Kaviya Tamilraj
Member
நரேன் சித்தார்த்க்கு நீ sketch போடுறியா அஜய் போடுவான் பாரு உனக்கு sketch 





Ajay thappu panna mattanபிரம்மா 13
ஒவ்வொரு அடியாக வைத்து நடந்தவளுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் நடக்க முடியாமல் போல குனிந்து இருந்த தலையை சட்டென நிமிர்த்தி முன்னால் அவளை புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்த தந்தையைப் பார்த்தவளுக்கு கண்ணீர் வழிய, கை கூப்பிக் கொண்டவள் "அப்பா எனக்கு இந்த கல்யாணம் வேணாம்" என்று சொல்ல, ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு அந்த இடம் அமைதியாக இருந்தது. அஜய்யோ அதிர்ச்சியுடன் மாலையைக் கழட்டிக் கொண்டே எழுந்து நிற்க, அவனைப் பார்த்தவள் "என்னை மன்னிச்சிடுங்க அஜய்" என்று சொன்னாள்.
அவள் சொன்னதைக் கேட்டதுமே அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அவள் தந்தையோ "என்னம்மா சொல்ற? ஏன் கல்யாணம் வேணாம்?" என்று பதட்டமாக கேட்டவர் அவளை இரண்டேட்டில் அடைந்து இருந்தார். அவளோ கண்ணீருடன் " உங்களுக்காக தான்பா இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.. அந்த டைம்ல எனக்கு அஜய் மேல் காதல்னு எதுவும் இல்ல, அதுக்கப்புறமும் வரல.. ஆனா இப்போ என் மனசில சித்தார்த் இருக்கார்ப்பா, என்னால மனசுல ஒருத்தர வச்சிட்டு இன்னொருத்தர் கூட முடியாது.. அப்படி வாழ்ந்தா அது நான் அஜய்க்கு செய்யுற துரோகம் ஆயிடும்... ப்ளீஸ் பா.. என்னை .புரிஞ்சுக்கோங்க.. என்னால முடியல.. ரொம்ப வலிக்குது.. சித்தார்த் கூட என்னை வேணாம்னு சொன்னாலும் நான் தனியா இருந்துக்குவேன்.. எனக்கு இந்த கல்யாணம் மட்டும் வேணாமப்பா" என்று கை கூப்பி அழ, அவரோ மகளை இயலாமையுடன் பார்த்தவருக்கு என்ன செய்வதென்றும் தெரியவில்லை. அடித்துப் பிடித்து கல்யாணம் பண்ணி வைக்க அவள் ஒன்றும் குழந்தை அல்லவே... அவரோ குற்ற உணர்ச்சியுடன் விழி விரித்து நின்ற அஜய்யைப் பார்க்க, அவனோ மேடையில் இருந்து அவளை அழுத்தமாக பார்த்தபடி இறங்கி வந்தவன் கை கூப்பி அழுது கொண்டு நின்றவளிடம் "இத என் கிட்ட அப்போவே சொல்லி இருக்கலாம் காயத்ரி.. நானும் ஆசைய இந்தளவுக்கு வளர்த்து இருக்க மாட்டேன்.. இப்போ ரொம்ப வலிக்குது" என்று சொன்னவன் அடுத்த கணமே அங்கிருந்து விறு விறுவென நடந்து செல்ல, அவன் ஒற்றைக் கண்ணில் இருந்து வலியின் பிடியில் கண்ணீர் வழிய, அதை ஒரு விரலால் துடைத்துக் கொண்டே தனது ஜீப்பில் ஏறியவன் ஜீப்பை உயர் வேகத்தில் செலுத்தினான்.
அவன் அழுது முதல் முதல் பார்க்கின்றாள் ஷாந்தி.. அவனது கண்ணீர் அவளுக்கு மனதில் வலியைக் கொடுத்தாலும் திருமணம் நின்ற விடயத்தை நினைத்தவளது இதழ்கள் மெலிதாக விரிந்து கொண்டன. அதே சமயம், அழுது கொண்டு இருந்த காயத்திரியின் தலையை வருடிய அவளது தந்தை "இத ஏற்கனவே என் கிட்ட சொல்லி இருக்கலாமே.. ஒரு அப்பாவா உன் மனசு எனக்கு புரியல.. உன் அம்மா இருந்திருந்தா உன்னை இந்த நிலைக்கு வர விட்டு இருக்க மாட்டா, நீ உள்ளே போ" என்று சொல்ல அழுது கொண்டே அவள் உள்ளே செல்ல, கனத்த மனதுடன் கையை கூப்பியவர் "நான் அழைச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றி" என்று அனைவர்க்கும் நன்றி சொல்ல, அவர்களும் மேலும் எதுவும் பேசாமல் கலைந்து சென்றார்கள். இந்த திருமணம் நின்ற காரணத்தினால் அதிகம் சந்தோஷப்பட்டது என்னவோ ஷாந்தி தான். அவள் மட்டுமே திருப்தியான மனதுடன் வீட்டுக்கு கிளம்ப, சித்தார்த்துக்கு திருமணம் நின்ற விடயம் காதை அடைந்து இருக்க, "முட்டாள்" என்று காயத்ரிக்கு வாய் விட்டுத் திட்டிக் கொண்டவன் கோபத்தின் உச்சத்தில் கையில் இருந்த கண்ணாடி குவளையை சுவரில் தூக்கி எறிந்து இருந்தான். அவன் இப்படி ஆக்ரோஷமாக உணர்வுகளை வெளிப்படுத்துவன் அல்ல, அவனோ கண்ணாடிக் குவளையை சுவரில் எறிந்து உடைக்க அங்கிருந்தவர்களோ அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவனோ தலையை கோதிக் கொண்டே அங்கு நின்ற விஞ்ஞானிகளை பார்த்தவன் "ஐ ஆம் சாரி" என்று சொல்லிக் கொண்டே விறு விறுவென தனது அறைக்குள் சென்றான்.
அதே சமயம், கல்யாண கோலத்தில் இருந்த அஜய்யின் ஜீப் நேரே சென்றது என்னவோ பப்புக்கு தான். அவனால் இந்த காதல் உண்டாக்கிய வலியைத் தாங்கி கொள்ளவே முடியவில்லை. காரை பப்பில் நிறுத்தியவன் கண்களோ கலங்கிப் போக "ஏண்டி என்ன அசிங்கப்படுத்துன? ரொம்ப வலிக்குது" என்று வாய் விட்டு சொல்லிக் கொண்டே இறங்கியவன் விறு விறுவென உள்ளே நுழைந்து கொண்டான். அங்கே இருந்த மேசையில் அமர்ந்தவனுக்கு வலியை எப்படி தீர்ப்பது என்றும் தெரியவே இல்லை. அவன் இப்போது நாடியது என்னவோ மது மட்டும் தான்.. அவனுள் எண்ணிக்கை இல்லாமல் மது உள்ளே செல்ல, "சித்தார்த்.. நீ தானேடா நான் அசிங்கப்பட முக்கிய காரணம்.. உன்னை நான் சும்மா விட மாட்டேன்டா.. உன் சாவு என் கையால தான்.. எனக்கு கிடைக்காத காயத்திரி உனக்கும் கிடைக்க கூடாது" என்று சொன்னபடி கையில் இருந்த குவளையை நெரிக்க அது சட்டென நொறுங்கி போக, அங்கிருந்த அனைவரும் அவனை அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தார்கள். அவனோ "உன்னை சும்மா விடமாட்டேன் சித்தார்த்" என்று சொல்லிக் கொண்டே மேசையில் கையில் குருதி வழிய சுய உணர்வின்றி விழுந்தான். உடனே அவனை நோக்கி ஓடி வந்த பப் ஊழியர்களில் ஒருவன், "இது அஜய் சார் தானே" என்று கேட்டுக் கொண்டே அவனை கை தாங்களாக தூக்கிக் கொண்டான். அவன் கைகளிலோ கண்ணாடி துண்டுகள் வெட்டி குருதி பெருக்கெடுக்க, அவனை நேரே வைத்தியலாசாலைக்கு அழைத்து சென்றார்கள்.
தாய் தந்தை இல்லாத அவனால் காயத்ரி கொடுத்த வலியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அந்த வலியின் விளைவு இன்று சித்தார்த் மீது வன்மமாக உருப் பெற்று இருந்து.
அஜய்க்கு வைத்தியசாலையில் முதலுதவி அளிக்கப்பட்டு இருக்க, விடயம் கேள்விப்பட்டு அவனை சார்ந்தவர்கள் அவனைப் பார்க்க வந்து இருந்தார்கள். அவனை தேடி முதலில் வந்த காயத்ரியின் தந்தை அப்போது தான் கையில் கட்டுடன் எழுந்து அமர்ந்தவனிடம் "அஜய், என்ன இது?" என்று கேட்க அவனோ "நத்திங் சார், ஐ நீட் எ ஸ்பேஸ். மனசு கொஞ்சம் டிஸ்டெர்ப்ட் ஆஹ் இருக்கு. சீக்கிரம் சரி ஆயிடும்" என்று சொல்ல, அவரோ "டேக் ரெஸ்ட் அஜய்.. எனக்கும் என்ன சொல்றதுன்னு தெரில" என்று சொல்லி விட்டு வெளியேற அவரது முதுகை வெறித்துப் பார்த்தான் அவன்.
அவரைத் தொடர்ந்து பின்னால் வந்திருந்தனர் அவனது ஸ்டேஷனில் வேலை செய்யும் ஊழியர்கள். அவர்களுடன் வந்த ஷாந்தி "சார், இப்போ எப்படி இருக்கு?" என்று கேட்க அவனோ "கைல சின்ன காயம் தான்.. நான் பார்க்காத காயமா? ஆனா இதுக்கு இங்க அட்மிட் பண்ணி ஒரே பாடா படுத்திட்டாங்க.. எப்படியும் ஈவினிங் டிஸ்சார்ஜ் ஆயிடுவேன். நாளைக்கு ஸ்டேஷன் வந்திடுவேன்" என்று சொல்ல, அவர்களும் "உடம்பை பார்த்துக்கோங்க சார்" என்று அவனில் ஒரு பரிதாப பார்வையை வீசி விட்டு செல்ல, அந்த பரிதாப பார்வையோ அவனுக்கு அனலாய் தகித்தது. ஆனாலும் உணர்வுகளை அடக்கிக் கொண்டு அவன் அமர்ந்து கண் மூடி படுத்துக் கொண்டான்.
அன்று மாலை போல, டிஸ்சார்ஜ் ஆக ஆயத்தமான சமயம், "ஹெலோ அஜய்" என்று சொல்லிக் கொண்டே அவன் அறைக்குள் நுழைந்தது வேறு யாரும் அல்ல நரேன் தான். எப்படியோ அவனது ஸ்பை மூலம் அஜயின் திருமணம் நின்றது தொடக்கம் பப்பில் அவன் சித்தார்த்தை கொல்லப் போவதாக சூளுரைத்த வரை செய்தி வந்து சேர்ந்து இருக்க, ஏற்கனவே பிரசாத் தொலைந்து விட்டதில் இருந்து ஒரு கை உடைந்த போல இருந்த நரேனுக்கு இப்போது வந்து மீனாக சிக்கி இருந்தான் அஜய். எதிரிக்கு எதிரி நண்பன் போல, அஜய்யின் மனதைக் கலைத்து அவனை சித்தார்த்துக்கு எதிராக திருப்ப நினைத்து இருந்தவன் விடயம் கேள்விப்பட்டதும் அஜய்யை தேடி வந்து விட்டான்.
அவனைக் கண்டதுமே புருவம் சுருக்கிப் பார்த்த அஜய் "டாக்டர் நரேன்" என்று சொல்ல, "பெர்பெக்ட்.. அது சரி, திறமையான போலீஸ்காரனுக்கு நம்மள தெரியாம இருக்குமா?" என்று கேட்டான். நரேனுக்கு எப்போதுமே அஜய்யின் திறமை மீது ஒரு ஈர்ப்பு இருந்தது என்னவோ உண்மை தான்.
அவன் வீர தீர சாகசங்களை ஏற்கனவே பிரசாத் மூலம் அறிந்து இருந்தவன் சித்தார்த்தை கொலை செய்ய அஜய் தான் சிறந்த ஆயுதம் என்று முடிவெடுத்து அவனைத் தேடி வந்து இருந்தான்.
உள்ளே வந்து அவன் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்த நரேன் "அஜய் எப்படி இருக்கீங்க ?" என்று கேட்க அவனோ "ம்ம் பைன்.. நீங்க எங்க இங்க?" என்று இழுவையாக கேட்டான். நரேனோ அங்கிருந்த வைத்தியர் வெளியே செல்லும் வரை பார்த்துக் கொண்டே இருந்தவன், வைத்தியரும் அஜய்யிடம் "நீங்க வீட்டுக்கு கிளம்பலாம் சார்" என்று சொன்னதுமே "வாங்க நம்ம வண்டியில போகலாம்" என்று அழைத்தான் நரேன். அவனும் "ம்ம்" என்று சொல்லிக் கொண்டு நரேனின் வண்டியில் ஏறிக் கொள்ள, அவன் அருகே இருந்த நரேன் "சுத்தி வளைச்சு பேசல, டைரக்ட் ஆஹ் விஷயத்துக்கு வரேன். உங்க கல்யாணம் நின்னதுல முக்கிய காரணம் சித்தார்த்ன்னு கேள்விப்பட்டேன்" என்று சொல்ல, அஜய்யின் முகம் இறுகிப் போக "ம்ம்" என்று சொன்னான். "ஒரு பொண்ணு நம்மள வேணாம்னு சொல்றது எவ்ளோ பெரிய அசிங்கம்ல" என்று சொல்ல, புடைத்துக் கிளம்பிய நரம்புகளை அடக்கிக் கொண்டே அமர்ந்து இருந்த அஜய் எதுவுமே பேசவில்லை. அவனது புடைத்துக் கிளம்பிய நரம்பைப் பார்த்து தனக்குள் சிரித்த நரேன் "அதுக்கு காரணம் சித்தார்த் ஆஹ் இருக்கும் போது நீங்க அவனை சும்மா விடமாட்டீங்கன்னு நம்புறேன்" என்று சொல்ல, பெருமூச்சுடன் அவனை நிமிர்ந்து பார்த்த அஜய் "ம்ம், " என்று மட்டும் சொன்னான். நரேனோ "அந்த புனிதமான காரியத்தில என் பங்கும் இருக்கணும்னு ஆச படுறேன்" என்று வக்கிரமாக சொல்ல, அவனை மேலிருந்து கீழ் பார்த்த அஜய் ஒரு கேலிப் புன்னகையுடன் "நான் சித்தார்த்தை போட காரணம் இருக்கு. நீங்க எதுக்கு இதுல வர ஆசைப்படுறீங்க?" என்று கேட்க "ஹா ஹா" என்று வாய் விட்டு சிரித்த நரேன் தனது இதழ்களைக் காட்டி "இது அந்த சித்தார்த் கொடுத்த பரிசு தான். இதுக்கு பதில் நான் கொடுக்க வேணாமா?" என்று கேட்டான். அஜய்யோ அவனை யோசனையுடன் பார்த்தவன் "எதிரிக்கு எதிரி நண்பன் ரைட்டா?" என்று கேட்டுக் கொண்டே கையை குலுக்குவதற்காக நீட்ட "எக்ஸ்சாட்ல்லி" என்று சொல்லிக் கொண்டே புன்னகையுடன் கையை குலுக்கினான் நரேன்.