ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை- கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 23 (பகுதி 2):-

மெல்ல நாட்கள் நகர்ந்தாலும் இதோ திரிபுரசுந்தரி என் காது குத்து விழாவிற்கு ஒரு வாரம் மட்டுமே இருந்தது.

அந்த அரசியல் பிரமுகரை விழாவிற்கு முறையாக அழைக்க தம்பதி சமேதராய் புறப்பட்டு இருந்தனர் லட்சுமியும் அரவிந்தனும்.

அங்கு அந்த பண்ணை வீட்டின் உள்ளே வரவேற்பு அறையில் அமர்ந்திருந்தனர் இருவரும்.

அந்த வீட்டையே வியந்து கண்களை விரித்து பரவசமாக பார்த்துக் கொண்டிருந்த லட்சுமியை கண்களால் பருகியபடி அங்கு வந்து சேர்ந்தான் அந்த அரசியல்வாதி.

அவர்களின் முன் அட்டகாசமான சிரிப்புடன் அமர்ந்தவன் "என்னடா நல்லா இருக்கியா. இது யாரு உன் சம்சாரமா" ஒரு கோணல் பார்வையை லட்சுமி என் மீது வீசினான்.

"ஆமாம் அண்ணன்" என்றபடி எழுந்து நின்றவன் "பத்திரிகையை எடு லட்சுமி" என்றான் அதட்டலுடன்.

லட்சுமியும் பத்திரிக்கையை ஒரு தாம்பாளத்தில் வைக்க அவளது கையுடன் கை சேர்த்து பிடித்து அந்த அரசியல்வாதியை நோக்கி

"எங்க பொண்ணு காதுகுத்துக்க வச்சிருக்கோமண்ணே. நீங்க தான் வந்து நடத்திக் கொடுக்கணும்" பயபக்தியுடன் நீட்டினான்.

பத்திரிகை எடுத்துக் கொண்டு அமர்ந்தவன் "ம்ம் வர முடியுதான்னு பார்க்கிறேன்டா" அலட்சியமான குரலில் சொல்ல
"இல்லங்கன்னு அப்படின்னு சொல்லக்கூடாது நீங்க.

உங்களுக்கு வசதி படுற தேதியில் தான் பார்த்து வச்சிருக்கேன். நீங்க கண்டிப்பா வரணும்" தன் கணவனின் பவ்யமான குரலில் ஒரு வித எரிச்சல் வந்தது லட்சுமிக்கு.

'என்ன பெரிய உசத்தி இவரு' மனதில் வறுத்து எடுக்க அவளையை நோட்டமிட்டிருந்த அந்த அரசியல்வாதி, "என்னடா உன் பொண்டாட்டி ஒன்னும் சொல்ல மாட்றா" நக்கலாக கேட்டான்.

"ஏய் லட்சுமி வாங்கன்னு சொல்லு" தன்னை ஏவிய கணவனை முறைத்தவள்,
"நீங்க கண்டிப்பாக வரணும்" பெயருக்கு தான் அழைத்தாள்.

அதில் வாய்விட்டு சிரித்தவன் "சரிடா நான் வரேன் நீ ஏற்பாடு பண்ணு" சொல்லி அவர்களை அனுப்பியவனின் மனதில் இச்சை துளிர்விட்டது.

அன்றைய தினம் குட்டி சுந்தரி அழகாக அலங்கரிக்கப்பட்ட மனையில் அமர்த்தி வைக்கப்பட்டு இருந்தாள்.

அவளின் இருபுறமும் தாயும் தந்தையும் அமர்ந்திருக்க, கணபதி ஹோமமும், ஆயுள் ஹோமமும் நடந்து கொண்டிருந்தது.

தங்களின் குழந்தைக்கு நீண்ட ஆயுளை வேண்டுபவர்கள் குழந்தையின் நல்ல வாழ்வுக்கும் சேர்த்து பிரார்த்திருக்க வேண்டுமோ.

ஹோமம் நடந்து கொண்டிருக்கையில் சலசலப்பு ஏற்பட. அங்கு ஆரவாரத்துடன் பிரவேசித்தான் அந்த அரசியல்வாதி. அவனை கண்டவுடன் எழுந்த அரவிந்தனை கைப்பிடித்து அமர்த்தினாள் லட்சுமி.

அதில் சங்கடமாக பார்த்தவனை அமர சொல்லி சைகை செய்தவன் தானும் அங்கு அவர்கள் எதிரில் அமர்ந்து கொண்டான்.

அவனின் கண்களோ பட்டுப் புடவையில் பாந்தமாக இருந்த லட்சுமியின் உடலையே மேய்ந்தது.

அன்று புரியாத அவனின் பார்வை இன்று புரிய புழுவாக நெளிந்தாள்.

பூஜை முடிந்து எழுந்து அரவிந்தன் ஓடி சென்று வந்தவனை வரவேற்க முகம் சுளித்தாள் லட்சுமி.

சற்று நேரத்திற்கு எல்லாம் காதுகுத்து விழாவிற்கு ஆயத்தமாக, அந்த அரசியல் பிரமுகரின் மடியில் அமர்த்தி காது குத்தப்பட்டாள் குழந்தை சுந்தரி. விழா முடிந்ததும் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்த அந்த அரசியல்வாதியின் கண்களில் படாமல் இருக்க பெரிதும் முயன்றாள் லட்சுமி. அவனது பார்வை தீயாக தகித்தது அவளை.

நாட்கள் விரைந்தோட ஐந்து வயது வந்துவிட்டாள் சுந்தரி.

அந்த ஊரின் பெரிய பள்ளியில் சுந்தரி பயில இடம் கேட்டிருக்க, ஒரு பெரிய தொகையை பணம் கட்ட சொல்லி இருக்க முடியாமல் கையை பிசைந்தனர் கணவனும் மனைவியும்.

அவர்கள் குடியிருக்கும் அந்த வீடும் மேலும் சில சொத்துக்கள் வாங்கி இருக்க. அதனால் அவசரத்திற்கு பணமும் இல்லை. அத்துடன் யாரிடமும் கடன் பெற வழியுமில்லை.

அவர்கள் ஓரளவிற்கு வசதி தான் என்றாலும், லட்ச ரூபாயை அப்படியே தூக்கிக் கொடுக்கும் அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை.

ஒரு வாரம் கழிந்த நிலையில் அந்த அரசியல்வாதி அந்த காலை வேளையில் அவர்களின் வீட்டிற்கு வந்தான். கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள் லட்சுமி.

கதவு திறந்து இருந்ததும் அவன் பாட்டிற்கு உள்ளே வந்து விட்டான். அவன் வந்ததை பார்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அரவிந்தன் அப்படியே தட்டில் கை கழுவி விட்டு எழுந்தான்.

"டேய் என்னடா சாப்பிடாம பாதியிலேயே எழுந்து வந்துட்ட" என்ற அவனின் கேள்விக்கு

"இல்லண்ணே திடுதிப்பின் காலையிலேயே வரவும் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்" என்று பதைபதைப்புடன் கேட்டான்.

லட்சுமி வந்தவனுக்கு நீர் தந்து உபசரிக்க. அவனும் இரு கைகள் கொண்டு அவளை தொட்டு வாங்கினான் அந்த குவளையை.

மங்கையவளோ விதிர்விதிர்த்து ஈரடி பின்னே சென்றாள்.

இதையெல்லாம் அரவிந்தன் கவனித்தானில்லை. அவனின் கவனம் முழுவதும் அந்த அரசியல்வாதியின் முகத்தை விட்டு நகரவில்லையே.

உள்ளே படுக்கையில் இருந்து விழித்து விட்ட குட்டி சுந்தரி அழ ஆரம்பித்திருக்க அனிச்சை செயலாக அவளிடம் சென்றாள் லட்சுமி.

சுந்தரியை சுத்தப்படுத்தி தூக்கி கொண்டு வந்தவள், கண்டது அந்த அரசியல்வாதி ஒரு கட்டு பணத்தை அரவிந்தனின் கைகளில் வைப்பதும்,

அரவிந்தன் அதை கண்களில் ஒற்றிக்கொண்டு நன்றி சொல்வதும் தான்.

புருவ முடிச்சுடன் இதனை கண்டவள் அவர்களை கடந்து சமையலறைக்கு சென்றாள் சுந்தரிக்கு பால் எடுத்து வரும் பொருட்டு.

அரவிந்தனோ "லட்சுமி அண்ணனுக்கு சாப்பாடு எடுத்து வை",அவளை அதட்டியவன்,

"அண்ணே நீங்க இன்னைக்கு கண்டிப்பா நம்ம வீட்ல சாப்பிட்டு தான் ஆகணும்" அவ்வளவு குழைந்தது அவனது குரல்.

கைகளை கழுவியவன் சுந்தரி பாப்பாவின் அருகில் அமர்ந்து அவளை தூக்க, வீறிட்டு அழுதது குழந்தை.

லட்சுமி விறுவிறுவென வந்தவள் குழந்தையை தூக்கிக் கொண்டாள்.

அந்த அரசியல்வாதியும் அத்தனை பற்களையும் காட்டி இளித்தான் லட்சுமி தனக்கு பரிமாறப்போவது எண்ணி.

இட்லி, வடை வைத்து சாம்பார் சட்னி வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

ஆனாலும் இது வேண்டும் அது வேண்டும் என்று ஏதாவது சாக்கு சொல்லி அவளை தன்னருகிலேயே வைத்துக் கொண்டான்.

இது அத்தனையையும் ஒரு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்தன்.

ஒரு மாதம் முடிந்த நிலையில் சுந்தரி அந்த பெரிய பள்ளியில் பயில ஆரம்பித்து இருந்தாள்.

ஆம் அன்று அந்த அரசியல்வாதி அரவிந்தனிடம் கொடுத்த பணம் சுந்தரின் படிப்பிற்காக தான்.

இப்பொழுதெல்லாம் மாதத்தில் பத்து நாட்கள் அரவிந்தன் வீட்டில் இருந்தால் அது அதிசயமே அந்த அளவிற்கு அவனது வேலைப்பளு இருந்தது.

இப்பொழுதும் என்ன வேலை ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் என்று லட்சுமி கேள்வி கேட்டால் அதற்கு "என்னோட வேலை விஷயத்துல தலையிடாதே. எத்தனை தடவை சொல்றது" எரிந்து விழுவான் தான்.

அன்றும் அப்படி கேட்க அவளை இழுத்து கட்டிலில் சாய்த்து முழுவதுமாக ஆண்டுவிட்டு தான் எழுந்தான். இந்த கூடல் இப்பொழுதெல்லாம் அவளுக்கு சலிப்பையே தந்தது.

இது ஒன்று அவனிடம் எப்பொழுதும் வெளியூர் சென்ற வீடு வந்தால் அவளை கட்டிலில் ஒரு வழி செய்து விடுவான் அரவிந்தன்.

இதனை எல்லாம் எண்ணியவள், அவனைக் இங்கே உள்ளியூரிலே வேறு வேலை தேடிக்கொள்ள சொல்ல வேண்டும் இல்லையென்றால் வேறு ஏதேனும் தொழில் அமைத்து கொள்ள சொல்ல வேண்டும்.

மேலும் அவள் தனியே தையல் தொழில் செய்ய கடை ஒன்று ஆரம்பிக்க திட்டமிட்டு இருக்க, அதனை அவனிடம் சொல்லவும் நேரம் காலத்தை எதிர்நோக்கி இருந்தாள்.

ஆனால் பாவம் தன் வாழ்நாளில் அப்படி ஒரு நேரம் அவளுக்கு கிடைக்கப் போவதில்லை என்று தெரியாது இருந்தால் பேதை.


 
அத்தியாயம் 24:-

லட்சுமி இப்போதைக்கு கடை வைக்க முடியாது என்று வீட்டிலேயே ஒரு அறையை தனது தையல் கூடமாக மாற்றி இருந்தாள்.

முதலில் பொழுதுபோக்காக ஆரம்பித்தது, இப்பொழுது குட்டி சுந்தரி பள்ளி சென்ற நேரத்தில் வெறுமையாக கழிக்க தோண்றாமல் எம்ராய்டரியும் இன்னும் விதவிதமாக துணிகளை தைக்கும் உத்திகளையும் அருகில் இருந்த தையல் பள்ளியில் சென்று பயின்றாள்.

அவளது திறமைக்கு நிறைய வாடிக்கையாளர்களுக்கு வரவே, நல்ல பணமும் சம்பாதித்தாள்.
தன் மகளின் படிப்பு செலவை தானே பார்க்கும் அளவிற்கு அவளது சம்பாத்தியம் உயர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அவளது நாட்கள் குட்டி சுந்தரியுடன் அழகாக கழிந்தன. அவளது சுட்டித்தனமும் மழலை பேச்சும் லட்சுமியை வசீகரித்தது.

லட்சுமியின் அதிகபட்ச பொழுதுப்போக்கே சுந்தரியை அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்துச் சென்று மணிக்கணக்காக அமர்ந்து அவளைப் பேச வைத்து, அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பது.

அன்றும் அப்படி தான் கோவிலில் அமர்ந்து இருந்தனர் லட்சுமியும் குட்டி சுந்தரியும்.

தான் ஒரு வாரம் வகுப்பு சென்று கற்ற பரதநாட்டியத்தை அந்த கோவிலில் உள்ள பிரகாரத்தில் ஆடி காட்டினாள் தன் அன்னைக்கு.

குட்டி சுந்தரி ஆடியதையை கண்டு சுற்றி இருந்தவர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
அத்தனை நேர்த்தியாக ஆடி இருந்தாள் குழந்தை.

"பிள்ளைக்கு திருஷ்டி சுத்தி போடும்மா கண்ணு பட்டுற போகுது" ஒருவர் சொல்லிவிட்டு செல்ல,

லட்சுமியும் புன்னகையுடன் தலையாட்டி விட்டு வீடு வந்தாள்.

லட்சுமி காலையில் எழுந்தால், மகளுக்கு தேவையானதை செய்து, சமையல் முடித்து, சுந்தரியை பள்ளிக்கு அனுப்பி விட்டு, தனக்கு பிடித்தமான பாடல்களை ஒலிக்க விட்டு தனது தையல் கூடத்தில் அமர்ந்தால், நேரம் போவது தெரியாது அவளுக்கு. மதிய உணவு வரை தனது தையல் வேலையை செய்வாள்.

பின்னர் மதியம் உண்டு விட்டு சிறிது ஓய்வுக்குப் பின் வீட்டில் உள்ள வேலைகளை முடித்து மீண்டும் துணிகளை தைக்க அமர்ந்து விடுவாள்.
l
பள்ளி முடித்து வருபவளுக்கு சிற்றுண்டி தயாரித்து பால் காய்ச்சி வைத்து விடுவாள்.
சுந்தரி பள்ளி முடித்து வந்தவுடன் உடல் கழுவி மடியில் அமர்த்தி சிற்றுண்டியை ஊட்டி விட்டவாரே கதை பேசுவது அன்றாட பழக்கவழக்கங்களில் ஒன்றானது. தாய்க்கும் மகளுக்கும் பேச அவ்வளவு கதைகள் இருக்கும்.

பள்ளியில் நடந்ததை கதைக்கதையாய் கூறும் குழந்தையை காண்கையில் தனது இப்பிறப்பு தன் குழந்தைக்காக என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியது அவளுள்.

வேறு ஒரு குழந்தையை பற்றிய எண்ணமே எழுந்ததில்லை அவளுக்கு என்று தான் சொல்ல வேண்டும்.

'அம்மா, அம்மா' என்று தன் முந்தானை பிடித்துக் கொண்டு காலை சுற்றும் முயல் குட்டியாய் துள்ளி திரியும் மகளே உயிர் மூச்சானாள் லட்சுமிக்கு.

சுந்தரிக்கு அழகழகான ஆடைகளை தன் கற்பனையில் தோன்றியதை வடிவமைத்து அணிவித்து அழகு பார்த்தாள் லட்சுமி.

மாதம் ஒரு புது துணியாவது சுந்தரிக்கு தைத்து விடுவாள். பிராக், பட்டுப்பாவாடை, சட்டை, மிடி, குட்டி நைட்டி, கவுன் என்று.

மேலும் சுந்தரியின் துணிகளில் பிரத்தியேகமான எம்ப்ராய்டரி மற்றும் ஜம்கி வேலைபாடுகள் என்று தனது மகளுக்கு பார்த்துப் பார்த்து தைத்து வைப்பாள்.

ஏன் அவளுக்குமே நேர்த்தியான வகையில் உடைகளை தைத்து அணிந்து கொள்ள கொள்ளை பிரியம்.

இன்னும் பெண்களின் நவநாகரீக ஆடைகள் வடிவமைப்பு பற்றி பயில வேண்டும் என்ற ஆசையும் முளைவிட்டது லட்சுமிக்கு.

அதன் ஒரு முயற்சியாக மேலும் இரண்டு தையல் இயந்திரம் வாங்கிக் கொண்டவள் அக்கம் பக்கத்து பெண்களுக்கு தனக்கு தெரிந்ததை பயிற்றுவித்தாள்.

அரவிந்தன் வீட்டில் இருக்கும் நாட்களில் சில நேரம் மனைவியையும் மகளையும் வெளியில் அழைத்துச் செல்வதுண்டு.

அன்றும் அப்படித்தான் அவர்களின் பக்கத்து ஊரான திருச்சியில் மலைக்கோட்டை கோவிலுக்கு சென்று விட்டு பிரபல துணி கடையில் உடை எடுத்துக் கொண்டிருக்கையில், பணம் செலுத்துமிடம் வந்து பணம் செலுத்தி விட்டு திரும்பும் போது தன் மீது வந்த மோதியவரை பிடித்து நிறுத்தினான்.

இருவரும் ஒருவரை ஒருவர் கூர்ந்து பார்த்துவிட்டு

"அண்ணே" என்று அரவிந்தனும்

"டேய் அரவிந்தா" என்று கணேசனும் அழைத்தபடி ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டனர்.

"நல்லா இருக்கியாடா பார்த்து எவ்வளவு நாளாச்சு கல்யாணம் கட்டிகிட்டியாமே கேள்விப்பட்டேன்" கேட்டார் கணேசன் அரவிந்தனின் அண்ணன்.

"ஆமாம் அண்ணன்" என்றவன் சற்று தூரத்தில் இருந்த மனைவியும் மகளையும் அழைத்து அறிமுகப்படுத்தினான்.

"வணக்கம்" லட்சுமி கரம் குவிக்க

"நல்லா இருக்கியா மா" கணேசன் நலம் விசாரித்தார்.
தலை அசைத்தாள் லட்சுமி.

குழந்தை சுந்தரியை வாங்கி கணேசன் கொஞ்சி கொண்டிருக்க,

"அண்ணி நல்லா இருக்காங்களா. எத்தனை குழந்தைங்க" கேட்டான் அரவிந்தன்.

"இப்பதாண்டா மாசமா இருக்கா அஞ்சு மாசம் ஆகுது"
அவர்களுக்கு திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் இப்பொழுதுதான் கருவுற்று இருக்கிறார் கணேசன் மனைவி.

அரவிந்தன் தன் அண்ணனின் குடும்பத்திற்கும் உடைகள் வாங்கி தந்தான். அருகில் இருக்கும் உயர்தர உணவகத்திற்கு சென்று அனைவரும் உணவு உண்டனர்.

உணவை முடித்தவர்கள் வெளியில் வர அரவிந்தன் ஏற்பாடு செய்திருந்த கார் வரவே மனைவி மகளுடன் ஏறியவன், அண்ணனிடம் சொல்லிக் கொண்டு அவர்கள் வீட்டின் முகவரியையும் பெற்றுக் கொண்டு தன் முகவரியையும் தந்துவிட்டே விடை பெற்றான்.

செல்லும் அவர்களையே ஒரு பெருமூச்சுடன் பார்த்து கொண்டு இருந்தான் கணேசன்.

தம்பியுடன் இவ்வளவு நேரம் இருந்த கணேசனிற்கு ஓரளவு வசதியாக வாழும் அரவிந்தனின் நிலையை தன் நிலையுடன் ஒப்பிட்டு பார்த்து உள்ளூர பொறாமை தீ வளர்த்துக் கொண்டார்.

மறு வாரத்தில் ஒரு நாள் அரவிந்தன் வீட்டில் இருக்கவே கணேசனின் வீட்டிற்கு செல்ல முடிவு செய்து இருந்தனர்.

"அம்மா நாம ஊருக்கு போறோமா" ஆர்ப்பரித்த படி வண்டியில் ஏறினாள் குட்டி சுந்தரி.

ஆம் அரவிந்தன் புதிதாக இருசக்கர வாகனம் ஒன்று வாங்கி இருந்தான்.

"அப்பாப்பா வண்டி சூப்பர். நம்ம வண்டியாப்பா. பாப்பா க்கு ஓட்டனும்" வெகுளியாக குழந்தை சொல்லவே நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு துக்கி தன் முன்னே அமர்த்திக் கொண்டான்.

லட்சுமியும் கூட மகிழ்ச்சியான மனநிலையில் தான் இருந்தாள்.
தன் பக்கத்து சொந்தம் தான் விட்டுப் போயிருந்தது என்றாலும், கணவனின் பக்கத்து சொந்தம் வந்து சேர்ந்ததை எண்ணி மகிழ்ந்தாள்.

இந்த உறவை இன்னும் வளர்த்துக் கொள்ளவே விருப்பம் அவளுக்கு. என்னதான் அக்கம் பக்கத்தினர் அனுசரணையாக இருந்தாலும் ரத்த சொந்தம் போல் ஆகுமா? என்று தோன்றியது அவளுக்கு.

கணேசனின் வீட்டிற்கு செல்ல அங்கு பலத்த வரவேற்பு தான் அரவிந்தனின் குடும்பத்திற்கு.
கணேசனின் மனைவியோ விழுந்து விழுந்து கவனித்தாள்.

அவளது கவனிப்பில் முதலில் திணறித்தான் போனார்கள் லட்சுமியும் அரவிந்தனும்.
அரவிந்தன் தனது அண்ணன் மனைவி பற்றி தெரியுமாதலால் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. லட்சுமிக்கு அவளது பாசத்தில் இருந்த செயற்கைத்தணம் தெரியவே செய்தது.

ஆயினும் சொந்தங்கள் என்றால் இப்படி தானே. மேலும் புதிதாக பழகும் போது சில அசோகாரியங்கள் இருக்கத்தான் செய்யும் போகப்போக சரியாகும் என்றே எண்ணினாள்.

லேசாக மேடிட்ட வயிறுடன் இருந்த கணேசனின் மனைவியை கண்ட சுந்தரி "உங்க தொப்பை ஏன் பெருசா இருக்கு" என்று கேட்டாள்.

"அது பெரியம்மா வயித்துல குழந்தை இருக்குல்ல அதான் சுந்தரி மா" லட்சுமி சொல்லவே,

அவளை கட்டிக் கொண்ட குட்டி சுந்தரியோ "அம்மா நீயும் ரொம்ப சாப்பிட்டா இப்படி உனக்கும் பெரிய வயிறு வருமில்ல.
அப்புறம் குட்டி குழந்தையும் வரும் தானே. அது பாப்பா கூட விளையாடுமில்ல" குழந்தை அவளுக்கு தெரிந்த விதத்தில் சொல்ல,

கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அப்படி ஒரு சிரிப்பு.
அதே சிரிப்புடனே உணவு உண்டு அவர்களையும் தங்களது வீட்டிற்கு அழைத்தவர்கள் வீடு திரும்பினர்.

மீண்டும் வேலை என்று அரவிந்தன் வெளியூர் சென்று விட, லட்சுமியின் நாட்கள் சுந்தரியுடன் சுருங்கியது.

அன்றைய நாட்காட்டியை பார்த்தவள், "இன்னும் மூனு வாரம் தான் இருக்கு சுந்தரியோட பிறந்தநாளுக்கு.
இந்த பிறந்தநாளுக்கு பாப்பாக்கு ஒரு அழகான லாங் கவுன் சாட்டின் துணியில தைக்கணும்" என்று எண்ணிக் கொண்டவள், அரவிந்தனை அழைக்க அவனால் வர இயலாது என்று விட்டான்.

வெளியூரில் இருந்தாலும் இரண்டு தினங்களுக்கு ஒரு முறை தொலைபேசியில் அழைத்து விடுவான் அரவிந்தன்.

அந்த வார இறுதியில் அதற்கான துணிகளையும், இதர பொருட்களையும் வாங்கி வர வளர்நது வரும் நகரமான திருச்சி சென்றாள் சுந்தரியுடன்.

அலைந்து திரிந்து உடைகளை வாங்கி முடிக்கும் போது மதியம் இரண்டு மணி ஆனது.

மகளுக்கு பசிக்கும் என்று சிற்றுண்டி எடுத்து வந்திருந்தாள் லட்சுமி.

ஆயினும் இப்போது இருவருக்கும் பசி வயிற்றை கிள்ளியது. அருகில் இருக்கும் ஒரு உணவகத்தில் உணவு உண்ண சென்றனர் தாயும் மகளும்.

கைகளை கழுவி அமர்ந்தவர்கள், இருவருக்கும் பிரியாணி சொல்லி விட்டு காத்திருந்தனர்.

அப்போது திடீரென தனது எதிரில் அந்த அரசியல்வாதி வந்து அமர்ந்தான். இதனை சற்றும் எதிர்பார்க்காத லட்சுமி அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டாள்.

"என்ன லட்சுமி சாப்பிட வந்துருக்கியா உட்காருடா கண்ணு" கோணல் சிரிப்புடன் அவளது கை பற்ற போக, சட்டென அமர்ந்து விட்டாள் லட்சுமி.

முள்ளில் அமர்ந்து இருப்பது போல் அமர்ந்து இருந்தால் லட்சுமி. ஒரு பிடி உணவை கூட அள்ளி வாயில் வைக்க முடியவில்லை அவளால்.

அவனது அருகாமை தந்த ஒவ்வாமை உமட்டியது அவளுக்கு. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்

"நான் ஊட்டி விடவா கண்ணு" கையில் சோறை அள்ளி ஊட்ட போக, கையை தட்டி விட்டாள் லட்சுமி.

அவனைத் தீ பார்வை பார்த்தவள் தான் மகளுக்கு ஊட்டலானாள். வேகவேகமாக ஊட்டி விட்டவள் மகளை அள்ளிக் கொண்டு எழுந்தாள்.

அவள் கிளம்பவுமே அந்த அரசியல்வாதியும் எழுந்தான். குழந்தையை ஒரு கையில் பிடித்து நடத்திக் கொண்டு பைகளை ஒரு கையில் எடுத்துக் கொண்டு நடக்க முடியாமல் நடந்தாள் லட்சுமி.

உணவகத்தை விட்டு வெளியே வந்தவள் ஒரு ஆட்டோவை அழைக்க போக, அவள் அருகில் வந்து நின்ற அரசியல்வாதி ஆட்டோ காரனை பார்த்து "நீ போ" என்று அனுப்பினான்.

'லட்சுமி என்னோட வா. நான் உன்னை வீட்டில விட்டுவிடுறேன்" என்று அழைக்க "வேண்டாம் நான் பஸ்ல போய் விடுவேன்." சிணுங்கிய மகளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு கீழே குனிந்து பையை எடுத்தாள்.

அதனை கண்ட அந்த அரசியல்வாதி சுந்தரியை வாங்கி கொண்டு, இல்லைல்லை கிட்டத்தட்ட பிடுங்கி கொண்டு

"நம்ம கார்ல போலாமா செல்லம். வேடிக்கை பார்த்துட்டு தூங்கிட்டே போகலாம் சரியா" குழந்தைக்கு ஆசை காட்டினான். சுந்தரி யும் அடம்பிடிக்கவே, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு,

அவளது கையில் இருந்த பைகளையும் பறித்து கொண்டு காரில் அவளை வம்படியாக ஏற்றிக் கொண்டான்.

லட்சுமிக்கு பயத்தில் வியர்த்து வழிந்தது. என்னதான் ஓட்டுநர் இருந்தாலும் அவனும் அந்த அரசியல்வாதியின் ஆள் தானே.

பயத்தை வெளியில் காட்டாமல் அமர்ந்திருந்தாள். ஆனாலும் அவளால் முடியவில்லை. சுந்தரியோ வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு தாயை கேள்விகளால் துளைத்து எடுத்தாள்.

மேலும் அந்த அரசியல்வாதி தன் வீர தீர பிரதாபங்களையும், அரசியல் செல்வாக்கையும், பணத்தையும் பட்டியலிட்டு கொண்டு வர லட்சுமிக்கு தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போன்ற உணர்வு.

சரியாக சாப்பிடாததால் பசியும் சேர்ந்து கொள்ள எங்கே மயங்கி விடுவோமோ என்று வேறு பயந்தாள் அவள்.

இந்த பயணம் ஒரு முடிவுக்கு வராதா என்று எண்ணுகையில், கார் அவளது வீட்டு வாசலில் நின்றது உள்ளே வர முற்பட்ட அந்த அரசியல்வாதியை எப்படி தடுக்க என்று யோசித்துக் கொண்டிருந்தாள் லட்சுமி.

அந்நேரத்தில் ஒரு பெண்மணி தனது மகளுக்கு திருமணத்திற்கு ஜாக்கெட் தைக்க சொல்லி கேட்க வந்தாள். லட்சுமியும் அவரை பிடித்து வைத்துக் கொண்டாள். அவனும் வேறு வழியின்றி வாசலுடனே சென்று விட்டான்.

நிம்மதி பெருமூச்சு விட்டவள் ஒரு மணி நேரம் தூங்கி விட்டாள் சுந்தரியுடன். மாலையில் தொலைபேசி சத்தத்தில் விழித்தவள். அதனை எடுத்து காதில் வைக்க அரவிந்தன் தான் அழைத்து இருந்தான்.

சற்று நேரம் பேசிவிட்டு, அன்று அந்த அரசியல்வாதியை சந்தித்தது பற்றி கூறி திட்டிவிட, அவனோ அதற்கு நேர் மாறாக அவனின் புகழை பாடினான்.

அதில் கடுப்பானவள், தங்கள் மகளின் பிறந்தநாள் பற்றி பேசி விட்டு வைத்து விட்டாள்.

கணேசனின் குடும்பத்தையும் மகளின் பிறந்த நாள் விழாவிற்கு அழைத்து சொன்னாள் லட்சுமி.

நாட்கள் செல்ல, மறுநாள் சுந்தரியின் பிறந்தநாள் என்ற நிலையில், இன்று, முதல் நாள் இரவு லட்சுமி மகளுக்கு மருதாணி வைத்துக் கொண்டு இருந்தாள் வாசலில் அமர்ந்து.

வழக்கம் போல அவர்களது கதை உலகத்திற்குள் சென்றுவிட அவர்களுக்கே உரித்தான சம்பாஷனைகள் நடந்து கொண்டிருந்தது.

லட்சுமி, மகளிடம் "என்னோட கண்ணம்மா நிறைய படிக்கணும். பெரிய, பெரிய படிப்பு படிச்சு பெரிய வேலைக்கு போகணும். பொண்ணுங்களுக்கு கல்வியும் வேலையும் ரொம்ப முக்கியம் கண்ணம்மா. அம்மா சொல்றது உனக்கு புரியுதா என்னன்னு தெரியல, ஆனா அம்மா எப்போவும் இத சொல்லிக்கிட்டே இருப்பேன்" சொல்ல

சுந்தரிக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை "அம்மா நான் எங்க டீச்சர் மாதிரி ஆகணும்மா. அவங்க அழகா சேலை கட்டிக்கிட்டு, வளையல் போட்டுக்கிட்டு, பூ வச்சுக்கிட்டு, எங்க எல்லாத்துக்கும் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருப்பாங்கம்மா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குமா அவங்கள. பாப்பாவும் அதே மாதிரியே ஆகணும்மா" கண்களில் கனவு மின்ன உரைத்தாள் குழந்தையவள்.

"என்னோட கண்ணம்மா நல்ல டீச்சரா வருவடா. அம்மா உன்னை கண்டிப்பா டீச்சர்க்கு படிக்க வைப்பேன் சரியாடா'.
"அம்மா டீச்சர் ஆகனும்ன்னா படிக்கணுமா" என்று கேட்டாள் சுந்தரி. படிப்பு சொல்லி தருபவர்கள் படிக்க தேவையில்லை என்று எண்ணியதோ குழந்தை.

அவளது கேள்வியில் சிரித்து விட்டு, "ஆமாம் டா. நிறைய படிக்கணும். ரொம்ப நல்லா படிக்கனும் சுந்தரிம்மா. அப்போ தான் இப்ப நீ சொல்ற மாதிரி உன்னையும் எல்லாரும் நல்ல டீச்சர்ன்னு சொல்லுவாங்க சரியா. "

தாயின் வார்த்தைகள் பசுமரத்தாணி போல பதிந்தது அந்த சின்னஞ்சிறு சிட்டின் மனதில்.

லட்சுமியின் மனமோ "எப்பாடு பட்டாவது என் பொண்ண நல்லா படிக்க வைப்பேன்" உறுதி கொண்டது.

தாயும் மகளும் மருதாணி காயும் வரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
லட்சுமி தனது பாலிய வயது கதைகளையும் தனது அண்ணன் மற்றும் உதயின் தந்தையைப் பற்றியும் கூறினாள்.

புரிந்ததோ இல்லையோ கேட்டுக் கொண்டது குழந்தை. அப்படியே மருதாணியும் காய்ந்து விட அதனை கழுவி விட்டு, சுந்தரியை உறங்க வைத்தாள்.

சுந்தரியின் பிஞ்சுக் கைகளில் அந்த மருதாணி சிவப்பு அழகாக இருந்தது. அதைப் பார்த்து குதுகளித்தாள் அவள்.

சுந்தரிக்கு மருதாணி என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அடிக்கடி வைத்து விட சொல்லி தன் தாயை நச்சரிப்பாள்.

லட்சுமியும் மகளுக்கு வைத்து அழகு பார்ப்பாள். இயற்கையாக சிவந்திருக்கும் மகளின் உள்ளங்கையில் மருதாணி சிவப்பு கூடுதல் அழகு தரும். அதைப் பார்த்த தன் மகள் இவ்வளவு அழகா என்று புரித்து போவாள்.

லட்சுமி தான் இரவு பகலாக வடிவமைத்த மகளின் பிறந்த நாள் உடையை எடுத்து ஒரு தரம் பார்த்துவிட்டு சாமி படத்தின் கீழ் வைத்து வணங்கியவள் மகளின் அருகில் அவளை கட்டிக்கொண்டு தானும் உறங்கிப் போனாள்.


பாவம் அன்றைய இரவு தான் தன் வாழ்வின் நிம்மதியான உறக்கம் என்றும், இனி வரும் இரவுகள் தூங்கா இரவாக இம்சிக்க போகிறது என்று அறியாது போனாள் லட்சுமி.
 
அத்தியாயம் 25 (பகுதி 1):-

மறுநாள் அதிகாலையில் துயில் கலந்த லட்சுமி வாசல் தெளித்து கோலமிட்டுக் கொண்டிருக்கும்போது அரவிந்தன் வீடு வந்து சேர்ந்தான் மகளின் பிறந்த நாளுக்காக.

வீடு வந்தவனை புன்னகை முகமாகவே வரவேற்றாள் லட்சுமி.

ஆறு மணிக்கெல்லாம் பால்காரன் வந்து விடவே, லட்சுமி பாலை வாங்கி அதனை காய்ச்சி வைத்து விட்டு, தனக்கும் கணவனுக்கும் மட்டும் காபி போட்டாள்.

அதற்குள் அரவிந்தன் கை கால் கழுவி வரவே இருவருமாக அமர்ந்து காபியை பருகலானார்கள்.

அன்றைய தினத்தின் நிகழ்ச்சியை பட்டியலிட்டு சொன்னாள் லட்சுமி.

காலையில் உணவு உண்டு ஸ்ரீரங்கம் சென்று அரங்கநாதனை தரிசித்து விட்டு வருவது என்றும்,
மதியம் போல் கணேசனின் குடும்பத்தினர் வருவதாக இருந்தது. அவர்களையும் அரவிந்தன் அழைத்து இருந்தான்.

மாலை போல் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் .
அவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலே சுந்தரி கண் விழித்தவள் எழுந்து வந்து விட்டாள்.

தந்தையை கண்டதும் ஓடிச்சென்று தாவி அவன் மீது ஏறிக் கொண்டாள்.

மகளைக் கண்ட சந்தோஷத்தில் அவளை வாரி அனைத்து முத்தம் மழை பொழிந்தான் நல்ல தகப்பனாக. லட்சுமியோ மகளின் தலையில் கை வைத்து லேசாக அழுத்தியவள், "என் கண்ணம்மாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா. நீண்ட ஆயுளுடன் நல்லா இருக்கணும்." சொன்னாள் ஆசீர்வதிப்பது போல்.

பின்னர் மகளுக்கு பல் துலக்கி முகம் கழுவி அழைத்து வந்தாள் லட்சுமி.

அதனை கண்ட அரவிந்தன் எப்பொழுதும் போல, "இனிமே பாப்பாவை அவளோட வேலையை அவளே செய்ற மாதிரி பழக்கு லட்சுமி. இன்னும் பல்லு விலக்கி விடறது, ஊட்டி விடுவது, இதெல்லாம் குறைச்சுக்க பாப்பாவையே செய்ய வை." அவன் சொல்ல,
"என் பொண்ணுக்கு எத்தனை வயசு வந்தாலும் நான் தான் ஊட்டி விடுவேன்" என்றாள் அவள்.

அதற்கு அவனோ "பிள்ளையை உன்ன சார்ந்து இருக்க வைக்காத லட்சுமி. பின்னால கஷ்டம்." சற்று கடுமையாக செல்ல அவனை முறைத்து விட்டு சமையல் அறைக்குள் சென்றாள்.

காலை உணவாக பூரி, பொங்கல், வடை, கேசரி என்றிருக்க, மதிய உணவிற்கு வெளியே சொல்லிக்கொள்ள முடிவெடுத்திருந்தனர்.

ஒருபுறம் சமையலை முடித்தவள், தானும் குளித்து மகளையும் குளிப்பாட்டி அழைத்து வந்தாள்.

அரவிந்தன் தனது பையில் இருந்து மகளுக்கென வாங்கி வைத்திருந்த பட்டு பாவாடையையும், மூன்று பவுனில் காசு மாலையையும், இரண்டு பவுனில் அட்டிகையையும், எடுத்துக் கொடுத்தான் பிறந்தநாள் பரிசாக.

பட்டுப்பாவாடையையும் காசு மாலையையும் மகளுக்கு அணிவித்தவள் தானும் ஒரு டாலர் செயினை அணிந்து கொண்டு பேன்சி காட்டன் புடவையை உடுத்திக் கொண்டு கோவிலுக்கு தயாரானாள்.
அன்று போல இன்றும் இருசக்கர வாகனத்தில் அவர்களின் பயணம்.

கோவிலில் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டவர்கள், அங்கிருந்த கடைகளில் விளையாட்டு சாமான்கள் வாங்கிக் கொண்டு வீடு வந்தனர்.

வீடு வந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர்.

பதினோரு மணி அளவில் கணேசனும் அவரது மனைவியும் வந்தனர்.
தனி வீடாக பத்து சென்ட் இடத்தில், வீடு, தோட்டம் என்ற சற்று பெரிய வீடாக இருப்பதை கண்டு வியந்து போயினர் இருவரும்.

வீட்டிற்குள் வந்தவர்களை வரவேற்று குடிக்க உண்ண கொடுத்து உபசரித்தாள் லட்சுமி.

கணேசனின் மனைவிக்கு ஆறு மாதம் முடிந்து ஏழு தொடங்க இன்னும் ஒரு வாரம் இருக்கவே வளைகாப்பு பற்றிய பேச்சு எழுந்தது அங்கே
"உனக்கும் ஏழுல தானே வளகாப்பு போட்டாங்க." கணேசனின் மனைவி கேட்க,
உதடு கடித்து தன்னை கட்டுப்படுத்தியவள், "இல்லை அதுதான் அண்ணன் குடும்பத்தோட இன்னும் சரியாகல இல்ல. அதனால இங்க இருக்க ஒரு கோவிலில் சின்னதா நாங்களே வளைகாப்பு வச்சிக்கிட்டோம்." உணர்வின்றி சொன்னாள் லட்சுமி.

மனைவியை அறிந்தவனாக "அந்த பேச்சை விடுங்க அண்ணி. உங்க வளைகாப்புக்கு சொல்லுங்க நாங்க வரோம்" என்று முற்றுப்புள்ளி வைத்தான் அரவிந்தன்.

பின்னர் அவர்கள் சொல்லிய உணவகத்தில் இருந்து பதார்த்தங்கள் வரவே அனைவரும் உண்டனர்.
மாலை நேரத்திற்கும் தேவையான சிற்றுண்டியும் சேர்த்தே வந்திருந்தது.

உணவு முடிந்ததும் ஆண்கள் இருவருமாக வீட்டை அலங்கரிக்க, பெண்கள் இருவரும் உடை மாற்றி சுந்தரியை அலங்கரிக்கலானார்கள்.

சற்று நேரத்தில் எல்லாம் அரவிந்தன் ஏற்பாடு செய்திருந்த போட்டோகிராபர் வீட்டிற்கு வரவே, குட்டி சுந்தரியை விதவிதமான ஆடையைகளில் அலங்கரித்த படம்பிடித்தனர்.

ஆண்டாள் அலங்காரம், ராதை வேஷம், வள்ளி குறத்தி, கண்டாங்கி சேலை அணிந்து, சவுரி முடி வைத்து பூ தைத்து அலங்கரித்து என மகளை கண் குளிர நிற்க வைத்து படம் எடுத்தனர் லட்சுமியும் அரவிந்தனும்.

இதனை எல்லாம் கண்ட கணேசன் தம்பதியருக்கு தங்களின் குழந்தைக்கும் இது போல செய்ய வேண்டும் வசதியாக வாழ வைக்க வேண்டும் என்ற பேராசை தோன்றியது.

ஆம் பேராசைதான் தன் உழைப்பில் தான் முன்னேறி தனது வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்ள எண்ணினால் அது ஆசையில், கனவில் சேரும் அதுவே அடுத்தவனை பார்த்து வாழ்வது, அவனது சொத்துக்களை அபகரிக்க நினைப்பது, பேராசை தானே, நாளை அது பெரும் நஷ்டத்தையே விளைவிக்க வல்லது.

நேரம் மாலையை தொடவே, சுந்தரியை உடம்புக்கு ஊற்றி குளிக்க வைத்து லட்சுமி தானும் தயாராகி பட்டுடுத்தி வந்தவள் மகளுக்கு அவளே தைத்திருந்த கவுன் போட்டு விட்டாள்.

அரவிந்தன் தந்த அட்டிகையையும் போட்டு விட்டாள் மகளுக்கு.
பின்னர் பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டார்கள்.

அக்கம் பக்கத்தினரையும் அழைத்தனர் கேக் வெட்டும் நிகழ்விற்கு.
அப்போது அங்கு வந்து சேர்ந்தான் அந்த அரசியல்வாதி.

அவனது வரவை யாருமே எதிர்ப எதிர்பார்க்கவில்லை அங்கே. லட்சுமி அருவருப்பில் முகம் சுளித்தாள். அரவிந்தனோ எதிர்பாராத திகைப்பில் இருக்க, லட்சுமி அவனை முறைத்தாள் அவளது முறைப்பில் "நீ திட்டுவேன்னு நான் சொல்லலடி" முனுமுனுத்தான் அவன்.

அவனைக் கூர்ந்து பார்த்தவள் ஒன்றுமே சொல்லவில்லை. ஏற்கனவே அவள் சொல்லி இருந்தாள் இனி அந்த அரசியல்வாதியை எதர்க்கும் தங்களது வீட்டிற்கு அழைக்கக்கூடாது என்று, சற்று கடமையாகவே தான்.
ஆயினும் வீட்டிற்கு வந்து விட்டவனை வேறு வழியின்றி உபசரித்தாள் குடும்ப தலைவியாக.

அரவிந்தன் தனது அண்ணனுக்கு அறிமுகப்படுத்தினான் அந்த அரசியல்வாதியை.

தனக்கு குடிக்க தேநீரும் சிற்றுண்டியும் தந்தவளை கண்களாலையே துகில் உரித்தான் அந்த அரசியல்வாதி.

அவள் மீது கொண்ட உன்மத்தம் பேயாய் பிடித்து ஆட்டியது அவனை. எப்பொழுதும் தன்னை வெளிப்படுத்தாதவன் என்று கண்களை லட்சுமியை விட்டு எடுக்கவே இல்லை.

'பச்சை பட்டு உடுத்தி கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்காளே, ஒரு பிள்ளைக்கு அம்மானு சொல்ல முடியாது' ஆடையை தாண்டி கண்டது போல அலைபாய்ந்தான் அவன்.

மெல்ல அக்கம் பக்கத்தினர் வருகை தந்தனர் பிறந்தநாள் விழாவிற்கு. அனைவரும் வந்துவிடவே லட்சுமி மகளை கையில் ஏந்தி கொண்டு கணவனுடன் நின்று கொண்டாள்.

குழந்தை சுந்தரியின் கையில் கேக் வெட்டும் கத்தியை கொடுத்து வெட்ட சொல்ல, அழகாக பாடல் பின்னணியில் இசை கேக் வெட்டினாள் திரிபுரசுந்தரி.

அனைவருக்கும் குழந்தையின் கையிலே கேக்கை கொடுத்து, கொடுக்க வைத்தாள் லட்சுமி.
வந்தவர்களுக்கு சிற்றுண்டி பரிமாற, அவர்களும் உண்டு விட்டு வாழ்த்திய விடைபெற்ற சென்றார்கள்.

அனைவரும் செல்லவே வேறு வழி இன்றி அந்த அரசியல்வாதியும் சென்றான்.
ஆனால் வீட்டு வாசலை கடக்கும் போது அவன் பார்த்த பார்வையின் பொருள் தெரியாமல் குழம்பி போனாள் லட்சுமி. செக்கச் சிவந்திருந்த கண்களில் உள்ள வேட்கையை உணர்ந்து இருந்தால் நன்றாக இருந்திருக்குமோ.

மணி ஏழு ஆனது கணேசனிற்கு அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டி இருப்பதால், அவரும் விடை பெற்றார் மனைவியை அழைத்துக்கொண்டு.

குட்டி சுந்தரியின் கண்கள் தூக்கத்திற்கு சுழல, மகளுக்கு வெந்நீரில் உடலை கழுவி விட்டு சூடாக பால் தந்து திருஷ்டி கழித்த பின்னரே உறங்க வைத்தாள் லட்சுமி.

எஞ்சியிருந்த கணவனும் மனைவியும், இருவருமாக அமர்ந்து கதை பேசிக்கொண்டிருக்க, அலைபேசி அடித்தது.
அரவிந்தன் எடுத்து என்னவென்று கேட்க, அந்த அரசியல்வாதி தான் ஏதோ வேலை என்று அழைத்து இருந்தான்.

அடுத்த சில நொடிகளில் அங்கிருந்து கிளம்பி இருந்தான் மனைவியின் பேச்சையும் மீறி.
நெஞ்சம் படபடத்தது லட்சுமிக்கு அவளது உள்ளுணர்வு ஏதோ விபரீதம் என்று சொல்ல, கடவுளை ஒருமுறை வணங்கி விட்டு மகளின் அருகினில் படுத்துக்கொண்டாள்.
சிறிது நேரத்தில் நன்றாக உறங்கியும் விட்டாள்.

எங்கோ கனவில் கதவு தட்டப்படுகிறது என்று முதலில் எண்ணியவள் அது தன் வீட்டு கதவு தட்டும் ஓசைதான் என்று உணர்ந்தவள் அடித்து பிடித்து எழுந்தாள். இந்த நேரத்தில் யாராக இருக்கக்கூடும் ஒருவேளை அரவிந்தன் வந்திருப்பானோ நினைத்துக் கொண்டே கதவை திறந்தவள் திகைத்து போனாள், அஙங நின்றிருந்தஅரசியல்வாதியை கண்டு.

அவனோ முழு போதையில் இருந்தான். தள்ளாடியபடி உள்ளே வந்தவன் அவளை வேண்டுமென்றே நன்றாக இடித்து விட்டு அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.

அவனது செயலில் லட்சுமிக்கு முகம் வெளிறியது. ஆயினும் பயத்தை மறைத்துக் கொண்டு, இப்போது எதற்கு இவன் வந்திருக்கிறான் அதுவும் குடித்துவிட்டு நினைத்துக் கொண்டவள், "அவர் வீட்ல இல்ல" என்றாள்.

"தெரியும்" அவளை மேலிருந்து கீழ பார்வையால் அளந்தான். இரவு உடையில் இருந்தாள். அவனது பார்வையின் அருவருப்பு தாளாமல் ஒரு துண்டை எடுத்து மேலே போர்த்திக் கொண்டால் அவள்.

"உன் மக தூங்குகிறாளா" வாய் குழறியது அவனுக்கு.
அவன் கேட்டது தான் தாமதம் மகள் உறங்கிக் கொண்டிருக்கும் அறையை வெளியில் தாளிட்டால் லட்சுமி.

அதனை கண்டவன் "அய்யய்யோ எனக்கு நீதான் வேணும். உன் பொண்ணு இல்ல" நக்கலாக சொன்னான்.
மேலும், "ஒரே ஒரு ராத்திரி என் கூட இரு. உன் மேல ஒரு விதமான மோகம் வண்டாக என்னை குடையுது அது மட்டும் தீர்த்து விடு" என்றான் கெஞ்சலாக.

அதில் அதிர்ந்த லட்சுமி வெளியில் ஓட பார்க்க, வெளி கதவை தாளிட்டான் அவன்.
"புள்ளைய கூட மறந்துட்டு ஓடற" நக்கலாக சொல்லியவன், அவளை நோக்கி அடியெடுத்து வைக்க "என்ன விட்டுற ப்ளீஸ் இதெல்லாம் தப்பு." கண்ணீர் மல்க கூறினாள்.

"அழாத கண்ணு. அடம் பிடிக்காமல் இருந்த அரை மணி நேரம் இல்ல ஒரு மணி நேரத்தில் முடித்துவிட்டு, நான் பாட்டுக்கு போயிடுவேன்" இன்னும் அவளை நெருங்கினான்.

வெளிக்கதவு பக்கம் மீண்டும் பாயப்போனவளது கைகளை லாவகமாக பற்றி "என்ன கண்ணு திரும்பத் திரும்ப வெளியே ஓட பார்க்கிறாயே" பரிகாசித்தவன்

"மாசக்கணக்கா உன் புருஷன் வேலைன்னு வெளியூர் போறான். நீ தனியா இருப்பதானே. இனிமே அவன் வெளியூர் போற அன்னைக்கு நான் வரேன்" என்று வேறு சொல்ல,

அதில் கோபம் கொண்ட லட்சுமி "நீதானே அவரை இப்படி அனுப்பி விடுற வெளியூருக்கு" என்றால் ஆவேசமாக.

"அட கரெக்ட் நான் தான் அனுப்புறேன். ஏன் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் போட்டு பேசினதும் நான்தான்"

அவனது கூற்றில் அவனை வெறித்தவள், "விருப்பமில்லாத பொண்ணு கிட்ட அதுவும் கல்யாணம் ஆன ஒரு குழந்தையோட அம்மா கிட்ட இப்படி நடந்து கொள்வது பாவம்." கெஞ்சினாள் அவள்.

"கல்யாணம் ஆனா மத்தவங்கள பாக்க கூடாதுனு ஏதாவது சட்டம் இருக்கா என்ன. எனக்கும் தான் கல்யாணம் ஆயிடுச்சு, பொண்டாட்டி இருக்கா, ஆனாலும் பாரு நான் தினமும் ஒரு பொண்ணோட இருக்கேனே" ஏதோ சாதனை போல பெருமையாக சொன்னான் அவன்.

"முதன் முதலில் என் வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க வந்தியே அன்னையில இருந்து எனக்கு உன் மேல ஒரு கண்ணு" அத்தனை பற்களையும் காட்டி சிரித்தபடி கூறினான்.

"அதுவுமில்லாம உன்ன ஒரு பொண்ணுக்கு அம்மான்னே சொல்ல முடியாது. அவ்ளோ சிக்குன்னு இருக்க, எல்லாமே எடுப்பா இருக்கு கண்ணு உனக்கு. கண்ணு நைட்டி விட சேலை தான் உனக்கு ஜோரா இருக்கும். அதுவும்..." என்றவன் மேலும் சொன்ன வார்த்தைகளின் வீரியம் தாங்காமல் வேதனையுடன் காதுகளை பொத்திக் கொண்டாள்.

ஏதேனும் அதிசயம் நடந்து விடாதா தன்னை காத்துக் கொள்ளும் வகை தெரியாமல் திண்டாடினாள் லட்சுமி. மூளை மரத்துப் போனது போன்ற உணர்வு அவளுக்கு. யோசிக்க முடியாமல் கண்கள் அலைபாய நின்றிருந்தாள். அந்த நேரத்தில் கதவு தட்டப்பட யார் என்று குழம்பினர் இருவரும்.
 
அத்தியாயம் 25 (பகுதி 2):-

ஏதேனும் அதிசயம் நடந்து விடாதா தன்னை காப்பாற்ற யாரும் வரமாட்டார்களா என்று எண்ணினாள் அவள்.

தன்னை காத்துக் கொள்ளும் வகை தெரியாமல் திண்டாடினாள் லட்சுமி. மூளை மரத்துப் போனது போன்ற உணர்வு தந்தது அவளுக்கு.

யோசிக்க கூட முடியாமல் கண்கள் அலைபாய நின்றிருந்தாள்.

அந்த நேரத்தில் கதவு தட்டப்பட யார் என்று குழம்பினர் இருவரும்.

கதவு தட்டம் ஓசையோடு சேர்த்து இப்போது அரவிந்தனின் குரலும் கேட்கவே லட்சுமியின் முகம் பிரகாசமானது.

அந்த அரசியல்வாதி பாய்ந்து கதவு புறம் ஓடியவளைப் பற்றி இழுக்க போக அவனை தள்ளிவிட்டு கதவை திறந்தாள்.

"வண்டி பஞ்சர் ஆயிடுச்சு லட்சுமி. அதான் போக முடியலை. மணி 12 ஆகுது. நீ இன்னும் தூங்கலையா. பாப்பா தூங்கிட்டாளா."

பேசியபடி உள்ளே வந்தவன், அங்க அந்த அரசியல்வாதியை கண்டு திகைத்தான் என்றால் மனைவியின் கோலத்தை பார்த்து அதிர்ந்தான்.

அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த அரசியல்வாதி "வா அரவிந்தா" என்க,
"அண்ணே நீங்க" என்றான் தயங்கியவாறு.

இப்போதும் தவறாக நினைக்க தோன்றவில்லை போலும் அவனுக்கு.

அதற்கு அந்த அரசியல்வாதியோ
"என்னத்தப்பா சொல்றது, பாவம் நீ. உன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா பாரு இன்னிக்கு நீயே தெரிஞ்சுக்கிற மாதிரி ஆயிடுச்சு." என்று பீடிகையுடன் ஆரம்பித்தவன் ஒரு பெருமூச்சு விட்டு, ஒரு கணம் தயங்குவது போல தயங்கி,

"நீ 'அந்த' விஷயத்துல சரியில்லையாம் அதான் உன் பொண்டாட்டி என்ன படுக்க கூப்பிட்டா" என்று சொல்லிவிட,
அவ்வளவுதான் அந்த அரசியல்வாதியின் மேல் பாய்ந்து விட்டான் அரவிந்தன்.

அந்த அரசியல்வாதி சொன்ன அத்தனையையும், லட்சுமி ஒருவித நடுக்கத்துடன் அதிர்வாய் பார்த்து இருக்க, அரவிந்தனின் செயல் ஒரு புறம் பாலை வார்த்தது என்றால், இது அத்தனைக்கும் அவன் தானே காரணம் என்ற எண்ணம் தோன்றவே, அந்த நொடியில் அவனை அறவே வெறுத்தாள்.

தன் மீது பாய்ந்தவனின் செயலில் ஒரு நிமிடம் தடுமாறினாலும் அடுத்த நிமிடம் அவனை மூர்க்கதனமாக சுவற்றில் அவனது தலையை தன் பலம் கொண்ட மட்டும் மோதினான் அந்த அரசியல்வாதி.

குடிவெறியும், பெண் பித்தோடு சேர்ந்த உடல் பலமும் போட்டி போட அரவிந்தனால் அவனது செயலை எதிர்க்க முடியவில்லை.

"ஏன்டா நாயே நான் போடுற பிச்சை காசுல வாழற நீ என் மேல கை வைக்கிறியா" அரவிந்தனின் ஒரு கையை முறுக்கியவாறு பேசினான் அந்த அரசியல்வாதி.

தன் அருகில் வந்த மனைவியை பார்த்தவன் "நீ பாப்பாவ தூக்கிட்டு போ. உங்க அண்ணன் வீட்டுக்கு இல்ல எங்க அண்ணன் வீட்டுக்கு போ." தன் வலியை கட்டுப்படுத்தியவாறு பேசினான்.

அவன் சொல்வது தான் சமயோஜிதம் என்று உணர்ந்தவள் குழந்தை இருக்கும் அறையை நோக்கி செல்லவே,

"போ நீ மட்டும் உன் குழந்தைய தூக்கிட்டு வெளியே போனா, வெளியில என் ஆளுங்க இருக்காங்க. நீ தான் என்னை வர சொன்னன்னு சொல்லி எல்லாரையும் கூப்பிட்டு ஊர் சிரிக்க வச்சிடுவேன். அதுவும் இல்லாம உன் குழந்தை உயிரோட இருக்கணுமா வேணாமா" என்று வக்கிரமாக கூற கால்கள் மடங்க துவண்டு அப்படியே அமர்ந்து விட்டாள்.

தன் மனைவியை பரிதாபமாக பார்த்தான் அரவிந்தன். அதனை கண்ட அந்த அரசியல்வாதியோ,

"ஏண்டா டேய் உன் பொண்டாட்டி போடுற துணி, சாப்பிடும் சோறு எல்லாம் என் காசுல தானே. அப்ப ஏன் ஒரு பொழுது என் கூட இருக்கக் கூடாதாமா"
அசிங்கமாக கேட்க, தன் உயிர் போய் விடாதா, என கூனி குறுகினாள் லட்சுமி.

அரவிந்தனோ தலை குனிந்தான். அவனை வெறித்து பார்த்த லட்சுமியின் மனமோ 'இவன் கிட்ட அவர் வேலை செஞ்சிருக்கார் தானே. அதுவும் உழைப்பு தானே. சொல்றதுக்கு என்ன' கேட்டுக் கொண்டது.
ஆனால் அந்த எண்ணத்திற்கும் அரை நிமிடம் தான் ஆயுள் போல்,

"எனக்கு பொம்பள வேணும்னா கூட நீ கொண்டு வருவ தானே. வெளியூரிலிருந்து கூட கூட்டிட்டு வருவியே இப்போ உன் பொண்டாட்டின்னா மட்டும் கசக்குதோ" அத்தனை ஏளனமாக கேட்டான் அவன்.

அவனது பேச்சு முதலில் புரியாதது போல இருந்தாலும், பின்னர் புரிந்த போது கதறி அழுதாள் லட்சுமி. நிலத்தில் புழுவாக துடித்தாள். தனது தலையை பிடித்துக் கொண்டவள், கணவனை கைகாட்டி ஏதோ சொல்ல வர, அப்போது வார்த்தை வராது தனது கைகள் இரண்டையும் நிலத்தில் அடித்து கொண்டாள். தன்னையே அருவருப்பாக உணர்ந்தது போல கை கால்களை உதறினாள். அவளது செயலை பார்த்து அரவிந்தனின் கண்கள் கண்ணீர் சிந்தின. காலம் கடந்த ஞானம் பிரயோஜனமில்லை.

"என்னடா உன் பொண்டாட்டி பத்தினி வேஷம் போடுறா. இது தெரியாதா அவளுக்கு. ஆமா நான் படுத்த பொண்ணுங்க கூட எல்லாம் நீயும் தானே போவ" இடியாய் வார்த்தைகளை இறக்கியவன் மேலும்

"பாவம்டா அந்த பொம்பளைங்க. நீ 'அந்த' விஷயத்துல அதிரடியா இருப்பியாமே. கில்லாடி தான் சொன்னாளுக"
ஏதோ நகைச்சுவை சொன்னது போல அப்படி ஒரு சிரிப்பு அவனிடம்.

இப்போது லட்சுமி கணவனையே அசையாத பார்வை பார்த்தாள்.

அந்த நொடி காதல் திருமணம் இரண்டையும் அறவே வெறுத்து விட்டாள் அவள்.

'உன்னை காதலிச்சு வீட்டை விட்டு வந்து திருமணம் செய்ததன் பலன் கண்முன்னே தெரிகிறது' என்று உணர்த்தியது அந்த பார்வை அவனுக்கு.

இப்போது அவளின் கண்ணீர் சுரப்பி கூட வேலை நிறுத்தம் செய்திருந்தது. இலக்கின்றி வெறித்தவளின் பார்வையை கண்டவன் வேதனையுர அதனை திருப்தியாக பார்த்த அந்த அரசியல்வாதியோ,

"வேணும்னா இப்படி பண்ணலாமா உன் பொண்டாட்டிய என்கிட்ட வித்துடேன். பெருசா ஒரு அமௌன்ட் போட்டு தரேன்" கேட்டான் வஞ்சத்துடன்.

அவனது பேச்சில் வெகுண்டு எழுந்தவன், அவனை கீழே தள்ளி அவன் மீது ஏறி அமர்ந்து அவனது முகத்தில் அறைந்தான்.

இதனை சற்றும் எதிர்பாராத அந்த அரசியல்வாதி சட்டென சுதாரித்துக் கொண்டு பதிலுக்கு அவனது முகத்தில் ஓங்கி குத்தினான். மூக்கு உடைந்து ரத்தம் பீறிட்டது அரவிந்தனுக்கு.
அந்த நொடியை பயன்படுத்திக் கொண்டு அவனை தள்ளி விட்டு எழுந்த அந்த அரசியல்வாதி,

"எவ்வளவு தைரியம் என்னையே அடிக்கிற" ஆத்திரத்துடன் கூறியவன், அவனது உச்சி முடியை பிடித்து சுவற்றில் மோதினான் விடாமல்.

இந்த மோதலில் அரவிந்தனின் உயிர் போனது. அரவிந்தனின் கண்கள் ஜீவனின்றி லட்சுமியை வெறித்துப் பார்த்த வண்ணம் உயிரை விட்டிருந்தது.

தன் முன் துடிதுடித்து இறந்த கணவனை, எந்தவித சலனமும் இன்றி பார்த்தாள் லட்சுமி.

அவளது மனதில் இருந்த ஒவ்வாமையோ, அருவருப்போ, வெறுப்போ, கோபமோ ஏதோ ஒன்று அரவிந்தனை கணவனாக காட்டாமல் போனது அவளுக்கு.

இனி விதி விட்ட வழி தளர்ந்துபோனவளாய் நிலத்தில் சரிய, அதனை கண்டு எக்காளமிட்டவன்

"அப்படி வா வழிக்கு." என்றவன், தனது சட்டையை கழட்டி போட்டுவிட்டு லட்சுமியை நெருங்கினான்.

தீட்சண்யமான கண்களுடன் அவனையே லட்சுமி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் பார்த்துக் கொண்டிருக்கிற பொழுதே அவள் மீது கவிழ்ந்தவன், கழுத்தில் வெட்டப்பட்டு விழுந்தான்.

ஆம் அவள், அவனைக் கொன்று விட்டாள். மருதாணியில் சிவந்த கரங்களில் இப்பொழுது இரத்தக் கறைகள்.

தனது கையை ஒருமுறை உயர்த்தி பார்த்தவள் மீண்டும் அவனை கூறு போட்டாள். தன் கையில் இருந்த காய் வெட்ட பயன்படுத்தும் அரிவாள் மனையில்.

அவள் சரிந்திருந்த இடமோ குளிர்சாதன பெட்டியின் அருகில். அங்கு உள்ள சந்தில்தான் அரிவாள் மனையை அவள் வைப்பது வழக்கம். சுந்தரிக்கு எட்டாத வரையில் உள்ளடங்கி தள்ளிவைப்பாள்.

காய்கறிகளை பிரிட்ஜில் இருந்து எடுப்பதற்கும், அங்கேயே அமர்ந்து நறுக்குவதற்காக இந்த ஏற்பாடு.

வீடு எங்கும் ரத்தக்கறை. இரு பிணங்கள் வீட்டில் கிடக்க, தன்னருகில் இருந்தவனை காலால் தள்ளி விட்டு ஒதுங்கி சுவற்றோடு ஒன்றிய வாறு அமர்ந்து கொண்டாள்.

ஏதோ தோன்ற கடிகாரத்தை பார்த்தால், அது மணி மூன்றை காட்டியது. இத்தனை களேபரத்திலும் சுந்தரி எழவில்லை. இரவு படுத்தால் காலையில் தான் விழிப்பாள் அவள். மேலும் மூடிய அறைக்குள் இவர்களின் சத்தம் பாவம் அந்த பிஞ்சு காதுகளை எட்டவில்லை போலும்.

நடுவில் ஒரு முறை, போர்வையை நனைத்து விடுவாள் என்பதற்காக லட்சுமி தான் எழுப்புவாள்.

அதற்கு கூட கண்களை திறக்காமல் கனவில் செய்வது போல, பாத்ரூம் சென்று வந்து படுப்பாள்.


இன்று அவள் இருக்கும் களைப்பில் கண்டிப்பாக எழுந்திருந்திருக்க மாட்டாள்.

ஊரெங்கும் விடியலை நோக்கி இருக்க, இவளது வாழ்வோ இரு ஆண் என்னும் காமுகர்களால் அஸ்தமனமானது.
 
அத்தியாயம் 26:-

மறுநாள் காலை பால் காரன் வந்து குரல் கொடுக்கவே லட்சுமி கண்விழித்தாள்.

சுவற்றில் சாய்ந்த படியே கண் அயர்ந்திருந்தாள், அசதியில் ஒரு பொழுது தூங்கியிருக்க, நடந்த அத்தனையும் கனவு போல என்று நினைத்து, மரத்து போன கால்களை மெல்ல அசைத்து எழும்பியவள்,

கைகளால் முகத்தை அழுந்த துடைக்க போக, நிதர்சனம் பொட்டில் அறைய பேந்த பேந்த விழித்தவள், முகத்தை மூடி அழ ஆரம்பித்து விட்டாள்.

மீண்டும் குரல் கொடுத்த பால் காரனிடம், வருகிறேன் என்று மட்டும் சொன்னவள், படுக்கை அறையில் இருக்கும் குளியலறைக்கு சென்று முகத்தை நன்கு கழுவியவள், மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு, சமையலறையில் பாத்திரம் எடுத்து கொண்டு பால் வாங்கி வந்தாள்.

வீட்டினுள் வந்து பாலை வைத்து விட்டு, அலமாரியில் இருந்து பழைய போர்வைகளை எடுத்து கீழே கிடந்த சடலங்களை மூடினாள், மகளிடம் இருந்து மறைக்கும் பொருட்டு.

இது வரை எந்த ஒரு உணர்வும் இன்றி நிர்சலனமாக இருந்தவள் மனதில், தான் சிறைக்கு சென்று விட்டால் மகளை என்ன செய்ய என்ற எண்ணம்தான் தோன்றியது.

தனது அண்ணன் தன் மகளின் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்பதில் அவளுக்கு சந்தேகம் தான். ஆனால் அதுவே கணேசனும் அவரது மனைவியும் தனது மகளை நன்றாக பார்த்து கொள்வார்கள் என்று நம்பினாள் லட்சுமி.

அந்த நம்பிக்கையில் முடிவு எடுத்தவள், தொலைபேசி எடுத்து கணேசனுக்கு அழைத்து, அரவிந்தன் இறந்து விட்டான் என்று மட்டும் கூறினாள். மற்றதை நேரில் சொல்லி கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு.

மகளுக்கு பாலும், தனது தலைவலிக்கும், தெளிவாக சிந்திக்கவும் வேண்டி தனக்கு காபி போட்டுக்கொண்டாள்.

மகள் எழுந்து விட்டதை உணர்ந்து, எங்கே அவள் வரவேற்பறைக்கு வந்து விடுவாளோ என்று பயந்து போய், படுக்கையறைக்கு விரைந்து சென்றாள்.

"கண்ணம்மா எழுந்துட்டியாடா" மகளை அழைத்தபடி அருகில் சென்றவள் வாரி அனைத்து கொண்டாள்.

"குட்மார்னிங் மா" கண்ணத்தில் முத்துமிட்டது குழந்தை.

"அப்பா எழுத்துருச்சுட்டாங்களா மா" கேட்ட மகளிடம்

"அப்பா ஊருக்கு போயிருக்காங்கடா. நீ பல்லு விலக்கு வா." அதே நேரம் முதல் தினம் குழந்தையை உன்னை சார்ந்து இருக்கும்படி வளர்க்காதே என்று அரவிந்தன் சொன்னது நினைவு வர, அழுகை பொத்துக் கொண்டு வந்ததது. விழிநீரை உள்ளிழுத்தபடி மகளுக்கு தேவையானதை பார்த்தாள்.

பாலை பருக குடுத்தவள், எண்ணமெல்லாம் மகளை பற்றியதே. ஆயினும் தனக்கு அவ்வளவு நேரமில்லை என்று உணர்ந்து மகளை குளிப்பாட்டி தானும் குளித்து வந்தாள்.

கடவுளின் முன்பு நின்று வணங்கியவள், வகிட்டில் குங்குமம் வைக்காமல் நெற்றியில் மட்டும் பொட்டு வைத்து தனது தாலியை கழட்டி சாமி படத்திற்க்கு கீழே வைத்து மீண்டும் ஒருமுறை வணங்கினாள்.

தான் செய்வது சரியா என்று சிந்தனை வயப்பட்டவள், மகளின் குரலில் கலைந்தாள்.

"அம்மா இன்னிக்கு ஸ்கூல் போகணும்தானே. நான் மருதாணிய என் பிரண்ட்ஸ் கிட்ட காமிக்கணும்." சொன்ன மகளை மீண்டும் மார்போடு அனைத்து கொண்டாள்.

'அய்யோ கடவுளே எம்புள்ள படிப்பு இனி எப்படியாகுமோ' மகளின் எதிர்காலம் நினைத்து கண்ணீர் வடித்தாள்.

சிறிது நேரத்தில் தன்னை தேற்றிக் கொண்டவள் "இன்னிக்கு ஸ்கூல் லீவுடா கண்ணம்மா" என்று சொன்னவள். மகளை விளையாட சொல்லி, அந்த அறையை விட்டு வர வேண்டாம் என்றும் எச்சரித்து சென்றாள்.

பக்கத்து அறையில் உள்ள அலமாரியில் உள்ள சொத்து பாத்திரங்கள் மற்றும் நகைகளை எடுத்தவள், ஒரு பையில் வைத்தாள் கணேசன் வந்தால் தருவதற்காக.

மேலும் மகளுக்கு தேவையான ஆடைகள், புத்தகங்கள், அவளது சான்றிதல்கள் என அவற்றையும் ஒரு பையில் வைத்தாள். வீட்டில் செலவுக்கு என்று இருந்த கைப்பணத்தையும் கூட அந்த பத்திரங்களுடனே வைத்து விட்டாள்.

அவளுக்கு தண்டனை என்பது உறுதி அதனால் வாதாடுவதற்கெல்லாம் ஏற்பாடு செய்ய முனையவில்லை.
ஆனால் அப்படி தனக்கென யாரையாவது வாதாட ஏற்பாடு செய்திருக்கலாம் என்று சீக்கிரமே வருந்த போகிறாள் அவள்.

அதேநேரம் வாயிலில் அழைப்பு மணியோசை கேட்டது. கணேசனின் குடும்பம்தான். வந்தவர்களை வரவேற்கும் சூழ்நிலையில்தான் இல்லை என்று எண்ணி பெருமூச்சு விட்டவாறே கதவை திறந்தாள்.

வேகமாக உள்ளே வந்த கணேசன் "அரவிந்தனுக்கு என்ன ஆயிற்று" என்றுதான் முதலில் கேட்டார். லட்சுமியோ நடந்த அனைத்தையும் கூறினாள். அவற்றை நம்பமுடியாமல் கணேசன் மனைவியை நோக்க அவளோ கணவனை பார்த்து ஏதோ சைகைகட்டினாள். அதில் ஏதோ புரிய தெளிந்தார் அவர்.

தீவிரமாக பேசிக்கொண்டிருந்த லட்சுமி இந்த சங்கேத மொழி பரிமாற்றத்தை கவனிக்கவில்லை.

தன்பாட்டிற்கு பேசிக்கொண்டிருந்தவள் ஒரு நொடி நிறுத்தி, தன் மகளையும், அவளது கல்வியையும் பார்த்துக் கொள்ளும்படி சொன்னாள் தனது கையில் இருந்த பைகளை தந்தபடி.

"இப்போதைக்கு சுந்தரிக்கு எதுவும் தெரியவேண்டாம். ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு அவ அப்பா இறந்துட்டாருன்னு . அப்பதான் அவளுக்கு புரியும் பக்குவம் வரும். நான் ஊருக்கு போறேன்னு சொல்லுருக்கேன். கண்டிப்பா சமாளிக்க முடியாது தான். ரொம்ப சின்னபொண்ணு ஆனாலும் இந்த காரணத்தை ஏற்றுக்கமாட்டள் தான். எனக்கு உடம்புக்கு முடியல டாக்டர் வீட்டுல இருந்து உடம்புக்கு பார்த்துக்கிட்டு இருக்கேன்னு சொல்லுங்க." என்று என்னென்னவோ கூறியவள் சட்டென நிறுத்திவிட்டு அவர்களை கூர்ந்து பார்த்தாள்.

கணேசனின் மனைவி அனைத்தையும் ஒரு புருவ சுளிப்புடனும், யோசனையுடனும் தான் கேட்டுக்கொண்டிருந்தாள். தான் மட்டுமே பேசிக்கொண்டிருப்பதை தாமதமாகவே உணர்ந்தாள் லட்சுமி.

இவர்களது எண்ணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளாமல் தான் மட்டுமே பேசிக் கொண்டு இருப்பது புரிய தனது மடத்தனத்தை எண்ணி நொந்துக் கொண்டாள்.

கேள்வியாக பார்த்தவளை கண்டு "நீ முழுசாக சொல்லி முடி" என்று கூறினார் கணேசன் மனைவி, அதுவரை ஒரு வார்த்தை பேசாது இந்தவள் சொல்ல.

ஒரு பெருமூச்சுடன் மீண்டும் " எனக்கு இந்த சொத்துகள் வேண்டாம். இதையெல்லாம் என்ன செய்யுறதுன்னும் தெரியலை. என் பொண்ணுக்கு படிப்பு மட்டும் குடுங்க அது போதும். எப்படியும் நான் வர ஏழு வருஷமாவது ஆகும்." குரல் வெறுமையாக வந்தது.

எப்படி எந்த உணர்ச்சியும் இல்லாம சொல்லுறாள், இதுதான் தோன்றியது கணேசனன் தம்பதிகளுக்கு.
பாவம் முன்தினம் இரவில் அவளது உணர்வுகளை துடிதுடிக்க கொண்டு விட்டான் தனது தம்பி என்று தெரியவில்லை.

அனைத்தையும் சொன்னாலும் அரவிந்தனின் அந்த கேவலமான தொழிலை பற்றி கூறவில்லை. எப்படி சொல்லுவது என்று தெரியவில்லையா இல்லை இறந்த ஒருவனை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று நினைத்தாளோ என்னவோ, ஆனால் ஒன்று கணவன் என்ற நினைப்பு எள்ளளவும் இல்லை என்பது மட்டும் நிஜம்.

மீண்டும் அவர்களை கூர்ந்து கவனித்தாள். அதுவும் கணேசனின் மனைவியை தான் பார்த்தாள்.

அவளது எண்ண அலைகளை கிரகிக்க நினைத்து தோற்றாள் லட்சுமி. என்னதான் கணேசன் குடும்ப தலைவராக இருந்தாலும், தனது மகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளபோவது அவரது மனைவிதானே என்று நினைத்துக் கொண்டு அவளையே பார்த்தாள் லட்சுமி.
அங்கு வந்ததிலிருந்து எதுவும் பெரிதாக இருவரும் பேசிடவுமில்லை, பேசவும் முனையவில்லை.

அரவிந்தனின் இறப்பு பற்றி தெரிந்த உடன் எங்கே தனக்கு பொறுப்பு வந்துவிடுமோ என்றுதான் நினைத்தனர்.

இப்போது விஷயத்தின் வீரியம் அரிய வேண்டி இன்னுமே மவுனம் காத்தனர். ஆனால் மனமோ பல நூறு கணக்கு போட்டது.

இவர்கள் போட்ட கணக்குகளின் விடை நாளை நீதிமன்றத்தில் லட்சுமியின் தண்டனையில் தெரியும் போது மரத்து போன மனம் மரணித்து போக போகிறது.

சுந்தரி பசிக்கிறது என்று அழைக்கவே உள்ளே விரைந்தனர் அனைவரும். இது ஒரு நல்ல பழக்கம் சுந்தரியிடம், பெரும்பாலும் தாயின் சொல்லை தட்டுவதில்லை.

அம்மா மகளின் உறவு அத்தகைய பிணைப்புடன் இருந்தது.ஒரு தோழமை உறைவை மகளிடம் கடைபிடித்து வந்தாள் லட்சுமி. அது தந்த பிணைப்பு அது.

அதுவும் அவர்களது அறையை விட்டு வெளியில் வர கூடாது என்று சொன்னால் அட்சரம் பிசகாமல் செய்வாள்.

முன்னர் அரவிந்தனை காண யாரேனும் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அம்மாவும் மகளும் தஞ்சம் புகுவது அந்த அறையில் தானே.

ஒருமுறை தாயின் பேச்சை மீறி அறையை விட்டு வெளியில் வந்து விளையாட சிறுபிள்ளை என்றும் பாராமல், தவறான கண்ணோடு ஒருவனின் பார்வை சுந்தரி மீது விழ,

அவ்வளவு தான் இதெல்லாம் அரவிந்தனால் தானே என்று கணவன் மீது இருந்த கோபத்தில் மகளை அடி வெளுத்துவிட்டால்.

அன்றிலிருந்து இன்றுவரை அந்த அறையில் இருக்க சொல்லி அன்னை சொல்லிவிட்டால் மாறுபட்டு நடக்க மாட்டாள் சுந்தரி.

அறையின் உள்ளே நுழைந்த அனைவரையும் கண்டு குதுகளித்தாள் சுந்தரி.

"பாப்பாவ பார்க்க வந்திங்களா பெரியம்மா" சலுகையாக நின்றிருந்த தாயின் தோளில் சாய்ந்து கொண்டு கேட்டாள் குழந்தை.

அவளையே அழுத்தமாக பார்த்தபடி ஆமென்று தலையசைத்தாள் கணேசனின் மனைவி.

பசிக்கிறது என்ற மகளுக்கும் வந்தவர்களுக்கும் தோசை வார்த்தவள் உண்ண கொடுத்தாள்.

"நீ சாப்பிடலையாம்மா" மகள் மட்டுமே தாயை கேட்டாள்.
மகளுக்கு பதில் சொல்லும் விதமாக அவளும் இரண்டு தோசைகளை உண்டாள்.
இதனை ஒருவித அசூசையுடன் கண்டனர் கணேசனும் அவரது மனைவியும்.

கணவன் இறந்திருக்க, மேலும் ஒரு கொலையையும் செய்துவிட்டு எப்படி சாப்பிட முடிகிறது இவளால் என்றே என்னினார்கள் அவர்கள் இருவரும்.

மகளுக்காக சாப்பிட்டாலும் காவல் நிலையம் சென்றால் என்ன எப்படி என்று தெரியாதே மயங்கி விழுந்து வைத்தால் என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டுதான் காலை உணவை உண்டாள் அவள். அத்தனையும் அந்த அறையில் வைத்து தான் நடந்தது.

சமையல் அறையில் அனைத்தையும் ஒதுங்க வைத்தவள். மீண்டும் படுக்கை அறைக்கு நுழைந்து மகளின் கல்வியை பற்றி அவர்களிடம் திரும்பவும் ஒரு முறை வலியுறுத்தினாள் லட்சுமி.

பேசிக்கொண்டிருக்கும் போதே மீண்டும் கதவு தட்டப்பட்டது. காவல்துறையினர் தான் வந்து இருந்தனர். போலீஸா என்று அதிர்ந்த கணேசனின் மனைவியை பார்த்து ஆமென்று தலையசைத்து, உங்களுக்கு போன் பண்ணும்போதே நான் அவங்களக்கும் போன் போட்டு வர சொல்லிட்டேன்.

"நாமளே சரணடஞ்சுட்டா நல்லது தானே அதான்" என்றவள் மகளை அவர்களிடம் ஒப்படைத்து பின் கட்டு வழியாக செல்ல சொன்னாள்.

கணேசன் சுந்தரியை தூக்க போக, அவரை நிறுத்தி, மகளை இறுக அனைத்து கண்ணத்தில் முத்தமிட்டாள் அழுத்தமாக.
இனி எப்போது மீண்டும் மகளை காண்போமோ என்ற எண்ணம் எழவே, பீறிட்டு வந்த அழுகையை அடக்கும் வகையறியாது வாய்பொத்தி அழ ஆரம்பித்தாள்.

ஆனால் சுந்தரியோ "அம்மா பாப்பா குட் கேர்ள் ஆக இருப்பேன். பெரியம்மாக்கு எந்த தொந்தரவும் தரமாட்டேன். நானே பெஸ்ஸு (பிரஸ்) பண்ணிப்பேன் நானே புவா அள்ளி சாப்பிடுவேன்." என்று புரிதலோடு பேசும் மகளை என்னி இதயத்தின் அறைகள் அத்தனையும் அடைத்தது போல மூச்சின்றி தவித்தாள்.

மகளை மீண்டும் பிடுங்கிகொண்டு முகமெங்கும் முத்தமிட்டவள் ஓவென கதறினாள். இந்த பிரிவை தாயும் மகளும் எப்படி கடக்க போகின்றனரோ, ஒரு பொழுதுகூட மகளை பிரியாது இருந்தவள் எப்படி சகித்து வாழ போகிறாளோ.

வாழ்க்கை தன்னை இத்தனை வஞ்சித்து இருந்திருக்ககூடாதோ நினைத்து நினைத்து மருகினாள் லட்சுமி. எப்படியும் மகளை காண பல வருடங்கள் ஆகும் அதுவரை இந்த உயிரை பிடித்து வைத்திருக்கவேண்டும் நினைத்தவள் மனமே இன்றி மகளை கணேசனிடம் தந்தாள்.

ஒருபுறமாகவே சுந்தரியின் முகம் திருப்பி பேச்சு குடுத்தபடி தூக்கி கொண்டு மறைத்து சென்றனர் கணேசனும் அவர் மனைவியும்.

தன்னை தாண்டி சென்ற மகளை வாசல்வரை சென்று வழியனுப்ப முடியாது அப்படியே தோய்ந்து அமர்ந்து அழலானாள்.

வெறுமனே சாத்தியிருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தனர் காவல்துறையினர்.

வந்தவர்களிடம் நடந்த அனைத்தையும் கூறியவள், தான் ஏற்கெனவே கைப்பட எழுதியிருந்ததையும் கொடுத்தாள் லட்சுமி. அதனை சாட்சியாக வைக்க முடியாது ஆனாலும் இருக்கட்டும் என்று எடுத்துக்கொண்டனர்.

சடலங்களை பார்வையிட்டு, அவற்றில் இருந்த கைரேகையை எடுத்துக் பத்திரப்படுத்திக் கொண்டு, அவற்றை அப்புறப்படுத்தினர்.
போஸ்ட்மார்டம் செய்ய எடுத்து கொண்டு சென்றனர். அந்த சடலங்கள் இருந்த இடத்தை குறித்து விட்டு, லட்சுமியை காவல்துறை தங்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டனர். தானே சரணடைந்து விட்டதால் கைது என்று விலங்கிட்டு அழைத்து செல்லாமல் சாதாரணமாகவே அழைத்து சென்றனர்.

அதற்குள் அக்கம் பக்கத்தினருக்கு செய்தி பரவியது. லட்சுமியா இப்படி கொலை செய்தது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். யாரிடமும் லட்சுமி பேச விழையவில்லை.

குழந்தையை பற்றி கேட்டவர்களிடம் அவளது பெரியப்பா விட்டில் விட்டு விட்டேன் என்று மட்டும் கூறினாள். அக்கம் பக்கத்தினரின் வாக்குமூலத்தையும் காவல்துறை அதிகாரி பதிவு செய்து கொண்டார்.

அந்த பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கே வைக்கப் பட்டிருந்தாள் லட்சுமி. சிறிது நேரத்தில் அந்த காவல் நிலையத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

லட்சுமி கொலை செய்தது ஒரு அரசியல்வாதி, ஆதலால் அங்கு நிலைமை தீவிரமானது. அது அவளுக்கு இப்போதுதான் மெல்ல புரியலானது.

அவனை கொலை செய்யாது எப்படியாவது தப்பித்திருக்க வேண்டுமோ என்ற எண்ணம் தோன்றவே, அவளுக்கு அவனிடமிருந்து தப்பிக்கும் வழி இப்போது கூட தோன்றவில்லை என்பதுதான் உண்மை.

ஒரு பக்கம் மகளை வைத்து மிரட்டுவதும், மறுபக்கம் அவனது ஆட்கள் என்று சொல்லி மிரட்டுவதும் இதில் எங்கிருந்து தப்பிக்க, விதி என்பது இதுதான் போலும் என்று நொந்துகொண்டாள் அவள்.

அந்த அரசியல்வாதி சார்பாக வந்தவர்கள் இவளை பார்த்துகை காட்டி ஏதோ பேச மலங்க மலங்க விழித்தாள லட்சுமி. என்னதான் ஒரு குழந்தையின் தாயாக இருந்தபோதும் இதெல்லாம் தெரியாதல்லவா. வீட்டு கிளி அவள் காவல் நிலையத்தையே இன்றுதான் நேரில் காண்கிறாள்.

"இவர்தான் அந்த அரசியல்வாதி சார்பாக வாதாட வந்துருக்காங்க. அதாவது உனக்கு மேலும் அதிகமாக தண்டனை வாங்கி கொடுக்க." என்று அங்கு இருந்த ஒரு பெண் காவலாளி இவளது முகம் பார்த்து பரிதாபமாக கூற, "அதிகமாக தண்டனையா ஏன் அப்படி" அதிர்ந்துபோய் கேட்டாள்.

அங்கு அவர்கள் வந்த நோக்கம் அந்த பெண் காவலாளிக்கு புரிந்துதான் இருந்தது. பின்னே இப்படி எத்தனை வழக்குகளை தன் அனுபவத்தில் பார்த்திருப்பார். அவர் லட்சுமியை முழுவதுமாக நம்பினார். ஏன் மற்ற காவலாளிகளும் தான். பின்னே யாராவது செய்த குற்றத்தையும் சொல்லி தன்னை கைது செய்து போகும்படியும் சொல்வார்களா என்ன, இவளது நேர்மை தானே அதற்கு காரணம்.

பணத்திற்காக ஒருவர் பழியை ஏற்றுக்கொள்பவராயின் அவரது நடவடிக்கை வேறு மாதிரி இருக்குமே. ஆக இவள் குற்றம் செய்தது எத்தனை உண்மையோ. அவள் சொன்ன குற்றப் பின்னனியும் அத்தனை உண்மை.

ஆனால் இனி இந்த சமுதாயம் இந்த குற்றத்தையும் அதனை பார்க்கும் கண்ணோட்டமும் மாறுபடுகையில் லட்சுமியின் நிலை என்னவாகுமோ.
 
Status
Not open for further replies.
Top