ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தக் லைஃப்- Thug life கதை திரி

Status
Not open for further replies.

Vilacini

Well-known member
Wonderland writer

திரை 6

''என்னடி இதெல்லாம்...குடும்ப மானத்தை வாங்குறதுக்குன்னே இப்படி பண்ணுறியா?'' என்றபடி விறு விறுவென அவள் அருகே சென்றவர் மேசை மீதிருந்த நாளிதழை தூக்கி காட்டினார்.​

"எதுக்கு இப்படி ஓவர் ரியாக்ட் பண்ணுறீங்க? இதெல்லாம் வெறும் ரூமெர்ஸ் அவ்வளவு தான்" என்றாள் சலிப்பாக.​

"ரூமெர்ஸ்ன்னு நீ சொல்லுற. ஆனால், பத்திரிகை வேற சொல்லுதே" என்றார்.​

சட்டெனெ சோபாவிலிருந்து எழுந்துக்கொண்ட துஷாரா "உண்மையா இருக்குமோன்னு உங்களுக்கு சந்தேகமா?" என்றாள் அன்னையின் விழிகளை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே.​

"ம்பச், சந்தேகமில்லடி. உன்ன பத்தி எனக்கு தெரியும். ஆனால், ஊருக்கு தெரியாதே? சின்ன விஷயம் ஒன்னு கிடைச்சிட்டா போதும் மொட்டை மண்டைக்கு சடை பிண்ணி பூ வச்சு ஜோடிச்சிடுவாங்க. பேரு கெட்டு போயிடும் டி" என்றார் அன்புச்செல்வி.​

"ஐ டோன்ட் கெயர். ஊருக்காக நான் வாழுறதில்லை" என்றாள் மகள் வெடுக்கென்று.​

"என்ன பேச்சு டி பேசுற? எதுக்கெடுத்தாலும் எல்லோரையும் எடுத்தெறிஞ்சு பேசுறது. நேரங்காலம் இல்லாம ஊரை சுத்திட்டு வீட்டுக்கு வரது..." என்று அவர் சொல்லிக்கொண்டே போக அவரை சட்டென்று இடைமறைத்தவள் "ஊரை சுத்திட்டு இல்லை, வேலை பார்த்துட்டு..." என்று திருத்தினாள்.​

அவளை முறைத்து பார்த்த அன்புச்செல்வியோ " எனக்கு ரெண்டும் ஒன்னு தான். நீ பண்ணுற வேலை எல்லாம் குடும்பத்து பொண்ணுங்க பண்ணுற வேலையா. இதுல கண்ட கண்ட வதந்தி எல்லாம் வேற வந்து தொலையுது" என்றார் ஆதங்கமாக.​

அவரை அழுத்தமாக பார்த்தவள் "சொந்தக்காலில் நின்னு சாதிக்கணும்னு நினைக்குறதும் குடும்பத்து பொண்ணுங்க பண்ணுற வேலை தான்" என்றாள்.​

"போதும் துஷாரா..." என்று முகம் சிவக்க மகளிடம் சீறிய அன்புச்செல்வியின் அருகே வந்த தீனதயாளனோ "சரி விடு, அவள் என்ன சின்ன பிள்ளையா? அவள் என்ன செய்யுறான்னு அவளுக்கு தெரியும். அவள் பார்த்துப்பா. நீ எதுக்கு டென்ஷனாகுற?" என்றார்.​

"எல்லாம் நீங்க கொடுக்குற இடம் தான். அதுதான் இப்படி கடிவாளம் இல்லாத குதிரை மாதிரி கண்ட மேனிக்கு திரியுறா" என்று அதற்கும் பொறிந்து தான் தள்ளினார் அன்புச்செல்வி.​

துஷாராவுக்கு நல்ல காலத்திலேயே ஓரளவுக்கு தான் பொறுமை இருக்கும். அதில் அன்புச்செல்வியின் பேச்சில் அது மொத்தமும் காற்றில் கரைந்து போயிற்று.​

"நான் ஒன்னும் கண்டமேனிக்கு திரியல. வேலை பார்க்குறேன். எனக்கு பிடிச்ச வேலையை செய்யுறேன் அவ்வளவு தான். உங்களுக்கு பிடிகலங்குற ஒரே காரணத்துக்காக நான் செய்யிற வேலையை குறை சொல்லாதீங்கம்மா. இதுவே நான் ஒரு பையனா இருந்தா என்னை பார்த்து பெருமைப் பட்டிருப்பிங்க தானே. பொண்ணுனதும் எல்லாமே தப்பா தெரியுதா? அப்போ தப்பு என் மேல இல்லை. உங்க பார்வையில தான்" என்று பட்டாசாய் வெடித்தாள்.​

"ம்ம்ம்...பேசு...நல்லா பேசு. உன்னை பத்து மாசம் சுமந்து பெத்தேன்ல நீ இப்படி தான் பேசுவ. பொம்பளை பிள்ளையா அடக்கமா இல்லாமல் இப்படியே திரிஞ்சிட்டிருந்தா உன்னை எவன் டி கட்டிப்பான்? அதுவும் உன்னை பத்தி வர வந்திக்கெல்லாம் எவனாவது கட்டிக்கிறேன்னு வந்தாலும் அவன் நல்லவனா இருப்பானா?" என்று வழக்கமான தாய்குலத்தின் புலம்பலில் வந்து நின்றார்.​

துஷாராவிற்கு கடுப்பாகிவிட்டது.​

அவளுக்கு தெரியும் அங்கே சுற்றி இங்கே சுற்றி இறுதியில் அன்புச்செல்வி இந்த விடயத்தில் தான் வந்து நிற்பார் என்று. அவரை பொறுத்தவரை பெண் பிள்ளைகளுக்கு கல்யாணம் என்பது தான் வாழ்வின் இலக்கு.​

இத்தனைக்கும் அன்புச்செல்வி நன்கு படித்து பட்டம் பெற்றவர்தான். ஆனால், திருமணத்திற்கு பின் குடும்பமே உலகமென்று இருந்துவிட்டதாலோ என்னவோ அவரின் எண்ணங்களும் அதை தாண்டி செல்வதில்லை.​

"என்னை எவனாவது கட்டிக்குறது இருக்கட்டும், முதல்ல நானே எவனையும் கட்டிக்க போறதில்லை. அப்படியே எனக்கு கல்யாணம் பண்ணிக்க தோணுச்சுன்னா நல்லவன் கிடைக்கலன்னா ஒரு வில்லனை கட்டிக்குறேன் போதுமா" என்று சொன்னவள் "நான் கிளம்புறேன் ப்பா ஷூட்டிங் இருக்கு" என்று சொல்லிக்கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்.​

"திமிர் பிடிச்சவ...எப்படி பேசிட்டு போறா பாருங்க" என்று அன்புச்செல்வி வாய்விட்டே திட்டியிருக்க அது வாசல் வரை சென்று விட்ட துஷாராவின் காதிலும் விழுந்தது.​

அவள் வாசலை அடைந்திருக்க அப்பொழுதுதான் உள்ளே நுழைந்திருந்தாள் அழகிய மங்கை ஒருத்தி.​

துஷாராவிற்கு கொஞ்சமும் குறையாத அழகிய பாவை. இருவரிடையே ஒரே ஒரு வித்யாசம் மட்டும் தான். அவளிடம் துஷாராவை விட பெண்மையின் மென்மை சற்று அதிகமிருந்தது.​

இளஞ்சிவப்பு நிற சுடிதாரில் கையில் அர்ச்சனை கூடையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.​

அவள் அனிஷா. துஷாராவின் தங்கை.​

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கின்றாள். இன்று விடுமுறை தினமாதலால் காலையிலேயே கோவிலுக்கு சென்று திரும்பியிருந்தாள்.​

அவள் நாகரீக மங்கை தான் என்றாலும் துஷாராவை போல் அழுத்தமானவள் அல்ல.​

துஷாராவை பார்த்ததும் புன்னகைத்தவள் "ஹாய் அக்கா, எப்போ வந்த?" என்று கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைய அவள் கேள்விக்கு பதில் கூட சொல்லாமல் சட்டென்று அவளின் இருத்தோள்களை பற்றி அவளை இழுத்து முன்னிறுத்தி அன்புச்செல்வியிடம் காட்டிய துஷாரா "நீங்க நினைக்குற போல தான் இவள் ஒருத்தி இருக்காளே. உங்க நல்ல மாப்பிள்ளையை தேடி பிடிச்சு இவளுக்கு வேணும்னா கட்டி வையுங்க" என்று சொல்லி விட்டு விறுவிறுவென வெளியேறியிருந்தாள்.​

இப்பொழுது அங்கே நின்றிருந்த தாயை பார்த்த அனிஷா "வழக்கம் போல தானா? அவள் கிட்ட இப்படி சண்டை போடுறதை கொஞ்சம் நிறுத்துங்களேன் மா" என்று சொல்லிக்கொண்டே தாயின் அருகே செல்ல "உன் அக்காவை நிறுத்த சொல்லு, நான் நிறுத்துறேன்" என்றார் அவர்.​

அவர் சொல்லிய தினுசில் அனிஷாவிற்கு சிரிப்பு வந்துவிட இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கிக்கொண்டே "சரி அக்காவை விடுங்க. இந்தாங்க பிரசாதம்" என்று கையிலிருந்த அர்ச்சனை கூடையை தாயிடம் கொடுத்தவள் "பசிக்குதும்மா" என்று இதழ்களை பிதுக்கினாள்.​

அவ்வளவு தான், மூத்தவள் மீதிருந்த கோபம் இளையவளின் பசியில் கலைந்துப்போக அவளை அழைத்துக்கொண்டு சாப்பாட்டு அறையை நோக்கி நடந்தவர் "அச்சோ, துஷாரா சாப்பிட்டாளான்னு தெரியலையே... அதை கூட கேட்காமல் விட்டுட்டேன்" என்று புலம்பிக்கொண்டார்.​

அவரின் கோபமெல்லாம் அவ்வளவு தான். நொடியில் வந்து நொடியில் மறைந்துவிடும். பிள்ளைகள் என்றாலே உருகிவிடுவார்.​

''அக்கா மேல தான் இவ்வளவு அக்கறை இருக்கே. பிறகு எதுக்கு அவள் கிட்ட சண்டைக்கு போறீங்க?" என்றாள் அவரின் புலம்பலை கேட்ட அனிஷா.​

"எனக்கு மட்டும் என்ன அவக்கூட சண்டை போடணும்னு ஆசையா? கிளியை வளர்த்து பாம்பு புத்துக்குள்ள போட்ட மாதிரி ஃபீல் ஆகுது. எப்போ எந்த பாம்பு அவளை கொத்திடுமோன்னு வயித்துல நெருப்பை கட்டிட்டிருக்கேன்...." என்று பொறிந்தார்.​

"அது கிளியை வளர்த்து குரங்கு கையில கொடுக்குறதுன்னு தானே சொல்லுவாங்க" அனிஷா யோசனையாக கேட்க "நக்கல் பண்ணாத..." என்று அவள் கையில் ஒரு அடி வைத்தவர் சற்று நிறுத்தி "பயமா இருக்குடி" என்றார் பாவமாக.​

அவரின் மனம் அனிஷாவிற்கு புரியாமல் இல்லை. ஆனால், துஷாராவை நினைத்து அந்த கவலை அவருக்கு தேவையில்லை என்று தான் தோன்றியது அவளுக்கு.​

"நீங்க தேவையில்லாமல் கவலை படுறிங்களோன்னு தான் எனக்கு தோணுது" என்றாள் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்துக்கொண்டே.​

"என்ன அனிஷா, நீயும் இப்படி பேசுற?" என்ற அன்புச்செல்வியின் குரல் ஆற்றாமையாக ஒலித்தது.​

"யோசிச்சு பாருங்கம்மா...இன்னிக்கு வந்த நியூஸ் பத்தி அவள் கொஞ்சமாவது வருத்தப்பட்டாளா,இல்லை தானே. அது அவளை எந்த விதத்திலையும் பாதிக்கவேயில்லை. நிறுத்தி வைக்கவுமில்லை. இதுவே நானா இருந்திருந்தா இந்நேரம் மூலையில் உட்கார்ந்து அழுதிட்டிருக்க தான் வாய்ப்பு அதிகம். அக்கா ரொம்ப ஸ்ட்ரோங். அவளுக்கு அவளை ஹாண்டில் பண்ணிக்க தெரியும். அதோட அவள் ரொம்பவே கவனமாவும் இருக்குற ஆள். சோ, நீங்க ஒர்ரி பண்ணாதீங்கம்மா" என்றாள் ஆறுதலாக.​

அன்புச்செல்விக்கும் அதுவெல்லாம் புரியாமல் ஒன்றுமில்லை. ஈன்ற தயிற்கே இயற்கையாய் தோன்றும் தவிப்பு அது அவ்வளவு தான்.​

அதில் பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டவர் அனிஷாவிற்கு பரிமாறும் வேலையில் இறங்கிவிட்டார்.​

***​

அங்கே படப்பிடிப்பு தளத்தில் இருந்தான் அமரன். அந்த இடமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது, அடுத்த காட்சிக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. ஒளிப்பதிவு கருவிகள் ஆயுத்த நிலையில் இருந்தன.​

அங்கே இருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான் அவன். கண்களில் கூர்மை, முகம் எப்பொழுதும் போல உணர்வற்றிருந்தது. கைகளில் ஸ்கிரிப்ட் இருக்க அதை புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அமர்ந்திருந்த தோரணையே என்னவோ அந்த இடமே அவனுடையது என்பது போல் கம்பீரமாக இருந்தது.​

அவனருகே ஓடி வந்தான் விஜய் "சார் ஃபோன்" என்றான்.​

அமர் விழிகளை மட்டும் உயர்த்தி பார்க்க "மீரா...காலையிலிருந்து ஓயாமல் கால் பண்ணுறாங்க" என்றான்.​

"பேசு" என்றான்.​

விஜயும் அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட ''யூ அர்ரோகண்ட் பா****ட். என்னை படத்திலிருந்து தூக்க வச்சிட்டல்ல" என்று கெட்ட வார்த்தைகளில் சீறினாள்.​

அவளின் சீற்றத்திற்கு கொஞ்சமும் சம்மந்தமேயில்லாமல் "குட் மோர்னிங் டு யூ டு" என்று மென்மையாக சொன்னான் விஜய்.​

அமரன் இன்னமும் ஸ்க்ரிப்டில் கவனமாய் இருக்க விஜய் தான் பேசினான்.​

அவள் அழைப்பை ஏற்றதும் முகமன்கள் ஏதும் இல்லாமல் நேரே பாய்ந்துக்கொண்டு வந்ததையும் நாசுக்காக குத்திக்காட்டியிருந்தான்.​

அமரனுக்கு பதிலாக விஜய் பேசியது அவளுக்கு மேலும் ஆத்திரத்தை கொடுக்க "அமர் எங்க?" என்று கத்தினாள்.​

விஜய் அமரனை பார்க்க அவனோ இரு விரல்களை மட்டும் நீட்டி அவனையே பேசும் படி சைகை செய்தான்.​

அவனின் குறிப்புணர்ந்து "சார் பிசியா இருக்கார் மேடம். அவர் உங்களை போல ஃப்ரீயா இல்லை. அவருக்கு ஷூட்டிங் இருக்கு" என்றான் விஜய்.​

அவன் குரலில் பவ்யத்துடன் கூடிய நக்கல் ஒன்று தொனித்தது.​

அவமானப்படுத்தபடுகின்றாள் என்று நன்கு உணர்ந்த மீராவிற்கு இன்னமும் ஆத்திரம் மேலிட்டது.​

''உங்க சார் கிட்ட சொல்லு, அவன் ஒரு கவர்ட். ஒரு கோழை மாதிரி என்னை படத்திலிருந்து தூக்க வச்சிருக்கான். என்னை சமாளிக்க தெம்பில்லாமல் இப்படி கேவலமா நடந்துக்குறான். ஒரு பொண்ணை கூட சமாளிக்க முடியாத வில்லன்" என்று அமருக்கு சரமாரியாக திட்டினாள்.​

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அமரின் முகம் இறுக ஒரு ஆழ்ந்த மூச்சுடன் கையிலிருந்த ஸ்க்ரிப்டை மூடி வைத்தான்.​

கண்களை அழுந்த மூடி திறந்தவன் விஜயை பார்த்தான்.​

"அவக்கிட்ட சொல்லு, சமாளிக்க முடியாமல் படத்திலிருந்து தூக்கல, சமளிக்குற அளவுக்கு அவள் ஒர்த் இல்லை... அண்ட் என் கிட்ட பேசும் போது யோசிச்சு பேசணும். 'ஜஸ்ட் வில்லன் தானேன்னு’ சொன்னதுக்கே ஒரு படம் போயிடுச்சு. இன்னும் அதிகம் பேசுனா இண்டஸ்ட்ரியிலேயே இல்லாமல் போயிடுவான்னு சொல்லு" என்றவனின் குரல் பனிப்பாறையென இறுகி இருந்தது.​

அலைபேசி ஸ்பீக்கரில் தான் இருந்தது அமர் சொல்லியதே அவளுக்கு கேட்டிருக்கும் இருந்தாலும் விஜய் மீண்டும் அவன் சொல்லியதை வார்த்தை பிசகாமல் ஒப்பித்தான்.​

மீராவிற்கு அவமானத்தில் உள்ளுக்குள் கொதிக்க "என்னவோ நீதான் இந்த இண்டஸ்ட்ரிக்கே ஹீரோ மாதிரி பேசிட்டிருக்க அமர். நீ வெறும் வில்லன் மட்டும் தான் நியாபகம் வச்சுக்கோ. என்னை இந்த ஒரு படத்துல இருந்து தூக்கிட்டதுக்காக மொத்த இண்டஸ்ட்ரியும் உன் கையில இருக்கறதா நினைச்சிக்காத" என்றாள்.​

அமரின் இதழ்கள் நக்கலாக வளைய இரு விரல்களால் நெற்றியை நீவி விட்டுக்கொண்டான்.​

அவனின் தோரணையில் விஜயின் மனமோ 'இவள் வேற சும்மா இல்லாமல் சாத்தானுக்கு சங்கூதுறாளே'’என்று அடுத்து நடக்க போவதை நினைத்து உள்ளுக்குள் புலம்பிக்கொண்டது.​

"குட், எனக்கு ஒரு பழக்கமிருக்கு. நான் எதையும் ஒருமுறை தான் சொல்லுவேன். ரிப்பீட் பண்ண எனக்கு பிடிக்காது. யூ வெயிட் அண்ட் வாட்ச்" என்று விட்டு அழைப்பை துண்டிக்க சொல்லி சைகை செய்ய விஜயும் அழைப்பை துண்டித்திருந்தான்.​

அவனுக்கோ உள்ளுக்குள் மனம் பிசைந்தது. அமரனை பற்றி நன்கறிந்தவனாயிற்றே. அவன் வெறுமனே வாய் சவடால் விடும் ஆளில்லை என்று அவனுக்கு தெரியும்.​

இத்துடன் மீராவின் சினமா வாழ்க்கை அஷ்டமிக்கப் போவதும் அவனுக்கு உணரக்கூடியதாக இருக்க "கொஞ்சம் யோசிக்கலாமே சார். நீங்க அவங்க கிட்ட கொஞ்சம் கடுமையா நடுந்துக்குற போல இருக்கு. பாவம் உங்களை பத்தி தெரியாமல் பேசிட்டாங்க" என்றான்.​

அவனை அழுத்தமாக பார்த்த அமரோ "தெரியலன்னா பேசக்கூடாது. எப்பவும் உன் எதிர்ல இருக்குறது யாருன்னு தெரிஞ்சு பேசணும்" என்றான்.​

அவன் கண்களின் கருவிழிகள் இன்னமும் கருமையடைவது போல் இருந்தது விஜயிற்கு.​

அதற்குள் "ஷாட் ரெடி சார்" என்று வந்து சொன்னான் துணை இயக்குனர் ஒருவன்.​

"வரேன்" என்று சொல்லி அவனை அனுப்பி வைத்த அமர் விஜயை பார்க்க "வில்லனா நடிச்சு நடிச்சு இந்த வில்லத்தனத்தை நீங்க ரசிக்க ஆரம்பிச்சிட்டீங்கன்னு தோணுது சார்" என்றான் விஜய்.​

அவனின் பார்வை அமரின் மீது அழுத்தமாக படிந்தது.​

"ஆஹான்" என்று மெல்ல சிரித்தவனோ செட்டை நோக்கி நடந்தான்.​

செல்லும் அவன் முதுகையே பார்த்திருந்த விஜயின் புருவங்களோ குழப்பத்தில் இடுங்கின.​

***​

அன்று இரவு நல்ல உறக்கத்தில் இருந்தார் தீனதயாளன். திடீரென அவரின் அலைபேசி அலறியது.​

இரண்டு முறை அடித்து ஒய்ந்து மூன்றாம் முறை மணி அடிக்க "என்னங்க ஃபோன் அடிச்சிட்டே இருக்கு. பாருங்க" என்றார் உறக்கத்தில் புரண்டு படுத்த அன்புச்செல்வி.​

அவரும் கையை நீட்டி மேசை மீதிருந்த அலைபேசியை தொட்டுத் துளாவி எடுத்து காதில் வைத்தார்.​

"ஹலோ" என்ற அவரின் குரலில் தூக்க கலக்கம் அப்பட்டமாக தெரிந்தது.​

"ஹெலோ மிஸ்டர் தீனதயாளன், பொண்டாட்டி புள்ளைங்களோட ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல. ராத்திரி ரொம்ப நிம்மதியா தூங்குற மாதிரி இருக்கே" என்றது அந்தக் குரல்.​

அது ஒரு பெண்ணின் குரல்.​

தீனதயாளனின் புருவங்கள் இடுங்க "யாரு?" என்று கேட்டார்.​

"அது எப்படி சார் அடுத்தவங்க தூக்கத்தை கெடுத்த உங்களுக்கெல்லாம் நிம்மதியா தூங்க முடியுது" என்று அவர் கேள்விக்கு பதிலிருக்காமல் அந்த குரல் தொடர்ந்து பேச சட்டென்று எழுந்தமர்ந்துவிட்டார்.​

"யாரு, யாருன்னு கேட்குறேன்ல?" என்று அவரின் குரல் சற்றே உயர "ஷ்ஷ்ஷ்...கத்தாதீங்க சார். உங்க பொண்டாட்டி முழிச்சுக்க போறாங்க" என்றது அந்த குரல்.​

சட்டென்று அருகே திரும்பி பார்க்க "யாருங்க இந்த நேரத்துல?" என்று கேட்டுக்கொண்டே புரண்டு படுத்தார் அன்புச்செல்வி.​

"சொன்னேன்ல...ஹாஹாஹா" என்று மறுமுனையில் இருந்த குரல் சத்தமாக சிரிக்க சட்டென்று அலைபேசியை காதிலிருந்து எடுத்து அதன் ஸ்பீக்கரை கைகளால் மூடிக்கொண்டே "நீ தூங்கும்மா...பேசிட்டு வந்திடுறேன்" என்றபடி அறையின் பால்கனிக்கு சென்று நின்றுக்கொண்டார்.​

அலைபேசியை மீண்டும் காதில் வைத்தவர் "ஹேய் யாரு நீ? உனக்கு என்ன வேணும்?" என்று அவர் சீற "உன் நிம்மதி வேணும்" என்றது அந்த குரல்.​

''ரொம்ப பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி வச்சியிருக்கல்ல... அந்த இரவுகள், அதில் புதைந்து போன அழுகைகளும் கதறல்களும்... இது எல்லாம் உனக்கு எப்போவாவது நியாபகம் வருமா? உன் காதில் கேட்டு தொந்தரவு பண்ணாதா? எப்படி நிம்மதியா தூங்க முடியுது உன்னால?" என்றது அந்த குரல்.​

வெகு சாதாரணமாக நக்கல் தொனியில் வார்த்தைகள் உதிர்த்தாலும் அதனுள்ளே ஆழமான வன்மம் புதைந்திருந்தது.​

"எனக்கொரு சந்தேகம்…அந்த முகங்கள் எல்லாம் உனக்கு இன்னமும் நியாபகம் இருக்கா? இல்லை மொத்தமா மறந்து போயிட்டியா?" என்றாள் அந்த மர்ம குரலின் சொந்தக்காரி.​

தீனதயாளனுக்கு முகமெல்லாம் வியர்க்க தொடங்கிவிட "ஹேய் யாரு நீ? பணத்துக்காக கண்டதையும் சொல்லி என்னை ப்ளாக்மேயில் பண்ண பார்க்குறியா? நீ யாருன்னு மட்டும் நான் கண்டு பிடிச்சேன்னா பிறகு இந்த கால் பண்ணதுக்காக நீ ரொம்ப வருத்தப்பட வேண்டியது இருக்கும்" என்று மிரட்டினார்.​

''ஹாஹாஹாஹா…ஹாஹா" என்று வாய் விட்டே சத்தமாக சிரித்த அந்த பெண்ணோ "ஓஹ் மிஸ்டர் தீனதயாளன், வருத்தப்படப் போறது நான் இல்லை... நீதான்" என்று சொன்ன அடுத்த நொடி அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.​

அலைபேசியை காதிலிருந்து எடுத்தவரின் கரங்கள் மெல்ல நடுங்கின. மூளைக்குள் என்னென்னவோ ஓடின. முதல்முறை அவரின் சொந்த வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பற்ற உணர்வு. யாரோ அவரை கவனிப்பது போன்ற பிரம்மை.​

மீண்டும் அலைபேசியை எடுத்து பார்த்தார். அந்த எண்ணிற்கு மறு அழைப்பு விடுத்தார். ஆனால், அழைப்பு செல்லவேயில்லை.​

அலைப்பேசியை மேசை மீது வைத்துவிட்டு வந்து படுத்தவருக்கு நிம்மதியுடன் தூக்கமும் தொலைந்து தான் போயிருந்தது.​


அடுத்த எபிசொட் புதனன்று வரும் மக்களே...

 
Last edited:

Vilacini

Well-known member
Wonderland writer

திரை 7

தனது அலுவலக அறையில் அமர்ந்திருந்தார் தீனதயாளன்.​

நடு இரவில் வந்து தொல்லை செய்திருந்த அந்த ஒரு அழைப்பு அவரின் தூக்கத்தை மொத்தமாக களவாடியிருந்தது. எவ்வளவு முயன்றும் உறக்கம் என்பது எட்டாக்கனியாகிவிட எழுந்து சென்று அலுவலக அறைக்குள் நுழைந்துக்கொண்டார்.​

தனது இருக்கையில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடியவருக்கு தொலைபேசியில் ஒலித்த அந்தக் குரலே காதில் எதிரொலித்துக்கொண்டிருந்தது.​

யாராக இருக்கும் என்று எவ்வளவோ யோசித்து பார்த்துவிட்டார். ஒன்றும் புலப்படவில்லை. நாற்காலியில் விழி மூடி யோசித்துக்கொண்டிருந்தவர் மெல்ல விழிகளை திறந்து நேரத்தை பார்த்தார்.​

அதிகாலை மணி ஐந்து.​

பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்து அதில் ஒரு எண்ணைத் தேடி பிடித்து அழைப்புவிடுத்தார்.​

எதிர்பக்கம் அழைப்பை ஏற்றவனோ "சார், இந்த நேரத்துல கூப்பிடுறிங்க? ஏதும் பிரச்சனையா?" என்று கேட்டான்.​

குரல் தூக்கத்தில் கரகரத்தது அவனுக்கு.​

"உனக்கு ஒரு நம்பர் அனுப்பி வச்சிருக்கேன். அந்த நம்பரை ட்ரேஸ் பண்ணு. அது யாரோட நம்பர், பேரு, ஊரு, கால் ரெகார்டஸ் எல்லாமே எனக்கு வேணும்" என்றார்.​

"பண்ணிடலாம் சார்" என்றான் அந்த துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளன் பாஸ்கர்.​

தீனதயாளனுக்கு மிகவும் வேண்டப்பட்டவன். அவரின் விசுவாசி.​

இருக்காதா பின்னே, அவருக்காக அவன் செய்து கொடுத்த காரியங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்திருக்கின்றாரே. விசுவாசம் இருக்கத்தானே வேண்டும்.​

"ம்ம்ம்... விசாரிச்சிட்டு கூப்பிடு" என்று சொல்லிவிட்டு அவர் அழைப்பை துண்டிக்க போக "ஏதும் பிரச்சனையா சார்?" என்று விசாரித்தான் அவன்.​

"பிரச்சனையா இருக்க கூடாதுன்னு தான் நானும் யோசிக்குறேன்" என்று எங்கோ ஆழ்ந்து பார்த்துக்கொண்டே மிக மெல்லிய குரலில் அவர் சொன்னது கிட்ட தட்ட தனக்கு தானே பேசிக்கொண்டது போன்று தான் ஒலித்தது.​

அவர் பேசியது அவன் செவியில் சரியாக கேட்காமலிருக்க "சார்...?" என்று அழைத்தான்.​

"ஏதோ விட்ட குறை தொட்ட குறைன்னு நினைக்குறேன். பார்த்துக்கலாம். நீ விசாரிச்சு சொல்லு. பி குயிக் பாஸ்கர்" என்று விட்டு வைத்தார்.​

தீனதயாளன் அழைப்பை துண்டித்த அடுத்த நொடி கட்டிலிலிருந்து எழுந்துக்கொண்டவன் அவனது குழுவினருக்கு அழைத்து செய்ய வேண்டியதை சொல்லிவிட்டு வைத்தான்.​

அதன் பிறகு தானும் தயாராவதற்காக விளக்கை போடப் போக "லைட்டை போடதப்பா பாப்பா எழுந்துக்க போறா" என்று உறக்கத்தினூடே வந்த குரலில் அவனது கரம் அப்படியே நின்றுவிட்டது.​

திரும்பிக் கட்டிலை பார்த்தான்.​

அங்கே அவனது மனைவி மூன்று வயதேயான அவர்களது மகளை அணைத்துக்கொண்டு படுத்திருந்தாள்.​

மெல்ல புன்னகைத்து கொண்டவன் விளக்கை போடாமல் இருட்டிலேயே குளியலறைக்குள் நுழைந்து ஆயுத்தமாகி வெளியில் வந்தான்.​

பர்ஸை எடுத்து பாக்கெட்டில் வைத்தவன் கார் சாவி, மற்றும் அலைபேசியை எடுத்துக்கொண்டு கிளம்ப " ஒரு பக்கம் விடியறதுக்குள்ள எங்க போற?" என்று கேட்டாள் அவனின் மனைவி.​

"வேலை இருக்குமா... சீக்கிரம் வந்திடுறேன்" என்று அவள் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு மகளின் கன்னத்திலும் முத்தமிட்டவன் கிளம்பிவிட்டான்.​

அவன் அலுவலக அறைக்குள் நுழைந்த நேரம் ஏற்கனவே அவனது குழுவினர் அவன் கேட்ட விவரங்களை சேகரிக்க தொடங்கியிருந்தனர்.​

கணினி திரையில் அவன் கொடுத்த எண் அலசி ஆராயப்படுவது தெரிந்தது.​

அங்கே இருந்த ஒருவனின் அருகே சென்று விறைப்பாக நிமிர்ந்து நின்றவன் கையை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டே கணினியின் திரையை பார்த்தான்.​

"எனி அப்டேட்ஸ்?" என்று கேட்க "நோ சார், நத்திங்" என்று கையை விரித்தான் அவன்.​

"தள்ளு" என்று அவனை எழும்ப செய்து தானே கணினியின் முன்னே அமர்ந்து தேடலை தொடங்கியிருந்தான்பாஸ்கர் .​

"ரொம்ப ட்ரை பண்ணி பார்த்துட்டோம் சார். எதுவும் கிடைக்கல. நம்பர் ட்ரேஸிங், கிராஸ்-ரெஃபெரென்சிங் டேட்டா எல்லாமே பண்ணியாச்சு. பட், காட் நத்திங்" என்று அவன் சொல்லிக்கொண்டே போக அங்கே பாஸ்கரின் கணினி திரையிலும் unknown, routed through multiple servers, untraceable (அறியப்படாத எண்,பல சர்வர்களை ஊடறுத்து வந்த அழைப்பு, கண்டுபிடிக்க இயலாத எண்), என்ற சொற்கள் தான் விட்டு விட்டு ஒளிர்ந்தன.​

"ஷி***" என்று வாய்க்குள் திட்டிகொண்டவன் தாடை இறுக சற்று நேரம் கணினி திரையை வெறித்தான்.​

பிறகு ஒரு ஆழ்ந்த மூச்சுடன் இருக்கையிலிருந்து எழுந்துக்கொண்டவன் "கீப் ட்ரையிங்" என்று அங்கிருந்தவனை பணித்துவிட்டு தீனதயாளனுக்கு அழைத்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.​

இங்கே பாஸ்கரின் அழைப்புக்காக காத்திருந்த தீனதயாளன் அலுவலகத்தில் வேலையாக இருக்க அவனது அழைப்பு வந்ததும் உடனே ஏற்று காதில் வைத்தார்​

"சொல்லு" என்ற அவரின் குரல் இறுகி இருக்க "சாரி சார். அது ஒரு கோஸ்ட் கால், ரூட்டெட் த்ரு இன்டர்நெஷனல் கால்ஸ். உலகத்தில் எந்தெந்த மூலையில் இருக்குற சர்வர்ஸிலிருந்து கனெக்டாகி வருது. எந்த டிஜிட்டல் ஃபுட் ப்ரிண்ட்ஸும் இல்லை. இதை யாரு செய்யுறாங்களோ அவங்களுக்கு எந்த தடயமும் இல்லாமல் எப்படி தப்பிக்கணும்னு நல்லாவே தெரிஞ்சிருக்கு" என்று விளக்கமாக சொன்னான்.​

அவன் சொல்லிய தகவலில் அவரின் முகம் இறுக கையிலிருந்த பேனா அவர் அழுத்தத்திற்கு இறையாகிற்று.​

"தப்பு செய்யுற எல்லாருமே எதாவது ஒரு தடயத்தை விட்டுட்டு தான் போவாங்க. தேடு...அடி ஆழம் வரை தோண்டி பாரு… கண்டிப்பா ஏதாவது கிடைக்கும்" என்று அழைப்பை துண்டித்து விட்டு அலைபேசியை மேசை மீது வைத்தார்.​

சில நொடிகள் கையில் இருந்த பேனாவால் நெற்றியில் தட்டிக்கொண்டே எதையோ யோசித்த தீனதயாளன் மீண்டும் அலைபேசியை எடுத்து ஒரு எண்ணை தேடி பிடித்து அதற்கு அழைத்தார்.​

மறுபக்கத்திலிருந்து அழைப்பை ஏற்றவனோ சினமா துறையில் மிகப் பிரபலமான ஒரு காஸ்டிங் ஏஜென்ட் (நடிகர்கள், அல்லது புது முக நடிகர்களுக்கான முகவர்/ஒருங்கிணைப்பாளர்).​

அவன் பெயர் குணசேகரன். முன் நாற்பதுகளில் இருக்கும் அவனுக்கு பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு நடிகர்கள் தேர்வில் உதவுவது தான் தொழில். அவனால் பல புதுமுக நடிகர்கள் உருவாகியிருக்கின்றனர். பரத்தும் கூட அதில் ஒருவன் தான்.​

அழைப்பை ஏற்றதும் " என்ன சார் புது படம் பண்ண இருக்கீங்களா? ப்ரெஷா பொண்ணுங்க... ஐ மீன் ஆர்டிஸ்டுங்க வேணுமா? ரெண்டு நாள் டைம் கொடுங்க எல்லாம் ரெடி பண்ணிடலாம் சார். இப்போ கூட கைவசம் பாம்பே ஐட்டம் ஒன்னு இருக்கு. நல்ல ஹீரோயின் மெட்டிரியல். ஃபோட்டோ அனுப்பி விடுறேன் பார்க்குறீங்களா...." என்று அவன் பாட்டிற்கு ஏதேதோ பேசிக்கொண்டே போனான்.​

அதில் இருவிரல்களை நெற்றியில் வைத்து நீவிக்கொண்டே விழிகளை மூடி திறந்த தீனதயாளன் "குணா, குணா...லிசன்..." என்றார் அழுத்தமான குரலில்.​

அவரின் குரலில் தெரிந்த அழுத்தத்திலேயே ஏதோ சரியில்லை என்று அவனுக்கு விளங்க "என்ன சார் எதுவும் பிரசனையா?" என்று கேட்டான்.​

சற்று நேரத்திற்கு முன்னால் அவன் குரலிலிருந்த இயல்பு தன்மை மாறி தீவிரமாக ஒலித்தது.​

"ம்ம்ம்... நேத்து நைட் ஒரு கால். ஒரு பொண்ணு போன் பண்ணி மிரட்டுறா" என்றார்.​

"உங்க மாதிரி பணக்காரங்களுக்கு எல்லாம் இது மாதிரி கால்ஸ் வரது சகஜம் தானே சார்" என்று அவன் சொல்ல "எஸ், வரும் தான். இதுக்கு முன்ன இது போல நிறைய வந்தும் இருக்கு. பட், இது வேற. அந்த குரலில் ஒரு அழுத்தம். ஏதோ அவளுக்கு தெரிஞ்சிருக்கு" என்றார்.​

"போன் நம்பர் வச்சு கண்டு பிடிக்கலாம்ல சார்" என்று அவன் கேட்க "இதை கூட நான் யோசிக்க மாட்டேனா? எல்லாம் பண்ணியாச்சு. ஒன்னும் கிடைக்கல'' என்றார் கடுப்பாக.​

"இப்போ நான் என்ன பண்ணனும் சார்?" என்று அவன் கேட்க "விசாரிக்கணும் குணா. யாரோ என்னை வாட்ச் பண்ணுற போல இருக்கு. பேசுறதை வச்சு பார்த்தா என்னோட ரகசியங்கள் ஏதோ அவள் கிட்ட சிக்கியிருக்குமோன்னு தோணுது. இண்டஸ்ட்ரியில் யாராவது என்னை பத்தி விசாரிக்குறாங்களான்னு பாரு. யாரும் சந்தேகப்படுற மாதிரி இருந்தா உடனே எனக்கு சொல்லு. அவங்க நடவடிக்கை எல்லாம் நோட் பண்ணு. அது யாருன்னு சீக்கிரம் கண்டுபிடிக்கணும் குணா. விட்டுட்டா சேதாரம் எனக்கு மட்டுமில்லை நினைவிருக்கட்டும்" என்றார்.​

"புரியுது சார். தைரியமா மிரட்டுற அளவுக்கு வந்திருக்கான்னா கண்டிப்பா ஆதாரம் இல்லாமல் இருக்காது. விட்டு வச்சா நமக்கு ஆபத்துதான்" என்றான் குணா.​

"நீ ஆள் யாருன்னு மட்டும் கண்டுபிடி மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்" என்றார். அவரின் குரலில் ஒரு குரூரம் தொனித்தது.​

இப்படியாக இரண்டு நாட்கள் கடந்திருக்கும். என்ன தான் அந்த மர்ம அழைப்பு மூளையை குடைந்தாலும் ஓய்ந்து அமர்ந்துவிடவில்லை. தீனதயாளன். வழமையான தனது வேலைகளை தொடர்ந்துக்கொண்டுதான் இருந்தார்.​

ஆனால், என்ன வழக்கமாக இருக்கும் உற்சாகம் சற்றே குறைந்திருந்தது.​

அன்று தனது வேலைகளை முடித்துக்கொண்டு தாமதமாக தான் வீடு திரும்பியிருந்தார் தீனதயாளன்.​

வீட்டிற்குள் நுழைந்தவரின் முகம் இறுக்கமாகவே இருக்க " என்னங்க ஒரு மாதிரி இருக்கீங்க. உடம்புக்கு எதுவுமா?" என்று அக்கறையாக விசாரித்தார் அன்புச்செல்வி.​

அங்கேதான் முன்னறையில் அமர்ந்திருந்த அனிஷாவும் கூட "அதானே எப்பவும் இல்லாமல் இன்னிக்கு என்னப்பா முகம் ரொம்ப டல்லா இருக்கு?" என்று கேட்டாள்.​

"ஒண்ணுமில்லை...ஒர்க் டென்ஷன்" என்று அவர்களின் முகத்தை கூட பார்க்காமல் சொன்னவர் அறைக்குள் நுழைந்துகொண்டார்.​

குளித்து முடித்தவருக்கு இரவு உணவு கூட எடுக்க மனமில்லை.​

நிம்மதி தொலைந்து போனால் பசி மட்டும் எங்கிருந்து வரும். அதில் உணவை கூட மறுத்துவிட்டு அப்படியே படுக்கையில் சரிந்து விட்டத்தை பார்த்துக்கொண்டே படுத்திருந்தார்.​

உறக்கம் வரவில்லை.​

அன்புசெல்வியும் கூட வேலைகளை முடித்துக்கொண்டு வந்து அருகே படுத்தவர் உறங்கியும் இருந்தார். ஆனால், தீனதயாளனுக்கு உறக்கம் வருவதாகவே இல்லை.​

வெகு நேரத்திற்கு பின் ஒருவழியாக கண்கள் உறக்கத்திற்கு கெஞ்ச அவரின் இமைகள் மெல்ல மூடத் தொடங்கிய நேரம் மேசை மீதிருந்த அலைபேசி ஒலியெழுப்பியது.​

புருவங்கள் முடிச்சிட எழுந்து அலைபேசியை எடுத்து பார்த்தார்.​

அதே மர்ம எண். அதிலிருந்து ஒரு குறுஞ்செய்தி.​

திறந்து பார்த்தார்.​

"தூங்கிட்டியா மிஸ்டர் தீனதயாளன்? நிம்மதியா தூங்கு. எல்லாம் இன்னும் கொஞ்ச காலம் தான். குட் நைட், ஸ்வீட் டிரீம்ஸ்" என்று வந்திருந்தது.​

இது வெறும் வெத்து மிரட்டல் அல்ல என்பதை அவருக்கு நினைவு படுத்தும் நோக்கத்துடன் வந்திருந்தது அந்த செய்தி. அது அவருக்கும் புரிந்துவிட அவரின் நிலைத்தன்மை சற்றே குலைந்து போயிற்று. குளிரூட்ட பட்டிருந்த அறையிலும் அவருக்கு வியர்க்க தொடங்கியிருந்தது. லேசாக மனதில் பயம் மையம் கொள்வதை உணர்ந்தார்.​

***​

அதே சமயம் சென்னை போயஸ் கார்டனில் அமையப்பெற்றிருந்த அவனின் சொகுசு மாளிகையின் நீச்சல் குளத்திற்குள் இருந்தான் அமரன்.​

நீருக்குள் நின்றபடியே குளக்கட்டில் சாய்ந்து நின்றவனின் விழிகள் அலைபேசியில் பதிந்திருக்க அவனது முகமோ இறுகியிருந்தது.​

வழக்கம் போல் எந்த உணர்வையும் வெளிக்காட்டாத இறுகிய முகம் .​

அங்கே இருந்த இருக்கையில் தான் விஜயும் அமர்ந்திருந்தான்.​

அமரின் இறுகிய முகத்தையும் அவனது அலைபேசியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்.​

"அமர்" என்று விஜய் அழைக்க அவனை நிமிர்ந்து பார்த்தவன் அலைபேசியை அவனை நோக்கி தூக்கி போட்டிருந்தான்.​

விஜயும் அதை இலாவகமாக பிடித்து அருகில் வைத்துக்கொள்ள​

ஒரு ஆழ்ந்த மூச்சுடன் கண்களை மூடிய அமரனோ குளக்கட்டின் மேல் இருக்கரங்களையும் விரித்து வைத்து, தலையை பின்னுக்கு சரித்தபடி சாய்ந்து நின்றான்.​

இன்று மதியம் தான் மும்பையிலிருந்து திரும்பியிருந்தான் அமரன். அதோடு இன்றைய தினம் அவனுக்கு ஓய்வாக இருக்க நீச்சல் குளத்தில் இறங்கிவிட்டான். உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு தேவைப்படும் நேரங்களில் நீச்சல் குளத்தை நாடுவது அவனது வழக்கம்.​

அவனை பார்த்துக்கொண்டே அவன் அருகே வந்து நின்ற விஜய் "அமர் நாளைக்கு ப்ரொடியூசர் முருகவேல் சார் கூட மீட்டிங் இருக்கு" என்றான்.​

"ம்ம்ம்" என்றான் அமரன்.​

"புது படத்துக்கான காண்ட்ராக்ட் சைன் பண்ண வேண்டியிருக்கும்" என்றான் விஜய்.​

அதற்கும் "ம்ம்ம்" என்று தான் பதில் சொன்னான்.​

"மீட்டிங்கிற்கு துஷாராவும் வருவா" என்றான்.​

சட்டென்று மூடியிருந்த விழிகளை திறந்திருந்தான் அவன்.​

அவனின் கருவிழிகள் கூர்மை பெற அவன் இதழ்களில் ஒரு குரூர புன்னகை "வரட்டும்...ஐ அம் வெயிட்டிங்" என்றான்.​

"அமர்" என்று விஜய் ஏதோ சொல்ல வர அமரன் அவனை திரும்பி பார்த்த ஒரே பார்வையில் விஜயிற்கு அடுத்த வார்த்தை வரவில்லை. அப்படியே மௌனமாகிவிட்டான்.​

***​

இங்கே இறுதி கட்ட படப்பிடிப்பில் நின்றிருந்தாள் துஷாரா. படப்பிடிப்பு தளம் சுறுசுப்பாக இயங்கி கொண்டிருந்தது.​

படத்தின் கதாநாயகி கண்ணீருடன் ஓடி வந்து கதாநாயகனை கட்டிப்பிடித்து அவன் நெஞ்சில் சில நொடிகள் முகம் புதைத்து பின் மெல்ல நிமிர்ந்து அவனை காதலாக பார்க்க "கட்" என்று கணீரென வந்தது துஷாராவின் குரல்.​

அவ்வளவு தான் அந்தக் காட்சி படமாக்க பட்டத்துடன் அந்த படப்பிடிப்பும் நிறைவுக்கு வந்திருந்தது. இனி டப்பிங்,எடிட்டிங் என்னும் அடுத்த கட்ட வேலைகளில் இறங்க வேண்டியது தான் பாக்கி.​

"காங்கிராட்ஸ் கைஸ், குட் ஜாப்" என்று அனைவரையும் பொதுவாக பாராட்டினாள் துஷாரா.​

அதில் அங்கிருந்த படக்குழுவினர் முகம் எல்லாம் சந்தோஷத்தில் மலர்ந்திருக்க "வாழ்த்துக்கள் மேம்" என்றான் அகிலன்.​

"உனக்கும் தான் மேன். அப்புறம் ஷூட்டிங் தான் முடிஞ்சிருக்கு. இன்னும் போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் வேலை எல்லாம் பாக்கி இருக்கு நினைவிருக்குல்ல?" என்று நினைவூட்ட "இருக்கு மேடம்...இதே போல அதையும் சிறப்பா பண்ணிடலாம்" என்றான் அவன்.​

"குட். நாளைக்கே நீ அந்த வேலை எல்லாம் ஆரம்பிச்சுடு" என்று அவள் சொல்ல "நளைக்கேவா?" என்று அவன் புலம்பியது நல்ல வேலையாக அவள் காதில் விழவில்லை.​

"என்னது?" என்று அவள் கேட்க "நாளைக்கே பண்ணிடுறேன்னு சொன்னேன் மேம்" என்றான் அவன்.​

அவனை ஒரு மார்கமாக பார்த்துக்கொண்டே தோள்பையை எடுத்து தோளில் மாட்டியவள் "அடிக்கடி இப்படி வாய்க்குள்ளையே என்னவோ புலம்பற. ஒரு நாள் சிக்குவல்ல...மவனே அன்னிக்கு வச்சிக்குறேன் உன்னை" என்றாள் அவள்.​

"சில்வண்டு சிக்கும் இந்த சிறுத்தை சிக்காதுல்ல" என்று அவன் மீண்டும் வாய்க்குள்ளேயே பன்ச் டைலாக் விட கீழே கிடந்த கல்லை தூக்கியிருந்தாள் துஷாரா.​

"ஐயோ மேம் அடிச்சிடாதீங்க, நான் வீட்டுக்கு ஒரே பையன். இன்னும் கன்னிக் கூட கழியலை" என்று பதறியடித்துக்கொண்டு அருகே இருந்த நாற்காலியின் மறைவில் ஒளிந்துக்கொண்டான்.​

அவனை முறைத்து பார்த்த துஷாராவோ "அடச் ச்சேய் வெளிய வா. நீ பயந்து நடுங்குறதுக்கு அப்படியே கன்னி கழிஞ்சிட்டாலும்" என்று அதற்கும் திட்டினாள்.​

"சாபமெல்லாம் போடாதீங்க மேம்" என்று அவன் குரலை சற்றே உயர்த்த " என் கிட்ட உதை வாங்காமல் அடுத்த வேலை என்னனு போய் பாரு. நாளைக்கு எனக்கு முருகவேல் சார் கூட ஒரு மீட்டிங் இருக்கு. அது முடிச்சிட்டு தான் வருவேன்" என்றாள் அவள்.​

"புது படம் காண்ட்ரேக்ட் ஆஹ் மேடம்?" என்று அவன் கேட்க "எஸ். ஏற்கனவே ஒரு கதை கொடுத்திருந்தேன்ல அது பிடிச்சிருக்குன்னு சொன்னார். நாளைக்கு அதை பத்தி டிஸ்கஸ் பண்ண கூப்பிட்டிருக்கார். எல்லாம் ஓகேன்னா காண்ட்ரேக்ட் சைன் பண்ணிடலாம்" என்றாள்.​

"கண்டிப்பா கிடைச்சுடும் மேம், குட் லக்" என்று மனமார வாழ்த்தினான் அகிலன்.​

"ஐ க்னோ. எனக்கு ரொம்ப பிடிச்ச கதை. நான் ரசிச்சு எழுதினேன். அதை படமா எடுக்க போறதை நினைச்சா செம்ம பீலிங் ஆஹ் இருக்கு. பட், இந்த முறை காஸ்டிங் எல்லாம் நாம தான் ச்சூஸ் பண்ணனும்னு கண்டிப்பா சொல்லிடனும். போன முறை அவர் சொன்னதுக்காக அந்த பரத்தை நடிக்க வச்சு பட்டதே போதும்" என்றாள்.​

"ஒத்துப்பாரா?" என்று அகிலன் கேட்க "ஒத்துக்க வைக்கணும்" என்று சொல்லி விட்டு கிளம்பியிருந்தாள் துஷாரா.​

நாளைய நாள் அவள் நினைப்பதற்கு முற்றிலும் மாறாக அமைய போவதை அறியாமல்.​


அடுத்த எபிசொட் வெள்ளி இரவு.

 
Last edited:
Status
Not open for further replies.
Top