ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வந்தியதேவனும் குந்தவையும் by கிருத்திகா கிருஷ்ணன் (touchscreen writer) - கதை திரி

Status
Not open for further replies.

touchscreen writer

Member
Wonderland writer
உயிர் உங்களுடையது தேவி
by கிருத்திகா கிருஷ்ணன் (touchscreen writer)

அத்தியாயம் 1
காலை கதிரவன் அந்த மலையின் நடுவில் வீட்டிருக்கும் முருகப் பெருமானின் கோவிலின் எழில் அழகை உலகிற்கு காட்டிக் கொண்டிருந்த வேளையில் நம் நாயகன் ராமும் நாயகி தேவியும் அந்த மலைப்பின் அடிவாரத்தில் மணக்கோலத்துடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களுடன் சில இளசுகளும் இருந்தனர்.

தேவி கணமில்லா பச்சைவண்ண பட்டுடுத்தி மிகை இல்லா அலங்காரத்தோடும் அபரணத்தோடும் ஒப்பனையோடும் மிளிர்ந்தாள்.

அவளை நெருங்கி நின்ற தேவியின் தாய்மாமன் மகள் ரேஷ்மா, "இன்னைக்கும் ஏண்டி சிம்பிளா மேக்அப்
போட்டு இருக்க, உனக்கு மேரேஜ் பைத்தியம்" கேட்டாள். இதையே வேறு விதமாக கேட்டாள் தேவியின் தோழி, கீர்த்தி
"இப்படி இருந்தா என்ன. மை கல்யாணம் மை ஸ்டைல்… அப்புறம் என் ஜாதகத்துலையும் ராம் ஜாதகத்துலையும், ஏக பிரச்சனை இருக்காம், அதனால நாங்க முருகன் கிட்ட ஒவ்வொரு படியா ஏறி அதுக்கு குங்குமம் வச்சி எங்க வாழ்க்கை நல்லபடியா அமையனும்னு வேண்டிகிட்டு, தாலி கட்டிக்கணும் சொல்லிருக்காங்க, நான் ஹெவி சாரி கட்டி, மேக்அப், ஹெர் ஸ்டைல் எல்லாம் போட்டு இந்த 100 படிய ஏற முடியுமா. சிம்பிள் இஸ் மை ஸ்டைல், எனக்கு இதான் பிடிச்சுருக்கு நீ ஏதாவது பேசி முட் அவுட் பண்ணாத ரேஷ்" தேவி நீளமாக விளக்கினாள். தன்னை ஒரு முறை போனில் சரிபார்த்துக் கொண்டாள்.

"இவகிட்ட எல்லாம் பேச முடியுமாங்க. தான் புடிச்ச முயலுக்கு மூனுகால்ன்னு நிப்பா அவகிட்ட ஆமாம் சாமி போட்டு போய்க்கிட்டே இருக்கனும். ஆனாலும் சிம்பிளா இருந்தாலும் நல்லாதான் இருக்கா விடுங்க" என்று சொல்லி முடித்தாள், தேவியின் சின்ன அத்தை மகளும் ராமின் சித்தி மகளுமான, சுஜா.

இத்தனை நேரம் ராமும் தேவியின் பெரியப்பா மகன் வினாயகத்திடம் தீவிரமாக பேசிக் கொண்டுதான் இருந்தான்.

"எல்லாரும் படியேறிதான் வரணும்ன்னு இல்லல்ல… மத்த எல்லாரும் கார் அண்ட் வேன்ல மலைக்கு வந்துடுவாங்கதானே அப்பறம் நீங்க மட்டும் ஏன் எங்க கூட எங்களுக்கு மட்டும் தான பரிகாரம் நாங்க பாத்துக்குறோம், நீங்க நாம வந்த கார்ல மலைக்கு போங்க நானும் தேவியும் படி ஏறி வர்றோம்"

"அதான் நாம எதுக்கு... சேலை கட்டிட்டு முடியவே முடியாது. அவங்க தனியா வரட்டும் நாம கார்ல போ" என்று ராம்க்கு ஒத்து ஊதினாள், ரேஷ்மா.

விநாயகம் முழித்துபடி, "தனியா விடுறதா சித்தப்பா என்ன உப்புகண்டம் போட்டுருவாரு" அவனுக்கு தேவியின் அப்பா, சரவணன் பற்றி கவலை.

"எங்களுக்கு கல்யாணம் இப்ப… இப்ப கூட உங்க சித்தப்பா ஆல்சோ என் சின்ன தாய்மாமா அவரு பொண்ண என் கூட தனியா விடமாட்டாரா, சொல்லுங்க மச்சான்" என்று ராம் கேட்டவுடன் எல்லோரும் பக்கென்று சிரித்தனர், தேவியை தவிர, அவள் முகம் வெட்கம் பூசியது. அந்த முகத்தை தான் ராம் கேட்டவுடன் திரும்பி பார்த்தான். அவன் பார்த்ததும், 'என்ன இப்படி கேட்க விட்டாய்' என்பது போல் அவள் புருவம் உயர்த்த, 'அவன் இதில் என்ன இருக்கிறது' என்ற நிலையில் புன்னகை செய்தான்.

"உங்க ஆளு விவரமா ரூட் போட்டு குடுக்குறாரு தேவி இதுதான் டைம் நீ கேக்க நினச்சத கேட்டுரு" என்று தேவியின் காதோடு கிசுகிசுத்தாள். ரேஷ்மா.

அதுவும் சரிதான் கல்யாண பேச்சு எடுத்த நாளில் இருந்து, ஒரு வார்த்தை கூட இருவராலும் பேசிக் கொள்ள முடியவில்லை. அவளுக்கு கேட்க முடியாத நிலை, அவனுக்கோ கட்டுபாடு போல, இந்தா இப்போது வெளிப்படையாக கேட்டுவிட்டானே.. இப்போது 1 மணி நேரத்தில் திருமணம் முடிந்துவிடும், அதற்குள்ளாவது இருவரும் சகஜமாக பேசி பழகத்தொடங்க வேண்டும். அதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தாள், தேவி.

"சரிணா, சாரி கட்டி நடக்க முடியாதுன்னு சொல்றாங்க இல்ல, நீ அவங்கள் கூட்டிட்டி வா. நான் கீர்த்திய கூட்டிட்டு போறேன், அவ சுடிதார் தான போட்டு இருக்கா"

"சரி நான் அவ கூட போறேன்" என்று கீர்த்தி சொல்ல, விநாயகம் அரை மனதாக சம்மதித்து விட்டு மற்ற இரு பெண்களையும் கூட்டி கொண்டு கிளம்பினான்.

அவர்கள் சென்றதும் தேவி படி அருகில் சென்று முதல் படியில் சந்தன குங்கும பொட்டு வைத்தாள், பக்கத்தில் கீர்த்தி குங்கும கிண்ணத்துடன் நிற்க "அத கொடுங்க அத நான் பாத்துக்கிறேன்" என்று ராம் கீர்த்தியிடம் கேட்க தேவியும் கீழே குனிந்தபடி மென்புன்னகை செய்தாள்.

கீர்த்தியும் அவன் கையில் தந்துவிட்டு அவர்களிலிருந்து கொஞ்சம் பின் தங்கி நடக்க, தேவி நிமிராமலே அடுத்தடுத்த படிக்கு வேகமாக பொட்டு வைத்துக் கொண்டு ஏறினாள். ராமின் கையிலிருந்து சந்தனத்தையும் குங்குமத்தையும் மாற்றி மாற்றி வாங்கனாலும், அவனை ஏறிட்டு பார்க்கவில்லை, பார்த்தால் வேலை கெட்டு விடுமே தாமதமானால் அப்பா கோவம் கொள்வார் என்கிற எண்ணம்தான் இதற்கு காரணம். அவனும் அதை புரிந்து வேட்டி தட்டினாலும் அவளுடன் வேகமாக நடந்தான்.

40வது படியை தொடும் போது தேவியின் முதுகு வலிக்க தொடங்கிவிட்டது. உடனே அவள் நிமிர அவன் சட்டென அவள் முதுகை தடவி விட்டு, "எதுக்கு இவ்வளவு அவசரம், நிமிர கூட இல்லாம செய்யனுமா" அவன் சொல்ல அவள் விழி விரித்து அவனையும் பார்க்க அவர்கள் பின்னே வந்த கீர்த்தியையும் பார்க்க அவனுக்கு சிரிப்பு வந்தது.

"சுத்தி, யாரும் வரல உன் பரண்டும் ரொம்ப நேரமா ஒரே இடத்துல நின்னு போன்ல பேசிட்டு இருக்காங்க" அவன் பேச அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள்.

"பேசவே மாட்டியா? மாமா உன் வாய கம் போட்டு ஒட்டிட்டாங்களா?" அவன் குறும்பு சிரிப்போடு கேட்க அவளும் புருவம் தூக்கி சிரித்துவிட்டு, பேசக்கூடாதுன்னு இல்ல… மனசுல முருகா முருகா ன்னு சொல்லிகிட்டு இருக்கேன் என்று அவள் செய்கையிலே சொன்னாள்.

அவன் அவளை விழி சுருக்கி பார்த்து, "உனக்கு ஜாதகத்து மேல அவ்வளவு நம்பிக்கையா நம்ம லைப்ப நினச்சு பயப்புடுறியா?" அவன் குரலில் ஒரு ஏமாற்றும் இருப்பது அவளுக்கு புரிந்தது. இப்போது அதற்கு அவள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

"எனக்கு அது எல்லாம் பிரச்சனையில்லை, ஆனா எனக்கு முருகன் இஷ்டதெய்வம் அதான் எப்பவும் இப்படி மனசுல சொல்லுவேன். இது மெடிட்டேக்ஷன் பண்ற மாதிரி"

அவன் உடனே ஏளன புன்னகையோடே, “யார் இந்த இரண்டு பொண்டாட்டிகாரரா இஷ்ட உன் தெய்வம் மகிழ்ச்சி… சிறப்பு” என்று சொல்லிக் கொண்டே அவன் அடுத்த படிக்கும் பொட்டு வைக்க தொடங்கினான். தேவி பட பட என்று அவனோடு நடந்து “அப்பாவுக்கு பாடம் எடுத்த நம்ம கடவுள் முருகன் என் முதல் ஹீரோ” என்று சொன்னாள்.

அவன் நிமிர்ந்து, “இந்த கதை எல்லாம் நம்பறியா?” என்று சிரித்து விட்டு வேலையை தொடர்ந்தான். அவளுக்கு முகம் சுருங்கினாலும் ஏதோ ஒன்று தோன்ற வேகமாக சென்று அவன் முன்னே படியில் அமர்ந்தாள்.

அவனோ என்ன என்பது போல தலையை ஆட்ட, அவளோ விழி சுருக்கி யோசிப்பது போல செய்கை செய்து, “ அப்போ அவருக்கு ரெண்டு பொண்டாட்டிங்கறது கூட கதை தானோ… அது கதை அப்படின்னா இதுவும் தானே” என்று கேட்டாள் அப்பாவி போல்.

அவன் ஒரு நொடி தினறியே விட்டான், பின் பெருமூச்சுடன், "முருகா…" என்று சொல்லி அவளை கூர்ந்து பார்த்தான். அவள் எழுந்து அவன் அருகில் வந்து, "அப்படித்தான் முருகா முருகா சொல்லிகிட்டே பொட்டு வைங்க இல்லன்னா நானே செஞ்சிக்குறேன்"

"ஆஹான்… வாய் இல்லாதவங்களுக்கு ஒரு நாள் குரல் குடுக்குறது தப்பில்ல… நானே பொட்டு வைக்கிறேன்"

அவள் அதை கேட்டு முறைத்துக் கொண்டு "முருகா" என்று அவனுக்கு உடன்பட்டாள்.
"நல்லாத்தான் முறைக்குற… அப்படியே சத்தமா சொல்லிட்டு வா…" என்று சிரித்தான்.

கொஞ்சம் தூரம் சென்றிருப்பர், ராம் ஒவ்வொரு படி ஏறும் போதும் வேட்டியுடன் போராடிக் கொண்டிருந்தான். தேவியின் வாய் அவன் கட்டளைப்படி முருகனை சத்தமாக கூப்பிட்டாலும், அவன் போராட்டத்தில் பொறுமை இழந்து, "atha மடிச்சுதான் கட்டலாம்ல… அது கூடவே போராடி லேட் ஆக போகுது அப்பறம் அப்பா என்ன தான் திட்டுவாங்க" அவள் சொல்லி முடிக்க, இப்போது முறைப்பது அவன் முறையாக இருந்தது.

"உங்கப்பா புராணம் போதும்… நான் என்ன வேணும்னா பண்றேன் வேட்டிய மடிச்சு கட்டி எனக்கு பழக்கமில்லை அண்ட் கட்டுனா பின்னாடி வர்றவங்களுக்கு uneasy ஆ இருக்கும் அதான் பாக்குறேன்" என்றதும் இருவரும் பின்னால் திரும்பி பார்த்தனர்.

அங்கே கீர்த்தி ஒரு ஆணுடன் மலையின் அடர்த்தியான மரங்களினூடே அவன் கையை பற்றிக் கொண்டு மறைந்தாள். இருவருக்கும் தூக்கி வாரி போட்டது.

"கீர்த்…." என்று கத்த தொடங்கிய தேவியின் குரல் அப்படியே எதோ சிந்தனையில் அடங்கியது.

"வாட் இஸ் ஷீ டூயிங்?... அவன் யார்ன்னு உனக்கு தெரியுமா?" தேவியை பார்த்து கேட்டான், ராம்.

"அவ ஆளு… ஸ்… மீன்ஸ் அவ லவ்வர்… டீனேஜ் ல இருந்து… வீட்டுக்கு தெரிஞ்சிடுச்சி… ஒத்துக்கல… பிரிஞ்சிட்டாங்கன்னு நினைச்சோம் ஏண்ணா அவ அது பத்தி பேசியே வருஷம் ஆயிடுச்சு… ஆனா இப்போ பார்த்தா இது பிளான் போல இருக்கு" அவள் தயங்கி தயங்கி சொல்ல, அவனோ, "என்ன கொடுமை சரவணன் இது" என்று அவளை பார்த்து கேட்க அவள் சிரித்தே விட்டாள்.

"சிரிக்குற… நாம என்ன நிலைமைல இருக்கோம். அவங்க அப்பா வந்து என் பொண்ணு எங்கன்னு உன்கிட்ட தான் கேப்பாரு"

"கேட்டா… தலைசுத்துது நான் பஸ்ல வீட்டுக்கு போறேன்னு என்கிட்ட சொல்லிட்டு பொய்ட்டான்னு சொல்லிருவேன்… நீங்களும் அப்படியே சொல்லுங்க நீங்க சொன்னா நம்புவாங்க"

தேவியை விசித்திரமாக விழி சுருக்கி தாடை இறங்க பார்த்தான், அவளோ, "ஏன் என்ன அப்படி பாக்குறீங்க"

"இல்ல… ஒரு நிமிஷத்துல எவ்வளவு பெரிய பொய்ய சாதாரணமா கோர்வையா சொல்லிட்ட… நீ சொல்ற விதத்துல போலீஸ் கூட நம்பும். ஆனா என் கவலை அத பத்தி இல்ல… இன்னும் கொஞ்ச நேரத்துல நீ மிஸஸ் தேவிகா ஶ்ரீராம் ஆகிடுவ அப்பறம் என்கிட்ட என்னன்ன சொல்லி என் தலைய உருட்ட போறியோன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்"

அவன் சொல்லி முடிக்க அவள் வாய் திறந்து கொண்டது, 'ஆகா… நம்மள கண்டுகிட்டானே… இவன் அறிவாளிதான்… நம்ம பருப்பு இவங்கிட்ட வேகாதோ… இப்படி இருந்தா நாங்க எப்படி உருட்டி பொழைக்குறது' இப்போது அவள் கவலை கொள்ள தொடங்க, அங்கு அவர்களை நோக்கி மேலிருந்து வேகமாக கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன். அவனுடன் புகைப்படக்காரர்கள் சேர்ந்து இறங்க, 'அடுத்து என்ன' என்பது போல ராமும் தேவியும் திரும்பினார்கள்.
 
Last edited:
வந்தியதேவனும் குந்தவையும்


அத்தியாயம் 2

அந்த இளைஞன் அருகில் வர, ராமுக்கு யாரென்று தெரிந்தது, அவன் அர்ஜுன் ராமிற்கு சித்தி மகன் தேவிக்கு சின்ன அத்தையின் மகன், சுஜாவின் உடன்பிறந்த தம்பி.

அவன் அருகே வந்ததும், ராம், "அர்ஜுன் எதுக்கு இப்படி ஓடி வர்ற என்னாச்சி, எல்லாரும் வந்துட்டாங்களா?"

"அண்ணா இவ என்ன ஏமாத்திட்டா அண்ணா" என்றபடி ராமின் தோலில் சாய்ந்தவனின் உடல் குலுங்கியது.

ராமுக்கு ஒன்றுமே புரியவில்லை, தேவியை பார்த்து, "அழுறான் போல" என்றான்.

தேவிக்கு தலை சுற்றிக்கொண்டு வந்தது. அவள் அவர்கள் அருகே சென்று, "அஜூ என்ன பேசுற எனக்கு ஒண்ணுமே புரியல… நான் என்ன பண்ணினேன் உன்னை… நிஜமா நீ அழுறியா" கேட்டாள்.

சட்டென அவன் நிமிர்ந்து அவளை முறைத்தான், "உன்கிட்ட நான் பேச விரும்பல, நான் எங்கண்ணன் கிட்ட நியாயம் கேட்டுக்குறேன் ஹோப் கொடுத்துட்டு இப்ப உன்ன கல்யாணம் பண்ணிக்க போரா அண்ணா"

அவன் சொல்ல ராமின் கண்கள் விரிந்து தேவியை பார்த்தது, தேவியோ பிளந்தபடி அதில் கை வைத்து இல்லை என்று தலை ஆட்டினாள். இருவரின் முகமும் வெளிரிவிட்டது, ராம் ஒரு வினாடி கண்களை மூடித் திறந்தவன் அவர்களை சுற்றி படம் பிடித்துக் கொண்டிருந்த புகைப்படக்காரர்களை கவனித்தான்.

"இப்ப இத எதுக்கு கவர் பண்ணிக்கிட்டு இருக்கீங்க" என்று கேட்க தேவிக்கு அப்போது தான் மூளையே வேலை செய்தது.

"அஜு… எங்கள வச்சி பிராங்க் வீடியோ கிரியேட் பன்றீயா?"

"நான் எதுக்கு பிராங்க் பண்ணனும். 3 மாசம் முன்னாடி நீ என்ன சொன்ன ஞாபகம் இருக்கா…" அவன் வானத்தை நோக்கி பார்த்தான், கூடவே இருவரும்.
"இப்படி ஊரு ஊரா மாமா உனக்கு மாப்பிள்ளை தேடி அலையுரதுக்கு நானே உன்ன கல்யாணம் பண்ணிக்குறேன் நீ என்ன சொல்ற… இது நான் கேட்டேன் அதுக்கு நீ, 'நீ என்னவிட 6 மாசம் சின்னபையன் அப்பா ஒதுக்க மாட்டாங்க இல்லன்னா எனக்கு ஓகே தான்' இப்படி ஹோப் குடுக்குற மாதிரி என்கிட்ட ஃபோன்ல கடலை போட்டியா இல்லையா" என்று சிரிப்பை சங்கடப்பட்டு அடக்கி கொண்டு பேசிய அர்ஜுனை கண்டுகொண்டான் ராம் ஆனால் முகத்தை இறுக்கமாகவே வைத்திருந்தான்.

"டேய் முட்டாபயலே… எத கொண்டு வந்து எங்க சொருகுற… அன்னைக்கு நீ என்ன கலாய்சே நான் உன்ன களாய்ச்சென் அதுக்கு அப்பறம் நான் பேசுனது எல்லாம் எடிட் பண்ணிட்ட…" கத்தினாள் தேவி.

"எக்ஸ்பிளைன் பண்ண தேவை இல்ல தேவி, அர்ஜுன் வா நாம மாமா கிட்ட சொல்லலாம் அவர் பாதுப்பார் உன்ன" என்று ராம் அர்ஜுன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தான்.

தேவி அதிர்ச்சியில் அவனை பெயர் சொல்லி அழைத்துக்கொண்டு அவன் பின்னால் ஓடினாள். ராம் அவளை திரும்பிப் பார்த்து, "இப்ப நீ முருகான்னு கடவுளை தான கூப்பிடனும் எதுக்கு ராம்ன்னு சொல்ற… அதுக்குள்ள இஷ்ட தெய்வத்தை மாத்திட்டியா" என்று அவன் சிரித்தான். அவளுக்கோ அவன் மனநிலை புரியவில்லை, விட்டுக்கொடுக்க போகிறானா இல்லை கிண்டல் செய்கிறானா என்கின்ற தவிப்பு.

அதற்குள் அர்ஜுன் கதற ஆரம்பித்துவிட்டான், "அண்ணா என்ன உட்டுருன்னா என்ன அந்த கோவக்கார மாமாகிட்ட மட்டும் கூட்டிட்டு போயிடாதண்ணா அவரு நான் சும்மா பிராங்க் தான் பன்னேன்னு தெரிஞ்சா தங்கச்சி பையன் கூட பாக்காம தோல உரிச்சுடுவாரு அண்ணா… பிளீஸ் இனிமே இப்படி பண்ணமாட்டேன், தாயே தேவி கைய விட சொல்லுடி வலிக்குது" அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே ராம் அர்ஜுன் கையை குறுக்கிக் கொண்டிருப்பதை பார்த்தாள் தேவி. அவள் வாய் திறப்பதற்குள் ராம் அவன் கையை விட்டு அவன் மூக்கில் பலம் இல்லாமல் குத்தினான்.

"இப்ப குத்துனதையும் சேர்த்து விடியோ ஏடிட் பண்ணி மீடியால அப்லோட் பண்ணுங்க நியூஸ் சேனல்ல போடட்டும்" என்று சொல்ல தேவிக்கு தான் கூத்தாக இருந்தது. அவள் பங்கிற்கு அவளும் அவன் தலையில் இரண்டு கொட்டு வைத்துவிட்டு, "மூக்கு விடப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க தோணும், அதான் மூக்குல குத்திட்டாரு சிறப்பு, உன்ன இருடி உன் கல்யாணத்துல வச்சி செய்றேன்"

ராம் "சரி டைம் ஆயிடுச்சு தேவி இனி இங்க நிக்க வேண்டாம் பரிகாரமும் வேணாம் வா மேல வேகமா ஏருவோம்" என்று அவன் நடக்க ஆரம்பிக்க அவளும் அர்ஜுனை திட்டியபடி பின்னே நடந்தாள்.

கோயிலில் எல்லோரும் இவர்களுக்காக காத்துக்கொண்டிருக்க, கூடவே அந்த மாவட்டத்தின் எம். பி. ராஜமாணிக்கம் நின்றிருந்தார். கூட்டத்தில் ஒருவர், "இவரத்தான் ஆறுமுகம் ஐயா குடும்பமே ஒதுக்கி வச்சுடுச்சுன்னு கேள்விப்பட்டேன் இவர் என்னடான்னா இங்க நிக்குறாரு"

இன்னொருவர், "அது பொண்ணு வீட்டு பக்கம்… இப்ப மாப்பிள்ளை பேச்சுதான எடுபடும், மாப்பிள்ளை இவர கூப்பிட்டா தான் தாலியே கட்டுவேன்னு சொல்லிட்டான் போல அதான் போய் கூப்பிட்டு வந்திருக்காங்க இவரும் கட்சி வேலையும் எலக்சன் பிரச்சாரமும் ஆறுமுகம் ஐயா குடும்பம் செஞ்சாதான் வருவேன் சொல்லிருக்காரு, அதுக்கும் ஆறுமுகம் ஐயா குடும்பம் ஒத்துகிட்டாங்க ஒரு பொம்பலபுள்ள வாழ்க்கைன்னு வந்தவுடனே கொள்கையாவது கூந்தலாவது அப்படின்னு தூ
க்கிப்போட்டாச்சு" என்று சிரித்தார்.
 
வந்தியதேவனும் குந்தவையும்
அத்தியாயம் 3

ஆறுமுகசாமி, இவர் அந்த குடும்பத்தின் முக்கியப்புள்ளி. இவரை கொண்டுதான் அந்த குடும்பத்திற்கு அரசியல் அறிமுகம். தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் திருச்செந்தூர் அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர். அந்த வட்டாரத்திலேயே மிகப் பெரிய செல்வந்தர். சிறு வயதிலேயே அவருக்கு அரசியல் தலைவர்களின் மேடை பேச்சை கேட்டு அரசியல் மேல் நாட்டம் வந்தது, அதனால் வளர்ந்த பின் தன்னை அப்போது ஆளும் தேசிய கட்சியில் இணைத்துக் கொண்டார். அதற்கு பிறகு, மக்களுக்கு கட்சியின் பெயரில் தொண்டாற்றி கட்சியிலும் தென் மாவட்ட மக்கள் மனதிலும் தனக்கான இடத்தை பிடித்து கொண்டார்.

அவர் தந்தைக்கு பிறகு சொத்துக்களை கவனிக்கும் பொறுப்பும் இவருக்கு வந்து சேர, அதையும் செவ்வனே செய்து, பெருக்கவும் செய்து இருந்தார். அரசியலிலும் தொழிலிலும் சிறந்து விளங்கியதால் அவரை தேடி கட்சி பதவியும் அரசாளும் பதவியும் வந்தது. முதலில் எம். எல். ஏ. ஆக ஆரம்பித்தது, பின் 3 முறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சில காலம் முதலமைச்சராக கூட பதவி வகித்திருக்கிறார்.

இப்படிப்பட்ட அரசியல்வாதிக்கு குடும்பத்தின் ஆதரவு இல்லை எனில் ஒருக்கை உடைந்த நிலைதான். ஆனால் அவர் குடும்பம் அவருக்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக இருந்தனர். மனைவி செல்லத்தாயி கணவரின் சொல்லுக்கினங்க பண உதவி, பசிக்கிறது என்று வருவோருக்கு இல்லை என்று என்றுமே சொன்னது கிடையாது. அது போல பிள்ளைகளும் தந்தையின் பதவியை காட்டி குறுக்கு வழியில் எதையும் செய்தது இல்லை, அதுதான் ஆறுமுகத்தின் விருப்பமும் கூட. சொத்தை கவனிக்க அவர் இருக்க மகன்கள் தாங்களாக அவர்கள் படிப்புக்கு ஏற்ற வேலை தேடிக் கொண்டார்கள்.

அவர் மூத்த மகன் குமரவேல் வி.ஏ.ஓ. ஆக இருந்து இப்போது ஓய்வில் இருக்கிறார். மனைவி வேலம்மாள், மூத்த மகன் விநாயகம் மனைவி குழந்தையுடன் பெற்றோருடன் வசித்து வருகிறான். மகள் கிருஷ்ணவேணி வெளியூரில் கணவர் குழந்தைகளுடன் இருக்கிறாள். கடைசியாக மகன் சுரேஷ் சமீபத்தில் தான் காதல் திருமணம் செய்து இருந்தான்.

ஆறுமுகசாமியின் மூத்த மகள் ராஜேஸ்வரி, அவர் கணவர் சந்திரமூர்த்தி, சென்னையில் கன்ஸ்டிரேக்சன் கம்பெனி நடத்துகிறார். அவர்களுடைய மூத்த மகன் ரகுராம் தந்தையுடன் இணைந்து பணி செய்கிறான், மனைவி பிரியா இரு பிள்ளைகள். இளைய மகன் ஶ்ரீராம் அனிமேஷன் அண்ட் மொபைல் கேம்ஸ் கம்பெனி நடத்துகிறான். சொல்ல மறந்துவிட்டேன் இவன் தான் முன்பு சொன்ன கதாநாயகன்.

அடுத்த மகன், சரவணன், இ.பி.யில் பணியாற்றுகிறார். மனைவி மீனாட்சி அவர் இயற்க்கை எய்தி சில வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதிக்கு இரு மகள்கள். மூத்தவள் துர்கா திருமணமாகி கணவன் குழந்தைகளுடன் உள்ளூரில் வசிக்கிறாள். இளையமகள் தேவிகா, நம் கதாநாயகி.

ஆறுமுகத்தின் கடைசி மகள் சீதாலட்சுமி, இவர் கணவர் மகள் சுஜா மகன் அர்ஜுன். மதுரையில் வாழ்கிறார்கள், சுஜாவுக்கு திருமணம் ஆகிவிட்டது.

தந்தை எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பதுபோல் குமரவேலும் சரவணனும் தங்கள் பிள்ளைகளை வளர்த்தனர். ஆறுமுகசாமி வாரிசுகள் அரசியலில் நாட்டம் கொண்டவர் இல்லை. அது போல கட்சியில் இருந்தாலும் எந்த மகன்களும் பேரன்களும் கட்சியில் இருந்தாலும் பதவிக்கும் ஆசைப்படவில்லை முழுநேர அரசியலிலும் ஈடுபடவில்லை.

ஆறுமுகசாமிக்கு பின்னர் அந்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் தான் இந்த ராஜமாணிக்கம். ஆறுமுகசாமியின் ஒன்றுவிட்ட தம்பி மகன், ஆறுமுகசாமியிடம் நன்மதிப்பை பெற்று கட்சியிலும் வளர்ந்தார். அதனால்
ஆறுமுகசாமிக்கு பின்னர், கட்சி பதவியும் எம்.பி. பதவியும் அவரை தேடி வந்தது.

என்னதான் பெரிய பதவியில் இருந்தாலும் சொந்த ஊரிலும் சுற்று வட்டாரத்திலும் ஆறுமுகசாமி அலை இன்றும் ஓயவில்லை. அதற்கு அவர் குடும்பம் இன்றுமே அவர் பெயரில் செய்யும் கொடையின் தாக்கம் தான் காரணம், அது என்றுமே மறையாது. அந்த மக்களுக்கு ஊழல் செய்யும் ராஜமாணிக்கத்தைவிட தந்தைக்காக அவர் வாழ்ந்த வீட்டையே மணிமண்டபமாக்கி அழகு பார்க்கும் மகன்கள் ஒருபடி மேல்தான். விளைவு அவர்கள் யாருக்கு ஓட்டு போடச் சொல்லி பிரச்சாரம் செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் மக்கள் வாக்களித்து பழகி இருந்தனர். இதனால் ராஜமாணிக்கத்திற்கு சொந்த ஊரில் கதாநாயகனாக வலம் வர முடியாத நிலை.

அவர் என்னதான் ஊழல்வாதியாக இருந்தாலும் கட்சிக்காகவும் குடும்ப உறுப்பினர் என்பதாலும் கூடதலாக ஆறுமுகத்தின் மரியாதைக்காகவும் அவருக்காக ஆறுமுகத்தின் மகன்கள் அவர்கள் கட்சி சின்னத்தில் ஓட்டு கேட்பர். அதன்படி தொடர்ந்து 2 முறை எம்.பி. ஆக இருந்த ராஜமாணிக்கம் இப்போது ஒன்றிய அமைச்சகத்தின் கேபினட் மினிஸ்டர் ஆகிவிட்டார்.

ஆனால் சமீபத்தில் அந்த மாவட்டத்தில் நடந்த ஒன்றிய அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டத்தில் மக்களை துப்பாக்கிமுனையில் களைக்க முனைந்த காவல்துறை கடைசியில் சிலரை சுட்டுக் கொன்றிருந்தது. இதை கண்டு பதறினர் ஆறுமுகசாமி குடும்பம், அவர்களுக்கு அந்த மக்களை நன்கு தெரியும். இதை செய்ய காரணம் மத்தியில் ஆளும் அவர்கள் கட்சியும் ஆணை பிறப்பித்தது ராஜமாணிக்கம் என்றும் தெரியவர கட்சியிலிருந்து வெளியேறிவிட்டோம் எனவும் இனி ராஜமாணிக்கம் எங்கள் குடும்ப உறுப்பினர் கூட இல்லை எனவும் பகிரங்கமாக அறிவித்தனர். கட்சி எவ்வளவோ முயன்றும் அவர்கள் முடிவை நேற்றுவரை மாற்றவில்லை.

ஆனால் இன்று ராஜமாணிக்கம் உறவினராக மட்டுமில்லாமல் கட்சி சார்பாவும் அந்த திருமணத்தில் கலந்துக் கொள்ள முழு காரணம் அந்த குடும்பத்தில் மாப்பிள்ளையாக

நுழையப்போகும் ராம் தான்.
 
வந்தியதேவனும் குந்தவையும்

அத்தியாயம் 4

ஐயர் மந்திரம் ஓதி ராம் முன் தட்டை நீட்ட அவனுக்கு அந்த தாலியை தொடுவதற்கே சங்கடமாக இருந்தது. மனதில் அத்தனை சிந்தனைகள், 'இனி எல்லாம் இவள்தானா? இஷ்ட்டப்படி இருக்க முடியாதே… எல்லாவற்றிற்கும் இவளிடம் பதில் சொல்ல வேண்டுமே… கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை கால்ல சலங்கை கட்டி திங்குதிங்குன்னு ஆடிச்சாம்… இரு இப்ப சம்பந்தமில்லாமல் இந்த சென்டன்ஸ் ஏன் என் மைண்ட்ல வருது' என்று அவன் சிந்தனை எங்கெங்கோ போக அதன் போக்கை நிறுத்தும் வண்ணம் அவன் அருகில் இருந்த அவன் தாய் ராஜி அவனை உழுக்கினார்.

"மாப்பிள்ளை அதுக்குள்ள கனவுக்கு போய்ட்டாரு" என்று யாரோ கிண்டல் செய்து சிரிக்க, அதற்கு சுரேஷ், "தாலிய தொடுறதுக்கு முன்னாடி எதிர்காலம் கண்ணுல வந்து போகுமா இல்லையா, டேய் மாப்புள கடந்தகாலத்தில நடந்த சந்தோஷமான நினைவ நினச்சுக்கோடா இனி அது மட்டும்தான் நமக்கு இருக்க போகுது" என்று எல்லோரையும் கையடித்து சிரிக்க வைத்தான். ஆனால் அங்கே ஒரு ஜீவன் மட்டும் அவனை பார்த்து முறைத்தார், அது தான் தேவியின் தந்தை சரவணன்.

எல்லோரும் இப்படி இருக்க தேவி இந்த உலகத்திலேயே இல்லை. அவள் கைகள் வியர்த்து இருந்தது, வயிற்றில் பயப்பந்து உருண்டுக்கொண்டிருக்க அது எப்போது வேண்டமானாலும் அதன் வேலையை காட்டிவிடும் என்ற நிலையில் அவள் மூச்செடுக்கவே மறந்திருந்தாள். என்னதான் சொந்தத்தில் திருமணம், அத்தைமகன், அவளை மகளாய் பாவிக்கும் ராஜி அத்தை வீட்டுக்கு தான் செல்ல போகிறாள் என்றாலும் அவளுக்கு ஏனோ அந்த சூழ்நிலை அழுத்தமாகத்தான் இருந்தது.

'கெட்டிமேளம் கெட்டிமேளம்' என்று கத்த, மேல வாத்தியம் முழங்க, கணநேரத்தில் தாலியை எடுத்து தேவியை பார்க்காமல் ராம் அவள் கழுத்தில் இரு முடிச்சிட மூன்றாவது முடிச்சிட்டாள் சுஜா. தேவி குணிந்திருந்ததால் கழுத்தில் விழுந்த தாலியை பார்க்க, "முடிஞ்சுடுச்சு" என்று வாய்விட்டே சத்தமே இல்லாமல் சொல்லிவிட்டு நிமிர்ந்தவளின் நெற்றியில் குங்குமம் வைத்தான் ராம். அந்த நொடி இருவர் கண்களும் சந்தித்துக் கொள்ள அது உண்மையில் தர்மசங்கடமாக உணர்ந்த இருவரும் சட்டென பார்வையை வேறெங்கோ திருப்பினர். 'இவ்வளவு நேரம் நல்லாதான பேசிட்டு இருந்தோம் இப்ப என்னாச்சி' என்று அவள் நினைக்க, அவன் மனதிலோ, 'யு கான்ட் மேரி அ பென்சன் ஹூ யு ஜஸ்ட் மெட்' என்ற வரி அடியாழத்தில் தோன்றியது.

மொத்த சொந்தமும் சிரிப்பும் கேலியுமாக அவர்களை கோயிலைவிட்டு வெளியே அழைத்து வந்தனர். அவளை அம்மியில் கால் வைக்க சொல்லி அவனிடம் மெட்டியை கொடுத்தார்கள். ராம் குனிந்து ஒற்றை கால் நிலத்தில் பட மண்டியிட்டு, இடக்கையால் அவள் பாதவிரல் பற்ற, அது தானாக மடங்கி நீண்டது. அவன் சட்டென அவள் முகம் பார்க்க அதுவோ எல்லாவித எதிர்மறை உணர்ச்சிகளையும் அப்பட்டமாக காட்டியது. 'கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம்மக்கிட்ட வாய் பேசிட்டு வந்தவ இவதானா' என்ற சந்தேகப் பார்வை அவன் வீச, அவள் அவனை நோக்கினாள்.

"சாரி… கேன் ஐ…" அவன் கேட்க அவள் புரியாமல் நின்றாள்.

சந்திரமூர்த்தி (ராமின் தந்தை), "நல்ல நேரம் முடியபோகுது என்ன பண்ற ராம்" என்று எல்லாம் சரியாக நடக்க வேண்டும் இல்லை அவர்தான் ராஜமாணிக்கத்திற்கு பதில் சொல்ல வேண்டும் என்கிற பதட்டத்தோடு கேட்டார்.

ராம் அவர் புறம் திரும்பவே இல்லை, மாறாக அவன் இடக்கையை தூக்கிக் காட்டி, "காலை பிடிச்சுப் போடலாமான்னு கேட்டேன்" அவளின் விழிகளுக்கு பதிலுரைத்தான்.

அவளுக்கு அதிர்ச்சியில் விழி விரிய, அங்கிருந்த சிரியவர்களோ, "ஓஹான்னானா…." என்றபடி சிரிக்க, பெரியவர்களுக்கு கூட வெட்கம் வந்தது.

"தேவி மெட்டி போடக் கூட உன் புருஷன் உன்கிட்ட பெர்மிஷன் கேக்குறான், இனி எல்லாம் உன் விருப்பம்தான் சொல்லாம சொல்லிட்டான்" என்று சீதாலஷ்மி அன்போடு சொன்னார்.

"நல்லாத்தான் ஸ்கோர் பண்ற தம்பி, ஆனா உன்னால நாங்க தான் இப்போ நல்லா சிக்கிட்டோம்" என்று தேவியின் அக்கா துர்கா கணவன் ஹரி சொல்ல, துர்கா அவனை முறைத்தாள்.

சுஜா அருகில் இருந்த அர்ஜுனின் தலையில் தட்டி, "கத்துக்கோடா அண்ணங்கிட்ட இருந்து… ஆஃபீஸ்ல ஒரு பொண்ண கரெக்ட் பண்ண துப்பில்ல… அட்லீஸ்ட் ஒரு பிராங்க் ஆவது ஒழுங்கா பண்ணியா? அடிவாங்கிட்டு வந்துருக்கான்… வளர்ந்த
குழந்தை" என்று திட்டினாள்.

தேவி சுற்றி பேசுவதை பார்த்து சிரித்துக் கொண்டு இருக்க, கிருஷ்ணவேணி, "சரி இப்படியே பேசிக்கிட்டு இருந்தா எப்படி… தேவி ராமுக்கு பதில் சொல்லு அவன் எவ்வளவு நேரம் அப்படியே இருப்பான்" என்று எல்லாருக்கும் ஞாபகப்படுத்தினாள்.

தேவி சட்டென திரும்பி பார்க்க அவள் எண்ணத்தை பிரதிபலித்தாள், ரேஷ்மா, "அவ பதிலுக்கு வெயிட்டிங்?... அப்போ அவ வேண்டாம்னு சொன்னா விட்டுறுவீங்களா? தேவி வேண்டாம் சொல்லு மாப்பிள்ளை மூக்க உடச்சிரலாம்" என்று ஹைபை கொடுக்க கையை உயர்த்த தேவி மென்சிரிப்புடன் அவள் உயர்த்திய கையைப் பிடித்து இறக்கிவிட, ராம் அதை பார்த்துவிட்டு தேவியின் பாதம் பற்றி மெட்டி அணிவித்துவிட்டு எழுந்தான்.

ரேஷ்மா, "அவதான் பதில் சொல்லலையே அப்பறம் எப்படி போட்டீங்க"

"எனக்கு தேவையான ரியாக்ஷன் கிடச்சிடுச்சு அவ நார்மல் ஆயிட்டா அது போதாதா… தவிர என் மூக்க உடைக்க அவளுக்கு விருப்பமில்லைனு உங்க கைய இறக்கிட்டா… இதுக்குபிறகும் அவ சொல்லித்தான் ஆகனும்னு எனக்கு அவசியமில்லை"

"அட அட அட.. இதுவல்லவோ கெமிஸ்ட்ரி… குடுத்து வச்சவ தேவி நீ… நாங்க எல்லாம் வாய தொறந்து சொன்னா கூட புரியாது" என்று விநாயகம் மனைவி சரண்யா கணவனை முறைத்தாள்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரகுராம் (ஶ்ரீராமின் அண்ணன்) அவன் மனைவி பிரியா அருகில் வந்து, "ராம்க்கு தேவிய பிடிச்சிருக்கு போல அதான் இப்படி நடந்துக்குறான் நான் கூட ரொம்ப பயந்தேன்… எப்படியோ அவனும் அவளும் நல்ல இருந்தா சரி" என்று அவன் மனதில் பட்டதை அவள் காதில் கிசுகிசுக்க, அவள் சட்டென அவனை நோக்கி திரும்பி, "உங்க தம்பிய நீங்க நம்புறீங்களா… இது எல்லாம் உண்மைனு நீங்க உங்க ஆழ் மனசுல நம்ப வச்சுக்கோங்க ஆனா என்ன நம்ப வைக்க பாக்காதீங்க… ராம் ஃப்லர்ட் கிங், ஆஸ்கார் அவார்ட் டைப் ஆக்டர்னு எங்களுக்கு தெரியும்… எனக்கு அந்த பொண்ணுக்கு பாவம் செய்றோம்னு தோணுது… உண்மையிலேயே தேவி பாவம்" என்று அவள் சொல்லி முடிக்கவில்லை, அவள் சொன்ன கடைசி வார்த்தைகளை மட்டும் அவர்களை கடந்து போன அர்ஜுன் காதில் விழ, "என்ன தேவி பாவமா… அவ ஹீரோயின் வேஷத்துல இருக்குற வில்லி… அவகிட்ட வம்பு வச்சுகிட்டோம் அவ்வளவுதான்… நான் விளையாட்டுக்கு சொல்லல… என்ன பொறுத்தவரைக்கும் ராம் தான்
பாவம்" என்று அவன் முடித்துவைத்தான்.
 
வந்தியதேவனும் குந்தவையும்

அத்தியாயம் 5

திருமணம் முடிந்த கையோடு சாப்பிட்டு விட்டு ராம் வீட்டார் தேவியை அழைத்துக் கொண்டு சென்னை கிளம்பிவிட்டனர். அவர்கள் கூடவே பிறந்த வீட்டு சார்பாக துர்காவும் கணவன் பிள்ளைகளோடு தேவியை விட சென்றாள். தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் ஏறி சென்னை சென்றாகிவிட்டது.

என்னதான் சின்ன வயதில் அத்தை வீட்டை தேவி பார்த்திருக்கிறாள் என்றாலும் இனி அந்த வீட்டில் தான் வாழப்போகிறோம் என்று நினைக்கும்போது அவளுக்கு இனம் புரியாத உணர்வு, அன்று பார்த்தது போல அரண்மனை போன்றுதான் இன்றும் இருந்தது கூடுதலாக இந்த காலகட்டத்துக்கு ஏற்றாற்போல் சில அலங்காரப் பொருட்களும் சேர்ந்து இன்னும் பிரமிப்பை கொடுத்தது.

மணமக்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச்சென்றனர். தேவியால் விளக்கு ஏற்றப்பட்டப்பின், எல்லோருக்கும் நிம்மதி பரவியது, ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில்…

ரகு, "பாதி கிணறு தாண்டியாச்சுப்பா" என்று மூர்த்தியிடம் சத்தமில்லாமல் சொல்ல அதை அருகில் இருந்து கேட்ட ராமுக்கு முகம் இறுகியது. உடனே அவன் வெளியே போக, ராஜி, "டேய் எங்க போற" என்று கத்த, மூர்த்தி, "அவனை விடேன் வெளிய போய்ட்டு வந்துடுவான் சம்பிரதாயம் தான் முடிஞ்சுதே, ஃப்ரீயா விடு" என்று சலிப்புற்றார்.

"அவனை சொன்ன உங்களுக்கு பொறுக்காதே… எல்லாரும் இருக்காங்களே அவன்பாட்டு போறானேன்னு கேட்டா… அதுசரி வழக்கம் போல எனக்கு ஒன்னும் தெரிய போறது இல்லை. எங்க கூட இன்னொரு ஆள் சேர்த்தாச்சு, புது மருமகளே ஜாயின் த கிளப்" என்று திருதிருவென விழித்துக் கொண்டு நின்றிருந்த தேவியை பார்த்து கொஞ்சம் கவலையும் சலிப்பும் கிண்டலும் கலந்த குரலில் சொன்னார் ராஜி.

தேவி மெல்லிய புன்னகை புரிந்து, "ஆரம்பமே அமர்க்களமா இருக்கே அத்தை இன்னும் என்னன்ன சர்ப்ரைஸ் இருக்கு நான் தாங்கனும் கொஞ்சம் கருணை காட்டுங்க பிளீஸ்" என்று வேண்டுமென்றே நக்கல் பேசினாள். அதை கேட்டு பதில் சொல்ல முடியாமல் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்க்க, மூர்த்தி தான் அவளை அவதானித்தபடி பதில் கூறினார்.

"ஆமாமா இன்னும் நிறைய ஸ்வீட் சர்ப்ரைஸ் இருக்கு தேவிமா அதெல்லாம் மெதுவா பாத்துக்கலாம், ராஜி பிள்ளைங்க களைப்பா இருப்பாங்க கூட்டிட்டு போய் ரூம் காட்டு ரெஸ்ட் எடுக்கட்டும்" அவர் மேலும் தேவை இல்லாத பேச்சு வரக்கூடாது என்று நினைத்து அந்த இடத்திலிருந்து எல்லோரையும் அவரவர் அறைக்கு கிளப்பினார்.

தேவிக்கு தனியறை கொடுக்கப்பட்டது துர்காவுக்கு வேறு அறை. சிறிய அறை, பெரிதாக எந்த அலங்காரங்களும் இல்லை, விருந்தினருக்கு கொடுக்கப்படும் அறை போல அவளே நினைத்துக் கொண்டாள். நேராக சென்று கட்டிலில் சாய்ந்து காலை அதில் நீட்டியபடி இருந்தாள். இப்போது அவளுக்கு துணை இருந்தது அவளுக்கு மிகவும் பிடித்த தனிமை மட்டுமே. இதைத்தானே பல நாட்களாக தேடி களைத்திருந்தாள் அவள். இன்று எல்லா ஆரவாரங்களும் முடிந்தபின் தானாக வந்து அவளிடம் சேர்ந்துவிட்டது. கொண்டாட வேண்டாமா, அவளால் முடியவில்லை, கண்களை மூடியிருந்தாள், மனதின் ஓரத்தில் நடந்த நிகழ்வுகள் குடைந்துகொண்டிருக்க, அவள் சிந்தை, 'இந்த கதையோட முடிவு இந்த கல்யாணம் தான்னு நினச்சேனே ஆனா இன்னைக்கு நடந்ததை பார்த்தா அப்படி தோணலை இது எங்க எப்படி போய் முடியுமோ…' என்று முடிவை நோக்கி யோசித்துக் கொண்டே இருக்க, மனதோ கதையின் தொடக்கத்தை அசைப்போட்டது.

ஒரு உறவின் முடிவில் தொடங்கியது இந்த கதை. ஆம், ராஜமாணிக்கம் எங்கள் குடும்ப உறுப்பினர் இல்லை என்று குமாரவேலும் சரவணனும் அறிவித்துவிட்டு வந்த மறுநாள் ராஜமாணிக்கத்திடம் மீடியாக்கள் மைக்கை நீட்டி இருந்தனர்.

"முன்னாள் அமைச்சர் ஆறுமுகசாமி குடும்பம் உங்களை ஒதுக்கி வைக்குறதா அறிவிச்சிருக்காங்களே அதை பற்றி உங்கள் கருத்து என்ன சார்"

"இது குடும்ப பிரச்சினை அதுல சொல்ல ஒன்னுமில்லை"

"அதுக்காக கட்சிய விட்டே போகுறதா சொல்றது நெருடல் இல்லையா சார். அந்த ஊர்ல நடந்த துப்பாக்கச்சூடுக்கு நீங்கதான் காரணம் அது தெரிஞ்சுதான் அவங்க இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்குறதா பேச்சு வருதே… இது எப்படி குடும்ப பிரச்சனையா மாறும்"

"பேச்சு எப்படி வேணும்னாலும் திரியலாம் ஆனா உண்மையான காரணம் சம்பந்தப்பட்டவனுக்கு தான் தெரியும். பகைக்கவே கூடாத இரண்டு விஷயங்கள் அந்த வீட்டுல இருக்கு, அதுல பிரச்சனை வந்து என்னன்னு கேக்க போன என்ன இப்படி ஒதுக்கி வச்சிட்டாங்க, சீக்கிரம் சரியாகும்"

"அது என்ன இரண்டு விஷயங்கள், கட்சிய விட்டு போக காரணம்"

"காதலும் ஜாதியும்… ஆறுமுகம் ஐயா தன் மேல ஜாதி சாயம் பூசுறாங்க அதை தடுக்கணும்ன்னு அன்னைக்கு பெற்றோர் இல்லாம ஆசிரமத்தில் படிச்ச ஜாதி தெரியாத சந்திரமூர்த்திக்கு தான் பொண்ணு ராஜேஸ்வரிய கட்டி கொடுத்தார். ஜாதிய பெருசா மதிக்காதவர் எங்க பெரியப்பா, ஆனா அவரைப்போல அவங்க பசங்க இருப்பாங்கன்னு நினைத்துதான் என் தப்பு. வீட்டு பொண்ணு காதல்னு வர்ற வரைக்கும் எல்லாரும் ஒண்ணுதான் எல்லாருக்கும்… இவ்வளவு பெரிய தேசிய கட்சியில இருந்துட்டு இப்படி அடிப்படை புரியாம யோசிக்கிறாங்க, இதை புரியவைக்க பார்த்தா எங்களுக்கு விரோதமாக இருக்குற கட்சியே வேண்டாம்னு போய்ட்டாங்க. இப்போ மாமன்னன் பட ரத்னவேல் போல இருக்காங்க நாம சொன்னாலும் புரியல எனக்கு கோவம், உண்மையிலேயே மனஸ்தாபம் வந்துடுச்சு, இதுக்கு மேல குடும்பப் பிரச்சனையை கிளராதீங்க" என்று கையெடுத்து கும்பிட்டு பேட்டியை முடிக்க, அதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த சரவணன் அரிவாளை எடுத்து "அவனை கொல்லாம விடமாட்டேன்" என்று வாசலை நோக்கி செல்ல, அவரை இழுத்து பிடித்து சமாதானம் செய்தது என்னவோ குமாரவேலும் விநாயகமும் தான்.

அந்த நேரம் தான் அவர்கள் வீட்டை அடைந்திருந்தார் சந்திரமூர்த்தி. அவரோ வந்ததும் வராததுமாக வெளியே நின்ற அனைவரையும் பார்த்து, "என்ன சரவணா வெளிய நின்னு சத்தம் போட்டுட்டு இருக்க… ஏற்கனவே குடும்ப மானத்தை ஒருத்தன் வாங்கிட்டான் இதுல நீ வேறையா, மச்சான் நீங்களும் இப்படி நிக்குறீங்களே" என்று எல்லோரையும் உள்ளே அழைத்துச் சென்றார்.

எல்லோரும் மூக்கு விடைக்க கோபத்துடன் தான் அமர்ந்திருந்தனர். விநாயகம், "சித்தப்பா அவன் சென்னைல உக்காந்து பேட்டி குடுத்துட்டு இருக்கான் நீங்க இங்க அருவாளை தூக்கிட்டு இருக்கீங்க, அவன் ஊர் பக்கம் வரட்டும் எல்லையிலையே போடுறேன், நம்ம வீட்டு பொன்ன அவன் அரசியலுக்கு பயன்படுத்துவானா அவன் வாயிலேயே வெட்டுறேன்" என்று கொத்தித்தான்.

"என்ன பேச்சு இது வெட்டுவேன் குத்துவேன்னு… ஆமா ஏதோ காதல் கீதல்ன்னு உளருனானே அது என்ன" இது மூர்த்தி.

குமரவேல், "நீயே இப்படி கேக்குறியே மூர்த்தி இனி ஊரே பேசுமோ பயம்மா இருக்கு, ஏற்கனவே அவளுக்கு மாப்பிள்ளை அமையமாட்டேங்குதேன்னு கவலையா இருக்கோம் சண்டாளன் இப்படி ஊர் பேசும்படி பண்ணிட்டானே… ஆமா நீ எப்படி இங்க வந்த?"

"அது இந்த ஒரு கவர்மென்ட் கன்ஸ்டிரக்ஷன் வொர்க் டெண்டர் விட போறாங்க அதான் அது என்னது பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன். அப்படியே இங்க வரலாம்ன்னு வந்துட்டு இருந்தேன் ஃபோன்ல பேட்டி பாத்துட்டு வந்தேன் எனக்கும் வருத்தம்… சரவணா எதும் பேசு இப்படியே இருந்தா என்ன அர்த்தம்"

"அவன் சாவு என் கைல தான் அதுல எந்த மாற்றமுமில்லை ஆனா அதுக்கு முன்னாடி தேவியை கல்யாணம் பண்ணி குடுக்கணும், மீனாட்சி இல்லாம இத்தன நாள் பொத்தி பொத்தி பாதுகாத்துட்டேன், இன்னைக்கு அவ மேல என்னால பழி விழுந்துட்டு…" சரவணன் கண்ணில் சிறு கலக்கம். அவர் கரத்தை பற்றிவிட்டார் மூர்த்தி.

"ஐயா பேத்தி அவள் புரிஞ்சுப்பா இதை எல்லாம் தாங்கிக்குற சக்தி அவளுக்கு இருக்கும் நீ கவலைபடாதே… இப்ப அவளுக்கு கல்யாணம் பண்ணனும் அவ்வளவுதானே, என் பையனுக்கு கட்டித்தர்றியா… அவனுக்கு அம்மா வகைல தான் ஜாதி உண்டு அப்பா வகைல கிடையாது அது பரவாயில்லைன்னா கட்டிக்கொடு"

"என்ன அத்தான் நீங்களும் இப்படி அவனை மாதிரி பேசுறீங்க, என் அக்கா பையன அப்படி பாப்பேனா" அவர் பதறிவிட்டார்.

குமரவேல், "இது பிள்ளைங்க வாழ்க்கை எடுத்தோம் கவுதோம்ன்னு முடிவு பண்ண முடியாது மூர்த்தி, ஜாதகம் பாப்போம் அப்பறம் முடிவு பண்ணுவோம்"

விநாயகம், "அப்பா இது ஜாதிய விட கொடுமைப்பா, மனசுக்கு பிடிச்சிருந்தா போதாதா… ஆமா மாமா அவளுக்கு 26 வயசு ஆகுது 2 வருஷமா மாப்பிள்ளை பாத்துட்டு இருக்கோம் அது உங்களுக்கு தெரியும் தானே, அப்ப எல்லாம் கேக்க தோனாதது இப்ப எப்படி"

"எனக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட தோணல விநாயகம். 30 வயசு ஆகுது கல்யாணம் பண்ற ஐடியா இருக்கான்னு தினமும் ராம் கிட்ட கேப்பேன் எப்பவும் முறைப்பான் ஆர் பேசாம போய்டுவான், நேத்து தான் சிரிச்சான். இப்போ தேவி அவனுக்கு முறைப்பென் தானேன்னு தோணிச்சு கேட்டுட்டேன். ஒரு வேளை ராமோட சிரிப்புக்காக தான் தேவி இவ்வளவு நாள் காத்துக்கிட்டு இருக்க வேண்டியதா போச்சோ யாருக்கு தெரியும்" என்று சிரிக்க அந்த இடத்தில் அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்து எல்லாரும் மென்மையாக சிரித்தனர்.

தேவியின் அறை கதவை திறந்து துர்கா டீ கப்புடன் உள்ளே வந்தாள், அவளை கண் திறந்து பார்த்து நிகழ்காலத்திற்கு வந்த தேவி, "இங்கையும் நீ தான் எனக்கு பணிவிடை செய்யணுமா?" என்று கேட்டு டீ கோப்பையை வாங்கினாள்.

"பணிவிடையா?... போடி எரும மாடு உனக்கு போய் நான் பண்ணுவேன்?… அத்தை குடுத்தாங்க கொண்டு வந்தேன், அவங்களுக்காக கொண்டு வந்தேன் எது மாறினாலும் உரிமையும் பாசமும் மாறுமா?"

தேவி சிரித்தபடி எழுந்து போய் ஜன்னல் அருகே நின்று, "என்ன மாமியார் மருமகள் சண்டை போட முடியாதபடி பண்ணிட்டீங்க என்னம்மா நீங்க இப்படி பண்ணிட்டீங்களேம்மா" என்று சொல்ல, துர்கா பக்கென்று சிரித்துவிட்டாள்.

"அதுசரி அந்த ராஜமாணிக்கம் எதுக்கு கோவில்ல நின்னாரு" என்று குரலை முடிந்த அளவு சாதாரணமாக வைத்து கேட்டாள், தேவி.

துர்காவுக்கு சிரிப்பு நின்றது, அவள் கண்மணி எல்லா பக்கமும் உருண்டது, தங்கையின் குணம் அறிந்தவள் ராம் தான் இதற்கு காரணம் என்று சொல்லவே கூடாது சொன்னால், சொந்த செலவில் சூனியம் வைத்தது போல ஆகிவிடும், என்று யோசித்து கடைசியில், "அது… அது வந்து… தற்செயலா கோயிலுக்கு வந்தாரு போல அப்படியே நின்னுட்டாரு… அது கோயில் பொது இடம் வெளிய போண்ணு விரட்டவா முடியும்" எதையும் உளறிவிட கூடாது என்கிற முனைப்போடு வாயில் வந்ததை சொன்னாள். தேவியிடம் எந்த பதிலும் இல்லை, துர்கா அவளை கேள்வியாக பார்க்க, தேவி, "ம்ம்… நம்பிட்டேன்" என்றாள் உணர்ச்சியற்ற முகத்துடன், அவள் மனமோ, 'அந்த ஆள் தானா வந்து கல்யாணம் முடியும் வரைக்கும் நின்னான் இத நான் நம்பனும் யார்கிட்ட விடுறீங்க கதை, அந்த ஆள் கிட்ட அப்பா பெரியப்பா பெரியமாமா ராம் எல்லாரும் போய் பேசுனது பார்த்தேன், அதான் ஃபோட்டோக்கு கூட நிக்காம ரெஸ்ட்ரூம் போறேன்ன்னு எஸ்கேப் ஆகிட்டேன், இந்த உருட்டல் எத்தனை நாளைக்கு நானும் பாக்குறேன்' என்று கருவிக்கொண்டு இருந்தது.

"தேவி நீ நம்பித்தான் ஆகனும் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு கொஞ்சம் எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணதான் வேண்டியிருக்கும் புரிஞ்சுதா… குடை கம்பி மாதிரி குத்திதான் நிப்பேன்னா தூக்கி வெளிய போட்டுடுவாங்க" துர்கா அக்கறையாக அதட்டினாள்.

"நீ வெளிய போ நான் குளிச்சிட்டு டிரஸ் மாத்தனும்" என்று பெட்டியை ஆராய தொடங்கினாள் தேவி. துர்காவோ, 'செவுடன் காதுல ஊதுன சங்குதான் எப்படித் தான் ராம் உன்ன சமாளிக்க போறாரோ' என்று நினைத்துக் கொண்டாள்.
 
Status
Not open for further replies.
Top