ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

தக் லைஃப்- Thug life கதை திரி

Status
Not open for further replies.

Vilacini

Well-known member
Wonderland writer
திரை 1

நள்ளிரவு வேளை, கடற்கரை ஓரம், இடையில் கருப்பு நிற ஜீன்ஸ் மட்டும் அணிந்திருந்தவனின் கட்டுடல் செதுக்கிய தசைக்கோலங்களுடன் காட்சியளிக்க நீருக்குள்ளிருந்து எழுந்து நின்றான் அவன்.

கடல் நீர் அவன் தேக்கு தேகத்தில் வழுக்கி கொண்டு இறங்க மீந்திருந்த நீர் துளிகள் வைரமென மின்னி அழகன் அவன் கட்டுடலை மேலும் வசிகரமாக்கிக்கொண்டிருந்தன. ஈரக்கேசத்தை கரங்களால் பின்னால் கோதிவிட்டவனின் விழிகளில் வக்ரமும் வன்மமும் நிறைந்திருக்க அவை இரையை தேடும் வேங்கையாய் அலைப்பாய்ந்தன.

அவன் கரங்களில் பெண்ணொருத்தியின் துப்பட்டா சிக்கியிருக்க நீருக்குள் அவளை தான் துரத்திக்கொண்டிருந்தான் அவன். அவனிடமிருந்து தப்பி ஓடிய பெண்ணவள் ஒரு கட்டத்தில் அவன் கையில் சிக்கிக்கொள்ள அவளை பின்னிருந்து இழுத்து அணைத்திருந்தான்.

அவனிடமிருந்து விடுபட போராடியவள் திமிறியதில் இருவரும் மீண்டும் நீருக்குள் விழுந்துவிட நீருக்கடியில் அவளுடன் உருண்டு பிரண்டு சமாளித்துக்கொண்டு மேலெழுந்தவனின் கையில் சிக்கிய அவளின் ஆடையை ஆக்ரோஷமாக பற்றி இழுத்திருந்தான்.

அவன் இழுத்த இழுப்பில் அவள் அணிந்திருந்த பருத்தி ஆடை பாதி கிழிந்து அவன் கையோடு வந்திருந்தது. பாவம், ஏற்கனவே அவனின் அடாவடியில் பயந்திருந்த பெண்ணவளுக்கு அவனின் இச்செய்கையில் இருதயமே நின்றுவிட்டது.

முயன்று வரவழைத்த குரலில் "ப்ளீஸ் என்னை, விட்டுடு. என்னை ஒன்னும் பண்ணிடாத" என்று கையால் முடிந்த மட்டும் தன்னை மறைத்துக்கொண்டாள்.

நீருக்குள் நடப்பது கால்களில் பாரமேற்றியிருக்க வடிந்துவிட்ட சக்தியில் மிச்சமிருந்ததை திரட்டி அவனிடமிருந்து ஒவ்வொரு அடியாக பின்னால் வைத்து விலகி போக முயன்றவள் " என் வாழ்க்கையை கெடுத்திடாத ப்ளீஸ். எனக்கு நாளைக்கு கல்யாணம்" என்று கெஞ்சினாள்.

கண்களில் கண்ணீர் வழிய அவள் மன்றாடியதை பார்த்திருந்தால் அந்தப் பேயும் கூட இறங்கியிருக்கும். ஆனால், அரக்கன் அவனுக்கு துளியும் கருணையில்லை.

அவளை பார்த்து ஏளன புன்னகை ஒன்று சிந்தியவன் "இதை எல்லாம் உன் அண்ணன் என் விஷயத்துல தலையிடுறதுக்கு முன்ன யோசிச்சிருக்கணும்" என்றபடி அவளின் முடியை கொத்தாக பற்றியிழுத்தவன் அவள் இதழ்களை குறிவைத்திருந்தான்.

ஆக்ரோஷமாக அவளின் இதழ்களை தீண்ட அவன் சென்றநேரம் "கட்"' என்ற குரல்.

குரல் கேட்ட அடுத்த நொடி அவன் விலகப் பார்க்க அந்த பெண் அவனை விட்டால் தானே. அவள் கரங்கள் அவன் மேனியில் மெல்ல ஊர்ந்து அவன் திண்ணிய மார்பில் படர்ந்தன. விழிகள் இரண்டையும் மூடி அவனது இதழ் தீண்டலை எதிர்நோக்கி காத்திருந்தாள்.

அவளின் உடல்மொழி மாற்றத்தை கண்டு சலிப்பாக தலையை ஆட்டிகொண்டவனின் இதழ்களில் ஏளன புன்னகை ஒன்று தோன்ற "கட் சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு" என்றான்.

"தெரியும். ஆனால், இந்த சான்ஸ் எல்லாம் மறுபடியும் கிடைக்காது" என்றாள் விழிகளை திறக்காமல் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

அவளை அலட்சியமாக பார்த்தவன் "கெட் லாஸ்ட்" என்று சொல்லிவிட்டு நகர போக அவளின் பிடி மேலும் இறுகியது. விழிகளை திறந்து அவனை பார்த்தாள். அவள் பார்வையில் ஒரு ஆணவம்.

"இன்டாஸ்ட்ரியில் நம்பர் ஒன் ஹீரோயின் சார் நான். என் கைக்கு முத்தம் கொடுக்கவே நீ நான்னு போட்டி போடுறாங்க. பட், நான் உங்களுக்கு லிப்லாக் பண்ணேவே ரெடியா இருக்கேன். கசக்குதா என்ன?" என்றாள்.

அவள் பேச்சில் அழுத்தமிருந்தாலும் குரல் மெதுவாக தான் ஒலித்தது. அடுத்தவர் காதில் விழுந்தால் அவள் அல்லவா அடுத்தப்பேச்சு பொருளாகிவிடுவாள். நாட்டில் முக்கியமான செய்திகளை விட பிரபலங்களின் கிசுகிசுக்கள் தானே நல்ல விலை போகின்றன.

''அடிச்சு பல்ல கில்ல பேத்துட போறேன். தள்ளிப் போடி" என்று அவனும் அவள் நலன் கருதி அடுத்தவர் காதில் விழாமல் சிரித்தபடியே சொல்ல "என்ன சார் இமேஜ் போயிடும்ன்னு பயப்படுறீங்களா? சும்மா ஹீரோ ரேஞ்சுக்கு பீல் பண்ணாதீங்க சார். அப்டர் ஆல் வில்லன் தானே நீங்க" என்றாள் நக்கலாக.

அவள் பேச்சு அவனின் ஈகோவை அசைத்துப்பார்த்திருக்க அவனின் விழியில் கூர்மை கூடிய நேரம் "கட்...கட்..." என்று மீண்டும் கத்தியிருந்தான் அந்த படத்தின் இயக்குனர் தேவ்.

அவன் கத்தியதை காதிலேயே வாங்காமல் அவர்கள் இருவரும் அசையாமல் அப்படியே நின்றிருக்க கடுப்பானவனோ "இங்க படமெடுக்க வந்ததுக்கு என்னைத்தான் செருப்பால அடிச்சிக்கணும். என்ன கன்றாவியெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு. எல்லாம் என் தலையெழுத்து" என்று வாய்க்குள் முணுமுணுத்தபடி தன்னை சுற்றி பார்க்க அங்கிருந்த மற்றவர்களும் வாயில் எச்சிலொழுக அவ்விருவரையும் தான் பார்த்துக்கொண்டிருந்தனர். அவனின் துணை இயக்குனர்கள் உட்பட.

அவர்களை வெட்டவா குத்தவா என்பது போல பார்த்த தேவ் "டேய் என்னடா அங்க...கட் சொல்லி இவ்வளவு நேரமாச்சு இன்னும் அப்படியே நிக்குறாங்க போய் என்னனு பார்த்து தோலை" என்று கையிலிருந்த மைக்கை அருகே நின்றிருந்த துணை இயக்குனரின் மீது வீசி எறிந்திருந்தான்.

அவன் அவர்களை நோக்கி ஓட மற்றொருவனோ "அதுக்கு தான் இவரை வில்லனா போடாதீங்கன்னு அப்போவே சொன்னேன் சார். இப்போ பாருங்க ஹீரோயின் அவர் மேல பசை போட்ட போல ஓட்டிட்டு நிக்குது" என்றான்.

அவனை முறைத்து பார்த்த தேவ் " இந்த ரோமென்ஸை எல்லாம் அந்தம்மாவை ஹீரோ கூட பண்ண சொல்லு மேன். ஹீரோ கூட சீன் வச்சா கெமிஸ்ட்ரி வரலன்னாலும் பரவால்ல பயலாஜி, பிஸிக்ஸுன்னு ஒரு எழவும் வர மாட்டேங்குது. இங்க மட்டும் ரொமென்ஸா கொட்டுது. இந்த லட்சணத்துல இந்தம்மா தான் பெஸ்ட் ஹீரோயின் ஒஃப் தி இயர் ஆம். எல்லாம் என் கெரகம்" என்று நொந்துக்கொண்டான்.

"ம்..கூம்..அந்த பொண்ணை குத்தம் சொல்லி என்ன இருக்கு. அவர் ஹீரோவை விட சூப்பரா இருக்காரே. நானா இருந்தா கூட அவரை பார்த்து தான் ஜொள்ளுவேன்" என்று மனதிற்குள் பேசுவதாக நினைத்து அவன் சத்தமாகவே புலம்பிக்கொள்ள "அடிச்சுக்கொல்ல போறேன் பாரு உன்னை" என்று முறைத்தான் தேவ்.

'ஆத்தாடி, மைண்டு வாய்சுன்னு நினைச்சு சத்தமா பேசிட்டோமோ.இனி வச்சு செய்வானே' என்று விழிகளை பிதுக்கி தனக்குள் நொந்துகொண்டு அந்த துணை இயக்குனன் ‘’ஏன் சார் நாம ஏன் இவரையே ஹீரோவா போடக்கூடாது" என்று சமாளிக்க முயன்றான்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ''அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை" என்று ஒரு குரல் கேட்டது.

அதுவேறு யாருமல்ல அவர்கள் இதுவரையில் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த அந்த வில்லனின் மேனேஜர் தான்.

அவன் பதிலில் அவனை ஒரு சேர திரும்பி பார்த்த இருவரும் "ஏன்?" என்று கோரஸாக கேட்க " அவருக்கு ஹீரோனாலே பிடிக்காது சார். ஹி இஸ் எ வில்லன். ரீல்லையும் சரி ரியல்லையும் சரி" என்க அவர்களின் மூவரின் பார்வையும் இப்போது அந்த வில்லனில் தான் பதிந்தன.

சரியாக அவர்களின் பார்வை அவன் மீது படிந்த அந்நேரம் அவனுடன் ஒட்டிக்கொண்டு நின்ற பெண்ணவளை ஒரே தள்ளாக உதறி தள்ளியிருந்தான் அவன்.

அவன் தள்ளிய வேகத்தில் அவள் மீண்டும் தண்ணீருக்குள் விழுந்திருக்க நீருக்குள் கிடந்த சிற்பி ஒன்று அவள் கையை குத்தி கிழித்திருந்தது.

குருதி வழிய எழுந்து நின்ற பெண்ணவளுக்கு வலியில் உயிர்போக அதில் உப்பு நீர் வேறு காயத்தில் பட்டு எரிச்சல் கொடுத்து இம்சித்ததில் அழுதே விட்டாள்.

"ஆத்தாடி, நிஜமா வில்லன் தான் போல. ஹீரோயின் கையில ரத்தம் வருது சார்…”என்றவன் “மெடிக்..." என்று அவள் காயத்திற்கு மருந்திடுவதற்காக ஆட்களை அழைக்க "ஷட் அப் மேன்” என்று அவனை தடுத்திருந்தான் தேவ்.

“ரோல் கேமரா. இது ரியலா இருக்கு. அப்படியே ஷூட் பண்ணிடு, யூஸாகும். டயலாக்ஸ் எல்லாம் டப்பிங்ல பார்த்துக்கலாம்" என்றபடி எழுந்து சென்றுவிட்டான்.

அந்த படத்தின் இயக்குனர் அவனுக்கு அவனின் காரியம் முக்கியம் என்றதில் அவன் சொல்லியபடி அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தவைகளை படமாக்க தொடங்கியிருந்தனர் அந்த படக் குழுவினர்.

வலி பொறுக்காமல் அழுதுகொண்டு நின்ற பெண்ணவளுக்கு எல்லோரும் பார்க்க அவன் அவளை உதறி தள்ளியது அவமானமாகிவிட "ஹேய், ஒரு பொண்ண எப்படி ஹாண்டில் பண்ணனும்னு கூட தெரியாதா? இப்படி தான் காட்டுமிராண்டி போல நடந்துபியா. என்னவோ முன்ன பின்ன பொண்ணுங்களை கிஸ் பண்ணதே இல்லாத உத்தமன் மாதிரி சீன் போடுற" என்று இருக்கும் இடம் மறந்து கத்தியிருந்தாள்.

அவள் சினத்தில் சுற்றம் மறந்தாலும் அவன் மறக்கவில்லை. மிகவும் அமைதியாக அவளை நெருங்கி நின்றான். மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடி அவளை ஆழ்ந்து பார்த்தான்.

அவன் பார்வையின் கூர்மை தாக்க பயத்தில் ஒரு அடி விலகி நின்றவளை அழுத்தமாக பார்த்தவன் "என் பெட்டுக்கு எந்த பொண்ணு வரணும் வரக்கூடாதுன்னு நான் தான் முடிவு பண்ணுவேன். வரேன்னு சொல்லுற எல்லாத்துக்கும் ஓகே சொன்னா உனக்கும் எனக்கும் என்ன வித்யாசம்" என்றான்.

அவனின் பேச்சின் அர்த்தம் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போன்று இருக்க கண்களை அழுந்த மூடித்திறந்துகொண்டாள் அவள்.

"அப்டர் ஆல் வில்லன் தானேன்னு சொன்னால்ல...யூ வில் சீ, மீரா" என்று அவள் நெற்றியின் மீது ஒற்றை விரலை வைத்து அவன் தள்ளியிருக்க தடுமாறிய பெண்ணவள் மீண்டும் பொத்தென்று நீருக்குள்ளேயே விழுந்திருந்தாள்.

சுற்றியிருந்தவர்களுக்கு மீரா கத்தியதிலேயே அங்கு நடந்துக்கொண்டிருந்தது குத்து மதிப்பாக புரிந்துவிட அனைவரின் இதழ்களிலும் கேலி புன்னகை.

தன்னை சுற்றி பார்த்த பெண்ணவளுக்கு அவமானமாகிவிட "யூ இடியட்" என்று கத்தியபடி நீரின் பரப்பில் கையால் ஓங்கி அடித்திருந்தாள். அதில் அந்தக் கடல் நீர் மீண்டும் அவள் முகத்திலேயே தெறித்தது தான் மிச்சம்.

அவளை பார்த்து சலிப்பாக தலையாட்டிக்கொண்டே அவன் கடலுக்குள்ளிருந்து வெளியில் வர அவனுக்கு துவட்டுவதற்கு துண்டுடன் ஓடி வந்தான் அவனின் அசிஸ்டென்ட்.

ஒற்றை கையை நீட்டி அவனிடமிருந்து துண்டை வாங்கியவன் தலையை துவட்டிக்கொண்டே நடக்க அவன் சாதாரணமாக நடந்து சென்றதே பார்ப்போர் கண்ணுக்கு வெகு தோரணையாக தான் தெரிந்தது. குறிப்பாக அங்கிருந்த மற்ற பெண்களின் பார்வை அவன் மீது ரசனையாக படிந்தது.

அதில் மேக் அப் போடும் பெண்ணொருத்தியோ "வாட் எ மேன்" என்று பெருமூச்சொன்றை விட்டுக்கொள்ள "தூரத்திலிருந்து பாக்குறதோட நிறுத்திக்கோ. பக்கத்துல போயிடாத அப்புறம் பார்வையாலேயே எரிச்சிடுவார்" என்றாள் இன்னொருத்தி.

"என்னடி அவரை பத்தி என்னென்னவோ ரூமெர்ஸ் எல்லாம் கேள்வி பட்டேன். அதுல சிலது என்னவோ அவர் பொம்பளை பொருக்கி ரேஞ்சுக்கு இருந்துச்சு. நீங்க என்னவோ அவரை மகாத்மா ரேஞ்சுக்கு பேசுறீங்க" என்றாள் அந்த கூட்டத்திலிருந்த இன்னொரு பெண்.

"அது என்னவோ உண்மை தான். ஆனால், பொண்ணுங்களே வான்டெட்டா போய் அவரை அப்ரோச் பண்ணாலும் வந்த வரை லாபமுன்னு எடுக்குற ஆள் இல்லையாம். அவரா நினைச்சா மட்டும் தான் மத்த மேட்டர் எல்லாம். ஆனால், நினைச்சிட்டா கிடைக்குற வரைக்கும் விட மாட்டாராம்" என்றாள் முந்தையவள்.

"ஆத்தி, ரொம்ப ஆபத்தானவர் போல" என்று ஒருத்தி சொல்ல "பின்ன வில்லன்னா சும்மாவா" என்று அவர்களுக்குள்ளாக பேசிச் சிரித்துக்கொண்டனர்.

அவர்கள் பேசியது அவன் காதில் விழுந்ததில் அவன் இதற்கடையில் மர்ம புன்னகை ஒன்று தோன்ற எதையும் கண்டுகொள்ளாமல் அவன் கேரவேனிற்குள் சென்று கதைவடைத்துக்கொண்டான்.

அவன் அமர், அமரன்.

தற்பொழுது சினிமா துறையில் ட்ரெண்டிங்கில் இருக்கும் வில்லன் அவன் . அவனின் ஆறடி உயரமும், அசாத்திய நடிப்பும், அசாதாரண திறமையும் அவனை மற்ற நடிகர்களுக்கு மத்தியில் தனித்து நிறுத்தியிருந்தது என்றால் அவனின் ஆளுமையும் தோரணையும் அழகும் கதாநாயர்களை விட அதிகம் விரும்பக் கூடிய வில்லனாக உருமாற்றியிருந்தது. இப்பொழுது நடிக்கும் முன்னணி கதாநாயகர்களுக்கு வில்லன் என்றால் அது அவன் தான்.

ஆனால், தொழில் வட்டாரத்தில் அவன் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் அப்படி தான் என்று பேச்சு. அதற்கு ஏற்றாற்போல் அவனை பற்றி வாரம் ஒரு கிசுகிசு வருவது வெகு இயல்பான ஒன்று. ஆனால், எதுவும் நல்ல செய்தி கிடையாது. பெரும்பாலும் மூர்க்கன், பெண் பித்தன், திமிர் பிடித்தவன் என்று வெவ்வேறு தலைப்புகளில் பல செய்திகள்.

அவனும் அப்படி தான். அதிக கோபம் வரும். யாருக்கும் பணிந்து போக மாட்டான். யார் என்ன என்றும் பார்க்க மாட்டான். பிடிக்கவில்லை என்றால் முகத்தில் அறைந்தார் போல் நடந்துக்கொள்வான். அப்படி பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுடன் அவனுக்கு தகராறும் நடந்திருக்கின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக அவனின் பங்களாவிற்கு நடிகைகள் முதல் மாடல்கள் உட்பட பல பெண்களின் விஜயமிருப்பதாக சில பத்திரிகையாளர்கள் புகைப்படத்துடன் வெளியிட்ட பரபரப்பான செய்திகளும் ஏராளம். அதில் சில பெண்கள் பதினெட்டு வயதிற்கும் குறைவானவர்கள் என்னும் வதந்தியும் உண்டு.

இவை எல்லாமும் தாண்டி அவன் நிலைத்து நிற்பதற்கு ஒரே காரணம் வேலை என்று வந்துவிட்டால் அவனை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. ஒரே டேக்கில் காட்சிகளை கச்சிதமாய் நடித்துக்கொடுக்க கூடிய வல்லவன். அதோடு அவன் திறமைக்கும், நடிப்பிற்கும், அழகிற்கும் இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். சினிமா துறையினை சார்ந்த சிலரிடம் அவன் காட்டும் இந்த கோப முகம் அவனது ரசிகர்களிடம் ஒரு போதும் வெளிப்பட்டதேயில்லை. ரசிகர்களை பொறுத்த மட்டில் அவன் அவர்கள் மனதை கவர்ந்த கள்வன் தான்.

இப்போதும் கூட பாலிவுட் படமொன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்ததில் நாளை அங்கே ஷூட்டிங் இருக்க இன்று அவன் மும்பைக்கு பயணப்படயிருந்தான். இன்றைய திகதியில் மார்க்கெட்டில் முதலிடத்தில் இருக்கும் வில்லனாயிற்றே அவன்.

ஈர உடையை மாற்றி அவன் வெளியே வந்த நேரம் அவனின் கார் தயாராக இருந்தது. அதில் ஏறிக்கொண்டவன் இருக்கையில் தலைசாய்த்து கண்களை மூடிக்கொள்ள அவனின் காரும் புறப்பட்டது.

 
Last edited:

Vilacini

Well-known member
Wonderland writer

திரை 2


உலகமெல்லாம் பரபரத்து முடித்து, ஓய்ந்து மீண்டும் தத்தமது கூட்டுக்குள்ளும் வீட்டுக்குள்ளும் அடங்கிவிட்டிருந்த அந்த பின்னிரவிலும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தாள் துஷாரா.

கைகளில் இருந்த ஸ்க்ரிப்டை ஒரு முறை புரட்டி பார்த்துவிட்டு "அகில், ஷாட் ரெடியா?" என்று தனது துணை இயக்குனரான அகிலனிடம் கேட்டாள்.

"இதோ அஞ்சு நிமிஷத்துல ரெடி மேம்" அவன் மனதில் சிறு படபடப்போடுதான் பதிலிறுத்தான். அவன் சொன்ன பதிலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்திருந்ததால் வந்த படபடப்பு தான் அது.

"இன்னும் ரெடியாகாமல் என்ன மேன் பண்ணிட்டிருக்கிங்க? நான் என்ன இங்க வேலை வெட்டி இல்லாமல் உட்கார்திருக்கேனா?" கணீரென்று வந்து விழுந்தது அவளது வார்த்தைகள்.

"சாரி மேடம், ஹீரோ சார் தான்..." என்று அவன் இழுக்க "என்னய்யா வேணும் உங்க ஹீரோ சாருக்கு? அவன் நடிக்குறதை ஒழுங்கா நடிச்சிருந்தா இப்போ இந்த நேரத்துக்கு தேவுடு காத்துட்டு உட்கார்ந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அவன் நடிச்ச லட்சணத்துக்கு தான் இப்போ நீயும் நானும் ஆந்தை மாதிரி முழிச்சிட்டிருக்கோம்" என்று அவள் எண்ணை சட்டியில் போட்ட கடுகாக பொறிந்து தள்ளினாள்.

படத்தின் கதாநாயகன் பரத்தின் மீது இருந்த மொத்த கடுப்பையும் அவளுக்கு துணை இயக்குனர் ஆகிவிட்ட ஒரே பாவத்திற்காக அகிலன் மீது கொட்டிக்கொண்டிருந்தாள்.

அவளின் குணமறிந்தவன் அவளின் வசவை கேட்டபடி அவளையே பேந்தப் பேந்த பார்த்து விழித்துக்கொண்டு நிற்க "என்னடா என்னையே பார்த்துட்டு நிற்கிற... வேணும்னா நான் வந்து நடிச்சு கொடுக்கட்டுமா? நீ வேணும்னா டைரக்ட் பண்ணுறியா? இந்த சீரியல்ல எல்லாம் வருமே இவருக்கு பதில் இனி இவர்னு அது மாதிரி போட்டு படத்தை முடிச்சு கொடுத்திடுவோமா?" அவள் குரலில் நக்கல் தொனிக்க,

"இந்த யோசனை கூட நல்லா இருக்கே மேம்" என்று அகிலன் பதில் சொல்லியது தான் தாமதம் அருகே இருந்த தண்ணீர் பாட்டில் அவன் மீது பறந்திருந்தது.

அவள் எறிந்த அந்த நீர் நிறைந்த நெகிழி பாட்டில் சரியாக அவன் தோள் பட்டையில் பட்டிருக்க "ஐயோ..வலிக்குது மேம்" என்று அலறியபடி அடிபட்ட இடத்தை தேய்த்துவிட்டு கொண்டே அவளை பாவமாக பார்த்தான் அகிலன்.

"இன்னும் ரெண்டு நிமிஷத்துல அந்த ஆள் இங்க இருக்கணும். இல்லை நீ செத்த…" அவள் விரல் நீட்டி எச்சரித்தாள். அவள் சொன்னது நடக்கவில்லை என்றால் நிச்சயம் இன்று அவனை கதற விட்டுவிடுவாள் என்பது உறுதி.

பெண் தானே பூப்போல் இருப்பாள் என்றெல்லாம் அவளை நினைத்துவிட முடியாது. பெண்ணுருவில் ஒளிந்திருக்கும் புயல் அவள். அவளின் பேச்சும் நடவடிக்கைகளும் அப்படி தான் இருக்கும்.

அவளுடன் பணியாற்றிய இந்த இருவருடங்களில் அவன் அதை நன்கு அறிந்தே வைத்திருந்தமையால் அவள் அடுத்து எதுவும் சொல்வதற்குள் பரத்தை அழைப்பதற்காக குடுகுடுவென்று அவனது கேரவேனை நோக்கி ஓடியிருந்தான் அகிலன்.

ஓடிச் செல்லும் அவனையே எரிச்சலாக பார்த்துக்கொண்டிருந்தவள் "யூஸ்லெஸ் ஃபெல்லொவ்ஸ்" என்று அவனோடு அந்த ஹீரோவையும் சேர்த்து திட்டித்தீர்த்தாள்.

இரு வெற்றிப்படங்களை கொடுத்து இப்பொழுது தனது மூன்றாவது படத்தை மிக சிரத்தையுடன் இயக்கி கொண்டிருக்கும் இயக்குனர் அவள். பல முன்னணி இயக்குனர்களின் வரிசையில் தனக்கென ஓர் அசைக்கமுடியா அங்கிகாரத்தை பெற்றுவிட துடிக்கும் இளம் ரத்தம்.

நடப்பில் முன்னணி தயாரிப்பாளர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் தீனதயாளனின் மூத்த மகள். இருந்தும் தந்தையின் பின்புலத்தை தன் வளர்ச்சிக்காக அவள் ஒரு போதும் பயன்படுத்தியதில்லை. சுயகாலில் நின்று தனக்கான அடையாளத்தை நிறுவிக்கொள்ள நினைத்த புதுமை பெண்.

அதனாலேயே ஆண்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் சினிமா துறையில் இயக்குனராக சாதிப்பது என்பது அவளுக்கு எளிதாக அமைந்துவிடவில்லை. அதற்காகவே அவர்களை காட்டிலும் இருமடங்கு அதிகமாக ஓட வேண்டியிருந்தது அவளுக்கு. முதல் வாய்ப்பு கிடைக்கவே அவள் கடந்து வந்த கஷ்டங்களும் இன்னல்களும் ஏராளம். முதல் இருப்படங்களின் வெற்றிக்கும் அவள் போட்ட உழைப்பு அளப்பரியது.

அந்த படங்கள் அடைந்த வெற்றியே அவள் மீதான எதிர்பார்ப்புகளை உயர்த்தி நிறுத்தியிருக்க இந்த முறையும் தன் மீதான ரசிகர்கள் மற்றும் தயாரிப்பாளரின் நம்பிக்கையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று இந்த நேரத்திலும் ஓய்வில்லாமல் சுழன்றுக்கொண்டிருக்கிறாள் துஷாரா.

இரவு பகல் என்று பாராமல் உழைக்க வேண்டிய சூழல், உடல் உபாதைகள், பெண்களுக்கான மூன்று நாள் விடுமுறை என்று எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு ஓடிக்கொண்டிருக்கிறாள்.

ஓட்டத்தை எங்கேயாவது ஒரு இடத்தில் மந்தமாக்கினாலும் திரையுலகம் அவளை தட்டி தூர தள்ளிவிடும் என்ற அச்சம் எப்பொழுதும் அவளுக்குள் இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

இரண்டு படங்களில் சாதித்துவிட்டேன் இனி எல்லாம் வெற்றி தான் என்று இறுமாந்து இருக்கவும் அவள் தயாரில்லை. அவள் சாதிக்க வேண்டியதும் எட்ட வேண்டிய இலக்கும் இன்னும் வெகுதூரம் என்பதை தெளிவாக அறிந்திருந்தாள்.

அதை அடையும் வரையிலும் அவளுக்கு உறக்கமில்லை. தன்னை உலகுக்கு நிரூபித்துக்கொள்ள வேண்டிய அவசியமும் பிடிவாதமும் ஒரு புறம் இருக்க தனது திறமையையும் ஆற்றலையும் தானே பரிசோதித்து பார்க்கும் ஆர்வமும் இருந்தது அவளுக்கு. அந்த ஆர்வத்திற்கு அவள் தேர்ந்தெடுக்கும் வழக்கத்திற்கு மாறான கதைக்களங்களே சான்று.

சற்று நேரத்திற்கெல்லாம் மீண்டும் திரும்பி வந்த அகிலன் அவள் முன்னே கைகளை பிசைந்துக்கொண்டு நின்றான்.

கையில் இருந்த காகிதங்களில் பார்வையை பதித்திருந்தவள் மெல்ல விழிகளை மட்டும் உயர்த்தி ''என்ன மேன் ரெடியா?" என்றாள்.

அவன் பதில் பேசாமல் நின்றிருக்க மெல்ல பார்வையை சுழலவிட்டு அந்த படத்தின் கதாநாயகனை தேடினாள். அவன் அங்கிருப்பதற்கான அறிகுறியே இல்லை.

இருக்கையிலிருந்து வேகமாக எழுந்துகொண்டவள் கையிலிருந்த காகிதங்களை சுருட்டி அதை அகிலனை நோக்கி ஓங்கியிருக்க "ஆத்தி நானில்லை. அந்த ஹீரோ சார்தான் வரமாட்டுறாரு மேம்" என்றபடி இருக்கரங்களையும் தலைக்குமேல் வைத்து தனது தலையை பாதுகாத்தபடி நின்றுக்கொண்டான்.

"என்னவாம் அந்தாளுக்கு?" என்று அவள் உறும " நீங்களே வந்து கூப்பிடணுமாம். அப்போதான் வருவாராம்" என்றான்.

சற்று முன் அவனை திட்டியதற்காக பழிவாங்க பார்க்கின்றான் அந்த பரத் என்று புரிந்துவிட்டது அவளுக்கு. ஒரு ஆழ்ந்த பெருமூச்சை எடுத்துக்கொண்டவளுக்கு அவனை நினைத்தாலே வாயில் வண்ண வண்ண வார்த்தைகளாக தான் வந்தது. கதாநாயகன் என்றால் தலையில் இரு கொம்புகள் முளைத்திருப்பதாக நினைப்பு அவனுக்கு.

அவளாக அவன் கேரவேனிற்கு சென்று கூப்பிடுவதற்கும் அவளுக்கு விருப்பமில்லை. ஆனால், அவளை நம்பியல்லவா பணம் போட்டிருக்கிறார் அந்த தயாரிப்பாளர்.

இப்பொழுது இவனை பகைத்தால் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஷூட்டிங் வராமல் அலையவிடுவான். அதில் அவளுக்கொன்றுமில்லை. ஆனால், தயாரிப்பாளரின் பணம் , சக நடிகர்களின் நேரமென்று அனைத்தும் விரயமாகும்.அதில் அவளுக்கு சற்றும் உடன்பாடில்லை.

என்னதான் சிங்க பெண்ணாக சிலிர்த்து நிற்க நினைத்தாலும் இப்படியான சில இடங்களில் வளைந்து கொடுக்க வேண்டியதாகத்தான் இருக்கின்றது. அதை நினைத்து நொந்துக்கொண்டவள் கடுப்பில் கைகளை இறுக மூடி ஆத்திரத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றாள்.

அவளின் உடல்மொழி நன்கு புரிந்த அகிலனோ "பேக் அப் பண்ணிடலாமா மேம்?" என்று கேட்க,

"பேக் அப் பண்ணா இன்னிக்கான செலவை அந்த ஹீரோவா கொடுப்பான். ஷாட் ரெடி பண்ணு, ஒரு நிமிஷத்துல வரேன்" என்றபடி தலைமுடியை அல்லி கையில் மாட்டியிருந்த ரப்பர்பாண்டினால் போனி டெய்லிட்டவள் அணிந்திருந்த வெள்ளை ஷர்ட்டை முஷ்டி வரை ஏற்றிவிட்டபடி பரத்தின் கேரவேனை நோக்கி நடந்தாள்.

அவள் உள்ளே நுழைந்த நேரம் அந்த கதாநாயகன் அங்கிருந்த இருக்கையில் ஒய்யாரமாக சாய்ந்தமர்ந்திருந்தான். ஷர்ட்டின் பட்டன்களை திறந்து விட்டு அவனது மேனியை அப்பட்டமாக காட்டிக்கொண்டு அமர்ந்திருந்தவனின் கையில் மதுக்கோப்பை வேறு இருந்தது.

அங்கே அத்தனை சக நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் அவனுக்காக காத்திருக்க அவனானால் அதை பற்றிய கவலையே இல்லாமல் காலை ஆட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

ஆத்திரமாக வந்தது அவளுக்கு.

"அட குடிகார பயலே. பாடியை காட்டிட்டு வேற உட்கார்திருக்கான் மலைமாடு மாதிரி. ஒரு சிக்ஸ் பேக் வச்சிருந்தாலும் பார்க்கலாம். அங்க இன்னும் கொஞ்சத்துல பேமிலி பேக் வரத்தான் லாயக்கு. இவனை எல்லாம் ஹீரோன்னு வேற நடிக்க வைக்கணும். எல்லாம் அந்த ப்ரொடியூசரை சொல்லணும்" வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டே கேரவேனின் கதவை சாற்றி விட்டு அவனை பார்த்தாள்.

"வர மாட்டேன்னு நினைச்சேன், பரவால்ல வந்துட்டியே" என்றான். பொதுவெளியில் அவளுக்கு கொடுக்கும் மரியாதை இப்போது காணாமல் போயிருந்தது. ஒருமையில் பேசினான்.

"மரியாதையா பேசுங்க " என்றாள் அழுத்தமாக.

அவனோ அவளை வக்கிரமாக பார்த்துக்கொண்டே மதுவை அருந்த அவளுக்கு அவனை இப்போதே கழுத்தை நெறித்து கொன்றுவிட்டால் என்ன என்று தான் இருந்தது. ஆனால், வக்கிரம் பிடித்தவன் அவன். அவனிடம் சண்டையிட்டு ஒரு பயனுமில்லை என்பதும் அவளுக்கு தெரியும். தேவியில்லாத நேரவிரயம் தான்.

"ஷாட் ரெடி சார். கொஞ்சம் சீக்கிரம் ரெடியாகி வந்திங்கன்னா ஸ்டார்ட் பண்ணிடலாம். எல்லாரும் வெயிட் பண்ணிட்டிருக்காங்க. இப்போவே நேரம் ரொம்ப ஆச்சு" என்றாள்.

"எனக்கும் வரணும்னு தான் ஆசை செல்லம்" என்று கையிலிருந்த மதுக்கோப்பையை மேசை மீது வைத்துவிட்டு நெட்டி முறித்தபடி எழுந்து நின்றவன் "ஆனால், என்ன பண்ணறது இந்த ராத்திரி நேரத்தில் நடிச்சு கொடுக்க எனெர்ஜியே இல்லையே" என்றான்.

அவனை சலிப்பாக பார்த்தாள் துஷாரா.

"அது தான் ஒர்க்ல இருக்கும் போதே எனெர்ஜி ஏத்திடிங்களே. இப்போ வந்து அந்த ஒரு ஷாட்டை முடிச்சு கொடுக்குறதுதானே" என்று கேட்டவளின் விழிகள் அவன் மேசை மீது வைத்த மது கோப்பையில் படிந்து மீண்டன.

"ச்சே, இது எல்லாம் சும்மா. இதுல பெருசா ஒரு போதையுமில்லை எனெர்ஜியுமில்லை அதை விட பெரிய எனர்ஜி ஒன்னு இருக்கு தெரியுமா?" என்று தன் இதழ்களை வருடியபடி கேட்டவனின் பார்வை என்னவோ அவளின் இதழ்களை தான் மொய்த்தன.

அவனது பார்வை அருவருத்தலும் அவளுக்கு அது எல்லாம் பெரிய விடயமேயில்லை. பெரும்பான்மை ஆண்களை மையப்படுத்தியிருக்கும் துறை இதில் தனி பெண்ணொருத்தியாக சாதிக்க வேண்டுமென்றால் அவள் இதை போல எத்தனையை பார்த்திருக்க வேண்டும்.

சலிப்பாக தலையை ஆட்டிகொண்டவள் "இப்போ என்ன சார் வேணும். சொல்லுறதை நேரடியா சொல்லுங்க. எனக்கு டைம் இல்லை" என்று சாதாரணமாக கேட்டாள்.

"இப்போதைக்கு ஒரு கிஸ் வேணும் அப்புறமா மிச்சத்தை பார்த்துக்கலாம்" என்றான்.

"நைஸ், கொஞ்சம் இப்படி வந்து நில்லுங்க சார்" என்று அவனின் இருதோள்களையும் பிடித்து இழுத்து வந்து அந்த கேரவேனின் சுவற்றில் சாய்த்து நிறுத்தினாள்.


அடுத்த எபிசொட் புதன் அன்று வரும் மக்களே....காத்திருங்கள் 🥰
 

Vilacini

Well-known member
Wonderland writer

திரை 3

சாலையில் கருப்பு நிற கார் சீராக சென்றுக்கொண்டிருக்க காருக்குள் மெல்லிசை பாடல் ஒன்று மெலிதாய் ஒலித்துக்கொண்டிருந்தது. பாடலை தவிர வேறு எந்த சப்தமுமில்லை.​

கண்களை மூடி அமர்ந்திருந்தான் அமர். காரை ஓட்டிக்கொண்டிருந்த அவனின் மேனேஜர் ரியர் வியூ கண்ணாடி வழியே அவன் முகத்தை பார்த்தான்.​

விழிகள் மட்டுமே மூடியிருக்கின்றன. அவன் உறங்கவில்லை என்பதை அவன் முகத்தை வைத்தே கண்டுக்கொண்டான். ஏதோ சிந்தனையில் இருப்பது போன்று தெரிந்தது. எதுவும் கேட்கவில்லை அவன். கேட்பது அமருக்கு பிடிக்காது என்றும் தெரியும்.​

அமைதியாகவே அவனே பேசும் வரை காத்திருந்தான்.​

அவன், விஜய். அமரின் மேனேஜர். அவனுக்கிருக்கும் ஒரே நண்பனும் அவன் தான். அமரின் நம்பிக்கைக்குரியவன். அவனை பற்றி நன்கறிந்தவன்.​

சில நேர அமைதிக்கு பின் மீண்டும் அவனது பார்வை கண்ணாடி வழியே அமரின் மீது தான் படிந்தது.​

அவனிடம் எந்த மாற்றமும் இல்லை அதே சிந்தனை தேங்கிய முகம் மட்டும் தான்.​

விஜயும் ஒரு பெருமூச்சுடன் மீண்டும் சாலையில் கவனம் செலுத்திய நேரம் "எத்தனை தடவை பார்த்துட்டே இருப்ப. திரும்ப திரும்ப பார்க்கறதுக்கு நான் என்ன பொண்ணா?" என்றான் அமர்.​

சட்டென விஜயின் பார்வை மீண்டும் கண்ணாடியை நோக்கின. அதில் தெரிந்த அமரின் விழிகள் இன்னமும் மூடியே தான் இருந்தன.​

"நான் பார்த்தேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றான்.​

"உனக்கு மட்டும் தான் என்னை பத்தி தெரியனுமா? எனக்கும் உன்னை பத்தி தெரியும்" என்று சொல்லியபடி கண்களை திறந்தவன் நிமிர்ந்து அமர்ந்தான்.​

அதில் விஜய் மெல்ல சிரித்துக்கொள்ள "தனியா தானே இருக்கோம். எதுக்கு வாங்க போங்கன்னு பேசுற?" என்று அமர் கேட்க "பழக்க தோஷம்" என்றான்.​

"எப்பவுமே ஒருமையில் பேச வேண்டியது தானே. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை" என்ற அமரை பார்த்து மெலிதாக சிரித்தவன் "பேசலாம் தான். ஆனால், அது சரியா இருக்காது.சொசைட்டியில் நீ ஆக்டர் நான் உனக்கு மேனேஜர். அதுக்கு ஏற்ற போல தான் நடந்துக்கணும்” என்றான்.​

அமருக்கு விஜயிடம் பிடித்ததே இந்த குணம் தான். தேவைக்கு அதிகமாக உரிமை எடுத்துக்கொள்ள மாட்டான். அவன் எல்லைக்குள் நின்றுக்கொள்வான்.. அதனாலோ என்னவோ அடுத்தவர்களை காட்டிலும் அமருக்கு நெருக்கமானவன் அவன்.​

''உன் இஷ்டம்" என்ற அமர் "கமெர்சியல் படமா நடிச்சு நடிச்சு ரொம்ப போர் அடிக்குது விஜய். ஒரு க்ரிட்டிக்கல் அக்ளைம்ட் படம் ஏதும் பண்ணலாம்னு யோசிக்குறேன்" என்றான்.​

"நானும் சொல்ல நினைச்சேன்" என்றான் அவன்.​

"வெல், இப்போ அந்த மாதிரி படத்துக்கு மார்க்கெட்ல ட்ரெண்டிங் டைரக்டர் யாருன்னு பாரு?" என்று பணித்தான்.​

"துஷாரா, துஷாரா தீனதயாளன்" என்றான் சட்டென்று. அவன் அப்படி தான். அமர் எள் என்னும் முன் எண்ணையாக நிற்பவன். அமர் அடுத்து என்ன யோசிப்பான் என்றறிந்து அதற்கான தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பான்.​

அந்த பெயரை கேட்டதும் சட்டென அமரின் பார்வை விஜயில் கூர்மையாக படிய "ரெண்டு மூணு டைரெக்டர்ஸ் இருக்காங்க. பட், துஷாரா இஸ் பெஸ்ட் சாய்சுன்னு தோணுது" என்றான்.​

அமரிடம் சிறு மௌனம்.​

"இம்ம்ம், நானும் கேள்வி பட்டேன். பட், ஒர்க் எந்தளவுக்கு இருக்குமுன்னு தெரியல. அவள் எடுத்த மூவிஸ் எனக்கு வேணும். பார்த்துட்டு டிசைட் பண்ணிக்கலாம்" என்றான்.​

"ஓகே" என்ற விஜய் சற்று நிறுத்தி "அமர், முருகவேல் சார் கிட்டேருந்து செக் ஒன்னு வர வேண்டியதிருக்கு. அவர் அசிஸ்டன்ட் போற வழியில் இருக்குற ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் இருக்காராம். கலக்ட் பண்ணிட்டு போயிடலாமா? ஏர்போர்ட்டுக்கு போக இன்னும் டைமிருக்குல்ல?” என்றான் டேஷ் போர்டில் மிளிரிய நேரத்தை பார்த்துக்கொண்டே.​

"ம்ம்ம்'' என்று அவன் சம்மதித்த நேரம் அவனின் கருப்பு நிற மஸராட்டி வகை கார் சீறி பாய்ந்து சென்றது என்னவோ துஷாராவின் படப்பிடிப்பு தளத்திற்கு தான்.​

காரை நிறுத்திவிட்டு ''வந்திடுறேன்" என்று இறங்கிய விஜயின் கண்களில் துஷாரா அகிலனை திட்டி கொண்டிருப்பது தென்பட "துஷாராவோட ஷூட்டிங் தான் நடக்குது போல. அவங்க ஒர்க் பார்க்கணும்னு சொன்னியே. பார்த்துட்டே இரு இப்போ வந்திடுறேன்" என்றபடி முருகவேலின் உதவியாளரை தேடி சென்றுவிட்டான் விஜய்.​

காரினுள்ளேயே இருந்தபடி கண்ணாடியை இறக்கிவிட்ட அமரின் பார்வைக்கு அங்கே கையிலிருந்த காகித கட்டை சுருட்டி அகிலனை அடிக்க அவள் கை ஓங்கிய காட்சிதான் தென்பட்டது.​

புருவங்களை ஏற்றி இறங்கியவன் காரிலிருந்து இறங்கி கதவை அடைத்துவிட்டு அந்த கதவின் மீதே சாய்ந்து நின்றான்.​

மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடி நின்றவனின் பார்வை அவளை தான் கூர்ந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அவள் ஷர்ட் கையை இழுத்துவிட்டபடி கேரவேனை நோக்கி செல்ல அவன் இதழ்களிலோ ஒரு ஏளன புன்னகை.​

***​

அங்கே கேரவேனிற்குள் நுழைந்திருந்தவளிடம் பரத் முத்தமொன்று கேட்டிருக்க அவளோ அவனை இழுத்து சுவற்றில் சாய்த்து நிறுத்தியிருந்தாள்​

அவளின் அந்த செய்கையில் புருவங்களை ஏற்றி இதழ்களை பிதுக்கி ஆச்சரியமாக பார்த்த பரத் "பரவால்லையே, உன்னை நான் என்னவோ நினைச்சேன். நான் எல்லாம் நல்ல குடும்பத்து பொண்ணு அது இதுன்னு சீன் போடுவன்னு பார்த்தேன். பட்,ரொம்ப ஷார்ப்பா இருக்க. ஐ லைக் இட்" என்றான்.​

அவள் மடித்துவிட்டிருந்த ஷர்ட்டின் கை பகுதி கீழிறங்கிவிட்டிருக்க அதை மீண்டும் மேலே ஏற்றிவிட்டப்படியே "கட் தெ க்ராப் அண்ட் கெட் ரெடி" என்றாள்.​

அவனும் அவளிடம் முத்தம் வாங்கிவிடும் எண்ணத்தில் அவளுக்கு வாகாக நின்றுக்கொண்டு விழிகளை மூடி இதழ்களை குவித்து காட்டினான். அவன் முத்தத்தை எதிர்பார்த்திருக்க அவனை அழுத்தமாக பார்த்துக்கொண்டே நெருங்கியவளின் கரம் அவன் கன்னத்தை நோக்கி பயணித்திருந்தது.​

பளார் என்ற சத்தம்.​

அவனோ அதிர்ச்சியில் கண்களை திறந்திருந்தான். சத்தம் மட்டுமே கேட்டது. ஆனால், அவனுக்கு வலிக்கவேயில்லை.​

அதில் அவளின் கரம் அவன் கன்னத்தை தீண்டாததை உணர்ந்தவன். அப்படியே பக்கவாட்டாக திரும்பி பார்த்தான். அவன் கன்னத்தில் பதிந்திருக்க வேண்டிய அவளின் கரம் அவன் கன்னத்திற்கு பதிலாக அருகே இருந்த சுவற்றில் பதிந்திருந்தது.​

ஆம், அவளுக்கு இருந்த சினத்தை எல்லாம் ஒன்று திரட்டியவள் அவனுக்கு பதிலாக அந்த சுவற்றை தான் ஓங்கி அடித்திருந்தாள்.​

இப்பொழுது அவன் அவளை அதிர்ந்து பார்க்க அவன் முகத்துக்கு அருகே தன் முகத்தை கொண்டு சென்றவள் அவனை உறுத்து பார்த்தாள்.​

பெண்ணென்றாலும் அவளின் பார்வையின் கூர்மை அவனுக்கு கிலியுண்டாக்க தலையை பின்னுக்கிழுத்துக்கொண்டவன் சுவற்றோடு பல்லி போல ஒட்டிக்கொண்டான்.​

''இந்த அடி உன் கன்னத்தில் விழுந்திருக்க வேண்டியது. ஆனால், இந்த முகத்தை தானே நான் ஷூட் பண்ணனும். அடி வாங்கி கன்னம் வீங்கிப் போச்சுன்னா எப்படி ஷூட் பண்ணுறது. அந்த ஒரே காரணத்துக்காக தான் விட்டு வச்சேன். இனி என் கிட்ட இப்படி எல்லாம் நடந்துக்கிட்டா இதா போச்சுன்னு உன் மேல ஹரஸ்மெண்ட் கேஸ் போட்டு உள்ள தள்ளிடுவேன்" என்று தனது தலை மூடியை இழுத்து காட்டியவள் "அதுக்கு பிறகு நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ யாருகிட்ட வேணும்னாலும் கம்பளைண்ட் பண்ணிக்கோ. உன்னால ஒன்னும் கழட்ட முடியாது. மிஞ்சி போனா உனக்காக என்னை இண்டஸ்ட்ரியிலிருந்து பேன் பண்ணுவாங்க. ஆனால், அதுக்குள்ள உன் கேரியரை அடிச்சு நொறுக்கி முடிச்சிடுவேன் பார்த்துக்கோ" என்றாள்.​

அவனுக்கு தெரியும் அவள் சொல்வதை செய்துவிடுவாள். பெரிய பின்புலம் இல்லாத பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை. பிரபல தயாரிப்பாளரின் மகள் வேறு. என்னதான் அவரின் நிழலில் அவள் இல்லை என்றாலும் மகளுக்கு இப்படி என்று சொன்னால் அவர் அமைதியாக இருந்துவிடுவாரா என்ன. அவனின் மொத்த வாழ்க்கையையும் காலில் போட்டு மிதித்துவிட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பார். அவள் மிரட்டியதால் அவள் மீது பயம் வந்ததோ இல்லையோ அவளின் தந்தையை நினைத்து பதறியது.​

அவனே இப்பொழுதுதான் வளர்ந்து வரும் நடிகர்களின் வரிசையில் இருப்பவன். அவன் திறமையோ அதிர்ஷடமோ இதற்கு முன் நடித்திருந்த ஐந்து படங்களும் பெரும் வெற்றியடைந்திருந்தது. அதில் அவனுக்குள் தலைக்கனம் மெல்ல அதிகரிக்க தொடங்கியிருக்க அதோடு பெண்ணாசையும் சேர்ந்துக்கொண்டது.​

அதில் கதாநாயகன் என்னும் பிம்பம் வேறு அவன் நினைத்த பெண்களை இலகுவாக அவன் கட்டிலில் விழவைத்திருக்க அதே யுக்தியை துஷாராவிடமும் முயன்று பார்த்தான்.​

துஷாரா, அவள் இயக்குனர் தான். ஆனால், சினிமாவில் தற்சமயம் முன்னணியில் இருக்கும் கதாநாயகிகளுக்கு ஈடான அழகுடையவள். அழகோடு அறிவும் திறமையும் சேர்ந்துகொள்ள பலருக்கு அவள் மேல் ஒரு கண். சிலருக்கு அவளை சொந்தமாக்கிக்கொள்ளும் எண்ணம். சிலருக்கு ஒருமுறையாவது அனுபவித்து விட வேண்டும் என்னும் சபலம்.​

தொழில் வட்டத்தில் துஷாராவின் திறமையை பற்றி எவ்வளவு தூரம் பேச்சு இருக்கின்றதோ அதை விட அவளின் அழகை பற்றிய விமர்சனங்கள் அதிகம். அதிலும் சினிமா துரையினரின் ப்ரைவெட் பார்ட்டிகளில் வயது வித்தியாசமில்லாமல் அவளை வக்கிரமாக வர்ணிப்பவர்கள் ஏராளம்.​

அதிலும் சிலர் அவளின் தீயை போன்ற குணத்திற்கு அவள் நுனி விரலை கூட தீண்ட முடியாது என்று பேசுகையில் பரத்திற்குள் அவளை ஒருமுறையேனும் தன் இச்சைக்கு இணங்க வைத்துவிட வேண்டும் என்கின்ற எண்ணம் உருவாகியிருந்தது.​

அதுவே அவனின் ஆண் கர்வத்தை தூண்டிவிட்டிருக்க அந்நேரம் தான் துஷாரா இயக்க இருந்த படத்திற்கு அவன் ஒப்பந்தமாகியிருந்தான். அதுவும் அப்படத்தின் தயாரிப்பாளர் முருகவேலின் சிபாரிசில்.​

வந்த வாய்ப்பை நழுவ விட விரும்பாதவன் படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளிலிருந்தே எப்படி எல்லாமோ குட்டிக்கரணம் போட்டு பார்த்துவிட்டான். ஒன்றும் வேலைக்காகவில்லை.​

அவன் செய்கைகளும், பேச்சுகளும், பார்வைகளும் புரிந்தாலும் புரியாதது போலவே அவள் நழுவியிருந்ததில் அவனுக்கு அடுத்து முன்னேறுவதற்கான வழி அடைப்பட்டு போயிருந்தது. அதில் கடுப்பானவன் இன்று படப்பிடிப்பில் எப்படி எல்லாம் சொதப்ப முடியுமோ அப்படியெல்லாம் நடிப்பில் சொதப்பியிருந்தான்.​

அவன் வேண்டுமென்றே செய்கின்றான் என்று தெரிந்த துஷாரா ஒரு கட்டத்தில் அவனை எல்லோர் முன்னிலையிலும் திட்டியிருக்க அதையே சாக்காக வைத்துக்கொண்டு இதோ இப்பொழுது அவளை தன் கேரவேனிற்குள் நிறுத்தியிருந்தான்.​

கிட்ட தட்ட அவன் நினைத்ததை அடையும் தருணமென்று அவன் சிலாகித்திருக்க அவன் நினைத்ததற்கு மாறாக அல்லவா நடந்துவிட்டது.​

பெண்வவள் புள்ளி மானை போல அவன் காலடியில் சுருண்டுகிடப்பாள் என்று அவன் திட்டமிட்டிருக்க அவள் சிங்கமென சிலிர்த்துக்கொண்டல்லவா நிற்கின்றாள்.​

இதற்குமேலும் அவளை சீண்டினால் அவனின் ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையையும் அடமானம் வைக்க வேண்டியதாகிவிடும் என்று உணர்ந்துக்கொண்டான். ஒரு பெண்ணிற்கு ஆசை பட்டு மொத்தத்தையும் இழக்குமளவிற்கு அவனுக்கு தெம்பில்லை.​

அதில் அவன் எச்சிலை கூட்டி விழுங்கிக்கொள்ள திறந்திருந்த அவன் ஷர்டை இழுத்து சரிசெய்து விட்டவள் "பட்டனை போட்டுட்டு வெளிய வா" என்றபடி வெளியேற சென்றாள்.​

அவள் கதவில் கையை வைக்க "மேடம், வா போன்னு பேசுறீங்க. கொஞ்சம் மரியாதை…" என்று அவன் இழுக்க "மரியாதை கொடுத்தா திரும்ப கிடைக்கும்" என்று விட்டு வெளியேறியிருந்தாள்.​

அந்நேரத்தில் அவளின் கோபத்தீயிலிருந்து தப்பிக்க பரத் பதவிசாக பேசியிருந்தாலும் அவள் அவமானப்படுத்திய வன்மம் அவனுக்குள் இருந்துக்கொண்டுதான் இருந்தது.​

அதில் அவளை பின்தொடர்ந்து வெளியேறியவனோ சுற்றியிருந்தவர்களின் பார்வையில் விழும்படி இதழ்களை புறங்கையால் துடைத்துக்கொண்டான். கலைந்திருந்த தலையை சரி செய்துக்கொண்டான்.​

கேரவேனிற்கு அருகே நின்றிருந்த பரத்தின் அஸிஸ்டனோ "சாதிச்சிட்டிங்க சார்" என்று இதழசைத்து பெருவிரலை தூக்கி காட்ட திறந்திருந்த ஷர்ட்டின் பட்டன்களை போட்டபடி இது எல்லாம் எனக்கு சாதாரணம் என்னும் ரீதியில் அசட்டையாக புன்னகைத்தும் கொண்டான்.​

உள்ளே நடந்தது அவர்கள் இருவரை தவிர யாருக்கும் தெரியதல்லவா. அதை பயன்படுத்திக்கொண்டான்.​

இங்கே தான் உண்மையை அலசிப் பார்க்க யாருக்கும் நேரமிருப்பதில்லையே. கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும் மட்டுமே உண்மையாகிவிடுகின்றன. சில சமயங்களில் பார்த்ததும் கேட்டதும் கூட திரிக்கப்பட்டு வேறொரு வதந்தியாக மாறிவிடுகின்றன. இது எல்லாமே சினிமாவை பொறுத்த வரை மிக இயல்பான ஒன்று தானே.​

அதே போல் அவனின் நடவடிக்கை அங்கிருந்த மற்றவர்களின் கண்களிலும் பட்டுவிட தங்களுக்குள் கிசுகிசுக்க தொடங்கியிருந்தனர்.​

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அமரனின் பார்வை துஷாரா மீதே கூர்மையாய் படிந்திருக்க அந்நேரத்திற்கெல்லாம் காசோலையை பெற்றுக்கொண்டு வந்திருந்த விஜயின் கண்களிலும் அந்த காட்சி தான் விழுந்தது.​

"என்னடா நடக்குது? அந்த பொண்ணு நெருப்பு மாதிரின்னு கேள்விப்பட்டேனே. இங்க வேரென்னவோ நடக்குது" என்று துஷாராவின் குணம் பற்றி கேள்வி பட்டிருந்த விஜயும் தன்னை மீறிய அதிர்ச்சியில் வாய் விட்டே கேட்டுவிட "ஹ்ம்ம்...இவ கிட்ட வேற என்ன எதிர்பார்த்திட முடியும்” என்றவன் காரில் ஏறிக்கொண்டான்.​

ஒரு பெருமூச்சுடன் தோள்களை உலுக்கிக்கொண்ட விஜயும் காரை எடுத்திருக்க அவனது கார் விமனநிலையத்திற்கு புறப்பட்டிருந்தது.​

இங்கே மீண்டும் தனது நாற்காலியில் வந்தமர்ந்த துஷாராவிடம் அகிலன் பரத் அவளுக்கு பின்னால் செய்த செய்கைகளை பற்றி சொல்ல " தெரியும். பட் நாய் கடிச்சுதுன்னு பதிலுக்கு நானும் அதை கடிக்க முடியுமா? எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றவள் "சும்மா பேசிட்டிருக்காம கெட் ரெடி. டேக் போகலாம்" என்றாள்.​

அவள் பதிலில் அகிலன் அவளை வியந்து தான் பார்த்தான். இப்படி பலமுறை அவனை வியக்க செய்திருக்கின்றாள்.அவள் கோபக்காரிதான் என்றாலும் அகிலன் அவளிடம் உதவியாளனாக நிலைத்திருக்க காரணமே இது தான். எப்படியான விடயமாக இருந்தாலும் அதை சாதாரணமாக தட்டிவிட்டு சென்றுவிடுவாள். அவளின் கவனத்திற்கு அந்த விடயம் தகுதியற்றது என்று முடிவெடுத்துவிட்டால் அதிலேயே உழன்று நேரத்தை விரயமாக்க மாட்டாள். அடுத்ததை பார்க்க சென்றுவிடுவாள்.​

ஒரு சன்ன புன்னகையுடனே அவனும் எல்லா ஏற்பாடுகளையும் மற்ற துணை இயக்குனர்களுடன் சேர்ந்து முடித்திருக்க "ரோல் கேமரா...ஆக்ஷ்ன்" என்ற அவளின் குரல் அவ்விடத்தை நிறைத்திருந்தது.​

சற்று முன் நிகழ்ந்த எதுவுமே அவளை பாதிக்கவில்லை போலும். சர்வ சாதாரணமாக மீண்டும் களத்தில் இறங்கிவிட்டாள்.​


அடுத்த எபிசொட் வெள்ளி கிழமை மக்களே....

 
Last edited:

Vilacini

Well-known member
Wonderland writer

திரை 4

அன்று இரவு தாமதமாக தான் வீடு வந்து சேர்ந்திருந்தாள் துஷாரா. பூட்டியிருந்த வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைய அதுவோ கும்மிருட்டில் மூழ்கியிருந்தது.​

அது அவளின் அபார்ட்மெண்ட். அங்கே தனியாக வாசிக்கின்றாள்.​

வீட்டிற்குள்ளே நுழைந்ததும் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டாள். ஏதோ ஒரு நிம்மதி அவள் மனத்தை நிரப்பியது. உடலிலும் உள்ளத்திலும் உள்ள இறுக்கம் தளர்வது போன்ற உணர்வு.​

எங்கெங்கோ திரிந்திருக்கின்றாள். எத்தனையோ இடங்களில் தங்கியுமிருக்கின்றாள் அங்கெல்லாம் கிடைக்காத நிம்மதியை இதுவரையில் இந்த வீட்டில் தான் உணர்ந்திருக்கின்றாள்.​

அடுத்தவரிடம் தனது பலவீனத்தை வெளிப்டுத்தாதவளின் வலிகள் இந்த நான்கு சுவற்றிற்கு மட்டுமே தெரியும். வெளியில் சிங்கமென சிலிர்த்து நிற்பவள் தனது களைப்பு, வருத்தம், சோகம், அழுத்தம், மென்மை என்று வெளிப்படுத்தும் ஒரே இடம் இந்த வீடு மட்டும் தான்.​

அதற்கு ஒரே காரணம் இங்கே கிடைக்கும் தனிமையுடன் கூடிய சுதந்திரம். அவளுடைய செய்கைகளுக்கு யாருடைய தலையீடல்களும் மதிப்பீடல்களும் இல்லாத சுதந்திரம் அது. எப்பொழுதும் அடுத்தவர் பார்வைக்கும் மதிப்பிடலுக்கும் உள்ளாகக் கூடிய துறையில் இருப்பவள். அவளுக்கு இந்த தனிமையில் தான் நிம்மதியாக மூச்செடுக்க முடிகின்றது.​

குடும்பத்துடன் இருக்க அவளுக்கும் ஆசை தான். ஆனால், அவளின் பணிக்கும் அதன் தன்மைக்கும் அவள் அவர்களுடன் சேர்ந்திருப்பது சரிவராது.​

நேரம் காலம் இல்லாத வேலை. நள்ளிரவில் வீடு வருவதும் சில நேரம் வராமலே இருப்பதும் அவள் விரும்பி செய்யும் தொழிலுக்காக அவள் செய்யும் அர்பணிப்புகள். ஆண் பெண் பேதமின்றி பழகக்கூடிய சூழ்நிலை வேறு. குடும்பமாக இருக்கையில் அது போன்ற வாழ்வியல் முறை ஒற்றுப்போவதில்லையே.​

அதிலும் துஷாராவின் தந்தை அவளின் சுதந்திரத்தில் தலையிடுவதில்லை. அதோடு அவளை தட்டி கொடுத்துதான் பழகியிருக்கிறார். ஆனால், அவளின் தாய் அன்புச்செல்வி அப்படியில்லை.​

சினிமா குடும்பத்தில் இருப்பவராக இருந்தாலும் அவர் சராசரி தாய் தான். பிள்ளைகள் வளர்ப்பில் கண்டிப்பானவர். அதில் அவருக்கு துஷாரா தந்தையை பின்பற்றி சினிமா துறையில் கால் பதித்ததில் கொஞ்சமும் விருப்பமே இல்லை.​

அவர் வேண்டாமென்று எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கவில்லை. தனக்கு பிடித்த துறையில் தான் ஈடுபடுவேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டாள். தீனதயாளன் கூட அவளுக்கு ஆதரவாய் இருந்ததில் அன்புச்செல்வியால் அதற்கு மேல் தடுக்க முடியவில்லை. அவள் இஷ்டத்திற்கே இணங்க வேண்டியதாயிற்று.​

என்னதான் அவள் விருப்பத்திற்கு சம்மதித்திருந்தாலும் அவள் சினிமாவில் ஈடுபட்ட ஆரம்பகாலத்தில் அவளுக்கு எத்தனையோ கட்டளைகளும் கெடுபிடிகளும். ஒரு கட்டத்தில் அவளால் அவளின் வேலையையே சரிவர செய்ய இயலாது போனதில் தனியே செல்வது என்று முடிவெடுத்துவிட்டாள்.​

அதற்கும் அன்புச்செல்வி சண்டைக்கு நின்றதில் இறுதியில் தீனதயாளனின் துணைகொண்டுத்தான் தான் நினைத்ததை சாதித்திருந்தாள்.​

என்னதான் சினிமாவில் தந்தையின் உதவி அவளுக்கு தேவைப்படவில்லை என்றாலும். குடும்பம் என்று வரும் பொழுது எப்பொழுதும் அவர் தான் அவளுக்கு துணை.​

அதில் தாயுடன் சிறு மனக்கசப்பு இருந்தாலும் தந்தை எப்பொழுதும் தன் பக்கம் என்பதில் அவளுக்கு சிறு கர்வம்.​

பெண்பிள்ளைகளுக்கே உரித்தான குணமல்லவா அது.​

அவளின் உடல் அசதிக்கு விளக்கை போடக்கூட அவளுக்கு தெம்பில்லை. அந்த இருட்டிற்குள்ளேயே காரின் சாவியை அருகிருந்த மேசையின் மீது வைத்துவிட்டு தோளில் மாட்டியிருந்த பையை தூக்கி சோபாவின் மீது போட்டவள் நேரே தனது அறைக்குள் நுழைந்தாள்.​

தொலையியக்கியை எடுத்து குளிரூட்டியை ஆன் செய்தவள் மேலே அணிந்திருந்த வெள்ளை ஷர்ட்டை கழட்டி அழுக்கு கூடைக்குள் போட்டிருந்தாள்.​

இத்தனையையும் இருட்டிலேயே செய்தவள் உள்ளே அணிந்திருந்த வெள்ளை நிற டேங்க் டாப் மற்றும் ஜீன்ஸுடன் அப்படியே பொத்தென்று மெத்தையில் விழுந்து விட்டாள்.​

உடல் கசகசவென்று தான் இருந்தது. குளிக்க வேண்டும் போல உணர்வு தான். ஆனால், நாள் முழுவதும் அவள் சக்தியெல்லாவற்றையும் படப்பிடிப்பு தளமும் அங்கிருக்கும் மனிதர்களுமே உறிஞ்சிவிட இப்போது அவளிடம் எஞ்சியிருப்பது களைப்பும் தூக்கமும் மட்டும் தான்.​

வயிறு பசித்தது. ஆனால், சாப்பிட கூட தெம்பில்லை. அந்தளவிற்கு களைப்பு.​

மெத்தையில் விழுந்தவள் அருகிருந்த டெட்டி பேர் பொம்மையை அணைத்துக்கொண்டு படுத்தவள் தான். எப்பொழுது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியாது. அவள் பொம்மையை கட்டிக்கொண்டு தூங்குமளவிற்கு மென்மையானவள் இல்லையென்றாலும் அது சிறுவயதில் என்றோ ஒரு பிறந்தநாளுக்கு தீனதயாளன் கொடுத்த பரிசு. அவளுக்கு மிகவும் நெருக்கம்.​

தந்தையை விட்டு தூர இருந்தாலும் அவர் கொடுக்கும் தைரியத்தை அந்த பொம்மை கொடுப்பதை போன்ற உணர்வு அவளுக்கு. அது தான் எப்பொழுதும் கூடவே வைத்திருப்பாள்.​

****​

அடுத்த நாள் காலையில் ஹோட்டல் அறையில் கண்விழித்திருந்தான் அமரன்.​

முதல் நாள் ஷூட்டிங், அன்றிரவே மும்பை பயணமென்று அவனுக்கு களைப்பின் மிகுதி. ஹோட்டலை அடைந்ததும் நன்கு தூங்கி எழுந்திருந்தான்.​

அப்பொழுதான் கண் விழித்தவன் சோம்பல் முறித்தபடி நேரத்தை பார்க்க அவனது அறை கதவு தட்டப்பட்டது.​

''கம் இன்'' என்று அவன் சொல்ல கதவை கொஞ்சமாக திறந்திருந்த விஜய் "உள்ள வரலாமா?" என்று கதவின் பின்னிருந்தே கேட்டான்.​

"அதான் கம் இன்னு சொல்லிட்டேனே. பிறகு வரதுக்கு என்ன?" என்று சொல்லிக்கொண்டே எழுந்தவன் அருகே இருந்த பூந்தூவலையை எட்டி எடுத்திருந்தான்.​

"நீ எந்த கோலத்தில் தூங்கிட்டிருப்பியோ யாருக்கு தெரியும்" என்று சொல்லிக்கொண்டே கதவை முழுமையாக திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்த விஜயுடன் ஒரு பெண்ணும் நுழைந்திருந்தாள்.​

அவளோ தொடை தெரியுமளவில் ஷார்ட் மட்டுமே அணிந்தபடி தனது கட்டுடலை காட்டிக்கொண்டு நின்ற அமரனை விழிவிரிய பார்த்துக்கொண்டே நிற்க விஜய்யோ தலையை குனிந்து சிரிப்பை அடக்கிக்கொண்டான்.​

சட்டென்று கையிலிருந்த துவாலையை தனது இடுப்பில் கட்டிக்கொண்ட அமர் "ம்பச், நீ இங்க என்ன பண்ணுற?" என்று கேட்டான்.​

"நீங்க தானே சார், ஷூட் போகுற முன்னாடி பெடிக்கியூர், மெனிகியூர், பேசியல் எல்லாம் பண்ணனும்னு சொன்னிங்க. அதான் காலையிலேயே வந்துட்டேன்" என்றாள் அம்ரிதா. அமரனின் பிரத்தியேக அழகுக்கலை நிபுணர் அவள்.​

"அதுக்கு இப்படி தான் பார்த்துட்டே நிப்பியா? கொஞ்சம் வெளிய நில்லும்மா" என்று அவளை துரத்த அவளோ ''ம்ம்ம்'' என்று தலையை ஆட்டியவள் அவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வெளிவாசலை நோக்கி நடந்தாள்.​

அவள் சென்றதும் "அவளும் வந்திருக்கான்னு சொல்லுறதுக்கென்ன" அமர் விஜயை திட்ட '' சொல்லியிருந்தா ஒரு ஃப்ரீ ஷோ கிடைச்சிருக்காதுல்ல அவளுக்கு" என்றான் விஜய்.​

"உன்னை கொல்லப் போறேன் பாரு. வர வர அவள் கொஞ்சம் ஓவரா தான் போறா. பார்க்குற பார்வையும், பேசுற பேச்சும். பேசியல் பண்ண சொன்னா டச்சே வேற மாதிரி ஃபீல் ஆகுது" என்றான் கடுப்பாக.​

"அப்போ வேலையை விட்டு தூக்கிடுவோமா" என்று விஜய் கேட்க "தூக்கிடலாம் தான். பட், சர்விஸ் நல்லா இருக்கே. இருந்துட்டு போகட்டும் விடு" என்றான் அமர்.​

அவன் பேச்சில் இதழ்களை மடித்து சிரித்த விஜய் "ஆனாலும், நீ கொடுத்து வச்சவன் தான் டா. வில்லனா இருந்தாலும் எல்லா பொண்ணுங்களும் உன் மேல தானே வந்து விழுறாளுங்க. எனக்கெல்லாம் ஒண்ணுமே தேற மாட்டுதே. கண்ணெடுத்து பார்க்க கூட ஆள் இல்லை" என்றான் சலிப்பாக.​

"சந்தோஷப்பட்டுக்கொ இல்லைன்னா ஒரு கட்டத்தில் உனக்கே சலிப்பாகிடும் என்னை மாதிரி" என்றவன் "குளிச்சிட்டு வந்திடுறேன் இரு" என்றுவிட்டு குளியலறைக்குள் புகுந்துக்கொண்டான்.​

அவன் குளித்து முடித்து உடை மாற்றி வர அவனுக்கான காலை உணவு தயாராக காத்துக்கொண்டிருந்தது. அம்ரிதாவும் அவனுக்கான சேவைகளை வழங்க பொருட்களை எல்லாம் தயார்நிலையில் எடுத்து வைத்து காத்துக்கொண்டிருந்தாள்.​

அவன் உணவை அருந்திக்கொண்டே நாற்காலியில் சாய்வாக அமர்ந்து கால்களை இலகுவாக நீட்டி இருக்க அம்ரிதா அவனுக்கு பெடிகியூர் செய்ய தொடங்கியிருந்தாள்.​

அதே நேரம் அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்த விஜய் ஒரு பெருமூச்சுடன் தலையை இடவலமாக ஆட்டிக்கொண்டான்.​

"என்னடா?" என்றான் அவனை கவனித்திருந்த அமர்.​

"இந்த மீடியாக்களுக்கு வேற வேலையே இல்லை" என்றான் கடுப்பாக.​

"ஏன் என்னாச்சு" வாயில் வைத்த உணவை மென்று கொண்டே கேட்டான் அமரன்.​

"நேத்துவரைக்கும் இந்த பாடகி பெட்டரா, அந்த பாடகி பெட்டரான்னு நியூஸ் போட்டுட்டிருந்தவங்களுக்கு இன்னிக்கு புதுசா ஒன்னு சிக்கியிருக்கு. ஒரு ஆர்ட்டிகள்ல து எழுத்து இயக்குனருக்கும் ப எழுத்து ஹீரோவுக்கும் தொடர்பான்னு டைட்டில். ‘’கேரவேணுக்குள் கேமா?’அப்படின்னு இன்னொரு ஆர்ட்டிகள். அதையும் தாண்டி இருக்குற அந்த ஒரு போட்டோவை பத்து யூடியூப் சேனல் கூறு போட்டு விமர்சனம் பண்ணுறானுங்க”’என்று அவனது அலைபேசியை அமரின் முன்னே நீட்டினான்.​

அமரும் தொலைபேசியை வாங்கி பார்க்க அதில் விஜய் சொல்லியது போன்ற தலைப்புகளுடன் துஷாராவும் பரத்தும் கேரவேனிலிருந்து வெளிவருவது போன்ற புகைப்படம் இணைக்கப்பட்டிருந்தது.​

அமரின் விழிகள் அந்த புகைப்படத்தையே கூர்த்திருக்க "நீங்க இப்போ தான் பார்க்குறீங்களா இது எல்லாம் நேத்து நைட்டே வந்தாச்சு" என்றாள் அம்ரிதா.​

"நைட்டேவா... நடந்ததே நேத்து நைட்டு தானே. இவனுங்களுக்கு மட்டும் எப்படி தான் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மாதிரி இன்ஸ்டன்ட் கோசிப் கிடைக்குதோ தெரியல, சுட சுட பப்ளிஷ் பண்ணிடுறாங்க" என்று பொறிந்தான் விஜய்.​

"அதுக்கு தானே சம்பளம் வாங்குறாங்க" என்று அவள் சொல்ல " நீ முதல் வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலையை செய்" என்றபடி கதை பேசும் ஆர்வத்தில் சிதறியிருந்த அவளின் கவனத்தை மீண்டும் அவன் காலுக்கு திருப்பியிருந்தான் அமர்.​

"ஓப்ஸ்...சாரி சார்" என்றபடி மீண்டும் அவளின் கவனத்தை அவன் கால்களில் குவித்தாள் அம்ரிதா.​

"கமெண்ட் செக்ஷேனை பாரு. என்னவோ கேரவேணுக்குள் போய் விளக்கு பிடிச்சது போல அவனவன் சகட்டு மேனிக்கு எழுதிவச்சிருக்கான்.அதுல எவனாவது ஒருத்தன் அந்த பரத்தை ஏதும் சொல்லியிருக்கானா பாரு. எல்லாருமே துஷாராவை பத்தி தான் எழுதியிருக்கானுங்க. வக்கிரம் பிடிச்சவனுங்க" என்றான்.​

அவன் குரலில் அத்தனை ஆத்திரம்.​

ஆதாரமற்ற வதந்திகள் மேல் அவனுக்கு எப்பொழுதுமே ஒரு வெறுப்பு.​

இப்படி இலகுவாக பேசிவிட கூடிய வதந்திகள் எத்தனை பேரின் கடின உழைப்பையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் சுக்கு நூறாக உடைத்திருக்கின்றது. அதை பற்றிய கவலை எதுவுமே இல்லாமல் எப்படி இவர்களால் மனசாட்சியற்று நடந்துகொள்ள முடிகின்றது என்ற ஆத்திரம்.​

தொழிலை சார்ந்து பிரபலங்களை அணுகுவதையும் ரசிப்பதையும் விட்டுவிட்டு எதற்கு இப்படி அவர்களின் படுக்கையறையை எட்டிப் பார்க்கும் வக்கிரம் என்று தான் தோன்றும்.​

இது போல அமரை பற்றி வரும் வதந்திகளை கையாள்வதும் அவன் தானே. அவனை பற்றிய வதந்திகளை பரப்பியவர்களை உண்டில்லை என்று ஆக்கி விட்டு தான் மறுவேலை பார்ப்பான். அதில் அமருக்கு இது போன்ற விடயங்களை சமாளிக்கும் அவசியம் இருப்பதில்லை. பொறுப்புகளை விஜயிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக அவன் வேலையில் கவனமாகிவிடுவான்.​

விஜய் பேசிக்கொண்டிருக்க அமரின் விழிகளும் அந்த கமெண்டுகளை தான் வாசித்துக்கொண்டிருந்தன.​

அவன் சொல்வது உண்மை தான். அத்தனை அசிங்க அசிங்கமான கமெண்டுகள்.​

ஆனால், விஜயை போல அவனுக்கு எந்த உணர்வுமில்லை. அவனின் முகம் வெறுமையாக தான் இருந்தது. அவளுக்காக துளியும் கவலைப்படவில்லை.​

ஒருமுறை விழிகளை அழுந்த மூடித் திறந்தவன் "இண்டஸ்ட்ரியில் இருந்தா இதை எல்லாம் சந்திச்சு தானே ஆகணும். அவ என்ன பெரிய மகாராணியா அவளை மட்டும் விட்டு வைக்க" என்றான் அசட்டையாக.​

விஜயின் பார்வை அமரின் மீது அழுத்தமாக படிய "மோரோவர், இது வெறும் வதந்தியா மட்டுமே இருக்கணும்னு அவசியமில்லையே" என்றபடி அலைபேசியை விஜயிடம் நீட்டினான்.​

"இது வதந்தி தான்னு உனக்கே தெரியும் அமர்" என்றான் விஜய்.​

அவன் குரலில் சிறு அழுத்தம் தொனித்தது.​

ஆக்டர், மேனேஜர் என்னும் நிலை மாறி அவர்களுக்குள் நண்பர்களாக ஊடல் ஒன்று உருவாவது போல் இருந்தது.​

அறைக்குள் சாதாரண உரையாடல் என்பதை தாண்டி வேறு வித அழுத்தம் ஒன்று பரவுவதை அம்ரிதாவும் உணர அவனின் கால்களுக்கு பராமரிப்பு செய்துகொண்டிருந்த அவளின் கரங்களும் சற்று நின்று மீண்டும் பணியை தொடர்ந்தன.​

அதை உணர்ந்த அமரின் பார்வை ஒரு நொடி அம்ரிதாவில் படிந்து மீண்டும் விஜயின் முகத்தில் நிலைத்தது.​

"இது நமக்கு தேவையில்லாத ஆணி. தூக்கி தூர போட்டுட்டு, கெட் ரெடி டு ஒர்க்" என்றவனின் பார்வையில் கூர்மை அதிகரித்திருந்தது.​

அதற்குமேல் விஜய் எதுவும் பேசவில்லை. ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டே அடுத்த வேலையை தொடங்கிவிட அனைவரும் படப்பிடிப்புக்கு கிளம்பியிருந்தார்கள்.​

அங்கே தேவையற்றது என்று அவர்கள் ஒதுக்கிய அதே செய்தியை பார்த்து இங்கே கொதித்து போயிருந்தார் அன்புச்செல்வி.​


அடுத்த எபிசொட் புதன் கிழமையில் எதிர்பார்க்கலாம் மக்களே

 
Last edited:

Vilacini

Well-known member
Wonderland writer

திரை 5

முதல் நாள் இரவு களைப்பின் மிகுதியில் அடித்து போட்டது போன்று உறங்கியிருந்தாலும் காலையில் நேரத்திற்கே எழுந்திருந்தாள் துஷாரா. கலைந்திருந்த கூந்தலை அள்ளி க்ளிப்புக்குள் அடக்கிக்கொண்டு கட்டிலிலிருந்து இறங்கியவள் குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.​

விரைவாக எழுந்திருந்தாலும் உடலில் அசதி இன்னமும் மீதமிருக்க பல் துலக்கி முகம் மட்டும் கழுவிக்கொண்டு வெளியே வந்தாள்.​

பூந்துவாலையால் முகத்தை துடைத்துக்கொண்டே வெளியில் வந்தவள் அதை அருகே இருந்த நாற்காலி மீது போட்டு விட்டு தனது அலைபேசியை தேடினாள். அது அவளின் அறையில் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.​

"ம்பச்...எங்க போச்சு?" என்று இடையில் ஒரு கையை குற்றி அடுத்த கையால் நெற்றியை நீவிவிட்டுக்கொண்டே யோசித்தவளுக்கு சட்டென அதன் இருப்பிடம் நினைவு வந்துவிட முன்னறையை நோக்கி நடந்தாள்.​

அவள் விழிகள் சோபாவின் மீது கிடந்த தோள்பையின் மீது படிய அதை எடுத்து திறந்தவள் கையை உள்ளே விட்டு துளாவியதில் அவளின் கைபேசி தட்டுப்பட்டது.​

பையை மீண்டும் சோபாவிலேயே போட்டுவிட்டு அலைபேசியை திருப்பி பார்க்க அதுவோ உயிர்பற்று கிடந்தது. நேற்று இரவு என்னை சார்ஜில் போடு என்று அது கதறியதை மறந்து அப்படியே உறங்க சென்றிருந்தாள்.​

இன்று அதுவோ மொத்த சக்தியையும் வடித்துவிட்டு உயிர்ப்பில்லாமல் மடிந்து போயிருந்தது.​

அதை எடுத்துக்கொண்டு சார்ஜரில் போட்டவள் அதை ஆன் செய்துகொண்டே நேரத்தை பார்த்தாள்.​

காலை மணி எட்டு.​

இன்று அவளுக்கு மதியம் இரண்டு மணிக்கு மேல் தான் ஷூட்டிங் இருந்தது. வழக்கம் போல் அரக்க பறக்க கிளம்ப வேண்டிய அவசியம் இருக்கவில்லை. நிதானமாகவே கிளம்பி செல்லலாம்.​

அலைபேசிக்கு உயிர்ப்பு வர சில நொடிகள் எடுத்ததில் அதை அப்படியே மேசை மீது வைத்து விட்டு சமைலறையை நோக்கி நடந்தாள்.​

அதற்குள் உயிர்பெற்றிருந்த அலைபேசியில் படபடவென நோட்டிபிகேஷன்கள் வந்து குவிந்து ஓயாமல் ஒலி எழுப்பின. அத்தனையும் நேற்றிரவிலிருந்து அவள் தவறவிட்டிருந்த அழைப்புகளும் புலனசெய்திகளும் தான்.​

சமையலறையை நோக்கி நடந்தவள் நடந்துகொண்டே புருவமிடுங்க தலையை மட்டும் திருப்பி அலைபேசியை பார்த்தாள்.​

இப்போது அவளுக்கு அதை எல்லாம் கவனிக்கும் மனநிலை இல்லை. சலிப்பாக பெருமூச்சொன்றை எறிந்தவள் அப்படியே சமயலறைக்குள் புகுந்துகொண்டாள்.​

அவளின் சமயலறையில் பெரும்பாலும் ஒரு பொருளுமே இருக்காது. சமைப்பதற்கும் அவளுக்கு நேரம் இருப்பதில்லையே. குறைந்தபட்சம் காபி போடுவதற்கு தேவையான பொருட்கள் மட்டுமே வைத்திருப்பாள்.​

சினிமா, அப்பா கொடுத்த தெடி பேர், அதற்கு அடுத்ததாக அவளுக்கு பிடித்த மூன்றாவது விடயம் இந்த காபி.​

இப்பொழுதெல்லாம் நின்று நிதானமாக ஒரு கப் காபியை ருசித்து குடிப்பதற்கு கூட அவளுக்கு அவகாசமிருப்பதில்லை. எப்பொழுதும் பரபரப்புடனே நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை.​

ஆனால், அதை விரும்பி செய்கின்றாள். சினிமாவை காதலிக்கின்றாள்.​

சுடசுட காபி போட்டு முடித்தவள் அதை நாசிக்கருகே கொண்டு சென்று ஆழ்ந்து சுவாசித்து வாசம் பிடித்தாள். நாசியை துளைத்த அதன் நறுமணமே உள்ளுக்குள் பேரமைதியை நிலவச்செய்வதாய் தோன்ற சிறு புன்னகையும் காபி கப்புமாய் பால்கனியை நோக்கி நடந்தாள்.​

பால்கனியின் ஓரமாக சுவற்றில் சாய்ந்து நின்று காலை அழகை ரசித்துக்கொண்டு ஒரு மிடறு தான் பருகியிருப்பாள் அவள் கண்களோ அங்கே அவளின் குடியிருப்பின் காவலாளிகளிடம் சிலர் தகராறு செய்யும் காட்சி தென்பட்டது.​

கழுத்தில் ஐடி கார்டு, கையில் ஒளிப்பதிவு கருவிகளுடன் பார்ப்பதற்கு பத்திரிகையாளர்கள் போல் தெரிந்தது. அவர்கள் உள்ளே வர முயல்வதும் காவலர் அனுமதியளிக்க மறுப்பதுமாக ஏதோ வாய் தகராறு.​

அவளின் புருவங்கள் மெல்ல இடுங்கின. அவர்களை அழுத்தமாக பார்த்துக்கொண்டே அடுத்த மிடறு காப்பியை அருந்தினாள்.​

அச்சமயம் அவளின் அலைபேசி அலறியது. பால்கனியில் இருந்தபடியே உள்ளே திரும்பி பார்த்தாள். ஆனால், எடுத்துப்பேசும் எண்ணமில்லை போலும். அழைப்பு அடித்து ஓய்ந்திருந்தது.​

ஒரு பெருமூச்சுடன் மீண்டும் காபியை உதட்டருகே கொண்டு செல்ல அவளின் அலைபேசி மீண்டும் அலறியது.​

கடுப்பாகிவிட்டாள்.​

கண்களை அழுந்த மூடி பெருமூச்சொன்றை விட்டவள் வேகமாக வீட்டிற்குள் நுழைந்தாள்.​

அகிலன் தான் அழைத்துக்கொண்டிருந்தான்.​

அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் "மனுஷனை நிம்மதியா காபிக் கூட குடிக்க விடமாட்டியா? அப்படி என்ன தலை போற அவசரமுன்னு காலையிலேயே கூப்பிடுற. ரெண்டு மணிக்கு தானே ஷூட்டிங்" என்று சீறினாள்.​

அவளது அமைதியை அவன் கலைத்துவிட்ட கோபம் அவளுக்கு.​

திட்டுவாள் என்று தெரிந்ததுதானே அவனும் அழைத்திருந்தான்.​

அதில் அவள் திட்டியதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் " நைட்டிலிருந்து கூப்பிடுறேன் நீங்க எடுக்கவேயில்லையே. நியூஸ் பார்த்திங்களா மேம்?"' என்று ஆரம்பித்தான்.​

"என்ன நியூஸ்?"என்று அவள் கேட்க "வாட்சப்பில் லிங்க் அனுப்பியிருக்கேன் பாருங்க" என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.​

அவளின் புருவங்களோ தன்னிச்சையாக இடுங்கிக்கொள்ள புலனத்தை திறந்தாள். அகிலன் அல்லாது தெரிந்தவர்கள், நண்பர்கள், அவளின் தாயிடமென்று பல செய்திகள் வந்திருந்தன.​

அனைத்தையும் பின்னுக்கு தள்ளியவள் அகிலனின் புலன செய்தியை திறந்தாள். அவன் அனுப்பியிருந்த இணையச்சுட்டியை திறந்ததும் பரத் மற்றும் அவளை பற்றிய பல விதமான செய்திகள்.​

குடியிருப்பு வாசலில் நிருபர்களின் கூட்டத்திற்கான காரணம் இப்பொழுது விளங்கியது அவளுக்கு. சலிப்பாக தலையசைத்துக்கொண்டாள்.​

அதனை தொடர்ந்து அவளின் சமூக வலைத்தளத்திற்குள் நுழைந்தாள். அவளை பற்றி கண்ட மேனிக்கு பதிவுகளும் கமெண்டுகளும் குவிந்திருந்தன.​

அதிலும் அவளின் தனிப்பட்ட பக்கத்தில் கூட ரசிகர்களின் வன்மங்கள் வந்து கொட்டிக்கிடந்தன. அதில் பரத்தின் பெண் ரசிகர்களும் அடக்கம்.​

நெற்றியை நீவிக்கொண்டே இதழ் குவித்து ஊதியவளுக்கு அன்புசெல்வியும் புலனம் செய்திருந்தது நினைவுக்கு வர வேகமாக அதை திறந்து பார்த்தாள்.​

"உன்கிட்ட பேசணும், வீட்டுக்கு வா" என்ற செய்தி.​

''ம்ப்ச், போச்சு டா" என்று முணுமுணுத்துகொண்டவளுக்கு அடுத்தவர்கள் தன்னை பற்றி பேசுவதை பற்றி துளியும் அக்கறையில்லை. தனது தாயை நினைத்தால் தான் ஆயாசமாக இருந்தது.​

அவளை போல் இவற்றை எல்லாம் எளிதாக கடக்க கூடியவர் அல்லவே அவர். அதில் இவளை அல்லவா போட்டு பாடாய் படுத்திவிடுவார். இன்று அவர் சொல்லாவிட்டாலும் அவள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றுதான் நினைத்திருந்தாள். அவளின் தந்தைக்காக.​

ஆம், தீனதயாளனிற்கு அவரின் கலைத்துறை சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைக்க இருக்கின்றது. அந்த செய்தி கேள்வி பட்டதிலிருந்து தந்தையை நேரில் சென்று வாழ்த்த எண்ணியிருந்தாள். அதற்குள் இப்படியான சூழ்நிலை.​

அதற்காக மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை எரிக்கவா முடியும். வதந்திக்கு பயந்து அவளின் சந்தோஷத்தை கெடுத்துக்கொள்ள முடியாதே. அலைபேசியை அணைத்து மேசை மீது வைத்தவள் குளித்து ஆயுத்தமாகி வெளியில் வந்தாள்.​

எப்படியும் குடியிருப்பின் முன் வாசல் வழியே சென்றால் நிருபர்கள் பிடித்துக்கொள்வார்கள் என்று நன்றாக தெரியும். ஆகவே, பின் வாசலை பயன்படுத்த நினைத்திருந்தாள்​

வழக்கமாக அவள் அணியும் ஓவர்சைஸ் ஷர்ட்டும் ஜீன்சும் அணிந்தவள் தலையில் தொப்பி ஒன்றையும் அணிந்துகொண்டாள். யாருடைய கவனத்தையும், முக்கியமாக பரபரப்பு செய்திகளுக்காக கழுகை போல் காத்திருக்கும் நிருபர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க விரும்பவில்லை அவள்.​

எப்படியோ வாசல் காவலரை ஏமாற்றிவிட்டு உள்ளே நுழைந்துவிட்டிருந்த ஓரிரண்டு நிருபர்கள் வாகன தரிப்பிடத்தில் காத்திருக்க அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு காருக்குள்ளும் ஏறி விட்டாள்.​

அவள் காரை உயிர்ப்பிக்கும் ஒலி கேட்டது தான் தாமதம் சட்டென அவள் காரை சூழ்ந்துக்கொண்டனர்.​

''மேடம், உங்களுக்கும் ஆக்டர் பரத்துக்கும் ஒரு இதுவாமே?" என்று ஒருத்தன் கேட்க "இது காதலா? கல்யாணம் பண்ணிக்க போறிங்களா?" என்று அடுத்தவன் கேட்டிருந்தான்.​

அதிலிருந்த இன்னொரு பெண் செய்தியாளரோ "ட்ரு லவ்வா இல்லை ஒன் நைட் ஸ்டாண்ட் ஆஹ் மேடம்?" என்றாள்.​

அவர்களின் அநாகரிகமான கேள்விகள் காரின் கண்ணாடிகளை துளைத்துக்கொண்டு அவளின் காதில் விழ அவர்களை அழுத்தமாக பார்த்துக்கொண்டே காரில் மாட்டி வைத்திருந்த கருப்பு கண்ணாடியை எடுத்து தோரணையாக அணிந்தாள்.​

அவளின் ஒற்றை கை கியரை மாற்ற கால் அக்ஸலட்டரை அதி வேகத்தில் அழுத்தியது. அதில் கார் வேகமெடுத்து கிளம்பியிருக்க காரை சுற்றி நின்ற நிருபர்கள் அத்தனை பேரும் தடுமாறித்தான் போனார்கள்.​

அவர்களை ரியர் வியூ கண்ணாடி வழியே பார்த்தவளின் இதழ்கள் நக்கலாக வளைந்துக்கொண்டன.​

***​

அந்த பெரிய பிரம்மாண்ட வீட்டிற்குள் நுழைந்திருந்தது துஷாராவின் கார்.​

அது தீனதயாளனின் இல்லம்.​

அவள் இருக்கும் அப்பார்ட்மெண்டிற்கும் இந்த வீட்டிற்கும் மலையளவு வித்யாசம். அத்தனை பெரிய வீடு. அதை பராமரிக்க வேலையாட்கள் வேறு. இத்தனை வசதிகளையும் விட்டுவிட்டு தான் தனியே வசிக்கின்றாள்.​

காரை உரிய இடத்தில் தரித்துவிட்டு அவள் வீட்டிற்குள் நுழைய முன்னறையில் தான் அமர்ந்திருந்தார் தீனதயாளன். கையில் காபி கப்பும் நாளிதழும் இருக்க விழிகளை அதில் பதித்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்.​

அவரை ரசனையாக பார்த்தவளுக்கு தந்தை அமர்ந்திருக்கும் விதமே பெரும் தோரணையாக தெரிந்தது. அவரின் நிமிர்வும் தோரணையும் தான் தன்னிடமும் இயல்பாக இருப்பதாக அவள் எப்பொழுதும் நினைப்பதுண்டு.​

அதில் இதழ்களில் புன்னகை ஒன்று மலர "அப்பா'' என்று அழைத்துக்கொண்டே அவர் அருகே சென்றவள் "கங்கிராச்சுலேஷன்ஸ்" என்றபடி அவர் கழுத்தை கட்டி கன்னத்தில் முத்தமொன்றும் கொடுத்தாள்.​

''ஓ...மை பிரின்சஸ் வாடா..." என்று அவரும் அவளை தன் அருகே இருத்திக்கொண்டே "இப்போ தான் அப்பா நினைவு வந்துச்சா?" என்றபடி பத்திரிகையை மடித்து மேசை மீது வைத்தார்.​

மேசையில் இருந்த பத்திரிகையில் அவள் விழிகள் படிய அதில் அவளும் பரத்தும் கேரவேனிலிருந்து இறங்கிவரும் புகைப்படம் பதிக்கப்பட்டு பிரபல தயாரிப்பாளர் தீனதயாளனின் மகளும் இயக்குனருமான துஷாராவுக்கும் நடிகர் பரத்திற்கும் காதலா?" என்று தலைப்புமிடப்பட்டிருந்தது.​

அதை பார்த்துவிட்டு அப்படியே திரும்பி தீனதயாளனை பார்த்தாள். அவளுக்கு தெரியும் தந்தை நிச்சயம் அந்த செய்தியையும் வாசித்திருப்பார். ஆனால், அவர் முகத்தில் எந்த சலனமுமில்லை. அவள் மீது ஒரு கண்டன பார்வை கூட இல்லை. சாதாரணமாக இருந்தார்.​

அதிலேயே தந்தை தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை புரிந்துவிட தந்தை மீதான மதிப்பு மேலும் கூடிற்று அவளுக்கு.​

அங்கே இருந்த வேலைக்காரியை அழைத்து "துஷாராவுக்கு காபி கொண்டு வா'' என்று சொல்லி அனுப்பியவர் "ஷூட்டிங் எல்லாம் எப்படி போகுது?" என்று விசாரித்தார்.​

"ஆல்மோஸ்ட் முடிஞ்சுதுப்பா. இன்னும் ரெண்டு சீன் மட்டும் தான் பாக்கி இருக்கு அதுவும் முடிச்சிட்டா எடிட்டிங் போய்டலாம்" என்றாள்.​

"ஃபென்டாஸ்டிக்..." பெருமிதமாக புருவமுயர்த்தியவரிடம் "இந்தப் படம் முடிய முருகவேல் சார் கூடவே இன்னொரு படம் பண்ணவும் சான்ஸ் இருக்கு" என்றாள்.​

''வெரி குட்" என்று அவள் தோளில் தட்டி கொடுத்த தீனதயாளன் "அப்படியே என் ப்ரொடக்ஷ்ன்லையும் ஒரு படம் பண்ணி கொடுக்கலாம்ல" என்று கேட்டார்.​

மெல்ல சிரித்துக்கொண்டவள் ''பண்ணலாம்தான்...ஆனால், அது இப்போ சரி வராதுப்பா. என் வளர்ச்சிக்காக உங்களை யூஸ் பண்ணிக்குறேங்குற மாதிரி ஆகிடும். பிறகு என்னை நெப்போ கிட்டுன்னு லேபிள் பண்ணிடுவாங்க" என்றாள்.​

அவள் சொல்லியதில் சத்தமாக சிரித்த தீனதயாளன் " அதுவும் உண்மை தான்" என்றார்.​

அவள் சொல்லியதில் இருக்கும் உண்மை அவருக்கும் தெரியும் அல்லவா.​

என்ன தான் திறமை கொண்டு முன்னேறினாலும் திரைத்துறையை சார்ந்தவர்களின் வாரிசு என்னும் ஒரே காரணத்திற்காக இறுதிவரை மூத்தவர்களின் பின்புலத்தில் முன்னேறியவர்கள் என்று தான் உலகம் முத்திரை குத்திவிடும்.​

ஆனால், அது போல எத்தனை வாரிசுகள் திரையுலகிற்கு வந்து தோற்று போயிருக்கிறார்கள் என்பது பேசுபவர்களின் மனதில் பதிவதேயில்லை.​

வாரிசு என்பதால் கிடைத்த வாய்ப்பு என்றாலும் அதில் நிலைத்து நிற்க திறமை இருந்தால் மட்டுமே முடியும் என்பதை ஏற்க மறுத்து அவர்கள் தன்னை நிரூபித்துக்கொண்ட பின்பும் அவர்களை நிந்திக்கும் சமுதாயமல்லவா இது.​

அதனாலேயே தீன்தயாளனும் அவளை கட்டாயப்படுத்தாமல் அவள் போக்கிலேயே விட்டுவிட்டார்.​

அதற்குள் வேலைக்காரியும் காபி கப்புடன் வந்திருக்க அதை வாங்கி துஷாராவிடம் கொடுத்த தீனதயாளன் "அந்த பரத் ஏதும் பிரச்சனை பண்ணுறானா? ஏதுமிருந்தா சொல்லு அப்பா பார்த்துக்குறேன்" என்றார்.​

காபியை பருகி கொண்டே அவரை நிமிர்த்து பார்த்தவள் "அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா, அவனை நானே ஹாண்டில் பண்ணிடுவேன். பட் அப்பா, ஐ அம் சாரி" என்றாள்.​

"எதுக்கும்மா சாரி" என்றவரின் முகத்தில் குழப்ப ரேகைகள் படர்ந்தன.​

"என்னோட உங்க பேரும் இழுபடுது..." என்று மேசை மீதிருந்த பத்திரிகையை கண்களால் காட்டினாள்.​

"அதை விடும்மா, இண்டஸ்ட்ரியில் இருந்தா இதையெல்லாம் பார்க்க தானே வேணும்" என்று அவர் முடிக்கவில்லை "ஆஹ்...இப்படி சொல்லி தான் அவளை கெடுத்து வச்சிருக்கீங்க என்று அங்கு வந்து சேர்த்திருந்தார் அன்புச்செல்வி.​

துஷாராவை பற்றிய வதந்தியை கேள்விப்பட்டதிலிருந்து தலைவலி என்று அறைக்குள் புகுந்துகொண்டவருக்கு அவள் வீட்டிற்கு வந்திருப்பது தெரியவில்லை. அவர் அனுப்பிய புலனத்திற்கும் அவள் தான் பதில் போடவே இல்லையே.​

துஷாராவிற்கு காபி போட்ட வேலைக்காரி அவருக்கும் காபி கொண்டு கொடுக்கும் போது தான் அவள் வந்திருப்பதை சொல்லியிருக்க சட்டென்று எழுந்துகொண்டவர் இதோ அவள் முன்னால் பத்திரகாளியென நின்றிருந்தார்.​


நேற்று போட்டிருக்க வேண்டிய எபிசொட் கொஞ்சம் வேலை மிகுதியில் சரிபார்க்க முடியாமல் போய்விட்டது. அதை இன்று போட்டிருக்கிறேன். அடுத்த எபிசொட் வெள்ளிக் கிழமை வரும் மக்களே.

 
Status
Not open for further replies.
Top