"அண்ணி, ஹர்ஷா அண்ணா நல்லவன்னு நான் சொல்லல. அவன் தப்பு பண்ணியிருக்கான். ஆனா அன்னைக்கு அண்ணா எந்த தப்பும் பண்ணல. அன்னைக்கு என்னாச்சுன்னா..." என்று நடந்தது அத்தனையும் சொல்லி முடித்தான் அபி.
"அன்னைக்கு அண்ணா உங்ககிட்ட உண்மைய மறைச்சதுக்கான காரணம் கூட எங்க நீங்க ஹர்ட் ஆகிருவீங்களோன்னுதான். அன்னைக்கு நிஜமாவே அவன் மேல தப்பு கிடையாது. என்ட், அவன் கொலை பண்ணல. அந்த சைக்கோ கில்லர் பண்ணிட்டு ப்ளான் பண்ணி அண்ணா மேல பழிய போட்டிருக்கான்" என்று கோபத்தோடு அவன் பற்களைக் கடிக்க, ஆராதியாவோ சில நிமிடங்கள் எதையும் பேசவில்லை.
தரையை வெறித்தவாறு இறுகிய முகமாக அவள் நின்றிருக்க, "தியா அண்ணி, என்னால எதையும் தனியா ஃபேஸ் பண்ண முடியல. அண்ணாவ காப்பாத்தியே ஆகணும். ஹீ ட்ரூலி லவ் யூ, அது மட்டும் எனக்கு நல்லா தெரியும்" என்று அபி சொல்லவும், கீழுதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக்கொண்டவள் விழிகளிலிருந்து கசிந்த விழிநீரை துடைத்துக்கொண்டாள்.
அபியோ அதற்குமேல் முடியாமல் புல்லட்டில் ஏறி வண்டியை உயிர்ப்பிக்க, ஒரு பெருமூச்சுவிட்டு, "அபி நில்லு..." என்றழைத்த ஆராதியா, "ஹர்ஷா வெளியில வர நான் ஹெல்ப் பண்றேன், ஆனா இது காதலுக்காக இல்லை. தப்பு பண்ணாதவன் தண்டனை அனுபவிக்க கூடாதுங்குற ஒரே மனிதாபிமானம்தான்" என்றுவிட்டு மீண்டும் ஆஃபீஸை நோக்கி நடக்க, அவனுக்கோ இதுவே போதுமென்று இருந்தது.
அதே சந்தோஷத்தோடு வண்டியை உயிர்ப்பித்து அவன் அங்கிருந்து நகர, அடுத்தநாள் சிறைச்சாலையில் விட்டத்தைப் பார்த்தவாறு படுத்திருந்த ஹர்ஷாவிற்கு அந்தப் பெண் யாரென்ற கேள்வி மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
அந்த பூங்கொத்திலிருந்த கார்டை கையிலெடுத்தவன் அந்த கையெழுத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.
"யாரா இருக்கும், இந்த கொலைகள பண்ணது ஒரு சீரியல் கில்லரா இல்லன்னா இதுக்கு பின்னாடி ஏதாச்சும் மோட்டிவ் இருக்கா? என்ட் இத்தனை நாள் போலீஸால தேடிக்கிட்டு இருந்தது ஒரு பொண்ணையா? ச்சே! அவளோட வலையில நான் சிக்கிட்டேனே" என்று கோபத்தோடு எழுந்தமர்ந்தான் ஹர்ஷா.
இப்படியொரு நிலை வருமென்று இரண்டு வாரத்திற்கு முன் யாராவது சொல்லியிருந்தால் பைத்தியமென்று ஒதுங்கிப் போயிருப்பான். ஆனால், இப்போது எல்லாமே தலை கீழாக மாறிய உணர்வு.
திடீரென என்ன யோசித்தானோ!
"இந்த கையெழுத்த வச்சு கூட இதை யார் எழுதியிருப்பாங்கன்னு கண்டுபிடிக்கலாம், ஆனா அதுவும் அவ்வளவு ஈஸி கிடையாது. என்ட், உள்ளயே இருந்துகிட்டு எதுவும் பண்ண முடியாது" என்று எரிச்சலாக முணுமுணுத்தவனுக்கு திடீரென தன்னவளின் நினைவில் விழிகளிலிருந்து விழிநீர் ஓட, திடீரென அவனைத் தேடி வந்தார் ஒரு காவல் அதிகாரி.
"ஏய், உன்னை பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு" என்று அவர் சொன்னதும், "மறுபடியும் ஒரு பொண்ணா?" என்ற ஆச்சரியத்தோடு வந்தவன் அங்கு ஆராதியாவை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
"ஆரு..." என்று அவனிதழ்கள் முணுமுணுக்க, அவளோ இறுகிய முகமாக அவனைப் பார்த்திருந்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
இருவரும் தங்களுக்கு நடுவிலிருந்த கம்பியிலான தடுப்பு சுவரால் மட்டுமல்லாது மனதாலும் விலகி நின்றிருந்தனர்.
"நீ.. நீ என்னை பார்க்க வருவன்னு நான் நினைச்சும் பார்க்கல. தேங்க் யூ சோ மச்!" என்று தழுதழுத்த குரலில் ஹர்ஷா சொல்லி கம்பியிலிருந்த அவளுடைய கரத்தின் மீது தன் கரத்தை வைக்க, உடனே அதை இழுத்துக்கொண்டாள் ஆராதியா.
கீழுதட்டைக் கடித்து அழுகையை அடக்கிக்கொண்டு, "நான் வந்ததுக்கு காரணம் இருக்கு, நீயா எதையும் தப்பா நினைச்சுக்காத! இந்த கொலைகள பண்ண உண்மையான கொலைகாரன் கண்டிப்பா தண்டனைய அனுபவிக்கணும், நீ இந்த கொலைய பண்ணல, அந்த விஷயத்துல நான் உன்னை நம்புறேன்" என்று உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட குரலில் பேசினாள்.
விரக்தியாகப் புன்னகைத்தவன், "இதுக்கு மேல எதுவும் பண்ண முடியாது, நான்தான் கொலை பண்ணேன்னு கோர்ட்ல கூட தீர்ப்பு கொடுத்துட்டாங்க" என்று வேதனைக் குரலில் சொல்ல, சில நிமிடங்கள் புருவத்தை நெறித்து ஆழ்ந்து யோசித்தாள்.
"தீர்ப்பு கொடுத்திருக்கலாம், ஆனா... மறுபடியும் நீ இந்த கொலைய பண்ணலன்னு உனக்கு சாதகமா ஒரு ஆதாரம் கிடைச்சாலும் இந்த கேஸ்ஸ ரீஓபன் பண்ண முடியும். நான் எவிடென்ஸ்ஸ தேடுறேன். அந்த கொலைகாரன் யாருன்னு நான் கண்டுபிடிக்கிறேன்" என்றவளின் வார்த்தைகளில் அத்தனை உறுதி.
அவள் பேசுவதைக் கேட்ட ஹர்ஷாவுக்கு திகைப்பாக இருந்தது.
"வாட்! வேணாம் ஆரு, இதை விட்டுரு. கண்டிப்பா உனக்கு ஆபத்தா இது முடியலாம். நீ எனக்காக இந்த ரிஸ்க்க எடுக்க தேவையில்ல" என்று அவன் பதற்றமாக சொல்ல, "நான் உனக்காக பண்ணல, ஒரு நிரபராதிக்காக பண்றதா இருக்கட்டும். கண்டிப்பா ப்ரணவ் எனக்கு ஹெல்ப் பண்ணுவான். சீக்கிரம் எல்லா சரியாகும்" என்ற ஆராதியா அங்கிருந்து வெளியேறப் போக, அவளை அழைத்து நிறுத்தினான் ஹர்ஷத்.
அவளோ திரும்பி அவனை கேள்வியாகப் பார்க்க, "யுகா ஏன் என்னை பார்க்கவே வரல, நீ அவன் கூட பேசினியா, அவன் என்னை பத்தி ஏதாச்சும் கேட்டானா?" என்று ஆர்வத்தோடு அவன் கேட்க, அப்போதுதான் யுகனின் ஞாபகமே வந்தது அவளுக்கு.
"இல்லை ஹர்ஷா, இப்போதான் நானே இதை பத்தி யோசிக்கிறேன். ஏன் அவர் உன்னை பத்தி என்கிட்ட கேக்கவே இல்லை?" என்று யோசித்தவாறு அவள் வெளியே செல்ல எத்தனிக்க, "ஆரு..." என்று மீண்டும் அவளை அழைத்தான் ஹர்ஷா.
"ஐ லவ் யூ!" என்று விழிகளில் காதலோடு சொன்னவனுக்கு கண்கள் கலங்கியிருக்க, அவனை அணைக்கத் துடித்த மனதை கடிவாளமிட்டு அடக்கியவள் உடனே அந்த இடத்திலிருந்து நகர்ந்திருக்க, போகும் அவளை ஏக்கத்தோடு பார்த்திருந்தான் ஹர்ஷத்.
அடுத்தநாள்,
இரவு முழுக்க தூங்காமல் யோசித்ததில் சரியான திட்டம் ஆராதியாவின் மூளைக்குள் உதித்திருக்க, அவசர அவசரமாக தயாராகி வெளியேறப் போனவளின் முன்னே வந்து நின்றார் லலிதா.
"அம்மா, எனக்கு இப்போ சாப்பிட எல்லாம் நேரமில்ல. நான் ஒரு முக்கியமான வேலையா அவசரமா போகணும், ஈவினிங் பார்க்கலாம்" என்று பதற்றமாக பேசிவிட்டு லலிதாவை தாண்டி அவள் செல்லப் போக, "அந்த பையன் இனி உனக்கு வேணாம்" என்று சட்டென சொன்னார் அவர்.
உடனே தன் நடையை நிறுத்தியவள் மெல்ல தன் தாயை திரும்பிப் பார்த்தாள்.
"என்னாச்சு இப்போ?" என்று கூரிய பார்வையோடுக் கேட்க, "இனி என்ன நடக்கணும்? அதான் ஊருக்கே தெரிஞ்சிருச்சே. எவளோ ஒருத்தி கூட ஹோட்டல்ல ரூம் போட்டு அவள கொன்னு போட்டிருக்கான். ச்சீ... இவன் எல்லாம் மனுஷனா! நல்லவேள கல்யாணத்துக்கு முன்னாடியே அவன பத்தி தெரிஞ்சு போச்சு. இல்லன்னா கடவுளே! இதுக்கப்பறமாச்சும் அவன் பின்னாடி சுத்துறத நிறுத்து, அம்மா உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்க்குறேன்" என்று லலிதாவோ அவர் பாட்டிற்கு பேசிக்கொண்டே போனார்.
ஆனால், ஆராதியா அவரை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. அமைதியாக கேட்டுக்கொண்டு நின்றிருந்தவள், அவர் பேசி முடித்ததும் அமைதியாக அங்கிருந்து வெளியேறியிருக்க, லலிதாவிற்கு மகளின் செய்கையில் பிபிதான் எகிறியது.
அதேநேரம், இறந்து போனவர்களின் மற்ற இரு நண்பர்களான வினய் மற்றும் க்ரிஷ்ஷின் குடும்பத்தினர் அந்த போலீஸ் ஸ்டேஷனை மொத்தமாக ஆக்கிரமித்திருக்க, உச்சகட்ட கோபத்தோடு தலையில் கை வைத்தவாறு அமர்ந்திருந்தான் ப்ரணவ்.
"எங்களால உங்கள நம்ப முடியாது. இவங்க கூட இருந்தவங்க மூனு பேர் தொடர்ந்து இறந்திருக்காங்க, இவங்களுக்கும் எதுவும் ஆகாதுன்னு என்ன நிச்சயம்? எங்க பசங்க உசுருக்கு எதுவும் ஆகக் கூடாது. நீங்கதான் பாதுகாப்பு கொடுக்கணும்" என்று வினய்யின் தந்தை மிரட்டலாகச் சொல்ல,
"தாராளமா கொடுக்கலாம் சார், இப்போ நாங்க முடியாதுன்னு சொல்லல. ஆனா, உங்க பசங்கள நாங்க இந்த கேஸ்ஸ க்ளோஸ் பண்ற வரைக்கும் வீட்டுக்குள்ளயே இருக்க சொல்லுங்க. அதுதான் அவங்களுக்கு சேஃப்" என்று பற்களைக் கடித்தவாறு அழுத்தமாக சொன்னான் அவன்.
"அதெப்படி! போலீஸ் பாதுகாப்பு சரியா கொடுத்தா எதுக்காக வீட்டுக்குள்ளயே இருக்கணும். அதெல்லாம் முடியாது" என்று க்ரிஷ் கடுப்பாக சொல்ல, அவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்து வைத்தனர் அங்கிருந்த அதிகாரிகள்.
சரியாக, "எக்ஸ்கியூஸ் மீ சார்!" என்ற மெல்லிய குரல் கேட்க, சட்டென நிமிர்ந்துப் பார்த்த ப்ரணவ் அங்கு நின்றிருந்தவளை முறைத்துப் பார்த்தான்.
"நானும் அவங்க ஃப்ரென்டா இருந்தவதான், எனக்கெல்லாம் பாதுகாப்பு கொடுக்க மாட்டீங்களா?"" என்று கேலியாக ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினாள் வைஷ்ணவி.
அங்கிருந்தவர்களோ வாயைப் பிளந்து அவளைப் பார்க்க, அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் தன்னை மீறி ரசித்தான் ப்ரணவ்.
ஆனால் அதுவும் சில கணங்கள்தான்.
"முன்னாடியே சொன்ன மாதிரி முடிஞ்ச அளவுக்கு வீட்டுலயே இருங்க, எங்க ஆளுங்க உங்க வீட்டு பக்கத்துலயேதான் பாதுகாப்புக்காக இருப்பாங்க. நவ் யூ ஆல் காய்ஸ் மே கோ" என்று அவன் சொன்னதும், அவர்களும் தங்களுக்குள் கிசுகிசுத்தவாறு அங்கிருந்து நகர, வினய்யும் க்ரிஷும் வைஷ்ணவியை மனுஷியாகக் கூட மதிக்கவில்லை.
முகத்தைக் கூட பார்க்காது அவர்கள் பாட்டிற்கு நகர்ந்து விட, "அவங்க உன் ஃப்ரென்ட்தானே வைஷ்ணவி, ஏன் முகத்தை திருப்பிக்கிட்டு போறாங்க?" என்று சந்தேகமாகக் கேட்டான் ப்ரணவ்.
அவனின் எதிரே இருந்த இருக்கையில் உரிமையோடு அமர்ந்தவள், "அதான் முன்னாடியே சொன்னேனே சார், அவங்க கூட இப்போ அவ்வளவா பழக்கம் இல்லன்னு" என்று சொல்லிவிட்டு அவனையே பார்க்க, அவனும் பதிலுக்கு அவளின் விழிகளையே பார்த்திருந்தான்.
"அப்பறம் கேஸ் எல்லாம் எப்படி போகுது?" என்று ஏதோ பெரிய மனுஷி தோரணையில் மேசையில் இரு கைகளைக் கோர்த்து வைத்து அவள் கேட்க, சுற்றிமுற்றிப் பார்த்தவன் "இந்த இடத்தையும் என்னையும் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? ஒழுங்கு மரியாதையா இங்கயிருந்து போயிரு" என்று விழிகளை உருட்டி எச்சரித்தான்.
அதில் குறும்பாகப் புன்னகைத்தவள், "எதுக்கு இம்புட்டு டென்ஷன் போலீஸ்காரரே, உங்ககிட்ட ஒன்னு சொல்லணும். சொல்லிட்டு நான் போயிடுறேன்" என்று சொல்லி சற்று முன்னோக்கி வர, "என்ன?" என்று கேள்வியாகப் பார்த்தான் ப்ரணவ்.
"நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்ற அவளின் திடுதிப்பென்ற கேள்வியில் அவனுக்கே ஒருகணம் திக்குமுக்காகி விட்டது.
"வா.. வாட்!" என்று அந்த இடமே அதிர அவன் கத்திவிட, சுற்றியிருந்த அதிகாரிகளின் பார்வையும் அவர்கள் இருவரின் மீது சந்தேகத்தோடு படிந்தது.
"சா.. சாரி!" என சுற்றியிருந்தவர்களைப் பார்த்து சொன்னவன் வைஷ்ணவியைப் பார்த்து ஏதோ பேச வர, அதற்குள் ஸ்டேஷனுக்குள் நுழைந்தாள் ஆராதியா.
அங்கு தன் சகோதரியை எதிர்பார்க்காதவளின் விழிகள் சந்தேகத்தில் அவளைத் துளைத்தெடுத்தன.
அவர்களுக்கருகே சென்று, "வைஷு, நீ.. நீ இங்க என்ன பண்ற?" என்று அவள் புரியாமல் கேட்க, "அது.. ஒன்னுஇல்லை அக்கா. சும்மாதான், இந்த கேஸோட நிலைமை எப்படி போகுதுன்னு கேக்கலாம்னு வந்தேன். மிச்சம் மீதி இருக்குற என்னோட ஃப்ரென்ட்ஸ் உயிரோட இருக்கணும்ல, அதான்..." என்று வராத கண்ணீரை துடைத்து விட்டுக்கொண்டு சொன்னாள் மற்றவள்.
ப்ரணவோ அவளின் நடிப்பைப் பார்த்து ஒற்றைப் புருவத்தைத் தூக்கி முறைத்தவன், ஆராதியாவின் பார்வை தன் மீது படிந்ததுமே உடனே முகபாவனையை மாற்றி அவளை கேள்வியாக நோக்கினான்.
"ப்ரணவ், ஐ நீட் யூவர் ஹெல்ப். ப்ளீஸ்!" என்று விழிகள் கலங்கக் கேட்டாள் தியா.
சுற்றிமுற்றிப் பார்த்துவிட்டு, "இங்க வேணாம் தியா, வெளியில போய் பேசிக்கலாம்" என்றவன் அவன் பாட்டிற்கு முன்னோக்கி நடக்க, அவன் பின்னாலேயே சென்ற இருவரும் அவன் ஓரிடத்தில் நின்றதும் சட்டென நின்றனர்.
"என்னால இந்த விஷயத்துல ஹெல்ப் பண்ண முடியாதுன்னு நான் முன்னாடியே சொல்லிட்டேன், எல்லா ஆதாரமும் ஹர்ஷாவுக்கு எதிரா இருக்கு. என்ட் மறுபடியும் நீ அவன நம்ப போறியா?" என்று ப்ரணவ் சிறு கோபத்தோடுக் கேட்க, "நான் அவன் கூட அஞ்சு வருஷத்துக்கு மேல பழகியிருக்கேன். ஐ அம் டேம்ன் ஷுவர், கண்டிப்பா அவன் கொலை பண்ணியிருக்க மாட்டான். எனக்கு தெரியும். அவன் மேல எனக்கு கோபம் இருக்கு, ஆனா தப்பே பண்ணாம தண்டனை அனுபவிக்க என்னால விட முடியாது. நான் ஹர்ஷாவ காப்பாத்தணும் ப்ரணவ்" என்று தன் நிலையை புரிய வைத்தாள் அவள்.
"வாட் அ லவ்!" என்று ஓரக்கண்ணால் வைஷாலி ப்ரணவைப் பார்க்க, தன் தோழி கூற வருவதை உணர்ந்துக்கொண்டவன் சில நிமிடங்கள் ஆழ்ந்து யோசித்துவிட்டு ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டான்.
"இப்போ உனக்கு என்ன ஹெல்ப் வேணும்?" என்று அவன் கேட்டதும், "ப்ரீத்தி கொலை நடந்த ஹோட்டல் ரூம்ம போய் நான் பார்க்கணும், மே பீ உண்மையான கொலைகாரனுக்கு சம்பந்தப்பட்ட ஏதாச்சும் ஒரு எவிடென்ஸ் எனக்கு கிடைக்கலாம். நீயும் என் கூட வா!" என்று அவள் சொல்ல, அவளை அதிர்ந்துப் பார்த்தான் அவன்.
"அங்க போறது அவ்வளவு ஈஸி கிடையாது, நான் போன விஷயம் தெரிஞ்சாலே என்னை சஸ்பென்ட் பண்ணிருவாங்க. என்ட் பாரன்சீக் ஆளுங்க அந்த இடத்தை நல்லா அலசி பார்த்துட்டாங்க. எந்த எவிடென்ஸுமே கிடைக்கல" என்று பதற்றமாக சொன்னவன் தியாவின் கலங்கிய விழிகளைப் பார்த்து 'ஊஃப்...' என பெருமூச்சு விட்டுக்கொண்டான்.
"ஓகே, நீ சொல்ற மாதிரி ட்ரை பண்ணி பார்க்கலாம். இன்னைக்கு ராத்திரி ரெடியா இரு, அங்க போகலாம்" என்று வைஷாலியை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு ப்ரணவ் அங்கிருந்து நகர, ஆராதியாவோ சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்காத குறையாக நின்றிருந்தாள்.
திடீரென ப்ரணவ் உட்பட மொத்த அதிகாரிகளும் பரபரப்பாக உள்ளிருந்து வந்து ஜீப்பில் ஏறி மின்னல் வேகத்தில் வண்டியை செலுத்த, நின்றிருந்த இருவருக்கும் எதுவுமே புரியவில்லை.
"என்னாச்சு அக்கா, ஏன் எல்லாரும் டென்ஷனா போறாங்க?" என்று வைஷாலி தமக்கையின் காதில் கிசுகிசுக்க, "அதான்டீ எனக்கும் புரியல, இரு கேக்கலாம்" என்ற ஆராதியா அங்கு வாசலில் நின்றிருந்த அதிகாரியிடம் விசாரித்தாள்.
"அதுவாம்மா... பீச்சுக்கு பக்கத்துல ஒரு பாடி கிடைச்சிருக்கு. அதான்" என்று அவர் சொல்ல, அடுத்தகணம் வைஷாலியை இழுத்துக்கொண்டு அந்த இடத்திற்கு ஓடினாள் தியா.
அங்கு சுற்றியிருந்தவர்கள் அந்த இடத்தில் கூடியிருக்க, போலீஸ் அதிகாரிகளும் பரபரப்பாக இருந்தனர். உடனே அந்த இடத்திற்கு ஆம்பியூலன்ஸும் கொண்டு வரப்பட்டது.
"அக்கா, என.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. யாரா இருக்கும்னு. நா.. நாம போயிடலாம். ப்ளீஸ்!" என்று வைஷாலி தியாவின் கரத்தை இறுகப் பற்றி இழுக்க, "இல்லை வைஷு, நான் பார்க்கணும்" என்ற மற்றவள் ஒவ்வொரு அடியாக வைத்து கூட்டத்தை விலக்கி இறந்தது யாரென்றுப் பார்த்தாள்.
உடல் பலவீனமாகி விழப் போனவளை தாங்கிக்கொண்ட வைஷாலி, "அக்கா... என்னாச்சு உனக்கு? அய்யோ... ப்ளீஸ் நகருங்க" என்று அங்கிருந்து நகர்ந்துச் சென்று உடனே தன் பையிலிருந்த தண்ணீர் போத்தலை அவளுக்கு பருகக் கொடுக்க, உடலெல்லாம் வியர்த்துப் போய் கைக்கால்கள் நடுங்க நின்றிருந்த ஆராதியாவின் விழிகளிலிருந்து விழிநீர் விடாமல் ஓடியது.
"அக்கா, என்னாச்சு, ஏன் அழுற? ஏன்னு சொல்லு... இறந்தவரு உனக்கு ரொம்ப தெரிஞ்சவரா?" என்று வைஷாலி பதற்றமாகக் கேட்க, அழுதுக்கொண்டே தலையசைத்தவளின் இதழ்கள், "யுகன்..." என்று முணுமுணுத்தன.
ஆராதியா இடிந்துப் போய் நின்றிருக்க, தூரத்திலிருந்து அவளின் முகபாவனையை கவனித்துக்கொண்டிருந்த ப்ரணவ் வேகமாக அவளை நோக்கி வந்து, "தியா, ஆர் யூ ஓகே?" என்று கேட்க, தலையசைத்தவாறு ப்ரணவை நிமிர்ந்துப் பார்த்தாள் அவள்.
அவளின் முகத்தை உற்றுப் பார்த்தவன், "அவன உனக்கு தெரியுமா?" என்று அதிர்ந்துப் போய் கேட்க, "ம்ம்.. ஹர்ஷாவோட ஃப்ரென்ட். எனக்கும் நல்ல பழக்கம்தான். ஹர்ஷா ஜெயிலுக்கு போனதுலயிருந்து ஒரு தடவை கூட அவன போய் யுகன் பார்க்கல, ஆனா... ஆனா இப்போ இப்படி ஒரு நிலைமையில அவர பார்ப்பேன்னு நினைச்சும் பார்க்கல ப்ரணவ்" என்று பேசிக்கொண்டே சென்றவளுக்கு பதற்றத்தில் வேகமாக மூச்சு வாங்கத் தொடங்க, வேகமாக பையிலிருந்த இன்ஹேலரை எடுத்து மருந்தை உறிஞ்சுக்கொண்டாள் அவள்.
அவள் சொன்னதைக் கேட்டவனுக்கு அத்தனை அதிர்ச்சி.
"என்ன சொல்லு தியா, இவன் ஹர்ஷாவுக்கு சம்பந்தப்பட்டவனா! எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. நாம தப்பான ரூட்ல இருக்கோம், இதுல ஏதோ ஒன்னு இருக்கு. சம்திங் ஃபிஷி..." என்று இடது பக்க புருவத்தை நீவி விட்டவாறு அவன் சொல்ல, அந்த இரு பெண்களுக்கும் அதே சந்தேகம்தான்.
"என்னோட ஃப்ரென்ட்ஸ்தான் சாகுறாங்கன்னு ரொம்ப பயந்தேன். ஆனா இப்போ..." என்று யோசித்த வைஷ்ணவி, "எப்படி கொலை பண்ணியிருக்கான், சேம் பெட்டர்னா?" என்று சந்தேகத்தோடுக் கேட்க, இல்லை எனும் விதமாக அழுத்தமாக தலையசைத்தான் ப்ரணவ்.
"உடம்புல ஒரு கீறல் கூட கிடையாது. போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் வந்தா தான் எப்படி இறந்திருக்கான்னு தெரிய வரும்" என்று அவன் சொல்ல, விழிநீரை அழுந்தத் துடைத்த ஆராதியா, "கண்டிப்பா அந்த ஹோட்டல் ரூம்ல ஏதாச்சும் ஒரு ஆதாரம் கிடைக்கலாம், ப்ரணவ் நீ சொல்ற?" என்று கேட்டாள் தீர்க்கமான பார்வையோடு.
அவனும் யோசனையோடு தலையசைக்க, அன்றிரவே இருவரும் ஹோட்டலின் முன்னே நின்றிருக்க, இவர்கள் வந்த அடுத்த சில நிமிடங்களிலேயே யாருக்கும் தெரியாமல் வேகமாக இவனிடம் ஓடி வந்தார் அந்த ஹோட்டல் மேனேஜர்.
"சார், அந்த ரூம்ல கொலை நடந்தது தெரிஞ்துலயிருந்து ஹோட்டலோட வருமானமே போச்சு. எவனும் இங்க தங்கவே வர மாட்டேங்குறான். இப்போ நான் அந்த ரூம் சாவிய உங்ககிட்ட கொடுத்தேன்னு எங்க பாஸ்க்கு தெரிஞ்சா கூட என் வேலையே போயிரும்" என்று பயந்தபடி அந்த மேனேஜர் சொல்ல, "தேங்க் யூ சோ மச், உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்குறேன்" என்ற ப்ரணவ் ஆராதியாவை அழைத்துக்கொண்டு அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தான்.
கொலை நடந்த அந்த ஹோட்டல் ரூமிற்கு முன்னே இருவரும் நின்றிருக்க, ஏனென்று தெரியாத பயம் ஆராதியாவின் மனதைக் கவ்வியது.
"ப்ரணவ், சிசிடீவி கேமராஸ் எல்லாம் இருக்கே, நாம இங்க வர்றத யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்களா என்ன, எதுவும் பிரச்சனை வந்துடாதே!" என்று சிறு பயத்தோடு அவள் கேட்க, "வாய்ப்பே இல்லை தியா, என்னோட ஷர்ட்ட பாரு! இந்த மினி டிவைஸ் சுத்தியிருக்குற எல்லா சிசிடீவி கேமராஸையும் டீஆக்டிவேட் பண்ணிரும். சோ, யாராலேயும் நம்மள கண்டுபிடிக்க முடியாது" என்றுக்கொண்டு அந்த அறையை திறந்து உள்ளே நுழைந்தான் ப்ரணவ்.
இவளும் பின்னாலேயே செல்ல, "பட் தியா, இந்த ஹோட்டல் மேனேஜரோட நான் பேச வந்தப்போதான் கொலை நடந்த அன்னைக்கான சிசிடீவி கேமராவ தரவா சேக் பண்ணேன். அதுல ஹர்ஷா ப்ரீத்தியோட அந்த ரூமுக்குள்ள போன ஒரு மணி நேரத்துக்கு அப்பறம் பதட்டமா ரூம்லயிருந்து வெளியில வந்திருக்கான். ஆனா அதுக்கப்பறம் அடுத்த அரைமணி நேரத்துக்கு சிசிடீவி வர்க் பண்ணாம இருந்திருக்கு. மே பீ அந்த கொலைகாரன் கூட இந்த டெக்னாலெஜிய யூஸ் பண்ணியிருக்கலாம்" என்று அவன் தன் யூகத்தை சொன்னான்.
"அப்போ அந்த அரைமணி நேரத்துலதான் ஏதோ நடந்திருக்கு" என்று ஆழ்ந்த யோசனையோடு சொன்னாள் தியா.
"ம்ம்..." என்றவன் லைட்டை ஆன் செய்து சுற்றி முற்றி தேட ஆரம்பிக்க, ஆராதியாவும் அவனோடு இணைந்து ஏதாவது ஒரு ஆதாரம் கிடைக்குமா என தீவிரமாக தேட ஆரம்பித்தாள்.
ஆனால், எதுவுமே சிக்கியபாடில்லை.
ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல், "ப்ரணவ், கொலை நடந்த இரண்டே நாள்ல ரூம்ம க்ளீன் பண்ணியிருப்பாங்க. சோ, இங்க ஒன்னுமே இல்லை. யாராச்சும் பார்க்குறதுக்குள்ள இங்கயிருந்து போயிரலாம்" என்று சோர்ந்துப்போய் ஆராதியா சொல்ல, இடுப்பில் கைக்குற்றி மூச்சு வாங்கியவாறு நின்றிருந்தவனுக்கும் அதுதான் சரியென்று தோன்றியது.
அங்கிருந்து வெளியேறியவன் சாவியை ஒப்படைப்பதற்காக ஹோட்டல் மேனேஜர் வரும் வரை வெளியில் காத்திருந்தான்.
இவன் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதுமே அந்த மேனேஜர் அடுத்த சில நிமிடங்ளிலேயே ஓடி வர, சாவியை அவனிடம் கொடுத்தான் ப்ரணவ்.
"இந்த விஷயம் என்னைக்கும் வெளியில தெரியவே கூடாது" என்று அவன் எச்சரிக்கையோடு சொல்ல, பயந்தபடி தலையாட்டிய அந்த மேனேஜர் திடீரென ஏதோ ஞாபகம் வந்தவனாக தன் பேன்ட் பாக்கெட்டை அலசி அதிலிருந்து ஒரு செயினை அவனிடம் நீட்டினான்.
"சார், இதை முன்னாடியே உங்ககிட்ட கொடுத்திருக்கணும். அன்னைக்கு எங்க ஆளுங்க ரூம்ம க்ளீன் பண்ணும் போது இந்த செயின் கிடைச்சிருக்கு" என்று அந்த மேனேஜர் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட, அந்த செயினை உற்றுப் பார்த்தனர் இருவரும்.
வெள்ளி செயினில் இல்லுமினாட்டி அடையாளமான ஒற்றை விழி டோலர் கோர்த்திருக்க, ஆராதியாவுக்கு அதை எங்கேயோ பார்த்த உணர்வு.
"தியா, இந்த செயின் யாரோடதுன்னு உனக்கு தெரியுமா?" என்று ப்ரணவ் கேட்க, "நா.. நான் பார்த்திருக்கேன் ப்ரணவ், ஆனா... ஆனா யாரோடதுன்னு ஞாபகம் வர மாட்டேங்குது. ச்சே!" என்று எரிச்சலாக சொன்னவள், "மே பீ ஹர்ஷாவுக்கு தெரிஞ்சிருக்கலாம்" என்று யோசனையோடு சொல்ல, ப்ரணவுக்கும் அவனிடம் கேட்பது நல்ல யோசனையாகத்தான் தோன்றியது.
இவர்கள் தங்களுக்குள் ஒரு திட்டத்தை போட்டுக்கொண்டிருக்க, அதேநேரம் அந்த அறையில் ஒளிரும் சிறு வெளிச்சத்தில் ஒரு புகைப்படத்திற்கு முன் நின்றிருந்தாள் அவள்.
அவளுடைய முகம் பாறை போல் இறுகிப் போயிருக்க, தன் நீண்ட கூந்தலை சுருட்டி கொண்டையிட்டவள் அந்த கெமிக்கல் தண்ணீரில் வைஷ்ணவியின் புகைப்படத்தைக் கழுவி எடுத்து அதை சுவற்றில் ஒட்டி வட்டமிட, சரியாக ஒரு எண்ணிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
அதையேற்றவள், "வினய்ய அப்பறம் கவனிச்சிக்கலாம், எங்க போயிட போறான்! மொதல்ல வைஷ்ணவியோட கதைய முடிக்கலாம். என்ட் அதுக்கு முன்னாடி அந்த ஆராதியா ஓவரா நம்ம வழியில குறுக்கிடுறா, அவள இதுக்கு மேல உயிரோட விடக் கூடாது. புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அவள் அழைப்பைத் துண்டித்தாள்.
ஆனால், நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் ப்ரணவின் நினைவில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள் வைஷ்ணவி.
அடுத்தநாள்,
"இந்த செயின்... இதை எங்கேயோ பார்த்திருக்கேன். ஆனா எங்கன்னுதான் தெரியல" என்று ஆராதியா சொன்னது போலவே ஹர்ஷத்தும் சொல்ல, ப்ரணவோ புருவ முடிச்சுகளோடு இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.
"அப்போ இந்த செயினோட சம்பந்தப்பட்டவங்க உங்க இரண்டு பேருக்குமே பழக்கமா இருந்திருக்காங்க. ரைட்!" என்று அவன் கேட்க, "தெரியல, ஆனா இது யாரோடதுன்னு மட்டும் தெரிஞ்சதுன்னா எல்லா கேள்விக்கும் விடை தெரிஞ்ச மாதிரி இருக்கும்" என்றாள் ஆராதியா தீவிரமாக.
"என்னால உள்ளயே இருந்துக்கிட்டு எதுவுமே பண்ண முடியல ப்ரணவ், பைத்தியம் பிடிக்குது, ஒவ்வொரு நிமிஷமும் இவளுக்கு ஏதாச்சும் ஆகிருமோன்னு பயமா இருக்கு" என்று இயலாமையோடு ஹர்ஷத் சொல்ல, "ஒரு ஆதாரம் உங்களுக்கு சாதகமா இருந்தாலும் இந்த கேஸ்ஸ ரீஓபன் பண்ணி நானே உங்கள பெயில்ல வெளியில எடுப்பேன். ஆனா, எல்லாமே எதிரா இருக்கு ஹர்ஷா. என்ட் ஐ அம் ரியலி சாரி! ஆரம்பத்துல நான் கூட நீங்கதான் இந்த கொலைய பண்ணீங்கன்னு தப்பா நினைச்சேன். இப்போதான் எங்க டிபார்ட்மென்டே இந்த கேஸ்ல தப்பான வழியில இருக்குறது புரியுது" என்றான் மற்றவன் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டபடி.
"ஆரு, யுகன்கிட்ட பேசினியா?" என்ற ஹர்ஷத்தின் திடீர் கேள்வியை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
"ஹர்ஷா... அது... அது வந்து யுகா அண்ணா இறந்துட்டாரு" என்று நேற்று நடந்ததை அவள் திக்கித்திணறி சொல்லி முடிக்க, அவள் சொன்னதை கிரகிக்கவே அவனுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன.
"ஆரு... விளையாடாத! அதெப்படி? இல்லை.. இருக்காது. நான் உள்ள இருக்கேன்னு என்னை வச்சு விளையாடுறியா, நான் உன்னை அழ வச்சேன்னு என்னை அழ வைக்க பார்க்குறியா?" என்று விழிகள் கலங்க மனம் ஏற்றுக்கொள்ள முடியாமல் அழுகையை அடக்கிய குரலில் அவன் பேச, நேற்றைய கொலை சம்பந்தமான செய்தியை அலைப்பேசியில் எடுத்துக் காண்பித்தான் ப்ரணவ்.
"உடம்புல எந்த காயமும் இல்லை. ஃபாரன்சீக் ரிப்போர்ட்ல கூட சூசைட்னுதான் வந்திருக்கு. ஏன்னா, யுகனோட உடம்புல ரொம்ப டேன்ஜரான பாய்சன் இருந்திருக்கு ஹர்ஷா. சோ... சூசைட்னு அந்த கேஸையே க்ளோஸ் பண்ணிட்டாங்க" என்று அவன் சொல்ல, இருவர் சொன்னதை நம்ப முடியாமல் யுகனின் சடலத்தை அலைப்பேசியில் பார்த்தவாறு இடிந்துப் போய் நின்றிருந்தான் ஹர்ஷத்.
"என.. என்னால அவன் இல்லைங்குறதை ஏத்துக்க முடியல. ஐ அம் டேம்ன் ஷுவர், இது சூசைட் கிடையாது. அவன.. அவன கொலை பண்ணியிருக்காங்க" என்று பற்களைக் கடித்தவன் உச்சகட்ட கோபத்தில் சுவற்றில் ஓங்கிக் குத்த, ஆராதியாவுக்கே முதல் தடவையாகப் பார்க்கும் தன்னவனின் ஆக்ரோஷத்தில் பக்கென்று இருந்தது.
"அப்போ நாங்க வரோம்" என்றுவிட்டு ப்ரணவ் அங்கிருந்து வெளியேறப் போக, யோசனையும் தளர்ந்த நடையுமாக உள்ளே சென்றவனை திரும்பிப் பார்த்தவாறு வெளியேறினாள் ஆராதியா.
அன்றிரவு,
"அம்மா, நான் வந்துக்கிட்டுதான் இருக்கேன், சும்மா பதற வேணாம். எனக்கு எரிச்சலா இருக்கு" என்று கத்திக்கொண்டு வீதியோரமாக வைஷ்ணவி நடந்துச் செல்ல, லலிதாவோ விடாது வசைப்பாடிய வண்ணமிருந்தார்.
"தியா அவ்வளவு சொல்லியும் ஏன்டீ வெளியில போயிருக்க, அதுவும் இந்த நேரத்துல. நாட்டுல நிலைமையே சரியில்ல, உனக்கு ஏதாச்சும் ஆனா நான் என்னடீ பண்ணுவேன்?" என்று அவர் கிட்டத்தட்ட அழுதே விட, "அய்யோ அம்மா போதும், இப்போ நான் வீட்டுக்குதான் வந்துக்கிட்டு இருக்கேன். வீட்டுக்கு வந்ததும் உங்க புலம்பல கேக்குறேன்" என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் 'ஊஃப்ப்...' என பெருமூச்சுவிட்டு ஒரு பாடலை ஹம்மிங் செய்தவாறு நடந்துச் சென்றாள்.
சிறிது தூரம் சென்றதும் யாரோ பின்னாலேயே தொடர்வது போல் அவளின் உள்ளுணர்வு எச்சரிக்கை மணியடிக்க, சட்டென நின்றவள் உடனே திரும்பிப் பார்த்தாள்.
ஆனால், அங்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
"என்ன இது, ஒரு மாதிரியா இருக்கே! சம்திங் ஃபிஷி" என்று வாய்விட்டு முணுமுணுத்த வைஷ்ணவி இப்போது நடையில் வேகத்தைக் கூட்டி ஏதாவது ஆட்டோ வருகிறதா என்று பார்த்துக்கொண்டே நடக்க, அவளை தொடர்ந்து வந்த காலடி சத்தத்தின் வேகமும் கூட, பயத்தில் கால்கள் தடுமாற ஆரம்பித்தன அவளுக்கு.
"கடவுளே!" என்று உள்ளுக்குள் பயந்தவள், எச்சிலை விழுங்கியவாறு கிட்டத்தட்ட ஓட ஆரம்பிக்க, அவளே எதிர்பார்க்காது யாரோ ஒருவரின் மீது மோதி நின்றவள், "என்னை விட்டுருங்க ப்ளீஸ்! எ.. என்னை விட்டுருங்க" என்று விழிகளை மூடிக்கொண்டு கத்த ஆரம்பிக்க, அவளின் தோளை இறுகப் பற்றியது அந்த இரு வலிய கரங்கள்.
"ஏய் வைஷு, ரிலாக்ஸ்! என்னாச்சு உனக்கு, ஏன் இப்படி கத்துற? வைஷ்ணவி..." என்ற ப்ரணவின் அதட்டலான குரலிலேயே நடப்புக்கு வந்தவள் விழிகளை பட்டென்று திறந்த அடுத்தகணம் கொஞ்சமும் யோசிக்காது அவனின் மார்பில் முகத்தைப் புதைத்து அவனை இறுக அணைத்திருக்க, இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை அவன்.
விக்கித்துப் போய் நின்றிருந்தவனின் கரங்கள் அவளை அணைப்பது போல் செல்வதும் பின் தயங்குவதுமாக இருக்க, அவளோ எதைப் பற்றியும் யோசிக்காது பயத்தில் அவனிடம் தஞ்சமடைந்திருந்தாள்.
இதுவரை எந்தவொரு பெண்ணின் ஸ்பரிசத்தையும் உணராத அந்த அதிகாரிக்கு வைஷ்ணவியின் அருகாமையும் ஸ்பரிசமும் புது உணர்வைத் தோற்றுவிக்க, அன்று அவள் சொன்ன காதல் வேறு மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது அவனுக்கு.
விழிகளை அழுந்த மூடித் திறந்து உணர்வுகளைக் கட்டுப்படுத்தியவன் அவளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தி, "என்னாச்சு?" என்று கூரிய பார்வையோடுக் கேட்க, "அது... அது வந்து.. என்னை யாரோ ஃபாலாவ் பண்ண மாதிரி இருந்துச்சு. பயத்துல நான் ஓட ஆரம்பிச்சதும் அந்த உருவமும் என்னை துரத்த ஆரம்பிச்சது. என.. எனக்கு பயமா இருக்கு ப்ரணவ்" என்று அவனின் பெயரை உரிமையாக அழைத்து நடந்ததை சொன்னாள் வைஷ்ணவி.
ப்ரணவின் புருவங்கள் யோசனையில் சுருங்க, அவளை நகர்த்திவிட்டு சற்று தூரம் நடந்து சென்று சுற்றி முற்றி பார்க்க ஆரம்பித்தான் அவன்.
ஆனால், அவனுக்கு ஏமாற்றம்தான்.
மீண்டும் அவளருகே வந்தவன், "மே பீ உன் பிரம்மையா இருக்கலாம். நீ எதை பத்தியும் யோசிக்காம சீக்கிரமா வீட்டுக்கு கெளம்பு" என்று சொல்லிவிட்டு நகரப் போக, "ஹ்ர்ம் ஹ்ர்ம்... ப்ளீஸ், என்னை ட்ரோப் பண்ண முடியுமா? பயமா இருக்கு" என்று தயங்கித் தயங்கி அவள் கேட்க, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டி அவளை ஒற்றைப் புருவத்தைத் தூக்கி ஒரு பார்வைப் பார்த்தான் ப்ரணவ்.
"ப்ளீஸ்!" என்று அவனின் பார்வையைப் பார்த்துவிட்டு அவள் விழிகளை சுருக்கிக் கெஞ்ச, 'ஊஃப்ப்...' என பெருமூச்சுவிட்டாவாறு, "வந்து தொலை!" என்று அவன் தன் ஜீப்பை நோக்கிச் செல்ல, 'அப்பாடா!' என்று நிம்மதி பெருமூச்சு விட்டவாறு அவன் பின்னாலேயே சென்று ஜீப்பில் அவனுக்கு பக்கத்தில் ஏறி அமர்ந்துக்கொண்டாள் வைஷ்ணவி.
அவனும் அவளின் வீட்டை நோக்கி வண்டியை செலுத்த, ஜன்னல் வழியே வெளியே நோட்டமிட்டவாறு வந்த வைஷ்ணவியோ, "இது ஒன்னும் என் பிரம்மை கிடையாது. நிஜமாவே என்னை யாரோ துரத்திக்கிட்டு வந்தாங்க. ஆனா ஏன், நான் என்ன பண்ணேன்?" என்று பதற்றமாகக் கேட்டாள்.
ப்ரணவுக்கு அவள் சொல்வது பொய்யில்லை என்று மட்டும் புரிந்தது.
அவனோ எதுவும் பேசவில்லை. அமைதியாக வண்டியை செலுத்தி அவள் வீட்டின் முன்னே வண்டியை நிறுத்த, அவளும் எதுவும் பேசாமல் இறங்கப் போக, "ஏய்..." என்று அவளை அழைத்து நிறுத்தினான் ப்ரணவ்.
வைஷ்ணவியோ திரும்பி கேள்வியாகப் பார்க்க, "என்ன ரொம்பதான் உரிமையோட கூப்பிடுற, ஒழுங்கு மரியாதையா சார்னு கூப்பிடு, புரியுதா?" என்று மிரட்டலாக சொல்ல, குழப்பம் மறைந்து குறும்பாகப் புன்னகைத்தவள், "சரிங்க வீட்டுக்காரரே!" என்றுவிட்டு வீட்டிற்குள் ஓடி விட, இரு புறமும் சலிப்பாக தலையாட்டிக்கொண்டான் அவன்.
அதேநேரம், இங்கு சிறைச்சாலையில் உறங்கிக்கொண்டிருந்த ஹர்ஷத்தின் விழிகளுக்கு முன்னே யுகனின் முகமே விம்பமாக ஓடிக்கொண்டிருந்தது. அவனுடைய நினைவுகளும் அவனுடனான தருணங்களும் மீண்டும் மீண்டும் கனவுகளாக தோன்றி மறைய, திடீரென ஒரு விம்பத்தை பார்த்தவனின் மொத்த தூக்கமும் கலைந்து அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தான் அவன்.
"நந்தினி..." அவனுடைய இதழ்கள் முணுமுணுக்க, விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிந்திருந்தன.
***********
என்னோட kindle account ல இருந்த எல்லா கதைகளும் இனி Kobo Writing life ல Publish ஆகும்...
இப்போதைக்கு கிண்டல்ல ஐந்து பாகமா போட்ட தஷுரி நாவல் முழுக்கதையா Kobo ல இருக்கு
"தியா, உன்னை மேனேஜர் கேபினுக்கு வர சொன்னாரு" என்று தன்னோடு பணி புரிபவள் சொன்னதைக் கேட்ட ஆராதியா அதே யோசனையோடு மேனேஜரின் கேபினுக்குள் நுழைய, உள்ளே வந்தவளை அதிருப்தியோடு ஒரு பார்வைப் பார்த்தார் மேனேஜர் சுந்தரம்.
"வாங்க மிஸ் ஆராதியா, அந்த மர்டர் கேஸ்ஸோட இன்வெஸ்டிகேஷன் எப்படி போகுது, இஸ் தெயார் எனி அப்டேட்?" என்று அவர் கேட்க, "அது... ஹர்ஷத்தான் கொலை பண்ணியிருக்குறதா சொல்லி அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க, அதுக்கப்பறம் எந்த அப்டேடும் இல்லை சார்" என்று சில விடயங்களை மறைத்துச் சொன்னாள் அவள்.
அவளை விழிகளை கூர்மையாக்கிப் பார்த்தவர் தன் அலைப்பேசியிலிருந்த சில புகைப்படங்களை அவளிடம் காட்டி, "அப்போ இது என்னா தியா?" என்று அழுத்தமாகக் கேட்க, அதைப் பார்த்தவளுக்கோ பக்கென்று இருந்தது.
அதில் ப்ரணவோடு அவனுடைய காரில் அமர்ந்து அவள் பேசிக்கொண்டிருப்பதும் சிறைச்சாலை வாசலில் இருவரும் நின்றுக்கொண்டிருப்பதுமான புகைப்படங்கள் இருக்க, சுந்தரத்திற்கு தியாவின் செயலில் இருக்கும் கோபம் அவருடைய விழிகளிலேயே அப்பட்டமாகத் தெரிந்தது.
"ஹர்ஷத்த அர்ரெஸ்ட் பண்ணதோட இந்த கேஸ் முடிஞ்சது. உன்னையும் நான் அப்போவே இதை விட்டு வேற நியூஸ்ல ஃபாகஸ் பண்ண சொன்னேன். ஆனா நீ யாருக்கும் தெரியாம ஏதேதோ பண்ணிக்கிட்டு இருக்க, அதுவும் இந்த கம்பனி ஐடிய காமிச்சு. தேங்க் காட்! வருண் சொல்ல போய் எனக்கு தெரிஞ்சிருக்கு இல்லன்னா... இதுதான் உன்னோட லாஸ்ட் வார்னிங், இதுக்கப்பறம் இந்த மாதிரி ஏதாச்சும் கேள்விப்பட்டிச்சுன்னா அவ்வளவுதான், கெட் அவுட்!" என்று அவர் கிட்டத்தட்ட திட்டி அனுப்பி விட, வெளியில் முகம் இறுக வந்த ஆராதியாவின் பார்வையோ வருணைத்தான் தேடியது.
அவனோ தன் நண்பர்களோடு பேசியவாறு அவளை நக்கலாக ஒரு பார்வைப் பார்க்க, உச்சகட்டத்திற்கு எகிறிய கோபத்தை முயன்று அடக்கிக்கொண்டு தன் மேசையில் சென்றமர்ந்தவளுக்கு சுந்தரம் திட்டியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
'நான் என்ன பாவம் பண்ணேன், ஏன் என்னை சுத்தி இத்தனை பிரச்சனை? என்னால முடியல' என்று தலையில் கை வைத்தவாறு மேசையில் அமர்ந்திருந்தவளுக்கு அதற்குமேல் அங்கு இருக்கவும் மனம் வரவில்லை.
மூச்சுவிடக் கூட சிரமமாக இருக்க, உடனே அங்கிருந்து வெளியேறி வீட்டுக்குச் சென்றவள், உள்ளே நுழையப் போக அடுத்தகணம் அவளுடைய விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
வாசலில் ஹர்ஷத்தின் தந்தை மானவ்வுடைய கார் நின்றிருக்க, அங்கு உள்ளே ஹால் சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் மானவ்.
லலிதாவோ கைகளைப் பிசைந்தவாறு தயக்கத்தோடு நின்றிருக்க, "உள்ள வா ஆராதியா, நான் உன்கிட்ட பேசணும்" என்று மானவ் சொல்ல, இவளுக்கே திக்திக் நிமிடங்களாகத்தான் இருந்தது.
பயத்தில் நாவால் இதழை ஈரமாக்கிக்கொண்டு உள்ளே நுழைந்த ஆராதியா தன் அம்மாவை ஒரு தரம் பார்த்துவிட்டு அவருக்கு எதிரே உள்ள சோஃபாவில் அமர்ந்து, "என்ன அங்கிள், திடீர்னு வந்திருக்கீங்க, என்ன விஷயம்?" என்று கேட்க, "ஹர்ஷத் எப்படி இருக்கான்?" என்றவரின் குரல் தழுதழுத்தது.
அவளோ அதிர்ந்துப் போய் அவரைப் பார்கக, "நீ யோசிக்கலாம், இவர் போய் பையன பார்க்காம என்கிட்ட விசாரிக்குறாரேன்னு. அவன போய் பார்க்குறதுக்கான தெம்பு என்கிட்ட இல்லை. எனக்கு ஆப்ரேஷன் நடந்து டூ வீக்ஸ்தான் ஆகுது. ஒருவேள அவன பார்த்தேன்னா மனசுல இருக்குற கொஞ்சநஞ்ச தைரியமும் மொத்தமா போயிரும்" என்று ஒரு தந்தைக்கான மன வலியோடு பேசிக்கொண்டே சென்றார் மானவ்.
ஆராதியாவுக்கு அவரின் மனநிலை புரியாமல் இல்லை.
"ஏதோ இருக்கான் அங்கிள், அவன எப்படியாச்சும் வெளியில கொண்டு வரணும்னுதான் நானும் ரொம்ப ட்ரை பண்றேன். ஆனா அவனுக்கு சார்பா ஒரு எவிடென்ஸ் கூட கிடைக்கல. என்ன பண்றதுன்னே தெரியல" என்று இயலாமையோடு சொல்ல, லலிதாவோ தன் மகளை முறைத்துப் பார்த்தார்.
அது மானவ்வின் விழிகளுக்கு சரியாக சிக்க, "உங்க கோபம் எனக்கு நல்லா புரியுது, கொலை பண்ணி ஜெயிலுக்கு போனான்னு சொல்ற ஒருத்தன பொண்ணு காதலிக்கிறத எந்த அம்மாவால ஏத்துக்க முடியும்? ஆரம்பத்துல நானும் தியாவ ரொம்ப தப்பாதான் நினைச்சிருந்தேன், என் மனைவி கூட. ஆனா இந்த மாதிரி ஒரு நிலைமையிலயும் அவனுக்காக நீ பண்றத பார்க்கும் போது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ஆனா ஒன்னு, என்னோட வளர்ப்பு என்னைக்கும் தப்பாகாது, ஹர்ஷா இந்த கொலைய பண்ணியிருக்க மாட்டான்" என்றார் அழுத்தமாக.
ஆராதியாவும் ஆமென்று தலையசைக்க, "அதான் இந்த கேஸ்ஸ நான் ரீஓபன் பண்ணலாம்னு இருக்கேன், ஹர்ஷாவோட லாயரா அவனுக்காக நான் வாதாட போறேன்" என்று மானவ் சொல்லி முடிக்க, பிதுங்கி விடுமளவிற்கு விழிகளை விரித்தவளுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது.
"நிஜமாவா அங்கிள், நீங்க ஹர்ஷாவுக்கு சார்பா இருக்க போறீங்களா?" என்று அவள் அதிர்ச்சி குறையாத குரலில் கேட்க, "தியா, இது ஒன்னும் ஈஸி கிடையாது. ஹர்ஷாவுக்கு சார்பா ஒரு ஆதாரமாச்சும் எனக்கு கிடைக்கணும். அப்போதான் அவன் சார்பா என்னால பேச முடியும், அவன் நிரபராதின்னு நிரூபிச்சு அவன வெளியில கொண்டு வர முடியும்" என்றார் மானவ் யோசனையோடு.
ஆராதியாவுக்கு ஏனோ அவரின் வார்த்தைகளில் புது தெம்பு பிறந்தது போலிருக்க, அன்றைய இரவு நீண்ட நாட்கள் கழித்து நிம்மதியாக உறங்கினாள் அவள்.
ஆனால், அவள் ஆழ்ந்த உறக்கத்தை தழுவ, திடீரென அவளுடைய அலைப்பேசி ஒலித்தது, அரை தூக்கக் கலக்கத்தோடு திரையைக் கூட பார்க்காமல் அழைப்பை ஏற்றாள் அவள்.
"ஹெலோ..." என்று இவள் சொல்லி முடிக்கும் முன்னே, "ஹெலோ ஆரு, நான் ஹர்ஷா பேசுறேன். நா.. நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்" என்று மறுமுனையில் ஹர்ஷத் படபடவென பேசிக்கொண்டே செல்ல, இதை சற்றும் எதிர்பார்க்காதவளாய் அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தாள் ஆராதியா.
"ஹர்.. ஹர்ஷா! நீ.. நீ எப்படி, இது யாரோட நம்பர்?" என்று இவளும் அவனுக்கு குறையாத பதற்றத்தோடு கேட்க, "இங்க உள்ள திருட்டுத்தனமா ஃபோன் யூஸ் பண்றாங்க, அவங்ககிட்ட இருந்து எடுத்துதான் பேசிக்கிட்டு இருக்கேன்" என்று சொன்னவன், "ஆரு, யுகனோட நந்தினிய நீ பார்த்திருக்கியா?" என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தான்.
ஆராதியாவுக்கு அவன் கேட்பதற்கான காரணம் சுத்தமாகத் தெரியவில்லை.
"ஆமா பார்த்திருக்கேன், ஆனா.. ஆனா அதை பத்தி ஏன் கேக்குற?" என்று ஆராதியா குழப்பத்தோடுக் கேட்க, "ஆரு, அந்த டோலர் அது.. அது அந்த நந்தினியோடது. ஒரு தடவை அவளோட கழுத்துல நான் அதை பார்த்திருக்கேன். ஏன் எப்படின்னு எல்லாம் என்கிட்ட கேக்காத, எனக்கு எதுவும் தெரியாது. பட், அவளோட வீட்டுக்கு போனா ஏதாச்சும் ஆதாரம் கிடைக்கும்னு தோனுது" என்று யுகனை ஒரு தடவை அழைத்துச் சென்ற இடத்தைச் சொன்னான் ஹர்ஷத்.
"சரி, நாளைக்கே நான் ப்ரணவ்வ கூட்டிட்டு போறேன், அப்போ நான் வைக்கிறேன்" என்று ஆராதியா அழைப்பைத் துண்டிக்கப் போக, "வெயிட் இன்னொரு மேட்டர்" என்றவனின் குரல் கேள்வியாக புருவத்தை நெறித்தாள் அவள்.
"அது... ஐ லவ் யூ ஆரு. சேஃபா இரு" என்றுவிட்டு அவன் அழைப்பைத் துண்டித்திருக்க, ஏனென்று தெரியாமல் அழுகை தொண்டையை அடைக்க, விழிகளை அழுந்த மூடித் திறந்து தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தினாள் பெண்ணவள்.
'என்ன இவ, எப்போ பாரு ப்ரணவ் கூடவே பேசிக்கிட்டு இருக்கா. ஏதோ ஒன்னு இருக்கு' என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவள் அவர்களுக்கு பின்னே சென்று நின்று, "ஹ்ர்ம் ஹ்ர்ம்..." என்று குரலை செரும, வேகமாகத் திரும்பிப் பார்த்த வைஷ்ணவிக்கு பக்கென்று இருந்தது.
அவளோ எச்சிலை விழுங்கியவாறு ப்ரணவைப் பார்க்க, அவனோ கூலாக ஆராதியாவைப் பார்த்தவன், "வா தியா, என்ன என்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்ன" என்று கேட்க, அவளுடைய பார்வையோ தன் சகோதரியின் மீதுதான் பதிந்தது.
"அப்.. அப்போ நான் வரேன் சார், உன்னை அப்பறமா வீட்டுல பார்க்குறேன் அக்கா" என்றுவிட்டு விட்டால் போதுமென்று ஏதோ தப்பித்து செல்வது போல் வைஷ்ணவி அங்கிருந்து ஓடியேவிட, "இவ இங்க என்ன பண்றா? இவளோட முகமே சரியில்ல" என்று தன் சந்தேகத்தை கேட்டுவிட்டாள் ஆராதியா.
அவனோ சில கணங்கள் யோசித்தவன், "அது... அது ஒன்னுமில்ல தியா, உன் தங்கச்சி என்னை காதலிக்கிறாளாம். அதான்..." என்று வைஷ்ணவி சொன்ன ரகசியத்தை மறைக்க வைஷ்ணவியின் காதலையே அவன் சாதாரணமாக உடைத்துவிட, இவளோ விக்கித்துப் போய் நின்றுவிட்டாள்.
"எதே!" என்று அதிர்ச்சிக் குரலில் கேட்டவள், "அய்யோ! சும்மாவே இருக்குற பிரச்சனையில மண்டை காயுது இதுல இது வேறயா?" என்று கேட்டு தலையிலேயே கை வைத்துவிட, "சரி நீ வந்த விஷயத்தை சொல்லு" என்று சிரிப்போடுக் கேட்டான் ப்ரணவ்.
ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்ட ஆராதியா நேற்று ஹர்ஷா சொன்னதை சொல்லி முடிக்க, விழி விரித்துப் பார்த்தவனின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டன.
"எனக்கென்னவோ ஹர்ஷா சொன்ன மாதிரி செய்யலாம்னு தோனுது, நீ என்ன சொல்லுற?" என்று அவள் அவனின் பதிலை எதிர்பார்த்து ஆர்வத்தோடுக் கேட்க, "இப்போதான் சரியான பாய்ன்ட்ல இருக்கோம், சீக்கிரமா போகலாம்" என்ற தீர்க்கமான பார்வையோடு சொன்னவன் அடுத்தகணமே தன்னோடு இரண்டு அதிகாரிகளை அழைத்துக்கொண்டு ஆராதியாவோடு ஹர்ஷா சொன்ன இடத்திற்குச் சென்றான்.
வண்டியை தூரமாக நிறுத்திவிட்டு அந்த வீட்டை நோக்கி நடந்து வந்தவர்கள் மறைந்திருந்து நோட்டமிட ஆரம்பிக்க, 'இந்த மாதிரி ஒரு இடத்துல போய் இருக்காளே!' என அன்று ஹர்ஷாவுக்கு தோன்றிய அதே கேள்வி இவளின் மனதிலும் தோன்றியது.
நால்வரும் அமைதியாக கவனித்துக்கொண்டிருக்க, சரியாக தன் தோள் பையை மாட்டிக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினாள் நந்தினி.
அவள் பார்க்காதவாறு மறைந்து நின்றுக்கொண்டவர்கள் அவள் அந்த இடத்தைவிட்டு மறைந்த அடுத்தகணம் அந்த வீட்டை நெருங்கியிருக்க, மூன்று அதிகாரிகளும் தத்தமது பிஸ்டலை பாதுகாப்புக்காக கைகளில் ஏந்திக்கொண்டனர்.
"இந்த வீட்டை முழுசா அலசுங்க, ஒரு இடம் விடக் கூடாது. சின்ன எவிடென்ஸ் கிடைச்சாலும் போதும்" என்ற ப்ரணவ் வீட்டுக்குள் சென்று லைட்டை ஒளிரவிட, அவர்களே எதிர்பார்க்காத வண்ணம் அந்த வீடு முழுவதும் மொத்த பொருட்களும் சிதறிக் கிடந்தன.
இதில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு கெட்ட வாடையும் வர, தன் முந்தானையால் மூக்கைப் பொத்திக்கொண்டு சுற்றி முற்றி ஆராய ஆரம்பித்தாள் ஆராதியா.
நால்வரும் தங்களின் கை ரேகைகள் படாமல் இருக்க முன்னெச்சரிக்கையோடு கையுறை அணிந்திருக்க, "தியா, இது.. இது யுகனோட திங்க்ஸ்தானே, அவனோட ஃபோன் இங்க இருக்குன்னா கண்டிப்பா அவனோட சாவுக்கும் இவளுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கணும்" என்றான் ப்ரணவ் அதை பொலித்தீன் உறைகளில் இட்டவாறு.
"ஆமா ப்ரணவ், மே பீ இறந்தவங்களுக்கு சம்பந்தபட்ட ஏதாச்சும் கூட இங்க கிடைக்கலாம்" என்று வேகமாக ஆராதியா அங்கிருந்த அறைகளுக்குள் சென்றுப் பார்க்க, அங்கு அவளுடைய பார்வையில் சிக்கியது ஒரு புகைப்படம்.
நந்தினியோடு வெகுளித்தனமான முகத்தோடு இருக்கும் அந்த பெண் யாரென்று இவளுக்கு சுத்தமாகத் தெரியவில்லை.
'யார் இந்த பொண்ணு, நந்தினிக்கு ரொம்ப நெருக்கமோ?' என்று யோசித்தவாறு அவள் ஒரு திசைக்குத் திரும்ப, அவளுடைய விழிகளுக்கு தென்பட்டது பூட்டியிருந்த அந்த சிறிய அறை.
"இது என்ன ரூம், பூட்டியிருக்கு. ப்ரணவ், இங்க வந்து பாரு" என்று ஆராதியா ப்ரணவை அழைக்க, வேகமாக வந்து பார்த்தவனின் விழிகளும் அங்கிருந்த சிறிய அறையைப் பார்த்து கேள்வியாக சுருங்கின.
உடனே அவன் அந்த பூட்டியிருந்த கதவை இடித்துத் திறந்து உள்ளே செல்ல, அங்கு அவன் பார்த்த காட்சியில் தலையே சுற்றிவிட்டது அவனுக்கு.
"தியா..." என்றவனின் குரல் அதிர்ச்சியோடு ஒலிக்க, வேகமாக உள்ளே வந்தவளும் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
அங்கு ஒரு சுவர் முழுக்க கரண், அனிதா, ப்ரீத்தி, வினய் மற்றும் க்ரிஷுடைய புகைப்படங்கள் ஒட்டப்பட்டு அதில் கிறுக்கப்பட்டிருக்க, இருவரும் எதிர்பார்க்காத திருப்பமாக வைஷ்ணவியின் புகைப்படமும் ஒட்டப்பட்டு வட்டமிடப்பட்டிருந்தது.
கூடவே இறந்தவர்களுக்கு சம்பந்தப்பட்ட பொருட்களோடு சேர்த்து அழுகிய உடல் உறுப்புகளும் தரையெங்கும் இரத்த ஆறாகவும் கிடக்க, ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தனர் இருவரும்.
"என்ன இது, அப்.. அப்போ இந்த நந்தினிதான் நிஜ கொலையாளி ரைட்?" என்று ப்ரணவ் கேட்டுக்கொண்டே உடனே ஸ்டேஷனுக்கும் மீடியாகாரர்களுக்கும் அழைத்து விடயத்தை சொல்ல, இங்கு ஆராதியாவோ சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த தன் தங்கையின் புகைப்படத்தையே அதிர்ந்துப் போய் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"இவளுக்கும் வைஷுக்கும் என்ன சம்பந்தம்?" என்ற அவளின் கேள்வி திகைப்போடு ஒலிக்க, சரியாக தான் மறந்து வைத்துச் சென்ற அலைப்பேசியை எடுக்கவென திரும்பி வந்த நந்தினி தன் வீட்டிற்குள் இருக்கும் ஆட்களை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
"ஓ ஷீட்!" என்று அடுத்தகணமே அவள் அங்கிருந்து தப்பித்து ஓடப் பார்க்க, "சார்... அந்த பொண்ணு ஓடுது, ப்ரணவ் சார்..." என்ற மற்ற அதிகாரிகளின் கத்தலில் வேகமாக வந்த ப்ரணவ் அந்த இரு அதிகாரிகளோடு சேர்ந்து அவளை துரத்திப் போக, நந்தினியோ மூச்சு வாங்க முடிந்த வரை வேகமாக ஓடினாள்.
"இதை விட்டா வேற வழி இல்லை" என்ற ப்ரணவ் சட்டென நின்று அவளை நோக்கி பிஸ்டலை குறி வைத்தவன், தான் எடுத்த பயிற்சி வீண் போகாதவாறு சரியாக அவளுடைய கால் முட்டியிலேயே பார்த்து சுட்டிருக்க, "ஆஆ..." என்ற கத்தலோடு அப்படியே தரையில் விழுந்தாள் நந்தினி.
உடனே மற்ற இரண்டு அதிகாரிகளும் அவளை நோக்கி ஓடி அவளை சுற்றி வளைத்துக்கொள்ள, வலியில் கதறித் துடித்த நந்தினியின் விழிகளில் ஒரு பக்கம் கோபம் இன்னொரு புறம் பயம் என அப்பட்டமாகத் தெரிந்தது.
அடுத்த சில நிமிடங்களிலேயே மீடியாகாரர்களோடு சேர்த்து அங்கு சுற்றியிருந்த மக்களும் அந்த இடத்தை சூழ்ந்திருக்க, நந்தினியின் வீட்டை முழுதாக ஆராய்ந்தனர் ஃபாரன்சீக் டிபார்ட்மென்ட்.
இவர்களே எதிர்பார்க்காத ஏகப்பட்ட கத்தி, வாள் என அறுக்கக் கூடிய பொருட்களும் கைகளுக்கு சிக்க, எல்லாருக்குமே அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிதான்.
"சாரி சார், குற்றவாளிய பிடிக்க எங்களுக்கு வேற வழி தெரியல. அதான் ஷூட் பண்ண வேண்டியதா போச்சு. என்ட், இந்த குற்றவாளிய பிடிக்க எங்களுக்கு முழுசா ஹெல்ப் பண்ணது ஸ்கை சேனல் நிறுவனத்துல வேலை பார்க்குற மிஸ் ஆராதியாதான்" என்று ப்ரணவ் சொல்ல, உயர் அதிகாரியைப் பார்த்து மெல்லிய புன்னகையை சிந்தியவள் நந்தினியின் புறம் திரும்பினாள்.
அவளோ பற்களைக் கடித்த வண்ணம் ஆராதியாவைதான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளும் அந்த பெண் உருவத்தில் இருக்கும் ராட்சசியை வெறித்துப் பார்க்க, திடீரென நந்தினியின் இதழ்களோ கேலியாக வளைந்தன.
அந்த கணம் ஆராதியாவுக்கு ஏதோ ஒன்று தவறாக இருப்பதாக மனம் அடித்துக் கூற, ஒருவித கலக்கத்தோடு நின்றிருந்தவளின் முகம் எதேர்ச்சையாகத் திரும்பிய ப்ரணவின் விழிகளுக்கும் சரியாக சிக்கியது.
குற்றவாளியை பிடித்து விட்ட சந்தோஷத்திலிருந்த அவனின் இதழ்கள் சுருங்கி முகம் குழப்பத்தை தத்தெடுக்க, இருவரையும் விஷமப் புன்னகையோடு பார்த்திருந்தாள் நந்தினி.
அடுத்த இரண்டு நாட்களில், ஹர்ஷாவின் விடுதலை குறித்து சென்னை நகரமே பரபரப்பாக இருக்க, உயர் நீதி மன்றத்தில் நெஞ்சை நிமிர்த்திய வண்ணம் நின்றிருந்தார் மானவ்.
நந்தினிக்கு எதிரான அத்தனை ஆதாரங்களையும் சமர்ப்பித்தது மட்டுமல்லாமல் கொலை நடந்த அன்று ஹர்ஷத் ஹாஸ்பிடலில் இருந்த சிசிடீவி ஃபுட்டேஜ்களையும், ஹாஸ்பிடலில் மானவ் அனுமதிக்கப்பட்ட நேரம் மற்றும் ஹர்ஷத்துக்கு வந்த அழைப்பு வரை அவனுக்கு சார்பான அனைத்து ஆதாரங்களையும் காண்பித்து மகனை நிரபராதி என நிரூபித்திருத்திருந்தார் அவர்.
நந்தினிக்கோ ஆயுள் தண்டனை விதிக்கப்பட, அதிகாரிகளோ கையில் விலங்கோடு அவளை இழுத்துச் செல்வதை வெறித்துப் பார்த்து நின்றான் ஹர்ஷத். அவளுடைய பார்வையும் இவர்களின் மீதே அழுத்தமாக பதிந்திருந்தது.
அவள் விழிகளிலிருந்து மறையும் வரை அவளையே பார்த்திருந்தவன் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு தன்னவளை கலங்கிய விழிகளோடுப் பார்த்தான்.
ஆராதியாவோ அவனையே பார்த்திருந்தவள், "அப்போ நான் வரேன் அங்கிள், தேங்க் யூ சோ மச். என்னைக்கும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது. அதனாலதான் நான் இவ்வளவு தூரம் ரிஸ்க் எடுத்தேன். இப்போதான் நிம்மதியா இருக்கு" என்று புன்னகையோடு சொல்ல, "அதுக்காக மட்டும்தான் நீ இவ்வளவும் பண்ணியா?" என்று ஓரக்கண்ணால் தன் மகனைப் பார்த்தவாறுக் கேட்டார் மானவ்.
ஏனோ ஆரம்பத்தில் அவருக்கு அவளை பிடிக்காமல் இருந்தாலும், இப்போது ஆராதியாவை விட சிறந்த காதல் மனைவி ஹர்ஷாவுக்கு தேடினாலும் கிடைக்காது எனத் தோன்றியது மானவ்விற்கு. ஆனால் ஆராதியாதான் தன் மனதைக் கல்லாக்கிக்கொண்டு தன்னவனின் பார்வையை தவிர்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.
இதை ஹர்ஷத்தும் உணராமல் இல்லை. கொஞ்சம் கூட இமை சிமிட்டாது தன்னவளையே ஹர்ஷா பார்த்துக்கொண்டிருக்க, அவனை திரும்பிக் கூட பார்க்காது மானவ்விடம் சொல்லிவிட்டு அங்கிருந்து அவள் நகர்ந்துச் செல்ல, விழிகளை அழுந்த மூடித் திறந்தான் அவன்.
அதன் பிறகு மானவ்வும் ஹர்ஷத்தை வீட்டுக்கு அழைத்துச் செல்ல, மகனை கட்டித் தழுவி ஒரு மூச்சு அழுதேவிட்டார் மஞ்சுளா. சற்று மெலிந்துப் போய் வெட்டாத தாடி மீசையோடு சோர்ந்துப் போய் நின்றிருந்த தன் மகனின் தோற்றம் ஒரு தாயாக அவரை கொல்லாமல் கொல்ல, அவனை அணைத்து அழுதுக்கொண்டிருந்தவரை புன்னகையோடு அணைத்துக்கொண்டான் ஹர்ஷத்.
"அய்யோ அம்மா, போதும் அழுறத நிறுத்துங்க. அதான் வந்துட்டேன்ல" என்ற ஹர்ஷா சுற்றி முற்றி தன் சகோதரனைத் தேடிக்கொண்டே, "அபி எங்கம்மா?" என்று கேட்க, "இரண்டு நாளா அவன் வீட்டுலயே இல்லை ஹர்ஷா, என்ன பண்றான் ஏது பண்றான்னு எதுவுமே தெரியல. இன்னும் நடந்தத எதுவும் அவன் மறக்கலன்னு நினைக்கிறேன். அவன எப்படி சரி பண்ண போறேன்னு தெரியல" என்றார் மஞ்சுளா கவலையோடு.
அவரின் வார்த்தைகளில் அன்று தான் பார்த்த அபியின் கதறல்தான் அவனின் மனக்கண் முன் தோன்றி மறைந்தது.
தலையை உலுக்கி அந்த நினைவுகளிலிருந்து வெளியே வந்து தன் வேலைகளில் அவன் கவனம் செலுத்த, இப்படியே மூன்று நாட்கள் கழிந்திருந்தது.
இந்த மூன்று நாட்கள் அவன் ஆராதியாவை அழைக்கவும் இல்லை, பார்க்கச் செல்லவும் இல்லை. இத்தனை நாட்களாக இருந்த குறும்புச் சிரிப்பும் பார்வையும் ஹர்ஷத்திடமிருந்து மறைந்து புன்னகையை தொலைத்தவன் எப்போதும் ஏதோ ஒரு விடயத்தை யோசித்த வண்ணமாக இருக்க, இதை வீட்டிலிருந்தவர்களும் கவனிக்கதான் செய்தனர்.
இதில் ஆராதியாவின் நிலைதான் பரிதாபம். லலிதா வேகவேகமாக தங்களின் குடும்பத்திற்கு ஏற்ற ஒரு வரனைப் பார்த்து மாப்பிள்ளை வீட்டாற்களையும் வர சொல்லியிருக்க, இதை எதிர்பார்க்காதவளாய் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள் அவள்.
"யாரைக் கேட்டு இவங்கள வர சொன்னீங்க, என்னால முடியாதும்மா" என்று அவள் கத்திக்கொண்டிருக்க, "முடியாதுன்னா என்ன அர்த்தம், ஒழுங்கு மரியாதையா இந்த சேலைய கட்டிக்கிட்டு வந்து அவங்க முன்னாடி நில்லு" என்று பற்களைக் கடித்தார் அவர்.
ஆனால், அவளோ அழுத்தமாக நின்றுக்கொண்டிருக்க, மகளை கூர்மையாகப் பார்த்தவர், "நீ இன்னும் அவனையேதான் நினைச்சுக்கிட்டு இருக்கியா என்ன? சொல்லு தியா" என்று கேட்க, தரையை வெறித்த வண்ணம் அமைதியாக நின்றிருந்தாள் அவள்.
"இப்போ என்ன, இதை கட்டிக்கிட்டு அவங்க முன்னாடி வரணும், அவ்வளவுதானே! வரேன்" என வெடுக்கென்று சொன்னவள் தாயை அறையிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு கதவிலேயே சாய்ந்துக்கொண்டாள்.
மனம் முழுக்க ஹர்ஷத் நிறைந்திருக்க, கன்னத்தின் வழியே ஓடும் கண்ணீரைத் துடைத்துக்கொண்ட ஆராதியா, தன் அம்மா சொன்னது போல் தயாராகிக்கொண்டு மாப்பிள்ளை வீட்டாரின் முன்னே வந்து நின்றாள்.
"பேரு ஆராதியா, ப்ரோக்கர் அம்மா உங்ககிட்ட சொல்லியிருப்பாங்க. இவளுக்கு பத்து வயசு இருக்கும் போதே இவங்க அப்பா இறந்துட்டாரு. இருந்தாலும், என் இரண்டு பொண்ணுங்களையும் நல்லா படிக்க வச்சு நல்லா வளர்த்திருக்கேன்" என்று லலிதா பேசி முடிக்க, வந்திருந்த மாப்பிள்ளை வீட்டாற்களோ ஏதோ கடையில் ஒரு பொருளைப் பார்த்து பேரம் பேசுவது போல் பேச ஆரம்பித்தனர்.
ஆராதியாவோ மாப்பிள்ளையின் முகத்தை நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை. உயிரில்லாத ஜடம் போல் அவள் தரையை வெறித்துக்கொண்டிருக்க, திடீரென ஒரு குரல்.
"பொண்ணு முகமே சரியில்லையே, ஒருவேளை மாப்பிள்ளைய பிடிக்கலையோ?" என்ற கணீர் குரலில் மாப்பிள்ளை வீட்டாரோடு சேர்த்து மொத்தப் பேருமே வாசல் புறம் திரும்ப, அந்த பழக்கப்பட்ட குரலில் வேகமாக திரும்பிப் பார்த்தாள் ஆராதியா.
"ஹர்ஷா..." என இவளின் இதழ்கள் வாசலில் நின்றிருந்த தன்னவனைப் பார்த்ததுமே முணுமுணுக்க, அவனைப் பார்த்த மாப்பிள்ளை வீட்டாற்களோ தங்களுக்குள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.
அதைக் கவனித்த லலிதாவோ ஒருவித சங்கடத்தில் கைகளைப் பிசைந்தவாறு நிற்க, சுற்றியிருப்பவர்கள் யாரையும் யோசிக்காது வேகமாக ஹர்ஷாவை நெருங்கிய ஆராதியா அவனின் கரத்தைப் பற்றி தரதரவென இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டாள்.
"இது அந்த பையன்ல, இவன் எதுக்கு இங்க வந்திருக்கான், உங்க பொண்ணு எதுக்கு அவன கூட்டிட்டு தனியா போயிருக்கா? என்னங்க நடக்குது இங்க?" என்று ஆராதியாவை பார்க்க வந்த மாப்பிள்ளையோ கேள்விக்கு மேல் கேள்வி கேட்க, உள்ளே ஹர்ஷத்தை முறைத்துப் பார்த்தவாறு நின்றிருந்தாள் அவனவள்.
"இப்போ இங்க எதுக்கு வந்திருக்க?" என்று அவள் காட்டமாகக் கேட்க, "என் லவ்வர எவனோ பொண்ணு பார்க்க வரான்னாமே, அதான் வர்றவன் யாருன்னு நான் பார்க்க வந்தேன்" என்றான் ஹர்ஷா குறும்பாக.
அவனை பதிலுக்கு முறைத்துப் பார்த்தவள், "ஓஹோ... நான் உங்க லவ்வருன்னு நியாபகம் இருக்கா என்ன! ஒருவேள அப்பப்போ மறக்குறதாலதான் வேற பொண்ணுங்கள தேடி போறீங்களா மிஸ்டர்" என்று கேட்ட கேள்வியில், ஆடவனுக்கோ முகம் கறுத்துவிட்டது.
"ஆரு, நான் தப்பு பண்ணியிருக்கேன்தான். அதுக்கெல்லாம் சேர்த்துதான் தண்டனைய அனுபவிச்சிட்டேன். பட், நான் ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். அன்னைக்கு நான் தப்பு பண்ணலடீ, போதையில இருந்ததால எனக்கு எதுவுமே தெரியல. கால் வந்ததும்தான் எனக்கு போதையே தெளிஞ்சது, நிஜமாவே எனக்கு எதுவுமே தெரியாது" என்று அவன் விழிகளை சுருக்கி கெஞ்சாத குறையாக அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்ய, மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டி அவனை கோபத்தோடுப் பார்த்தாள் ஆராதியா.
"சரி நீ தப்பு பண்ணல. ஆனாலும் எனக்கு இனி உன் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை. என்னை விட்டுரு!" என்று அவனின் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்து தீர்க்கமான பார்வையோடு அவள் சொல்ல, 'ஊஃப்ப்..' என பெருமூச்சு விட்டுக்கொண்ட ஹர்ஷா ஒவ்வொரு அடியாக வைத்து அவளை நெருங்கினான்.
"இப்.. இப்போ எதுக்கு பக்கத்துல வர்ற?" என்ற அவளுடைய வார்த்தைகள் திக்கித் திணற, குறும்புப் புன்னகையோடு அவன் அவளை நெருங்க, ஒருகட்டத்தில் பின்னே நகர இடமில்லாமல் சுவற்றோடு மோதி நின்றாள் அவள்.
அவனோ இரு கரத்தால் அவளை அணைக்கட்டி, மேலிருந்து கீழ் ஒரு மார்கமாகப் பார்க்க, அவனின் பார்வையில் தெரியும் வித்தியாசத்தில் இவளின் முகமோ குப்பென்று சிவந்தது.
அதை ரசித்துப் பார்த்தவனுக்கு தானாக உணர்ச்சிகள் மேலெழ, சேலையினூடே தெரிந்த அவளின் வெற்றிடையில் சிறிய வருடலோடு பதிந்தது அவனுடைய வலது கரம். அவனின் தொடுகையில் பெண்ணவளுக்கோ உடல் சிலிர்க்க, அவனின் முகத்தைப் பார்க்காது பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.
அவளை நோக்கி குனிந்தவன் அவளின் காதுமடலில் தன் மீசை முடி உரச, "உன்னால என்னை விட்டு இருக்கவே முடியாது ஆரு, நான் உனக்குள்ள இருக்கேன்" என்று சொல்லி அழுத்தமாக அவளிதழில் அழுந்த முத்தத்தைப் பதிக்க, தியாவின் விழிகளோ தெறித்து விடுமளவிற்கு விரிந்தன.
சரியாக, "தியா... தியா கதவ திறடீ! உள்ள என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்று லலிதா கதவை வேகமாகத் தட்டிக்கொண்டே போக, "இப்போ போய் மாப்பிள்ளை வீட்டாளுங்க முன்னாடி நில்லு, நான் எதுவுமே பண்ணலடா சாமி!" என்று அத்தனையும் செய்துவிட்டு எதுவுமே செய்யாதது போல் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி ஒற்றைக் கண்ணை சிமிட்டினான்.
இங்கு ஆராதியாவுக்கு தன்னை சுதாகரிக்கவே சில நிமிடங்கள் தேவைப்பட்டன.
ஹர்ஷாவோ அவன் பாட்டிற்கு அறைக்கதவைத் திறந்து லலிதாவைக் கடந்துச் செல்ல, அவரோ வேகமாக வந்து பேயறைந்தது போல் நின்றிருந்த தன் மகளைதான் உலுக்கினார்.
"ஏய் தியா, என்னடீ பண்ணிக்கிட்டு இருக்க, அதுவும் மாப்பிள்ளை வீட்டாளுங்களுக்கு முன்னாடி? மொதல்ல வா, நான் பேசி சமாளிச்சு வச்சிருக்கேன். நீ வந்து மாப்பிள்ளை தம்பி கூட பேசு" என்று லலிதா மகளை இழுத்துக்கொண்டு போக, அவர்களுக்கு முன்னே சென்று நின்றவளின் பார்வை அங்கு அலைப்பேசியை நோண்டியவாறு இருக்கையில் அமர்ந்திருந்த தன்னவனின் மேல்தான் அழுத்தமாகப் பதிந்தது.
"ஏய், அவன எதுக்குடீ பார்த்துக்கிட்டு இருக்க?" என்று லலிதா முட்டியால் மகளின் கையில் இடிக்க, "எனக்கென்னவோ இந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு ஒத்து வரும்னு தோனல, இதோ கண்ணு முன்னாடியே தெரியுதே!" என்றார் மாப்பிள்ளையின் அம்மா குத்தலாக.
ஒரு பெருமூச்சை இழுத்துவிட்ட ஆராதியா, "ஆமா நீங்க சொல்றது சரிதான். நான் உங்களுக்கு ஒத்து வர மாட்டேன். உங்க நேரத்தை வீணாக்கினதுக்கு அம்மா சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். இப்போ இடத்தை காலி பண்ணுங்க" என்று வெடுக்கென சொல்லிவிட, அவர்களோ அதிர்ச்சியில் எழுந்தே நின்றுவிட்டனர்.
"ஏய் என்னடீ நீ, அவன் ஏதாச்சும் மிரட்டினானா என்ன? ஏன் இப்படி நடந்துக்குற?" என்று அவர்களுக்கு குறையாத அதிர்ச்சியோடு அவளின் அம்மாவும் கடுகடுக்க, அவளோ எதையும் கண்டுகொள்ளாமல் அறைக்குள் நுழைந்து கதவடைத்திருந்தாள்.
அலைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்த ஹர்ஷாவின் இதழ்கள் தன்னவளின் செயலில் மெல்ல விரிய, லலிதாவை முறைத்துவிட்டு வெளிப்படையாகவே திட்டியவாறு அங்கிருந்து வெளியேறினர் மாப்பிள்ளை வீட்டாற்கள்.
அடுத்த சில நிமிடங்களில் தன் வழமையான ஆடைக்கு மாறிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்த ஆராதியா, ஹர்ஷாவின் முன் சென்று நிற்க, சுற்றிமுற்றி எங்கோ பார்த்து விசிலடித்தவாறு பாவனை செய்துக்கொண்டிருந்தான் அவன்.
"உன்னை தவிர என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுதான், ஆனா என்னால உன்னையும் கட்டிக்க முடியாது. நீ என்ன வேணா பண்ணிக்கோ, இனி உன்னோட பேச்சுக்கெல்லாம் நான் மயங்க போறதில்ல. மொதல்ல என் வீட்டை விட்டு வெளியில போ!" என்று அவள் கத்த, சட்டைக் கையை மடித்துவிட்டவாறு எழுந்து நின்றவன், "எத்தனை நாளைக்குன்னு நானும் பார்க்குறேன்" என்று மட்டும் சொல்லிவிட்டு புன்னகையோடு அங்கிருந்து வெளியேறியிருந்தான்.
அதன் பின் லலிதா பேசியது எதுவும் அவளுடைய காதுகளுக்கு கேட்கவே இல்லை. விழிகளிலிருந்து விழிநீர் கசிய இறுகிப் போய் அவள் அமர்ந்திருக்க, ஆராதியாவின் வீட்டிலிருந்து அவன் சென்று நின்றது என்னவோ யுகனுடைய ஃப்ளாட்டுக்குதான்.
உள்ளே நுழைந்தவனின் மனம் முழுக்க பல நினைவுகள். அவன் வளர்த்த மீன்குஞ்சுகள் கூட அந்த தண்ணீரில் உயிரற்ற சடலமாக மிதக்க, விழிகளை அழுந்த மூடித் திறந்தவனுக்கு தன் கேள்விகள் அத்தனைக்குமான பதில் அந்த ஒருத்தியிடம் மாத்திரம் இருப்பது நன்றாகவே புரிந்தது.
ஒரு முடிவு எடுத்தவனாக அவன் அங்கிருந்து வெளியேற, அதேநேரம் கைக்கால்கள் நடுங்க உடலெல்லாம் வியர்த்துப் போய் அசைய முடியாத நிலையில் தரையில் கிடந்தான் வினய்.
"என்... என்னை விட்டுரு ப்ளீஸ்! நான் எதுவுமே பண்ணல, எல்லாத்துக்கும் அவனுங்கதான் காரணம். என்னை விட்டுரு!" என்று மரண பயத்தில் அவன் அலற, அதை திருப்தியாகப் பார்த்துக்கொண்டே கையிலிருந்த கூரிய கத்தியால் அவனின் நெஞ்சைக் கிழித்தான் அந்த ஒருவன்.
அடுத்தநாள் விடிந்ததும் விடியாததுமாக ஆராதியாவுக்கு அழைப்பு வர, தூக்கக் கலக்கத்தோடு அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் அடுத்தகணம் மறுமுனையில் சொன்ன செய்தியில் அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தாள்.
"இதுக்கு வாய்ப்பே இல்லை" என்று அவளுடைய இதழ்கள் அதிர்ச்சியோடு முணுமுணுக்க, அதேநேரம் நகரத்தின் அந்த பிரதான பாலத்தில் வினய்யின் உடல் தலை கீழாக தொங்க விடப்பட்டிருந்தது.
போலீஸ் அதிகாரிகளும் மக்கள் கூட்டமும் அந்த இடத்தை சூழ்ந்திருந்தனர்.
'கொலை செய்தவள் உள்ளே இருக்க மீண்டும் எப்படி?' என்ற கேள்வியோடு மொத்தப் பேரும் பதற்றமாக நின்றிருக்க, ஆராதியா அங்கு வந்த அதேசமயம் தன் புல்லட்டில் அந்த இடத்திற்கு வந்திறங்கினான் ஹர்ஷா.
இவர்களைக் கண்டதுமே இவர்களை நோக்கி வந்த ப்ரணவ், "சேம் பெட்டர்ன்ல கொலை நடந்திருக்கு" என்று சொல்ல, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட இருவரின் முகமும் வெளுத்துப் போனது.
"நந்தினிய தான் நாம பிடிச்சிட்டோமே, அப்பறம் எப்படி, அதுவும் அதே பெட்டர்ன்ல?" என்று அதிர்ச்சி குறையாத குரலில் ஆராதியா கேட்க, "இதுல இன்னும் வேற யாரோ சம்பந்தப்பட்டிருக்கா, அது யாருன்னு தெரிஞ்சிக்கணும். நம்ம எல்லா கேள்விக்கும் பதில் அந்த நந்தினிகிட்டதான் இருக்கு" என்றான் ஹர்ஷத் அழுத்தமாக.
"ஆமா ஹர்ஷா, இன்னைக்கே விசாரிக்கிறேன்" என்ற ப்ரணவ், "தியா, வைஷுவ பத்திரமா இருக்க சொல்லு. கொலையாளி வெளியில இருக்கான்னா கண்டிப்பா அவளுக்கு பாதுகாப்பு இல்லை" என்று எச்சரிக்க, ஹர்ஷாவுக்கு எதுவுமே புரியவில்லை.
ப்ரணவ் நகர்ந்ததுமே, "வைஷ்ணவிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ஆரு?" என்று அவன் புரியாமல் கேட்க, "நந்தினியோட வீட்டுல வைஷ்ணவியோட ஃபோட்டோ இருந்துச்சு. ஆனா... என்னோட கெஸ்ஸிங் கரெக்ட்னா ப்ரணவுக்கு இதை பத்தி ஏதோ தெரிஞ்சிருக்கு. ஹீ ட்ரை டூ ஹைட் சம்திங் ஃப்ரொம் மீ" என்று யோசனையோடு சொன்னாள் அவள்.
அன்றே ஒரு தனி அறையில் நான்கு புறமும் நான்கு அதிகாரிகள் நிற்க ப்ரணவின் முன்னே கையில் விலங்கோடு அமர்த்தப்பட்டாள் நந்தினி.
அவனோ அவளை கூர்மையாகப் பார்க்க, திடீரென அந்த அறையே அதிர பேய் போல் கத்தி சிரிக்க ஆரம்பித்தவள், "அப்போ வினய் செத்துட்டானா, இதை.. இதைதான் நான் எதிர்பார்த்தேன். சாக வேண்டியவன்தான்" என்றாள் அழுத்தமாக.
ஹர்ஷாவும் ஆராதியாவும் ப்ரணவின் அனுமதிக்கேற்ப அந்த ஆஃபீஸ் அறைக்கு வந்து நடப்பதை வேடிக்கைப் பார்க்க, "அப்போ உனக்கு தெரிஞ்சிருக்கு, உனக்கு சம்பந்தப்பட்ட யாரோதான் இதை பண்றாங்க ரைட்? அது யாரு?" என்று ப்ரணவ் கர்ஜிக்கும் குரலில் கேட்க, இதழை கேலியாக வளைத்துச் சிரித்தாள் நந்தினி.
***********
ரதியின் ரணதீரன் நாவல் முழுக்கதை இப்போ Kobo writing lifeல Available ஆ இருக்கு...
பக்கா Anti Hero நாவல்…
நாயகன் தீரனை சந்திக்கவென அவனுடைய கிராமத்திற்கு தன் மகளோடு செல்லும் நாயகி மயூரி. அங்கு சென்றவள் நாயகனைப் பற்றியும் அவனின் பிண்ணனி பற்றியும் தெரிந்துக்கொள்ள, அடுத்தடுத்து அவளுக்கு காத்திருந்த அதிர்ச்சி.
இருவருக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்கள், மர்மங்கள், காதல், காமம், உறவு, நகைச்சுவை, பிரிவு, வலி, திருப்பங்கள் என அனைத்தும் கலந்ததே ரதியின் ரணதீரன்…
"சொல்லு நந்தினி, வினய்ய கொன்னது யாரு? யாருன்னு சொல்லு... இல்லன்னா உன்னை வேற மாதிரி ஹேன்டல் பண்ண வேண்டியிருக்கும்" என்று ப்ரணவ் மிரட்டலாகச் சொல்ல, "இப்போ உங்களுக்கு யாருன்னு தெரியணும், அவ்வளவுதானே!" என்று சற்று முன்னே வந்து ஒரு மாதிரிக் குரலில் கேட்டாள் நந்தினி.
அவனோ அவளை கேள்வியாக நோக்க, இதை கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டிருந்த ஆராதியாவும் ஹர்ஷத்தும் அவளின் பதிலை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருக்க, "ஹர்ஷத்" என சட்டென்று சொன்னாள் அவள்.
அதைக் கேட்ட சுற்றியிருந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்க, அவளை அதிர்ந்துப் பார்த்த ஹர்ஷத்திற்கு அடுத்தகணம் அதிர்ச்சி மறைந்து கோபம் உச்சகட்டத்திற்கு எகிறியது.
"ஹவ் டேர் யூ... நான் உனக்கு என்னடீ பண்ணேன், யூ ப்ளடி ****... உன்னை இன்னைக்கு கொல்லாம விட மாட்டேன்டீ" என்று கத்திக்கொண்டே பக்கத்திலிருந்த அதிகாரிகளையும் மீறி விசாரனை நடந்துக்கொண்டிருந்த அறையை திறந்துக்கொண்டு உள்ளே சென்று நந்தினியை அவன் அடிக்கப் போக, வேகமாக அவனை தடுத்து நிறுத்தினர் மற்றவர்கள்.
"ஹர்ஷா, ப்ளீஸ் ஸ்டாப்! அமைதியா இரு, ஹர்ஷா..." என்று ஆராதியா தன்னவனை அமைதிப்படுத்த முயற்சிக்க, "காம் டவுன் ஹர்ஷா, அவ உங்கள ட்ரிக்கர் பண்றா. ப்ளீஸ் நிறுத்துங்க" என்று அவனைப் பிடித்து உலுக்கினான் ப்ரணவ்.
அவனோ நந்தினியை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்துப் பார்க்க, கேலியாகப் புன்னகைத்தவளோ, "ஏன் ஹர்ஷா இவ்வளவு கோபம்? அமைதியா இரு, இன்னும் நீ பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு" என்று சொல்லிக்கொண்டே ஆராதியாவை அழுத்தமாகப் பார்க்க, அந்த பார்வையில் ஆராதியாவுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது.
அவளோ ஹர்ஷாவின் கரத்தைப் பற்றியிருந்தவள் மெல்ல தன்னவனின் பின்னே மறைந்துக்கொள்ள, "யுகன என்னடீ பண்ண, அவன் உன்னை மாதிரி ஒருத்திய போய் காதலிச்சத தவிர வேற என்னடீ பாவம் பண்ணான்?" என்று அத்தனை ஆதங்கத்தோடுக் கேட்டான் அவன்.
"அவன் சாவுக்கு அவன்தான் காரணம், நானும் அவன உண்மையாதான் காதலிச்சேன். அந்த அனிதா செத்தப்போவே யுகனுக்கு எல்லாமே தெரிஞ்சு போச்சு, ஆனா... ஆனா அவனுக்கு என்னை விட உன் மேலதான் பாசம் ஜாஸ்தி. ப்ரீத்தி செத்து நீ ஜெயிலுக்கு போனத அவனால தாங்கிக்க முடியல, உண்மைய சொல்ல போறேன்னு ஓவரா ஆடினான். அதான் பாய்சன கொடுத்துட்டேன். தட் இஸ் டோடல்லி அன்ஃபெயார் ஹர்ஷா" என்று சொல்லி பாவம் போல் உதட்டைப் பிதுக்க, ஹர்ஷாவுக்கோ கோபம் தலைக்கேறியது.
நெற்றி நரம்புகள் புடைக்க கை முஷ்டியை இறுக்கிக்கொண்டவன், ப்ரணவின் இடையிலிருந்த துப்பாக்கியை எடுத்து அவளை நோக்கி நீட்ட, ஒருகணம் திகைத்துப் பார்த்தவள் பின் நக்கலாக ஒரு பார்வைப் பார்த்தாள்.
"ஹர்ஷா, ஆர் யூ மேட்? என்ன பண்றீங்க நீங்க, அவளுக்கு மட்டும் ஏதாச்சும் ஆச்சுன்னா நீ ஜெயிலுக்கு போறது மட்டுமில்ல எங்க வேலையும் போயிரும்" என்று கத்திக்கொண்டே ப்ரணவ் அவனின் கையிலிருந்த துப்பாக்கியை பிடுங்கி எடுக்க, கோப மூச்சுக்களை இட்டவாறு அவளைப் பார்த்தவனோ, 'ச்சே!' என்று அவளை எதுவும் செய்ய முடியாத கையாலாகாத தனத்தில் எரிச்சல் பட்டுக்கொண்டான்.
"தியா, இவர இங்கயிருந்து கூட்டிட்டு போ, நான் உங்க இரண்டு பேரையும் இங்க கூப்பிட்டிருக்கவே கூடாது" என்று ப்ரணவ் சொன்னதும், "போகலாம் ஹர்ஷா" என்ற ஆராதியா அவனின் கரத்தைப் பற்றி அழைத்துக்கொண்டு செல்ல, "ஹர்ஷா..." என்றழைத்தாள் நந்தினி.
அவனோ திரும்பி கோபமாகப் பார்க்க, "உண்மைய தெரியுற அந்த நாள்தான் உன் வாழ்க்கையில இருண்ட பக்கமா இருக்கும். நீ என்ன பண்ண போறேன்னு பார்க்க நான் ஆர்வமா இருக்கேன்" என்று அவள் உள்ளர்த்தத்தோடு சொல்லி முடிக்க, ஹர்ஷாவுக்கு அவள் சொன்னதற்கான அர்த்தம் சுத்தமாகத் தெரியவில்லை.
அங்கிருந்து வெளியே வந்ததும், பக்கத்திலிருந்த கடையிலிருந்து ஜூஸ் போத்தலொன்றை வாங்கி தன்னவனிடம் ஆராதியா நீட்ட, அதை வாங்கிக்கொண்டு மடமடவென பருகினான் அவன்.
இருவருக்குமே அவளின் வார்த்தைகள் தொடர்பான குழப்பம் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்க, சரியாக ஆராதியாவுக்கு அழைத்தார் லலிதா.
அழைப்பையேற்றவள் மறுமுனையில் வசையை கேட்கும் முன்னரே, "டென் மினிட்ஸ்ல வீட்டுல இருப்பேன், எதுவும் பேசாதீங்க" என வேகமாக சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, "நானே உன்னை ட்ரோப் பண்றேன்" என்றான் ஹர்ஷா அக்கறையோடு.
வேகமாக மறுத்த ஆராதியா, "இல்லை வேணாம், நான் ஆட்டோவுல போயிருவேன்" என்றுவிட்டு முன்னே நடக்க, இவனுக்கோ இருக்கும் கோபத்தில் ஆராதியாவின் செயல் மேலும் கோபத்தை அதிகப்படுத்தியது.
வேகமாகச் சென்று அவள் கரத்தைப் பற்றியிழுத்தவன், "ஆரு, ரொம்ப பண்ணாத! என் கூட வா, நானே உன்னை கொண்டு போய் விடுறேன்" என்று சொல்ல, அவன் பற்றியிருந்த கரத்தை உதறிவிட்டு, "ஒன்னும் தேவையில்ல, இந்த கேஸ்காகதான் நான் உன்னை தேடி வந்துட்டு இருக்கேன், இல்லன்னா..." என்று ஆராதியா நிறுத்த, இவனுக்கோ பிபி எகிறியது.
"இல்லன்னா, இல்லன்னா என்னடீ பண்ணியிருப்ப சொல்லு? என்னை விட்டு மொத்தமா போயிருவியா, இல்ல வேற எவனையாச்சும் கல்யாணம் பண்ணிப்பியா? சொல்லுடீ, உன்கிட்ட தானே கேக்குறேன்" என்று இடம் பொருள் பாராது அவன் கத்த, எல்லாருடைய பார்வையும் தங்கள் மீது இருப்பதைக் கவனித்தவளுக்கு இப்போது கோபம் எகிறியது.
"ஆமா, மொத்தமா போகத்தான் போறேன். போதுமா?" என்று ஆக்ரோஷமாக அவள் கத்த, அடுத்த நொடி ஹர்ஷாவின் கரம் அவளுடைய கன்னத்தில் பதிந்திருந்தது.
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காதவளாய் கன்னத்தைப் பொத்திக்கொண்டு ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டாள் ஆராதியா.
"வாய் இருக்குன்னு என்ன வேணா பேசிக்கிட்டே போவியாடீ, உன்னை ரொம்ப காதலிக்கிறேன். உன்னை விட்டு என்னால இருக்க முடியாது, அது ஏன்டீ உன் மரமண்டைக்கு புரிய மாட்டேங்குது? ஆரம்பத்துல உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணதாலதானோ என்னவோ அத்தனை பெரிய தண்டனைய அனுபவிச்சிட்டு வந்தேன். இப்போ நீ விலகி போறேன்னா என்ன அர்த்தம் ஆரு?" என்று படபடவென அவன் பொரிந்துக்கொண்டே போக, அவளோ கலங்கிய விழிகளோடு அவன் அறைந்த கன்னத்தில் கரத்தை வைத்தபடி அவனையே பார்த்திருந்தாள்.
அப்போதுதான் தன்னை மீறி கோபத்தில் அவளை அறைந்ததை உணர்ந்தவன், தலைமுடியை அழுந்தக் கோதி கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, "ஆரு அது... நான் உன்னை..." என்று தடுமாறியபடி அவளை நெருங்கப் போக, இரண்டடி பின்னே நகர்ந்தாள் ஆராதியா.
"என்னை அறைஞ்சிட்டல்ல, அவ்வளவுதான்" என்று கோபமாக சொல்லிவிட்டு அவள் விறுவிறுவென சென்றுவிட, கோபத்தில் தரையை காலால் உதைத்தவனனுக்கு அவளை சமாதானப்படுத்தக் கூட வழி தெரியவில்லை.
"ஏன்டீ என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்குற?" என்று அவனின் இதழ்கள் இயலாமையோடு முணுமுணுக்க, இடுப்பில் கைக்குற்றிய வண்ணம் போகும் தன்னவளையே ஏக்கத்தோடுப் பார்த்திருந்தான் ஹர்ஷா.
தன்னவன் அறைந்த கோபத்தில் வீட்டிற்கு வந்த ஆராதியா பையை சோஃபாவில் தூக்கிப் போட்டுவிட்டு கோப மூச்சுக்களை இட்டவாறு சோஃபாவில் அமர்ந்துக்கொள்ள, "இழைக்கிறேன்னா அந்த இன்ஹேலர யூஸ் பண்ண வேண்டியதுதானே, அதை பண்ணாம போய் சேர போறியா?" என்று லலிதா புரியாமல் பேச, அவளோ விழிகளை மட்டும் உயர்த்தி தன் அம்மாவை முறைத்துப் பார்த்தாள்.
"என்னடீ முறைக்கிற? இப்போ எல்லாம் உங்க இரண்டு பேரோட நடவடிக்கையே சரியில்ல. நீ என்னடான்னா என் பேச்சை சுத்தமா கேக்கவே மாட்டேங்குற, அவ என்னடான்னா எதையோ பறி கொடுத்த மாதிரி சுத்திட்டு இருக்கா. இரண்டு பொட்ட புள்ளைங்கள பெத்து நான்தான் வயித்துல நெருப்ப கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கு" என்று லலிதா தன் பாட்டிற்கு புலம்பிக்கொண்டே போக, விழிகளை யோசனையோடு சுருக்கியவாறு தன் சகோதரியை தேடிச் சென்றாள் ஆராதியா.
"வைஷு..." என்ற தன் தமக்கையின் குரலில் கையிலிருந்த புகைப்படத்தை பதற்றமாக கபோர்டில் போட்டவள், "என்.. என்னக்கா?" என்று சிறு தடுமாற்றத்தோடுக் கேட்க, தங்கையின் பதற்றத்தையும் அவள் எதையோ மறைத்ததையும் கண்டுகொண்டாள் தியா.
"என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்று விழிகளை கூர்மையாக்கியபடி அவள் கேட்க, "அது... ரெடியாகிட்டு இருக்கேன், முக்கியமான வேலையா வெளியில போகணும். நீ என்ன புதுசா இப்படியெல்லாம் என்கிட்ட கேள்வி கேக்குற?" என்று முகத்தில் தெரியும் பதற்றத்தை மறைக்க முயற்சித்தவாறு சமாளித்தாள் வைஷ்ணவி.
"ஓ..." என்று நீட்டி முழக்கியவாறு அறையிலிருந்த கட்டிலில் வந்தமர்ந்த ஆராதியா, "வைஷு, அன்னையில இருந்தே எனக்கு ரொம்ப சந்தேகமா இருக்கு. அந்த நந்தினியோட வீட்டுல எப்படி உன் ஃபோட்டோ இருந்துச்சு, உனக்கு முன்னாடியே அவள தெரியுமா என்ன?" என்று சந்தேகமாகப் பார்த்தபடிக் கேட்க, இதழை நாவால் ஈரமாக்கி கைகளைப் பிசைந்தவாறு நின்றிருந்தவளுக்கு ஏனென்று தெரியாத பதற்றத்திலும் பயத்திலும் வியர்க்க ஆரம்பித்தது.
"ஏய் என்னாச்சு, உனக்கு ஏன் இப்படி வேர்க்குது?" என்று கேட்டவளின் சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போக, "என.. எனக்கு தெரியாது அக்கா. எனக்கு எப்படி அந்த பொண்ண தெரிஞ்சிருக்கும்? சரி, என.. எனக்கு லேட் ஆகிருச்சு. நான் போகணும்" என்று திக்கித்திணறி பேசிவிட்டு கபோர்ட் சாவியை கையோடு எடுத்துக்கொண்டு அந்த அறையிலிருந்து வேகமாக சென்றுவிட, ஆராதியாவின் பார்வையோ அந்த கபோர்டின் மீது சந்தேகமாகப் படிந்தது.
வீட்டிலிருந்து வெளியேறிய வைஷ்ணவி வழக்கமாக தான் செல்லும் தன் நண்பி ஒருத்தியின் ஃப்ளாட்டிற்கு சென்று லிஃப்டில் ஏறி அவளுடைய வீடு இருக்கும் தளத்தை அழுத்திவிட்டு காத்திருக்க, ஏனோ மனம் எச்சரிப்பது போல் அவளுக்குள் ஒரு உணர்வு.
தலையை உலுக்கி சிந்தனையை கலைத்தவள், லிஃப்ட் திறந்ததுமே வேக நடையோடு அவளுடைய வீட்டிற்கு ஓடி அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருக்க, நிமிடங்கள் கடந்தும் கதவு திறந்தபாடில்லை.
எதேர்ச்சையாக கதவைத் திறந்த எதிர்வீட்டு பெண்மணி, இவள் வாசலிலேயே காத்துக்கொண்டிருப்பதைக் கண்டு "ஏம்மா பொண்ணு, இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மொத்த குடும்பமும் கெளம்பி வெளியில போனாங்க, சாவிய கூட என் கிட்ட கொடுத்து வச்சுதான் போனாங்க. நீ முன்னாடியே ஒரு கால் பண்ணி பேசிட்டு வந்திருக்கலாமே!" என்று சொல்ல, வைஷ்ணவிக்கு அய்யோ என்றாகிவிட்டது.
"தேங்க்ஸ் ஆன்ட்டி" என்றுவிட்டு வாயிற்குள் தன் தோழியைத் திட்டி முணுமுணுத்தவாறு மீண்டும் லிஃப்ட்டை நோக்கி அவள் செல்ல, அன்று தோன்றியது போல் இன்றும் யாரோ அவளை பின்தொடர்வது போல் ஒரு உணர்வு தோன்றியது.
இதில் காலடி சத்தம் வேறு மெல்ல கேட்க, பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்தவளுக்கு விழிகளில் தென்பட்ட நிழலால் மயக்கமே வந்துவிட்டது.
'இது பிரம்மை இல்லை, என்னை ஃபாலோவ் பண்றாங்க. இது நிஜம்தான். என்ன பண்றது? அய்யோ கடவுளே... எனக்கு பயமா இருக்கு' என்று உள்ளுக்குள் புலம்பியவள் லிஃப்டில் கூட ஏறாது படிக்கட்டு வழியே வேகமாக இறங்கத் தொடங்கினாள்.
ஐந்தாம் மாடியிலிருந்து படிக்கட்டு வழியே இறங்கியவள் கீழ் தளத்தில் காலை வைத்ததும் வேகமாக தன் பின்னால் திரும்பிப் பார்க்க அங்கோ யாருமில்லை. அவள் வந்த வேகத்திற்கு மூச்சு விடக் கூட சிரமமாக இருக்க, முட்டியில் கையை வைத்து பெரிய மூச்சுக்களாக இழுத்துவிட்டவள் மெல்ல எழுந்து திரும்ப, சரியாக ப்ரணவின் மீதே மோதி நின்றாள்.
"இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்று அவன் அவளின் பதற்றமான முகத்தையும் நடுங்கும் கைகளையும் பார்த்தவாறுக் கேட்க, "அது... அது வந்து ப்ரணவ்..." என்று ஏதோ சொல்ல வந்து அப்படியே அவன் மேலேயே வைஷ்ணவி மயங்கி சரிந்திருக்க, உடனே அவளை தாங்கிப் பிடித்துக்கொண்டான் ப்ரணவ்.
"ஏய் வைஷ்ணவி... எழுந்துரு! வைஷு... என்னாச்சு? வைஷ்ணவி..." என்று அவன் தன்னோடு அவளை அணைத்தபடி கத்த, அவளிடம் எந்த அசைவுமில்லை.
"சரியான இம்சைடீ நீ!" என்று பற்களைக் கடித்துக்கொண்டவன் அடுத்தகணம் கொஞ்சமும் யோசிக்காது அவளை தன் கரங்களில் ஏந்திய வண்ணம் மீண்டும் அந்த ஃப்ளாட்டிற்குள் தன் வீட்டை நோக்கிக் செல்ல, நடப்பதை மறைந்திருந்நு பார்த்துக்கொண்டிருந்தன அந்த விழிகள்.
அரை மணித்தியாலம் கழித்து,
மயக்கம் தெளிந்து மெல்ல கண் விழித்த வைஷ்ணவி சுற்றிமுற்றி தான் இருக்கும் இடத்தைப் பார்க்க, தன் முன்னே சிரிப்பே அறியாத முகத்தோடு நின்றிருந்த ப்ரணவைப் பார்த்ததும் அவளுடைய விழிகள் திகைப்பில் விரிந்தன.
அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தவள், "நா.. நான் எப்படி உங்க ரூம்ல? அய்யோ! அப்போ எல்லா முடிஞ்சிருச்சா, நான் உங்களதான் கட்டிக்கணுமா?" என்று போலி அதிர்ச்சியோடு நெஞ்சில் கை வைத்துக்கொள்ள, ஒற்றைப் புருவத்தைத் தூக்கி அவளை முறைத்துப் பார்த்தான்.
"பாவமேன்னு மயங்கி கிடந்த உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் பாரு, என்னை சொல்லணும்!" என்று அவன் நொடிந்துக்கொள்ள, முப்பத்திரெண்டு பற்கள் தெரிய அசடுவழிந்தவாறு அவனைப் பார்த்தாள் அவள்.
"ஹிஹிஹி... புகுந்த வீட்டுக்கு மொதல் தடவை வந்திருக்கேன், காஃபி டீ எதுவும் கொடுக்க மாட்டீங்களா?" என்று வேறு ஒரு கேள்வியை வைஷ்ணவி கேட்டு வைக்க, வேகமாக அவளை நெருங்கி அவளின் முழங்கையைப் பற்றிய ப்ரணவ், "மொதல்ல இங்கயிருந்து வெளியில போ, யாராச்சும் உன்னை பார்த்தாங்கன்னா தப்பா நினைப்பாங்க" என்று சொல்லி அவளை இழுத்துக்கொண்டே வாசலை நோக்கிச் சென்றான்.
சலிப்பாக விழிகளை உருட்டியவாறு, "நினைச்சா என்ன? மயங்கிட்டேன்னு என்னை உங்க கையில தாங்கி உங்க வீட்டுக்கு அழைச்சுட்டு வந்திருக்கீங்க. இது லவ்வுதானே ஜெஸி?" என்று வைஷ்ணவி சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டதும், இவளை என்ன செய்தால் தகும் என்றுதான் தோன்றியது அவனுக்கு.
"வாட்! நீ படிச்ச பொண்ணுதானா? இது ஹியூமனிட்டி, யார் இந்த இடத்துல இருந்திருந்தாலும் நான் இதைதான் பண்ணியிருப்பேன். ஒழுங்கு மரியாதையா வெளியில போ" என்றான் ப்ரணவ் பற்களைக் கடித்துக்கொண்டு.
அவளோ கால்களை தரையில் ஊன்றி நின்றுக்கொண்டவள், "ப்ளீஸ் நான் உங்க கூட பேசணும்" என்று கெஞ்சாத குறையாக சொல்ல, "நீ பேசினதெல்லாம் போதும், எவ்வளவு பெரிய விஷயத்தை இத்தனை வருஷமா மறைச்சு வச்சிருந்திருக்க. இது மட்டும் தியாவுக்கு தெரிஞ்சா என்னாகும்னு தெரியுமா?" என்று அவனோ பொரிந்துக்கொண்டே போனான்.
அதில் அவளுடைய முகம் சட்டென வாட, "எனக்கு பயமா இருக்கு, என்ன பண்றதுன்னு தெரியல. இப்போ கூட என்னை யாரோ ஃபாலோவ் பண்ணாங்க, அதான் நான் ஓடி வந்தேன். அக்காவுக்கு நடந்தது எதுவும் தெரியக் கூடாது" என்று பயமும் கலக்கமும் முகத்தில் நிறைந்திருக்க வைஷ்ணவி சொல்ல, ப்ரணவோ அமைதியாக அவளையே பார்த்திருந்தான்.
அவனை இமை சிமிட்டாமல் பார்த்தவள் அவன் கொஞ்சமும் எதிர்பார்க்காதது போல் அவனிதழை தன் மென்மையான இதழால் கவ்வியிருக்க, விழி விரித்து சிலை போல் நின்றுவிட்டான் அவன்.
அவனின் ஒரு கன்னத்தைத் தாங்கி அவனிதழை பெண்ணவள் சுவைத்துக்கொண்டே போக, அவளை தன்னிடமிருந்து விலக்கவும் இல்லை, அவளுக்கு உடன்படவும் இல்லை ஆடவன்.
கை முஷ்டியை இறுக்கிக்கொண்டு அவன் நின்றிருக்க, சில கணங்கள் தொடர்ந்த இதழ் முத்தத்திற்கு அவளே முற்றுப்புள்ளி வைத்து அவனை விட்டு விலகி நிற்க, ப்ரணவோ அதிர்ந்துப் போய் அவளையே பார்த்திருந்தான்.
திடீர் முத்தத்தால் உண்டான அதிர்ச்சியில் அந்த அதிகாரிக்கு வார்த்தைகள் கூட எழவில்லை. சிலை போல் அவன் நின்றிருக்க, இதுதான் சந்தர்ப்பம் என்று அவன் நடப்புக்கு வரும் முன்னரே அங்கிருந்து ஓடியேவிட்டாள் வைஷ்ணவி.
அன்றிரவு வைஷ்ணவி முத்த சம்பவத்தை நினைத்த வண்ணம் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்க, அந்த அறைக்குள் ரகசியமாக நுழைந்தது அந்த உருவம்.