வேல்விழி 16
யுவராஜனைக் கண்டதுமே பூரிப்புடன் அவனை நோக்கி நந்திதா ஓடி வந்தவள், பின்னால் வந்த ராமவர்மனைக் கண்டதுமே சற்று இறுகி தான் போனாள். யுவராஜனோ அவளை நோக்கி வந்தவன், "இது என் தளபதி ராமவர்மன்" என்று சொல்ல, அவளோ ராமவர்மனில் இருந்து பார்வையை யுவராஜனை நோக்கி மெலிதாக புன்னகைத்தவள், "அறிவேன் அரசே" என்றாள். ராமவர்மனோ, "வணங்குகிறேன் அரசியே" என்று வணக்கத்தை தெரிவித்தவன், அவள் விழிகளை பார்க்கா தயங்கி தான் போனான்.
அவளோ, "வணக்கம் தளபதியாரே" என்று மகாராணிக்கு உரிய கம்பீரமான குரலில் உரைக்க, அவனுமே யுவராஜனை பார்த்தவன், "நான் விடைபெறுகின்றேன் அரசே" என்று சொல்ல, யுவராஜனும் விடை கொடுத்தான். அவன் அங்கிருந்து அகன்றதுமே தன் முன்னே நின்ற நந்திதாவை காதலுடன் பார்த்த யுவராஜனோ, "அந்தப்புர மாடத்துக்கு வா நந்திதா, உனக்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டு இருக்கின்றது" என்று சொல்ல,
அவளும் சம்மதமாக தலையாட்டிக் கொண்டே அவனை மென் சிரிப்புடன் பின் தொடர்ந்தாள். அவளை அந்தப்புர மாடத்துக்கு கைகளை பற்றி அழைத்து சென்றவனோ அங்கே அவளுக்காக புதிதாக கொண்டு வந்து இருந்த அரியவகை காதல் புறாக்களைக் காட்ட, அவளோ பூரிப்பாக அதனை விழி விரித்துப் பார்த்தாள். அவள் பின்னால் வந்து அவள் காதருகே குனிந்தவன், "பிடித்து இருக்கின்றதா நந்திதா?" என்று கேட்க, அவளோ அவனை ஆனந்தத்துடன் திரும்பி பார்த்தவள், "ரொம்ப பிடித்து இருக்கின்றது அரசே" என்று சொல்ல, நெருக்கமாக நின்றதில் அவள் மேனி அவன் மேனியுடன் மொத்தமாக மோதியது.
மென்பஞ்சு தேகம் அவனை பித்தம் கொள்ள வைக்க, அவன் கரமோ அவள் மெல்லிடையை வருட, அவனை நோக்கி மொத்தமாக திரும்பியவளது கரம் அவன் திண்ணிய மார்பில் அழுந்த பதிய, அவனோ தனது அடுத்த கரம் கொண்டு அவள் இதழ்களை வருடியவன், "வாள் இன்றி ரத்தம் இன்றி என்னை கொல்கிறாயடி பெண்ணே" என்று சொல்லிக் கொண்டே அவள் இதழ் நோக்கி குனிந்தான்.
அவளுமே தனது விழிகளை மூடிக் கொண்டே அவன் இதழின் ஸ்பரிசத்தை தன்னிதழ் கொண்டு அறிய முற்பட, அவர்கள் நின்று இருந்த மலர்ப்பந்தலில் இருந்து மலர்கள் இருவர் மீதிலும் சொரிய, ரம்மியமான அந்த காதல் காட்சியை தனது அறையில் இருந்து வன்மமாக பார்த்துக் கொண்டு இருந்தன மித்ரகுமாரியின் விழிகள். தனது இடை தீண்ட வேண்டிய வேந்தனின் கரம் வேறு பெண்ணின் இடையை தீண்ட,
அவன் இதழ்களோ வேறு இதழ்களில் குடி இருக்க, தனக்கு கிடைக்க வேண்டிய இன்பங்களையும் மரியாதையையும் இன்னொரு பெண் அனுபவித்த கோபத்தில் அவள் விழிகள் சிவந்து போக, அருகே இருந்த கண்ணாடி குவளையை இறுக பற்றி நொறுக்கி இருந்தாள். அவள் கரத்தில் மட்டும் அல்ல இதயத்திலும் இந்த காட்சியை கண்டு குருதி வழிய, அவர்கள் ஆனந்தத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்து இருந்தாள் மித்ரகுமாரி.
காலங்கள் கடந்தோட, நந்திதா யுவராஜனின் வாரிசை சுமக்கும் நாளும் வந்து சேர்ந்தது. விஷயத்தை கேள்விப்பட்டு அரண்மனையே விழாக்கோலம் போட, யுவராஜனோ நந்திதாவை முத்தத்தில் நனைய வைத்து இருந்தான். இருவருக்குமே அப்படி ஒரு பூரிப்பு நிறைந்து இருக்க, அவள் வயிற்றில் முத்தம் பதித்தவன், "அரண்மனை வாரிசை சுமக்கின்றாய் நந்திதா, ஆனந்தமாக இருக்கின்றது" என்று கூறி அவளுக்கு அன்பை வாரி வழங்க, மித்ரகுமாரிக்கோ இன்னுமே கோபம் மேலோங்கி இருந்தது.
அவளுக்கென்று ஒரு சேவகி அந்த அரண்மனையில் இருக்க, கோபத்தில் அறைக்குள் இருந்த பொருட்களை நொறுக்கியவளோ, "நான் சுமக்க வேண்டிய வாரிசு அது வள்ளி" என்று கர்ஜனையாக சீறினாள். வள்ளிக்கோ ஏற்கனவே விக்ரமராஜன் மீது கோபம் இருந்தது அவள் கணவன் செய்த தவறுக்கு தலையை துண்டித்ததால். அதனாலேயே அவளும் மித்ரகுமாரியின் பக்கம் சாய்ந்து இருக்க, "இதற்கு மேலும் மௌனமாக இருப்பதன் காரணம் என்ன இளவரசி?" என்று கேட்டாள் அவள்.
மித்ரகுமாரியோ, "என்ன செய்ய சொல்கிறாய் வள்ளி? எனக்கென்று யாருமே இருக்கவில்லை உதவி செய்வதற்கு… திருமணத்தையும் தடுக்க முடியவே இல்லை, அவர்கள் காதல் கொள்வதை பார்த்து மனம் வெதும்பி போய் இருக்கின்றது. இப்படியே இறந்து விடுவேனோ என்று அச்சம் கொள்கிறேன்" என்று ஆக்ரோஷமாக கூற, "தாங்கள் ஏன் இறக்க வேண்டும்? திருமணத்தை தான் தடுக்க முடியவில்லை, அரண்மனை வாரிசு உதிக்க முதலே அழிக்க முடியும் அல்லவா?" என்று கேட்க, மித்ரகுமாரியோ, "என்ன உளறுகிறாய்?" என்று அதிர்ந்து கேட்டாள்.
வள்ளியோ, "உங்களுக்கு வலியை கொடுத்தவர்களுக்கு திரும்ப வலியை கொடுக்க சொல்கிறேன்" என்று சொல்ல, மித்ரகுமாரியின் விழிகள் விரிய, "இது பிரமாதமான யோசனையாக இருக்கின்றதே" என்று வன்மமாக சொல்லிக் கொண்டாள். மேலும் தொடர்ந்த வள்ளியோ, "அப்படியே அவர்களையும் பிரித்து விடலாம்" என்று சொல்ல, இதழ் பிரித்து விரக்தியாக சிரித்த மித்ரகுமாரியோ, "குழந்தையை வேண்டும் என்றால் அழிக்கலாம், ஆனால் அவர்களை பிரிப்பது நடக்காத காரியம்" என்று சொல்ல,
வள்ளியோ, "நினைத்தால் எதை வேண்டும் என்றாலும் நடத்திக் காட்டலாம், அரசியாருக்கு திருமணத்துக்கு முதல் நமது தளபதியாருடன் காதல் இருந்தது என்கின்ற செய்தி சமீபத்தில் தான் எனக்கு கிடைத்தது" என்று சொல்ல, அதிர்ந்து மித்ரகுமாரியை பார்த்தவள், "என்ன சொல்கிறாய்?" என்று கேட்டாள். வள்ளியோ, "ஆம் என்னுடைய தோழியும் அரசியும் ஒன்றாக தான் அருவியில் குளிக்க செல்வார்கள். அவள் சொன்ன சேதி தான் இது" என்று சொல்ல,
இப்போது குரூர புன்னகையுடன் சிரித்த மித்ரகுமாரியோ, "முதலில் அரசரிடம் இருந்து அவளை பிரித்து விடலாம், அதன் பின்னர் வாரிசை அழித்து விடலாம்" என்று சொன்னவள் போட்ட சூழ்ச்சியில் அனைவரும் சிக்கிக் கொண்டது தான் அந்த ராஜ்ஜியத்திற்கே முடிவாகி போனது.
ஆம் அடுத்த நாளில் இருந்து அவள் போட்ட திட்டத்தை செயற்படுத்த ஆரம்பித்து இருந்தாள். ராமவர்மன் அரண்மனையின் மைதானத்தில் பயிற்சியை முடித்துக் கொண்டே அசுவத்தில் ஏறும் கணத்தில், அவனை தேடி ஓடி வந்த வள்ளியோ, "ஒரு ஆபத்து தளபதியாரே" என்று சொல்ல, அவனும் அசுவத்தில் இருந்து இறங்கியவன், "என்ன ஆயிற்று" என்று வினவினான்.
"அரசியாருக்கு தயாரித்த பாலில் விஷம் கலந்து இருக்கின்றது. அரண்மனை சமையல் கூடத்தில் இருவர் பேசுவதை கேட்டேன்... அரசர் முக்கிய ஆலோசனை கூடத்தில் இருப்பதால் என்னால் அவரை அணுக முடியவில்லை. அரசியாரின் அறைக்குள் பாமர பெண்ணான என்னை அனுமதிக்க மறுகிறார்கள். அரசருக்கு அடுத்ததாக தாங்கள் தான் அரண்மனையின் எந்த இடத்துக்கும் நுழையும் அதிகாரம் பெற்றவர்கள், அது தான் தங்களிடம் கூற வந்தேன்" என்று பதறியபடி சொல்ல,
அரசியாருக்கு ஆபத்து என்று சொன்னதுமே எதனையும் யோசிக்காமல் அவள் உரைத்த பொய்யை நம்பிய ராமவர்மன் வேகமாக அரண்மனையின் அந்தபுரத்துக்குள் நுழைந்து விட்டான். அவனுக்கோ நந்திதாவை காப்பாற்ற வேண்டும் என்கின்ற எண்ணம் மட்டுமே இருக்க, அவன் இந்த செயலை செய்து இருக்க, யாருமே அவனை தடுக்கவே இல்லை. வேகமாக சென்று நந்திதாவின் கதவை தட்ட, கதவை திறந்தவள் அதிர்ந்து தான் போனாள்.
"தாங்கள் இங்கே வர காரணம்?" என்று அதிர்ச்சியாக கேட்க, "மன்னிக்க வேண்டும் மகாராணி தங்களுக்கு கொண்டு வந்த பாலில் விஷம் கலந்து இருப்பதாக செய்தி வந்தது. அதனால் தான் அவசரமாக ஓடி வந்தேன்" என்று சொல்ல, அவளோ, "இப்போது தான் பாலை கொண்டு வந்தார்கள் ஆனால் நான் இன்னுமே அருந்தவில்லை" என்று சொல்லி குவளையை நீட்ட, அதனை பெற்றுக் கொண்டவனோ அங்கே இருந்த காவலாளியிடம், "இதனை பரிசோதித்து பார்" என்று சொல்லி விட்டு வெளியேறிய கணம்,
அவள் அந்தப்புரத்தில் இருந்து வெளியேறுவதை தூர இருந்து யுவராஜன் பார்த்துக் கொண்டு இருக்க, அவன் அருகே நின்று இருந்த மித்ரகுமாரியோ, "இப்போதாவது என்னை நம்புகிறீர்களா அரசே" என்று கேட்டாள். ஆம் அவன் உள்ளே நுழைந்த கணம், தனது அதிகாரத்தை வைத்து யுவராஜனை சந்திக்க சென்று இருந்தாள் மித்ரகுமாரி, அவனோ, "இளவரசியார் என்னை சந்திக்க வந்த நோக்கம்?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்க, அவளோ, "ஒரு செய்தி கேள்விப்பட்டேன் மன்னா" என்று சொல்ல, அவனோ அவளை புரியாமல் பார்த்தான்.
ஆழ்ந்த மூச்செடுத்து தைரியத்தை வரவழைத்தவளோ, "மகாராணிக்கும் தளபதியாருக்கும் காதல் என்று ஒரு செய்தி கேள்விப்பட்டேன் அரசே" என்று முடிக்கவில்லை, அவன் இடையில் இருந்த கூரிய கத்தி அவள் பாதத்தின் நுனியில் எறியப்பட்டு இருக்க, அவளோ அதிர்ச்சியாக நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவன் விழிகளோ கோபத்தில் தகித்துக் கொண்டு இருந்தன. கோபமாக அவளை நோக்கி வந்தவன், அவள் கழுத்தை ஒற்றைக் கையால் பிடித்து, "என் நந்திதாவை பற்றி தவறாக பேசினால் உன் பாதத்தில் எறியப்பட்ட இந்த கத்தியை அடுத்த முறை உன் கழுத்துக்கு எறிந்து விடுவேன்" என்றான்.
அவளோ அவன் கரத்தின் பிடியை தாங்க முடியாமல் திணற, அவளில் இருந்து கையை எடுத்தவன், "இங்கிருந்து செல்" என்று கர்ஜித்தான். அவளோ சற்றும் பயம் கொள்ளாமல், "என்னை நம்பவில்லை என்றால் இப்போதே இங்கிருந்து அரண்மனையின் அந்தபுரத்தை பாருங்கள், உள்ளே சென்ற தளபதியார் வெளியே வரும் காட்சி உங்களுக்கு தென்படும்... இல்லை என்றால் இங்கேயே என் உயிரை நான் மாய்த்துக் கொள்வேன்" என்று சொல்ல, அவனோ, "நீ மாய்க்க தேவை இல்லை நானே கொன்று விடுவேன்" என்று சொல்லிக் கொண்டே மாடத்தில் போய் நின்று அந்தபுரத்தை நோக்கியவனுக்கு இந்த அதிர்ச்சி காத்துக் கொண்டு தான் இருந்தது.
ராமவர்மன் வெளியேறி சென்றதை இறுகிய முகத்துடன் நோக்கியவனோ பக்கவாட்டாக திரும்பி மித்ரகுமாரியை பார்க்க, "கண்களால் பார்த்து மட்டும் நம்ப போவதில்லை நான்... அவளிடமே கேட்டு உறுதி செய்கின்றேன்" என்று சொல்லி விட்டு வேகமாக தன்னவளை நாடி சென்றான். உள்ளே வந்த யுவராஜனை நோக்கி நந்திதா மென் புன்னகையுடன் ஓடிச் செல்ல, "அங்கேயே நில்" என்றான் கர்ஜிக்கும் குரலில். அவளோ புரியாமல் பார்க்க,
அவனோ, "நீ ராமனைக் காதலித்தாயா?" என்று தான் கேட்டான். அவனிடம் இருந்து இப்படியான அதிரடி கலந்த நேரடியான வினாவை அவள் எதிர்பார்க்கவே இல்லை. விலுக்கென நிமிர்ந்தவளது முகத்தில் இருந்த சந்தோஷங்கள் அனைத்தும் வடிய, இதழ்கள் பயத்தில் துடிக்க பதில் சொல்ல வார்த்தைகள் அவளுக்கு வரவே இல்லை. கையை எடுத்து தனது மணி வயிற்றில் வைத்தவளுக்கு இக்கணம் ஒரே தைரியம் கொடுத்தது அவள் வயிற்றில் வளர்ந்து கொண்டு இருந்த யுவராஜனின் சிசு மட்டுமே தான்.
அவனோ விழிகளாலேயே அவளை பொசுக்கி விடுவது போல பார்த்தவனோ அவளை நோக்கி அடிமேல் அடிவைத்து வர அவள் இதயமோ நின்று துடித்தது. தனது கரத்தை எடுத்து அவள் கன்னத்தை பற்றிக் கொண்டவனோ, "இல்லையென்று உரைத்து விடு நந்திதா" என்று வாய்விட்டே கேட்டு இருந்தான். இருவர் விழிகளும் ஒன்றோடொன்று கலந்து இருக்க அவள் கண்களில் நீர் நிறைந்து இருக்க, பதில் வராமல் தடுமாறியவளது விழி நீர் வழிந்து,
"ஆம்" என்று உரைத்து இருக்க, அவள் இலைமறை காயான பதிலை உணர்ந்தவன் முகமோ இறுகி போனது. "ஆக நான் விவாகம் செய்தது என்னுடைய நண்பனின் காதலியை, சரி தானே" என்று கேட்டவன் குரலில் கோபமும் ஏளனமும் சமனாக இருந்தது. அவனது குரலில் உண்டான மாற்றம் அவள் இதயத்தை சுருக்கென்று தைக்க, "விவாகத்தின் பின்னர் நான் தங்கள் மனைவி மட்டும் தான்...
என் உயிரையும் உடலையும் தங்களுக்கு மட்டும் தான் சமர்ப்பித்து உள்ளேன்" என்றாள் தளராத குரலில். அவன் இதழ்களோ கேலியாக வளைய அவளை பார்த்துக் கொண்டே அடிமேல் அடி வைத்து பின்னால் சென்றவன், "யுவராஜன் போரில் தோற்றதாக சரித்திரம் இல்லை… ஆனால் எனது வாழ்க்கையில் மொத்தமாக தோற்று விட்டேன், இன்னொருவனை மனதில் நினைத்துக் கொண்டே என் கையால் மாங்கல்யம் வாங்கி பெரிய பாவம் செய்து விட்டாய் நந்திதா" என்று சொன்னவன் குரலில் வலி அப்பட்டமாக தெரிய, அவளோ தன்னை நிரூபிக்கும் நோக்கில், "நான் தந்தையிடம் எவ்வளவோ எடுத்துரைத்தும் வற்புறுத்தி திருமணம் செய்து வைத்து விட்டார் அரசே…
ஆனால் திருமணத்துக்கு பிறகு" என ஆரம்பித்தவள், "நிறுத்து நந்திதா" என்னும் கர்ஜனையில் அடங்கி போனாள். கணவனிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று உண்மையை உரைக்க போனவளுக்கோ அந்த உண்மை எதிரியாக வந்து இருந்தது. அவளோ அதிர்ச்சியும் பயமுமாக அவனை நோக்க, "இந்த நாட்டின் அரசரை பிடிக்காமல் திருமணம் செய்து இருக்கிறாய், இதற்கு மேல் எனக்கு என்ன அவமானம் வேண்டும்? என் அந்தபுரத்துக்குள் உன் காதலன் வந்து செல்கின்றான். இப்போது இந்த குழந்தையாவது என்னுடையதா என்கின்ற ஐயம் எழுகின்றது" என்று கோபத்தில் அவன் வார்த்தைகள் அமிலமாக வெளியேற, காரிகையவள் அதிர்ச்சியும் வலியுமாக வாயை மூடிக் கொண்டாள் காரிகையவள்.