ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வேல்விழி 6

வேல்விழி 6

அடுத்த நாள் காலையில் நந்திதா கண் விழித்த நேரம், பக்கத்தில் யுவராஜ் படுத்த இடம் வெறுமையாக தான் இருந்தது.அவனோ நேரத்துக்கே ஆயத்தமாகி வெளியே சென்று இயற்கை காற்றை சுவாசித்து விட்டு உள்ளே மீண்டும் கதவை திறந்து கொண்டே நுழைந்தவனோ, "இன்னுமா நீ எந்திரிக்கல?" என்று கேட்டான்.

அவளோ, "இதோ ரெடி ஆகுறேன்" என்று சொல்லிக் கொண்டே அவசரமாக குளியலறைக்குள் நுழைய, சலிப்பாக தலையை இரு புறமும் ஆட்டி விட்டு வெளியேறி வந்தவன் கண்ணில் பட்டது என்னவோ தத்தமது அறைகளை மூடிக் கொண்டே வந்த பிரகாஷ் மற்றும் ஸ்ரீ தான். அவனைப் பார்த்து, "குட் மார்னிங் யுவா" என்று ஸ்ரீ சொல்ல, பிரகாஷும் காலை வணக்கம் தெரிவிக்க, ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்தவனோ, "ஸ்ருதி எங்க?" என்று கேட்டபடி வெளியே உணவு வைக்கப்பட்டு இருந்த திண்ணையில் அமர்ந்தான்.

ஸ்ரீயோ, "காலைல ரெடி ஆகி ஹீல் போட்டு வந்தாங்க ரெண்டு பேரும், நான் தான் ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டு வர சொல்லி அனுப்பி இருக்கேன்" என்று சொல்ல, அவனோ, "ம்ம், ஹீல் போட்டு நடக்க போறங்களாமா?" என்று சிரித்தபடி கேட்டான். ஆண்கள் மூவரும் ஷார்ட்ஸும் ஸ்போர்ட்ஸ் ஷூவும் அணிந்து காட்டுக்குள் நடப்பதற்கு வசதியாக வந்து இருக்க, மதனாவும் ஸ்ருதியும் கூட ஜீன்சும் ஷூவும் அணிந்து தான் வந்து இருந்தார்கள்.

யுவராஜ்ஜோ அவர்களை நோக்கி கையை காட்டியவன், "வா, வந்து சாப்பிடு" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட ஆரம்பிக்க, காவலாளிகள் தொடக்கம் அனைவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். இந்த சமயம் தான் தனது காட்டேஜை மூடிக் கொண்டே முருகனுடன் வெளியே வந்தான் ராம். அதனை உற்று நோக்கிய யுவராஜ்ஜோ, "இவன் தானா அந்த அஞ்சாவது காட்டேஜ் புக் பண்ணினவன்?" என்று கேட்க, பிரகாஷோ, "ம்ம்' என்று சொல்லிக் கொண்டே அவனை நோக்கி கையசைக்க, அவர்கள் இருவரும் சாப்பிடும் பொருட்டு அங்கே வந்து சேர்ந்தார்கள்.

பிரகாஷோ, "சார் தான் பேமஸ் ஆக்டர் தெரியும் தானே" என்று ராமிடம் கேட்க, அவனோ, "இல்ல சார், நான் படங்கள் பார்க்க மாட்டேன்" என்று ஒற்றை வரியில் பதில் சொல்ல, இறுகி போனது என்னவோ யுவராஜ்ஜின் முகம் தான். பிரகாஷோ, "படம் பார்க்க மாட்டீங்க சரி, சோஷல் மீடியாவை திறந்தாலே சார் தானே இருப்பார்" என்று சொல்ல,

அவனோ பாக்கெட்டில் இருந்த போனை எடுத்துக் காட்டியவன், "இந்த போன் தான் நான் பயன்படுத்திட்டே இருக்கேன்" என்று தனது பழைய போனைக் காட்ட, அவனை அலட்சியமாக பார்த்துக் கொண்டான் யுவராஜ். உடனே ஸ்ரீயோ, "அப்போ எப்படி இங்க வந்தீங்க?" என்று கேட்க, அவனோ, "ஒரு தடவை எங்க ஊர்ல இருக்கிற சித்தர் கூட இங்க வந்தேன், அதுக்கப்புறம் இங்க வந்தாலே மனசு ஏதோ இதமா இருக்கும்... பாதையும் பழகிக்கிட்டேன், கிடைக்கிற பஸ்ஸில ஏறியோ, நடந்தோ எப்படியோ வந்து சேர்ந்திடுவேன்" என்று சொன்னான்.

அவனை மேலிருந்து கீழ் பார்த்த யுவராஜ்ஜோ, "எத்தனையாவது வரைக்கும் படிச்சு இருக்க?" என்று கேட்க, அவனோ, "அக்ரிகல்ச்சர் டிக்ரி படிச்சி இருக்கேன் சார்" என்க, அனைவரின் புருவமும் ஆச்சரியத்தில் ஒரு கணம் மேலே ஏறி இறங்கியது. யுவராஜ்ஜோ அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "ம்ம் இருந்து சாப்பிடு" என்று சொல்ல, அவனோ, "இல்ல சார், கொண்டு வந்த சாப்பாடு இருந்திச்சு நானும் முருகனும் சாப்பிட்டோம்" என்று முடிக்க முதல் சட்டென கோபம் எகிறியது யுவராஜூக்கு.

அடுத்த கணமே, "என் கூட வந்த டிரைவருக்கு சாப்பாடு கொடுக்க நீ யாரு?" என்று கர்ஜனையாக கேட்க, அனைவருமே வாயடைத்து போக, முருகனுக்கு பயத்தில் வியர்த்து வழிந்தது. எச்சிலை விழுங்கி கொண்டே, "சார், நான் கொஞ்சமா தான் சாப்பிட்டேன்… இங்கேயே சாப்பிடுறேன்" என்று பிளேட்டை தூக்க, யுவராஜ்ஜோ ராமை அழுத்தமாக பார்த்தவன், "இங்க பாரு, உன் லிமிட் எதுவோ அதோட நின்னுக்கோ, அவனுக்கு சாப்பாடு கொடுக்க எனக்கு தெரியும்" என்று சொன்னான்.

ஏனோ அவனைப் பார்த்ததில் இருந்தே யுவராஜ்ஜூக்கு பிடிக்கவே இல்லை. ராமோ அவனை புரியாமல் பார்த்துக் கொண்டே இருக்க, ஸ்ரீயோ, "அது இருக்கட்டும், காலேஜ்ல எல்லாம் படிச்சு இருக்க, ஆனா படம் பார்க்கல, சோஷல் மீடியா பக்கம் போறது இல்லன்னு சொல்றது நம்புற போலவே இல்லையே" என்று சொல்ல,

அவனோ, "நாங்க ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பம் சார், படிக்கும் போது படிப்பை தவிர எதுலயும் கவனம் செலுத்துனது இல்ல… படிப்பு, விவசாயம் இத தவிர நான் செய்த இன்னோர் காரியம் காதல் தான், அதுலயும் தோத்து போயிட்டேன்" என்று சொன்னான் விரக்தி குரலில். யுவராஜ்ஜோ அவனை அலட்சியமாக பார்த்தவன், "லவ் பெயிலியர் கேசா?" என்று கேட்க, அவனோ "ம்ம்" என்றான்.

ஸ்ரீயோ, "இன்டெரெஸ்ட்டிங், அந்த பொண்ணு நாமம் போட்டாளா?" என்று கேட்க, அவனோ, "ஐயோ அப்படி எல்லாம் சொல்லாதீங்க சார், ரொம்ப நல்ல பொண்ணு அவ, அவ அப்பா தான் பெரிய இடம், ஊர்ல இருந்து அழைச்சிட்டு போய் பெரிய இடத்து மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வச்சார், ஒரு தடவை காரணமே இல்லாம என்னை கடத்தி போய் அடி அடின்னு அடிச்சாங்க, என்னை வச்சு மிரட்டி தான் அவளை கல்யாணத்து சம்மதிக்க வச்சாங்கன்னு நினைக்கிறன்... அங்கே இருந்து வரும் போது உயிர் மட்டும் தான் மிஞ்சி இருந்திச்சு, திரும்ப எழுந்து நடக்கவே ரெண்டு மாசம் ஆச்சு" என்று சொன்னான்.

பிரகாஷோ, "ஒஹ்" என்று பரிதாபமாக கேட்டவன், "அதுக்கப்புறம் அந்த பொண்ண தேடி போகலையா?" என்று கேட்க, அவனோ, "இல்ல சார், எதுக்கு அவ வாழ்க்கையை கெடுக்கணும்? எங்க இருந்தாலும் சந்தோஷமா இருக்கட்டும்" என்று சொன்னான். ஸ்ரீயோ, "அவ பெயர் என்ன?" என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, ஸ்ருதியோ, "நந்திதா குட் மார்னிங்" என்று சொல்ல, சட்டென அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்த ராமுக்கு தூக்கி வாரிப் போட்டது.

அங்கே கலங்கிய கண்களுடன் நின்று இருந்தாள் நந்திதா. அவன் இறுதியாக பேசிய வார்த்தைகளை கேட்டுக் கொண்டவள் மனமோ, "நான் சந்தோஷமா இல்ல ராம்" என்று தான் உச்சரித்துக் கொண்டது. அவளோ அவனை பார்க்காமலே வந்து அங்கே யுவராஜ் அருகே இருந்த இடத்தில் அமர, ஸ்ரீயோ, "யாரையுமே இன்ட்ரடியூஸ் பண்ணல பாருங்களேன்" என்று சொல்லிக் கொண்டே, "இது தான் பேமஸ் ஆக்டர் யுவராஜ், இது அவரோட வைப் நந்திதா, நான் ஸ்ரீ, யுவாவோட மேனேஜர் அண்ட் பிரென்ட், இது சுருதி அண்ட் திஸ் இஸ் மதனா" என்று அனைவரையும் அறிமுகப்படுத்த,

அவனோ வலுக்கட்டாயமாக சிரித்தபடி அனைவரையும் பார்த்து தலையசைத்தவன் விழிகளோ ஒரு கணம் நந்திதாவில் படிந்து மீண்டது. சாப்பாட்டை எடுத்த நந்திதாவுக்கோ உணவு இறங்க மறுத்தது. அவனைக் கண்டதுமே அவளுக்கு பயம், வலி என்று அனைத்தும் கலந்த உணர்வு, அவன் மீது காதல் இப்போது இல்லை என்றாலும் அக்கறை இருக்க தான் செய்தது. அவன் தனது தந்தையால் பட்ட கஷ்டங்களை நினைத்தவள் கலங்கி தான் போனாள்.

யுவராஜ்ஜோ, "நீ உன் லவ்வர் பெயர் சொல்லவே இல்லையே" என்று கேட்க, அவனோ குரலை செருமியவன், "மலர்விழி" என்று தனது அத்தை மகளின் பெயரை சொல்லி விட்டான். அவனோ, "ம்ம்" என்று மட்டும் சொல்லிக் கொள்ள, சாப்பிட்டு முடித்தவர்கள் தமது பயணத்தை ஆரம்பித்து இருந்தார்கள். தங்களோடு புறப்பட்ட ராமை மேலிருந்து கீழ் பார்த்த யுவராஜ், "நீயும் வர்றியா?" என்று கேட்க,

பிரகாஷோ, "ஆமா சார், உள்ளே வந்து பார்க்கணும்னு ஆசைப்பட்டார். உங்களுக்கு பிடிக்கலைன்னா" என்று இழுக்க, அவனோ, "வரட்டும்" என்று ஒற்றை வார்த்தை மட்டும் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தான். நீண்ட ஒற்றையடிப் பாதையினால் அவர்கள் பயணம் ஆரம்பமாக, நந்திதாவும் காட்டில் நடக்க கூடிய வகையில் ஜீன்ஸ், ஷேர்ட், ஷூ சகிதமாக தான் வந்து இருந்தாள்.

முன்னால் ஒரு காவலாளி செல்ல, அடுத்து யுவராஜ்ஜோ ஸ்ரீயுடன் செல்ல, அவனை தொடர்ந்து மூன்று பெண்களும் நடந்து வர, அவர்களுக்கு பின்னால் பிரகாஷும், ராமும் நடந்து வந்தார்கள். இறுதியாக அடுத்த காவலன் நடந்து வந்தான். முருகனோ ஓய்வு தேவை என்று காட்டேஜிலேயே தங்கி இருந்தான். நடந்து செல்லும் கணத்தில், பின்னால் வந்த ராமை ஒரு கணம் நந்திதா திரும்பி பார்த்தாள். அவனோ அவளை பார்த்து வலி நிறைந்த புன்னகையை சிந்த, அவளோ ஆழ்ந்த பெருமூச்சுடன் முன்னால் திரும்பிக் கொண்டாள்.

அக்கணம், அவளும் கீழே பரவி கிடந்த மரங்களில் வேரைப் பார்க்காமல் தடுக்கி விழப் போக, "நந்து பார்த்து" என்று சொல்லிக் கொண்டே பின்னால் வந்த ராம் அவளது தோள்களை இரு கைகளால் பற்றிக் கொண்டான். அவன் பிடித்ததில் தான் அவள் விழாமல் சமநிலை அடைந்து இருக்க, கேட்ட சத்தத்தில் சட்டென திரும்பி பார்த்து இருந்தான் யுவராஜ்.

நந்திதாவுக்கோ இந்த சந்தர்ப்பத்தை எப்படி தான் எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. கணவன் முன்னே அவளது காதலன் தோள்களை பற்றி இருக்கின்றான். யுவராஜின் விழிகளும் ராமின் தோள்களில் பதிந்து இருக்க, "ராம் கையை எடுங்க" என்று சட்டென சொன்னவளுக்கு பயத்தில் வியர்த்து வழிந்தது.

யுவராஜ்ஜோ ராம்மை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன், "இப்போ எதுக்கு அவளை பிடிச்ச?" என்று கேட்டுக் கொண்டே நடப்பதை நிறுத்தி விட்டு கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பிக்க, அவன் அருகே வந்த ஸ்ரீக்கே இதயம் நின்று துடித்தது. "ஐயோ!! இப்போ என்ன ஆக போகுதோ?" என்று தான் அனைவரும் நினைக்க, ராமோ, "விழ போனாங்க சார்.. பிடிச்சேன்" என்றான்.

அவனோ, "விழுந்தா விழட்டுமே? நானே சும்மா வரேன், உனக்கென்ன அப்படி ஒரு அக்கறை?? அதுவும் நந்து… நானே அவளை நந்து பொந்துன்னு கூப்பிட்டதே இல்ல, பார்த்து அஞ்சு நிமிசத்தில செல்ல பெயர் எல்லாம் வைக்கிற அளவுக்கு வந்துடுச்சா??" என்று கேட்க, நந்திதாவோ பயத்தில் எச்சிலை விழுங்கிக் கொண்டாள்.

ராமோ கொஞ்சமும் பயப்படாமல், "நந்திதாவை தெரியும் சார், எங்க வீட்டு பக்கத்தில தான் அவங்க பாட்டி வீடு" என்று சொல்ல, இப்போது தான் யுவராஜின் முகம் தெளிய, "ஒஹ் அது தான் இந்த செல்ல பெயரா??" என்று ஒரு மார்க்கமாக கேட்க, ராமோ பதில் சொல்லாமல் மௌனமாக நின்றான். யுவராஜ்ஜோ, "இங்க பார், பூபாலசிங்கத்தோட மகளை நீ எப்படி வேணும்னாலும் கூப்பிட்டு இருக்கலாம். இப்போ அவ என்னோட வைப், நந்து பொந்துன்னு கூப்பிட்டா நடக்கிறது வேற, அண்டர்ஸ்டாண்ட்?" என்று கர்ஜிக்கும் குரலில் கேட்க,

அவனும் சம்மதமாக தலையாட்டினான். யுவராஜ்ஜோ நந்திதாவை நோக்கி சொடக்கிட்டவன், "முன்னாடி வா" என்று அழைக்க, அவளும் அவன் அருகே சென்றாள். அனைவரும் இந்த சலசலப்பின் பின்னர் பயணத்தை தொடர, யோசனையில் சென்றவள் மீண்டும் தடக்கி விழ போக, சட்டென அருகே வந்த யுவராஜின் கரத்தை கீழே விழாத வண்ணம் இறுகப் பற்றிக் கொண்டவளோ சமநிலை அடித்து விட்டே நிமிர்ந்த கணம், அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.

அவனோ அவளை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டே இருக்க, அவளோ, "ஆத்தி இவன் கையை பிடிச்சிட்டோமா?" என்று நினைத்தபடி சட்டென கையை தன்னை நோக்கி இழுக்க, அவனோ, "குடிகாரியா நீ?? பார்த்து நடக்க மாட்டியா?? அப்படி தடக்கினாலும் கீழ விழ வேண்டியது தானே? எதுக்கு என் கைய பிடிச்ச? எத்தனை தடவை தொட்டு பேச வேணாம்னு சொல்லி இருக்கேன்" என்று சீற, அவளுக்கோ அவமானமாகி போனது.

சங்கடமாக குனிந்தவளோ, "சாரி" என்க, அவளை முறைத்து விட்டு விறுவிறுவென முன்னே நடந்தான். நந்திதாவை பரிதாபமாக பார்த்த அனைவருக்குமே, "எப்படி இவன் கூட இவ வாழுறா?" என்கின்ற எண்ணம் தான் ஓடிக் கொண்டு இருந்தது ராம்மையும் சேர்த்து. நீண்ட நேரம் நடந்தவர்கள் முதலில் சென்றது அங்கே வாயிலில் இருக்கும் பாழடைந்த கோவிலுக்கு தான். அந்த கோவிலைப் பார்த்ததுமே யுவராஜின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்க, நந்திதாவின் மனமோ வலிக்க ஆரம்பித்தது.

அவளோ, "இப்போ எதுக்கு எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு?" என்று நினைத்துக் கொண்டே அந்த கோவிலை நெருங்க, அங்கே கோவில் வாசலில் அமர்ந்து இருந்த சித்தர் ஒருவரோ, "யுவராஜா வந்துட்டியா?" என்று கேட்டார்.

யுவராஜ்ஜோ அருகே வந்த பிரகாஷிடம், "இவருக்கு எப்படி என் பெயர் தெரியும்?" என்று கேட்க, அவனோ, "சித்தர்கள் முக்காலம் அறிஞ்சவங்கன்னு சொல்வாங்க, இவர் தான் இந்த கதையை எனக்கு சொன்னார்” என்று சொல்லிக் கொண்டே ஷூவை கழட்டினான். ஸ்ரீயோ, "பழைய கோவில் தானே பிரகாஷ், ஷூ போட்டு உள்ளே போக முடியாதா?" என்று கேட்க,

பிரகாஷோ, "போகலாம் சார், ஆனா எனக்கு மனசு கேக்காது" என்று சொல்ல, அனைத்துக்கும் ஏட்டிக்குப் போட்டி நிற்கும் யுவராஜே அந்த சித்தரைப் பார்த்துக் கொண்டே ஷூவை கழட்டினான். அவனை தொடர்ந்து ஒவ்வொருவரும் ஷூவை கழட்டி விட்டு உள்ளே செல்ல, முதலில் வலது காலை எடுத்து வைத்த யுவராஜின் மேனியில் ஒரு புது வித உணர்வு. அடி மேல் அடி வைத்து வர, அவன் அருகே தான் நந்திதாவும் நடந்து வந்தாள்.

அம்மன் கோவிலின் வாசலில் பெரிய கல்வெட்டு இருக்க, அதில் இரு உருவங்கள் செதுக்கப்பட்டு இருக்க, பிரகாஷோ, "இது தான் சார் நான் உங்களுக்கு அனுப்பிய கல்வெட்டு" என்று சொன்னான். யுவராஜோ செதுக்கப்பட்ட அந்த இரு உருவங்களை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே நின்று இருக்க, அதனை நோக்கி அடி மேல் அடி வைத்து வந்தாள் நந்திதா.

அதனை நெருங்க நெருங்க, அவள் இதயம் இன்னுமே வலிக்க ஆரம்பிக்க, அவளோ கரத்தை எடுத்து மெதுவாக அதில் வைத்த கணத்தில், கோவிலில் கட்டி இருந்த மணிகள் அணைத்தும் காற்றுக்கு ஆடி அந்த இடமே மணி ஓசையில் நிறைந்து இருக்க, நந்திதா உட்பட அனைவருமே சுற்றி ஆடிக் கொண்டு இருந்த மணிகளை பார்த்தார்கள்.

அந்த சித்தரோ, "இப்போவாச்சும் உன் கோபம் குறைச்சுதா தாயி" என்று நந்திதாவை பார்த்து கேட்க, அவளுக்கு எதுவுமே புரியவே இல்லை. ஏதோ ஒரு புது யுகத்தில் இருப்பது போன்ற உணர்வு. குழப்பமான மனநிலையுடனேயே அவள் கையை வைத்து இருந்த கல்வெட்டில் இருக்கும் வார்த்தைகளை வாசிக்க, அவள் அருகே நின்று இருந்த யுவராஜ்ஜோ, "என்ன எழுதி இருக்கு?" என்று கேட்டான்.

பிரகாஷ் அந்த கல்வெட்டில் ஒரு பகுதியை மட்டுமே அனுப்பி இருக்க, மொத்த கல்வெட்டையும் வாசித்தவளோ, யுவ்ராஜிடம் திரும்பி, "ராஜகோட்டை சாம்ராஜ்ஜிய அரசர் யுவராஜ் மற்றும் நந்திதா ராணின்னு முதல் வரியில இருக்கு... ஆனா அதுக்கு கீழ சாப விமோசனம்னு ஏதோ எழுதி இருக்கு, மேல இருக்கிற எழுத்தும் கீழே இருக்கிற எழுத்தும் வேற வேறயா இருக்கு... வேற வேற ஆட்கள் எழுதி இருப்பாங்கன்னு தோணுது" என்று சொல்ல, அவனோ புரியாமல் பிரகாஷைப் பார்க்க, அவனுமே, "இந்த சித்தர் கிட்ட கேட்டு பார்க்கலாம் சார்" என்று சொன்னான்.

யுவராஜ்ஜூம், "ம்ம்" என்று சொல்லி விட, சித்தர் அருகே சென்ற பிரகாஷோ, "ஐயா" என்று அழைக்க, அவரோ "விளக்கம் வேணுமா உனக்கு? எழுதுனவன் இங்க இருக்கும் போது என் கிட்ட கேட்க வர்றியே பைத்தியக்காரா" என்று சொல்லிக் கொண்டே எழுந்தவர் அங்கே நின்ற யுவராஜ்ஜை பார்த்தார்.


அவனோ, "இத நானா எழுதினேன்? என்ன உளர்றீங்க? எனக்கு இது என்னன்னு கூட தெரியல" என்று சொன்னவனோ பிரகாஷிடம், "ஐ திங் ஹீ இஸ் கிரேசி" என்றான்.
 
Top