
கண்ணாளா… எனை ஆளவா…
அத்தியாயம் 1
காவேரி கருத்தரித்தல் மையம்
என்ற பெயர் பலகையை தாங்கியிருந்த கட்டிடத்திற்குள் நுழைந்தனர் பார்த்தீபனும், பிருந்தாவும்..
ஏற்கனவே அப்பாயின்ட்மெண்ட் வாங்கிவிட்டதால், நீண்ட வரிசையில் அவர்களையும் அமர வைத்தனர் அங்கிருந்த சிற்றுழியர்கள்.
பிருந்தாவிற்கு அங்கு வரவே இஷ்டமில்லை. கணவனின் கட்டாயத்தில் வந்து அமர்ந்திருக்கிறாள்..
பார்த்தீபனோ, எந்தவித சலனமும் இல்லாமல்.. அங்குமிங்கும் நடப்பவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்..
பிருந்தா தன்னைச் சுற்றியிருந்த பெண்களை பார்த்தாள்..
ஒரு சிலர் தன் கணவர்களுடன் வந்திருந்தனர்.. ஒரு சிலர் தன் தாயுடன் வந்திருந்தனர்.. ஒரு சிலர் தன் மாமியாருடன் வந்திருந்தினர் போலும்.. சற்று முகத்தை அழுகையுடன் வைத்திருந்தனர்..
அழுகையை தாண்டி அத்தனை பேர் கண்களிலும் ஒரு வித ஏக்கம்..
குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது அவ்வளவு சாதாரணமான காரியமல்ல..
வலி.. குழந்தை வயிற்றில் உருவான நாளில் வாந்தி, மயக்கம், தலைசுற்றல்.. விரும்பியதை சாப்பிட முடியாமல் போவது என எத்தனையோ உபாதைகளை பெண்கள் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது..
அது மட்டுமா? பிள்ளைப் பிறப்பு.. வலியின் உச்சம்.. உடல் எலும்புகள் சிறிது நகர்ந்தால் தாங்க முடியாத ஆண்களுக்கு, அவன் ஆண்மகன் என பறைசாற்ற பெண்கள் தாங்கிக் கொள்ளும் பெரும் தியாகம் தான் பிள்ளைப் பேறு..
வலிக்கும் என தெரிந்தே பிள்ளையை தாங்கிக் கொள்வது என்பது சாதாரணமல்லவா..
அந்த வலியை தாங்கிக் கொள்ள தயாராக வந்துள்ள பெண்களைப் பார்த்த பிருந்தாவிற்கும் கண்கள் கலங்கியது..
இதில் எத்தனை பேர் ஏக்கமாய் வந்திருப்பர்.. எத்தனை பேர் அவமானப்பட்டு வந்திருப்பார்கள் என நினைத்த பிருந்தாவின் இதழ்ககள் விரக்தியாக வளைந்தது..
அவர்களைப் பார்த்த பிருந்தாவிற்குள் சுளீரென்ற வலி வந்துப் போனது..
அவளும் கணவனுடன் தான் வந்திருக்கிறாள்.. ஆனால்.. என அவள் மனம் பழையதை எண்ணப் போகும் வேளையில்..
“மிஸ்ஸஸ்.பிருந்தா பார்த்தீபன்..” என்றழைப்பில் சட்டென்று மீண்டு விட்டாள் பிருந்தா..
அழைத்ததும் தான் தாமதம் வேகமாக எழுந்து நின்றான் பார்த்தீபன்.. இன்னும் மனம் ஒரு நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்த பிருந்தாவின் கைச்சந்தை அழுந்தப் பற்றியவன், சட்டென்று அவளை எழுப்பி நிற்க வைத்தான்..
“வா பிருந்தா.. டாக்டர் கூப்பிடுறாங்க..” என விறுவிறுவென அவளை இழுக்காத குறையாக இழுத்துச் சென்ற பார்த்தீபனை பார்க்கவே ஏனோ வெறுப்பாக இருந்தது அவளுக்கு..
ஒரு வருடத்திற்கு முன்பாக காதலித்த பார்த்தீபன் இப்பொழுது கசந்து போய் நிற்கிறான்.
டாக்டரின் அறையில் அமர்ந்திருந்தனர் இருவரும்..
“உங்க பேரு..” என டாக்டர் பிருந்தாவை பார்த்து கேட்டார்..
“பிருந்தா டாக்டர்” என பதில் சொன்னது என்னவோ பார்த்தீபன் தான்..
“சொல்லுங்க ம்மா.. உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை வருஷம் ஆகிருச்சி..” என டாக்டர் கேட்டு முடிக்கவில்லை..
“எங்களுக்கு குழந்தை பிறக்காது டாக்டர்.. எங்களுக்கு ஒரு ஸ்பெர்ம் டோனர் தான் வேணும்.. அதுக்குத்தான் உங்களைப் பார்க்க வந்தோம்..” என்ற பார்த்தீபனை அழுத்தமாக பார்த்தார் டாக்டர்..
அவனை அழுத்தமாக பார்த்தபடி அருகில் அமர்ந்திருந்த பிருந்தாவைப் பார்க்க, அவள் முகத்தில் எந்த வித சலனமும் இன்றி முகமோ நிர்முலமாக இருந்தது..
ஒரு வேளை கணவன் கொடுமையோ? என அவள் கண்களை உற்றுப் பார்க்க.. அழுததற்கான எந்த வித அடையாளமும் அவள் கண்களில் இல்லை..
“சார் இதுக்கு முன்னாடி ஏதாவது ஹாஸ்பிட்டல் ட்ரீட்மெண்ட் பண்ணியிருக்கீங்களா?.. ரிப்போர்ட் இருந்தா கொடுங்க சார்..” என டாக்டர் பார்த்தீபனை நோக்கி கை நீட்டினார்..
பிருந்தா தான் வந்ததில் இருந்து வாயே பேசவில்லையே..
“இல்லை மேம். நாங்க இதுவரைக்கு எந்த ஹாஸ்பிட்டலும் போனதில்லை.. எந்த செக்கப்பும் பண்ணதில்லை..” என்றவனை அதிர்ந்து பார்த்தார் டாக்டர்..
“வாட்ட்ட்.. எந்த செக்கப்பும் பண்ணதில்லையா?.. என்ன விளையாடுறீங்களா?.. செக்கப் பண்ணாம எப்படி சார் குழந்தை பிறக்காதுன்னு சொல்லுறீங்க?” என சற்று காட்டமாக கேட்டார் டாக்டர்
“அவருக்கு ஆண்மை கிடையாது.. இது அதுக்கான ரிப்போர்ட்..” என தான் கொண்டு வந்த கைப்பையினுள் இருந்து ரிப்போர்ட்டை எடுத்து, டாக்டரிடம் நீட்டினாள் பிருந்தா..
தன்னருகில் அமர்ந்திருந்தவளை எரிப்பது போல் பார்த்தான் பார்த்தீபன்..
“இதை எதுக்கு நீ எடுத்துட்டு வந்தே?..” என பிருந்தாவின் தோள் அருகே சாய்ந்து, பற்களைக் கடித்துக் கொண்டு கேட்ட பார்த்தீபனை திரும்பி ஒரு பார்வை தான் பார்த்தாள்.
“நீ சொன்னால் நான் கேட்க வேண்டுமா?.” என்ற பார்வை தான் அது..
“ஓகே சார் உங்க ரிப்போர்ட் எல்லாம் பார்த்தேன்.. நீங்க சொன்ன மாதிரி.. ஸ்பெர்ம் டோனர்க்கு நாங்க ஏற்பாடு பண்ணிடுறோம்.. அதுக்கு பில் மட்டும் பே பண்ணிடுங்க..” என்ற டாக்டருக்கு தலையாட்டி விட்டு இருவரும் வெளியே வந்தனர்..
ஏழு மாதங்களுக்குப் பிறகு..
கண்ணாடி முன்பாக தன் ஏழு மாத வயிற்றை வருடிக் கொண்டிருந்தாள் பிருந்தா..
பிருந்தாவனத்தில் பிறந்த ராதையோ இவள் எனும் அளவிற்கு பொலிவான தோற்றம் அவளுடையது..
அவளின் தோளில் கை வைத்த கணவனின் மார்பில், பின்னோக்கி சரிந்தவளின் இமைகளில் கண்ணீர்த் துளிகள்..
“என்னாச்சி பிருந்தா?.. ஏதாவது வலிக்குதா?..” என்றவனை நோக்கி திரும்பியவள்.. அவனை மென்மையாக அணைத்துக் கொண்டாள்..
“எத்தனை நாள் வலி பார்த்தீபா இது?.. நானும் இந்த தருணத்தை அனுபவிப்பேன்னு கனவுல கூட நினைக்கலை.. நீங்க குழந்தை நார்மலா பெத்துக்கலாம்னு சொல்லும் போது கூட வலியை நினைச்சு நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா?.. ஆனா இப்போ” என்றவளின் கண்கள், அவளையும் மீறி கண்ணீரில் கசிந்தது..
“இது நம்ம குழந்தை பிருந்தா.. இதுக்கப்புறம் உன் கண்ணுல கண்ணீர் வரவே கூடாது.. இந்த குழந்தையால நம்மளுக்கு ராஜ யோகம் அடிச்சிருக்கு.. இனி நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையே சொர்க்கம் தான்” என்றபடி அவளின் முன்பாக மண்டியிட்டு அமர்ந்தவன், அவளின் சேலையின் மடிப்பை நீவிவிட்டான்..
தன் கணவனின் அளவற்ற அன்பில் திக்கித் திணறிக் கொண்டிருந்தாள் பிருந்தா..
இந்த ஏழு மாதங்களாய் அவன் காட்டிய அன்பு அளப்பரியது அல்லவா..
அவளுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகள் எதுவுமே வரவில்லை..
முதல் 5 மாதத்தில் ஸ்கேன் ரிப்போர்ட்டில், ஒரு ஜீவன் தன் வயிற்றில் இருப்பதை அவள் உணரவேயில்லை.
சிறு துடிப்பு, சிறு பாரம் என எந்த வித மாற்றமும் தன் வயிற்றில் இருப்பதை போன்று அவள் உணரவில்லை..
ஒரு வேளை தான் கர்ப்பமாக இல்லையா? என கவலைக்கூட சில நேரம் பட்டிருக்கிறாள்..
ஆனால் அத்தனைக்கும் வடிகாலாக ஆறாம் மாத தொடக்கத்தில் வேலை விஷயமாக பேங்க் சென்றவளுக்கு நீண்ட நேரம் பசி, தாகம் ரெண்டும் கலந்து தவித்துக் கொண்டிருந்த வேளையில், குழந்தை விட்டது ஒரு உதை..
வயிற்றுக்குள் திடீரென தோன்றும் மாற்றத்தை உணர்ந்தவளின் கண்களில் கண்ணீர் பெருகியது..
தன் குழந்தை உதைக்கிறது.. தன்னை உதைத்து தள்ளுகிறது என சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டேயிருந்தது..
அவளின் கண்ணீரை பேங்க்கிற்கு வருவோர், போவோர் வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்..
ஆனால் அவளுக்கு முதல் முதலாக தன் குழந்தையின் துடிப்பை உணர்ந்த தருணம், வாழ்வின் மறக்க முடியாத பொக்கிஷமான நிமிடங்களாக மாறியது..
அதன் பின் தான் இந்த லக்ஷரி அப்பார்ட்மெண்டை வாங்கினார்கள் பார்த்தீபனும், பிருந்தாவும்..
பார்த்தீபனுக்கு தாய் மட்டுமே.. பிருந்தாவிற்கு அதுவும் கிடையாது.
அதனால் அவள் அனாதையெல்லாம் இல்லை..
கொஞ்சம் பணக்கார அனாதை..
தந்தைக்கும், தாய்க்கும் ஒத்து வரவில்லை..
விவாகரத்து வாங்கி, புதிய வாழ்க்கையை தொடங்கி விட்டார்கள்..
அவர்களின் புதிய வாழ்க்கையில் பிருந்தாவிற்கு இடமே இருந்ததேயில்லை..
பணம் மட்டும் மாதாமாதம், அவளுக்கென்று தொடங்கியிருக்கும் அக்கவுண்டிற்கு தவறாமல் வந்து சேரும்..
அந்தப் பணத்தை செலவு பண்ணும் வேளையில் அவளின் இதழ்களில் என்றுமே விரக்தியான புன்னகை தான்..
தாயின் அன்பு தரமுடியாததையா அந்த பணம் அவளுக்கு கொடுத்து விடும்..
தந்தையின் பாதுகாப்பை அந்த பணத்தினால் கொடுத்திட முடியுமா என்ன?..
அவள் ஒரு வருடம் காதலித்து கைப்பிடித்த கணவன் தான் பார்த்தீபன்..
தன் முன்னால் மண்டியிட்டவனின் உச்சிமுடியை கோதி விட்டவாறே, அவன் தலையில் முத்தம் பதிக்க செல்ல..
“பார்த்தீபா.. உன் கம்பெனி முதலாளி வந்திருக்காரு பாரு..” என்றதும்.. அதுவரை இருந்த மோனநிலை அறுந்து.. சட்டென்று எழுந்து நின்றான் பார்த்தீபன்..
அதுவரை ஆசுவாசமாக இருந்த பார்த்தீபன் சற்று பரபரப்பானது போன்ற தோற்றம் வந்தது பிருந்தாவிற்கு..
“யாரு வந்திருக்கா பார்த்தீபா.. உன் முதலாளியா? நம்ம பங்க்சனுக்கா? அவரை ஏன் இன்வைட் பண்ண?.. உன்னோட வேலை செய்யுறவங்களை கூட நீ அழைக்கலை தானே..” என்றவளின் தோளில் கைப்போட்டவாறே, வெளியே அழைத்துச் சென்றான்..
அங்கு பிருந்தாவின் வளைகாப்பிற்கான அத்தனை ஏற்பாடுகளும் அரங்கேறிக் கொண்டிருந்தது..
அதைப் பார்க்கும் பொழுதே மனதில் ஒரு வித நெகிழ்வு.. எத்தனை நாள் கனவு இது?.. எத்தனை நாள் அழுதிருப்பாள்.. எத்தனை நாள் ஏங்கி தவித்திருப்பாள்..
“பார்த்தீபா..” என அவனுடன் சேர்ந்து அங்கிருந்த நீள் சோபாவில் சென்று அமர்ந்தாள்..
பார்த்தீபனின் பார்வை அங்கு நின்று, அவர்களையே துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த அவ்வியக்தனின் மேல் தான் நிலைக்குத்தி இருந்தது..
அவனின் பார்வையோ, அங்கு சேரில் சர்வ அலங்காரத்துடன் அமர்ந்திருந்த பிருந்தாவின் மேல் தான் அழுத்தமாக பதிந்தது.
ஆரம்பித்தது பிருந்தாவின் வளைகாப்பு வைபவம்..
சீரோடும், சிறப்புமாக நடந்த வளைகாப்பின் முடிவில் சோர்வின் உச்சத்தில் இருந்தாள் பிருந்தா..
புதிதாக குடியேறியிருந்ததால் அந்த அப்பார்ட்மெண்டில் அனைவரையும் அழைத்திருந்தனர் பார்த்தீபனும், பிருந்தாவும்..
அத்தனை சடங்குகள் நடந்துக் கொண்டிருந்த வேளையிலும் அவ்வியக்தன் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை..
அவளையே தான் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்..
அவனின் பார்வையில் கண்களை சுருக்கினாள் பிருந்தா.. ஆனால் அவள் இருக்கும் நிலைமையில் எதுவும் கேட்க முடியாதே..
“பிருந்தா..”
“அத்தை..”
“நீ போய் உன் ரூம்ல ரெஸ்ட் எடும்மா..” என்றதும், தன் பெரிய வயிற்றைப் தூக்கிப் பிடித்துக்கொண்டு மெல்ல தன் அறைக்குச் சென்றாள் பிருந்தா..
அதுவரை கசகசவென இருந்த தன் புடவையை அவிழ்த்து கட்டிலில் போட்டாள்.. கதவை திறந்து ஒருவர் உள்ளே வரும் ஓசை கேட்டது.. பார்த்தீபன் தான் வருகிறான் என நினைத்தவள்..
“பார்த்தீபா.. ரொம்ப டயர்டா இருக்கு.. இடுப்பெல்லாம் ரொம்ப வலிக்குது..” என திரும்பியவள் உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்..
கதவை மூடி அதன் மேல் சாய்ந்து நின்றுக் கொண்டிருந்தான் அவ்வியக்தன்..
அவனைப் பார்த்த அடுத்த கணமே, தன் உடலின் மேல் சேலை என்பதை உணர்ந்தவள்.. சட்டென்று கட்டிலில் போட்ட சேலையை எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டாள்..
“ஏய்ய்ய்.. இங்கே என்ன பண்ற நீ?.. வெளியே போடாஆஆஆ..” என கர்ஜித்தவளுக்கு, சத்தமாக கத்தக் கூட முடியவில்லை..
அப்பொழுதும் அவன் அமைதியாக அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்..
“பார்த்தீபா..” என தன்னையும் மீறி சத்தமாக அழைத்தாள்..
ஆனால் பார்த்தீபன் வரும் வழியை தான் காணவில்லை..
“அவன் வரமாட்டான்..” என எஃகு போன்ற உறுதியான குரலில் சொன்னவனை முறைத்துக் கொண்டு நின்றாள் பிருந்தா்..
“அவன் ஏன் வரமாட்டான்?.. நீ முதல்ல வெளியே போ..” என்றவள் வேகமாக அவனை அறையில் இருந்து பிடித்துத் தள்ள முயன்றிட, வேகமாக நடந்து வந்தவள், தரையில் போடப்பட்டிருந்த மேட்டில் கால் வழுக்கிட, சட்டென்று குப்புற விழப் போனவளை, ஓடிவந்து தாங்கிக் கொண்டான் அவ்வியக்தன்..
அவள் விழும் வேகத்தில் சேலை நழுவி விழ, அவ்வியக்தன் கைகள் பதிந்தது என்னவோ அவளின் வயிற்றில் தான்..
அவள் வயிற்றில் அவன் கரம் பட்ட அடுத்த நொடி குழந்தை மறுபடியும் உதைத்தது..