட கனவில் தான் நிலைத்து நின்றது.

அவன் விவாகரத்து என்று சொன்னால் நிச்சயமாக இது தான் நடக்கும்.

அவள் அதிக விலை கொடுத்து வாங்கிய அவள் உடமையல்லவா அவன்.

அவ்வளவு எளிதில் விட்டு விடுவாளா என்ன?

‘நீ கொடுத்த விலைக்கு என்னை உனக்காக பயன்படுத்தி கொள்ளேன். என்னுடன் நேரம் செலவிடேன்’ என்பது அவன் ஏக்கம்.

ஆம் ஆசையெல்லாம் ஆழ புதைந்து நெஞ்சின் ஏக்கமாக மாறி, இப்போது விட்டு விடேன் நானாவது நிம்மதியாக இருக்கிறேன்’ என்று யாசயம் வாங்கும் நிலைக்கு வந்து விட்டான்.

அப்படி அவனை விட்டு விட அவள் தயாராக இருந்தாலும் அவள் தந்தை விட்டு விடுவானா என்ன?

தங்க சிறையில் மாட்டிக் கொண்டவன் அவ்வப்போது வைர பிரம்புகளிலும் அடி வாங்கி தானே ஆக வேண்டும்.

இரவு வெகு நேரம் ‘இந்த குடும்பத்திலிருந்து எப்படி தப்பிபுவது’ என்று எண்ணி கொண்டிருந்தவன் எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது.

காலையில் அவன் கண் விழித்த போது, லேப்டாப் பேக்கை தூக்கி கொண்டு கிளம்பியிருந்தாள் அவன் மனைவி ப்ரீத்தி கிருஷ்ணா.

திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. ஆனால் இன்னமும் ஜெய்யின் மகளாக தான் இருக்கிறாள்.

‘இந்த குகனின் மனைவியா ஆக அவளுக்கு விருப்பமே இல்லையா? அப்புறம் ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா?’ என்று அவ்வப்போது அவன் மனம் கோபம் கொண்டாலும், அவளிடம் இதை பற்றி பேசவும் பயம் தான்.

கடிகாரத்தை பார்த்தான்.

காலை ஏழு மணி என்று காட்டியது.

இத்தனைக்கும் இரவு அவன் தூக்கமில்லாது புரண்டு கொண்டிருந்த சமயமெல்லாம் அவள் வேலையில் தான் இருந்தாள்.

எப்போது தூங்கினாள்? எப்போது எழுந்தாள்? என்றே தெரியாது.

“ராக்கோழி… தூங்கவே மாட்டா போல, நைட்டு தூங்காம இருந்தும் ஆபிஸ்ல எப்படி தான் அவ்வளவு எனர்ஜிட்டிகா இருக்கானே தெரியல?” என்று அவளை கண்டு பொறாமை பட்டப்படி உடலை அசைக்க சிரம பட்டு சோர்வாக எழுந்தான்.

விருப்பமில்லை என்றாலும் தன் கடமையை செய்ய தயாராகி அரை மணி நேரத்தில் கிளம்பி கீழே வந்தான்.

“குகன்… வா ப்பா… சாப்பிடுறியா?” என்று சுடர் அவனை அன்பாக அழைக்க,
இதழ்களில் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் வந்தமர்ந்தவனுக்கு அவளே நின்று உணவு பரிமாறினாள்.

“குகன் சாயந்தரம் நம்ம ஒர்க்கர்ஸ் ஒருத்தங்க பொண்ணோட மேரேஜ் ரிசெப்ஷன் இருக்கு. கொஞ்சம் சீக்கிரம் வரியா? ரெண்டு பேரும் போய்ட்டு வந்திடலாம்” என்று கேட்டவளிடம் மறுத்து பேச மனமின்றி “ஹ்ம்ம்… போலாம் அத்தம்மா” என்றான் கனிவான குரலில்.

ஆனால் அவன் மனமோ, ‘ஏன் உங்க வீட்டுக்காரரை கூட்டிட்டு போக வேண்டியது தானே. அது இல்லனா வீட்ல ரெண்டு வயசான டிக்கெட் சும்மா தானே இருக்கு. அவங்களை கூட்டிட்டு போக வேண்டியது தானே’ என்று நொடிந்து கொண்டிருக்கும் போதே,

“குட் மார்னிங் எங்மேன்” என்று அவன் தோளில் ஒரு அடியை போட்ட படி அவனுக்கு எதிரே வந்து அமர்ந்தார் ஜெய்யின் தந்தை பாலகிருஷ்ணா.

இரவு சரியான தூக்கமின்மையால் உடல் சோர்வாக இருக்க, அவரின் ஒற்றை அடிக்கு கூட தாக்குபிடிக்க முடியாது அவன் வலது தோள் ஒரு பக்கம் சாய்ந்திட, பற்களை கடித்து வலியை மறைத்து கொண்டவன் முகத்தில் வலியை காட்டாதிருக்க படாது பாடு பட்டு தான் போனான்.

“வாங்க மாமா” என்று மலர்ந்த முகத்துடன் சுடர் அவருக்கும் உணவு பரிமாற,

சாப்பிட்டு கொண்டே பேரனை நிமிர்ந்து பார்த்த பாலாவோ,

“குகன் நேத்து உனக்கு சென்ட் பண்ண லேண்ட்டோட டீடெயில்ஸ் எல்லாம் வெரிஃபை பண்ணி கொஞ்சம் சீக்கிரமா எனக்கு அனுப்பிடு. மதியம் ரிஜிஸ்டிரேஷன் இருக்கு” என்று அவர் சொல்ல,

அவனும் “ஹ்ம்ம்…” என்று மண்டையை ஆட்டி கொண்டான்.

ஒரு இட்லி கூட முழுதாக தின்று முடியவில்லை. அதற்குள்,

“குகன்… இன்னும் கிளம்பலையா நீ? இன்னைக்கு மார்னிங் அந்த கவர்ன்மென்ட் லேண்ட் அப்புருவல் கேஸ் கோர்ட்ல இருக்கே. நமக்கு சாதகமா எடுத்து கொடுத்துடுவ தானே?” என்று அவனை அவசரப்படுத்தி கொண்டே, முழுக்கை ஷர்டை மடக்கி விட்டபடி மாடி படிகளிலிருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தான் பிரஹான். ப்ரீத்தியின் மூன்றாவது அண்ணன்.

“இதோ இப்போ கிளம்பிடுறேன்” என்று அவசர அவசரமாக இட்லியை விழுங்கி கொண்டே எழுந்தவன் முன்னாள் பூனை குட்டியுடன் வந்து நின்றார் கலாவதி.

“ஏய்யா… பூனை குட்டி சாப்பிடுற அந்த பொட்டலம் காலியாகிடிச்சி. கொஞ்சம் வாங்கிட்டு வந்துடுயா… அப்படியே போன வாரம் அதுக்கு நோய் வராம இருக்க எதோ மாத்திரை கலந்து கொடுக்கணும்னு சொன்னியே அதையும் வாங்கிட்டு வந்திரு. நீன்னா கொஞ்சம் பார்த்து வாங்கிட்டு வருவ” என்று சொல்ல,

‘ஏன் இத கூட வீட்டு வேலைக்காரங்க கிட்ட சொல்ல கூடாதா? இதையும் நான் தான்செய்யனுமா?’ என்று ஆத்திர ஆத்திரமாக வந்தது. ஆனால் எதையும் காட்டி கொள்ளாது இன்ஸ்டன்ட் புன்னகையுடன் அதற்கும் தலையை ஆட்டியவன் தலையில் காலையிலேயே ஆளுக்கொரு வேலைகளை கட்ட ஆரம்பித்திருந்தார்கள்.

அவனும் மறுத்து பேசும் பழக்கிமின்றி எல்லாவற்றிற்கும் மண்டையை ஆட்டி கொண்டே வேக நடையுடன் வெளியேறினான்.

இன்னும் கொஞ்ச நேரம் அங்கே நின்றிருந்தால் அடுத்த கட்ட லிஸ்ட் சேர்ந்திருக்கும், அதை விட அவனின் இளைய மச்சினனின் வசவுகளை கேட்க நேர்ந்திருக்கும்.

விட்டால் போதும் ரேஞ்சில் தான் ஓடி வந்திருந்தான் குகன்.

அவனுடைய காரை எடுத்து கொண்டு அவன் சென்றது என்னவோ பிரஹான் சொன்ன வேலையை முடிக்க நீதிமன்றத்திற்கு தான்.

பத்து மணிக்கு தான் வழக்குகள் துவங்கும். அதற்கு முன்பான ஏற்பாடுகள், தகவல்கள், தரவுகளை சரிபார்க்க வேண்டியிருக்கிறதே.

இவன் கொஞ்சம் தடுமாறினால் கூட பிரஹான் மொத்தமாக இவனை தகர்த்து விடுவானே.

வேலைகள் அதிகம் இருந்தால் டிரைவர் எடுத்து கொள்வது அவன் வழக்கம். இன்றும் டிரைவர் தான் காரை செலுத்திட,

பின்னிருக்கையில் தன் லேப்டாப்பில் பாலா சொன்ன டாக்குமென்டை தான் சரிப் பார்த்து கொண்டிருந்தான்.

அதிலிருந்த சில சிக்கல்களை மேற்கோளிட்டு சுட்டிக்காட்டி அவருக்கு அனுப்பி வைத்து விட்டு, அடுத்து பிரஹான் சொன்ன வழக்கு தகவல்களை அவன் பார்த்து கொண்டிருக்கும் போதே அவன் கார் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்திருந்தது.

கார் நின்றதும் அவனது அசிஸ்டென்ட்கள் ஐவர் வந்து அவனுக்கு கார் கதவை திறந்து விட,

லேப்டாப் பேக்கை தனது செக்ரெட்டரியிடம் கொடுத்தவன், வேக நடையுடன் உள்ளே செல்ல மற்றவர்கள் எல்லாம் அவன் பின்னால் ஓட்டமும், நடையுமாக தான் வந்தார்கள்.

ஆக சிறந்த வழக்கறிஞன். பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் தன் உறுதியான, தெளிவான சிந்தனை மற்றும் பேச்சால் திணறடிப்பவன். ஆனால் அவன் திணறிக் கொண்டிருப்பது என்னவோ அவன் மனைவியிடமும், அவள் வீட்டு ஆட்களிடமும் மட்டும் தான்.

அவன் வயதில் இத்தனை சாதுரியமான வழக்கறிஞனை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று அவனை கண்டு அனுபவமிக்க வழக்கறிஞர்கள் பலர் வாயை பிளக்க,

அப்படி அவன் படித்து வாங்கிய பட்டமும், பார் கவுன்சில் உரிமையும் ஜெய் ஒருவன் குடும்பத்திற்கு மட்டுமே இப்போது வரை பயன்படுகிறது.

சிக்கியது சிறுத்தை என்று அவனை வச்சி செய்கிறது அந்த குடும்பம்.

ஜெய் கிருஷ்ணா, தன் தொழில் சாம்ராஜ்யத்தை உலகெங்கிலும் விரிவு படுத்தியிருக்க, அவனின் தனிப்பட்ட லீகல் அட்வைஸர் டீமின் தலைமை ஆலோசகர் அவன் மருமகன் தான்.

எவ்வளவு கோபம், வெறுப்பு, வருத்தம் இருந்தாலும் அதையெல்லாம் குகன் அவன் தொழிலில் காட்டி கொள்வது கிடையாது.

மிகவும் நேர்மையாக தான் இருப்பான் ஜெய் கிருஷ்ணாவுக்கு.

அவன் நேர்மையும், கனிவான குணமும் எல்லாருக்கும் பிடிக்கும். அது தான் இப்போது அவனுக்கு எதிரியும் கூட.

அவனால் முடியும் என்ற விஷயத்தை அவனிடம் கேட்டால், நேரம், காலம், உடல் நலன் எதையும் பொருட்படுத்தாது அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து விடுவான்.

அதை தான் ஜெய் கிருஷ்ணா குடும்பம் மொத்தமும் பிடித்து கொண்டு அவனை வைத்து நாளா பக்கமும் அடித்து வாலிபால் விளையாடுகிறது.

இதுவே அவனுக்கு தலைவலியை கொடுக்க, போதும் என்று மொத்தமாக உதறி செல்லவும் முடியாமல், இவர்களோடு ஒட்டவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தவன் விவாகரத்து பாத்திரம் தயார் செய்து வைத்தே ஒரு மாதம் ஆகிறது.

இன்னமும் அவன் மனைவியிடம் அதை பற்றி பேசிட அவனுக்கு தைரியம் இல்லை.

ஊருக்கே சண்டியரானாலும், வீட்டுக்குள் சாம்பிராணி போட்டு தானே ஆகணும்.

இவனை கொஞ்சம் அதிகமாகவே சாம்பிராணி போட வைக்கிறது அந்த குடும்பம்.



 
Status
Not open for further replies.
Top