அத்தியாயம் 25
அனைவருமே அதிர்ந்து வாயில் கையை வைத்துக் கொண்டார்கள்...வேதவல்லியோ கண்கள் வெளியே விழுந்து விடும் அளவுக்கு விழிகளை அதிர்ந்து விரித்துக் கொள்ள, இப்போது கல்யாணியை பார்த்த வசந்தி, "பணம் எங்க?" என்று அழுத்தமாக கேட்டார்...
கன்னத்தை பொத்தியபடி அவரைப் பார்த்த கல்யாணிக்கோ கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய, "பாட்டியோட அலுமாரிக்குள்ள இருக்கு... அன்னைக்கு தேன்மொழியை மாட்டி விடணும்னு அப்படி பண்ணிட்டோம்" என்று விம்மி விம்மி அழுதபடி சாட்சி சொல்ல, வேதவல்லியின் முகத்தில் ஈயாடவில்லை...
குருமூர்த்திக்கோ அதிர்ச்சி தாங்க முடியவில்லை...
இப்படி ஒரு அவதாரத்தை அவர் தாயிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை...
அருவருப்பாக இருந்தது...
"என்னம்மா பண்ணி இருக்கீங்க?" என்று அதட்டலாக வேதவல்லியிடம் கேட்க, அவருக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியவில்லை...
கல்யாணி வேறு சாட்சியாகி விட்டாள். இதற்கு மேல் மறைக்கவும் முடியாது...
"இப்போ எதுக்கு கொலை குத்தம் பண்ணுன போல எல்லாரும் என்ன கேள்வி கேக்கிறீங்க?" என்று எகிறினார்...
குருமூர்த்தியோ வேதவல்லியைப் பார்த்து சலிப்பாக தலையை ஆட்டி விட்டு, "கல்யாணி பணத்தை எடுத்து வா" என்று சொல்ல, கல்யாணி வேகமாக வேதவல்லியின் அறைக்குள் நுழைந்தாள்...
வம்சி கிருஷ்ணாவின் விழிகளோ வசந்தியை பெருமையாக நோக்க, வசந்தியோ தேன்மொழியை மென் புன்னகையுடன் நோக்க, அவளோ இரு கரங்கள் கூப்பி கண்ணீருடன் நன்றி சொன்னாள்.
இதே சமயம் கெளதம் கிருஷ்ணா, "அம்மா கமான்" என்று சொல்லிக் கொண்டே விசில் அடிக்க, அவன் அருகே நின்ற குருமூர்த்தி அவனை சட்டென திரும்பி பார்க்க, "அப்ரிஷியேட் பண்ணுனேன்பா, தப்பா?" என்று கேட்டான்...
"நான் தப்புன்னு சொல்லவே இல்லையே" என்று அவர் சொல்ல, "அதானே பார்த்தேன், ஆசை பொண்டாட்டியை விட்டு கொடுப்பீங்களா?" என்று கேட்க, அவரோ அவனை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு, "இதெல்லாம் உனக்கு இப்போ தேவையா?" என்று கேட்டார்...
இதே சமயம் கல்யாணியும் பணத்தை எடுத்துக் கொண்டு வந்து குருமூர்த்தியிடம் நீட்ட, அவரோ அதனை வாங்கிக் கொண்டே நேரே தேன்மொழியிடம் சென்றவர் அந்த பணத்தை நீட்டி, "அன்னைக்கு பணத்தை கடனா கொடுத்ததுக்கு நன்றிம்மா, இன்னைக்கு திரும்ப கொடுத்துடுறேன்" என்றார்...
அவளுக்கோ அழுகையுடன் அவர் பேசிய தோரணையில் சிரிப்பு வந்து விட, மென்மையாக புன்னகைத்துக் கொண்டே, அவர் நீட்டிய பணத்தை பெற்றுக் கொள்ள, "ஐ ஆம் சாரி" என்றார்.
அவளோ அவசரமாக "பரவாயில்லை மாமா" என்று சைகையில் சொல்ல, "உன் நல்ல மனசுக்கு ரொம்ப நல்லா இருப்ப" என்று அவர் சொல்லி விட்டு செல்ல, வம்சி கிருஷ்ணாவோ அவரை புன்னகையுடன் பார்த்துக் கொண்டான்...
வேதவல்லிக்கோ மனம் உலையாக கொதித்தது...
முழு கோபமும் வசந்தி மேல் தான்...
"உனக்கு இவ்ளோ தைரியம் எங்க இருந்து வந்திச்சு?" என்று பற்களை கடித்துக் கொண்டே, அருகே நின்றவருக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்க, அவரை அழுத்தமாக பார்த்த வசந்தியோ, "எனக்கு இவ்ளோ நாள் உங்க மேல இருந்தது மரியாதை... அதுக்கு பேர் பயம் இல்ல" என்று சொன்னவரோ இப்போது கௌதம் கிருஷ்ணாவை திரும்பிப் பார்த்துக் கொண்டே, "மியூசிக் டைரெக்டர் ஜெய் பாட சொல்லி கேட்டார்ன்னு சொன்ன தானே... ஓகே சொன்னேன்னு சொல்லிடு" என்றார்...
"ஓஹ் மை காட்" என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டே, வம்சி கிருஷ்ணா கைகளை தட்டிக் கொள்ள, கௌதம் கிருஷ்ணாவோ சந்தோஷமாக, "இப்போவே சொல்லிடுறேன்" என்றபடி அலைபேசியை எடுக்க, குருமூர்த்தி அவரை வியப்பாக பார்த்தார்...
உடனே குருமூர்த்தியை பார்த்த வசந்தியோ, "நீங்க இப்போ ப்ரொடியூஸ் பண்ணுற படத்துல எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்குமா?" என்று கேட்க, அவரோ புருவத்தை ஏற்றி இறக்கியவர், "ஒஃப் கோர்ஸ், உனக்கு இல்லாத சான்ஸா?" என்று கேட்க, "அதென்ன கிடைக்குமான்னு கேக்கிறீங்க? கொடுங்கன்னு கொஞ்சம் உரிமையா கேக்கிறது" என்றான் வம்சி கிருஷ்ணா...
குருமூர்த்தியோ, "ஆனா ஒரு கண்டிஷன், வம்சி தான் உன் கூட டூயட் பாடுவான்" என்று சொல்ல, வம்சி கிருஷ்ணாவோ, "நான் ரெடி" என்றான் தோள்களை உலுக்கி...
"நானும் ரெடி" என்று வசந்தி சிரித்தபடி சொல்லிக் கொள்ள, அனைவர் இதழ்களிலும் சிரிப்பு தேங்கி நிற்க, அனைத்தையும் கடுப்பாக அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தது என்னவோ வேதவல்லி தான்...
மனதிற்குள் புகைந்தாலும் அவரால் பேச முடியாத நிலையில் வயிறெரிய அமர்ந்து இருந்தார்...
அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து கலைந்து இருக்க, தேன்மொழியோ வம்சி கிருஷ்ணாவை திரும்பிப் பார்த்தாள்.
"இங்கயே நிற்கலாம்ல" என்றான் அவன்...
அவளிடம் இருந்து ஒரு மென்மையான புன்னகை மட்டுமே...
சட்டென அவள் கையைப் பற்றியவன் அவளை அழைத்துக் கொண்டே, மீண்டும் மாடியேற அவர்களை தொடர்ந்து குரலை செருமிக் கொண்டே கெளதம் கிருஷ்ணா பின் தொடர, தேன்மொழியோ வெட்கத்துடன் கண்களை மூடித் திறந்து கொண்டே, வம்சி கிருஷ்ணாவுடன் கூட நடந்தாள்...
இதே சமயம் வீட்டிற்கு வந்த கல்யாணியோ கட்டிலில் அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.
அவள் சத்தம் போட்டு அழுததில் ரதிதேவி, கணேசன் மற்றும் மிருதுளா அவள் அறைக்குள் ஓடி வந்து விட்டார்கள்...
அவள் கன்னமோ சிவந்து இருக்க, "என்னாச்சு கல்யாணி?" என்று கேட்டுக் கொண்டே, ரதிதேவி அவள் அருகே அமர, "அம்மா இந்த பாட்டி பேச்சை கேட்டு தப்பு பண்ணிட்டேன்... ஒரே அசிங்கமா போய்டுச்சு... அத்தை அடிச்சுட்டாங்க" என்று ஆரம்பித்தவள் நடந்த அனைத்தையும் சொல்ல, கணேஷன், "உன் அம்மா இவளையும் கெடுக்கிறாங்க... இனி அவங்க கூட இங்க இருக்கிற யாரும் பேசக் கூடாது" என்று ரதிதேவியிடம் சொல்லி திட்டினார்...
ரதிதேவிக்கும் என்ன செய்வது என்று தெரியவே இல்லை...
அவர் தவறு செய்து இருக்கும் போது தாயாக இருந்தாலும் எப்படி அவர் பக்கம் நிற்க முடியும்?
மிருதுளாவோ, "அது தான் வம்சி மாமாவுக்கு கல்யாணம் ஆய்டுச்சுல்ல, இப்படி கல்யாணம் ஆனவர் பின்னாடி போறது அசிங்கமா இருக்குடி" என்று திட்ட, கல்யாணியோ, "இனி அந்த வீட்ல போய் நான் எப்படி வாழ முடியும்?" என்று அழுதபடி கேட்டவள், "அப்பா எனக்கு மாப்பிள்ளை பாருங்கப்பா, வம்சி மாமாவை விட ஹாண்ட்ஸம் ஆஹ் இருக்கணும்" என்று சட்டென மாறியே விட்டாள்.
அவள் பேசியதைக் கேட்டு மூவருக்கும் அதிர்ச்சி... மாறி மாறி பார்த்துக் கொண்டார்கள்...
"இந்த அறிவு ஏற்கனவே வந்து இருந்தா இந்த அசிங்கம் நடந்து இருக்குமா?" என்று மிருதுளா கேட்க, ரதிதேவியோ, "அதுக்கு வசந்தி ஏற்கனவே ஒரு அறை போட்டு இருக்கணும்... ஒரு அறைல இவ இப்படி மாறுவான்னு தெரிஞ்சு இருந்தா அப்போவே வசந்தியை வச்சு அடிக்க வச்சு இருப்பேனே" என்று சொல்ல, கண்களை துடைத்து விட்டு அவரை முறைத்துப் பார்த்தாள் கல்யாணி...
கணேஷனோ, "ரதி, அவ தான் அப்செட் ஆஹ் இருக்கா... நீயும் ஏன் அவளை கடுப்பேத்துற போலவே பேசுற? இவ வேலையால நம்ம ரெண்டு குடும்பத்து உறவும் பாதிக்கப்பட்டுடுமோன்னு எனக்கு பயமா இருக்கு" என்றார்.
ரதிதேவியோ, "அவ்ளோ எல்லாம் அண்ணா பண்ண மாட்டார்... ரெண்டு நாள் ஃப்ரீயா விடுங்க, நான் போய் அவங்க வீட்ல பேசுறேன்" என்று சொல்ல, "உன் அம்மா கிட்ட மட்டும் பேசிடாதே" என்று கண்டிப்பாக வந்தது கணேஷனின் வார்த்தைகள்...
இதே சமயம், தேன்மொழியோ அறையின் மூலையில் நின்றபடி மகாலக்ஷ்மிக்கு விஷயத்தை மெசேஜில் சொல்லி முடித்து இருக்க, "ரொம்ப சந்தோஷம் டா" என்று பதில் மறுமுனையில் இருந்து வந்தது... அவள் இதழ்களோ மெதுவாக புன்னகைக்க, தொலைபேசியை அங்கிருந்த மேசையில் வைத்து விட்டு இப்போது வம்சி கிருஷ்ணாவை பார்த்தாள்.
அவனோ சோஃபாவில் அமர்ந்து அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான்...
அவள் தன்னை பார்த்ததுமே, கண்களால் அழைத்தான்...
அவளும் அவனை நோக்கி நடந்து வர, அருகே இருந்த இடத்தை கண்களால் காட்டி அமர சொன்னான்...
அவளும் அவனுடன் தொட்டும் தொடாமல் அமர, அவனோ அவள் கரத்தை பற்றிக் கொண்டே பெருமூச்சு ஒன்றை விட்டவன், "இன்னைக்கே வாழ ஆரம்பிச்சுடலாமா?" என்று கேட்டான்...
அதிர்ந்து விட்டாள்.
வெளிப்படையாகவே கேட்டு விட்டான், என்ன பதில் சொல்வது என்று தெரியவே இல்லை...
இதெல்லாம் தன்னிடம் கேட்க தானா வேண்டும்? என்று தான் அவளுக்கு தோன்றியது...
அவனை பார்த்துக் கொண்டு இருந்தவளோ சட்டென்று தலையை குனிந்து கொள்ள, "சொல்லும்மா" என்றான் அவள் காதருகே குனிந்து...
அவன் மூச்சு காற்று அவள் செவியில் பட விதிர் விதிர்த்துப் போனவளோ, குனிந்தபடியே தலையை சம்மதமாக ஆட்டினாள்...
அவனை ஏறிட்டுப் பார்க்க அவளுக்கு தெம்பில்லை...
அவன் வெட்கத்தை ரசனையாக பார்த்தவன், "லெட்டர் ல அவ்ளோ எழுதுற... நேர்ல கேள்வி கேட்டா குனிஞ்சுக்கிற" என்றான்...
சட்டென ஏறிட்டு அவன் விழிகளைப் பார்த்தவளோ, "நேர்ல கூச்சமா இருக்கு" என்று சைகையில் சொல்ல, அவனோ இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, "பழகிடும்" என்று கண் சிமிட்டி சொல்ல, அந்த கண் சிமிட்டலில் தன்னை தொலைத்தே விட்டாள்.
கற்பனையில் அவனுடன் வாழ்ந்து இருக்கின்றாள்... நேரில் அவனை அருகே பார்த்தாலே மூச்சடைத்து விடுகின்றதே... ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டாள்.
அவன் தனது விரல்களை அவள் விரல்களுடன் கோர்த்துக் கொண்டவனுக்கு, அவளை முத்தமிட ஆசை...
ஆனால் அவளோ கேள்விக்கு பதில் சொல்லவே தயங்குகின்றாளே...
குரலை செருமினான்...
நிமிர்ந்து பார்த்தாள்.
"கதவு லாக் பண்ணி தான் இருக்கு... நாம ரெண்டு பேரும் தான் இருக்கோம்" என்றான்...
அவளோ அவனை புருவம் சுருக்கி புரியாமல் பார்க்க, இனி அவளுக்கு பேசி புரிய வைக்க முடியாது, நேரடியாக செயலில் இறங்கி விடுவது நல்லது என்று நினைத்தவனோ, ஒற்றைக் கையால் அவள் கன்னத்தைப் பற்றிக் கொண்டே, அவள் முகத்தை நெருங்க, அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொண்டன...
தன்னிதழை ஈரமாக்கிக் கொண்டே, அவள் கன்னம் நோக்கி குனிந்தான்.
அவளுக்கோ மேனியில் சிலிர்ப்பு...
இருவரின் இதயத்துடிப்பும் அடுத்தவருக்கு கேட்கும் அளவுக்கு நெருக்கம்...
சட்டென அவன் ஷேர்ட் காலரைப் பற்றிக் கொண்டாள்... கண்களை மூடிக் கொண்டாள்.
அவளது கன்னத்தில் அவன் முத்தமிட்டு நிமிர, மெதுவாக கண்களை திறந்தவள் அப்போது தான் அவன் ஷேர்ட் காலரை தான் பற்றி இருப்பதை அவதானித்தாள்...
சட்டென கையை அவனிடம் இருந்து விலக்கிக் கொண்டவளோ, அவனது ஷேர்ட்டானது அவள் அழுத்தமாக பற்றி இருந்ததால் கசங்கி இருந்ததை விழி விரித்துப் பார்த்தாள்... அவனோ சற்று குனிந்து பார்த்து விட்டு, "தட்ஸ் ஓகே" என்று சொல்லிக் கொண்டே, அவளது இரு கைகளையும் பற்றி தனது ஷேர்ட்டில் அழுத்தமாக வைத்தவன், மீண்டும் அவள் கன்னத்தைப் பற்றிக் கொள்ள, அவளுக்கோ அடி வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பித்து விட்டது...
கண்களை மூடிக் கொண்டாள்...
அவன் இதழ்கள் அவளது அடுத்த கன்னத்தை தீண்ட, ஆழ்ந்து மூச்சொன்றை விட்டுக் கொண்டாள்.
அவனுக்கோ அவள் கன்னங்கள் போதையை ஏற்ற, அதில் முத்த ஊர்வலங்களை நடத்தியவன், அப்படியே கீழிறங்கி அவள் இதழ்களை நெருங்கி இருந்தான்...
அவள் இதழ்கள் மெதுவாக விரிந்து இருக்க, அதனை ஆழ்ந்து பார்த்தான்...
அவனிடம் இருந்து மௌனமே பதிலாக இருக்க, சட்டென கண்களை திறந்தாள்...
அவள் கண்களை திறந்த அடுத்த நொடி, அவள் இதழ்களில் அவன் இதழ்களை அழுந்த பதித்து இருக்க, சிலிர்த்து விட்டது பெண்ணவளுக்கு... கண்களை இறுக மூடிக் கொண்டவளுக்கு உடலில் உணர்வுகள் அலைபாய ஆரம்பித்து விட்டன...
அவள் உடல் நடுங்கி அதனை அவனுக்கு காட்டிக் கொடுத்ததும் விட்டது... அவன் மேனியில் மொத்தமாக சரிந்து கொண்டாள்.
அவள் கரங்களோ அவன் ஷேர்ட்டை இன்னும் அழுந்த பற்றிக் கொண்டன...
அவளுக்கு மட்டும் அல்ல, அவனுக்கும் இந்த நிலை தான்...
அவளை விட்டு விலக மனம் இல்லை...
இதயங்களுடன் சேர்த்து, முத்தங்களையும் அணைப்புகளையும் மேனிகளையும் பகிர்ந்து கொள்வது தானே காதல்...
ஒரு பெண்ணின் இதழ்களின் மென்மையை அவனும் ஒரு ஆணின் இதழ்களின் வன்மையை அவளும் உணர்ந்து கொள்ளும் முதல் முத்த அனுபவம்...
மென்மையும் வன்மையும் கலந்த முத்தம்...
இந்த முத்தம் நின்று விடக் கூடாது என்கின்ற ஆசை இருவர் மனதிலும்...
ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை... கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது...
சட்டென அவனில் இருந்து விலகிக் கொண்ட பெண்ணவளோ, அவனை விழி விரித்து பார்த்து விட்டு வாசல் கதவைப் பார்த்தாள்.
வம்சி கிருஷ்ணா உண்மையாகவே கடுப்பாகி விட்டான்...
இப்படியான ஏகாந்த நிலையை கரடி போல யார் குழப்புவது என்கின்ற கடுப்பு...
அவனது சிலிர்த்த மேனியில் இருந்து இன்னுமே உணர்வுகள் அடங்க மறுத்தன...
அழுந்த தலையை கோதிக் கொண்டே, நடந்து சென்று கதவை திறக்க போனவன், சட்டென திரும்பி தேன்மொழியைப் பார்க்க, அவளோ இன்னுமே உணர்வுகளில் இருந்து வெளிவர முடியாமல் கைகளை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தவள் இதழ்களை பின்னங்கையால் துடைத்துக் கொண்டே, அவனை ஏறிட்டுப் பார்த்தாள்...
அவனோ இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகையுடன், "நீயே காட்டி கொடுத்துடுவம்மா" என்று சொல்ல, அவளோ கன்னங்கள் சிவக்க தலையை குனிந்து கொண்டாள்.
வம்சி கிருஷ்ணா கதவை திறக்க வாசலில் நின்றது என்னவோ கெளதம் கிருஷ்ணா தான்... அவனோ, "உங்கள நான் ஒண்ணும் டிஸ்டர்ப் பண்ணலயே" என்று கேட்க, அவனை மேலிருந்து கீழ் பார்த்த வம்சி கிருஷ்ணாவோ வலுக்கட்டயமாக சிரித்தபடி பற்களை கடித்துக் கொண்டே, "இல்ல" என்றான்...
கெளதம் கிருஷ்ணாவோ, "அப்பாடா இப்போ தான் நிம்மதியா இருக்கு, எங்க என்னை கரடின்னு சொல்லிடுவியோன்னு பயந்துட்டேன்" என்றான்...
"உன்னை போய் கரடின்னு சொல்வேனா?" என்று ஒரு கேலியுடன் வந்தது வம்சி கிருஷ்ணாவின் வார்த்தைகள்...
"உன் மாடியூலேக்ஷனே சரி இல்ல, அத விடு ஸ்விம் பண்ணலாம் வாடா" என்றான்...
"இப்போவா?" என்று கேட்டான் வம்சி கிருஷ்ணா...
"ம்ம், யாதவ்வும் ஸ்விம் பண்ண ஆசைப்படுறான்... நிறைய நாளைக்கு அப்புறம் இன்னைக்கு தான் நம்ம வீடு கொஞ்சம் நிம்மதியா இருக்கு... என்ஜாய் பண்ணலாமே" என்றான்...
"ஓகே ஃபைன்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே யாதவ் கிருஷ்ணாவும் நீச்சல் தடாகத்துக்கு செல்ல தயாராகி வந்து விட்டான்.
நீச்சல் தடாகம் அவர்கள் வீட்டுடன் தான் இருந்தது...
"ஓகே நாங்க ஸ்விம்மிங்பூல் கிட்ட போறோம், வந்திடு" என்று சொல்லிக் கொண்டே அவர்கள் செல்ல, கதவை மூடிய வம்சி கிருஷ்ணாவோ, "ஸ்விம் பண்ண வர்றியா?" என்று கேட்டான் தேன்மொழியிடம்...
அவளோ அவசரமாக இல்லை என்று தலையாட்ட, "சரி பார்த்துட்டு இருக்கலாம்ல, தனியா இருந்து என்ன பண்ண போற?" என்று கேட்க, அவளும் சம்மதமாக தலையாட்டிக் கொண்டே வெளியேற, "ஹேய் இரும்மா நானும் வரேன்" என்றான் அவன் ஷேர்ட்டின் பட்டன்களை கழட்டிக் கொண்டே...
அவளோ, "நீங்க ட்ரெஸ் மாத்தணும்ல" என்று சைகையில் சொல்ல, அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "சரி நீ வெளிய வெய்ட் பண்ணு, நான் வந்திடுறேன், இன்னைக்கு மட்டும் தான் வெளியே நிற்பேன்னு நம்புறேன்" என்று சொல்ல, அவள் விழிகள் சட்டென விரிய, அவன் சொன்னதை புரிந்து கொண்டவள் வேகமாக வெளியேறி அங்கிருந்த சுவரில் சாய்ந்து கொண்டாள்.
அவளுக்கோ அவன் சில்மிஷ பேச்சுக்களில் மூச்சு வாங்க, ஆழ்ந்த மூச்சுக்களை வெளிவிட்டுக் கொண்டாள்.