வேல்விழி 1
குளித்து விட்டு வந்த நந்திதாவின் விழிகளோ தூங்கிக் கொண்டு இருந்த அந்த பிஞ்சு மழலையின் முகத்தை ஆசையாகப் பார்த்தது. எத்தனையோ வலிகளுக்கு மருந்து அந்த குழந்தை மட்டும் தான் அல்லவா? 'என்ன வாழ்க்கை இது?' என்று சோர்ந்து போகும் நேரத்தில் எல்லாம் அவளுக்கு, "நான் இருக்கிறேன் அம்மா" என்று நினைவு படுத்திக் கொண்டு இருப்பது ஆறு மாதங்களேயான செல்ல மகள் தான்."ஆதித்ரி" என்பது அந்த குழந்தையின் பெயராக இருக்க, அதை கூட அவளவன் தான் வைத்து இருந்தான். அவனுக்கு சரிபாதி ஆகி இருவருடங்களுக்கு மேலாகி இருந்தன… இன்னுமே அவனுடன் மனது விட்டு பேசியது கிடையாது. நான்கு வார்த்தைகளுக்கு மேல் பேசுவதே அபூர்வம். அப்படிப் பட்ட உறவு அவர்களுடையது. ஏன் கணவன் மனைவியாக இருந்தாலும் கூட தனித்தனி அறை என்கின்ற நிலை தான்.
பெருமூச்சுடன் அங்கிருந்த கட்டிலில் குழந்தையை பார்த்துக் கொண்டே இருந்தவளுக்கு, இந்த வாழ்க்கைக்குள் தான் அகப்பட்டுக் கொண்ட நினைவு தான் மறுபடி மறுபடி வந்தது.
சில வருடங்களுக்கு முன்னர்....
"நந்திதா" என்று அந்த அறையே அதிரும் வண்ணம் சத்தமாக கர்ஜித்தார் பூபாலசிங்கம். அந்த சத்தத்திலேயே அனைவரும் ஒடுங்கி போக, நந்திதாவோ சற்றும் பயம் இன்றி தந்தையின் விழிகளை நோக்கியவள், "எனக்கு இந்த கல்யாணத்தில இஷ்டம் இல்லப்பா, ராம்குமாரை தவிர யாரையுமே கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்று சொன்னவள் குரலில் அவ்வளவு அழுத்தம்.
பூபாலசிங்கமோ நக்கலாக சிரித்தபடி, "அந்த பிச்சைக்காரனுக்கு வந்த வாழ்வை பாரு, நம்ம ஸ்டேட்டஸ் என்ன? அவன் ஸ்டேட்டஸ் என்ன? இந்த சினிமா இன்ஸ்ட்ரியே என் பெயரைக் கேட்டா நடுங்கும்... எங்க பணம் போட்டா எப்படி எடுக்கலாம்னு எல்லாமே பிஃங்கர் டிப்ஸ்ல வச்சு இருக்கேன். அப்படி பட்ட எனக்கு மாப்பிள்ளை ஒரு கூலிக் காரனா? கல்யாணம் பேசுன ஆரம்பத்தில இருந்து இத தான் சொல்லிட்டு இருக்க, இன்னும் ரெண்டு நாளுல கல்யாணம், இப்போவும் அதையே பேசிட்டு இருக்க" என்று சீறினார்.
அவளோ, "அவர் ஒண்ணும் கூலிக்காரர் இல்ல, அக்ரிகல்ச்சர்ல டிகிரி முடிச்சு இருக்கார், ஆர்கானிக் பார்ம் வச்சு இருக்கார்" என்று சொல்ல, அவரோ, "சரி, மிஞ்சி மிஞ்சி போனா எவ்ளோ வருமானம் வரும்னு சொல்லு? இங்க பார் நந்திதா நான் இவ்ளோ பொறுமையா பேசிட்டு இருக்கேன் என்கிறதுக்காக என் பொறுமையை சோதிக்காதே" என்று சொல்ல,
அவளோ, "நீங்க மட்டும் இந்த கல்யாணத்த இப்போ நிறுத்தலன்னா, கல்யாண மேடைல உங்களுக்கு தான் அசிங்கமா போகும்" என்றாள் எச்சரிக்கும் குரலில். அவரோ, "ஆஹான்" என்று நக்கலாக சொன்னவரோ, "மிஞ்சி மிஞ்சி போனா என்ன பண்ணுவ? கல்யாண மேடைல இருந்து எந்திரிப்ப? இப்படி எல்லாம் நீ திருகுதாளம் பண்ணுவேன்னு தெரிஞ்சு தான் உன் காதலனை தூக்கிட்டு வந்து நம்ம பசங்க அடைச்சு வச்சு இருக்கானுங்க, அவன் உயிரோட இருக்கணும்னா, இந்த கல்யாணத்துக்கு நீ ஓகே பண்ணனும், புரியுதா?" என்று சொல்ல, அவள் தான் இப்போது பதறி போனாள்.
"ராமை கடத்தி வச்சு இருக்கீங்களா? நான் நம்ப மாட்டேன்… ராமுக்கு என்னாச்சு?" என்று கேட்கும் போதே அவள் இதயத்தில் துடிப்பில்லை. அவரோ நக்கலாக, கையில் இருந்த போனை தூக்கி ராமை அடைத்து வைத்து இருக்கும் புகைப்படத்தைக் காட்ட, அதனை அதிர்ச்சியாக வாங்கி பார்த்தவளோ, "அப்பா அவரை ஒண்ணும் பண்ணிடாதீங்க" என்று சொல்லும் போதே ஒற்றைக் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய,
அவரோ போனை வாங்கியவர், "நீ யுவராஜை கல்யாணம் பண்ணிக்கிட்டா இவன் மேல தூசு கூட படாது... இல்லன்னா" என்று சொல்லிக் கொண்டே நடந்தவரது முதுகை வெறித்துப் பார்த்தாள் பெண்ணவள்.
லைம்லைட் தன்னில் படக் கூடாது என்று நினைக்கும் ஓரிரண்டு பேரில் அவளும் ஒருத்தி. அவள் நினைத்து இருந்தால் இந்த சினிமா உலகத்தை கைக்குள் கொண்டு வந்து இருக்கலாம், அத்தனை செல்வாக்கு மிக்கவர் அவள் தந்தை பூபாலசிங்கம். பிரபலமான ப்ரொடியூசர்... அவர் தயாரிப்பில் நடிப்பது என்பது சினிமா நடிகர்களை பொறுத்தவரையில் வரம் என்று தான் கூற வேண்டும்.
ஆனால் இதனை சின்ன வயதில் இருந்தே வெறுத்தவள் தான் நந்திதா, அவளுக்கு ஒரே அண்ணன் விஷ்வா, அவனும் இந்த தயாரிப்பு துறையில் கொடிகட்டி பறப்பவன் தான்… தொழிலதிபர் ஒருவரின் பெண் ரேகாவை திருமணம் செய்து அவனுக்கு ஒரு வயதில் குழந்தையும் இருக்கின்றது.
நந்திதாவுக்கு சின்ன வயதில் இருந்தே தாய் இல்லை, பூபாலசிங்கமும் ராமனாக இருக்கவே இல்லை, அதனாலேயே தந்தையின் நடவடிக்கை பிடிக்காமல் பிடிவாதமாக ஊருக்கு சென்று தாய்வழி பாட்டியுடன் வளர்ந்தாள். பூபாலசிங்கமும் அவள் முடிவுக்கு தடையாக இருக்கவில்லை. ஏன் என்றால் அவருக்கு அது தானே வசதியாகி போய் இருந்தது.
பாட்டி வீட்டுக்கு அவளை அனுப்பியவர் தனது லீலைகளை ஆரம்பித்து விட, விஷ்வாவும் அதனை தட்டிக் கேட்காமல் நண்பர்கள், பார்ட்டி, பெண்கள் என்று உல்லாசமாக வாழ ஆரம்பித்து இருந்தான். அவள் நாட்கள் அவளது பாட்டி வீட்டில் சந்தோஷமாக கழிய ஆரம்பித்து இருந்தது. மனசு விட்டு சிரித்தாள், நண்பிகளுடன் சந்தோஷமாக நேரத்தைக் கடத்தினாள், மொத்தத்தில் இந்த ஊடக வெளிச்சத்தில் இருந்து தப்பி நிம்மதியாக வாழ்ந்தாள் என்று தான் சொல்லலாம், அப்படிப்பட்டவளுக்கு கிடைத்த பொக்கிஷம் தான் ராம்.
அவள் வீட்டின் அருகே வசிக்கும் மத்தியதர குடும்பத்தை சேர்ந்தவனுக்கு கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த நந்திதா மேல் காதல் துளிர்க்க, அவளுக்கும் அவனை பிடித்து விட சம்மதித்து விட்டாள். இந்த நேரத்தில் தான் அவள் காதலுக்கு எதிரியாக வந்து சேர்ந்தது அவளது பாட்டியின் இறப்பு. அதுவரை மகள் எப்படி இருக்கின்றாள் என்று கூட கேட்காத பூபாலசிங்கம் இறுதி சடங்குக்கு வந்து சேர, அவர் காதில் நந்திதாவின் காதல் விஷயமும் சொல்லப்பட, அவளை இறுதிக் கிரியை முடிந்த கையோடு அழைத்துக் கொண்டே புறப்பட்டு விட்டார்.
அவளுக்கும் போக மறுக்க நியாயமான காரணம் இருக்கவே இல்லை. பிடிக்கவில்லை என்றாலும் போய் ஆக வேண்டிய கட்டாயம், எப்படி அந்த வீட்டில் அவளும் தனியாக இருப்பாள்? அப்போது அவள் திரும்பி ராமைப் பார்த்த பார்வை இன்னுமே இருவர் மனதிலும் அழியாமல் இருக்க, வீட்டுக்கு அழைத்த வந்த பூபாலசிங்கம் கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கான சுதந்திரத்தை குறைத்துக் கொண்டே வந்தார்.
இறுதியில் போனையும் பறித்து எடுக்க தான் அவள் வெகுண்டெழுந்து விட்டாள்.
அன்று தான் அவளுக்கு தெரியும் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது என்று. அவளுக்கே தெரியாமல் இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்கின்ற நிலை… வந்ததில் இருந்தே அவளுக்கு அந்த வீட்டின் சூழல் பிடிக்கவே இல்லை. அண்ணாவின் திருமணத்துக்கு பாட்டியுடன் வந்து விட்டு சென்றவளுக்கு ரேகாவுடன் அவ்வளவு இறுகிய பிணைப்பும் இருக்கவும் இல்லை.
ரேகா வேறு "ஸ்டேட்டஸ் ஸ்டேட்டஸ்" என்று பேசிக் கொண்டே இருக்க, எரிச்சலில் விலகியே போனாள். அப்படி தனித்து போனவளுக்கு தான் இந்த திருமண ஏற்பாடும் வந்து சேர, அவளோ, "முடியாது அப்பா" என்று ஒற்றைக் காலில் நின்று உரிமைக்காக குரல் கொடுக்க, இறுதியில் ராமை கடத்தி வைத்து இருப்பதாக கூறி அவளை தனது வலைக்குள் சிக்க வைத்து இருந்தார் பூபாலசிங்கம்.
இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்று இருக்க, ஏற்பாடு எல்லாம் பலமாக தான் இருந்தது. அவளோ யுவராஜை நேரில் பார்த்தது கூட இல்லை. அவன் படம் பார்த்து இருக்கின்றாள். அவ்வளவு தான் அவளுக்கு அவனைப் பற்றி தெரியும். திரையும் நிஜமும் ஒன்று அல்ல என்று நன்றாகவே அறிந்தவளுக்கு அங்கிருந்து தப்பி செல்வது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல. தந்தை எதுவும் செய்யக் கூடியவர் என்று பயந்தவளுக்கோ ராமுக்காக வாய்மூடி இருக்க வேண்டிய கட்டாயமாகி போனது.
திருமணமே அவளது விருப்பத்திற்கு நடக்கவில்லை என்னும் போது உடைகள் மட்டும் அவள் விருப்பத்துக்கு வந்து விடுமா என்ன? எதிலும் அவள் சம்மதம் கேட்கப்படவே இல்லை. அவள் மனமோ, "அப்படி என்ன அவசரம்?" என்று நினைத்துக் கொண்டாலும் எதுவுமே செய்ய முடியாத நிலை.
அறைக்குள் இருந்து அழுது கொண்டு மட்டுமே இருக்க முடிந்தவளுக்கு அவ்வளவு பாதுகாப்பையும் மீறி ஊசியை கூட அசைக்க முடியவில்லை, போன் கூட பண்ண முடியாத சிறைக்குள் தான் அவள் அகப்பட்டு இருந்தாள். இப்படியே நாட்கள் நகர, அவளது அறைக் கதவை தட்டிய வேலைக்காரப் பெண்ணோ, "அம்மா உங்கள ஐயா கூப்பிட்டார்" என்று சொல்ல, அவளும் பெருமூச்சுடன் எழுந்து வெளியே சென்றாள். அவள் கண்களோ சிவந்து இருக்க, அடுத்த நாள் திருமணம் செய்யும் கல்யாண களை முகத்தில் இல்லை.
வெளியே வந்தவளது கண்ணில் அங்கே அமர்ந்து இருந்த யுவராஜ் தான் பட்டான். இன்று தான் நேரில் பார்க்கின்றாள். கருப்பு நிற ஷர்ட் அணிந்து அதன் மேல் பட்டன்கள் திறந்து இருக்க, பாதி மார்பு வெளியே தெரிந்து கொண்டு இருந்தது. கருப்பு நிற ஜீன்ஸ் ஷூ என்று அவனை தவிர எல்லாமே கருப்பாக தான் இருக்க, முன்னே அமர்ந்து இருந்த பூபாலசிங்கத்திடம் பேசிக் கொண்டே இருந்தான்.
இதே சமயம், ரேகாவோ சற்று அதிகமான மேக்கப்புடன் வந்தவளோ, 'இவளுக்கு வந்த வாழ்க்கையை பாரு' என்று நினைத்துக் கொண்டே, "ஹாய் யுவா" என்று சொல்ல, அவனோ ரேகாவை ஒரு அலட்சிய பார்வை மட்டுமே பார்த்து விட்டு மீண்டும் பூபாலசிங்கத்தைப் பார்த்தவனோ, "அப்போ நான் கிளம்புறேன் சார், நாளைக்கு கல்யாண மண்டபத்துக்கு வந்திடுறேன்" என்று சொல்லி விட்டு எழுந்து கொள்ள,
பூபாலசிங்கமோ, "திஸ் இஸ் நந்திதா" என்று அங்கே நின்றவளை அறிமுகப்படுத்த, அவளையும் சற்று அலட்சியமாக பார்த்தவன், "ம்ம் போட்டோல பார்த்து இருக்கேன்" என்று சொல்லி விட்டு விறு விறுவென வெளியேறினான். அவன் முகத்திலும் கல்யாணத்துக்கான பூரிப்பு இருக்கவில்லை, ஆனால் தளம்பி இருந்த அவள் மனதால் இதனை எல்லாம் உள்வாங்கி கொள்ளவும் முடியவில்லை.
அடுத்த நாள் காலையில் எழுந்தவளது கதவை மேக்கப் பெண்கள் தட்ட, அவளோ கதவை திறந்ததுமே, "மேடம் ஆரம்பிக்கலாமா?" என்று கேட்டபடி உள்ளே வந்தவர்கள் அவளை முற்றாக மாற்றி இருந்தார்கள். தேவதை போல இருந்தவளுக்கு புன்னகை மட்டுமே காணாமல் போய் இருக்க, பொம்மை திருமணத்தில் பொம்மையாக அவள். கல்யாண மண்டபத்துக்கு ஒரு ஜடமாக வந்தவளை சுற்றி அத்தனை கேமெராக்கள். எதனை வாழ்க்கையில் வெறுத்தாளோ அதே லைம் லைட் அவள் மீது…
முகத்தில் எந்த வெறுப்பையும் கூட காட்ட முடியாத நிலையில் மெதுவாக சென்று கையில் இருந்த மாலையை அங்கே கம்பீரமாக அமர்ந்து இருந்த யுவராஜுக்கு அணிவித்தவளோ மௌனமாக பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
அவளுக்கோ, "என்னை விடுங்க" என்று சத்தமாக கத்த வேண்டும் போல இருந்தாலும் எதனையும் செய்ய முடியாத கையாளாகத தனத்துடன் இருந்தாள். பூபாலசிங்கம், விஷ்வா மற்றும் ரேகா என்று அனைவருமே வந்த விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டே இருக்க, ஐயரும் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்து இருந்தார்.
நந்திதாவுக்கோ கண்களில் இருந்து கண்ணீர் விழுந்து விடும் போல இருந்தாலும் கஷ்டப்பட்டு உள்ளே இழுத்துக் கொண்டாள். சபையில் உண்மையை சொல்லி கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்று அவள் நினைத்து இருந்தாலும், ராமுக்கு பூபாலசிங்கத்தினால் ஏதும் ஆகி விடுமோ என்று பயந்து போனாள். மேள தாளங்கள் நடுவே ஐயர் மந்திரத்தை உச்சரிக்க, ஆசீர்வதிக்கப்பட்ட மங்கள நாணை கையில் எடுத்த யுவராஜ் அதனை அவள் கழுத்தில் அணிவித்து மூன்று முடிச்சும் இட்டு, அவளை தன்னவள் ஆக்கிக் கொண்டான்.
அவனுக்கு இது ஒன்றும் புதிது அல்ல, எத்தனை படங்களுக்கு எத்தனை பேருக்கு தாலி அணிவித்து இருப்பான் அவன்? ஆனாலும் முதல் முறை மூன்று முடிச்சு இட்டது என்னவோ நந்திதாவுக்கு தான். அவளோ அவன் தாலி கட்டும் கணத்தில் கண்களை மூடி திறந்தவள், "எல்லாமே முடிஞ்சு போச்சு" என்று தான் நினைத்துக் கொண்டாள்.
பாட்டியுடன் சிறகடித்து பறந்தவளோ மீண்டும் கூண்டில் பறவையாக யுவராஜிடம் சிக்கிக் கொள்ள, பிடிக்காத இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் அவளுக்கு. தாலி கட்டியதுமே ராமின் நினைவுகளை அழிக்க முயன்றவளுக்கு அவனது நினைவுகள் வலித்தது என்னவோ உண்மை தான். யுவராஜ் அவளை பொருட்டாக கூட மதிக்கவே இல்லை. நண்பர்கள், நண்பிகள் என்று போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தவனிடம் வந்த அவன் நண்பனோ, "இங்க பாரு, உனக்கு கல்யாணம்ன்னு சொன்னதுமே எத்தனை பொண்ணுங்க அழுது வீடியோ போட்டு இருக்காங்க" என்று சொல்ல,
அவனோ, "இடியட்ஸ்" என்று மட்டும் சொல்லிக் கொண்டவன் பெரிதாக எதுவுமே பேசவே இல்லை. சமூக வலைத்தளத்தில் நந்திதாவுக்கு திட்டு வேறு அவனது ரசிகைகள் மூலம் விழுந்து கொண்டு இருந்தது என்பது வேறு கதை. திருமணம் முடிந்ததுமே கேக் வெட்டிய சமயம், "யுவா சார், மேடம்க்கு கேக் கொடுக்கலாமே" என்றான் புகைப்படம் எடுப்பவன்.
அவனோ கேக்கை எடுத்து அவள் வாய்க்குள் வைக்க போக, யுவராஜுன் நண்பனோ, "என்னடா சினிமாவுல தான் பொண்ணுங்கள தொடாம நடிக்கிறன்னு பார்த்தா, பொண்டாட்டியையும் தொட மாட்டியா?" என்று நக்கலாக கேட்க, அங்கே இருந்த அனைவரும் சிரிக்க, யுவராஜுமே இறுக்கத்தை கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டே சிரித்தான். நடிகன் அல்லவா? அவனுக்கு நடிக்க சொல்லிக் கொடுக்கவா வேண்டும்? இவ்வளவு பேர் முன்னிலையில் கேட்ட பின்னர் அவனுக்கு மறுத்தால் தன்னை பற்றி என்ன செய்திகள் எல்லாம் வரும் என்று நன்கு தெரியும்.
அதனாலேயே கண்களை மூடி திறந்து தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டே, முதல் முறை தனக்கு முன்னே நின்றவளை ஆழ்ந்து பார்த்தான். பெயர் தான் நடிகன், ஆனால் அவன் முதலில் ஸ்பரிசரிக்க போகும் பெண் என்னவோ நந்திதா தான். அவளோ அவனை மிரட்சியாக பார்க்க, அவனோ கேக்கை எடுத்து வாயில் வைத்து அவள் முகத்தை இரு கைகளாலும் தாங்க, அவளுக்கோ அதிர்ச்சியில் கண்கள் மேலும் விரிந்து கொண்டன.
அவனுக்கு இது முதல் முத்தம் ஆக இருந்தாலும், கொடுத்தாக வேண்டிய கட்டாயத்திலும், தன்னைப் பற்றி இதுவரை வந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய தேவையிலும், அவனும் சிந்திக்காமல், அவளையும் சிந்திக்க கூட விடாமல் வாயில் இருந்த கேக்கை அவள் வாய்க்குள் அழுத்தமாக இடம் மாற்றி இருக்க, அவளோ நடந்ததை கிரகிக்க கூட முடியாமல் விறைத்து போனவளுக்கு சுற்றி இருந்தவர்களை ஏறிட்டுப் பார்க்கவே சங்கடமாக இருந்தது. அவனோ சட்டென தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்டவனுக்கு முகத்தில் ஒரு வித சிந்தனை ரேகைகள் தான் படர்ந்து இருந்தன.
அந்த கூட்டத்தில் அவளது தந்தை அண்ணா, அண்ணி உறவினர்கள் என்று அனைவரும் இருக்க, அவனோ கொஞ்சமும் வெட்கம் இன்றி நடந்து கொண்டதை ஜீரணிக்க முடியவில்லை என்றாலும் அதனை காட்ட முடியாமல் தலையை குனிந்தபடி நிற்க, அந்த புகைப்படக்காரனோ, "மேடம், நீங்க கொடுங்க" என்று அடுத்த குண்டை தூக்கிப் போட்டான்.
அவளோ சங்கடமாக, "இல்ல வேணாம்" என்று ஆரம்பிக்க, அங்கே நின்ற யுவராஜுன் நண்பி ஒருத்தியோ, "என்ன வெட்கம் நந்திதா? புருஷன் தானே" என்று சொல்ல, அனைவரும் அவளை ஊக்குவிப்பது என்னும் பெயரில் சங்கடப்படுத்த தொடங்க, யுவராஜே அங்கே இருந்த கேக்கை தூக்கி அவள் வாய்க்குள் வைத்து விட்டவன், அவனே அருகே சென்று அதனை தனது இதழ் கொண்டு எடுத்துக் கொண்டே, "ஓகேயா?" என்று கேட்டவனுக்கு மீண்டும் அதே சிந்தனை ஓட ஆரம்பிக்க, தலையை மீண்டும் உலுக்கி தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.
அங்கே நின்றவர்களோ, "மாப்பிள்ளை" என்று சத்தமாக கூவி கையடித்து சிரிக்க, அவளுக்கோ எங்காவது புதைந்து விடலாம் போல இருந்தது. ஆடைகளை களைந்து சபை தனிலே விட்ட உணர்வு அவளுக்கு. அவனோ, "எக்ஸ்கியூஸ் மீ" என்று சொல்லிக் கொண்டே வாஷ்ரூமுக்குள் நுழைந்தவனோ தனது முகத்தை அடித்துக் கழுவினான்.
அப்படியே நிமிர்ந்து முன்னால் இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்தவனோ, "கிஸ் பண்ணுனா காதுக்குள்ள குதிரை சத்தமா கேட்குது, முன்ன பின்ன வேற யாருக்குமே கிஸ் பண்ணுனதும் இல்ல, இந்த பீலிங்கை தான் நல்லா இருக்கு நல்லா இருக்குன்னு இவனுங்க சொல்றானுங்களா? இத வெளியவும் கேட்க முடியாது… கேட்டாலும் அசிங்கமாயிடும்" என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்த டிஸ்ஸுவினால் முகத்தை துடைத்தபடி வெளியேறி இருந்தான்.