வேல்விழி 19
ஸ்ரீயோ, "டேய் வண்டிய என்னடா பண்ணுறது?" என்று கேட்க, யுவராஜ்ஜோ, "திரும்பி வர்ற ஐடியா இருக்கு தானேடா, அப்போ பார்த்துக்கலாம்" என்று சொன்னவனுக்கு அந்த வண்டியின் பெறுமதி ஒரு பொருட்டே இல்லை. அவன் தான் கோடி கோடியாக பணத்தில் புரள்பவன் அல்லவா?முன்னால் சென்ற ராமோ, சிறிது தூரத்தில் தெரிந்த வீட்டின் முன்னே நின்று, "ஐயா" என்று சத்தமாக அழைக்க, உள்ளே இருந்து நடுத்தர வயதுடையவர் வந்து, "ஆஹ் நம்ம ராம் தம்பி... சொல்லுப்பா, மூலிகை பறிக்க வந்தியா?" என்று கேட்க, அவனோ, "ம்ம்" என்று சொன்னவனோ பெருமூச்சுடன், "எனக்கு ஒரு உதவி பண்ணனும், என் கூட நிறைய பேர் வந்து இருகாங்க, அவங்க வண்டி விபத்துல மாட்டிக்கிச்சு, பக்கத்தில் இருக்கிற ஊருக்கு உங்க டிராக்டர்ல கொண்டு விட முடியுமா?" என்று கேட்க,
அவரோ, "அதுக்கென்ன தம்பி, விட்டுட்டா போச்சு… முன்னுக்கு நில்லுங்க, ஈதோ வந்திடுறேன்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே செல்ல, அவர்களும் அங்கே காத்திருந்தார்கள். நந்திதாவோ, மெதுவாக நடந்து சென்று அங்கே இயற்கையை ரசித்துக் கொண்டே தனியே நின்று இருந்தாள். அவளது காயம் பட்ட மனதுக்கு இந்த காலநிலை இதமாக தான் இருந்தது. டிராக்டரும் கண நேரத்தில் வந்து சேர, முதலில் ராம் ஏற பின்னால் யுவராஜ் ஏற இருவரும் முகத்தை பார்த்தபடி அமர வேண்டிய கட்டாயம்.
அவர்களை தொடர்ந்து ஒவ்வொருவராக ஏற சின்ன டிராக்டர் பெட்டியில் இடம் குறைவாக தான் இருந்தது. ஸ்ருதியோ, "என் மடியில இரு மதனா கொஞ்ச தூரம் தானே" என்று சொல்ல, அவளும் வேறு இடம் இல்லாமல் அவள் மடியில் அமர்ந்தாள். யுவராஜ்ஜோ ஏறியதில் இருந்தே நந்திதாவை பார்த்துக் கொண்டே இருந்தவன், அவனுக்கு அருகே இருந்த ஸ்ருதியிடம், "கூப்பிடுடி" என்று சொல்ல,
அவளும், "நந்திதா" என்று சத்தமாக அழைக்க, "ஹான்" என்று நிதானத்துக்கு வந்தவளோ, டிராக்டரை நோக்கி சென்றாள். அங்கே சென்றவளுக்கு ஏறுவது என்பது கடினமாக இருக்க தடுமாறினாள். உடனே பிரகாஷ் எழுந்து கையை நீட்ட, அவன் கையை பிடித்துக் கொண்டே மேலே ஏறினாள் நந்திதா.
ட்ராக்டரில் ஏறியவளுக்கோ இருக்க இடம் இருக்கவே இல்லை... ஸ்ருதி மடியில் மதனா அமர்ந்து இருக்க, உள்ளே ஏறியவளோ எங்கே அமர்வது என்று தெரியாமல் தடுமாறி போனாள். அங்கே முதலில் யுவராஜ் அமர்ந்து இருக்க அவன் முன்னே அவனை முறைத்துக் கொண்டே ராம் அமர்ந்து இருக்க, "இவன் வேற அங்க போனதுல இருந்து முறைச்சிட்டே இருக்கான்" என்று நினைத்தபடி நந்திதாவை பார்த்தவன், "அவன் மடியில வேணும்னா கூட இரு... நான் தப்பா நினைக்க மாட்டேன்" என்றான் கண்களால் ராமைக் காட்டி.
அவன் நிரூபிக்க முனைந்தது என்னவோ அவள் மீது அவனுக்கு சந்தேகம் இல்லை என்று தான். ஆனால் அவளுக்கோ கோபம் இன்னும் மேலே எகிற வேகமாக வந்து யுவராஜனின் மடியில் அமர்ந்தாள். அவள் அமர்ந்த வேகத்தில் திடகாத்திரமான அவனுக்கே வலித்தது. "ஆ ஆ" என்று சொன்னவனை திரும்பி பார்த்து முறைத்தவள், "பெரிய வீரன் மண்ணாங்கட்டின்னு பேர் மட்டும் தான்… என் வெய்ட்டயே தாங்க முடியல" என்று முணுமுணுக்க,
யுவராஜ்ஜுன் அருகே இருந்த ஸ்ருதியோ, "என்னடா இப்படி திட்டு விழுது" என்று சிரித்துக் கொண்டே கேட்க, "எல்லாம் விதி" என்று சலிப்பாக சொன்னவன், முன்னே இருந்த ராமைப் பார்க்க, அவனோ இப்போதும் யுவராஜ்ஜை முறைத்துக் கொண்டே இருந்தான். யுவராஜ்ஜோ, "பச் அப்போ இருந்து பார்த்துட்டே இருக்கேன் முறைச்சிட்டே இருக்க… எவ்ளோ நேரத்துக்கு இப்படியே இருக்க போற?" என்று கேட்க, அவனோ அதற்கும் முறைத்தான். "மறுபடியும் பார்டா" என்று சொல்லிக் கொண்டே இருக்க ட்ராக்டரும் நகர ஆரம்பிக்க அவனோ மடியில் இருந்தவளது இடையை அழுந்த பற்றிக் கொண்டான்.
சட்டென அவனை திரும்பி பார்த்த நந்திதாவோ, "கையை எடுங்க" என்று முறைத்தபடி சொல்ல, அவனோ அவள் காதருகே எம்பியவன், "என்னடி ஓவரா பண்ணுற??" என்று கேட்டான் சற்று கடுப்பாக... அவளோ, "எனக்கு டைவர்ஸ் வேணும்" என்று எரிச்சலாக சொல்ல, அவனோ, "அதெல்லாம் கொடுக்க முடியாது" என்றான் அழுத்தமாக .
"அது தான் உங்களுக்கு மித்ரா இருக்காளே… நான் எதுக்கு?" என்று கேட்க, அவனோ, "இந்த ஜென்மத்துல எங்க பிறந்து இருக்கான்னு கூட தெரியல" என்க, அவளோ, "அப்போ அவளை பார்க்கலன்னு சாருக்கு பீலிங்கா" என்று கேட்டாள். அவளை முறைத்தவன், "அப்படின்னு நான் சொன்னேனா?" என்று கேட்க, அவளோ, "உங்க வாய் சொல்லல… உங்க மூஞ்சு சொல்லுது" என்றாள்...
அவனோ சலிப்பாக கண்களை மூடி திறந்தவன், "அப்படிலாம் நினைக்கலடி" என்று சொல்லிக் கொண்டே நிமிர, ராம் அப்போதும் அவனை முறைத்தபடி இருந்தான். யுவராஜ்ஜோ, "இவன் ஒருத்தன் நம்மள முறைச்சு முடிக்க மாட்டான் போல... டேய் ஐந்து ஜென்மமா கஷ்டம் மட்டும் தான்டா பட்டு இருக்கேன். இந்த ஜென்மத்துலயாவது நிம்மதியா இருக்க விடுங்களேன்டா" என்று நினைத்துக் கொண்டே கையை சும்மா வைத்து இருக்காமல் மடியில் இருந்தவள் இடையை வருட, அவளோ அவனை முறைத்துக் கொண்டே நெளிய, அவனோ இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டான்.
அவளோ, "ராம் இவர் மடியில வந்து இருக்கீங்களா… நான் அங்க இருக்கேன்" என்று சொல்ல, யுவராஜ்ஜோ, "ஐயையே" என்றான் வெளிப்படையாக. ராமுக்கு அவன் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை பிரிக்க விரும்பாதவனோ, "இல்ல நந்து நான் இங்கேயே இருக்கேன்" என்று சொல்லிக் கொண்டே வெளியே பார்க்க ஆரம்பித்தான். யுவராஜ்ஜோ அவள் இடையில் அழுத்தத்தை கொடுத்தபடி வெளியே பார்த்துக் கொண்டே வர, அவள் தான் கலைப்பில் அவன் மடியில் இருந்தபடியே தூங்கிப் போனவள், அவன் கழுத்து வளைவிலேயே சரிந்து படுக்க,
அவனும் அவளை இறுக அணைத்துக் கொண்டே அமர்ந்து இருந்தவனுக்கு மனம் கனத்து தான் போனது. வெறுப்பையும் அவனிடமே உமிழ்கின்றாள் அணைப்பையும் அவனிடமே நாடுகின்றாள். அவனும் என்ன தான் செய்வான்? நீண்ட பயணத்தின் முடிவில், அவர்கள் வர வேண்டிய ஊரும் வந்து சேர, "நந்திதா" என்று மெதுவாக அழைத்தான் யுவராஜ்.
அவளும் கண்களை விழித்தவள், சட்டென விலகிக் கொண்டே கண்களை கசக்கி விட்டே எழுந்து கொள்ள, ஒவ்வொருவரும் கீழே இறங்கிக் கொண்டார்கள். அனைவரும் இறங்கியதுமே, பாக்கெட்டில் இருந்த போனை எடுத்த யுவராஜ்ஜோ, "இங்க கவரேஜ் இருக்குடா" என்று சொல்லிக் கொண்டே இருக்க, அங்கே நின்று இருந்த சிலர், "டேய் நம்ம யுவராஜ் சார்டா" என்று சொல்லிக் கொண்டே அவனை நோக்கி வந்து குவிய, அவன் காவலாளிகள் அவர்களை விலக்க முடியாமல் திண்டாடி தான் போனார்கள்.
நந்திதாவோ, எரிச்சலாக ஸ்ருதியுடன் தள்ளி நிற்க, யுவராஜ்ஜூக்கு களைப்பில் இது வேறு தொந்தரவாக இருந்தாலும் வேறு வழி இல்லாமல் சிரித்தபடி அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டவன், அவர்கள் செல்லும் வரை பாடாத பாடு பட்டு போனான்.
பிரகாஷோ, "செலிபிரிட்டியா இருந்தா நமக்குன்னு இந்த ஸ்பேஸ் இருக்காது ல" என்று சொல்ல, ஸ்ரீயோ, "அது என்னவோ உண்மை தான்டா" என்று சொல்லிக் கொண்டான். யுவராஜ்ஜோ வந்து இருந்தவர்களுடன் பேசிக் கொண்டே, "டேய் ரெண்டு டாக்சிக்கு சொல்லுடா, இல்லன்னா நான் ரொம்ப பாவம்" என்று சொல்ல, ஸ்ரீயும் சிரித்தபடி போனில் அருகே எங்கேயும் டாக்சியை பிடிக்க முடியுமா என்று பார்த்தான்.
வேறு இடங்கள் என்றால் காரில் ஏறி தப்பி விடுவான் யுவராஜ். இப்போது அவனால் எதுவுமே செய்ய முடியாத நிலை தான் இருந்தது. ஸ்ரீயும் தேடிக் கண்டு பிடித்து இரு கார்களை புக் பண்ண, அதுவும் சிறிது நேரத்தில் அவர்கள் இருந்த இடத்தை வந்து அடைய, வேகமாக யுவராஜ்ஜூம் காரில் ஏறிக் கொண்டான்.
அவனை தொடர்ந்து ஒவ்வொருவரும் ஏறிக் கொள்ள, யுவராஜ்ஜோ கார்க் கண்ணாடியை இறக்கி, அங்கே நின்ற ராமிடம், "ராம் நீயும் வா" என்று அழைக்க, அவனோ அழுத்தமாக இல்லை என்று தலையாடியவன், "பஸ்ல போறேன்" என்று சொல்ல, "ரொம்ப பண்ணுறான்" என்று முணுமுணுத்துக் கொண்டே கார் ஜன்னலை மூடிக் கொண்டான்.
நந்திதாவோ ராமைப் பார்த்து மென்மையாக சிரித்தவள், விடை பெறுவதாக ஒரு தலை அசைப்பிலேயே சொல்லி விட்டு காரில் ஏற, அவனும் மென்மையாக புன்னகைத்துக் கொண்டான். இது யுவராஜ் கண்ணில் பட்டாலும் அவன் அதனை பொருட்டாக எடுத்துக் கொள்ளவே இல்லை. ஏற்கனவே சந்தேகத்தால் ராஜ்ஜியத்தை இழந்தவன் அல்லவா? மீண்டும் அதே தவறை செய்வானா என்ன?
ஒவ்வொருவரும் ஏறியதும் காரும் வேகமாக புறப்பட, அனைவருமே களைப்பின் மிகுதியால் தூங்கி இருந்தார்கள். அவர்களது நகரம் வந்ததுமே, யுவராஜ்ஜூக்கு விழிப்பு தட்ட, கண்களை திறந்தவன் மார்பில் தான் அவனவள் தூங்கி இருந்தாள். அவள் தலையை வருடியவன் இதழ்களோ, "ஐ ஆம் சாரி" என்று முணுமுணுத்துக் கொண்டாலும் அவனுக்கே தெரியும் அவளை அவ்வளவு சீக்கிரம் சமாதானப்படுத்த முடியாது என்று. அவள் இழப்புகளின் வலி அவனுக்கும் தெரியும் அல்லவா?
சிறிது நேரத்தில் அவர்கள் பிளாட்டை கார் அடைந்து இருக்க, "நந்திதா" என்று அவன் மென்மையாக அழைத்ததுமே கண்களை விழித்தவளோ, பதறி இறங்கி கொண்டாள் குழந்தையை தேடி. யுவராஜ்ஜோ, முன்னால் இருந்த காவலாளியிடம், "எல்லாம் செட்டில் பண்ணி லக்கேஜை எடுத்து வா" என்று சொல்லி விட்டு இறங்கியவன், அவர்களை தொடர்ந்து வந்த அடுத்த வண்டியை நோக்கி கையை காட்டியபடி, "சரிடா அப்போ நான் கிளம்புறேன்... சீக்கிரம் மீட் பண்ணலாம்" என்று சொன்னபடி வீட்டினுள் புக,
அவர்கள் வண்டியும் புறப்பட்டது. சதீஷும் யுவராஜ் மற்றும் நந்திதாவின் உடமைகளை வீட்டினுள் கொண்டு வந்து வைக்க, யுவராஜ்ஜோ, "அம்மா கிட்ட போய் கீயை வாங்கி வா" என்று சொல்ல, அவனும் வீட்டின் திறப்பை நீலாம்பரியிடம் சென்று கேட்க, "அவன் வரமாட்டானா?" என்று முணுமுணுத்தபடி திறப்பை கொடுத்து விட்டார்.
யுவராஜ்ஜூம் வீட்டினை திறந்து உள்ளே சென்றவன், உடமைகளை அறைக்குள் வைக்க சொல்லி விட்டு, காவலாளிகள் இருவருக்கும் பணத்தை கொடுத்து விட்டு அங்கே இருந்த சோபாவில் தொப்பென்று அமர்ந்தவன், மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு சிறிது நேரம் கண் மூடி இருந்தான்.
இதே சமயம், நீலாம்பரியின் வீட்டில் இருந்த தனது குழந்தையை அணைத்துக் கொண்ட நந்திதாவோ, அழுது முடிக்கவே இல்லை. யுவராஜ்ஜின் தாயோ, "முதலில குளிச்சிட்டு பால் கொடும்மா, இவ்ளோ நாள் புட்டி பால் தான் குடிச்சா" என்று சொல்ல, அவளும் சம்மதமாக தலையாட்டிக் கொண்டே குழந்தையை தூக்கிக் கொண்டே தனது வீட்டினுள் நுழைய, யுவராஜ்ஜோ இருக்கையில் சாய்ந்து இருந்தபடி அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
அவளோ அவன் அருகே வந்தவள், "குழந்தையை பிடிங்க, நான் குளிச்சிட்டு வரேன்" என்று சொல்லி விட்டு விறுவிறுவென உள்ளே, செல்ல, அவளை தொடர்ந்து உள்ளே வந்த நீலாம்பரி விசித்திரமாக தான் பார்த்தார். இவ்வளவு நாளைக்கு அவள் அவனை அதட்டியும் பார்த்தது இல்லை. அவன் மௌனமாக இப்படி இருந்தும் பார்த்தது இல்லை.
அவனோ குழந்தையை மார்போடு நெகிழ்வாக அணைத்துக் கொண்ட நேரம் மனதில் ஏதோ வலி உண்டாவதை உணர, ஆழ்ந்த மூச்செடுத்தபடி அங்கே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு நின்ற நீலாம்பரியை பார்த்தவன், "கொஞ்சம் வச்சுகோங்கம்மா, நானும் குளிக்கணும்" என்று நீட்ட, அவரும், "நீ யுவி தானே" என்று சந்தேகமாக கேட்டபடி வாங்கிக் கொள்ள, இதழ் பிரித்து சிரித்தவன் அறைக்குள் நுழைய, அவரோ, "உன் அப்பாவுக்கு ஏதோ ஆயிடுச்சு" என்று குழந்தையிடம் சொல்லிக் கொண்டார்.
முதலில் குளித்து விட்டு வந்த நந்திதாவோ, குழந்தையை வாங்கிக் கொண்டவள், "அத்தை பால் கொடுத்துட்டு வரேன்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே செல்ல, அவரும் பின்னால் சென்றவர், "ரெண்டு பேரோட நடவடிக்கையும் ரொம்பவே வித்தியாசமா இருக்கு" என்று சொல்ல, அவளோ விரக்தியாக சிரித்துக் கொண்டாள்.
நீலாம்பரியோ, "இன்னைக்கு வேலைக்காரி வரல, நான் தான் சமைச்சேன்... கொண்டு வரேன், சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க ரெண்டு பேரும்" என்று சொல்லிக் கொண்டே வெளியேற, பெருமூச்சுடன் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தூங்க வைத்தவள் இதழ்களோ, "அம்மா கிட்டயே திரும்ப வந்துட்டியா" என்று கேட்டு நெற்றியில் முத்தம் பதித்து விட்டு நிமிர, உள்ளே அப்போது தான் அவளை தேடி வந்து இருந்தான் யுவராஜ்.
அவளோ அவனை முறைத்தவள், "இப்போ என்ன?" என்று கேட்க, அவனோ, "அது தான் எல்லாமே ஓகே ஆயிடுச்சுல, என் ரூம்லயே வந்து தங்கிக்கலாமே" என்று கேட்க, அவளோ, "எங்க ஓகே ஆச்சு, ரொம்ப வலிக்குது… இந்த ஜென்மத்தில் நான் நிம்மதியா இருக்கணும்னு நினச்சா ப்ளீஸ் என்ன தொந்தரவு பண்ணாதீங்க, அப்படி பண்ணுனா, மொத்தமா பிரிஞ்சிடுவேன்" என்று சொல்ல, அவனோ அவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன் விறுவிறுவென வெளியேறி இருந்தான்.
மீண்டும் அவர்கள் வாழ்க்கை அதே தாமரை இல்லை நீர் போல தான் இருந்தது. என்ன வித்தியாசம் முதல் நீர் தொட்டுக் கொள்ள தயங்கும், இப்போது தாமரை நீரில் இருக்கவே தயங்குகிறது. அடுத்த நாளில் இருந்து அவன் வாழ்க்கை பழையபடி சினிமா என்று ஆரம்பித்து விட, அவளோ குழந்தையுடன் நேரம் செலவழிக்க ஆரம்பித்தாள். ஷூட்டிங், என்று கிளம்பி விடுபவன் வீட்டில் இருப்பதே அரிது தான்.
அன்று யுவராஜ்ஜூக்கு விடுமுறையாக இருக்க, போன் பேசிக் கொண்டு இருந்தவன் முன்னே வந்து பத்திரகாளியாக நின்று இருந்தாள் நந்திதா. அவனும், “ஐ வில் கால் யூ பேக்" என்றபடி போனை வைத்தவன், "அதிசயமா என் ரூமுக்குள்ள வர்ற??" என்று கேட்க, கையில் இருந்த போனை தூக்கி காட்டியவள், "என்ன இது??" என்று கேட்டாள். அவனோ அன்று காலையில் தான் வெளியாகி இருந்த அவனது புது பட போஸ்டரை உற்று பார்த்தவன், "நியூ பில்ம் போஸ்டர்" என்றான்.
அவளோ, "அது எனக்கு தெரியாதா?" என்று கோபமாக கேட்க, "அப்புறம் எதுக்கு கேக்கிற??" என்றான் அவன். "இவ்ளோ நாள் ஹீரோயின்ஸ் பக்கத்தில போய் நடிச்சதே இல்ல... ஆனா சாப விமோச்சனம் பெற்றதும் உங்க வேலைய காட்ட ஆரம்பிச்சிடீங்கள்ல" என்க, அவனோ அவளை விழி விரித்து பார்த்தவன் சற்று கடுப்பாக, "என்ன பேசிட்டு இருக்க நீ? ஜஸ்ட் அந்த பொண்ண தூக்கி இருக்கேன் அவளோ தானே" என்றான்.
அவளோ, "வேற பொண்ண தூக்கி இருந்தா பரவால்ல, அந்த நடிகையோட பேர் மித்ரா... எனக்கு என்னவோ இது அந்த பாதகியா தான் இருப்பான்னு தோணுது" என்று சொல்ல, நெற்றியை நீவியபடி அவளை பார்த்தவன், "வாட் தெ ஹெல்" என்றான். அவளோ, "ஆமா ஹெல் தான், பொண்ணுங்கள பார்த்தா போதுமே பின்னாடியே போக வேண்டியது… அதுவும் மித்ரான்னு சொன்னதுமே உங்களுக்கு கிளுகிளுப்பா இருந்து இருக்கும்" என்றாள்.
அவனோ "இது கிளு கிளுப்பா? ஜஸ்ட் அவளை தூக்கி இருக்கேன், அவ கை என் செஸ்ட்ல இருக்கு அவ்ளோ தான்… என்னோட பிரெண்ட்ஸ் எல்லாரும் எப்படி நடிக்கிறாங்கன்னு பாரு, அநியாயத்துக்கு எல்லா பொண்ணுங்களுக்கும் கிஸ்ஸா பண்ணுறானுங்க. நான் உன்னை தவிர வேற பொண்ணை கிஸ் பண்ணி இருப்பேனான்னு சொல்லு பார்ப்போம்" என்று கேட்க, அவளோ அவனை முறைத்து பார்க்க, "ஐ மீன் இந்த ஜென்மத்தில்" என்றான்.
அவளோ, "இவ்ளோ பேசுறனீங்க எதுக்கு இப்படி நடிக்கணும்?? அதுவும் உங்க செஸ்ட்ல அவ எப்படி கை வைக்கலாம்?? மித்ரான்னு பேரை கேட்டதுமே இளிச்சிட்டு ஓகே பண்ணி இருப்பீங்க" என்று சொல்ல, இடையில் கையை வைத்து இதழ் குவித்து ஊதியவன், "ஹையோ இதுக்கே அவனுங்க பேமெண்ட் அதிகம் கொடுத்தானுங்க... அதான் ஓகே பண்ணினேன்" என்றான். அவளோ, "காசு கொடுத்தா டிரஸ் இல்லாம நடிப்பீங்களா?" என்றவள், ஒரு கணம் நிறுத்தி, "அது சரி மூணு கோடிக்கு மூணு இன்ச் துணிய கட்டுன ஆள் தானே நீங்க" என்றாள்.
அவனோ, "வாட் முணு இன்ச் ஆஹ்? அது எந்த பெரிய டவல் தெரியுமா?" என்று கேட்டான். அவளோ, "ஆமா ஆமா பார்த்தேன்... நான் மட்டும் இல்ல ஊரே பார்த்தாச்சு, எய்ட் பேக்ஸ் வச்சி இருந்தா பப்பரப்பான்னு திரியணுமா?" என்று சொன்னாள் கடுப்பாக. அவனோ அவளை சலிப்பாக பார்த்தவன், "ஒரு துண்டு கட்டுனது தப்பா?" என்று கேட்க, அவளோ, "அப்போ நானும் இப்படி ஒரு துண்டு கட்டிட்டு போஸ் கொடுக்கவா?" என்று கேட்டாள்.
யுவாராஜ்ஜோ, "தாராளமா கொடுக்கலாம்... ஆனா என் முன்னாடி மட்டும்" என்றான் அழுத்தமாக. அவளோ, "ஆமா நான் மட்டும் உங்க முன்னாடி கொடுக்கணும். நீங்க மட்டும் ஊருக்கே கொடுக்கலாம். நல்ல இருக்கு உங்க நியாயம்?" என்க, "ஒரு துண்டை கட்டிட்டு நான் படுற பாடு இருக்கே" என்று நினைத்தபடி பின்னங்கழுத்தை வருடியவன், "இப்போ என்னடி அந்த பொண்ணு கூட நடிக்க கூடாது, அவ்ளோ தானே? சரி நடிக்கல போதுமா?" என்று கேட்டான்.