வேல்விழி 5
முருகனோ, "இங்க ஹோட்டல் இல்ல சார், ஒரே ஒரு வீடு தான் இவ்ளோ நேரத்துக்கு கண்ணுல பட்டு இருக்கு" என்று சொன்னான். நந்திதாவோ மனதுக்குள், "வீடாவது இருந்திச்சே" என்று நினைத்துக் கொண்டே, இருக்கையில் இருந்து எழ, சுருதியும், மதனாவும் கூட அவளுக்கு துணையாக எழுந்து சென்றார்கள்.இதே சமயம் யுவராஜோ, "இந்த குளிருக்கு சிகரெட் பிடிச்சா செமயா இருக்கும்ல" என்று சொல்லிக் கொண்டே ஸ்ரீயுடனும், பிரகாஷுடனும் கீழே இறங்கியவன் வண்டியில் சாய்ந்து நின்று சிகரெட்டை பிடிக்க தொடங்கினான். ஸ்ரீக்கோ அவன் நந்திதாவுடன் நடந்தது உறுத்தலாக இருந்தாலும் அதனை பற்றி பேசும் அளவுக்கு தைரியம் இருக்கையிலே என்பதனால் மௌனமாகவே நின்று இருந்தான்.
இவர்களை அங்கே சாலையில் ஓரமாக அமர்ந்து பார்த்துக் கொண்டே இருந்த சித்தர் ஒருவர், "சாப விமோச்சனத்தை தேடி வந்து இருக்கிறாயா அரசே?? சுமை ஏறிய கொங்கையின் சுமையை இறக்கி விடு, உன் பழியும் பாவமும் இந்த ஜென்மத்தில் அகன்று விடும், சுமையேறியவள் சாபம் சும்மா விடாது" என்று சொல்ல, சிகரெட் புகையை ஊதிய யுவராஜ், "என்னடா சொல்றார் இவர்?" என்று கேட்டான்.
பிரகாஷோ, "சில சித்தர்கள் உண்மையை சொல்வாங்க, சிலர் சும்மா இருந்து பேசிட்டே இருப்பாங்க, இவர் என்ன சொல்றாரு தெரிலயே" என்று சொல்ல, ஸ்ரீயோ, "சரி விடு பார்த்துக்கலாம்" என்று சொல்லிக் கொண்டே புகைக்க ஆரம்பித்தான். அதே நேரம், அந்த வீட்டை நோக்கி சுருதியுடனும் மதனாவுடனும் அவள் செல்ல, வீட்டின் திண்ணையில் இருந்த மூதாட்டியோ அவளை ஏறிட்டுப் பார்த்தார்.
அவளோ, "இங்க பாத்ரூம் இருக்கா பாட்டி?" என்று கேட்க, அந்த மூதாட்டியோ, "என்ன புள்ள கேக்கிற?" என்று கேட்க, ஸ்ருதியோ, "இரு நான் கேக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே மூதாட்டி அருகே சென்றவள், "இங்க கொல்லைக்கு எப்படி போவீங்க?" என்று கேட்டாள். அவரோ, "எல்லார போலவும் குந்தி தான் போவேன்" என்று சொல்ல, மதனா கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டே இருக்க, நெற்றியினை நீவிய சுருதியோ, "அது சரி, எங்க போவீங்க?" என்று கேட்டாள்.
அவரோ, "ஆஹ் இந்த பக்க போ" என்று வழியை காட்ட, சுருதியோ நந்திதாவிடம், "வா போகலாம்" என்று அழைத்துக் கொண்டே வீட்டின் பின் பக்கம் போனாள். அங்கே பாழடைந்த நிலையில் ஒரு பழைய கட்டடம், அது தான் அவர்களது கழிப்பறையாக இருக்க, சகித்துக் கொண்டே உள்ளே போக வேண்டிய நிலை நந்திதாவுக்கு. வேறு வழி இல்லை அவளுக்கும், அவள் மனமோ, "இன்னும் கொஞ்சம் நேரம் போனா யூரிங் டேங்க் வெடிச்சிடும், அட்ஜஸ்ட் பண்ணிப்போம்" என்று நினைத்துக் கொண்டே உள்ளே கடமையை முடித்து விட்டு வெளியே வந்தவளோ, சுருதியிடமும் மதனாவிடமும், "நீங்க போகலையா?" என்று கேட்க,
சுருதியோ, "இங்க போற அளவுக்கு எனக்கு சகிப்பு தன்மை இல்ல நந்திதா" என்று சொல்ல, மதனாவும் அதனையே சொன்னாள். மூவரும் ஒன்றாக நடந்த சமயம், சுருதியோ, "யுவா உன் விஷயத்தில ரொம்ப ஹார்ஷ் ஆஹ் இருக்கிற போல பீல் ஆகுது" என்று சொல்ல, அவளிடம் இருந்து பதிலாக ஒரு விரக்தி சிரிப்பு மட்டுமே கிடைத்தது.
மூவரும் சேர்ந்து வண்டியை நோக்கி நடந்து வந்த நேரம், பலத்த காற்று வீச, மரங்களோ வேகமாக அசைய, அங்கே அமர்ந்து இருந்த சித்தரின் கண்கள் நந்திதா மேலே படிய, "உன்னை எல்லாமே வரவேற்குது" என்று சத்தமாக சொல்ல, நந்திதாவோ அவரை சட்டென திரும்பி பார்த்தாள். அவர் இதழ்களோ இப்போது புன்னகைக்க, "உன் இடத்துக்கு வந்துட்டியா" என்று கேட்க, வண்டியில் ஏற போன யுவராஜோ, "எதுக்கு அவரையே பார்த்துட்டு இருக்க? உள்ளே வா" என்று அதட்டலாக சொல்லி விட்டு உள்ளே ஏற,
அவளோ அந்த சித்தரை திரும்பிப் பார்த்துக் கொண்டே வண்டியில் ஏறினாள். அவர்கள் ஏறியதுமே வண்டி புறப்பட, அந்த சித்தரைப் பார்த்ததில் இருந்தே நந்திதாவின் மனதில் ஒரு சின்ன சலனம் இருக்க தான் செய்தது. அவர்கள் பயணம் மீண்டும் காட்டுப் பாதையில் தொடர, அவர்கள் ராஜகோட்டைக்கு வந்து சேரவே மாலை ஆறுமணியை தாண்டி இருந்தது.
வண்டியோ ஒரு எல்லை தாண்டி உள்ளே செல்ல முடியாத நிலையில், காட்டேஜுக்கு நடந்து செல்ல வேண்டி இருக்க, சதீஷும் ராகவனும் அவர்களது பொருட்களை தூக்கிக் கொண்டு பின்னால் வர, முன்னால் சென்றது என்னவோ யுவராஜ் தான். அவன் வேகத்துக்கு கஷ்டப்பட்டு தான் அவன் அருகே நந்திதா நடந்து சென்றாள். அவர்களோ அந்த ஒற்றையடிப் பாதையில் சென்று கொண்டு இருக்க, அதன் எல்லையில் பெரிய சுவர் எழுப்பப்பட்டு, "ராஜகோட்டை" என்று தமிழ் பிராமி மொழியில் எழுதப்பட்டு இருக்க, அதனை ஏறிட்டுப் பார்த்த நந்திதாவோ, "ராஜகோட்டை" என்று உச்சரித்தாள்.
அவளை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்த யுவராஜோ, "இவ இந்த லாங்குவேஜ் எங்க படிச்சு இருப்பான்னு தெரிலயே, கேட்டாலும் படிக்கல ஆனா தெரியும்னு அடிச்சு விடுவா" என்று நினைத்துக் கொண்டே அந்த பாரிய வாசலின் படியில் தனது வலது காலை வைத்த கணமே ஒரு பெரிய இடியில் அந்த இடமே அதிர்ந்தது. அந்தக் கணம் அவன் உடலிலும் ஒரு மின்சாரம் பாய்ந்த உணர்வு.
அந்த இடியை தொடர்ந்து அருகே இருந்த காட்டில் இருந்து பறவைகளின் சத்தம் வேறு கேட்க, அவனோ, "வித்தியாசமான சரவுண்டிங் ஆஹ் இருக்கே" என்று சொல்லிக் கொண்டே கண்களை மூடி திறந்தவன், அந்த படியை தாண்டி சென்று அடுத்த கணம் அடுத்த இடி பேரிடியாக கேட்டது.
சட்டென அவன் திரும்பிப் பார்க்க, அந்த கணம் காலை வைத்து படி தாண்டி வந்து கொண்டு இருந்தது என்னவோ நந்திதா தான். அவள் மேனியில் அப்படி ஒரு சிலிர்ப்பு… ஏதோ தனது இடத்துக்கே வந்து சேர்ந்த உணர்வு.பழக்கப்பட்ட சூழல் போன்றே அவளுக்கு இருக்க, யோசனையுடனேயே யுவராஜ்ஜை பின் தொடர்ந்து சென்றாள். பிரகாஷோ வேகமாக அவர்களை நோக்கி ஓடி வந்தவன், "இந்த வழியால போகணும் சார்" என்று கையை காட்ட, அவர்களும் அவன் சொன்ன வழியே சென்றார்கள்.
அங்கே ஐந்து காட்டேஜ்கள் அருகருகே அமைந்து இருக்க, "முதலாவது காட்டேஜ்ல தங்கிக்கலாம் சார்" என்று பிரகாஷ் சொல்ல, யுவராஜோ, "செமயா இருக்கு இந்த பிளேஸ், கத ஓகே ஆய்டுச்சுன்னா இங்கயே ஷூட்டிங்கை வச்சுக்கலாம்" என்று சொன்னான். பிரகாஷும் ஆமோதிப்பாக தலையாட்ட, யுவராஜோ, "ஒரு மாசம் எப்படி தான் ஜிம் இல்லாம இருக்க போறேனோ" என்று சலித்துக் கொள்ள, பிரகாஷ் அங்கே இருந்த பையனிடம் வாங்கி வந்த திறப்பின் உதவியுடன் அந்த காட்டேஜ்ஜை திறந்து விட்டான்.
உடனே அவனை தொடர்ந்து உள்ளே வந்த சதீஷும் ராகவனும் இவருடைய பைகளை அங்கே இருந்த மர நாற்காலியில் வைத்து விட்டார்கள். மரத்தினால் செய்யப்பட்ட அந்த கட்டடத்தில் ஒரு குளியலறை, ஒரு படுக்கை அறை என்று அவ்வளவு தான் இருந்தது. வாசலில் திண்ணை போன்ற அமைப்பு இருக்க, மேலே ஓலையினால் தான் வேயப்பட்டு இருந்தது. யுவராஜ்ஜோ அனைத்தையும் சுற்றி பார்த்து விட்டு, "என்னடா ஒரு பல்ப் கூட இல்ல, அது சரி கரெண்ட் கனெக்ஷன் இருந்தா தானே" என்று சொல்லிக் கொண்டே அந்த மரக்கட்டிலில் அமர, பிரகாஷோ, "நைட்ல ரொம்ப குளிரா இருக்கும் சார், பகலிலே தான் நாம காட்டு பக்கம் போயிடுவோமே" என்று சொல்ல,
அவனோ, "ம்ம் இதுவும் புது அனுபவம் தான், ரெண்டு நாளைக்கு நின்னு பார்க்கலாம். செட் ஆகலைன்னா கிளம்பிடலாம்" என்று சொல்ல, பிரகாஷும் பெருமூச்சுடன், "ம்ம்" என்று தான் சொன்னான். இது யாருக்கு ஆச்சரியமோ இல்லையோ கூட வந்த ஸ்ரீக்கு பெரிய ஆச்சர்யம் தான். அவ்வளவு சீக்கிரம் அனைத்தையும் சகித்துக் கொள்பவன் அல்ல யுவராஜ். எல்லாமே தனது இஷ்டத்துக்கு இருக்க வேண்டும் என்று விரும்புபவன். அவனது பிடிவாதத்தால் எத்தனையோ தடவை ஷூட்டிங் நின்று போய் இருக்கின்றது.
காரெவெனில் தூசு என்று ஷூட்டிங்கை நிறுத்தியவனோ இன்று இந்த சாதரண கொட்டகையில் தங்க சம்மதித்து இருக்கின்றான். "காட்டுக்குள் எல்லாம் ஷூட்டிங் வர மாட்டேன், செட் போட்டு எடுங்க" என்று சொல்பவனோ இன்று காட்டுக்குள் அவனாக தேடி வந்து இருக்கின்றான். அது ஸ்ரீக்கு ஆச்சரியமாக இருக்காதா என்ன? அதுவும் கவரேஜ் இல்லாமல் வெளி உலக தொடர்பு இல்லாமல் இருக்க சம்மதித்து இருக்கின்றான் அல்லவா?
ஏன் யுவராஜுக்கே தன்னை நினைத்து ஆச்சரியம் தான். ஆனாலும் ஏனோ இந்த இடம் அவனை காந்தம் போல கவர்ந்து இழுத்துக் கொண்டு தான் இருந்தது. யுவராஜும் நந்திதாவும் அந்த அறையில் இருந்து விட, ஒவ்வொருவரும் தத்தமது அறைக்குள் முடங்கி விட, பிரகாஷ் தான் கடைசி அறையை புக் செய்து இருந்த ராமை தேடி திரிந்தான்.
அங்கே இருக்கும் பையனோ, "அவர் அருவில குளிக்க போனார். அப்படியே மடத்துக்கு போய் இருப்பாருன்னு தோணுது" என்று சொல்ல, அவனும், "சரி வரட்டும், நான் சொன்ன போல சாருக்கு சாப்பாடு டைமுக்கு கொடுக்கணும்" என்று சொல்ல, அவனும் சம்மதமாக தலையாட்டி விட்டு அவர்களுக்கு சமைப்பதற்காக மடத்தை நோக்கி சென்றான்.
அந்த பையன் நடசேனோ சற்று தொலைவில் இருக்கும் ஊரில் தான் இருப்பவன். இந்த காட்டேஜ் மற்றும் மடத்தை கவனித்துக் கொள்ளும் பொருட்டு அவனை இங்கே வேலைக்கு அமர்த்தி இருந்தார் இந்த மடத்துக்கு பொறுப்பான பெரியவர். அவனும் வருபவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு, அவர்கள் கேட்பதை செய்து கொடுத்து விடுவான்.
யாரும் வராத நாட்களில் ஊருக்கு கிளம்பி குடும்பத்தை பார்த்து விட்டு வருபவனுக்கு இது தான் வயிற்றுப் பிழைப்புக்கான தொழில். மின்சாரம் இல்லாத அந்த இடத்தில், அந்த கொட்டகையிலும் மடத்திலும் இருந்தது என்னவோ அரிக்கன் விளக்கு தான். யுவராஜ்ஜோ அங்கே இருந்த குளியறைக்குள் நுழைந்தவன், முகத்தினை சுளித்துக் கொண்டு தான் குளித்து இருந்தான்.
அவளுமே அவனை தொடர்ந்து குளித்து விட்டு உள்ளேயே வைத்து உடை மாற்றி விட்டு வர, அவர்களது அறைக் கதவு தட்டப்பட்டது. யுவராஜ் அணிந்து இருந்தது என்னவோ இடையில் சின்ன ஷார்ட்ஸ் மட்டுமே. குளித்து விட்டு வந்தவளோ, "இத நாம இனி டெய்லி வேற பார்க்கணுமா?" என்று சலிப்பாக நினைத்துக் கொண்டே பூந்துவாளையை அங்கே இருந்த நாற்காலியில் விரித்து காய போட்டவள், கழுவிய உடைகளையும் காய போட்டு இருந்தாள்.
அவனுடன் கூட அன்னியோன்யமாக வாழ்ந்து இராதவளுக்கு அவன் இருக்கும் அறையில் உடைகளை காயப்போடுவது என்னவோ உச்சகட்ட சங்கடம் தான். ஆனாலும் அவளுக்கும் வேறு வழி இல்லை அல்லவா? இதே சமயம் கதவை திறந்த யுவராஜிடம் இரு உணவு தட்டுகளை நீட்டி இருந்தான் சமைத்து வந்த பையன். அவனோ அதனை வாங்கிக் கொண்டே கதவை அடைத்தவன், "ம்ம் சாப்பிடு" என்று சொல்லிக் கொண்டே, அங்கே இருந்த கட்டிலில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.
சாப்பாட்டில் ஒரு வாயை வைத்து விட்டே, "ம்ம் சூப்பரா சமைச்சு இருக்கான் அந்த பையன்" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட, அவளும் மௌனமாகவே ஓரமாக இருந்த நாற்காலியில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்து இருந்தாள். சாப்பிட்டுக் கொண்டு இருந்தவளுக்கோ குழந்தையின் நினைவே சூழ்ந்து வர, அவள் மார்பின் பால் சுரக்க ஆரம்பிக்க, ஆடையோ ஈரமாக ஆரம்பித்து இருந்தது.
இப்படியாக ஏதும் நடக்கும் என்று தெரிந்து தான் அவள் பாலை உறிஞ்சக் கூடிய உபகரணம் எடுத்து வந்து இருந்தாள். அவசரமாக சாப்பிட்டு முடித்தவளோ கையையும் வேகமாக கழுவி விட்டு தனது கைப்பையினுள் துழாவினாள், அவளது பதட்டத்தை பார்த்தவன், "என்னாச்சு?" என்று கேட்க, அவளும் எங்கனம் கூறுவாள்? அவனிடம் தான் அவள் வெளிப்படையாக பேசியதே இல்லையே.
"ஒண்ணும் இல்ல" என்று சொல்லிக் கொண்டே உபகரணத்தை எடுத்தவளோ குளியலறைக்குள் நுழைய, அவள் கொண்டு சென்ற உபகரணத்தை கூர்ந்து பார்த்தவன், "ஊப்" என்று இதழ் குவித்து ஊதி விட்டு சாப்பிட ஆரம்பித்து இருந்தான். அவளுக்கோ குளியறைக்குள் சென்ற பிறகே மார்பின் சுமை குறைந்த உணர்வு.
அவளுக்கோ கண்களில் இருந்து குழந்தையை நினைத்து கண்ணீர் பெருக, அவனுக்கு தெரிந்தால் திட்டுவான் என்று பயந்து கண்களை துடைத்து விட்டு வெளியே வந்தவள், மீண்டும் அதனை கைப்பைக்குள் வைத்து இருந்தாள். அவனோ அவளை ஒரு கணம் பார்த்தான் தவிர எதுவுமே பேசவே இல்லை.
சாப்பிட்டு முடிந்த பிறகும் இருவரிடத்திலும் மௌனம் மட்டுமே தொடர, அவனோ கட்டிலில் படுத்தவனுக்கு அவளை கீழே படுக்க சொல்ல மனசாட்சி இடம் கொடுக்கவே இல்லை. கட்டிலிலேயே அப்படி குளிராக இருக்க, எங்கே தூங்குவது என்று தெரியாமல் திண்டாடியவளிடம், "பக்கத்தில வந்து படு" என்று சொல்லி விட்டு அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொள்ள, அவளும் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.
இதே சமயம், சாப்பிட்டு முடிந்த பிரகாஷோ முருகனை அழைத்துக் கொண்டு தட்டியது என்னவோ ராம் இருந்த அறையை தான். அறைக் கதவை திறந்து விளக்கின் வெளிச்சத்தில் அவர்களை பார்த்த ராம், "நீங்க" என்று இழுக்க, பிரகாஷோ, "நான் டைரக்டர், என்னோட பெயர் பிரகாஷ், இந்த ராஜா ராணியோட வரலாற்றை தெரிஞ்சுக்க வந்தோம், இங்க ரூம் போதாம இருக்கு, உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா இவரை இங்க தங்க வச்சுக்க முடியுமா?" என்று கேட்க,
முருகனை பார்த்த ராம், "கண்டிப்பா இங்கயே இருக்கலாம், எனக்கும் இந்த வரலாற்றை அறிய ரொம்ப ஆசை, ஆனா தனியா காட்டுக்குள்ள போறதுக்கு பயம், நீங்க போறீங்கன்னா நானும் வரவா?" என்று கேட்க, பிரகாஷோ, "தாராளமா வரலாம், உங்க பெயர்?" என்று கேட்க, அவனோ, "ராம்" என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்டவனோ, "வாங்க" என்று முருகனை உள்ளே அழைத்து பேச ஆரம்பித்தவன் அவருடன் நட்பாகி போனான்.
ராம் மற்றும் நந்திதாவின் சந்திப்பு அடுத்த அத்தியாயத்தில்…