பிரம்மா 12
அஜய்யுடன் ஜீப்பில் ஏறிய போதிலும் காயத்ரி ஒரு வார்த்தை கூட அவனிடம் பேசவில்லை. பேசும் நிலையிலா அவள் இருக்கின்றாள்? அவள் மனம் முழுதும் ரணத்தின் பிடியில் இருக்க, கண்ணீரை விழ விடாமல் கஷ்டப்பட்டு உள்ளே இழுத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள். அவளால் மனம் விட்டு அழக் கூட முடியாத நிலை அல்லவா? அதே சமயம் அஜய்யோ "ஹோப் யூ ஆர் ஓகே" என்று சொல்ல, "ம்ம், கொஞ்சம் டயர்ட் ஆஹ் இருக்கு" என்று குரலில் நடுக்கம் கூட தெரியவிடாமல் சொன்னவள் கண் மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள். அவள் விழிகளை மூடினாலும் சித்தார்த்துடனான நினைவுகளை மூட முடியுமா என்ன? ஆம் நினைவுகள் முழுதும் அவனே வர, உணர்வுகளையும் வெளிக் காட்ட முடியாமல் அமர்ந்து இருந்தவளுக்கு அந்த பயணமே நரகமாக தான் இருந்தது.
அவள் முகம் வாட்டமாக இருப்பதை உணர்ந்த அஜய்யும் அவளை தொந்தரவு செய்யாமல் ஜீப்பை ஓட்டிச் சென்றான். அதே கணம் தனது இருக்கையில் சாய்ந்து இருந்த சித்தார்த்தின் மனதிலோ யாரோ வலிக்க வலிக்க அடிப்பது போன்ற உணர்வு. ஆனால் அதைக் கூட காட்ட முடியாமல் அவன் இதழ்களில் ஒரு விரக்திப் புன்னகை. அவன் வாழ்வில் திருமணம்,பெண்கள் பற்றி எல்லாம் நினைத்தது கூட இல்லை. அப்படிப்பட்டவனின் மனதை கலைத்து விட்டாள் அல்லவா அவள்? மீண்டும் முழுக் கவனத்தையும் ஆராய்ச்சியில் திசை திருப்ப நினைத்தவனாக இரவு பகலாக உழைக்க முடிவெடுத்து இருந்தான்.. உறுதியான மனம் படைத்த அவனால் சற்று முன் உண்டான அதிர்ச்சியில் இருந்து இலகுவாக மீண்டு வர முடியும் ஆனால் மென்மையானதும் சென்சிட்டிவானதுமான மனம் படைத்த காயத்ரிக்கு அது ஒன்றும் அவ்வளவு இலகுவான விடயம் அல்லவே?
நீண்ட நேரம் கழித்து அவளது வீட்டுக்கு அவளை அழைத்து வந்திருந்தான் அஜய். அஜய்யுடன் அவளைக் கண்டதுமே அவளது தந்தை யோசனையாக புருவம் சுருக்க, அவளோ அமைதியாக அவரைக் கடந்து அறைக்குள் நுழைந்து கொள்ள, "என்னாச்சு அஜய்?" என்று கேட்க, அவனோ " மிஷன் பெயிலியர் சார், சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுங்க" என்று சொன்னான். அவருக்கு கேள்விகள் பல இருந்தாலும் அதனை தூண்டி துருவினால் கூட அஜயிடம் இருந்து பதில் எதிர்பார்க்க முடியாது என்று உணர்ந்தவர் பெருமூச்சுடன் "பிரசாத் இப்படி இருப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல" என்று ஒரு ஏமாற்றத்துடன் சொல்லி இருந்தார். ஆம் பிரசாத் தான் அந்த கொலைகாரனை கருத்தரங்குக்குள் அனுமதித்த விடயம் பொலிஸாரினால் கண்டுபிடிக்க பட்டு இருக்க, அஜய்யோ "அது தான் தலைமறைவாகிட்டார் போல" என்று சொன்னான் அவன் கொலை செய்த விடயத்தை மறைத்துக் கொண்டே. அஜய்யும் போலீஸ் அல்லவா? தந்திர புத்தியும் அவனுக்கு அளவுக்கு அதிகமாகவே இருந்தது. அதனாலேயே பிரசாத் இறப்பை தலைமறைவு என்று திரித்து விட்டு இருந்தான்.
அதைக் கேட்ட காயத்ரியின் தந்தையும் "ம்ம். கொஞ்ச நாளைக்கு காயத்ரி வீட்லயே இருக்கட்டும்.. பிரசாத் கலப்ரிட் என்கின்ற காரணத்தினால் அவளை இன்வெஸ்டிகேஷன்னு அழைச்சு கண்டிப்பா டிஸ்டர்ப் பண்ணிட்டு இருப்பாங்க" என்று சொல்ல, அதைத் தான் அஜய்யும் நினைத்து இருப்பான் போல, அவனோ "அதனால தான் சார், சீக்கிரமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொன்னேன். அதுக்கப்புறம் அவ பிரச்சனைகளை என்னால ஒரு உரிமையோடு சால்வ் பண்ண முடியும்" என்று சொன்னான். அவரும் ஆமோதிப்பாக தலையாட்டியவர் அவனை வழி அனுப்பி விட்டு உள்ளே வந்தார். "காயத்ரியுடன் பேசலாமா?" என்று ஆரம்பத்தில் எண்ணியவர் அவளுக்கு ஓய்வு கொடுக்க நினைத்து பெருமூச்சுடன் தனது அறைக்குள் நுழைந்து கொள்ள, தாயில்லாத பெண் காயத்ரியோ மன உணர்வுகளை சொல்லி அழ முடியாமல் தனது கண்ணீரை தலையணையில் முகம் புதைத்து அழுது கரைத்துக் கொண்டு இருந்தாள்.
இப்படியே அன்றைய நாள் அவர்களுக்கு ஓடி விட, அடுத்த நாள் எழுந்த காயத்ரிக்கு அவ்வளவு சீக்கிரம் சித்தார்த்தை மறக்கவே முடியவில்லை.
குளியலறைக்குள் நுழைந்து நீரால் அடித்துக் கழுவிய போதும் கூட அவள் கண்ணீர் நீருடன் கரைந்து வெளியேறிக் கொண்டு இருந்தது. "காதல் இவ்வளவு வலியானதா?" என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டவளோ சித்தார்த்துடன் போன் பண்ணிப் பேசினால் என்ன என்று தான் நினைத்து இருந்தாள். அடுத்த கணமே அவனது வெப்சைட்டில் எல்லாம் தேடி அவனது தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்து இருந்தவள் அடுத்த கணமே அவனுக்கு அழைத்து இருந்தாள். அவனோ அப்போது தான் ஜிம் அறையில் இருந்து வெளியே வந்தவன் தனது ட்ராக் ஷூட்டில் இருந்த போன் அலற,எடுத்து அந்த தெரியாத நம்பரைப் புருவம் சுருக்கிப் பார்த்தான். அவன் போனை எடுத்து "ஹெலோ" என்று சொன்ன கணம் தன்னவன் குரல் கேட்டு இதழில் புன்னகையுடன் "ஹெலோ நான் காயத்ரி பேசுறேன்.. ஏன் இப்படி பண்ணுனீங்க?" என்று கேட்க அவனோ அவள் குரலைக் கேட்டு கண்களை மூடித் திறந்தவன் அடுத்த கணமே போனை கட் பண்ணி அவளது நம்பரையும் பிளாக் பண்ணி விட்டான். அவளுக்கோ அது பேரதிர்ச்சியாக மீண்டும் மீண்டும் அவனுக்கு வெவ்வேறு நம்பர்களில் இருந்து அழைத்துக் கொண்டே இருந்தாள். அவனோ அன்று அவள் அழைப்பாள் என்கின்ற காரணத்தினால் போனை சைலென்டில் போட்டவன் யாருடைய அழைப்பையும் எடுக்கவே இல்லை. அவளோ அழைத்து களைத்து ஓய்ந்தவள் மனம் கேட்காமல் வாய் விட்டே அழுதாள். காதல் இவ்வளவு வலியைக் கொடுக்கும் என்றால் அவள் காதலித்து இருக்க மாட்டாளோ என்னவோ. சித்தார்த் தான் உறுதியானவன் ஆயிற்றே... தனது முழுக் கவனத்தையும் ஆராய்ச்சியில் செலுத்தியவனுக்கு அவள் நினைவை ஒதுக்குவது பெரிய விடயமாக தெரியவே இல்லை.
இதே சமயம், காயத்ரியின் அறைக் கதவை தட்டினார் அவள் தந்தை. அவளும் கதவைத் திறக்க, அவள் விழிகளோ வீங்கி சிவந்து இருக்க, "என்னாச்சும்மா?" என்று கேட்டார். அவளோ "ஒண்ணும் இல்லப்பா, தலைவலி" என்று சொல்ல, அவரும், "ம்ம், நீ கொஞ்ச நாளைக்கு ஆபீஸ் போகாதே, நான் இப்போ டியூட்டிக்கு கிளம்புறேன், சாப்பாட்டு மேசையில் சாப்பாடு இருக்கு" என்று சொன்னார். அவளுக்கு தானே பிரசாத்தின் விடயம் தெரியாது அல்லவா? "ஏன்பா ஆபீஸ் போக கூடாது? பிரசாத் சார் கிட்ட நான் ரிப்போர்ட் பண்ண வேணாமா?" என்று கேட்க அவரோ "சரியா போச்சு, அஜய் ஒன்னும் சொல்லலையா?" என்று கேட்க அவளோ "இல்லை" என்று சொன்னவள் மேலும் "நான் நேற்று முழுக்க தூங்கிட்டே வந்தேன்... அதனால எனக்கு எதுவும் தெரியல" என்று சொன்னாள். அவரோ பெருமூச்சுடன் "டாக்டர் சித்தார்த்தை கொலை பண்ண பார்த்த கொலைகாரனை உள்ளே விட்டது பிரசாத் தான், இப்போ அவன் தலைமறைவாகிட்டான்" என்று சொல்ல, அவளுக்கு இது புதிதும் அதிர்ச்சியான விடயம் அல்லவா? "என்னப்பா சொல்றீங்க?" என்று விழி விரித்துக் கேட்க அவரும் "ம்ம்., அதனால தான் சொல்றேன் கொஞ்ச நாள் வீட்டிலேயே இரு, இல்லன்னா நீயும் அவன் க்ரூப்ன்னு நினச்சு இன்வெஸ்டிகேட் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க... நான் இப்போ கூட உன் கிட்டயோ அஜய் கிட்டயோ நீ எங்க போன என்று நான் கேட்கவே இல்ல, ஏன்னா எனக்கு உன் மேலயும் அஜய் மேலயும் அவ்வளவு நம்பிக்கை இருக்கு. சீக்கிரமே ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுறேன்.. அப்போ தான் எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.. அப்புறம் உன் விஷயம் எல்லாம் அஜய் பார்த்துப்பான்" என்று சொல்லி விட்டு செல்ல, அங்கிருந்த கதவு நிலையில் தொய்ந்து சாய்ந்து நின்றவளுக்கு தலை சுற்றிக் கொண்டு வருவது போல தான் இருந்தது. ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சிகளைத் தான் அவளால் தாங்கி கொள்ள முடியும்?
காதலித்தவன் கை விட்டிருக்க, மனதுக்கு பிடிக்காதவனுடன் திருமணம் நடக்க இருக்க, அவளால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? அன்று கடமைக்கு சாப்பிட்டவளுக்கு சாப்பிடு கூட இறங்க மறுத்தது. அதே சமயம் அலுவலகத்துக்கு சென்ற அஜய் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை. காயத்திரியை கண்டதுமே இவ்வளவு நாளாக இருந்த இறுக்கம் மறைந்து இருக்க, அவனது பிரகாசமாக முகத்தைப் பார்த்த அவன் கீழ் வேலை செய்யும் போலீஸ்காரன் "சார் இன்னைக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கீங்க போல" என்று சொல்ல, அவனோ "ம்ம், கல்யாணக்களை வந்திடுச்சு" என்று சொல்ல, அது வரை டாகுமெண்ட்களை பார்த்துக் கொண்டு இருந்த ஷாந்தி சட்டென திரும்பிப் பார்த்தவள் "காயத்திரி வந்தாச்சா சார்?" என்று கேட்டாள். அவனோ "ம்ம்" என்று மென் புன்னகையுடன் சொல்லிக் கொண்டே "நேற்று அந்த திருட்டு கேஸ் எழுதுன பைலை கொண்டு வா" என்று உத்தரவிட்டான். அவளும் அதை எடுத்துக் கொண்டே யோசனையுடன் அவனை நோக்கிச் சென்றாள். அவனுக்கு திருமணம் ஆகி விட்டால் அவளால் அவனை ஒருதலைப் பட்சமாக கூட காதலிக்க முடியாது அல்லவா? எப்படி இனி வரும் காலங்களை சமாளிக்க போகின்றோம் என்கிற தவிப்பு அவளுக்கு.
அதே சமயம், காயத்ரியின் தந்தையும் அவள் திரும்பி வந்த விடயத்தை டிபார்ட்மென்டுக்கு அறிவித்து இருந்த போதிலும் அவளுக்கு உடல் நிலை சரி இல்லை என்றும் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறி லீவும் எடுக்க அனுமதி பெற்று இருந்தார். உயரதிகாரி அவருக்கு அந்த அனுமதி எடுப்பது ஒன்றும் அவ்வளவு கடினமான விடயமாக இருக்கவில்லை.
அப்படியே வேலை முடிந்து நேரே சாஸ்திரியாரிடம் சென்றவர் திருமண நாளையும் குறித்து விட்டு அஜய்யை வீட்டுக்கு வருபடி அழைத்தார். அவனும் வேலை முடிந்து நேரே காயத்ரியின் வீட்டுக்கு செல்ல, "உள்ள வா அஜய்" என்று அழைத்தவர் அவனும் வந்து இருந்ததும் "கல்யாணத்துக்கு டேட் பிக்ஸ் பண்ணிட்டே வந்துட்டேன்.. கல்யாணம் சிம்பிள் ஆஹ் பண்ணிடலாம்.. இப்போ இருக்கிற நிலமைல முதல் பிளான் பண்ணுன போல பண்ணுறது எனக்கு சரியா படல, ஜஸ்ட் க்ளோஸ் ரிலேஷன்ஸ் மட்டும் போதும்.. நம்ம வீட்டுலயே கல்யாணம் நடத்திக்கலாம்" என்று சொல்ல, அவனோ பெருமூச்சுடன் "எனக்கு அம்மா அப்பான்னு யாரும் இல்ல சார், ரெண்டு பேருமே இறந்துட்டாங்க... சோ என் கூட வேலை பார்க்கிறவங்கள மட்டும் அழைக்கிறேன்" என்று சொல்ல, அவரும் "ஓகே அஜய், " என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது அவர்கள் பேசியதைக் கேட்டு இறுகிய முகத்துடன் காபியை எடுத்துக் கொண்டு அவர்களிடம் வந்தாள் காயத்ரி. இருவருக்கும் காபியை வைத்து விட்டு அங்கிருந்து நகர போக, "அடுத்த வாரம் 25 அம் திகதி கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்கு காயத்ரி.. கிராண்ட் ஆஹ் பண்ண முடியல.. உனக்கு அதுல ஒண்ணும் பிரச்சனை இல்லையே" என்று கேட்க அவளோ அவரை ஒரு வெற்றுப் பார்வை பார்த்து விட்டு இல்லை என்று தலையாட்டியவள் அமைதியாக தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
தன்னவன் கை விட்ட பின்னர் அவளும் என்ன தான் சொல்லி திருமணத்தை நிறுத்த முடியும்? அஜய்யோ "இன்னும் காயத்ரியோட முகத்தில சோர்வு இருக்குல்ல" என்று சொல்ல, அவரோ "ம்ம், இன்னும் டயர்ட் ஆஹ் இருக்கான்னு தோணுது.. கொஞ்சம் டைம் எடுத்து ஓகே ஆய்டுவா" என்று சொன்னார். அஜய்யோ வெளியே வந்து முதலில் அழைத்தது சித்தார்த்துக்கு தான்.. திருமண விடயத்தை சொல்ல அவன் அழைக்க, சித்தார்த்தோ அன்று தான் யாருடைய போனையும் எடுக்கவே இல்லையே...
பெருமூச்சுடன் தோள்களை உலுக்கியவன் தனது வீட்டுக்கு ஜீப்பில் புறப்பட்டு இருந்தான். சித்தார்த்தின் நாட்கள் ஆராய்ச்சியில் நகர, அஜய்யின் நாட்கள் போலீஸ் விசாரணை என்று நகர, ஷாந்தியோ அஜய்யுடன் மன வலியை அடக்கிக் கொண்டே வேலையை தொடர, இடையில் அறைக்குள் இருந்து அழுது கொண்டு இருந்தது என்னவோ காயத்ரி தான்.
அந்த ஒரு வாரம் எப்படி நகர்ந்தது என்று தெரியவே இல்லை.. இயந்திர கதியில் திருமண ஏற்பாடு நடந்தது என்று தான் கூற .வேண்டும். சிலையாக இருந்த காயத்ரிக்கு என்ன நடக்கின்றது என்று கூட புரியாதளவு சித்தார்த் அவளை மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தான். திருமணத்துக்கு முதல் நாள் ஸ்டேஷனுக்கு வந்த அஜய், ஷாந்தியை அழைத்து இருந்தான். ஷாந்தி தான் அவளுக்கு அடுத்த பதவியில் இருக்கும் ஆபீஸராக இருக்க, உள்ளே நுழைந்து சாலியூட் அடித்தவளை அமர சொன்னவன் "ஷாந்தி எனக்கு நாளைக்கு கல்யாணம். எப்படியும் ஹனிமூன் அது இதுன்னு ஒரு வாரம் இந்த பக்கம் வர மாட்டேன்.. சோ நீ தான் கவனமா எல்லா கேஸும் ஹாண்டில் பண்ணனும் ரைட்?" என்று கேட்க அவளுக்கோ சட்டேன கண்கள் கலங்கிப் போனது. கஷ்டப்பட்டு கண்ணீரை உள்ளே இழுத்தபடி அவனை ஏறிட்டுப் பார்த்தவள் "ஓகே சார்" என்று சொல்ல, "ம்ம் குட்" என்று சொன்னவன் மேலும் "நாளைக்கு வந்திடுவ தானே, கண்டிப்பா வந்திடணும்" என்று சொல்ல, அவளும் "ஓகே சார்" என்று சொல்லி விட்டு சாலியூட் அடித்து விட்டு வெளியே வந்தவள் கண நேரத்தில் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
ஒரு ஜீவனோ அஜய்யை திருமணம் செய்ய முடியவில்லையே என்கின்ற வலியில் இருக்க, அடுத்த ஜீவனோ அஜய்யுடன் நடக்க இருக்கும் திருமணத்தை நினைத்து அழுது கொண்டு இருந்தது.
வழமை போல காயத்ரியும் கண்ணீரில் கரைந்து போக, திருமண நாளும் வந்து சேர்ந்தது. இடையில் ஒரு நாள், அஜய் சித்தார்த்துக்கு அழைத்து திருமண விடயத்தை சொல்ல, "அன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு" என்று சொல்லி சமாளித்த சித்தார்த் திருமணத்துக்கு செல்லவில்லை. அன்று எழுந்து காலெண்டரைப் பார்த்து திருமண நாள் என்று உணர்ந்த சித்தார்த்தோ இதழில் ஒரு வலியுடன் கூடிய புன்னகையுடன் அன்றைய நாளை தொடங்கி இருந்தான். அதே சமயம், ஆறடி உயரமும் படிக்கட்டு தேகமும் உடைய அஜய், வேட்டி சட்டையில் காயத்ரியின் வீட்டை அடைந்து இருக்க, அங்கே அவன் சார்பாக அவனுடன் வேலை செய்யும் போலீஸ்காரர்கள் வந்து இருந்தார்கள். ஷாந்தியோ புடவையில் வந்து இருக்க, உள்ளே வந்தவனை அவள் விழிகள் ரசனையாக பார்த்தது. அடுத்த கணமே தலையை உலுக்கியவளோ "இன்னும் கொஞ்சம் நேரத்துல காயத்ரியோட கணவன் ஆயிடுவார்.. இப்போ நான் பண்ணுறது ரொம்ப தப்பு" என்று நினைத்து விழிகளைத் தாழ்த்திக் கொள்ள, அவனைத் தாண்டி சென்ற அஜய்யோ "வாவ், சாரீல சூப்பரா இருக்க" என்று அவளைப் பார்த்து சொல்ல, விலுக்கென நிமிர்ந்தவள் "தன்க் யூ சார்" என்று சொன்னாலும் மனதில் ஒரு பட்டம் பூச்சி பறந்தது என்னவோ உண்மை தான். அவன் சாதாரணமாக தான் அவளை பாராட்டினான் தவிர அவள் மீது எந்த வித ஈர்ப்பும் அவனுக்கு இருக்கவே இல்லை.
அதே சமயம், தனது அறைக்குள் இருந்து தன்னையே கண்ணாடியில் பார்த்துக் கொண்டே இருந்தாள் காயத்ரி. அழகிய செந்நிற புடவையில் திருமண அலங்காரத்துடன் பேரழகியாக இருந்த போதிலும் முகத்தில் புன்னகை கொஞ்சமும் இருக்கவே இல்லை.
அவள் மனமோ "சித்தார்த் சித்தார்த்" என்று உச்சரித்துக் கொண்டு இருக்கும் போது அவளும் எப்படி புன்னகைப்பாள்? ஐயரோ மந்திரங்கள் உச்சரித்துக் கொண்டு இருக்க, அவர் அருகே இருந்து அஜய்யும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தான். ஐயரோ "பொண்ண அழைச்சுட்டு வாங்க" என்று சொன்ன கணத்திலேயே அந்த குரல் கேட்டு காயத்ரியின் மனம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் அவள் வேறு ஒருத்தனின் மனைவி ஆகி விடுவாள் அல்லவா?
அவளை அலங்காரம் பண்ணிய பெண்ணோ "அக்கா கொஞ்சம் சிரிச்சிட்டே வாங்க" என்று சொல்ல, ஒரு விரக்தி புன்னகையுடன் எழுந்தவள் ஹாலில் அமைக்கப்பட்டு இருந்த மண மேடையை நோக்கி நடந்தாள்.
அவள் வருகையை மணமேடையில் இருந்த அஜய் ரசனையாகப் பார்த்துக் கொண்டு இருக்க, அவளுக்கு தான் ஒவ்வொரு அடியாக வைத்து மண மேடைக்கு செல்வது வலியாக இருந்தது.