வேல்விழி 4
ராஜ்கோட்டையை நோக்கி அவர்களது நீண்ட பயணம் ஆரம்பமாக, அங்கே யுவராஜின் சொகுசு வண்டியில் சென்றவர்கள் என்னவோ சுருதி, மதனா, ஸ்ரீ, பிரகாஷ், யுவராஜ், நந்திதா மற்றும் ட்ரைவர் முருகனுடன் சேர்த்து யுவராஜூக்கு காவலாக இரு காவலர்கள், சதிஷ் மற்றும் ராகவன். நந்திதாவோ ஜன்னல் ஓரத்தில் காடுகளும், அருவிகளும் நிறைந்து இருந்த இயற்கையை ரசித்துக் கொண்டு வந்த போதிலும் அவள் மனமோ சிசுவை நினைத்து துடித்துக் கொண்டு தான் இருந்தது.மூன்று பேர் இருக்கும் இருக்கையில் அவளை விட்டு ஒரு ஆசனம் தள்ளி அமர்ந்து இருந்தான் யுவராஜ். அவனோ காதில் ஹெட் செட்டுடன் முன்னிருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண் மூடி இசைக்கேற்ப தலையை ஆட்டிக் கொண்டு இருக்க, அவனுக்கு பின்னே ஸ்ரீயும், பிரகாஷும் அமர்ந்து பேசிக் கொண்டே வந்தார்கள்.
அதற்கு பின்னே நண்பிகளான மதனாவும், சுருதியும் அரட்டை அடித்துக் கொண்டே வந்தார்கள். ஸ்ரீ கேட்டதுமே சுருதிக்கும் அங்கே செல்ல ஆசையாக தான் இருந்தது. சுருதி யுவராஜுன் நண்பி மட்டும் அல்ல, ஆஸ்தான உடை அலங்கார நிபுணரும் கூட, அவளுடனேயே அவளது நண்பியும் ஸ்க்ரீன் பிளே ரைட்டருமான மதனாவும் யுவராஜிடம் அனுமதி பெற்று புறப்பட்டு இருந்தாள். சுருதி என்ன தான் மதனாவுடன் பேசிக் கொண்டே இருந்தாலும் அவள் விழிகள் என்னவோ படிந்தது முன்னே அமர்ந்து இருந்த ஸ்ரீ மீது தான்.
ஸ்ரீயும் சுருதியுமோ நண்பர்களான காதலர்களா என்று சொல்ல முடியாதா இடைப்பட்ட நிலையில் மனதில் காதலை வைத்துக் கொண்டே நட்பாக பழகுபவர்கள். நிராகரிப்புக்கு பயந்து காதலை சொல்ல இருவருக்குமே தயக்கம் இருக்க தான் செய்தது. இதே சமயம், பின்னால் யுவராஜுன் ஒரு காவலன் சதிஷ் இருக்க, அடுத்தவனோ முன்னால் ட்ரைவர் முருகன் அருகே அமர்ந்து அவனுடன் பேசிக் கொண்டே வந்தான்.
ஸ்ரீயோ, பிரகாஷிடம், "இருக்க இடம் எல்லாம் செட் பண்ணிட்டே தானே" என்று கேட்க, அவனோ, "ஆமா, செட் பண்ணிட்டேன், ஆனா யுவராஜ் சாருக்கு கம்பேர்டபிள் ஆஹ் இருக்குமான்னு தான் தெரியல, சுருக்கமாக சொல்ல போனா அங்க தங்குறதுக்கு எதுவுமே இல்ல. கோவிலுக்கு பக்கத்தில ஒரு மடம் இருக்கு, மூலிகை பறிக்க வர்ற சித்தர்களும் வைத்தியர்களும் அங்கே தங்கிப்பாங்க, ஆனா நாம தங்க போறதோ மாசக் கணக்குல, சோ அங்கே தங்க முடியாது… சார் அங்க தங்கவும் விரும்ப மாட்டார்" என்று சொல்ல,
ஸ்ரீயோ, "அப்போ எங்க தாண்டா தங்குறது? யுவாக்கு இடம் மட்டும் செட் ஆகலைன்னா செம டென்ஷன் ஆயிடுவான்" என்று சொல்ல, பிரகாஷோ, "அதுக்கு தான் காட்டுக்கு சரி பக்கத்திலயே மரத்தால் செய்த காட்டேஜ் போல லைன்ல அஞ்சு வீடு இருக்கு, ரெண்டு பேர் தான் ஒரு ரூம்ல தங்கலாம். வாஷ் ரூம் எல்லாம் உள்ளேயே இருக்கு, அதுல நாலு நமக்கு புக் பண்ணிட்டேன், ஒன்னு யாரோ ஆல்ரெடி புக் பண்ணி இருக்காங்களாம்" என்று சொன்னான்.
அதைக் கேட்டு தலையை ஆட்டிய ஸ்ரீயோ, "அஞ்சும் புக் பண்ணி இருந்தா நல்லா இருந்து இருக்கும்… யுவா அண்ட் வைப் ஒன்னுல தங்கிக்கலாம், நீயும் நானும் ஒன்னுல தங்கிக்கலாம், மதனா அண்ட் ஸ்ருதிக்கு ஒன்னு செட் பெண்ணிடலாம், அடுத்ததுல சதிஷ், ராகவன் அண்ட் முருகன்னு மூணு பேர் தங்கணும், கஷ்டமா இருக்காதா?" என்று கேட்டான்.
பிரகாஷோ, "நான் விசாரிச்சதுல ஒரு ஜென்ட் தான் அடுத்த காட்டேஜ் புக் பண்ணி இருக்காம், சோ வேணும்னா கேட்டு பார்க்கலாம். வழமையா மூலிகை பறிக்க வர்றவர்னு சொன்னாங்க” என்று சொல்ல, ஸ்ரீயோ, "அப்போ கொஞ்ச நாள் தானே இருப்பான். நாம அப்புறம் அத புக் பண்ணிக்கலாம்ல" என்று சொன்னான், பிரகாஷோ, "இல்லயாம் சார், நிறைய நாளா வந்து தாங்குவார் போல,
அதனால தான் மடத்தில் நிற்காம இங்கே நிக்கிறவராம்னு சொன்னாங்க" என்று சொல்ல, ஆழ்ந்த மூச்செடுத்தவன், "சரி யாருன்னு பார்த்துட்டு பேசி பார்க்கலாம், மூணு பேர் ஒரே ரூம்னு சொல்லும் போது அத யுவராஜூம் விரும்பமாட்டான். அவன் தன்னோட கம்பேர்டபிள் மட்டுமே பார்க்காம கூட வர்றவங்களோடதும் பார்ப்பான்" என்று சொல்ல, பிரகாஷ் மெலிதாக புன்னகைத்துக் கொண்டான்.
மேலும் தொடர்ந்த ஸ்ரீயோ, "அப்போ சாப்பாடு" என்று கேட்க, பிரகாஷோ, "அங்கே எல்லாத்தையும் பார்த்துகிற பையன் கிட்ட பேசி இருக்கேன் சார், அவன் டெய்லி சமைச்சு தரேன்னு சொல்லி இருக்கான், ஒரு மாசத்துக்கு தேவையான அரிசி, காய்கறி எல்லாமே நாம கொண்டு வர்றோம் தானே? அப்போ பிரச்சனை இருக்காது. என்ன ஒன்னு கவரேஜ் கிடைக்காது, கரெண்ட் இருக்காது... அவசரத்துக்கு ஏதும் வாங்க வெளியே போக முடியாது, கடை எதுவுமே இல்லை" என்று சொல்ல, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டான் ஸ்ரீ.
இதே சமயம், ஓடிக் கொண்டு இருந்த வண்டியானது முன்னே கண்ட மேனிக்கு ஓடிக் கொண்டு வந்த ஜீப்பில் மோதி விடாமல் தப்பும் பொருட்டு விலகி செல்ல முற்பட, வண்டியில் இருந்தவர்களுக்கோ ஒரு அதிர்வுடன் கூடிய ஆட்டம் உண்டாக, நந்திதாவோ அந்த குலுக்கத்தில் பயந்து துணைக்காக சட்டென பிடித்துக் கொண்டாள் யுவராஜின் தொடையை.
அவனோ சின்ன ஷார்ட்ஸ் அணிந்து இருந்ததால் என்னவோ அவள் கையானது அவன் வெற்று ஸ்பரிசத்தில் பட, பாட்டுக் கேட்டுக் கொண்டு இருந்தவனோ சட்டென அவளை திரும்பி முறைத்துப் பார்த்தான். அவளும் வண்டி ஓரமாக நின்றதுமே கண்களை மூடி திறந்தவளோ அப்போது தான் அவன் முறைப்பைக் கண்டதுமே தனது கை இருக்கும் இடத்தை குனிந்து பார்த்தாள். அவளுக்கு சட்டென தூக்கி வாரிப் போட, கையை தன்னை நோக்கி இழுத்துக் கொண்டவளோ எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டே அவனை ஏறிட்டுப் பார்க்க,
அவனோ ஹெட் செட்டை கழட்டி விட்டு, அவளை நோக்கி குனிந்தவன், "எவ்ளோ தைரியம் இருந்தா மேல கை வைப்ப? ஆட்கள் இருக்காங்கன்னு பார்க்கிறேன், இல்லன்னா சீவிடுவேன்" என்று ரகசிய குரலில் உறுமலாக சொல்ல, அவளோ, "ஒரு பேலன்ஸுக்கு தான்" என்று நலிந்த குரலில் சொன்னாள். அவனோ அவளை முறைத்தவன், "பொல்லாத பேலன்ஸ்" என்று திட்டிக் கொண்டே இருவருக்கும் நடுவே கீழே கிடந்த பையை தூக்கி வைத்தவன், "பக்கத்துல வந்தா நடக்கிறது வேற" என்று சொல்லிக் கொண்டே சத்தமாக, "முருகன் என்னாச்சு?" என்று கேட்டான்.
அவனோ, "ஒண்ணும் பிரச்சனை இல்ல சார்" என்று சொன்னதுமே மறுபடி ஹெட் செட்டை காதில் போட்டவன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். அவன் மனமோ, "இவ இப்போ டச் பண்ணினதும் எனக்கு ஏன் அகைன் குதிரை சத்தம் கேட்டிச்சு?" என்று ஆராய ஆரம்பித்தது. அவளோ, "ரொம்ப ஓவரா தான் பண்ணிட்டே இருக்கான், நான் என்ன ஆசைப்பட்டா தொட்டேன், இந்த தொடையை தொடணும்னு எனக்கென்ன தலையெழுத்தா?" என்று நினைத்தவளுக்கு அவன் மீது எரிச்சலாக தான் இருந்தது. திருமணம் செய்த அன்று முத்தமிட்ட பிறகு அவர்களது ஸ்பரிசம் கூட ஒருவரை ஒருவர் தற்செயலாக தீண்டியது இல்லை.
எதேச்சையாக பக்கத்தில் இருக்கும் போதோ, குழந்தையை தூக்கும் போதோ எப்போதாவது உரசியது உண்டு, அவனோ சட்டென சுதாகரித்து விலகி விடுவான். அவள் மனமோ, "இப்படியும் இருப்பாங்களா?" என்று தான் நினைத்துக் கொண்டது. ஆரம்பத்தில் அவளுக்கு அவனை பிடிக்கவே இல்லை என்றாலும் போக போக அவன் மீது சிறிய ஈர்ப்பு உண்டானது என்னவோ உண்மை தான். மஞ்சள் கயிறின் மாயமோ என்னவோ? அவன் படங்களில் கூட நெருக்கமாக நடித்தது இல்லை, எந்த பெண்ணுடனும் கிசு கிசுக்கள் வந்தது இல்லை.
ஆனால் என்ன உடை விஷயத்தில் கஞ்சனாக தான் இருந்தான். அது அவளுக்கு எரிச்சலாக இருந்தாலும் அவனது ப்ரொபெஷன் என்று சொல்லி அதனை தாண்டி தான் வந்தாள். ஆனால் அவனது நடவடிக்கையை உற்று நோக்கியவளுக்கு தன்னை மட்டும் அல்ல ஏனைய பெண்களையும் அவன் நெருங்குவது இல்லை என்று அப்பட்டமாக தெரிய ஆரம்பித்தது.
சில நேரங்களில், "ஆண்மை இல்லையோ, கேயாக இருப்பானோ?" என்றெல்லாம் கூட யோசித்து இருக்கின்றாள். ஏன் இப்போதும் கூட அவளுக்கு அந்த சந்தேகம் இருக்கின்றது தான். ஆரம்பத்தில் அவனது இந்த விலகல் அவளுக்கு பிடித்து தான் இருந்தது, அவளுக்கு தான் இந்த கல்யாணம் கொஞ்சமும் இஷ்டம் இல்லை அல்லவா? ஆனால் குழந்தை பிறந்த பிறகு, இப்போதெல்லாம் அவன் விலகி போவதை ஜீரணிக்க முடியாமல் தவித்தாள்.
சில சமயம், மனது விட்டு பேசி விடலாமா? என்றெல்லாம் கூட யோசித்து இருக்கின்றாள். ஆனால் அந்தளவுக்கு அவளுக்கு தைரியம் தான் இருக்கவே இல்லை. அவளுக்கோ அவன் முதல் நாள் முத்தமிட்டதும், அதன் பிறகு விலகி செல்வதும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்க, அவனை புரிந்து கொள்ள முடியாமல் குழம்பி தான் போனாள். இதே சமயம், அந்த ஐந்தாவது காட்டேஜை புக் பண்ணி இருந்த ராம் அங்கே வந்து சேர்ந்து இருந்தான். அவனுக்கோ நந்திதாவுக்கு திருமணம் ஆன பிறகு மனதெல்லாம் ரணம் தான் இருந்தது.
காதலின் வலி அவனை உருக் குலைத்துக் கொண்டு இருக்க, ஒரு தடவை வைத்தியருக்காக மூலிகை பறிக்க ராஜ்கோட்டைக்கு வந்தவனுக்கோ அந்த இடம் மிகவும் நெருக்கமான உணர்வை கொடுக்க, மனதுக்கும் இதம் கிடைத்தது. அதன் பிறகு அடிக்கடி அங்கே வந்து தங்க ஆரம்பித்து இருந்தவனுக்கு இந்த முறை இருக்க போகும் பயணம் பெரிய திருப்புமுனை என்று அவனும் அறியவில்லை அங்கே வந்து கொண்டு இருந்த நந்திதாவும் அறியவே இல்லை.
அறைக்குள் வந்து அனைத்தையும் வைத்து விட்டு வெளியே வந்து இயற்கையின் காற்றை சுவாசித்தான் ராம். அப்போது அந்த இடத்தை கவனிக்கும் பதினெட்டே வயதான பையன் நடேசனோ, "சார், வழமையா நீங்க மட்டும் தான் இங்க தங்குவீங்க, இன்னைக்கு எல்லாமே புக் ஆகி இருக்கு" என்று சொல்ல, அவனை ஆச்சரியமாக பார்த்த ராம், "இங்க வந்து ஆட்கள் தங்க எல்லாம் ஆரம்பிச்சுட்டங்களா?" என்று கேட்க,
அந்த பையனோ, "எனக்கும் தெரியல சார், பார்ட்டி பெரிய இடம் போல" என்று சொல்ல, அவனோ, "ம்ம் பார்த்துடலாம்" என்று சொல்லிக் கொண்டே அங்கே இருந்த அருவியை நோக்கி குளிக்கச் சென்றான். அவனுக்கோ என்ன தான் குளியலறை காட்டேஜின் உள்ளே இருந்தாலும் அருவியில் குளிப்பது தான் சந்தோஷமாக இருக்கும் என்பதால் அவன் குளிக்க சென்று விடுவது என்னவோ அருவிக்கு தான்.
இதே சமயம், பயணத்தில் இருந்த நந்திதாவுக்கோ அவசரமாக வாஷ்ரூம் போக வேண்டி இருந்தது. எதுவென்றாலும் கணவனிடம் தான் பெண்கள் சங்கடம் இல்லாமல் கேட்பார்கள். ஆனால் நந்திதாவுக்கோ எந்த விஷயத்தையுமே அவனிடம் கேட்க முடியாத துர்பாக்கிய நிலையில் கஷ்ட்டபட்டுக் கொண்டு தான் அமர்ந்து இருந்தாள்.
அவள் மனமோ, "தண்ணி குடிக்காதேன்னு சொன்னா கேட்டியா?" என்று தனக்கு தானே திட்ட, "எப்போ போய் சேரும்னு கூட தெரியலையே" என்று நினைத்துக் கொண்டே பக்கத்தில் திரும்பி பார்க்க, யுவராஜோ கண் மூடி தான் அமர்ந்து இருந்தான். "இவன் கிட்ட கேட்கிறத விட, கேட்காம இருக்கலாம்" என்று யோசித்துக் கொண்டே சீட்டின் மேல் எம்பி பின்னால் இருந்த ஸ்ரீயை பார்த்து, "ஸ்ரீ" என்று அழைக்க, அவனோ பிரகாஷுடன் பேசிக் கொண்டே அவளை பார்த்தவன், "சொல்லுங்க நந்திதா" என்றான்.
அவளோ, "போக எவ்ளோ நேரம் ஆகும்?" என்று கேட்டவளது முகமே படபடப்பாக தான் இருக்க, பிரகாஷோ, "இன்னும் ரெண்டு மணி நேரம் மேடம்" என்று சொல்ல, அவள் மனமோ, "ரெண்டு மணி நேரம் இப்படியே இருக்க முடியுமா? வண்டி வேற இப்படி துள்ளுது" என்று நினைத்துக் கொண்டே சங்கடமாக திரும்ப போக, ஸ்ரீயோ, "எனி ஹெல்ப்?" என்று கேட்டான்.
அவளோ வேறு வழி இல்லாமல் சங்கடத்துடனேயே, "வாஷ் ரூம் போகணும்" என்று நலிந்த குரலில் சொல்லி விட்டு முன்னால் திரும்ப அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் யுவராஜ். அவளோ, "இப்போ எதுக்கு முறைக்கிறான்னு தெரிலயே" என்று நினைக்க, ஸ்ரீயோ குரலை செருமியவன், "இந்த பொண்ணு ரொம்ப பாவம்… வச்சு செய்ய போறான்" என்று நினைக்க, காதில் இருந்த ஹெட் செட்டை கழட்டி விட்டு, அவளிடம், "இப்போ அவன் கிட்ட என்ன கேட்ட?" என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்டான் அவன்.
அவளோ குரலை செருமிக் கொண்டே, "வாஷ் ரூம் போகணும்னு கேட்டேன்" என்று இழுக்க, அவனோ, "புருஷன் நான் பக்கத்தில இருக்கும் போது அவன் கிட்ட எதுக்கு கேட்ட? இப்போ எல்லாரும் நான் பொண்டாட்டிய சரியா கவனிச்சுக்கிறது இல்லன்னு சொல்லணும் அது தானே உன் பிளான்" என்று கேட்க, அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
அடுத்த கணமே, "இல்ல, அது" என்று இழுக்க, ஸ்ரீயோ, "விடு மச்சி" என்று எட்டி அவன் தோளில் கையினை வைக்க, யுவராஜோ, "இல்லடா, இவ எப்போவுமே ரொம்ப ஓவரா தான் போறா, நீ தான் ஹெட்லைன்ஸ் எல்லாம் பார்த்து இருப்பியே, யார் கிட்ட என்ன பேசுறதுன்னு எதுவுமே தெரியாது… இப்போ நான் பக்கத்தில இருக்கும் போது என் கிட்ட கேட்காம எதுக்கு உன் கிட்ட கேக்கணும்? அது தப்பு தானே" என்று கேட்க,
ஸ்ரீயோ வேறு வழி இல்லாமல், "தப்பு தான். தெரியாம பண்ணி இருப்பா, விடுடா" என்று அவளுக்காக கெஞ்சும் குரலில் கேட்டான். அவனை பற்றி மொத்தமாக அறிந்த நண்பர்களில் ஒருவன் அவன். அவன் எதிர்பார்ப்புகள் படி அனைத்தும் நடக்க வேண்டும் என்று நினைப்பவன், தானே அனைத்துக்கும் முதல்வனாக இருக்க வேண்டும் என்று எண்ணும் யுவராஜன் அவன். அவனைப் பொறுத்தவரை நந்திதா தன்னை அவமானப்படுத்தி விட்டதாக நினைத்து இருந்தான்.
அவளுக்கோ பயத்தில் சட்டென கண்கள் கலங்க, "தெரியாம பண்ணிட்டேன் சாரி, எனக்கு இப்போ அவசரமா வாஷ்ரூம் போகணும்" என்றாள். அவனோ அவள் கண்களை ஒரு கணம் பார்த்து விட்டு, "முருகன், ஏதாவது ஹோட்டல் பக்கத்தில இருந்தா வண்டிய ஸ்டாப் பண்ணு" என்று சொல்ல, அவனும் ஹோட்டலை பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்ட ஆரம்பிக்க, நந்திதாவை நோக்கி திரும்பியவன், "இங்க பாரு, உனக்கு என்ன வேணும்னாலும் என் கிட்ட தான் கேக்கணும்… இல்லன்னா நடக்கிறது வேற" என்று சொல்லிக் கொண்டே இருக்க, வண்டியும் ஒரு ஓரமாக நின்றது.