வேல்விழி 11
சூரியன் உதிக்கும் நேரமே யுவராஜ் தூங்க ஆரம்பித்த போதிலும் விரைவாக எழுந்து விட்டவனோ தனது மார்பினை மஞ்சமாக்கி தூங்கிக் கொண்டு இருந்த நந்திதாவை விழிகள் தாழ்த்திப் பார்த்தான். அவளது மென் பஞ்சு விரல்களோ அவன் மார்பில் இருந்த ஓவியத்தில் பதிந்து இருக்க, அவளோ அவன் இதயத்துடிப்பை தாலாட்டாக கேட்டுக் கொண்டே துயின்று இருந்தாள். ஓவியப்பாவை அவள் மேனியும் இதழ்களும் காளையவனால் குங்குமமாக சிவந்து இருந்தது.அவளை மென் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே விலக்கி வைத்தவன் விரல்களோ அப்போதும் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவள் மேனியை மீட்டி விட்டே விலகிக் கொள்ள, "ச்ச என்ன இப்படி ஆயிட்டேன்" என்று தன்னை தானே கேட்டுக் கொண்டே அவளை போர்வையால் மூடி விட்டு, இதழ்களையும் தீண்டி விட்டு வெளியேறிச் சென்றான்.
வாசலில் நின்று அங்கே ஓடிக் கொண்டு இருந்த அருவியைப் பார்த்தவனுக்கோ மேனியில் ஒரு புத்துணர்வு தான் உண்டானது. அப்படியே மேலே இருந்த கைமரத்தை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டே நின்று இருக்க, அவன் மேனியின் தசைக் கோளங்கள் புடைத்துக் கிளம்பி இருக்க, ராஜ தோற்றத்தில் நின்றவனது கம்பீரம் இருந்ததை விட பன் மடங்கு அதிகரித்து தான் இருந்தது. அவன் இதழ்க் கடையிலோ மெல்லிய புன்னகை படர்ந்து இருக்க, அந்த புன்னகையின் காரணம் மங்கையவள் தான் என்று அவன் மயக்கம் கொண்ட விழிகள் எடுத்து உரைத்துக் கொண்டு இருந்தன.
அவனது கூரிய விழிகளிளோ இப்போது அருவியை நோக்கிச் சென்ற ராம் தான் தென் பட்டான். அவனைக் கண்டதுமே, "அன்றும் இன்று இயற்கையின் ரசிகன் தான்" என்று நினைத்துக் கொண்டே, "ராம்" என்று சத்தமாக அழைத்தான் யுவராஜ். ராமோ அவனைத் திரும்பிப் பார்த்தவன், "எதுக்கு கூப்பிடுறாருன்னு தெரியலயே" என்று நினைத்தபடி திரும்பிப் பார்க்க,
அவனை நோக்கி நடந்து வந்த யுவராஜோ, "சேர்ந்தே குளிக்கலாம்" என்று சொல்லி அவன் தோளில் கையைப் போட திரு திருவென விழித்த ராமோ, "இவருக்கு என்னாச்சுன்னு தெரிலயே" என்று நினைத்துக் கொண்டே, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டான். அருவியின் கரைக்கு சென்றதுமே, போட்டு இருந்த ஷார்ட்ஸுடன் யுவராஜ் டைவ் அடித்து பாய்ந்து விட, அருகே இருந்த ராமோ, "ம்ம், நல்லா நீந்துவார் போல" என்று நினைத்துக் கொண்டே அவனை தொடர்ந்து பாய்ந்தான்.
குளிர்ந்த நீரில் சூரிய வெளிச்சத்தில் நீந்துவதே யுவராஜ்ஜூக்கு புத்துணர்வாக தான் இருந்தது. இத்தனை நாட்கள் மனதை அழுத்திக் கொண்டு இருந்த பாரம் குறைந்த போல உணர்வாகி போக, அவன் இதழ்கள் இப்போது இறுக்கத்தை தளர்ந்து புன்னகையுடனேயே இருந்தன. ஆனாலும் சில நினைவுகள் மனதை அழுத்திக் கொண்டு தான் இருக்க, இறந்த காலத்தை மனதுக்குள்ளேயே புதைத்து விட வேண்டிய கட்டாயம் அவனுக்கு…
ஆனாலும் நீந்திக் கொண்டே அரண்மனை இருந்த திசையைப் பார்த்தவன் மனமோ மீண்டும் மீண்டும் அந்த இடத்தை நோக்கிச் செல்ல கட்டளையிட்டுக் கொண்டு இருக்க, ஆழ்ந்த மூச்செடுத்தவனோ, "இன்னைக்கு கண்டிப்பா போகணும்" என்று நினைத்துக் கொண்டே முழுமையாக நீரினுள் அமிழ்ந்தவன் வெளியே வரவே இல்லை. இதே சமயம், நீந்திக் கொண்டு இருந்த ராமோ நீண்ட நேரம் நீருக்குள் சென்ற யுவராஜ் வெளியே வரவில்லை என்று நினைத்ததுமே பதற ஆரம்பித்து விட்டான்.
நீரை இரு கைகளாலும் விலக்கியப்படி, "சார், சார்" என்று அழைக்க, அவனோ வெளியே வரவே இல்லை. ராமும் உள் நீச்சல் அடித்தும் பார்த்தான், யுவராஜ் கண்ணில் படவே இல்லை. நீண்ட நேரம் கழித்து பதட்டமாக தேடிக் கொண்டு இருந்த ராமின் முதுகை தட்டிய யுவராஜோ, "யாரை தேடுற?" என்று கேட்டான். சட்டென திரும்பிப் பார்த்த ராமுக்கு அப்போது தான் மூச்சே வந்தது.
ஆழ்ந்த மூச்செடுத்துக் கொண்டே, "இவ்ளோ நேரம் உள்ளேயா இருந்தீங்க?" என்று கேட்க, அவனோ, "ம்ம், நடிகன்னு சொன்னா க்ளப், பார்ட்டின்னு மட்டுமே திரிவேன்னு நினைச்சியா? எல்லாமே பழகி இருக்கேன். பிராணாயாமம், சிலம்பம், களரின்னு லிஸ்ட் ரொம்ப பெருசு" என்று சொல்லிக் கொண்டே நகர, அவனோ, "உங்க படம் எதுவுமே பார்த்தது இல்ல, ஆனா இதுக்கெல்லாம் டூப் போடுவாங்கன்னு தான் கேள்விப்பட்டிருக்கேன்" என்க,
அவனோ இதழ் பிரித்து சிரித்தவன், "என் படத்தில நான் தான் நடிப்பேன்.. டூப் எல்லாம் இல்ல, சில சமயம் இன்ஜெர்ட் ஆகியும் இருக்கேன்" என்று சொல்லிக் கொண்டே வெளியேற, ராமோ, "அப்போ நிஜமாவே ஹீரோ தான் போல" என்று சொன்னான். யுவராஜ்ஜோ திரும்பி அவனை ஒரு கணம் பார்த்து விட்டு, "நீ தான் நிஜமான ஹீரோ" என்று சொல்லிக் கொண்டே நடக்க, அவனை புரியாமல் பார்த்துக் கொண்டே நீரினுள் நின்று இருந்தான் ராம்.
யுவராஜ்ஜோ மரத்தில் இருந்த வேட்டியைப் பார்த்தவன், "எனக்குமே வேட்டி கட்டணும்னு ஆசையா இருக்கு" என்க, ராமோ, "அது புது வேட்டி தான் சார், நீங்க எடுத்துக்கோங்க, நான் வேற கட்டிக்கிறேன்" என்று சொல்ல, அவனோ இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே அதனை எடுத்துக் கொண்டான். இதே நேரம் தூக்கத்தில் இருந்து கண் விழித்த நந்திதாவோ அருகே இருந்த இடத்தை தடவிப் பார்த்துக் கொண்டே போர்வையால் தன்னை மறைத்தபடி எழுந்து அமர்ந்தாள்.
அவள் கரமோ தனது இதழ்களை வருடிக் கொள்ள, கண் மூடி முதல் நாள் நினைவை மீடியவளோ, "இவ்ளோ நாள் ஏன் இவர் இப்படி இருந்தாருன்னு தெரிலயே" என்று நினைத்துக் கொண்டே எழ ஆயத்தமாக கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து இருந்தான் யுவராஜ். என்றுமே பார்க்காத போல வித்தியாசமான தோற்றத்தில் இடையில் தாருப்பாச்சி கட்டி இருக்க, அவன் சிகையோ அவன் கழுத்து வளைவில் அசைந்தாட, முற்றிலும் வேறாக தான் தெரிந்தான்.
படங்களில் பார்க்கும் அரசர்களின் தோற்றத்தில் இருந்தவனை வியந்து மட்டும் அல்ல, ரசித்தும் பார்த்தாள் பெண்ணவள். அவனோ அவளையே பார்த்துக் கொண்டு அடி மேல் அடி வைத்தபடி வந்தவன், அவள் அருகே அமர, அவளுக்கு மீண்டும் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவனோ அவள் கரத்தில் கரத்தை வைத்து, அதனை வருடிக் கொண்டே கன்னத்தை அடைய, அவள் மேனி சிலிர்த்துப் போக, அவள் கண்களோ தாமாக மூடிக் கொள்ள, அவனோ அவள் இதழ்களை வருடியபடி, "இன்னைக்கு ராஜகோட்டைக்கு போகலாமா?" என்று கேட்டான்.
அவளும் கண்களை மூடிக் கொண்டே, "ம்ம்" என்று பதிலளிக்க, அவனோ ஆழ்ந்த மூச்செடுத்தபடி, "வர ரொம்ப லேட் ஆகிடும், நேற்று போல உனக்கு வலிக்க ஆரம்பிக்காதா?" என்று கேட்டான். அவளோ கண்களை மெதுவாக திறந்து அவனைப் பார்த்தவள், "வலிக்கும் தான்" என்று மென்மையாக சொல்ல, அவனோ, "வலிக்காம இருக்க என்ன பண்ணனுமோ நானே இப்போ பண்ணிடுறேன்" என்று சொன்னதுமே சட்டென தலையை தாழ்த்திக் கொண்டவளது கன்னங்கள் சிவப்பேறி போனது.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவன் இதழ்களில் மெல்லிய வெட்க புன்னகை படிந்து இருக்க, அதே புன்னகை உள்ளே அமர்ந்து இருந்த நந்திதாவின் இதழ்களிலும் படிந்து இருக்க, அவளோ கண்களை மூடித் திறந்து கொண்டே குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். இதே சமயம், ஸ்ரீ, பிரகாஷ், ஸ்ருதி, மதனா என்று அவனது காவலாளிகள் உட்பட அனைவருமே வெளியே வந்து இருக்க, யுவராஜ்ஜைக் கண்ட ஸ்ரீயோ, "என்னடா இப்போவே அரசர் கெட்டப்புக்கு ரெடி ஆயிட்டே போல… உன் தலைமுடியும் இந்த தாருப்பாச்சியும் அப்படியே இருக்கு" என்று சொல்லிக் கொண்டே அருகே அமர,
பிரகாஷும், "ஆமா சார், எக்ஸ்சாக்ட்லி அப்படியே இருக்கு" என்று சொல்லிக் கொண்டான். ஸ்ருதியோ, "நாம எப்போ தான் கிளம்புறது?" என்று கேட்க, யுவராஜ்ஜோ, "இன்னைக்கு ராஜகோட்டைக்குள்ள போகலாம்" என்று சொன்னான் அழுத்தமாக. ஸ்ரீயோ, "என்னடா விளையாடுறியா? நேற்று போயிட்டு சிறுத்தை எல்லாம் பார்த்து பயந்து வந்தோம்ல" என்று கேட்க, அவனோ, "சிறுத்தையை பார்த்து ஒண்ணும் பயப்படல, நான் பயப்பட்ட காரணமே வேற, ஆனா அது தேவையே இல்லாத பயம்" என்று சொல்லிக் கொண்டவன் விழிகள் முருகனுடன் பேசிக் கொண்டு இருந்த ராம் மீது ஒரு கணம் படிந்து மீண்டது.
பிரகாஷோ சந்தோஷமான குரலில், "ஆமா சார், கண்டிப்பா போகலாம்" என்று சொல்ல, மதனாவோ, "நேத்து போல சிறுத்தை வந்திச்சுன்னா என்ன பண்ணுறது?" என்று கேட்க, யுவராஜ்ஜோ, "உங்க மேல ஒரு தூசு கூட படாம நான் அழைச்சிட்டு போறேன்" என்று சொன்னவன் குரலில் அப்படி ஒரு ராஜ கம்பீரம். இது எனது இடம் என்று மறைமுகமாக உணர்த்தியது அவன் வார்த்தைகள்.
அவர்களும் அவன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல், "ம்ம்" என்று சொல்லி சம்மதித்து இருக்க, அன்றைய காலை உணவும் அவர்களுக்கு வந்து சேர்ந்தது. இந்த நேரத்தில் குளித்து விட்டு கதவை திறந்து கொண்டு நந்திதா வெளியே வர, அவள் கதவை திறக்கும் சத்தம் கேட்டு சட்டென திரும்பிப் பார்த்தான் யுவராஜ். அவளும் அவனையே பார்த்தபடி அவர்கள் இருந்த இடத்தை நோக்கி நடந்து வர, யுவராஜோ தனக்கு அருகே இருந்த இருக்கையை கண்களால் காட்டிக் கொண்டே முன்னால் திரும்பியபடி சாப்பிட ஆரம்பித்து இருந்தான். அவளுக்கும் அவன் பார்வை என்னவோ செய்தாலும் நேற்று வரை இருந்த தயக்கம் இப்போது இருக்கவே இல்லை.
உரிமையாக அவன் அருகே இருந்த இருக்கையில் அமர, ஸ்ருதியோ, "குட் மார்னிங்" என்று காலை வணக்கத்தை தெரிவிக்க, அவளும் அனைவரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டே, "குட் மார்னிங்" என்று சொன்னவளோ தட்டை எடுத்து சாப்பாட்டை எடுத்து வைக்க போனாள். அவளோ மிக குறைவாக தான் சாப்பாட்டை எடுத்து வைக்க, யுவராஜ்ஜோ, "பச், இவ்ளோ கம்மியா சாப்பிட்டா எப்படி காட்டுக்குள்ள அவ்ளோ தூரம் நடப்ப?" என்று கேட்டுக் கொண்டே உணவை மேலும் எடுத்து வைத்தான்.
அவள் இதுவரை அவளை மனுஷியாக கூட மதித்து பேசியது இல்லை. ஆனால் இன்றோ அப்படி ஒரு அக்கறை அவள் மீது. அவனது இந்த அவதாரம் அனைவருக்குமே புதிதாக இருக்க, நந்திதாவும் மௌனமாக சாப்பிட ஆரம்பிக்க, அவர்கள் இருவரினதும் விழிகளும் பேசிக் கொள்வதைப் பார்த்த அனைவருக்குமே சந்தோஷம் கலந்த ஆச்சரியம் தான். ஒருவரை ஒருவர் புன்னகையுடன் பார்த்துக் கொள்ள, ஸ்ரீயோ குரலை செருமிக் கொண்டான். யுவராஜ்ஜோ அவனை ஏறிட்டுப் பார்த்தவன், "என்னடா?" என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்க,
ஸ்ரீயோ, "ஒண்ணும் இல்லப்பா" என்று சொல்லிக் கொண்டான். யுவராஜ் சாப்பிட்ட கையை கழுவி விட்டு துடைத்துக் கொண்டே, அடுத்து மற்றைய பக்கம் இருந்த ஸ்ருதியை பார்த்தவன் கண்களால் அருகே அழைக்க, அவளோ, "எதுக்கு கூப்பிடுறான்? நேற்று அறைஞ்சதே இன்னும் விண் விண்னு வலிக்குது" என்று நினைத்துக் கொண்டே, அவனை நோக்கி தலையை நீட்ட, அவனோ கரத்தை நீட்டி, அவள் நாடியைப் பிடித்து அவள் கன்னத்தில் இன்னுமே பதிந்து இருந்த தனது விரல்களைப் பார்த்தவன், "சாரி" என்றான். அவளோ புரியாமல் விழிகளை விரித்தவள், "யுவா நீ சாரி கேட்டியா?" என்று அதிர்ந்து கேட்க,
அவனோ இருக்கையில் சாய்ந்து இருந்தபடி, "ம்ம்" என்று மட்டுமே சொல்லிக் கொண்டு அவளை மென் சிரிப்புடன் பார்க்க, அவளோ, "வாழ்க்கைல நீ சாரி என் கிட்ட தான் பர்ஸ்ட் டைம் கேட்டு இருக்கேன்னு தோணுது… எனக்கு கனவு போலவே இருக்கு" என்று சொல்ல, அவனோ முத்துப் பற்கள் தெரிய சிரித்தவன், "நிஜம் தான்டி" என்று சொல்லிக் கொண்டே பக்கவாட்டாக திரும்பி தன்னையே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே இருந்த நந்திதாவைப் பார்த்தான். அவள் கரமோ உணவை பிசைந்து கொண்டு இருக்க, அவள் விழிகளோ அவனில் படிந்து இருக்க,
அவனோ, "என்னை பார்த்தது போதும், முதலில் சாப்பிடு" என்று சொல்ல, நிதானத்துக்கு வந்தவளாக மீண்டும் சாப்பிட ஆரம்பித்து இருந்தாள். யுவராஜ் அடுத்து பெருமூச்சுடன் எழுந்து நடேசனை அழைத்தவன், "வத்திப்பெட்டி கொடுடா" என்று சொல்ல, அவனோ, "எதுக்கு சார், சிகரெட் பிடிக்க போறீங்களா?" என்று கேட்க, அவனோ, "அதுக்கு என் கிட்ட லைட்டர் இருக்கு, நீ வத்திப்பெட்டி மட்டும் கொடு" என்று சொல்ல, அவனும் அதனை எடுத்து வந்து கொடுக்க, அதை இடுப்பில் வைத்துக் கொண்டவனோ, "சாப்பிட்டு வாங்க கிளம்பலாம்" என்றான்.
ஸ்ரீயோ, "என்னடா இப்படியேவா வர போற?" என்று அவன் தோற்றதை பார்த்து அதிர்ச்சியாக தான் கேட்டான். அவன் இடையில் தாருப்பாச்சி இருக்க, காலில் சாதாரண செருப்பு தான் இருந்தது. அவனும், "ம்ம் நேற்று போல பாதை முழுக்க செடி கொடி இருக்காது" என்று ஏதோ பார்த்து விட்டு வந்தவன் போல சொல்ல, பிரகாஷோ, "இவருக்கு என்னாச்சு? ஒரு நாளுல அந்த மரம் எல்லாம் எப்படி மறையும்?" என்று நினைத்துக் கொண்டான்.
இதே சமயம், ராமோ சாப்பிட்டு விட்டு எழ, யுவராஜோ, "ராம் நீ வர்ற தானே" என்று கேட்க, அவனோ தயக்கமாக, "இல்ல சார்" என்க, அவனோ, "வர்ற" என்று சொன்னதில் அப்படி ஒரு அழுத்தம். அவனது அந்த வார்த்தையை ஏனோ ராமினால் மறுக்க முடியாமல் இருக்க, "ஓகே சார்" என்று சொல்லிக் கொண்டே அவர்களுடன் செல்ல புறப்பட்டு இருந்தான்.