வேல்விழி 27
நேரே அறைக்குள் சென்ற நந்திதாவோ கதவை தாளிட்டு விட்டு அதில் சாய்ந்து நின்றவள் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டுக் கொண்டாள். இன்னுமே அவள் தலை வலிக்க, மகளின் நினைவு வேறு வந்து அவளை நிலை இழக்க செய்தது. "நேற்று முழுக்க என்னை தேடி இருப்பா" என்று நினைத்துக் கொண்டே மீண்டும் வெளியே வந்தவளோ யுவராஜ்ஜை நோக்கி சென்று, "நான் வீட்டுக்கு போகணும்" என்று சொல்ல,அவனோ அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு, அருகே நின்ற ஸ்ரீயிடம் கண்களால் சைகை செய்ய, அவனோ, "ட்ரைவர் கிட்ட சொல்லி அனுப்பி வைக்கிறேன் டா, நீயும் கிளம்புறதுன்னா கிளம்பு, நான் பார்த்துகிறேன்" என்று சொல்ல, யுவராஜ்ஜோ, "ஐ வில் ஸ்டெ" என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அவள் உடைத்த பொருட்களை சுத்தம் செய்வதை பார்த்தான்.
நந்திதாவும் அவனை ஒரு கணம் பார்த்து விட்டு அங்கே இருந்தவர்களிடம் தலையை அசைத்து விடை பெற்றவள், அங்கே நின்று இருந்த காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு இருந்தாள். அவள் செல்லும் வரை அமைதியாக இருந்தவனோ ஏதோ நினைவு வந்தவனாக போனை எடுத்து அழைத்தது என்னவோ ஜெய்க்கு தான்.
ஹாஸ்பிடலில் இருந்த ஜெய்யோ போனை எடுத்து பார்த்தவன், "யுவா எடுக்கிறான், அவன் விஷயத்தையே மறந்து போயிட்டேன்" என்று தனக்கு தானே கடிந்தபடி நெற்றியை நீவிக் கொண்டே போனை ஆன் பண்ண, மறுமுனையில் இருந்த யுவராஜ்ஜோ, "அம்மா எப்படி இருக்காங்க ஜெய்?" என்று கேட்டான்.
ஜெய்யோ, "இன்னும் க்ரிட்டிக்கல் ஸ்டேஜ் தான் யுவா, சி.சி.டி.வி பூட்டேஜ் கடைல இருந்து எடுத்துட்டேன். ஆனா அத போட்டு பார்க்க நேரம் இல்லாம இங்க மாட்டிட்டேன்… இப்போ தான் நினைவு வந்திச்சு, இத இப்போவே பார்க்கிறேன் டா" என்று சொல்ல, யுவராஜ்ஜோ, "டேய் வேணாம்டா, முதல் அம்மாவை பாரு, அப்புறம் பார்த்துக்கலாம்" என்று சொல்லி விட்டு வைத்து விட, ஜெய்யோ போனை வெறித்துப் பார்த்தான்.
அந்நேரம் உள்ளே இருந்து வெளியே வந்த வைத்தியரைக் கண்டவனோ சட்டென்று எழுந்து நின்று, "அம்மா எப்படி இருக்காங்க டாக்டர்?" என்று கேட்டான். வைத்தியரோ, "இன்னுமே க்ரிட்டிக்கல் ஆஹ் தான் இருக்காங்க ஜெய்" என்று சொல்ல, அவனோ உடைந்து போய் அமர்ந்து விட்டான்.
இதே சமயம், வீட்டுக்கு வந்த நந்திதாவோ குழந்தையுடனேயே நேரத்தினை செலவு செய்து கொண்டு இருக்க, யுவராஜ் கெஸ்ட் ஹவுசிலேயே நின்று இருந்தான். அன்று இரவு குழந்தையை அணைத்துக் கொண்டு படுத்த நந்திதாவுக்கு தூக்கம் வரவே மறுத்தது. ஏதோ நடக்க போகின்றது என்று மனம் சொல்லிக் கொண்டே இருக்க, அடுத்த நாள் விரைவாக எழுந்தவளுக்கு மனம் பிசைய தான் ஆரம்பித்து இருந்தது.
யுவராஜ்ஜின் தாய் நீலாம்பரியோ, "யுவா கெஸ்ட் ஹவுஸுக்கு வர சொல்லி கார் அனுப்புறேன்னு சொன்னான். கிளம்பும்மா" என்று சொல்ல, அவளோ, "இல்ல அத்தை, நான் ஈவினிங் வரேன்… நேற்று முழுக்க தூங்கவே இல்லை, அங்கே வந்தா தூங்க முடியாது" என்று சொல்ல, அவர்களும், "பத்திரமா இரும்மா, ஈவினிங் வண்டி அனுப்ப சொல்றேன்" என்று சொல்லி விட்டு புறப்பட்டு விட்டார்கள்.
கெஸ்ட் ஹவுஸுக்கு வந்தவர்களிடம், "நந்திதா வரலையா?" என்று யுவராஜ் விசாரிக்க, அவர்களோ, "நேற்று தூங்க முடியலன்னு ரெஸ்ட் எடுக்க போறா, ஈவினிங் வரேன்னு தான் சொன்னா" என்று சொல்லிக் கொள்ள, அவனும், "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே வேலைகளை தொடர்ந்து இருந்தான். அன்று மாலை நந்திதாவை அழைத்து வர காரை அனுப்பி இருக்க, பிறந்த நாள் விழாவுக்கு ஒவ்வொருவராக வர ஆரம்பித்து இருந்த தருணம் அது.
இதே சமயம், ஜெய்யின் தாயோ சற்று தேறி இருக்க, அவனும் தாமதிக்க விரும்பாது மனைவியை தாய்க்கு துணையாக இருக்க சொல்லி விட்டு யுவராஜ்ஜின் கேஸ் விஷயத்தைப் பார்க்க கிளம்பி விட்டான். ஏற்கனவே வந்து இருந்த நந்திதாவின் அண்ணாவோ, "யுவா, அடுத்த படம் என்ன பண்ணுறதா உத்தேசம்?' என்று அவனுடன் பேச ஆரம்பித்து இருக்க, அவனும் பேச ஆரம்பித்து இருந்தான்.
இதே சமயம் வீட்டினுள் தந்தையுடன் நுழைந்த அக்ஷராவோ, "வாவ் செம்ம டேகேரேஷன்ல" என்று சொல்லிக் கொண்டே சுற்றி பார்த்தவள் கண்ணில் யுவராஜ் பட, "சார்" என்று சொல்லிக் கொண்டே நேரே அவனிடம் சென்றவளோ, "செம்ம ஹாண்ட்ஸாம் ஆஹ் இருக்கீங்க சார்" என்று கொஞ்சும் குரலில் சொல்ல, விஷ்வாவுடன் பேசிக் கொண்டு நின்று இருந்த யுவராஜ்ஜூக்கு சற்று சங்கடமாக போனாலும் குரலை செருமிக் கொண்டே, "யூ டூ அக்ஷரா" என்க, அவளோ, "தான்க் யூ" என்றாள் விழிகளை சிமிட்டி.
"அப்பா வரலையா?" என்று அவன் கேட்க, அவளோ, "அங்க நிக்கிறார்" என்று கையை காட்டியவளோ, தனக்கு தெரிந்த திரை உலக நண்பர்களைக் கண்டதுமே, "நீங்க பிசியா இருப்பீங்க சார், அப்புறம் பேசலாம், அந்த படத்தை பத்தி நிதானமா பேசலாம்" என்று சொல்லி விட்டு செல்ல, அவள் முதுகை பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டே நின்றவன் தோளில் கையை போட்ட விஷ்வாவோ, "அதெப்படி யுவா ஒரு கிசு கிசு கூட வரல?" என்று கேட்டான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
யுவராஜ்ஜோ, "நான் நல்லவன் தான்" என்று இறுகிய குரலில் சொல்ல, "ஹ்ம்ம் இந்த இண்டஸ்ட்ரில இப்படி ஒருத்தன்னா அதிசயம் தான்" என்று சொல்லிக் கொண்டே விலகி செல்ல, அடுத்து அடுத்து யுவராஜ்ஜுடன் ஒவ்வொருவரும் பேச வந்து கொண்டே இருக்க, அவனுக்கு சலிப்பாக இருந்தாலும் அதனை முகத்தில் காட்டாமல் பேசிக் கொண்டே இருந்தான்.
இதே சமயம், களவாக உள்ளே நுழைந்த மித்ராவோ, "இன்னைக்கு யுவராஜ் சாரை மயக்கியாவது சான்ஸ் எடுத்துடணும்" என்று நினைத்துக் கொண்டே அக்கம் பக்கம் பார்த்தபடி நுழைய, "ஹலோ நீ எங்க இங்க??" என்று அவளை தடுத்து நிறுத்தியது வேறு யாருமல்ல ஸ்ரீ தான். அவளோ, "இவனா?" என்று யோசித்தபடி, "இன்விடேஷன் வந்திச்சு வந்தேன்" என்றாள் மிடுக்காக.
ஸ்ரீயோ, "உனக்கு யாரு இன்விடேஷன் கொடுத்தது?" என்று புருவம் சுருக்கி கேட்க, அவளோ, "யுவா சார் தான்" என்று கையில் இருந்த இன்விடேஷனை நீட்டினாள். அதனை உற்றுப் பார்த்த ஸ்ரீயோ, "இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லையே" என்று யோசிக்க, அதனை பறித்தெடுத்த மித்ராவோ, "நானும் சாரும் பிரெண்ட்ஸ் ஆயிட்டோம்" என்று சொல்லிக் கொண்டே விறுவிறுவென உள்ளே செல்ல, அவள் முதுகை யோசனையுடன் பார்த்து, "ரொம்ப தான்" என்று சொல்லிக் கொண்டான் ஸ்ரீ.
அவன் முதுகை பின்னால் இருந்து சுரண்டிய ஸ்ருதியோ, "என்ன நடக்குது சார்?" என்று கேட்க, அவனோ, "இவளுக்கு யார் இன்விடேஷன் கொடுத்ததுன்னு தெரில ஸ்ருதி" என்று சொல்ல, அவளோ, "இது தான் சான்ஸுன்னு அந்த பொண்ண ஜொள்ளுறியா?" என்று சிரித்தபடி கேட்க, "போடி" என்று சொல்லிக் கொண்டே அவன் வேலையை பார்க்க கிளம்பி விட்டான்.
இதே சமயம், பிரகாஷும் மதனாவும் ராமும் ஒரு பக்கம் இருந்து பேசிக் கொண்டே இருக்க, ராம்மை தூர இருந்து பார்த்த பூபாலசிங்கமோ, "இவன் எங்க இங்க?" என்று யோசித்துக் கொண்டே யுவராஜ்ஜை நோக்கி வந்தவர், "யுவா உன் கிட்ட பேசணும்" என்றார். அவனும் பேசிக் கொண்டு இருந்தவரிடம், "எக்ஸ்கியூஸ் மீ" என்று சொல்லிக் கொண்டே தள்ளி வர, அங்கே இருந்த ராமை காட்டிய பூபாலசிங்கம், "இவன் யாரு?" என்று கேட்க,
அவனை பார்த்து விட்டு, "என் பிரெண்ட்" என்க, அவரோ, "உன் பிரெண்டா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டார். அவனோ, "ம்ம் என் பிரென்ட் தான், மறுபடி கட்டி வச்சு அடிக்கலாம்னு நினைச்சுடாதீங்க" என்று சொல்லிக் கொண்டே நகர, அவனை அதிர்ந்து பார்த்தார் பூபாலசிங்கம். இதே சமயம், அவன் அருகே வந்து நின்ற மித்ராவோ, "சார்" என்று இழுக்க, திரும்பிப் பார்த்தவனுக்கு தூக்கி வாரிப் போட்டது.
சுற்றும் முற்றும் பார்த்தவனோ, "நீ எங்க இங்க?" என்று கேட்க, "கொஞ்சம் பேசணும் சார்" என்றாள் தழுதழுத்த குரலில். நண்பர்கள் முன்னிலையில் கோபப்பட முடியாமலும் இருக்க, "சரி வா" என்று அவளை ஓரமாக அழைத்து சென்றவன், "உனக்கு யார் இன்விடேஷன் தந்தது?" என்று கேட்க, அவளோ, "எப்படியோ கிடைச்சுது சார், எனக்கு சான்ஸ்" என்று ஆரம்பிக்க, "ஷட் அப் மித்ரா, சொன்னா புரிஞ்சுக்கோ... நந்திதா வர முதல் இடத்தை காலி பண்ணு" என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது,
அவன் அருகே வந்த நீலாம்பரியோ, "நந்திதா எங்கடா? போன் வேற ரிங் போகுது எடுக்க மாட்டேங்குறா" என்று சொல்ல, அவனோ மித்ராவை ஒரு கணம் பார்த்து விட்டு, "ட்ரைவர் கிட்ட கேக்கிறேன்மா" என்று சொன்னபடி போனை எடுத்தான். இதே சமயம், சி.சி.டி.வியைப் பார்த்துக் கொண்டு இருந்த ஜெய்யின் கண்களோ அதிர்ச்சியில் விரிந்தன, "இவங்களா?" என்று அவன் இதழ்கள் முணுமுணுக்க, உடனே யுவராஜ்ஜூக்கு அழைக்க, அவனோ ட்ரைவரிடம் அல்லவா பேசிக் கொண்டு இருந்தான்.
யுவராஜ்ஜிடம் பேசிய ட்ரைவரோ, "நீங்க தான் சொன்னீங்கன்னு ரேகா மேடம் அவங்க வாகனத்தில பிக்கப் பண்ண போனாங்க" என்று சொல்ல, யுவராஜ்ஜோ, "நான் சொன்னேனா? நான் எங்க சொன்னேன்?" என்று சொல்லிக் கொண்டே விஷ்வாவை தேட அவனோ நண்பர்களிடம் பேசிக் கொண்டு இருந்தான். ரேகாவுடன் வந்த வேலைக்காரியோ ரேகாவின் குழந்தையை வைத்து இருக்க, "நந்திதாவோட அண்ணியோட நம்பர் இருக்கா அம்மா?" என்று கேட்டுக் கொண்டே போனை வைத்த அடுத்த கணம் அவன் போன் அலறியது. எடுத்தது வேறு யாருமல்ல ஜெய் தான்.
போனை அவன் எடுத்ததுமே, "மித்ரான்னு பிளே பண்ணிட்டு இருக்கிறது யாருன்னு கண்டு பிடிச்சிட்டேன்" என்று சொல்ல, யுவராஜ்ஜோ, "யாரு டா" என்று கேட்க, "வேற யாருமில்ல நந்திதாவோட அண்ணி ரேகா தான்… கடைல அவளுக்கே தெரியாம கடிதத்தை அவ ஹாண்ட் பேக்ல வச்சது அவ தான்" என்று சொல்ல, அவனோ, "வாட்?" என்று அலறியே விட்டான்.
ஜெய்யோ, "பர்த் டே பார்ட்டிக்கு வந்து இருப்பா தானே? நான் அங்கே வரேன்… அரெஸ்ட் பண்ணிடலாம்" என்று சொல்ல, அவனுக்கோ இதயம் வெடித்து விடும் உணர்வு. அவனவள் ரேகாவிடம் அல்லவா சிக்கி இருக்கிறாள். "ஜெய், எல்லாத்துக்கும் முதல் நந்திதாவை காப்பாத்தணும், ரேகா தான் அவளை அழைச்சு வர போனா, இப்போ அவ போன் வேர்க் பண்ணுவே இல்ல" என்று சொல்ல,
ஜெய், "ஷீட்" என்று பதறியவன், "ஐ வில் பீ தெயார்" சொல்ல, யுவராஜ்ஜோ, "இங்க வேணாம் ஜெய், வீட்டுக்கு வா" என்று சொல்லி விட்டு வைக்க, ஜெய்யும் அவசரமாக அவன் வீட்டை நோக்கி விரைய, யுவராஜ்ஜோ என்ன செய்வதென்று தெரியாமல் பதறி தான் போனான். சத்தம் போட்டு சொல்லவும் முடியாத நிலை அவனுக்கு, சின்ன பிரச்சனை என்றாலே ஊதி பெரிதாக்குவதற்கு என்றே கண் கொத்தி பாம்பாக இருக்கும் ஊடகவியலாளர்கள் நடுவே அவனும் என்ன தான் செய்வான்.
மனமெல்லாம் ரணமாக, நீலாம்பரியை திரும்பி பார்த்தவனோ, "பர்த் டேயை கேன்செல் பண்ணிடுங்கம்மா" என்று சொல்லி விட்டு விறு விறுவென சென்றவனோ, அங்கே நின்ற ஸ்ரீயிடம், "அம்மா கிட்ட ஒன்னு சொல்லி இருக்கேன் பார்த்துக்கோ ஸ்ரீ" என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தான். அவனை தொடர்ந்து அவன் காவலாளிகள் வர முதலே வேகமாக காரில் ஏறி அவனே காரை ஓட்ட ஆரம்பித்தான்.
முதல் முறை பிரபலமாக இருப்பதை வெறுத்து தான் போனான். வேறு யாரும் என்றால் கூட இதனை பெரிய பிரச்சனையாக மாற்றி இருப்பான்… சொந்த அண்ணி என்று சொல்லும் போது எத்தனையோ பிரச்சனைகள் வர வாய்ப்பு இருந்ததால் போலீஸ் உதவியுடனேயே விஷயத்தை முடிக்க நினைத்தவனோ, வீட்டை நோக்கி தான் விரைந்தான். அவனும் அறிவான் போலீசை தவிர அவனுக்கு யாரும் உதவி செய்ய முடியாது என்று.
காரை ஓட்டிக் கொண்டு இருந்தவன் எவ்வளவு முயன்றும் தவிர்க்க முடியாமல் அவன் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய, "நந்திதா உனக்கு ஒண்ணும் ஆகாது" என்று தனக்கு தானே சொல்லி தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான். அவனுக்கு ரேகா பற்றி தெரியாது, ஆனால் பூர்வ ஜென்ம மித்ரகுமாரி பற்றி நன்கு தெரியும் அல்லவா?
இதே சமயம், காரை ஓட்டிக் கொண்டு வந்த ரேகாவோ அருகே அரை மயக்கத்தில் படுத்து இருந்த நந்திதாவை குரூரமாக பார்த்தாள். ஆம் இந்த ஜென்மத்து ரேகா தான் போன ஜென்மத்து மித்ரகுமாரி. இவர்களுக்கு எப்போது பூர்வ ஜென்ம நினைவுகள் வந்ததோ அவளுக்கும் அப்போது தான் அனைத்தும் வந்தது.
திருமணம் ஆகி இருந்த போதிலும் முதல் இருந்தே யுவராஜ் மீது ஒரு ஈர்ப்பு அவளுக்கு இருக்க தான் செய்தது. இப்போது பூர்வ ஜென்ம ஞாபகத்தில் அந்த ஈர்ப்பு வெறியாக மாறி இருக்க, அவர்கள் ராஜகோட்டையில் இருந்து வந்ததுமே யுவராஜ்ஜை அடையும் வழியை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
முதலில் அவளை பைத்தியமாக சித்தரித்து யுவராஜ்ஜிடம் இருந்து பிரிக்க நினைத்தவளுக்கு அது தோல்வியில் முடிய, இப்போது அவளை கொல்லும் அளவுக்கு துணிந்து விட்டாள். யுவராஜ் மீது இன்னுமே அடங்காமல் இருந்த ஆசையும் வெறியும் அவளை நிதானம் இன்றி யோசிக்க வைக்க, தனது கணவன், குழந்தை என்று அனைத்தையும் மறந்து முழு மித்ராகுமாரியாகவே மாறி விட்டாள்.